அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 7, 2008

"நன்றே நினைமின் நமன் இல்லை..."

“தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை”- யோகர் சுவாமி நற்சிந்தனை

எப்பவோ முடிந்த காரியம்.நாமறியோம்.முழுதும் உண்மை.ஒரு பொல்லாப்பும் இல்லை.

“அன்பாலும் அமைதியாலும் ஒருவனை உன்பால் ஈர்க்க முடியும். ஆனால் ஆணவத்தால் ஈர்க்கவோ அன்றி அவனைப் பார்க்கவோ முடியாது” என்பது ஆன்றோர் வாக்கு.
என்னடா சிறிய ஒரு துண்டு மாத்திரம் அனுப்பினான், இப்ப என்னவென்றால் பெரியதொரு பாரதம் எழுதுகிறான் என எண்ணும் உமக்கு நான் கூறும் வாக்கியம் கீழ்க்கண்ட குறளாகத் தருகின்றேன். பொருளை அறியவும்.
“நவில்தொறும் நூல் நயம்போலும்
பயில் தொறும் பண்புடையார் தொடர்பு”. ( குறள் 783)

“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில்
கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை”. ( குறள் 789)

‘சுயநலமற்ற அன்பே எனது உயிர்’.நான் ஒரு இந்து. அதிலும் அமெரிக்க வைச சித்தாந்த திருச்சபையின் அங்கத்தவன். அதனால் நான் சைவ சமயக் கொள்கைகளை மாத்திரம் கடைப்பிடிப்பவன் எனக் கொள்ளவேண்டாம். திருக்குறள் - திருமந்திரம் என்னும் நு}ல்கள் கூறும் பொது வையகம் - அதனை ஏற்படுத்தவும், அந்த முறையில் வழிநடக்கவும் பெரிதும் விரும்புபவன். பிற சமயக் கொள்கைகளை நான் பெரிதும் விரும்புகிறேன். அத்தோடு அனைத்து உயிர்களிடத்திலும் நான் அன்பு கொள்கின்றேன்.

விலங்கினங்களைப் போலவே மனிதனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றான். உணவு உண்பது,உலாவித் திரிவது, சண்டை செய்வது, இளைப்பாறுவது, இனத்தை விருத்தி செய்வது. அனைத்தும் அவற்றின் வழியே.
சிந்தனை செய்வது ஒன்றே மனிதனுக்கு மேலாகிய அறிவும், அவனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடையும் ஆகும். இச்சுயசிந்தனையை விருத்தி செய்யவே சமயம் என்ற சாதனம் தேவை.
எளிய வாழ்வு , உயர்ந்த உள்ளம், பரந்த உள்ளம், ஆழ்ந்த அன்பு இந்த நான்குமே ஒருவனுக்கு இம்மண்ணுலகத்திலேயே விண்ணுலக வாழ்வை அளிக்கவல்லன.

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை ..........” என்கிறது மந்திரம். இக்கொள்கையை ஒவ்வொரு மனிதனும் ஏற்றுக்கொண்டால், நாமனைவரும் பேரானந்தப் பெருவாழ்வு வாழலாம், என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஆனால் இதுவரை பலருக்கு இதுபற்றி எடுத்துக்கூறியும், ஒருவராவது சாதகமான முடிவு தரவில்லை. அதனால் நான் சலிக்கவில்லை. எனது உயிர் எனது உடலை விட்டுப்பிரிய முன்னர் இக்கொள்கைகளை ஏற்கக்கூடிய ஒரு மனிதனைக் காண்பேன் - கண்டுகொள்வேன் என்பது எனது திடமான சங்கற்பம்.

அந்த அளவில் நான் எனது முயற்சிகளைத் துரிதப்படுத்திக்கொண்டு வருகிறேன். இதற்காக நான் சுமார் 50க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதி பலவகைப்பட்டவர்களுக்கும் அனுப்பியுள்ளேன். கடந்த இருபது நாட்களாக நான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எந்த பதிலும் வராதமை மிக வேதனையே. அதற்காக யான் என்ன செய்வது? ஏதோ தொடர்ந்தும் எழுதுகிறேன். எழுதிக்கொண்டேயிருப்பேன்.

“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்பது முதுமொழி. எனினும் இன்று வரை எனக்கு இது புதுமொழியாக - பொன்மொழியாக இருந்து வருகிறது.

