அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, June 15, 2011

அகவை 78ல் ஆனந்தசங்கரி (2011-06-15)


எனது மாணவப்பருவம் தொட்டு எனது மதிப்பிற்குரிய தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களை நன்கு அறிவேன். நான் சிறுவனாக இருந்த காலத்தில் அவர் கிளிநொச்சியில் ஆற்றிய சேவைகள் பற்றி பலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.

இயற்கையிலேயே அநீதிக்கு எதிராகப் போராடும் சுபாவம் கொண்டவர் ஆனந்தசங்கரி அவர்கள். அவர் கிளிநொச்சியில் கால்பதித்த காலம் கிளிநொச்சியின் விவசாய நிலப்பரப்புக்களில் அனேகம் பெரும் கமக்காரர்களுக்கு சொந்தமானதாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் புதிதாக குடியேற்றவாசிகளுக்கு காணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அப்போது இரணைமடு குளத்து நீரை பெரும் கமக்காரர்கள் மட்டுமே பெருமளவில் பயன்படுத்திவந்தனர். இதனால் சிறு விவசாயிகளும் குடியேற்ற வாசிகளும் தண்ணீருக்கு பெரும் கஸ்டப்பட்டனர். இதையுணர்ந்த ஆனந்தசங்கரியவர்கள், அனைத்துத்தரப்பினருடனும் கலந்துரையாடி சிறு விவசாயிகளுடனும், குடியேற்ற வாசிகளுடனும் இணைந்து போராடி அதன் விளைவாக அனைத்துத்தரப்பினருக்கும் கூடிய தண்ணீரைப் பெறும் வாய்ப்பு உருவானது. இது இவரது அயரா முயற்சியினால் உருவானது எனின் அது மிகையாகாது.

கிராமசபை தலைவராக, பட்டினசபை தலைவராக பின்னர் 1970ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக்கிய சில பெருமை அவரை ஆக்கிய பெருமை கிளிநொச்சி மண்ணையும்> மண்சார்ந்த மக்களையுமே சாரும். அதனால் அவர் எப்போதும் தான் வளர்ந்த, தன்னால் வளர்க்கப்பட்ட கிளிநொச்சி மண்ணையும், மண்சார்ந்த மக்களையும் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வார்.

1972ம் ஆண்டு தந்தை செல்வா, சட்ட மேதை அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஆகியோர் அரும்பாடுபட்டு உருவாக்கிய “தமிழர் விடுதலைக் கூட்டணி”யில் சட்ட மேதை ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்க் காங்கிரஸில் இருந்து இணைந்து கொண்ட ஒரேயோரு பாராளுமன்ற உறுப்பினர் திரு.வீ.ஆனந்தசங்கரியவர்களே. அன்று தொட்டு இன்று வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்காது கட்சியை காப்பாற்றி வருகின்றார். முப்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட அந்த ஒற்றுமைக்கு கிடைத்த பரிசுதான் 1977ம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கையின் வரலாற்றிலே முதலும் கடைசியுமாக இரண்டாவது பெரிய கட்சியாக தேர்தலில் வெற்றியீட்டி பிரதான எதிர்க்கட்சியாகி அதன் தலைவராக அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார். இது தமிழ் தலைவர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த பலமாகும். இந்த ஒற்றுமையை அதன் பின்னர் வந்த தலைவர்கள் கட்டிக்காக்க தவறியமையே, இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு காரணமாகும்.

1970 தொடக்கம் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம்தான் கிளிநொச்சியின் பொற்காலம் எனலாம். ஆனந்தசங்கரி அவர்கள் கிளிநொச்சி தொகுதியை கல்வியில் முன்னேற்றம் அடைந்த ஒரு பிரதேசமாக ஆக்குவதற்காக அரும்பாடுபட்டார். அதன் காரணமாக எமது மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமானால் அதனைத் தனிமாவட்டமாக்கினால் தான் அது சாத்தியமாகும் என்பதனைப் புரிந்து கொண்டு> பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கிளிநொச்சியை தனி மாவட்டமாக்கினார். இன்று வைத்தியர்கள்> பொறியியலாளர்கள்> பட்டதாரிகள் மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள் என பலர் உருவாகியுள்ளனர். இதற்கு காரணமானவர் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களே. அவர்கள் அனைவரும் ஆனந்தசங்கரி அவர்களை நன்றியுடன் நினைவு கூற வேண்டும். 1983ம் ஆண்டு அன்றைய அரசு பாராளுமனறத் தேர்தலை நடத்தாது மேலும் ஆறு வருடங்களுக்கு பாராளுமன்றத்தை நீடித்த போது இது ஐனநாயகத்திற்கு விரோதமான போக்கு என்று கூறி தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஐpனமா செய்தனர். இல்லாவிட்டால் 1989 வரை இவர்களே பாராளுமன்ற உறுப்பினாகளாக இருந்திருப்பார்கள். இதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப் பெரிய ஐனநாயகக் கட்சி என்பதனை உலகிற்கு பறைசாற்றியது. பாராளுமன்ற பதவியை துச்சமென தூக்கியெறிந்த தமிழர் விடுதலைக் சுட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆனந்தசங்கரியும் ஒருவர். அன்றிலிருந்து இன்று வரை பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் ஆசைப்படாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடாத்தி செல்கின்றார்.


