அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, March 30, 2009

தந்தை செல்வாவின் 111வது பிறந்த நாள் நாளை (31.03.2009)கீழே தரப்பட்ட கட்டுரை கடந்த 2007ல் தந்தை அவர்களுடைய 109வது பிறந்த நாளுக்காக என்னால் எழுதப்பட்ட கட்டுரை. இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய பத்திரிகைகள் இதனை (முழுவதுமில்லாமல்) வெளியிட்டன.

தந்தையின் வழியில் சென்றவர்களை துரோகிகள் என்று சொல்லி அவர்களை அழித்து ஒழித்து முடிவுகட்டியும் இன்றுவரை இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இன்னும் மக்களுடைய அவல வாழ்க்கை அதிகரித்துவிட்டது என்றே சொல்லமுடியும்.

அரசியல் வாழ்க்கையில் மக்கள் தேவையறிந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்த இக்கட்டுரையை மீள இங்கு பிரசுரிக்கின்றேன்.

வருங்கால சந்ததியினருக்காக சமூகத்தை முன்னேற்ற அரப்பணிப்புடன் உறுதிபூணுவோம்!

ஈழத்துக் காந்தி – பெரியவர் - தந்தை என்று அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களாலும் அன்போடும் மரியாதையோடும் அழைக்க்ப்பட்ட மூதறிஞர் சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் “கண்ணியம்” மிக்கவராய், “நெஞ்சுறுதி” உடையவராய், “பொறுமை”யின் சிகரமாய், “தீர்க்கதரிசனம்” கொண்டவராய் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக, தமிழ்ப்பேசும் மக்களின் தலைவனாக விளங்கினார். எவரையும் மனதால்கூட சினந்து பேசத்தெரியாத பெருமனம் கொண்டவர். எந்த ஒரு உயிருக்கும் அழிவு ஏற்படுவதை விரும்பாத அகிம்சையில் பெரும் நம்பிக்கைகொண்டவர். பேச்சுவார்த்தைகள் - ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தபொழுதிலும், தளர்ந்துவிடாது நம்பிக்கையோடு பின்னர் நடத்தப்படும் பேச்சுக்களில் எல்லாம் கலந்துகொண்டவர்.
1947ல் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியபின் கொண்டுவரப்பட்ட இலங்கைக் குடியுரிமைச் சட்டம், இந்திய பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டம் என்பவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் பிரதிநிதித்துவப்படுத்திய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து கொள்கைக்காக விலகிய உத்தமர். தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்து தான் இறக்கும்வரை தமிழ்ப் பேசும் மக்களின் துயர் தீர்க்கும்பணிக்கு தன்னையும், தனது பெரும் செல்வத்தையும் அர்ப்பணித்த பெருமையுடையவர்.
1972ல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் பாதகத்தை உணர்ந்து - தான் பிரிந்த கட்சியின் தலைவரை நேரில் சென்று ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி தமிழர் கூட்டணி அமைக்க அரும்பாடுபட்டவர்.
அவரது பாராளுமன்ற இறுதிப் பேச்சில் (19.11.1976) இன்றைய நிலையை தீர்க்கதரிசனமாக முற்கூறி வைத்திருக்கும் அதிசயத்தை நாம் அவதானிக்கவேண்டும்.
“தமிழ்ப் பேசும் மக்களின் இழந்த உரிமைகளை மீட்பதற்காக நாங்கள் ஒரு காலத்தில் சமஷ்டி இயக்கத்தை ஆரம்பித்தோம். ஆனால் சமஷ்டி மூலம், தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியப்படாது. கடந்தகால அனுபவங்களின்மூலம் இப்போது அறிந்து கொண்டு விட்டோம்.”
இந்த அனுபவங்களின் அடிப்படையில் நாங்கள் தனியே பிரிந்து வாழவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இதை நாம் செய்யாவிட்டால், தமிழினம், தமது இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக்கொள்ள முடியாது.”
“எங்கள் முன்னோர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கெனத் தனியாட்சியை வைத்திருந்தனர். இலங்கையின் வரலாற்றில் எங்களுக்கென ஒரு இடம் இருக்கின்றது. எங்கள் இயக்கம் நாட்டைப் பிரிக்கும்படி கோரவில்லை. இழந்த எங்கள் உரிமையான இராட்சியத்தை மீள அமைக்க வேண்டுமென்பதே எங்கள் நிலையாகும்.”