(1985 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்திலிருந்து...)

Friday, July 4, 2008

சமய நெறி நிற்போம்!

உயிர்கள் உய்திபெறவே ஒரு பெருங்கடவுள். உயிர்கள் உய்திபெறப் பயிலும் கலையே வாழ்க்கை. உயிர்கள் உய்யும் நெறியே சமய நெறி. அந்த நெறியில் தலைப்படின் சிந்தையிவே தெளிவு - அறிவிலே ஆக்கம் - ஆற்றலின் கொள்கலம் - அயரா அன்பு - எங்கும் இன்பம் என்ற சூழல் உருவாகும். இதுவே சமய நெறி வழிப்பட்ட சமுதாயம். களவு - காவல், உயர்வு - தாழ்வு, உடையார் - இல்லாதார், என்ற அமைப்பு சமய நெறி சாராதார் அமைப்பு.

ஆனால் இன்றைய சமுதாயத்தில் நிலை தடுமாற்றம். சமயம் இயக்க நியதிகளினின்றும் விலகி, நிறுவனங்களாகி அதுவே களவுக்கும் - காவலுக்கும் ஆளாகி, உயர்வு - தாழ்வு என்ற போராட்டத்தின் களமாகி, உடையாரை உவந்தாக்கியும் இல்லாரை எள்ளி நகையாடி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம் பிரானாட்டம் ஆகமுடியுமா? ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமயநெறி.

ஆலயங்கள் சமய - சமுதாயப்பணி மன்றங்களே!
ஆலயங்கள் நமது சமுதாயத்தின் பொது இடங்களாக விளங்கி மக்கட்பணி செய்தன என்பதை தமிழகத் திருக்கோயில்களில், கல்வெட்டுக்களில் இருந்து அறியக் கூடியதாக இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்கள் இருந்து தமிழாராய்ந்தனர். கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள், கலைபயில் கழகங்கள், நாடக அரங்குகள், மருத்துவமனைகள், ஏன் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் முறை மன்றங்களும் இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழிநடத்தும் கிராம சபைகள் - ஊர்ச்சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன.

இன்று நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. இவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகிவிட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமயநெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாதி, குல, இன, அரசியல் வேறுபாடுகளை அறவே களைந்து, அவற்றிற்கு அப்பாற்பட்டதாக அமைதல் வேண்டும். 'தெரிதல் முறை' அவசியம்.

சமய நிறுவனங்களுடைய தலைவர்கள், ஆலய குருமார்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருக்க வேண்டும்.

அறிமுகம்: வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறேன் !

ஏகனாகவும் அனேகனாகவும் எங்கும் எதிலும் எல்லாமாகவும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் திருவருளுடனும் குருவருளின் துணையுடனும் "கிருத்தியம்" என்ற வலைத்தளத்தை ஆரம்பிக்கின்றேன்.

மஹாத்மா காந்தி கூறிய
1. ஒழுக்கமில்லாத அறிவாற்றல்(கல்வி)
2. மனிதாபிமானமில்லாத அறிவியல்
3. உழைப்பில்லாத செல்வம்
4. நேர்மையில்லாத வணிகம்
5. கொள்கையில்லாத அரசியல்
6. மனச்சாட்சியில்லாத இன்பம்
7. தியாகமில்லாத வழிபாடு என்ற சமூகக்கேடுகளை அறவே ஒழித்து மக்கள் அனைவரும் நீதியான வாழ்வு வாழவேண்டும் என்பதில் எனக்கும் ஒரு அவா. கிருத்தியம் பஞ்ச கிருத்தியங்களைச் செய்யும் தாண்டவ மூர்த்தியின் அசைவினால் இப்பிரபஞ்சம் நடக்கின்றது. வீட்டுக் கிருத்தியம் என அழைக்கப்படும் கிரியை இல்லத்தைச் சுத்திகரிக்கப் பயன்படுகிறது.

ஆன்மாவைப் பேரானந்தப் பெருவாழ்வுக்கு இட்டுச் செல்ல ஒரு பெரிய பாதையாக நெறியாக வழியாக முறையாக கிருத்தியம் இருக்க வேண்டும் என்பது அடியேனது எண்ணம். உங்களது அபிப்பிராயங்கள் எதுவாகினும் தாராளமாக அடியேனுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பெயரையும் சொல்லி எனது இந்த வலைத் தளத்தை ஏற்படுத்தி எனது நீண்டநாள் கனவை நனவாக்கிய தம்பி நிர்ஷனுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.