தமிழ் மக்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அவல நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினருக்கும் எவ்வளவோ ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். எவருடைய காதிலும் அன்று இவர் கூறிய அறிவுரைகள் ஏறவில்லை. அதன் விளைவு தமிழ்மக்கள் இழக்கக்கூடாதவற்றையெல்லாம் இழந்து விட்டு இன்று எம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கதிகலங்கி நிற்கின்றார்கள். யார் தவறு செய்தாலும் அதை நேருக்கு நேர் நின்று சுட்டிக்காட்டுவதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லலாம். அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். ஐனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்திருந்த சர்வகட்சி தலைவர்கள் மகாநாட்டிற்கு நானும் ஒரு தடைவ சென்றிருந்தேன். அப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் மும்மூரமாக நடந்து கொண்டிருந்த நேரம் இன்னும் 85,000 பேர் தான் அங்கு சிக்குண்டிருக்கின்றார்கள். 55,000 பேர் வெளியே வந்துவிட்டனர் என ஐனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டிய போது இல்லை மூன்று இலட்சம் பேர் இன்னும் அங்கே இருக்கின்றார்கள் என ஆனந்தசங்கரி அவர்கள் புள்ளிவிபரத்துடன் எடுத்துக்கூறினார். யாரும் அதனை நம்பவில்லை. அமைச்சாகளும் ஐனாதிபதி அவர்களின் கூற்றையே நியாயப்படுத்தினார்கள். ஆனந்தசங்கரி அவர்கள் சொல்வது சரியான கணிப்புத்தான் என எவரும் சொல்ல முன்வரவில்லை. தனியாகவே இதனை அவர் வாதிட்டுக்கொண்டிருந்தார். ஏனைய கட்சித்தலைவர்களும் இதனை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பின்னர் நடந்த ஒரு கூட்டத்தில் கௌரவ அமைச்சர் பசில் ராஐபக்ச அவர்கள், ஆனந்தசங்கரி மட்டும் தான் மூன்று இலட்சம் மக்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். நாங்கள் வெறும் 1-1/2 இலட்சம் மக்களுக்கான தேவைகளையே பூர்த்தி செய்து வைத்திருந்தோம் என அரசாங்கத்தின் தவறை ஒத்துக்கொண்டார். அமைச்சர் அவ்வாறு கூறும் போது ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் தயவு செய்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என கேட்டிருந்தார். அவரும் அதற்கு செவிசாயக்கவில்லை. அதேபோல் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இனிமேல் யுத்தம் என்ற பெயரில் எந்த ஒரு அப்பாவி உயிரும் கொல்லப்படக்கூடாது என்று கேட்டிருந்தார். ஐனாதிபதி அவர்களும் செவிவாய்க்கவில்லை. அவரும் இன்று ஐ.நா சபையில் பேர்க்குற்றவாளியாக நிற்கின்றார். அவர் சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களுக்குச் சொன்னார். எவரது செவிக்கும் ஏறவில்லை.

பல்வேறு நாடுகளில் இலகுவாக குடியேறக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தம் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு பதவிகள் உள்நாட்டிலேயே தேடிவந்த போது எதையும் ஏற்காது கிறிநொச்சி மண்ணிலேயே தனது உயிர் பிரியவேண்டும்மென்ற பிடிவாதத்தோடு எதுவித பலனையும் எதிர்பாராது தன் தொண்டை தொடர்ந்து செய்துவரும், இப்படி துணிச்சலாக செயற்பட்டு, தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரு தலைவரை பாராளுமன்றம் அனுப்பாமல் போனது எமது மக்களின் தூர்பாக்கியமே. எது எப்படியோ இன்றும் அவர் தனது கடமையை சரிவர செயது கொண்டிருக்கின்றார். அந்தத் தலைவனின் அருகில் இருந்து அரசியல் பணி செய்வதை நான் பெரும் பேறாக எண்ணுகின்றேன். அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன். இந்தப் பிறந்த தினம் பூரணை நாளில் வருவது இன்னும் அவரின் தூய்மைக்கு ஒரு சிறப்பான அம்சமாகும்.

