அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, October 31, 2008

முன்னை நாள் பாரதத்தின் பிரதமர் அன்னை திருமதி இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாள் - இன்றுஈழத் தமிழர் பிரச்சனையில் தனது ஆதரவை நல்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் அன்னை திருமதி இந்திரா காந்தி அவர்களை இன்றைய இக்கட்டான நிலையிலும் நன்றியுணர்வுடைய ஈழத் தமிழர்கள் நினைவு கொள்வார்கள் என்பது எனது அசைக்கமுடியாத கருத்தாகும்.

Monday, October 27, 2008

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


நாட்டில் நிலவும் அனைத்து அநீதிகளும் அகன்று
தமிழர்களின் வாழ்வில் நிரந்தரமானதும் கௌரவமானதுமான
ஒரு அமைதியான நிரந்தரத் தீர்வு ஏற்பட
எல்லாம் வல்ல பரம்பொருளை இன்றைய நாளில் பணிந்து வேண்டி
கிருத்தியத்தின் வாசகர்களுக்கும் ஏனைய வலையுலக பதிவு வாசகர்களுக்கும்
எனது அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Monday, October 20, 2008

பாரதத்தின் மீது குறை சொல்லுவோருக்கு ஒரு பதில் - 2

இன்று இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் தமிழர்கள் அனைவரும் உணர்வுரீதியாக தமிழ்நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் கோரிக்கைகளை ஒன்றுபட்டும் தனித்தும் முன்வைத்து பேதமையற்ற நிலையில் தம்மன எழுச்சியை வெளிப்படுத்தும் அதேவேளை நாம் இலங்கைத் தமிழர்கள் என்ன மனோ ரீதியில் இருக்கிறோம் என்பதையும் சற்று விளக்கமாக பகுத்தறிந்து பார்க்கவும் விளக்கங்கள் சிலவற்றை தெரிவிக்கவும் நான் விரும்புகிறேன். இதே நேரம் பழைய சம்பவங்களையும் வரலாறுகளையும் மீட்டுப்பார்த்தல் அவசியம் எனவும் நான் எண்ணுகின்றேன். சில மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளையும் சொல்லவேண்டிய அவசியமிருப்பதையும் நான் இச்சந்தர்ப்பத்தில் வெளியிடவும் விரும்புகின்றேன்.

ஏனெனில் பாரதம் ஒரு தடவை அனுபவப்பட்டதை தமிழ்நாட்டிலுள்ள பாரதக் குடிமக்கள் மறந்தாலும் எம்மால் மறக்க முடியவில்லை என்பதே உண்மை என்பதால் அதை எமது தமிழக உடன்பிறப்புக்களுக்கு தெளிவுபடுத்தவும் மீட்டுப்பார்க்கவும் இந்த இடத்தில் குறிப்பிட்டவர்களிடம் ஒரு தெளிவான நிலைப்பாட்டைப் பெற்றுக் கொள்ளவும் அவசியம் ஏற்படுகிறது.

பிராந்தியத்தில் வல்லரசாகியதோ இல்லையோ – தன் அண்டைநாட்டு விவகாரங்களில் பரோபகாரப் பணி புரிந்த இந்திய எமது இலங்கைப் பிரச்சனையில் ஒரு வரலாற்றுப் பதிவைப் பதித்ததை எவரும் மறுக்கமுடியாது. அது மறைந்த பாரதப் பிரதமர்கள் திருமதி இந்திரா காந்தி அவர்களினதும் அவருடைய புதல்வர் திரு. ராஜீவ் காந்தி அவர்களினதும் இலங்கைமீது காட்டிய அக்கறை ஆதீதமான மனிதாபிமானச் செயற்பாடு என்பதை இங்கு நான் தெட்டத்தெளிவாகத் தெரிவிக்க வேண்டியவனாக இருக்கின்றேன்.

1. 1983-08-16 இல் இந்திய மாநிலங்களவையில் பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரையில் - தனிப்பட்ட முறையில் நானும் எனது அரசாங்கமும் எனது கட்சியும் இந்தச் சபையில் அவர்கள் துன்பங்கள் பற்றிப் பேசியவர்களும் மிகவும் ஆழ்ந்தகவலைக்கு ஆளாகி இருக்கிறோம். நாங்கள் அச்செயல்களைக் கண்டித்துள்ளோம். நாங்கள் இன அழிப்பைக் கண்டிக்கிறோம். இலங்கைத்தமிழருக்கு இழைக்கப்படும் அநியாயங்களையும் அட்டுழியங்களையும் நாங்கள் கவலையோடு உணருகின்றோம். எனினும் கௌரவ அங்கத்தவர்களுக்கத் தெரியும் எவ்வளவுக்கு எங்களது உணர்ச்சிகள் பொங்கி எழுந்தாலும் அரசாங்கம் மிகவும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது. அதன் அர்த்தம் நாங்கள் தயக்கம் காட்டுகிறோம் பின்வாங்குகிறோம் என்பதல்ல. எங்களுடைய ஒவ்வொரு காலடியையும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு செயலையும் வெகு நிதானமாக செய்ய வேண்டும். ஏனெனில் அது இலங்கையில் வாழுகின்ற தமிழருக்குப் பாதகம் விளைவிக்கச் சாட்டாகிவிடும். இப்படிப் பேசிய அன்னை இந்திரா காந்தி 1984.10.31இல் சுட்டக்கொல்லப்பட்டார்.

2. திரு. ராஜீவ் காந்தி பின்னர் தனது தாயார் காட்டிய அதே அக்கறையுடன் தமிழர் பிரச்சனையில் ஈடுபட்டார். இலங்கையில் பொருளாதாரத் தடை ஏற்படுத்திய அன்றைய ஜே ஆர் அரசு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் சென்ற இந்திய அரசின் உணவுப் படகுகளை திருப்பி அனுப்பிவிட்டு வெற்றி கொண்டாடியது. ஜூன் 4, 1987 இல் இந்திய போர் விமானங்களின் உதவியோடு இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மேல் பறந்து உணவு பொட்டலங்களை துன்பப்பட்ட தமிழ் மக்களின் பசிதீர்க்கப் போட்டன. சரித்திரத்தை மாற்றிய இந்திய அரசின் மகத்தான பணிபற்றி எவருமே இப்போது அறியாமல் வீணாக இந்திய அரசின்மீது பழி சுமத்துவது வேதனைதருகிறது. 1987.7.29 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. தன் உயிரையே பணயம் வைத்து இந்தியப் பிரதமர் செய்த தன்னலமற்ற பணிகளுக்கும் இந்திய அரசுக்கும் இதற்கு தூண்டுகோலாக இருந்த அன்றைய தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் கட்சிகள் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக எம்மைக் காக்கும் கேடயமாக அன்போடு பாதுகாத்த தமிழக மக்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிப்பதாக அமரர் அ. அமிர்தலிங்கம் குறிப்பிட்டள்ளார். செல்வா ஈட்டிய செல்வம் -இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் நூலில் மிகவும் அருமையாக எழுதப்பட்டிருப்பதை பலரும் அறிந்திருப்பார்கள்.

3. பாரதப் பிரதமர் 02.08.1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எழுதிய பின்னர் சென்னை மரீனாக் கடற்கரையில் ஆற்றிய உரையில் - ….ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் இலங்கைக்குப் போகும் முன்னர் எல்லாத் தமிழ்ப் போராளிகளிடமும், அதிகளவு மிதவாத உணர்வு கொண்ட இலங்கைத் தமிழர்களிடமும் நான் பேசினேன். நீதி, மற்றும் சமத்துவத்தைப் பெற போராடும் இவர்களிடம் நான் ஆலோசனை மேற்கொண்டேன். நாங்கள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை தமிழ் போராளிகள் அனைவரும் புரிந்து கொண்டனர். இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்காமல் இலங்கைத் தமிழர்கள் கோரிய அனைத்தையும் தர இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
………..இலங்கையில் மூன்றில் ஒருபகுதி தனி மாகாணமாக்கப்பட்டு தமிழர்கள் அதில் பெரும்பான்மையினராக வசிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்திய அரசின்கீழ் இருக்கும் மாநிலங்கள் போன்றே மாநில சுயாட்சி உரிமையும் அவர்களுக்கு உண்டு.
…….நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப் பட்டுள்ளன. கருத்து வேறுபாட்டையும் வன்முறையையும் போரையும் நிறுத்தவேண்டிய நேரம் இது. இது புனரமைக்க வேண்டிய நேரம். தேசிய இணக்க உணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டம் உருவாகி இருக்கிறது. மறு இணக்கத்தையும் மறு சீரமைப்பையும் மேற் கொள்ள வேண்டிய இந்தக் கடமையில் நம்மால் இயன்ற எல்லா வகையிலும் நாம் உதவ வேண்டும். மேலும் அதிக வன்முறையாலும் மேலும் அதிக உயிரிழப்புகளாலும் நாம் அடைய வேண்டியது எதுவுமில்லை. அமைதியைக் கொண்டுவருவோம். உயிர் உடமை எதுவும் அழிவதைத் தடுப்போம். இந்த ஒப்பந்தத்திற்கு எதிரானோர் மீது நாம் இரக்கம் காட்டத் தேவையில்லை. ஏனென்றால் இந்த ஒப்பந்தத்திற்கு எதிரானோர் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் ஆவார்கள். சில போராளிக்குழுக்கள் ஓரளவு தயக்கம் காட்டுகிறார்கள். அது சொந்த பாதுகாப்பைக் கருதி ஏற்பட்டிருக்கக் கூடும் அல்லது இலங்கையின் எதிர்கால வாழ்வில் தங்களுக்குரிய இடம் என்ன என்பதைக் குறித்த கலக்கமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நான் உறுதி கூறியிருக்கிறேன். இந்த ஒப்பந்தம் அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டிருக்கிறது. இலங்கையின் வடபகுதியில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் சீரமைப்புப் பணியில் பங்கும் பாதுகாப்பும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவோம்.
……..இது வன்முறைக்கு முடிவுகாணும் நேரம். பூசல்களுக்கும் பழிவாங்கல்களுக்கும் இது நேரமல்ல. இலங்கையில் உள்ள பல்வேறு வகுப்பினருக்குமிடையே புதிய நட்புறவையும் இணைப்பையும் உருவாக்கி நாட்டை சீரமைப்பதற்கான அமைதியைக் கொண்டுவர வேண்டியநேரம். நுல்லெண்ணத்தையும் இணக்க உணர்வையும் ஏற்படுத்த நம்பிக்கையும் பற்றையும் ஏற்படுத்தவேண்டிய நேரம். இழப்புத்துயரில் வாடுவோரைத் தேற்ற வேண்டிய நேரம். புனரமைக்கவும் புத்துயிர் ஊட்டவும் உழைக்க வேண்டிய நேரம்.
…..வேதனையும் துயரமும் நிறைந்த ஒரு கட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் ஒரு முடிவு காண்கிறது. வேதனைகளையும் இன்னல்களையும் முடித்துவைத்து அமைதியுகம் மலர வகை செய்கிறது. இலங்கை வரலாற்றின் திருப்புமுனையாக அமையும் இந்த நேரத்தில் இறந்தோரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். வுpதவைகள் அனாதையாக்கப்பட்டோர் ஆகியோருக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம். புதல்வர்களை இழந்த தாய்மார்களுக்கும் தந்தையரை இழந்த புதல்வியருக்கும் நமது இரங்கல்களைத் தெரிவிக்கிறோம். ஆனால் இவற்றை நினைவு கூறும்போது மேலும் இரத்தம் சிந்துதல் தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையில் அமைதியோடும் கௌரவத்தோடும் கண்ணியத்தோடும் தமிழர்கள் தொடர்ந்து வாழும்போது இந்த நினைவுக்கு சிறப்பான அஞ்சலி செலுத்தியவர்களாவோம். இந்த ஒப்பந்தத்தின்மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது.

இப்படிக் குறிப்பிட்ட பாரதப் பிரதமருக்கு நாம் காட்டிய நன்றி எத்தகையது என்பதை யாராவது இப்போது சிந்திக்கின்றார்களா? இல்லையே!