சமயம் சம்பந்தமாகவும் அல்லது அரசியல் மற்றும் நாட்டுநடப்புகள் பற்றி அதிகம் எழுதியிருந்தும் அவை முழுமையாகப் பிரசுரிக்கப்படாத அல்லது முற்றாகவே பிரசுரிக்கப்படாத மனவேதனை ஒருபுறம் - என்னைப்பற்றி அல்லது நான்சம்பந்தப்பட்ட சம்பவங்களை திரிவுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக எழுதும்போதும் விமர்சிக்கும்போதும் எழுதும் பதில்களைக் கூடப் பிரசுரிக்கத் திராணியற்ற பத்திரிகைகளுடன் பிரச்சனைப்பட்டிருக்கிறேன். இதற்காக ஒருதடவை வீரகேசரி ஆசிரியர் பீடத்திற்கு நேரில்சென்று கருத்துத்தர்க்கம் செய்தபோது எனக்குக்கிடைத்த மறுமொழி வெளியே போ (get out). மிகவும் வேதனையான விடயம் யாழ்ப்பாண பொது நூலகத் திறப்பு விழாவுக்கு முன்னர் பத்திரிகைகள் நடந்துகொண்ட முறை என்னை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. நேரடியாக யாழ் தினக்குரல் பத்திரிகைக் காரியாலயத்திற்குச் சென்று எனது நண்பனிடம் சற்றுக் கோபமாகவே கேட்டேன்.

அவர் சென்று எனது அறிக்கையை அவர் தொகுத்திருந்த மாதிரியைக் கொண்டுவந்து காட்டினார். வேறொருவருடைய அறிக்கையை போடுவதற்கு என் அறிக்கை பத்திரிகை மேலிடத்தினரால் அகற்றப்பட்டிருந்தது. இவை என்னை மாத்திரமல்ல – உண்மையான செய்திகளை அறிய விரும்பும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நடுநிலை தவறிய பெருமை அனைத்துத் தொடர்பு சாதனங்களுக்கும் உண்டு என்றால் அது உண்மைதான். யாரோ ஒரு சாராரைத் திருப்திப்படுத்த அல்லது துதிபாடவே பத்திரிகையாளர்கள் துணிந்துநின்றார்கள்.

சிலவேளை குறிப்பிட்டவர்களால் நடாத்தப்படும் விருந்து மற்றும் உபசாரங்களுக்காகப் பத்திரிகை நடத்தினார்களோ தெரியாது. இன்று நான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகித்தப்பி இங்கு வந்து என்நாட்டில் எம்மவர்களுடன் வாழமுடியாது ஏங்கிக்கொண்டிருக்கும் அதேவேளை நாட்டைக் குழப்பிய பெருமையுடைய பத்திரிகையாளர்கள் பலர் தமது உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் தஞ்சம் பெற்று சொகுசாக வாழ்வதுடன் இங்கும் தமது பிதற்றல்களை கக்குவதுதான் இன்னும் வேதனை. இதை யாரிடம் சொல்வது. இதற்காக இந்தக் கிருத்தியம் ஏதேனும் செய்ய வேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும்
என்றும் மறவாதவன்.

என்னைப்பற்றி ………
பிறப்பிடம் - இலங்கை – வடமாகாணம் - வலிகாமம் மேற்கு மூளாய் கிராமம் என் அம்மாவின் சொந்தஊர்.
வளர்ந்ததும் படித்ததும் - தந்தையார் அரச சேவையில் இருந்தமையால் ஆரம்பத்தில் ஊரிலும் பின்னர் மாங்குளம், அனுராதபுரம், தெல்லிப்பழை, மயிலிட்டிதெற்கு(கட்டுவன், குரும்பசிட்டி எல்லையில்) (என் தந்தையின் சொந்தஊர்)
படித்த பாடசாலைகள் கல்லூரிகள் - மூளாய் அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, வயாவிளான்(வசாவிளான்) மத்திய மகா வித்தியாலயம் காரைநகர் இந்துக் கல்லூரி(தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம்.