“தனித்தமிழ் ஈழத்தை நிறுவும் இலட்சியத்தை நோக்கி எங்கள் இயக்கம் முன்னேறுகிறது. தனித் தமிழ் ஈழம் நிறுவுவது சுலபமான காரியமல்ல என்பதும், மிகவும் கஷ்டமானதென்பதும், எங்களுக்குத் தெரியும், அனால் நாம் ஒன்றில் சிங்களவரின் அதிகாரத்துக்குள்ளிருந்து விடுபட்டு வெளியேற வேண்டும். அல்லது அழிந்துபோக வேண்டும். இது உறுதியானது. எனவே நாங்கள் போராடி தனித் தமிழ் ஈழத்தை நிறுவியே தீருவோம்.”

“நாங்கள் சமஷ்டிக் கோரிக்கையை கைவிட்டுவிட்டோம். எங்கள் தனிநாட்டுக்கான இயக்கம் அகிம்சை அடிப்படையிலேயே நடைபெறும்” என்று கூறியுள்ளார். தந்தையவர்கள் ஏற்படுத்திய கூட்டுமுயற்சி இன்று சின்னாபின்னமாகி பல்வேறு தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் உருவாக்கம்பெற்றதுடன் தற்போது தேர்தல் திணைக்களத்திலும் பதிவுசெய்ய்ப்பட்டுள்ளன.
அகிம்சையின் வழியிலான தத்துவம் மாறி இன்று ஆயுதப் போராட்டத்தின்மூலமே விடுதலைக்கு வழி என்று கூறி - தந்தையின் அணியிலிருந்த பலரும் பிரிந்து சென்று போராடுகின்றனர்.
தமிழ்ச் சமூகம் அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதனால்தான் உணர்ச்சிமிக்க சில இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்கியுள்ளனர்.

ஆயுதங்கள் அழிவுக் கருவிகள். ஆயதத்தைத் தூக்கியவருக்கும் அது அழிவைக் கொடுக்கும். அகிம்சை அப்படியானதல்ல. போராடுபவர்களின் தார்மீக உணர்வை வளர்க்கும். போராடுவோரை ஆளவோ, அடக்கவொ முடியாத நிலையையை ஆளவும், அடக்கவும் முயல்வோருக்கு ஏற்படுத்தும். அகிம்சைப் பாதையில்தான் எம்போராட்டம் அமையும். அதிலிருந்து சற்றும் விலக மாட்டோம்.

இன்று தந்தையின் இந்த இறுதிவார்த்தைகளை மனச்சாட்சியுடன் கைக்கொள்ளும் எவரும் இல்லை என்று துணிந்து சொல்லமுடியும். ஏதோ ஒரு வகையில் வன்முறையை ஆதரித்துக்கொண்டு - தந்தையின் பெயரைக்கூறிக்கொண்டு – அகிம்சையைப் பற்றிய எள்ளளவு அறிவும், அனுபவமும் இன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அவரது கட்சியிலிருந்து அரசியற் பணிபுரிபவர்களுக்காகவோ என்னவோ தந்தை கூறிய வார்த்தை “கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும்” என்று.
தந்தையின் மறைவுக்குப் பின்னர் சுமார் 30 வருட காலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் அன்றிருந்த சுதந்திர வாழ்க்கை கேள்விக்குறியாகி அகதி முகாம்களிலும், சிறைக் கூடங்களிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக தென்இந்தியாவிலும் அவர்களது வாழ்வு பெரும் அவலமாகிவிட்டது. தந்தையவர்கள் இருந்த காலத்தில் இருந்த சுதந்திரமான வாழ்க்கை இன்றில்லை.
இன்று தந்தையவர்களின் 109வது பிறந்த தினநாளில் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகள் பூரணமாகத் தீர்க்ப்பட வேண்டும். மூடப்பட்டிருக்கும் A – 9 வீதி திறக்கப்பட வேண்டும். சந்தேகத்தின் பெயரில் கைதாகி சிறைகளில் வாடுபவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும். தொடரும் வன்முறைகள், தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள், கப்பம் பெறல் போன்ற அநீதியான செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். அகதி முகாம்களில் வாழும் அப்பாவி மக்கள் மீள அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.
ஒற்றுமையுடன் மக்கள் போராட்டத்திற்கென தம்மை அர்ப்பணித்த அனைவரும் கடந்தகால கசப்பான அனுபவங்களை ஒருபுறம் வைத்துவிட்டு மக்களுக்காக அவர்களது அமைதியான வாழ்வுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். எமது வருங்கால சமூகத்தையாவது பிரச்சனையின்றி அமைதியான ஜனநாயகச் சூழலில் வாழ வழியமைக்க - தந்தை செல்வாவின் பிறந்த தினத்தில் அர்ப்பணிப்புடன் உறுதிபூண்டு செயற்படவேண்டும் என தந்தையின்பெயரால் தயவாக கேட்டு இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