எமது சிந்தனை எங்கெல்லாமோ எப்படியெல்லாமோ ஓடுகிறதே!

இன்றைக்கு இந்தியா பாராமுகமாக இருப்பதை எப்படிச் சொல்லமுடிகிறது இவர்களால்? உதவினாலும் ஏதோ எதிர்பார்த்து உதவுவதாக குற்றம்! ஏதாவது உதவி செய்யாவிட்டாலும் குற்றம்! இது தேவையா பாரதத்திற்கு!!! தமிழ் நாட்டின் குடிமக்கள் சில வேளை பாரதத்தை வெறுக்கலாம் - அவர்களும் தனி நாடு என்று கோரலாம்! நாம் இலங்கைத் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள். வரலாற்றாற்றை மாற்றி எழுத முற்படுபவர்கள். எமக்கு ஏன் இன்னொரு நாட்டின் உதவி – நாம் தானே ஏகப் பிரதிநிதிகள். எமக்கு எவரது உதவியும் தேவையில்லை என்கிற இறுமாப்புடன் கருத்துத் தெரிவிக்கும் நடைமுறை பல நாட்களாகவே எம்மிடம் இருக்கிறது. இதற்காகத்தான் இந்தக் கிருத்தியத்தில் சில பழைய வரலாறுகளை பதிவிட விரும்பினேன்.

மீதி பின்னர்.

Saturday, October 18, 2008

இசைஞானிமீது தவறு கூறிய அடியேனை தயவுடன் வாசகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.

கடந்த 18.08.2008 கிருத்தியத்தில் இசைஞானி இளையராஜா அவர்;கள் திருவாசகத்தின் - சிவபுராணத்தில் தவறு இழைக்கலாமா? என்ற ஒரு தலைப்பிலான பதிவை நான் பதிவிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன். திருவாசக ஒலிப்பதிவு விழா சம்பந்தமான ஒளிநாடாவைப் பார்த்த எனக்கு ஒரு படிப்பினை ஏற்பட்டது.

தமிழ்மையம் இதனை தன்னுடைய முழுச் சக்தியையும் அர்ப்பணித்து பணிபுரிந்ததை உணர்ந்தபடியால் எனது பதிவில் இசைஞானி இளையராஜா அவர்;கள் திருவாசகத்தின் - சிவபுராணத்தில் தவறு இழைக்கலாமா? என்ற தலைப்பிட்டு எழுதிய செய்திக்கு வாகசர்களிடம் தயவாக அதை மன்னிக்குமாறு பகிரங்கமாக இத்தால் வேண்டுகிறேன்.

அவர்களுக்கு எழுதிய கடிதத்தையும் வாகசர்களுக்காக இங்கு சேர்க்கின்றேன்.

சுவிற்சர்லாந்து,
17.10.2008. ஐப்பசி வெள்ளி.

திருவருளும் குருவருளும் முன்னிற்க!

வண. அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்ராஜ் அவர்கள்,
நிர்வாக இயக்குனர்,
தமிழ் மையம்
இல. 153, லுட்ச் சேர்ச் வீதி,
சென்னை – 4.

பேரன்புக்கும் பெருமதிப்பக்கும் வணக்கத்திற்குமுரிய அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்ராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களுடைய திருவாசக ஒலிப்பதிவு நாடாவைக் கேட்ட நான் கடந்த 11.10.2008 சனிக்கிழமையே ஒளிப்பதிவு நாடாவைப் பார்க்கக் கூடிய பாக்கியம் கிடைத்தது. ஒலிப்பதிவைக் கேட்டவுடனேயே எனது கிருத்திய வலைப்பதிவுத்தளத்தில் இசைஞானி இளையராஜா அவர்;கள் திருவாசகத்தின் - சிவபுராணத்தில் தவறு இழைக்கலாமா? என்ற ஒரு தலைப்பில் கட்டுரையை எழுதியிருந்தேன்.

தங்களுடைய முன்னுரையுடன் ஆரம்பிக்கும் இந்நாடாவில் இசைஞாளியினுடைய ஆரம்ப பேச்சும் வண. அருட்திரு. வின்சென்ட் சின்னத்துரை அவர்களது வரவேற்பும் வழிகாட்டிய குரு சிவத்திரு. தட்சணாமூர்த்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ பீற்றர் அல்போனஸ் இசைவிற்ப்பன்னர் திரு. பாலமுரளிகிருஷ்ணா பத்திரிகையாளர் திரு. என். ராம் தகவல் ஒலிபரப்பு மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மேன்மைதங்கிய ஜெயபால் ரெட்டி பத்மஸ்ரீ திரு. கமல்ஹாசன் இயக்குனர் சிகரம் திரு. பாரதிராஜா சூப்பர் ஸ்ரார் திரு. ரஜினிகாந்த் மதிமுக பொதுச்செயலாளரும் மிகச் சிறப்பான சைவப் பிரசங்கம் நடத்திய சிவத்திரு. வை. கோ இசைப்பிரவாகம் - இசைஞானி இளையராஜா நன்றியுரை பகிர்ந்த வண. அருட்திரு. ஆனந்தம் போன்றோருடைய பேச்சின் ஆழத்தை மிக மனதார கேட்டுணர்ந்த நிலையில் இம்மடல் தங்களுக்கு எழுதப்படுகிறது.

இசைஞானியவர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டதுபோல பாதிரியார் அரசியல் பேசியதும் - அரசியல் தலைவர் ஆன்மீகம் பேசியதும் ஒரு வரலாறு. விழாவில் தாங்கள் பாடிய நான் யார் என் உள்ளம் யார் ஞானங்கள் யார் என்னை யார் அறிவார் என்ற அந்த மகா தத்துவ வரிகளை மீட்டுப் பார்க்கின்றேன்.

மற்றுப் பற்றெனக் கின்றி நின் திருப் பாதமே மனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப்பிறவாத தன்மை வந்தெய்திய – அந்த உணர்வு - இயக்குனர் சிகரம் கூறிய அந்த வரிகளை அனுபவித்தேன்.

தாங்கள் இறுதியில் குறிப்பிட்ட - இந்தப் பணியில் நாம் எதிர்கொண்ட வலிகள் வேதனைகள் அவமானங்கள் என்ற பொழுது என்னை யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டமையாலே இக்கடிதத்தை எழுத விரும்பினேன். நான் ஏற்கனவே இசைஞானியிடம் கோரிய வேண்டுதலையும் அவர்மீது கண்ட தவறையும் எனது அறியாமையினால் தங்களிடத்தில் பாவமன்னிப்பாக (தங்களுடைய நெறியிலே பரிகாரம் இருப்பதை நான் அறிந்தபடியால்) தாங்கள் ஏற்று இச்சிறியேனின் பெரும் பிழையைப் பொறுக்க வேண்டும் எனத் தயவாக வேண்டுகிறேன்.

தங்களின் அப்பழுக்கற்ற தூய தமிழிசைப் பணியில் எம்மால் முயன்ற உதவியைச் செய்வோம் என உறுதியுரைத்து தஙஇகள் தமிழ்ப் பணிசிறக்க எல்லாம் வல்ல இந்த இறையருளை மனதார வேண்டி இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன். நன்றி. வணக்கம்.

தங்களுண்மையுள்ள,
தங்க. முகுந்தன்.

Friday, October 17, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 11

சத்தியமே தம்முடைய தெய்வமாக
சாந்தநிலை குலையா நல் தவசி காந்தி
இத்தகைய மரணமுற்றதேனோ என்று
இறைவனுக்குச் சாபமிட்டு ஏங்குகின்றோம்
பக்தர்கள்தாம் கோருகின்ற படியே முத்தி
பாலிப்பதன்றோ அப்பகவான் வேலை
அத்தகைய சாவேதான் அடைய வேண்டி
ஆசைசொன்னார் காந்திஅதை அமலன்ஈந்தான்.

கூழுமின்றிப் பரிதவிக்கும் ஏழைமக்கள்
குறைதீர்த்துப் பொய் சூது கொலைகள் நீக்கி
வாழுமுறை இன்னதென வாழ்ந்துகாட்டி
வானுறையும் தெய்வமென எவரும்வாழ்ந்த
மாழும்முறை இதுவெனவே மனிதர்போற்ற
மாநிலத்தில் கண்டறியா மரணம் ஏற்றான்
நாளும்அவன் பெரும்புகழை நயந்துபோற்றி
நானிலத்தோர் நல்வாழ்வு நாடவேண்டும்.

பாரதத்தின் மீது குறை சொல்லுவோருக்கு ஒரு பதில்

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற மகாகவி பாரதியினுடைய தமிழ்ப்பாடலை நாம் தமிழ்ப் பாடத்திலும் சங்கீதப் பாடத்திலும் பாடமாக்கிவை. இதிலே எங்கள் தந்தையர் நாடென்னும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்ற வரிகளும் வரும். தாய்நாடான நமக்கு தந்தை நாடு பாரதம் என்று உணர்வு என்றும் உண்டு. அந்த ரீதியில் தமிழர்கள் துன்பப்பட்ட வேளைகளிளெல்லாம் முன்னர் பிரதமர் நேரு, அன்னை இந்திராகாந்தி, பெரியார் இராஜகோபாலாச்சாரியார், கவிஞர் கண்ணதாசன், பேரறிஞர் அண்ணா, பெரியார் ஈ. வே. ரா, பெரியார் காயிதே மில்லத், திரு. மா. போ. சிவஞானக்கிராமணியார், திரு. எம். பக்தவத்சலம், திரு. எம். ஜி. இராமச்சந்திரன், பிரதமர் ராஜீவ் காந்தி, திரு. என்.டி.ராமராவ், திரு. நரசிம்மராவ், திரு. ராஜாராம், திரு. அப்துல் சமது, திரு. கி. ஆ. பெ. விஸ்வநாதம், திரு. சோ, திரு. ராம், திரு. கல்யாணசுந்தரம், திரு. குமரி ஆனந்தன், திரு. இரா. நெடுஞ்செழியன், திரு. இரா. செழியன், திரு. வை.கோ, திரு. பழ. நெடுமாறன், திரு.கி. வீரமணி, திரு. மணியன், திரு. ஆர். வெங்கட்ராமன் திரு. சிவனாண்டி, நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் மற்றும் பலருடன் குறிப்பாக தற்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் தந்தை செல்வா காலந்தொட்டு எமது பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டியவர்களில் என்னுடைய நினைவுக்கு வந்தவர்களின் பெயரை குறிப்பிட்டிருக்கின்றேன். இன்று பலருக்கு முன்னர் பாரதம் இலங்கைப் பிரச்சனையில் ஈடுபட்ட வரலாறு தெரியாமலிருக்கலாம். வரலாறுகள் பல தெரியாமல் ஒரு சிலரால் மறைக்கப்பட்டிருந்தாலும் நாம் வரலாற்றை மாற்றமுடியாது. அண்மையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட்டிய மாநாட்டில் கலைஞரின் முழுப்பேச்சும் இலங்கைப் பத்திரிகைகளில் குறிப்பாக தமிழ்ப்பத்திரிகைகள் வெளியிடவில்லை. இதுதான் எனது பத்திரிகைகள் மீதான கோபத்திற்குக் காரணம்.

தந்தை செல்வாவுடைய சரித்திரத்தை எழுதிய பத்திரிகை ஆசிரியர் ரி. சபாரத்தினம் அவர்கள் அந்நூலில் என்னுரையில் மூன்றாவது பந்தியில் குறிப்பிட்டவற்றை நியாயத்திற்காக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு நல்ல பத்திரிகையாளனின் பணி ஆய்வில் ஈடுபடுவதல்ல. அதைச் செய்ய நிறையப்பேர் இருக்கிறார்கள். பத்திரிகையாளனின் பணி, தான் மிக அருகே நின்று பார்த்தவற்றைப் பதிவுசெய்து வைப்பதே. பத்திரிகையாளனுக்குக் கிடைக்கும் அந்த அருமையான சந்தர்ப்பம் ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

மிகுதி பின்

Wednesday, October 15, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 10

குண்டுபட்டும் திடுக்கடைந்து குலுங்கிடாமல்
கொள்கைதரும் ராமஜெபம் ஒன்றே கூறி
கொண்டமன சாந்திநிலை குலைந்திடாமல்
கோணலுற்ற வாய்வெறுத்துக் குளறிடாமல்
அண்டைஅயல் துணைதேடி அலண்டிடாமல்
அமைதியுடன் பரமபதம் அடைந்தார்காந்தி
கண்டதுண்டோ கேட்டதுண்டோ கதைதானுண்டோ?