மறக்கமுடியாத சில இளமைப் பராய (12 வயதுக்குட்பட்டகால) நினைவுகள்
ஊரிலுள்ள பிள்ளையார் முருகன் வைரவர் கோவில்கள் பொன்னாலைக் கிருஷ்ணன் கோவில் இங்கு சின்னமேளம் நாடகங்கள் பார்த்தது திருவடிநிலைக் கடற்கரை காரைநகர் கச்சோரினா பீச்(கடற்கரை) கீரிமலைக் கேணி எனது அப்புவுக்கு(அம்மாவின் அப்பா) இரவுநேரங்களில் பல சமயநூல்களை வாசித்து விளக்கம் பெறுவது இந்தப் பழக்கம் இன்றும் புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் போன்றவற்றை வாசிக்கவும் உலக அறிவைப் பெறவும் என்னைத் தூண்டிநிற்கிறது.

அந்தக் காலத்தில் இருந்த் 1ரூபாத்தாள் 2ரூபாத்தாள் அரைச்சதம் ஒருசதம் ஐந்துசதம் பத்துச்சதக் குத்திகள் (பித்தளை நாணயங்கள்) இவற்றை சேர்ப்பது அன்றைய 15சதப் பெறுமதியான தாமரை முத்திரை நயினாதீவுக்கு காரைநகர்ப் பாதையால் (ஊர்காவற்றுறைபோய்) போனது ஒவ்வொரு சித்திரை, ஆவணி, மார்கழி விடுமுறைக்கும் புகையிரதமூலம் கொழும்புக்கும் பண்டாரவளைக்கும் நுவரெலியாவுக்கும் வெலிமடைக்கும் போவது அனுராதபுரத்தில் மல்வத்தோயா ஆற்றில் நீராடப்போய் கபரக்கொய்யாவைக் கண்டால் குளிக்காமல் ஓடிவருவது புராதன இடங்களைப் பார்வைவயிட்டது சனிக் கிழமைகளில் பெரமுன ரீச்சருடன் அந்த இடங்களுக்குச் சென்று சிங்களம் படித்தது மற்றைய உறவினர்களிடமும் நண்பர்களிடமும் செல்வது இன்னும் பல எழுதுக் கொண்டே போகலாம் …..

தரிசித்த மஹான்கள் -
ஹரிதாஸ்கிரி சுவாமிகள்
திருமுருக கிருபானந்தவாரியார்
நல்லை ஆதீன முதல்வர்கள்
பூர்ணானந்தகிரி சுவாமிகள்
முருகேசு சுவாமிகள்(சுவாமிகளுடைய நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் கோவிலில் பல நாட்கள் தங்கியிருந்தேன்)
குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள்(அவரது அளவெட்டி ஆச்சிரமத்தில்; பணியாற்றினேன் கோப்பாய்க் கோட்டத்துடனும் தொடர்பாயிருந்தேன்.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
விஐயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ஸ்ரீரங்கம் அகோபிலமடம் ஸ்ரீ ஜீயர் சுவாமிகள்
சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீர்த்த வித்தியா சரஸ்வதி சுவாமிகள்
திருப்பனந்தாள் ஆதீனமுதல்வர்
திருவாவடுதுறை ஆதீன முதல்வர்
மதுரை ஆதீன முதல்வர்
ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்கள்
ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் ஜீவானந்த மகராஜ், ஆத்மகணானந்த மகராஜ், அஜராத்மானந்த்த மகராஜ்,
கன்னியாகுமரி வௌள்ளிமலை விவேகானந்த ஆச்சிரமத்தின் தலைவர்கள்
ஸ்ரீ மதுரானந்தர் சுவாமிகள்
சைதன்யானந்தா மகராஜ்
கொழும்பு மௌனாச்சிரம துறவி சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி சுவாமிகள்
தவத்திரு. சிவகுருநாதன் அடிகள் போன்றோர்

மானசசீகமான நினைவில் இருப்போர் (வழிகாட்டிய சான்றோர்கள்)
இந்திய தேசபிதா மகாத்மா காந்தி,
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
சற்குரு சிவயோக சுவாமிகள் சுவாமி
விவேகானந்தர்சுவாமி
விபுலானந்தர்
நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
நாவலப்பிட்டி ஆத்மஜோதி முத்தையா அவர்கள்
அன்னை திரேசா