Saturday, March 28, 2009

மூளாய் அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்

இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும், புராண இதிகாசங்கள் பெருமையுடன் எடுத்தியம்பிய, இலங்காபுரி என்னும் அழகுறு தீவின் தலையென விளங்கும் வட திசையாம் யாழ்ப்பாணம் என்னும் அழகுறு நகரில் நீர்வளமும் நிலவளமும் மட்டுமல்ல கலைவளமும் கல்விக்கூடங்களும் கற்றவர் பலரையும் கல்வியில் சிறந்த கனதனவான்களையும் கொண்ட கிராமமாக விளங்கும் “மூளாய்” என்னும் பதியினிலே வதிரன்புலோ என்னும் திவ்விய ஷேத்திரத்தில் அழகு பொழியும் திருவீதிகளுடன் அண்ணனும் தம்பியும் வாழ்ந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என எடுத்துக்காட்டாக தம்பிக்கு துணையாக அண்ணனும் அண்ணனுக்குத் துனையாக தம்பியுமாக ஓரே வீதியில் வானளாவ உயர்ந்து நிற்கும் இராஜகோபுரத்துடன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமும் அருகில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலயமும், இந்தஇரு ஆலயங்களுக்கும் பொதுவான சித்திரத் தேரும் அமையப் பெற்றமை சிறப்புக்குரியதாகும். இப்பதியில் வீற்றிருந்து திருவருள் பாலித்து வரும் எம்பிரான் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 30.03.2009 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும்.

03.04.2009 வெள்ளிக்கிழமை மாலை சப்பறத் திருவிழா

07.04.2009 செவ்வாய்க்கிழமை காலை தேர்த் திருவிழா

08.04.2009 புதன்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிக்கமும்

09.04.2009 வியாழக்கிழமை மாலை பூங்காவனத் திருவிழா

இவ்வேளையில் நாட்டில் சாந்தியும் சமாதானமும் கிடைக்க எல்லாம்வல்ல முருகப் பெருமானைப் பிரார்த்திப்போமாக.

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

செய்தியை அனுப்பிய கா. பார்த்தீபன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வேண்டுகோள்!


இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களுக்கு இந்து மாமன்றம் உதவிசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!

என்ற திருமூலரின் திருவாக்கிற்கு அமைய தர்ம உள்ளம் கொண்ட அனைவரையும் இக் கைங்கரியத்தில் இணையுமாறு கிருத்தியத்தின் சார்பாக அன்புடனும் தயவுடனும் வேண்டுகிறோம். இக்கடிதத்தின் பிரதியை அனுப்பிவைத்த கொழும்பு ஸ்வாமிக்கு எமது நன்றிகள்!!!

Saturday, March 14, 2009

கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் - 1

சுவாமி மதுரானந்தர் (வாழ்க்கைச் சுருக்கம்)

சுவாமிகளுடைய வாழ்க்கை வரலாற்றை வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தினர் சிறிய நூலாக 1999 ஜூனில் வெளியிட்டுள்ளார்கள். அதனை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.

முன்னுரை

இதுவரை ஒரு தூய வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இந்த எனது நீண்ட வாழ்க்கையில் ஒரு தீய எண்ணமோ தீய சிந்தனையோ என் மனத்தில் எழுந்ததில்லை இதுதான் நான் கண்ட அதிசயம் - உங்கள் துறவு வாழ்க்கையில் நீங்கள் கண்ட அதிசயம் என்ன? என்று சுவாமி மதுரானந்தரைக் கேட்டபோது அவர் கூறிய பதில் இது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் இவர்களின் வழி வந்த ஒரு துறவியின் பதில் இப்படித்தான் இருக்கும். சித்து வேலைகளையும் நோய்தீர்ப்பது போன்ற சில ஆற்றல்களையும் அவர்கள் ஒருபோதும் அதிசயமாகக் கொண்டதில்லை. அப்பழுக்கற்ற ஒரு புனித வாழ்வையே அவர்கள் பேரதிசயமாக எண்ணினர். அத்தகையதொரு வாழ்க்கை வாழவே முயன்றனர். இப்படியோர் அதிசய வாழ்வை நம்மிடையே வாழ்ந்தவர் சுவாமி மதுரானந்தர்.