காடுமலை குகைகளிலே தவங்கள் செய்து
காலன்வர வஞ்சாத கதைகள் உண்டு
மேடைகளில் உயிர்கொடுப்பேன் என்று சொல்லும்
மெலுக்கான வாய்வீரர் வெகுபேருண்டு
நாடுகெடும் மதவெறியை மாற்றவேண்டி
குண்டுபட்டே நான்சாக வேண்டும்என்று
ஈடுசொல்லமுடியாத தியாகம் செய்ய
இப்படியார் காந்தியைப்போல் உயிரைஈந்தோர்.

வாசகர்களுடன் ஒரு நிமிடம்!

தற்காலிகமாக பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சகல அரசியல் சம்பந்தமான பதிவுகளும் தற்போது மீண்டும் கிருத்தியத்திலேயே பதிவாகியுள்ளன.
தந்தை செல்வா என்ற புதிய பதிவில் அவரைப் பற்றிய செய்திகள் மாத்திரம் பதிவாகும். அங்கிருக்கும் தனிப்பட்ட பதிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிருத்தியத்தில் குறிப்புக்களுடன் பதிவாகும் என்பதையும் வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றேன்.

நன்றி.

தமிழகத் தலைவர்களின் சாதுரிய புத்தி இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுக்கு எப்போது ஏற்படும்?

கடந்த 18 செப்டெம்பரில் யாராவது முன்வருவீர்களா என்ற தலைப்பிலும் செப்டெம்பர் 10;ந்திகதி மனிதாபிமான பகிரங்க வேண்டுகோள் என்ற தலைப்பிலும் இரண்டு செய்திகளை எனது கிருத்தியத்தில் பதிவிட்டேன். எமது நாட்டில் தமிழ் மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குரியதாக இருக்கின்ற மிகவும் ஒரு பயங்கரமான காலகட்டத்தில் அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்து இப்படியான ஒரு திட்டத்தை ஏற்படுத்தியதுபோல ஏன் இலங்கைத் தமிழ்க் கட்சிகளும் தமிழ்ப்பேசும் முசுலிம் கட்சிகள் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் தமக்குள் ஒரு சந்திப்பை ஏற்படுத்த தவறின என்று ஒரு பாரம்பரியக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் வினவவிரும்புகின்றேன். தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கோரிக்கையை முன்வைத்த தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி ஏன் பேச்சுவார்த்தைகளுக்கு ஏனைய கட்சிகளுடன் சேராமல் தனித்து இயங்குகிறது. மக்களின் அன்றைய நிலையையும் எதிர்கால நிலையையும் யோசித்துப் பணிபுரிந்த தந்தையின் தீர்க்க தரிசனத்தை முற்றாகவே நிராகரித்து மக்களை வாட்டிவதைக்கின்ற நடவடிக்கைகளுக்கு துணைபோகும் தற்போதைய தமிழரசுக் கட்சியினர் இனிமேலாவது தந்தையின் இறுதிப் பேச்சுக்களை பொறுமையுடன் விளங்கி வாசித்து மக்கள் சேவை புரிய வேண்டும் என தந்தை செல்வாவின் பெயரால் தாழ்மையுடன் அப்பாவிப் பொது மக்களுக்காக வேண்டுகிறேன்.

Monday, October 13, 2008

கிருத்தியத்தின் வாசகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பும் - சில மாற்றங்களும்

கடந்த ஒக்டோபர் 02. மகாத்மா காந்தி ஜனனதினம் - கட்டுரை வேண்டும் என்ற செய்திக்கும், 30.09.2008 வாசகர்களின் கவனத்திற்கு என்ற தலைப்பிட்ட செய்திக்கும் எந்தவிதமான கருத்துக்களும் இன்றுவரை தெரிவிக்கப்படாதமையால் அடியேன் எனது கிருத்தியப்பதிவில் தொடர்ந்தும் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளை இடுவதெனவும் முன்னர் குறிப்பிட்டதைப்போல தனியாக சமயத்திற்கு இதை ஒதுக்க முடியாதிருப்பதையும் மிகவும் தயவுடன் தெரிவிக்கின்றேன்.

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 9

பாடமெல்லாம் காந்திமயம் படிக்கவேண்டும்
பள்ளியெல்லாம் காந்திவழி பழகவேண்டும்
நாடகங்கள் காந்திகதை நடிக்கவேண்டும்
நாட்டியத்தில் காந்தி அபிநயங்கள் வேண்டும்
மாடமெல்லாம் காந்திசிலை மலியவேண்டும்
மனைகளெல்லாம் காந்திபுகழ் மகிழவேண்டும்
கூடுமெல்லா வழிகளிலும் காந்தி அன்புக்
கொள்கைகளே போதனையாய்க் கொடுக்க வேண்டும்.

கல்வியெல்லாம் காந்திமணம் கமழவேண்டும்
கலைகளெல்லாம் காந்திமணம் கமழவேண்டும்
சொல்வதெல்லாம் காந்தி அறம் சொல்லவேண்டும்
சூத்திரமாய் காந்திஉரை துலங்கவேண்டும்
வெல்வதெல்லாம் காந்திவழி விழையவேண்டும்
வேள்வியென்றே அவர்திருநாள் விளங்கவேண்டும்
நல்வழிகள் யாவினுக்கும் நடுவாய் நின்ற
நாயகனாம் காந்தி சொன்ன நடத்தைவேண்டும்.

Friday, October 10, 2008

கிருத்தியத்தின் வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கிருத்தியத்தில் நேற்று விஜயதசமியன்று ஆரம்பமாக இருந்த சமயபாட வினா விடை மற்றும் குறுக்கெழுத்துப் போட்டிகள் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஒருசில நாட்கள் பிற்போடப்பட்டிருப்பதை வாசகர்களுக்கு மிகவும் மனவருத்தத்துடன் தெரிவிக்கவேண்டியவனாக இருக்கின்றேன். தயவுசெய்து மன்னிக்கவும்.

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 8

மந்திரங்கள் ஏவாமல் மயங்க வைத்தான்
மாயங்கள் புரியாமல் மலைக்கச் செய்தான்
தந்திரங்கள் இல்லாமல் தலைவன் ஆனான்
தண்டனைகள் பேசாமல் தணியச் செய்தான்
அந்தரங்க ஒற்றரில்லா அரசனானான்
அண்ணலெங்கள் காந்தி செய்த அற்புதங்கள்
எந்த ஒரு சக்தியினால் இயன்றதென்று
எல்லோரும் கூர்ந்தறிய எண்ணவேண்டும்.

போன இடம் எங்கெங்கும் புதுமை கொள்ளும்
புகுந்தமனை ஒவ்வொன்றும் பூரிப்பாகும்
கானகமும் கடிமனைபோல் களிப்புச் செய்யும்
கல்லணையும் மெல்லணையாய்க் கனிவுகாட்டும்
ஈனர்களும் தரிசித்தால் எழுச்சி கொள்வர்
இமையவரும் அதிசயித்து இமைத்து நிற்பர்
தீனரெல்லாம் பயமொழிவர் தீரன் காந்தி
திருக்கதையே தெருக்களெல்லாம் திகழவேண்டும்.

Thursday, October 9, 2008

நவராத்திரி கொலு படங்கள் - சுவிற்சர்லாந்து அடில்ஸ்வீல் முருகன் கோவில்Wednesday, October 8, 2008

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவோருக்கு ஒரு பகிரங்க அறிவித்தல்

இன்று ஈழத் தமிழர்களுக்காக ஏதேதோ பெரியளவில் போராட்டம் நடாத்தும் சில கட்சித் தலைவர்களுக்காக இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர்(நான் குறிப்பிடும் இந்தச் சம்பவம் நடந்தது - இதற்கு முன்னர் அறிஞர் அண்ணாவின் காலத்திலிருந்தே) தனது பேராதரவை வழங்கிய திமுக தலைவர் கலைஞர் மேதகு. மு. கருணாநிதி அவர்கள் எத்தனையோ படிப்பினைகளை ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் அறிந்த ஒரு மாமேதை. சிலர் அவரது பழைய சரித்திரத்தை அறியாமல் வீணே கூப்பாடு போடுவதை சகிக்க முடியாமல் இந்தப் பதிவை மீள இங்கு பதிவிடுகிறேன். இதைப் பார்த்தபிறகு நீங்கள் எதையும் செய்யுங்கள். ஆதாரத்துக்கு இலங்கையின் அன்றைய ஈழநாடு நாளேட்டின் செய்தியை www.thandaichelva.blogspot.com இல் இணைப்பாக இணைத்துள்ளேன். விரும்பினால் பார்க்கவும்.

கடந்த 1984 ஜூலை 25ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் படுகொலை கண்ணீர் நாள் கூட்டத்தில் மேதகு. கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் பேசிய பேச்சு

ஈழத்தமிழினமே! என் உடன் பிறப்பக்களே!