ஆசான்கள் (தமிழ் சமய அறிவை ஊட்டியவர்கள்)
அரிவரிவகுப்பில் சுழிபுரம் குருபூசை மடாலயத்தில் எனக்கு அடிப்படை போதித்த இரண்டு ஆசிரியைகள்(பெயர் தெரியவில்லை) யோசப் மாஸ்ரர் சின்னத்தம்பிசேர்; இராசையா மாஸ்ரர், குஞ்சுரீச்சர், நாகபூஷணிரீச்சர், சுகிர்தமலர்ரீச்சர்(பரமசாமிரீச்சர்), சரஸ்வதிரீச்சர் இருவர், நல்லதம்பிசேர், கோபால்மாஸ்ரர், விநாயகரட்ணம்சேர், செல்வராசாமாஸ்ரர், சங்கீதம் கற்பித்த மலர்தேவிரீச்சர், நாகம்மாரீச்சர், திலகேஸ்வரன்மாஸ்ரர், பண்ணிசை ஆசிரியர் திருஞானசம்பந்தர், ஏனைய எனது நான் கல்விகற்ற 5 பிரபல்யமான பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் அனைவரும்.
நல்வழி காட்டிய பெருமைக்குரியவர்கள்.

எனது பெற்றோர் அவர்களுடன் கூடப்பிறந்தோர் உறவினர்கள் எமது கோவில் பாலசுப்பிர மணியக் குருக்கள் ஐயாஅவர்கள் தெல்லிப்பழை பாலர் ஞானோதயசபைத்தலைவரும் காசிப்பிள்ளையார்கோவில் பிரதமகுருவுமாகிய சிவஸ்ரீ கணேசலிங்கக்குருக்கள் ஐயா ம.சி.சிதம்பரப்பிள்ளை துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சிவநெறிப் புரவலர் மில்க்வைற் தொழிலதிபர் க.ந்தையா கனகராசா அவர்கள் அவருடைய துணைவியார் அளவெட்டி ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் ஆச்சிரமப் பொறுப்பாளர் சிவத்திரு. சோ. சண்முகசுந்தரம் அவர்கள் கோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்டத்தின் தலைவர் ரமேஸ்அண்ணன் (இன்று துறவியாகி அமெரிக்காவில் தொண்டுநாதன் என்ற பெயருடன் ஈழத்துக் குருபரம்பரையை வாழையடி வாழையாக கொண்டுசெல்பவர்) அவருடைய பெற்றோர்கள் (கோட்டத்தை இன்றும் வழிநடத்திக்கொண்டிருப்பவர்கள்) தெல்லிப்பழை செல்லப்பாஐயா, பண்டிதர் க.சி.குலரத்தினம் ஐயா, திருகோணமலை காந்தி மாஸ்ரர், சிவபாலன்அண்ணன் நல்லூர் தேரடி 63 நாயன்மார் குருபூசை மடத்தில் என்னைத் தொண்டில் ஈடுபடுத்திய நவரட்ணம்மாஸ்ரர் இன்னும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட தரிசித்த மகான்கள் வரிசையில் சிலரும் மற்றும் பலர் (நினைவிலிருப்பவர்கள் இவர்கள்) காரணம் கீழே குறிப்பிலே சொல்கிறேன்.

தந்தை செல்வா எனது பெரியப்பா அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் யோகேசுவரன் தங்கத்துரை சேனாதிராசா ஆனந்தசங்கரி சம்பந்தன் நீலன் திருச்செல்வம் ஜோசப் பரராசசிங்கம் அவரது துணைவியார் சுகுணம் யோசப் சாம் தம்பிமுத்து அவரது துணைவியார் கலா தம்பிமுத்து சரோஜினி யோகேசுவரன் சிவபாலன் மதிமுகராசா.