இளமை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் என்ற சிற்றூரில் 1922 ஏப்ரல் 14ஆம் நாள்(சித்திரை மாதம் விசாக நட்சத்திரம்) வெள்ளியன்று சுவாமிகள் பிறந்தார். இவரை மகனாக அடையும் பேறு பண்டாரம்பிள்ளைக்கும் லட்சுமி அம்மையாருக்கும் கிடைத்தது. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பையாபிள்ளை. மிகச் சிறுவயதிலேயே சுவாமிகளிடம் காணப்பட்ட மூன்று முக்கியமான பண்புகள் இறைவனிடம் பக்தி, துறவிகளிடம் ஈடுபாடு, அஹிம்சை ஆகியவை ஆகும்.

அவரது வீட்டிற்கு முன்னால் பஜனை மடம் ஒன்று இருந்தது. அங்கே தினமும் ஸ்ரீராமர் பூஜையும் பஜனையும் நடைபெற்றது. இவை சுவாமிகளின் வாழ்வில் முதல் தாக்கங்களாக அமைந்தன. சிறு வயதிலேயே தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கீதை போன்ற நூல்களைப் படிப்பதற்கான வாய்ப்பும் சுவாமிகளுக்குக் கிடைத்தது.

காவி அணிந்த யாரைக் கண்டாலும் அவரை வணங்கி, வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு கொடுப்பார் சுவாமிகள். அவர்களுக்குச் சேவை செய்வதற்கான எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டார்.

அவர் ஆறாம் வகுப்பில் படிக்கும் போது தமிழாசிரியர் ஒரு நாள் வகுப்பில்,
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்
என்ற திருக்குறளை விளக்கினார். அன்றுமுதல் தாயார் எவ்வளவோ வேண்டிய பின்னும் புலாலை மறுத்துவிட்டார்.

வாலிப நாட்கள்

பக்தி, துறவுவாழ்வில் நாட்டம், அஹிம்சை போன்ற பண்புகள் சுவாமிகளின் வாலிப நாட்களையும் ஆக்கிரமித்திருந்தன. அஹிம்சையில் இவ்வாறு அவர் கொண்ட நாட்டம்தானோ என்னவோ அவரை காந்தியடிகளிடம் மிகவும் ஈடுபடச் செய்தது. கல்லூரி நாட்கள் வரை காந்தியடிகளுக்கும் அவரது கருத்துக்களுக்கும் சுவாமிகளின் வாழ்க்கையில் ஒரு தனியிடம் இருந்தது.

கல்லூரிப் படிப்பிற்காக திருவனந்தபுரத்தில் 1941இல் இன்டர்மீடியட்டில் சேர்ந்தார் சுவாமிகள். அவருடைய கல்லூரிப் படிப்பும் அலாதியாகவே இருந்தது. திருவனந்தபுரம் சித்ரா இந்துமத நூல்நிலையத்தில் தினமும் காலையில் பெரிய பண்டிதர்கள், துறவிகள் சமய வகுப்புகள் நடத்துவது வழக்கம். தினமும் காலையில் அதில் பங்கெடுத்த பின்னரே கல்லூரிக்குச் செல்வார். மாலையிலும் விவேகானந்தர் போன்றோரின் நூல்களைத்தான் படிப்பார். கல்லூரிப் பாடங்களை எப்போது படிப்பது? இறுதித் தேர்விற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான்: அப்போதுதான் கல்லூரிப் பாடங்களைப் படிக்கத் தொடங்குவார், தேறியும் விடுவார்.

இளமையிலும் சரி, வாலிப நாட்களிலும் சரி சுவாமிகளை வழிநடத்தி வந்தது மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை. நல்லொழுக்கம், நற்பண்புகள், ஆன்மீக சாதனைகள் என்று வந்தபோது எந்த நிலையிலும் அவர் தளர்ச்சிக்கு இடம் கொடுத்ததே இல்லை. கல்லூரி நாட்களில் அவர் எழுதிய டயரிக் குறிப்பு ஒன்றில் - இன்று இன்னாரிடம் கோபமாகப் பேசினேன். எனவே இரவு உணவு தவிர்க்கப்பட்டது – என்று காணப்படுகிறது. வாழ்க்கையை அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார், எத்தகைய கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை இதிலிருந்து ஊகிக்கமுடிகிறது.

பக்தி, பஜனை, ஆன்மீகம், தெய்பீகம் என்று அவரது வாழ்க்கை சென்றாலும் அத்தனையையும் முறைப்படுத்தி, ஒரு தகுந்த பாதையில் அவரை வழிநடத்த ஒருவர் தேவைப்பட்டார். அத்தகைய ஒருவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு விரைவில் சுவாமிகளுக்குக் கிடைத்தது.

(தொடரும்)

Monday, March 9, 2009

கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் புகைப்படங்கள்
இந்து தர்ம வித்யா பீடத்தின் சென்னையில் நடந்த சமய மாநாட்டுப் படங்கள்