கடந்த ஆண்டு இதே நாளில் வெலிக்கடை சிறைச் சாலையிலே கொல்லப்பட்ட தங்கத்துரையினுடைய தாயார் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அந்த வீரமகனைப் பெற்ற அந்த அன்னையினுடைய திருவடிகளைத் தொட்டு வணங்கி, அந்த தியாகப் புதல்வனை பெற்ற அந்தத் தாயினுடைய பாதங்களுக்கு என் கண்ணீரை காணிக்கையாக்கி ஒரு சில கருத்துக்களை உங்கள் முன்னால் எடுத்து வைக்க நின்று கொண்டிருக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நாளில் நமக்குக் கிடைத்த செய்திகள் நம்முடைய செவிகளில் செந்தீயெனப் பாய்ந்தன என்பதையும், அதனைத் தொடர்ந்து தமிழகம் எவ்வாறு கொதித்து, குமுறி, கொந்தளித்து எழுந்தது என்ற நிகழ்ச்சிகளையும் எழுச்சிக் கவிஞராகத் திகழ்கின்ற காசி ஆனந்தன் அவர்கள் அடுக்கடுக்காக இங்கே எடுத்துக் காட்டினார்கள்.
இது கண்ணீர் நாளா? அல்லது செந்நீர் நாளா? என்பதை ஆராய்ந்து-செந்நீர் சிந்தவும் தயாராக இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை வரவேண்டும் என்பதை நண்பர் லத்தீப் அவர்கள் மிக உணர்ச்சியோடு இங்கே குறிப்பிட்டார்கள்.
அகில இந்திய மட்டத்திலே எந்தக் கட்சியிலே இருந்தாலும் கூட, தமிழன் என்கிற உணர்வோடு மொழியோடு கலந்த தேசியம்தான் உண்மையான தேசியம், உருப்படியான தேசியம் என்பதை எடுத்துக்காட்டி, அந்த தமிழனுக்குக் குரல்கொடுக்க – தமிழகத்துக்கு குரல்கொடுக்க என்றென்றும் தயாராக இருப்பேன் என்பதை இன்றைக்கு ஜனதா கட்சியிலே இருந்தாலும் கூட, நீண்ட நெடுங்காலம் அண்ணா அவர்களுடைய அருகிலே இருந்த காரணத்தால் அந்த உணர்வு மங்காமல் இன்றைக்கும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையிலே என்னுடைய நண்பர் செழியன் அவர்கள் ஆழமான அழுத்தந் திருத்தமான, ஆணித்தரமான கருத்துக்களை இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள்.
தமிழ் ஈழம் பெறவும், செத்துக்கொண்டிருக்கிற தமிழின மக்களைக் காக்கவும் தாய்த் தமிழகத்தினுடைய கொடி, ஐ.நா மன்றத்தினுடைய வாயிற்புறத்திலே பறந்திட வேண்டும்: அன்றைக்குத்தான் தமிழனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று திராவிடர் கழகத்தினுடைய கொள்கை பரப்புச் செயலாளர் செல்வேந்திரன் அவர்கள் இங்கே முரசு கொட்டினார்கள்.
தமிழ் ஈழத்திலே தங்களுடைய இன்னுயிரையும் தருவதற்குத் தயாராகப் போர்க்கொடி உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிற வீராங்கனைகளும், வீரர்களும் இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரைகளையும் கேட்டீர்கள். நானும் இந்த மேடையிலே அமர்ந்து அவர்களுடைய உரைகளைக் கேட்டபோது, வௌ;வேறு கோணத்திலே அவர்களுடைய கருத்துக்கள் இங்கே வெளியிடப்பட்டன என்றாலும் கூட, அனைத்து கருத்துக்களும் ஒரே குறிக்கோளோடு தமிழ்ஈழம் காண வேண்டும். விடுதலை பெறவேண்டும் என்ற அந்த அடிப்படையிலே தான் ஒலித்தன என்பதை மறந்து விடக்கூடாது.
கடந்த ஆண்டு இலங்கைச் சிறையிலே விடுதலை வீரர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழ்க்குல மங்கையர் மானமிழந்து, மழலைகள் தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டு, தமிழர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டு, இலங்கை எரிகிறது என்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இதே பெரியார் திடலில் இதே மன்றத்தில் வீரர்களாக – தியாகிகளாக மாண்ட தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட விடுதலை வீரர்களுடைய படங்களைத் திறந்து வைத்து நான் உரையாற்றியபொழுது சொன்னதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இலங்கையிலே தமிழ் ஈழம் அமைவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிற பணியாற்றிக் கொண்டிருக்கிற, உயிரைத் திரணமாக மதித்து போராடிக் கொண்டிருக்கிற வாலிபர்களே! தமிழ் இளைஞர்களே! உங்களுடைய உறுதியை நான் மெச்சுகிறேன், வாழ்த்துகிறேன், ஆனால் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட எப்போது தொடங்கப் போகிறீர்கள்? அந்த தொடக்கத்தை உடனடியாக செயல்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அன்றைக்குக் கேட்டுக்கொண்ட அந்த வேண்டுகோள் அப்படியே இருக்கிறது.
இதைப் போலவே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைப் பார்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே கேட்டுக் கொண்டேன் - நீங்கள் இலங்கையிலே ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமையை அகற்ற இராணுவத்தை அனுப்பிட வேண்டும்: ராணுவத்திற்குப் பதிலாக வட்ட மேசை மாநாடு: பேச்சு வார்த்தை என்று நீங்கள் திட்டமிடுவீர்களேயானால், அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு காலங்கடத்தி மீண்டும் தொடர்ந்து தமிழின மக்களை இலங்கையிலே கொடுமைப்படுத்த, கொன்று குவிக்க ஜெயவர்த்தனே வலு தேடிக் கொள்வார். எனவே அதற்கு இடந்தராதீர்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன்.
இந்திரா காந்தி காதிலே ஊதிய சங்கும், இளம் தமிழ் விடுதலை வீரர்களுடைய காதிலே ஊதிய சங்கும் ஒன்றாகவே போய்விட்டது என்பதை மிகுந்த மனவேதனையோடு நான் இந்த மன்றத்திலே எடுத்துக் கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.
இங்கே நான் கொஞ்சம் பட்டவர்த்தனமாக பேச விரும்புகிறேன். உரிமையோடு பேச விரும்புகிறேன். மேடையில் இருக்கிற யாரும் தவறாகக் கருதமாட்டார்கள் என்கிற எண்ணத்தோடு பேச விரும்புகிறேன்.
ஒரு குடும்பத்திலே இருக்கிற மூத்தவனோ அல்லது பாசத்திற்குரியவனோ ஒன்றைச் சுட்டிக்காட்டி குற்றத்தை குற்றம் என்று கோடிட்டுக் காட்டினால் உண்மையிலே ரத்தபாசம் உள்ளவர்கள் எப்படி கோபித்துக் கொள்ள மாட்டீர்களோ அதைப் போல நீங்களும் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு சொல்கிறேன்.
இங்கே நண்பர் கோவை மகேசன் பேசும் போது இலங்கையிலே அமைதியான முறையில் அமிர்தலிங்கம் அவர்களும், மற்றவர்களும் இப்போது நடத்துகின்ற போராட்டம் தேவையற்றது: அது பலனளிக்கக் கூடியதல்ல என்ற வகையில், அங்கேயுள்ள விடுதலை வீரர்கள் அல்லது புலிகள் குறுக்கிட்டு அவர்களைத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்று இங்கே சொன்னார்.
அதை நேரடியாக மறுக்காவிட்டாலும் திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் வன்முறை – அமைதியான முறை இவைகளுக்குள்ள வேறுபாடு, முரண்பாடு இவைகளையெல்லாம் விளக்கி – தாங்கள் எடுத்த நிலைக்கு எது காரணம் என்பதை விளக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரையில் திரு. அமிர்தலிங்கம் அவர்களுடைய தலைமையில் இயங்குகிற தமிழர்களுடைய ஐக்கிய கூட்டணியானாலும் அல்லது தீவிர இளைஞர்களுடைய – விடுதலைப் போராளிகளுடைய தலைமையில் இயங்குகிற ஐந்தாறு விடுதலை பேரியக்கங்களானாலும் - அவைகளை நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
உணர்வுபூர்வமாக எல்லோரும் ஒரே குறிக்கோளோடு தான் பாடுபடுகிறார்கள் என்பதில் எனக்குக் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
ஆனால் ஒற்றுமையாகச் செயற்படவில்லையே! தமிழீழம் சுதந்திரம் பெற்ற பிறகு ஒருவருக்கொருவர் யார் ஆட்சிப் பொறுப்பில் அமர்வது என்பதில் வேண்டுமானால் போட்டிபோட்டுக் கொள்ளுங்கள், யார் விடுதலையைப் பெறுவது என்பதில் போட்டி இருந்தால் கூட வரவேற்கலாம். ஆனால் விடுதலை பெறுகிற நேரத்தில் இவன் உயிரோடு இருக்கலாமா என்று எண்ணுகின்ற அளவிற்கு உங்கள் உள்ளத்திலே வெறுப்புக் கோட்டை கட்டப்பட்டு விடுமேயானால் எங்களிடம் நீங்கள் உதவியை எதிர்பார்க்கிற நேரத்திலே நாங்கள் குழப்பத்திற்காளாகி உங்கள் முன்னால் நிற்கிறோம் என்பதை தயவுசெய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அரும்பாடுபட்டு நான் பலமுறை சந்தித்து சந்தித்து இந்த விடுதலை இயக்கங்களின் இளம் தோழர்களிடம் பேசி, பேசி ஒருவேளை என்னுடைய முயற்சியினாலோ அல்லது என்னைப் போல வேறு பலருடைய முயற்சியினாலோ – எனக்குத் தெரியாது: அல்லது அந்த இளைஞர்களே மனப்பக்குவம்பெற்று அந்த முடிவுக்கு வந்தார்களோ தெரியாது: அந்த இயக்கங்களில் ரெலோ(வுநுடுழு) என்கிற ஸ்ரீசபாரத்தினம் தலைமையில் இயங்குகிற இயக்கமும், பாலகுமார் தலைமையிலே இயங்குகிற (நுசுழுளு) என்கிற இயக்கமும், பத்மநாபா தலைமையிலே இயங்குகிற (நுPசுடுகு) இயக்கமும் - இந்த மூன்று இயக்கங்களும் ஓரணியில் திரண்டு – அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு கூட்டணியாக உருப்பெற்று – தமிழ் ஈழத்தை முழுமையான சுதந்திர நாடாக ஆக்குவது – உழைக்கும் மக்களைக் கொண்ட அரசை உருவாக்குவது – முதலாளிகளுக்குச் சொந்தமான வங்கிகளை, நிறுவனங்களை, தொழிலாள விவசாய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வருவது என்கிற ஒரு சமதர்ம சமதத்துவ நோக்கோடு சுதந்திர தமிழ் ஈழத்தைப் பெற்றெடுக்க வேண்டும்: ஈன்றெடுக்க வேண்டும் என்ற நிலையிலே இன்றைக்கு ஒன்றுகூடியிருக்கிறார்கள்.
இன்னும் இரண்டு பேரணிகள் இருக்கின்றன. ஒன்று முகுந்தன் அவர்கள் தலைமையிலே இயங்குகிற தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (Pடுழுவுநு) இன்னொன்று பிரபாகரன் அவர்கள் தலைமையிலே இயங்குகிற விடுதலைப் புலிகள் இயக்கம் (டுவுவுநு) அந்த இரண்டு இயக்கங்களும் இந்த மூன்று இயக்கங்களோடு இணைந்து – அல்லது அவர்கள் விரும்பினால் அந்த இரண்டோடு இந்த மூன்று இயக்கங்களும் இணைந்து – யார் யாரோடு இணைவது என்று பார்க்காமல் இந்த ஐந்து பெரும் இயக்கங்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் பிரச்சினை. அது என்னுடைய கோரிக்கை! ஆசை! அவா! அது நிறைவேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் கேட்கலாம், கருணாநிதி அவர்களே! தமிழகத்திலே உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் போட்டியில்லையா? என்று கேட்கலாம்.
நான் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வை மையமாக வைத்துச் சொல்லுவேன்.அந்தப் போட்டிகூட எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதிலே யார் முந்தி என்ற போட்டி எங்களுக்குள்ளே இருக்கலாமே தவிர இலங்கைத் தமிழர்கள் வீழ்ந்துவிட வேண்டும் என்ற நிலையிலே போட்டி இல்லை என்பதை இன்றைக்கு நான் பகிரங்கமாகப் பிரகடனப் படுத்துகிறேன்.
ஒருவேளை இதில் எம்.ஜி.ஆரை முந்த விடுவதா என்று நான் கருதியிருந்தால் இன்று முதல் அந்த எண்ணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
அதைப் போல கருணாநிதி என்னை மிஞ்சி விடுவதா? என்று
எம்.ஜி.ஆர் எண்ணியிருப்பாரேயானால் அவரும் அந்த எண்ணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவரை நான் யாசித்துக் கொள்கிறேன்.
எனவே தமிழகத்தில் இருக்கின்ற எல்லா தமிழர்களின் நலத்திலே அக்கறை உள்ள கட்சிகளின் சார்பாக, தமிழ் இளைஞர்களையும், தமிழ் விடுதலை இயக்கத்தை நடத்துகின்ற ஈழத்திலே இருக்கின்ற அமிர்தலிங்கம் போன்ற பெரியவர்களையும் நான் இறைஞ்சிக் கேட்டுக் கொள்வதெல்லாம் - வணங்கிக் கேட்டுக் கொள்வதெல்லாம் - பணிந்து கேட்டுக்கொள்வதெல்லாம் ஒற்றுமையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! ஓற்றுமையோடு செயல்படுங்கள்! அப்படிச் செயற்படுவீர்களேயானால் ஐந்து கோடித் தமிழ் மக்களும் உங்கள் பின்னால் வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான்!
மங்கையற்கரசி அம்மையார் இங்கே பேசும்போது காலைப் பத்திரிகைகளைப் பார்த்துத் திகைத்துப் போனேன் என்று குறிப்பிட்டார்கள்.
நானும் கூட திகைக்கவில்லை. ஆத்திரப்பட்டேன். ஆத்திரப்பட்டது யாரிடம் என்றால் முரசொலி துணையாசிரியர் மீது!
அவர்களை உடனடியாக அழைத்து இந்தச் செய்தியை இவ்வளவு பெரிய தலைப்பு போட்டு ஏன் போட்டீர்கள்? செய்தியைப் படிக்கும் போது ஆயுதத்தினால்தான் விடுதலை பெறமுடியும் எனத் தலைப்புப் போட்டிருந்தாலும் கூட முழுச் செய்தியைப் படிக்கிற நேரத்தில் இலங்கையிலே விடுதலை கோருகின்ற பெரியவர்களுக்கம் - இளைஞர்களுக்கும் இடையிலே ஒரு பெரிய கலகம் மூண்டுவிட்டதைப் போல அல்லவா செய்தி அமைந்து விட்டது! இதை ஏன் போட்டீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் போட்ட செய்தியாக அதை வெளியிடவில்லையே! யு.என்.ஐ நிறுவனம் கொடுத்த செய்தியை அல்லவா வெளியிட்டிருக்கிறோம் என்று சொன்னார்கள்.
நான் அவர்களிடத்தில் செய்திகளை மாத்திரம் போடுகின்ற பத்திரிகையாக முரசொலி இருந்தால் நீங்கள் அப்படிப் போடலாம். ஆனால் நம்முடைய சிந்தையிலே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையும் குடிகொண்டிருக்கின்ற காரணத்தினால் நீங்கள் அந்தச் செய்தியை அப்படிப் போட்டிருக்கக் கூடாது என்று சொல்லி வெளியூருக்குப் போகின்ற முரசொலி பதிப்பில் இதை மாற்றி, தலைப்பில் வேண்டுமானால் வேகம் இருக்கலாம். ஆனால் உள்ளே இருக்கின்ற செய்தியில் விடுதலைப் போராளிகளிடையே மனக்கசப்பு இருப்பது போன்ற செய்தியை வெளியிடாதீர்கள் என்று
கூறிவிட்டுத்தான் இங்கே வந்தேன்.
ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடத்திலே பகை தோன்றாதா அவர்களது பாசறையிலே பிளவு ஏற்படாதா? அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு நிற்க மாட்டார்களா? என்றெல்லாம் கருதுகின்ற கருநாக எண்ணமுடையவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படிப்பட்ட செய்தி செந்தேனாக இனிக்கின்றது: செங்கரும்பாகச் சுவைக்கின்றது.
எனவேதான் அந்தச் செய்திகளை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள்.
ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அமைதி வழியில் போராட்டத்தை நடத்துகின்றவர்களும் உண்டு. அதே நேரத்தில் தீவிரமான முறையிலே போராட்டத்தை நடத்துகின்றவர்களும் உண்டு.
நீ எந்தப் பக்கம்? என்று கேட்டால், நான் இரண்டு பக்கமும்தான்! இதுதான் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் என்னுடைய நிலை!
அவர்கள் தாங்கள் விடுதலைக்காக மேற்கொண்டிருக்கின்ற அமைதி வழியையும் நான் வரவேற்கின்றேன். அதே நேரத்தில் வன்முறை வழியை தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அதற்கு அவர்கள் காரணமல்ல! வன்முறையைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது. ஆகவே தேர்ந்தெடுத்தார்கள். எனவே அதையும் நான் வரவேற்கின்றேன். இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்காக உத்தமர் காந்தியடிகள் அகிம்சா வழியை மேற்கொண்டார். அதே நேரத்திலே பகத்சிங் பலாத்கார வழியை மேற்கொண்டார். நேத்தாஜி, வன்முறைதான் - ஆயுதப் புரட்சிதான் உகந்தமுறை என்று அறைகூவல் விடுத்தார்.
தீவிரவாத இளைஞர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்கள் விடுதலை பெற ஆயுதம் தான் பரிகாரம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற – நம்பிக் கொண்டிருக்கின்ற என்னுடைய அன்புக்குரிய தம்பிமார்களுக்கு – உடன்பிறப்புகளுக்கு சொல்லிக் கொள்கிறேன். ஒன்றை மறந்து விடாதீர்கள்! இன்றைக்கு வந்த செய்தி உண்மையாக இருக்குமானால் - கோவை மகேசன் அது உண்மைதான் என்பதைப்போல: அது நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதைப் போல: அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு என்று உத்தமர் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த போதுவன்முறையில் நம்பிக்கை கொண்ட தேசத் தலைவர்கள் யாரும் உண்ணாவிரதத்தால் இந்தியா விடுதலை பெறாது என்று சொல்லியிருப்பார்கள் - ஆனால் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குச் சென்று கலகம் விளைவித்திருக்க மாட்டார்கள். அது இந்திய நாட்டின் சரித்திரம்!
நான் இதைச் சொல்வது சில பேருக்குக் கசப்பாக இருக்கலாம். சிலபேருக்கு விரும்பத்தக்க ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கத் தோன்றுவதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தோன்றுவதெல்லாம் விடுதலைக்காகப் பாடுபடுகிநார்கள் சரி! நாமும் அவர்களுக்காக நம்முடைய நினைவையெல்லாம் தேக்கி வைத்திருக்கிறோம். இல்லையென்று யாரும் கூறமுடியாது. அவர்களுக்காக நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற இன்னல் சாதாரணமானதல்ல. எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருக்கின்றோம். இந்தத் தாய்த் தமிழகத்திலே உள்ள இளைஞர்கள் பலர் தீக்குளித்து மாண்டிருக்கின்றார்கள். இலங்கைத் தீவினிலே தமிழனின் கதி இப்படியாகிவிட்டதே என்று!
இவ்வளவும் தமிழ் நாட்டின் சார்பாக இலங்கையில் வாடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்காக காட்டப்படுகின்ற ஆதரவாக இருக்கின்ற நிலையில், நாங்கள் மனம் வெதும்புகின்ற அளவுக்கு இவ்வளவுதானா? இவர்களிடம் ஈழத் தமிழகத்தை ஒப்படைத்தால் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? என்கின்ற அவநம்பிக்கையை எங்களுக்கு உருவாக்குவார்களேயானால் நிச்சயமாக அப்படி ஒரு ஈழத்தமிழகம் வேண்டுமா? என்று சலிப்போடு கேட்கின்ற நிலை எங்களுக்கு ஏற்பட்டுவிடும்.
எங்கள் பின்னால் யார் நிற்கிறார்கள் என்று கவலையில்லை. நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் இங்கு பேசிய காசி ஆனந்தன் குறிப்பிட்டார்.
அப்படிச் சொன்னாலும் கூட யார் நிற்கிறார்கள் என்ற கவலை அவருக்கு இருப்பது எனக்குத் தெரியும். யாரையும் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர் யாரை எதிர்பார்க்கிறார் என்பதும் புரியும்.
எனவே எங்களுக்குக் கவலையில்லை – யாரையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் சொன்னது ஒரு போர் வீரன், களத்திலே கையிலே கட்கம் ஏந்தி செல்லுகிற நேரத்தில் தனக்காக வாதாட ஆதரவு தர யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் அவன் அந்தப் போரில் வெற்றியடைய முடியாது.
வேலும் வாளும் உண்டாக்கிய இரத்தக் கடலில் பயங்கர மூச்சு விட்டுக்கொண்டு மிதந்து செல்லும் வீரர்களின் மண்டை ஓடுகளை முத்தமிட்டபடி, பயணம் நடத்தும் முறிந்த எலும்புகளையும், அறுந்த நரம்புத் துகள்களையும் கண்டு முகாரிபாடாமல், முதுகு காட்டாமல், முகம் சுளிக்காமல் முன்னேறு நீ! முன்னேறு நீ! என்று முரசொலித்து, எஞ்சிய வீரர்களை நெஞ்சுரம் கொள்ளச் செய்து, எந்த நேரத்தில், எந்தப் பக்கமிருந்து ஈட்டி பாயுமோ எதிரியின் கணைபாயுமோ என்று சாவு முகட்டிலே வினாடிகளைக் கணக்குப் பார்ப்பது வீரர்களுக்கு அழகில்லை என்ற போர்க்களத்து அரிச்சுவடியைத் தவறியும் மறந்து விடாமல் மரணம், மாவீரனுக்குத் தரப்படும் மலர்ச்செண்டு மங்கையின் இதழைவிடச் சுவையானது என்ற மனோபலத்தோடு படையை நடத்திச் செல்பவனே பராக்கிரமசாலி! பைந்தமிழன்!
எனவே களத்தில் நிற்கும் வீரன் எதற்கும் கவலைப்படக் கூடாது என்ற கருத்திலே சொல்லியிருப்பாரேயானால் கவிஞர் காசி ஆனந்தன் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் தாய்த் தமிழர்கள் ஐந்துகோடி பேருடைய ஆதரவு எங்களுக்குத் தேவையில்லையென அவர் கூறியிருக்க மாட்டார். இந்த ஆதரவைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என நிச்சயமாக அவர் சொல்லியிருக்க மாட்டார்.
இந்த ஆதரவு தேவையென்றால், எங்களது ஆதரவுக்காக நீங்கள் கவலைப்படுவது உண்மையானால் நான் உங்களுக்கு உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லுகிறேன்.
நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், எங்களது அத்தனை பேருடைய ஒத்துழைப்பும் - ஐந்து கோடி தமிழர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் - நிச்சயமாகக் கிடைக்கும் என்று கண்ணீரால் எழுதி கையெழுத்திட்டுத் தருகிறேன்.