என் சமயப்பணிகளுக்கு உதவியளித்து என்னை இலங்கையில் அனைத்து மக்களுடனும் தொடர்பு படச் செய்தவர்கள்
குறிப்பாக ஆசான்கள் (தமிழ் சமய அறிவை ஊட்டியவர்கள்) நல்வழி காட்டிய பெருமைக்குரியவர்கள் என்று நான் முன்குறிப்பிட்டவர்களுடன் இறக்குவானை முத்துமாரியம்பாள் ஆலய பரிபாலன சபைத்தலைவரும் வைரவன் டிரான்ஸ்போர்ட் உரிமையாளருமான பெருமாள் ஐயா மற்றும் தொண்டர்களும் களுத்தறை இந்து இளைஞர் மன்றத்தினர் பூனாகலை இந்து கலாசாரப் பேரவையினர், தலவாக்கொல்லை இந்து சமய கலை கலாச்சாரப் பேரவையினர், கேகாலை குருப்பிரவேச ஸ்தாபனத்தினர் பொகவந்தலாவ இந்து மா மன்றத்தினர் கொழும்பு விவேகானந்த இந்து இளைஞர் சங்கத்தினர் காலி சிவன்கோவில் நிர்வாகத்தினர், காலி கதிர்வேலாயுத சுவாமிகோவில் நிர்வாகத்தினர் மாத்தறை அருந்ததி நற்பணிமன்றத்தினர், முந்தல் இந்துமகாசபை நிர்வாகத்தின் காணாமற்போன வீர வேலாயுதர், தெரணியாகலை, வத்துகாமம், கண்டி - பள்ளேகலை, இரத்தினபுரி, பலாங்கொடை, நாவலப்பிட்டி, சாமிமலை, நுவரெலியா, பண்டாரவளை, கொஸ்லாந்தை, நீர்கொழும்பு திருகோணமலை இந்து இளைஞர் சங்கத்தினர் ஆலய நிர்வாகத்தினர் இன்னும் பலர் தங்கள் பகுதிக்கு என்னை அழைப்பித்து சமயப் பேசச்சுக்கள் பண்ணிசைகள் நிகழ்த்தியதுடன் எனக்கு தங்குமிடவசதி செய்து போக்குவரத்துக்கும் ஏற்பட்ட செலவைத் தந்துதவினார்கள். கஹவத்தை ஹவுப்பைத் தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்தினர் என்னை 1992ல்அழைப்பித்த பின் அந்த ஊரில் நானும் ஒருவனானேன். எனது ஆருயிர் நண்பர் சிவா. பாஸ்கரராவ் அவர்களைப்பற்றி கட்டாயம் குறிப்பிடவேண்டிய கடமை எனக்குண்டு. சமயப் பணிகளுக்காக இந்து சமய கலாச்சார அமைச்சுடனும், திணைக்களத்துடனும் இன்றும் நாம் பிரச்சனைபண்ணிவருவதையும் குறிப்பிடுவது பொருத்தமானது. காலியில் பகவான் சத்திய சாhயிபாபாவினுடைய சமித்தி மண்டலத்தினர்(பெரும்பாலான சிங்கள பௌத்த சமயத்தவர்கள்) வருடாவருடம் காலி நகரசபை மண்டபத்தில் நடத்தும் பகவானின் ஜெயந்தி தினத்தன்று என்னைத் தமிழில் உரையாற்ற அழைப்பதும் இதற்கு திருவாளர்கள் சேதுராமனும் ராஜரட்ணம் அவர்களும் பெரிதும் உதவிபுரிந்தனர். நான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மறுதினம் என்னுடன் தொடர்பை
ஏற்படுத்தி பகவான் துணைநிற்பார் என்று கூறியவர்கள் சமித்தியின் தலைவர் திரு. ராஜரட்ணமும் மறக்கமுடியாதவர்கள்.


என்னாலும் என் நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள்
மூளாய் இந்து சமய மன்றம் வாகீசர் சிவத்தமிழ்ப்பணி மன்றம்இந்து சமய ஒற்றுமைப் பேரவைகாந்தி அறப்பணி நிலையம்
என் சமயப்பணிகளுக்கு உதவியளித்து என்னை இலங்கையில் இந்துமக்களுடன் தொடர்புபடச் செய்தவர்கள் பலர்.
குறிப்பு – நினைவிலிருப்பவர்களை மட்டும்தான் இப்போது குறிப்பிட்டுக்கொண்டு வருகின்றேன். காரணம் - என்னுடைய நினைவுகள் தொலைந்துவிட்டன. உடல்தான் இங்கிருக்கிறது. என் நினைவுகளும் எண்ணங்களும் என்நாட்டில்தான். ஒவ்வொரு நாளும் இணையத்தளங்களில் வருகின்ற செய்திகள் ஏன் நம்நாட்டில் இப்படி நடக்கிறது என்ற பெருங்கவலையை தோற்றுவிக்கும்.