இரா. சங்கையா
யாழ் மாநகர சபை உறுப்பினர்.

Monday, June 13, 2011

ஜேர்மனி ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா


எனது வாழ்க்கையின் 2 ஆவது அத்தியாயத்தின்(மறுபிறவி) 5 வருடங்கள் நேற்றுடன்(12-06-2011) முடிந்தது! இந்த 5ஆவது ஆண்டு நிறைவு நாளில் எனக்கு மிகவும் பிடித்த அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பிகையின் சந்நிதானத்தில் எனது பொழுதைப் போக்க ஆண்டவன் அளித்திருந்த திருவருளை எண்ணி வியந்தபடி இக்கட்டுரையை எழுதுகிறேன்!


பஞ்சபூதத்தலங்களில் முதன்மையாகிய காஞ்சிபுரத்திலுள்ள அம்பாளின் அதே உயர அகலத்தில் அமையப் பெற்ற கருவறையில் எழுந்தருளியிருக்கும் அம்பாளைக் கண்டதும் தன்னிலை மறக்கும் நிலை ஏற்படுவது உறுதி!

நான் உலகிலுள்ள 3 காமாட்சி அம்பாள் தலங்களைத் தரிசித்திருப்பது நான் செய்த பாக்கியம்! முதலாவதாக எமது யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் என அழைக்கப்படும் நாச்சிமார் கோவில் அம்பாளின் கும்பாபிசேக வைபவத்தில் கலந்து கொண்டேன். (1981ஆம் ஆண்டு முதலில் இனப்பிரச்சனை ஆரம்பித்த அடம் இதுதான். அதைத் தொடர்ந்தே யாழ்ப்பாண நகரம் தீக்கிரையாக்கப்பட்டது)

அடுத்தது காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில்! காஞ்சி மகா பெரியவரையும் இங்கு எழுந்தருளிய காமாட்சி அம்பாளையும் ஒரே நாளில் தரிசித்தமை பெரும் பேறு!

அடுத்து ஜேர்மனி ஹம் நகரிலுள்ள இந்த காமாட்சி அம்பாள்!

கடந்த 11.06.2011 சனிக்கிழமை நண்பகலில் தேவன் என்ற நண்பருடனும் எமது அடில்ஸ்வீல் முருகன் கோவில் சபரிமலை யாத்திரை குருசுவாமி சண்முகலிங்கம் அவர்களுடனும் சுவிற்சர்லாந்திலிருந்து ஜேர்மனிக்குப் புறப்பட்டு மாலையில் நேராக கோவிலுக்குச் சென்றபோது அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சப்பறத்தில் புறப்பட்டு ஆலயத்திற்கு வெளியே எழுந்தருளிய காட்சி மிக அருமையாக இருந்தது!

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்! நீண்ட காலத்திற்குப் பிறகு எனது சித்தப்பாவை(திரு. தம்பிநாதர் புவனேந்திரன் அவர்களை)ச் சந்தித்தேன். மூளாய் அருணகிரிநாதன் அண்ணனின் மகன் சரவணன் என்னைக் கண்டதும் ஓடோடிவந்து கதைத்தார்.

அன்றிரவு ஒரு அருமையான தங்குமிடத்தில் தங்கியபின் அடுத்த நாள் 12.06.2011 காலையில் தேருக்குப் புறப்பட்டோம். வாகனத் தரிப்பிடம் அனைத்தும் நிறைந்திருந்ததால் ஆலயத்தின் பின்புறம் சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்திலிருந்த தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து கோவிலுக்குச் சென்றபோது கோவில் நிறைந்திருந்தது! பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்து கோவிலை நிறைத்திருந்தார்கள்! உள்ளே கொடித்தம்ப பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது!தம்பபூஜையில் தேவார புராணங்களுக்கு இடமளிக்கப்பட்டது - புதுமையாக இருந்தது. தொடர்ந்து ஆசீர்வாதம் நடைபெற்ற பின்னர் அஸ்திரதேவர் சுற்றுப்பலிப்பூஜைக்குப் புறப்பட்டார். கோவிலின் இரண்டாவது வீதியில் இது நடைபெற்றது.

பின்னர் வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று உள்வீதியுலாவைத் தொடர்ந்து யாகபூஜையின் பின்னர் இரண்டாவது வீதியில் வலம்வந்து தேருக்கு எழுந்தருளிய ஸ்ரீ காமாட்சி அம்பாள் விநாயகர் - சண்டேசுவரி சகிதம் அடியார்களுக்கு அருள்புரிந்தார்.