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? - பகுதி 7

10. இயல்புக்கேற்ற வழியைப் பின்பற்றுங்கள்.

எனது வழிதான் சிறந்ததென்று ஒவ்வொருவனும் நினைக்கிறான். ஆனால் அது உனக்கு மட்டுமே சிறந்தது. பாதை தெரிந்தவர்களும் தங்கள் இயற்கையால் தூண்டப்பட்டுச் செயல்புரிகிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருடைய இயல்பின்படியே செயல்புரிகிறார்கள். அவர்கள் அதை மீற முடியாது.(3.33)
ஒவ்வொருவனிடமும் அவனுக்கே உரிய தனி இயல்பு உள்ளது. அதன் அதைத்தான் பின்பற்ற வேண்டும். அதன் வழியாகத்தான் முத்திக்கு வழிதேடவேண்டும். குரு உனது இயல்பிற்கேற்ற வழியை உனக்குக் காட்டத் தக்கவராக இருக்கவேண்டும். உன்முகத்தைப் பார்த்தே அதைக் கண்டுபிடித்துக் கூற வல்லவராக இருக்கவேண்டும். மற்றவனின் வழியைப் பின்பற்ற ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் அது அவனது பாதை, உனது பாதையல்ல. பாதையைக் கண்டுபிடித்துவிட்டால் அதன் பிறகு நீ செய்ய வேண்டியது எதுவுமில்லை. கைகளை குவித்துக் கொண்டால் போதும். அலையின் வேகமே உன்னை முக்தியில் சேர்த்துவிடும். எனவே பாதையைக் கண்டுவிட்டால் ஒருபோதும் அதிலிருந்து பிறழாதே. உனது வழி உனக்கு மிகவும் இசைந்தது. ஆனால் அதன் காரணமாக அது மற்றவனுக்கு இசைந்ததாக இருக்கவேண்டும் என்பதில்லை.

11. ஆன்ம சொரூபம் நீங்கள்

நீங்கள் ஆன்மா. உங்களை ஆன்மாவாக உணருங்கள். அதற்கு எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள்.
உள்ளது ஒரு போதும் இல்லாமல் போகாது. இல்லாதது ஒருபோதும் உள்ளதாகாது. எனவே எது இந்த உலகமெல்லாம் பரவி நிற்கிறதோ அது தொடக்கமும் முடிவுமில்லாதது என்பதை அறிந்துகொள். அது மாறுபடாதது. மாறுபாடில்லா ஒன்றை மாற்றக் கூடியது இந்த உலகில் எதுவுமில்லை. இந்த உடலிற்கு ஆரம்பமும் முடிவும் இருந்தாலும் உடலில் உறைபவன் எல்லையற்றவன் முடிவில்லாதவன். (2. 16 – 18)
இதையறிந்து எழுந்துநின்று போர் செய், ஓரடிகூட பின்வாங்கக் கூடாது. அதுதான் கருத்து. எது வந்தாலும் சரி போராடு. நஷ்த்திரங்கள் பெயர்ந்து விழட்டும். உலகம் முழுவதும் நம்மை எதிர்த்து நிற்கட்டும். மரணமென்பது உடையை மாற்றிக்கொள்வதுதான். அதனால் என்ன? அதை உணர்ந்து போராடு. கோழைகளாவதால் ஒரு பயனையும் அடைய முடியாது. ஓரடி பின்வாங்குவதால் நீங்கள் எந்தத் தீமையையும் கடந்தவிடமுடியாது.
நீங்கள் எல்லையற்றவர்கள். மரணமற்றவர்கள். பிறப்பற்றவர்கள். நீங்கள் எல்லையற்ற ஆன்மா. அடிமையாயிருப்பது உங்களுக்குப் பொருந்தாது. எழுந்திருங்கள். விழித்திருங்கள். எழுந்து நின்று போர்புரியுங்கள். மரணம் வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ ஒருவருமில்லை. நீங்களே உலகனைத்துமாக இருக்கும்போது யார் உங்களுக்கு உதவமுடியும்?
சிலர் அதை (ஆன்மாவை) வியப்புடன் பார்க்கின்றனர். சிலர் வியந்து பேசுகின்றனர். பிறர் வியந்து கேட்கின்றனர். சிலர் அதைப் பற்றிக் கேட்டும் புரிந்து கொள்ளவில்லை. (2.29)

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 7

மதம் எனுமோர் வார்த்தையையே மறந்து வாழ்ந்தான்
மாசறியா அன்பினையே வளர்த்த வள்ளல்
சதமெனுமோர் சத்தியத்தைச் சார்ந்திடாத
சடங்குகளை விட்டொழிக்கச் சக்தி தந்தான்
விதவிதமாய் உடைநடைகள் விரிந்திட்டாலும்
வேற்றுமையுள் ஒற்றுமையே விளக்கிவைத்தான்
இதம் மிகுந்த காந்தி எம்மான் சரித்திரந்தான்
இந்நாட்டின் வேதமென இசைக்க வேண்டும்.

ஜாதி குலம் பிறப்பையெண்ணும் சபலம் விட்டோன்
சமதர்ம சன்மார்க்கம் சாதித்திட்டோன்
நீதி நெறி ஒழுக்கமென்ற நிறைகளன்றி
நேர்மையற்ற தேர்வுகளை நீக்கிநின்றோன்
ஆதிபரம் பொருளான கடவுட்கல்லால்
அகிலத்தில் வேறெதற்கும் அஞ்சா சுத்தன்
ஜோதி பெருங் கருணை வள்ளல் காந்தி சொல்லே
சுருதியென மக்களெல்லாம் தொழுதல் வேண்டும்.

Tuesday, October 7, 2008

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? - பகுதி 6

9. யாருடைய நம்பிக்கையையும் குலைக்காதீர்கள்

நீ எல்லாம் தெரிந்தவனாக இருக்கலாம். அதற்காக பிறரது எளிய களங்கமற்ற நம்பிக்கையைக் குலைக்காதே (3.26)
நீங்கள் வலிமைபடைத்தவராக இருந்தால் நல்லது. ஆனால் உங்களைப் போல வலிமையில்லாதவர்களைச் சபிக்காதீர்கள். ஒவ்வொருவரும் மக்களைப் பார்த்து நீங்கள் பயனற்றவர்கள் என்று சொல்கிறார்கள். உனக்கு உதவி செய்ய முடியாத நான்தான் பயனறஇறவன் என்று யார் சொல்கிறார்கள்? மக்கள் தங்கள் சக்திக்கும் பொருளுக்கும் அறிவுக்கும் தக்கவாறு சரியாகத்தான் செயல்படுகிறார்கள். என் நிலைக்கு அவர்களை உயர்த்த முடியாத நான் தான் உதவாக்கரை.
ஆகவே சடங்குகள் பல தேவதை வழிபாடு புராணங்கள் எதுவும் தவறில்லை என்கிறார் கிருஷ்ணர். ஏன்? ஏனெனில் எல்லாம் ஒரே இலஷியத்திற்குத்தான் இட்டுச் செல்கின்றன. சடங்குகள் சாஸ்திரங்கள் உருவங்கள் எல்லாம் சங்கிலியின் கண்ணிகள். அதைப் பிடித்தக்கொள். அதுதான் முக்கியம். நீ உண்மையாக இருந்து ஒரு கண்ணியைப் பற்றிக் கொண்டிருந்தாயானால் அதை விட்டுவிடாதே. மீதி தானே உன்னிடம் வரும். ஆனால் மக்கள் அதைப் பிடிப்பதில்லை. எதைப் பிடிப்பது என்பதைப் பற்றி சண்டை போட்டுக்கொண்டு காலத்தை வீணாக்குகிறார்கள். ஆனால் எதையும் பிடிப்பதில்லை. ஏதாவதொரு கண்ணியைப் பற்றுங்கள். உது உங்களை மையத்திற்கு இட்டச் செல்லும். முற்றவற்றை உங்கள் இதயமே உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்.
யார் எந்த உருவில் என்னை வழிபட விரும்பினாலும் அந்த உருவில் அவனுக்கு நான் சிரத்தையைக் கொடுக்கிறேன். அதன் மூலம் அவனை நான் சந்திக்கிறேன். (4.11) என்று அவர் கூறுகிறார். அவருடைய இதயம் எல்லா பாமரர்களுக்காகவும் உருகுகிறது.

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 6

வீரமென்றும் வெற்றியென்றும் கோபமூட்டி
வெறிகொடுக்கம் பேச்சையெல்லாம் விலக்கி எங்கும்
ஈரமுள்ள வார்த்தைகளை எவர்க்கும் சொல்லி
இனிமைதரும் காந்தியைப்போல் இரக்கம் வேண்டும்
காரமுள்ள கடும்சொல்லைக் கேட்டிட்டாலும்
காந்தியைப்போல் கலகலத்துச் சிரித்துத் தள்ளி
பாரமற்ற மனநிலையைப் பாதுகாத்து
பகைமையெண்ணாக் காந்திமுறை பயிலவேண்டும்.

பொது நலத்தைக் காந்தியைப்போல் பொழுதும் எண்ணி
பொறுப்புணர்ந்து சேவைகளைப் புரியவேண்டும்
பொதுப் பணத்தைக் கண்போலப் போற்றி எந்தப்
பொழுதும் அதன் கணக்குகளைப் பொறித்துநீட்டி
துதிப்பதற்கோ தூற்றுதற்கோ கொடுத்திடாமல்
தூய்மையுள்ள அறங்களுக்குத் துணைமையாக்கும்
மதிநலத்தைக் காந்தியைப்போல் மனதிற் காத்து
மக்களுக்குத் தொண்டு செய்வோர் மலியவேண்டும்.

Monday, October 6, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 5

மனிதரெல்லாம் ஒரு கடவுள் மக்களென்று
காந்தியைப்போல் மனமார மதிக்க வேண்டும்
புனிதமுள்ள பரம்பொருளின் பெயரைச் சொல்லி
போர்மூட்டும் மதவெறியைப் போக்கவென்றே
அனுதினமும் தவங்கிடந்த காந்தி அண்ணல்
அனுஷ்டித்த சமரசத்தில் ஆர்வம் வேண்டும்
தனதுமதம் தனது இனமென்றே யெண்ணும்
தருக்குகளைக் காந்தியைப்போல் தவிர்க்கவேண்டும்.

சிறுதுளியும் வீண்போகாச் செலவு செய்யும்
காந்தியைப்போற் சிக்கனங்கள் பழக வேண்டும்
பிறரொருவர் பாடுபட்டுத் தான் சுகிக்கும்
பேதைமையைக் காந்தியைப்போல் பிரிக்கவேண்டும்
நெறிதவறி வருகிறது சொர்க்க மேனும்
நீக்கிவிடக் காந்தியைப்போல் நேர்மை வேண்டும்
குறிதவறிப் போகாமல் ஒழுக்கம் காத்து
குணநலத்தில் காந்தியைப்போல் கொள்கை வேண்டும்.

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? - பகுதி 5

7. உனக்கு நீயே நண்பனும் பகைவனும்.

உதவியில்லையே என்று ஏங்குவது மிகப் பெரிய தவறு. யாரிடமும் உதவியை நாடாதீர்கள். நாமே நமக்கு உதவி. நமக்கு நாமே உதவ முடியாவிட்டால் வேறு யாரும் உதவ முடியாது. உனக்கு ஒரே நண்பனும் நீயே! ஒரே பகைவனும் நீயே! உனக்கு உன்னைத் தவிர வேறு பகைவனுமில்லை. நண்பனுமில்லை. (6.5) இதுதான் முடிவான சிறந்த பாடம். அந்தோ! இதைக் கற்றுக் கொள்ளத் தான் எவ்வளவு காலமாகிறது. இதோ கைக்கு கிட்டிவிட்டது போல தோன்றுகிறது. அடுத்த நொடியில் பழைய அலை மோதுகிறது. முதுகெலும்பு உடைகிறது. நாம் பலமிழந்து மறுபடியும் மூடநம்பிக்கைக்கும் உதவிக்கும் கை நீட்டுகிறோம். அந்தப் பெருந்துன்பக் குவியலைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லாம் உதவியைத் தேடிய தவறான என்னத்தின் விளைவு!

8. பலவீனமே பாவம்

ஒரே ஒரு பாவந்தான் உண்டு. அதுவே பலவீனம். பலவீனமின்றி எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாவதற்கும் ஆயத்தமாயிருப்பவன் மட்டுமே மகான்.
எழுந்து தைரியமாகப் போராடுங்கள். பைத்தியக் காரத்தனத்திற்கு மேல் பைத்தியக் காரத்தனமாகச் சேர்த்துக்கொண்டே போகாதீர்கள். எந்தத் தீமை வரக் காத்துக் கொண்டிருக்கிறதோ அதனுடன் உங்கள் பலவீனத்தையும் சேர்க்காதீர்கள். உலகிற்கு நான் சொல்ல வேண்டுவதெல்லாம் அவ்வளவுதான். வீரர்களாக இருங்கள். ஆவிகளைப் பற்றியும் பேய்களைப் பற்றியும் பேசுகிறீர்கள். நாமே உயிருடன் உலவும் பேய்கள். பலவீனமான எல்லாவற்றிலிருந்தும் விலகிவிடுங்கள். அது சாவு. வலிமையானதென்றால் அதைப் பெற நரகத்திற்குச் செல்ல நேர்ந்தாலும் சென்று அதைப் பற்றிக் கொள்ளுங்கள். வீரர்களுக்கு மட்டுமே முக்தியுண்டு. அழகிற் சிறந்ததை அடைய வீரர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. தைரியத்தின் உச்சியை அடையாத யாருக்கம் முத்திபெறத் தகுதியில்லை.
பலவீனம் தளைகள் எல்லாம் கற்பனை. அவற்றைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னால் அவை மறைந்து ஒழிய வேண்டும். பலவீனமடையாதீர்கள். வேறு வழியில்லை. வீரர்களாக எழுந்து நில்லுங்கள். அச்சம் வேண்டாம். மூடநம்பிக்கை வேண்டாம். உண்மையை உள்ளபடியே எதிர்கொள்ளுங்கள். நமது துன்பங்களுள் மிகக் கொடிய துன்பமான மரணம் வந்தாலும் வரட்டும். நாம் உயிரை விடவும் துணிந்துள்ளோம். எனக்கு தெரிந்த சமயம் எல்லாம் அவ்வளவுதான்.
பலவீனம் மரணத்தின் அடையாளம். வாழ்க்கையின் அடையாளம் வலிமை.

இன்று நவராத்திரி – 7ம் நாள் மகா சரஸ்வதிதேவி பூஜை ஆரம்பம்

இன்று ஆரம்பமாகும் மகா சரஸ்வதிதேவிக்குரிய மூன்றுநாட் பூசையில் எமது பிரார்த்தனை!

கல்விக்கு அதாவது மனிதரை நல்வழிப்படுத்தும் அறிவு – சிந்தனை – ஞானம் எனப்படும் இந்த ஆறாவது அறிவைப் பற்றி நாம் இன்றைய நாளில் சற்று அமைதியாக தனித்திருந்து ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆக்கத்திற்கு வழிகாட்ட வேண்டிய அறிவு இன்று அழிவுகளுக்கும் அனர்த்தங்களுக்கும் பெருந்துன்பத்துக்கும் ஆளாகி மக்களை சொல்லொணாத துயரத்தில் இருக்கவைத்துள்ளது. எங்க பார்த்தாலும் ஒற்றுமையின்மையும் போர்களும் அழிவுகளுமாகவே இருக்கிறது.

குமரகுருபர சுவாமிகள் தனது சகல கலா வல்லிமாலையின் கடைசிப் பாடலில்
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன் போற்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே!

அறிவினுடைய திறம் எங்கு சென்றாலும் மரியாதைக்குரியதாகிறது. இன்று அறிவைப் பற்றிப் பூரணமாக அறியாதவர்கள் - அறிவுள்ள அறிஞரை மதியாது தாம் நினைத்தபடி அவர்களைப் புறக்கணித்து தமது எண்ணப்படி திட்டங்கள் தீட்டுவதாலும், செயற்படுவதாலும் அழிவுகள் - அதிகரித்து நாடும் உலகமும் அமைதியை வேண்டி அங்கலாய்க்கிறது.

மன அமைதிக்கு இன்றைய நாளில் அன்னையின் திருநாமங்களை ஓருமனதாக திரிகரண சுத்தியோடு பாராயணம் செய்வோமாக!

அம்மணி! ஜெகதாம்பிகே! கருணாகரி! பரமேஸ்வரி!
கண்மணி! ஜெயகௌரி! காங்கயி! கார்த்திகே! திரிநேத்திரி!
தண்மயீ! உபசாந்தினி! சிவசாம்பவீ! ஏகாம்பரீ!
சின்மயீ! சுபசீலி! மாலினி! தேவி! சௌந்தரி ஓம் நமோ!

பத்ரகாளி! துர்க்கா! புவானி! பராசக்தி! புரிபாலினி!
சித்சொரூபிணி! சிம்மவாகினி! திவ்ய ராஜராஜேஸ்வரி!
வித்வ பூஷணி! மீன லோசனி! வீரமர்த்தனி! விமலினீ!
சத்ய வாசனி! நித்ய கன்னி! தயாபரீ! நம ஓம் நமோ!

குண்டலீ! சந்த்ர மண்டலீ! இளங்கோமளீ! இன்ப சியாமளீ!
சண்டிகா! சாமுண்டி! பைரவி! சாவித்ரி! ஜெயகாயத்ரீ!
அண்டர் நாயகி! ஆபத் பாந்தவி! அமுதஞான பயோதரீ!
தொண்டர் சாதகி! தூய வானதி! சோமசேகரி! ஓம் நமோ!

சுத்த சக்தி! சுடர்க்கொடி! திவ்ய சுந்தரீ! ஸ்ரீ புராந்தகீ!
வித்தகீ! தெய்வ நர்த்தகீ! ஜய விஜயி! பாப விநாசினி!
சித்ர ரஞ்சனி! தெய்வ குஞ்சரி! தேவதா! உமா! பார்வதீ!
நித்ய வாணி! நிரஞ்சனீ! மலைநீலி! சங்கரி! ஓம் நமோ!

சந்த்ர மொளலி! சரஸ்வதி! திவ்ய சாரதா! ஜெய பாரதீ!
சுந்தராங்கி! சுரர்நுதா! விஸ்வசோபிதா! சாம்ப்ர பாவதீ!
மந்த்ர ரூபிணி! மா பகவதீ! மஹிஷாசுர மர்த்தனீ!
தந்த்ர சாதனி! செஞ்சடாதரி! சர்வதாரகி! ஓம் நமோ!

அஷ்ட லட்சுமி! அபய ஹஸ்தனி! அமலினீ! செங்கமலினீ!
நிஷ்டை யோகினி! நுpமலவாகினி! நிஷ்களங்க சந்யாசினி!
துஷ்ட நிக்ரகி! தூய வைஷ்ணவி! சோதி! வேணி! சுமங்கலீ!
சிட்டரட்சகி! ஸ்ரீ வராகினி! சீதளீ! நம ஓம் நமோ!

பூரணீ! ஞான பூஷணீ! வேத போதினீ! தர்மசாதனீ!
ஆரணீ! நவசீரணீ! உலகாண்டவீ! உக்ர தாண்டவீ!
காரணீ! சிவகாமினீ! ஜீவகாருணி! ஜெகன் மோகினீ!
தாரணீ! பவதாரணீ! புவிநாயகி! நம ஓம் நமோ!

Sunday, October 5, 2008

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? - பகுதி 4

4. உலகியல் போகாதது வரை ஆன்மீகம் கிடையாது.

அர்ஜூனா! ஒருமைப்பட்ட மனமே வெற்றிபெறும். இரண்டாயிரம் பொருட்களில் சிதறிப்போன மனம் தனது ஆற்றலை இழந்துவிடுகிறது. வேதங்களுக்கு மேல் எதுவுமில்லை என்று சிலர் இதமாகப் பேசலாம். அவர்கள் சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறார்கள். வேதங்களின் சக்தியால் எலகிலுள்ள இன்பப் பொருட்களை அடைய விரும்புகிறார்கள். அதற்காக வேள்விகளைச் செய்கிறார்கள். (2. 41 - 43)
அப்படிப்பட்டவர்கள் இந்த சுகபோக எண்ணங்களைக் கைவிடாதவரையில் ஆன்மீக வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள். ( 2.44)
இது இன்னொரு முக்கியமான பாடம். உலகியல் ஆசைகளை விடாதவரை ஆன்மீகம் கிடையாது. புலன்களில் என்ன இருக்கிறது? இவை வெறும் மன மயக்கம். இறந்த பின்னும் சொர்க்கத்தில் கூட அவற்றை ஜோடிக் கண்களை மூக்கை விடாமல் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். சிலர் அங்கே தங்களுக்கு இங்குள்ளதைவிட அதிகப் புலன்களிருக்கும் என்று எண்ணுகின்றனர். அரியாசனத்தில் வீற்றிருப்பவனாக இறைவனை இறைவனுடைய பௌதீக உடலை என்றென்றும் கண்டுகொண்டிருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய மனிதர்களின் ஆசைகளெல்லாம் உடலைப்பற்றியவை. உணவு, நீர், இன்பம் பற்றியவை. இந்த உலகியல் வாழ்வின் தொடர்ச்சியே அது. வாழ்விற்கு அப்பால் எதையும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. இந்த வாழ்க்கையெல்லாம் உடலுக்குத்தான். முக்திக்கு காரணமான மன ஒருமைப்பாட்டை இத்தகைய மனிதன் ஒருபோதும் அடைய மாட்டான். (2.44)

5. எது சமயம்?

சமயமென்பது கோட்பாடுகளே என்ற கருத்தை அகற்றிவிட்டால் உண்மையை இன்னும் தெளிவாக நாம் புரிந்து கொள்ளமுடியும். பாரதத்தில் சமயமென்பது அனுபூதியே தவிர வேறல்ல. போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு ஒருவன் எப்படிப் போகிறான்? நான்கு குதிரைகள் பூட்டிய வண்டியிலா, மின்சார வண்டியிலா, தரையில் உருண்டு கொண்டா என்பது முக்கியமல்ல.
சமயமென்பது ஆன்மாவை ஆன்மாக உணர்வது. நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நேர்மாறாக, ஆன்மாவை ஜடப்பொருளாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். அழிவற்ற கடவுளிலிருந்து மரணத்தையும், ஜடப்பொருளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அழிகி;ன்ற, அறிவற்ற ஜடப்பொருளிலிருந்து ஆன்மாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
சமயமென்பது வளர்ச்சிபற்றியது என்பதை உணரவேண்டும். அது வெறும் பொருளற்ற பிதற்றல்களல்ல. 2000 ஆண்டுகளுக்குமுன் ஒரு மனிதன் கடவுளைக் கண்டான். ஒருவன் கடவுளைக் கண்டது, உங்களையும் உற்சாகப்படுத்தி அவ்வாறு செய்யும்படி தூண்டலாம். அதற்கு மேலாகச் சிறிதளவுகூட அது உங்களுக்கு உதவிசெய்யாது. முன்னோர்களின் உதாரணங்களுடைய முழுப்பயனும் அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றுமில்லை. செல்லும் வழியிலுள்ள கைகாட்டிக் கம்பங்களே அவை. ஒருவன் உண்டால் இன்னொருவனின் பசி தீராது. ஒருவன் கடவுளைக் காண்பது மற்றொரு மனிதனைக் காப்பாற்றாது. உங்களுக்கு நீங்களே கடவுளைக் காணவேண்டும்.
கடவுளென்ற ஒருவர் உண்டானால் அவர் உங்கள் கடவுளாகவும் என் கடவுளாகவும் இருக்க வேண்டும் என்பது பாரதத்தில் தொன்றுதொட்டு வரும் கருத்து. கடவுளென்று ஒருவர் உண்டென்றால் நீங்கள் அவரைப் பார்க்க முடியவேண்டும்.

6. இறைவன் அவதரித்து நம்மை வழிநடத்துகிறார்.

நீங்கள் எண்ணுவதுபோல் அவ்வளவு கொடியதல்ல உலகம். முட்டாள்களாகிய நாமே அதைக் கொடியதாகச் செய்துள்ளோம். நாமே பேய் பிசாசுகளைப் படைக்கிறோம். பிறகு அவற்றை ஓட்ட நம்மால் முடிவதில்லை. கையால் கண்களை மூடிக்கொண்டு யாராவது ஒளி தாருங்கள் என்று கதறுகிறோம். கண்களிலிருந்து கைகளை எடுங்கள். செய்ய வேண்டியது அவ்வளவுதான். நாம் நம்மைக் காப்பாற்றுவதற்காக தெய்வங்களையெல்லாம் கூப்பிடுகிறோம். ஒருவனும் தன்மீது பழி சொல்வதில்லை. அதுதான் இரக்கத்திற்குரியது. சமுதாயத்தில் ஏன் இவ்வளவு தீமை இருக்கிறது? என்ன காரணம்? சுகபோக நாட்டமும், சாத்தானும், பெண்ணும் என்கிறீர்கள்! ஏன் இவற்றை உருவாக்குகிறீர்கள்? அவற்றை உருவாக்குமாறு யாரும் உங்களிடம் சொல்லவில்லையே!

அர்ஜூனா! நீயும் நானும் பிறப்பு, இறப்புச் சக்கரத்தில் பலமுறை சுழன்றுவந்திருக்கிறோம். உனக்கு அவையெல்லாம் நினைவில்லை. நான் ஆதியில்லாதவன். பிறப்பில்லாதவன். படைப்பு அனைத்திற்கும் தலைவன். எனது இயற்கையை வசப்படுத்திக்கொண்டு நான் உருவெடுக்கிறேன். அறம் தாழ்ந்து மறம் தலையெடுக்கும்போதெல்லாம் மனித குலத்திற்கு உதவ நான் வருகிறேன். நல்லவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கம் ஆத்மீகத்தை நிலைநாட்டுவதற்கும் நான் அவ்வப்போது வருகிறேன். எவரெவர் எந்தெந்த வழியில் என்னை அடைய விரும்பினாலும், அவரவரை நான் அந்தந்த வழியில் அடைகிறேன். ஆனால் அர்ஜூனா, என் வழியை விட்டு யாரும் விலகிச் செல்ல முடியாது என்பதை அறிந்துகொள்( 4 . 5 - 8, 11)
யாரும் எப்போதும் விலகிச் சென்றதில்லை. எப்படிச் செல்லமுடியும்? எவரும் அவர் வழியிலிருந்து தவறமுடியாது.

ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகம்

இன்று மகாலக்ஷ்மி தேவியின் பூஜை செய்வதற்கான ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகம் என்ற தோத்திரம் இணைக்கப்படுகிறது.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸ_ரபூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மகாலக்ஷ்மி நமோஸ்துதே!

நமஸ்தே! கருடாரூடே டோலாஸ_ர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே!

ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்க ஹரே தேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே!

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி துக்திப் ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே!

ஆதியந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோஹக்ஞே யோஹசம்பூதே மகாலக்ஷ்மி நமோஸ்துதே!

ஸ்தூல ஸ_ஷ்ம மஹா ரௌத்ரே மஹாசக்தி மஹாதரே
மஹாபாப ஹரே தேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே!

பத்மாஸன ஸ்;திதே தேவி பரப்பிரஹ்ம்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகன் மாதா மகாலக்ஷ்மி நமோஸ்துதே!

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஜிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாதா மகாலக்ஷ்மி நமோஸ்துதே!

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 4

எத்தொழிலைச் செய்தாலும் காந்தியைப்போல்
எஜமானர் கடவுளென்று எண்ணவேண்டும்
சத்தியத்தைக் கருணையுடன் சாதித்திட்டால்
சரியாக மற்றதெல்லாம் சாயும் என்ற
பத்தியத்தைக் காந்தியைப்போல் நிலைக்கவேண்டும்
பாதகமோ சாதகமோ பலன்களெல்லாம்
நித்தியனாம் சர்வேசன் கடமையென்ற
நிஜபக்தி காந்தியைப்போல் நிலைக்கவேண்டும்.

உழைப்பின்றிச் சுகம் விரும்பல் ஊனம் என்று
காந்தியைப்போல் எல்லோரும் உணரவேண்டும்
அழைப்பின்றித் துன்பமுற்றோர் அருகில் ஓடிக்
காந்தியைப்போல் அவர்க்குதவும் அன்புவேண்டும்
பிழைப்பின்றிப் பரதவிக்கும் ஏழை மக்கள்
பின்பற்றிக் கைத்தொழிலின் பெருமைகொண்டு
களைப்பின்றிப் பசிதீரும் வழியைக்காட்ட
காந்தியைப்போல் கைராட்டை நூற்கவேண்டும்.

Saturday, October 4, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 3

புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாய் எண்ணி
காந்தியைப்போல் பொதுநோக்கும் பொறுமைவேண்டும்
மகிழ்ச்சியிலே மதிமயங்கித் தடுமாறாமல்
காந்தியைப்போல் மனசடக்கப் பயிலவேண்டும்
வெகுட்சிதனை வேரோடு களைந்து நீக்க
காந்தியைப்போல் விரதங்கள் பழகவேண்டும்
நிகழ்ச்சிகளைக் காந்தியைப்போல் நிறுத்துப் பார்த்து
நேர்மையுடன் குற்றமெல்லாம் நீக்க வேண்டும்.

வருகின்ற யாவர்க்கும் எளியனாக
காந்தியைப்போல் வரவேற்கும் வழக்கம்வேண்டும்
தருகின்ற சந்தேகம் எதுவானாலும்
காந்தியைப்போல் தணிவாகத் தர்க்கம்செய்து
திரிகின்ற மயக்கத்தைத் தீர்த்துவைத்து
திடமறிந்த வழிகாட்டும் தெளிவுவேண்டும்
புரிகின்ற புத்திமதி எதுசொன்னாலும்
புண்ணின்றிக் காந்தியைப்போல் புகட்டவேண்டும்.

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? – பகுதி 3

2. இயற்கையே செயல்புரிகிறது.
அர்ஜூனா! இந்த செயல்களெல்லாம் இயற்கையில் நிகழ்கின்றன! அது தன் நியதிகளை நமது உடல்களிலும், உள்ளங்களிலும் செயல்படுத்துகிறது. நாம் அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு நான் இதைச் செய்கிறேன் என்கிறோம். இவ்வாறு நாம் மனமயக்கத்திற்கு உள்ளாகிறோம்.(3:27)
நாம் ஏதோ ஒரு வற்புறுத்தலுக்கு உட்பட்டே எப்போதும் செயல்புரிகிறோம். பசி வற்புறுத்தும்போது உண்கிறோம். துன்புறுதல் அதைவிடக் கொடியது. அது வெறும் அடிமைத்தனம். உண்மையான நான் எப்போதும் சுதந்திரமானது. ஒன்றைச் செய்யுமாறு அதை எது கட்டாயப்படுத்தமுடியும்? உடலுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொள்ளும்போதுதான் துன்புறுகிறோம். நூன் இன்ன பெயருடையவன் என்றெல்லாம் பொருளற்றவற்றைப் பிதற்றுகிறோம். உண்மையை உணர்ந்தவன் தன்னைத் தனியாக வைத்தக் கொள்வான். அவனது உடல் எதைச் செய்தாலும் மனம் எதைச் செய்தாலும் அவன் கவலைப்படுவதில்லை.
3. சுயநலம் கூடாது.
நாம் சுயநலநாட்டம் உடையவர்களாக இருக்கும்வரை உண்மையறிவு நமக்கு ஒருபோதும் வராது. ஒவ்வொன்றிற்கும் நாம் நம்முடைய சாயத்தைப் பூசுகிறோம். உள்ளது உள்ளபடியே பொருட்கள் நம்மிடம் வருகின்றன. அவை தம்மை மறைத்துக்கொள்கின்றன என்பதில்லை. நாம்தான் அவற்றை மறைக்கிறோம். நம்மிடம் தூரிகை இருக்கிறது. ஒரு பொருள் வந்ததும் அது நமக்குப் பிடிக்காவிட்டால் அதற்கு சிறிது சாயம் பூசிவிட்டுப் பிறகு பார்க்கிறோம். நாம் எதையும் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நாம் ஒவ்வொன்றின்மீதும் நமது வண்ணத்தைப் பூசுகிறோம். எல்லாக் காரியங்களிலும் தூண்டுதலாக இருப்பது சுயநலம். ஒவ்வொன்றும் நம்மால் மறைக்கப்படுகிறது. பட்டுப்புழு தன்னுடலிலிருந்தே நூலை நூற்று அதனால் ஒரு கூண்டை செய்து அதிலேயே தன்னை அடைத்துக்கொள்வதுபோல் நாமும் இருக்கிறோம். தன் செயலாலேயே அது தன்னை சிறைப்படுத்திக் கொள்கிறது. அதையே நாமும் செய்கிறோம். நான் என்று நாம் சொன்னால் அந்தக் கணமே நூல் ஒரு சுற்றுச் சுற்றுகிறது. நான் - எனது என்றால் இன்னொரு சுற்றுச் சுற்றுகிறது. இப்படியே சுற்றிக்கொண்டு போகிறது. செயலின்றி ஒருகணங்கூட நம்மால் இருக்கமுடியாது. செயல்புரியுங்கள்! உங்கள் அண்டை வீட்டுக்காரர் உங்களிடம் வந்து சற்று எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டால் எப்படிச் செய்வீர்களோ அந்த அளவிலேயே உங்களுக்கும் உதவி செய்து கொள்ளுங்கள். அதற்குமேல் அல்ல, இன்னொருவனின் உடலைவிட உங்கள் உடல் உயர்ந்த மதிப்படையதல்ல. அவனது உடலுக்கு செய்வதைவிட அதிகமாக உங்கள் எடலுக்கு எதுவும் செய்யாதீர்கள். இதுதான் சமயம் கூறுகிற உண்மை. யாருடைய முயற்சிகள் எந்தவிதமான ஆசையும், சுயநலமும் அற்றதோ அவன் கர்மத்தளைகளை ஞானத்தீயால் எரித்துவிட்டவன் அவனே அறிஞன். (4:19) புத்தகங்களைப் படிப்பதால் அது கிடையாது. கழுதையின்மீது ஒரு நூல் நிலையத்தையே சுமத்திவிடலாம். ஆதனால் அது கல்வியறிவு பெற்று விடாது. புல நூல்களைப் படிப்பதால் என்ன பயன்? செயலில் பற்றை முற்றிலுமாக விட்டு, எப்போதும் திருப்தியான மனதுடன் இலாபத்தில் ஆசைகொள்ளாமல் செயல்புரியும் ஞானி கர்மத்தைக் கடந்தவன். (4.20)

Friday, October 3, 2008

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? – பகுதி 2

1. பற்றற்று வேலை செய்யுங்கள்.

பற்றற்று இருங்கள். அதுதான் முழு இரகசியம். புற்று வைத்தீர்களானால் துன்பப்படுவீர்கள். தற்காலத்தில் இதனை எத்தனையோவிதங்களில் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். பற்றின்மை என்றால் குறிக்கோள் இன்மை என்று சிலர் கருதுகின்றார்கள். இதுதான் அதன் பொருளானால் இதயமற்ற விலங்குகளும், சுவர்களுந்தான் நிஷ்காமகர்மத்தின் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழும். உண்மையான நிஷ்காமகர்மம் செய்பவன் விலங்கைப்போலவோ, ஜடத்தைப்போலவோ உள்ளத்தில் ஈரம் இல்லாமலோ திகழமாட்டான். உலகனைத்தையும் தழுவும் அன்பும் கருணையும் அவனது இதயத்தில் நிரம்பியுள்ளது.
பற்றற்ற அன்பு உங்களுக்கு வேதனை தராது. எது வேண்டுமானாலும் செய்யுங்கள். எதுவும் உங்களைத் துன்புறுத்தாது. என்னுடையது என்ற எண்ணத்துடன் எதையும் செய்யாதீர்கள். கடமைக்காக கடமை, வேலைக்காக வேலை.நாம் சிறிது வேலை செய்கிறோம். உடனே அயர்ந்து விடுகிறோம். ஏன்? நாம் அந்த வேலையில் பற்று வைக்கிறோம். நாம் பற்று வைக்காவிட்டால் நமக்கும் வேலையுடன் கூடவே அளவற்ற ஓய்வும் கிடைக்கும்.இத்தகைய பற்றின்மையை அடைவது எவ்வளவு கடினமானது! அதனால் கிருணர் அதை அடைவதற்கான சாதாரண வழிகளையும் முறைகளையும் காண்பிக்கிறார். மிகவும் எளிய வழி வேலையைச் செய்துவிட்டு பலனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது.
நமது ஆசையே நம்மைப் பிணைக்கிறது. நமது வேலையின் பலனை ஏற்றுக்கொள்வதனால் அவை நல்லதானாலும் சரி கெட்டதானாலும் சரி அவற்றை சகித்தேயாகவேண்டும். ஆனால் நமக்காக வேலை செய்யாமல் இறைவனின் மகிமைக்காக நாம் வேலை செய்வோமானால் பலன்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும். செயல்புரியவே உனக்கு அதிகாரம். ஒருபோதும் பலனில் இல்லை.(2.47)
நீங்கள் வலிமையுடையவர்களாக இருந்தால் வேதாந்தத் தத்துவத்தைப் பின்பற்றுங்கள். சுதந்திரமாக இருங்கள். அது உங்களால் இயலாதென்றால் கடவுளை வழிபடுங்கள். இல்லாவிடில் ஏதாவது ஓர் உருவத்தை வணங்குங்கள். அதற்கான வலிமையும் உங்களிடம் இல்லாவிட்டால் இலாபத்தைக் கருதாமல் ஏதாவது நற்பணிகளைச் செய்யுங்கள். உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் இறைபணியில் அர்ப்பணியுங்கள். தொடர்ந்து போராடுங்கள்.

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 2

குற்றமொன்று நாம்செயினும் காந்தியைப்போல்
கூசாமல் மன்னிப்புக் கோர வேண்டும்
மற்றவர்கள் பெருந்தவறு செய்திட்டாலும்
மன்னித்துக் காந்தியைப்போல் மறக்கவேண்டும்
உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்திடாமல்
ஓரமின்றிக் காந்தியைப்போல் உண்மைகாட்டி
சற்றுமவர் துன்பமுறாச் சலுகைபேசி
சரிப்படுத்தும் காந்தியைப்போல் சகிப்புவேண்டும்.

எத்தனைதான் கடிதங்கள் வந்திட்டாலும்
காந்தியைப்போல் சலிப்பின்றி எல்லோருக்கும்
நித்த நித்தம் தவறாத கடமையாக
நிச்சயமாய்ப் பதிலெழுதும் நியமம்வேண்டும்
புத்திகெட்ட கேள்விசிலர் கேட்டிட்டாலும்
பொறுத்துவிடை காந்தியைப்போல் புகலவேண்டும்
பத்தியம்போல் பதட்டமுள்ள பாஷை நீக்கி
பரிவாகப் பணிமொழிகள் பதிக்கவேண்டும்.

Thursday, October 2, 2008

இன்று காந்தி ஜயந்தி – 02.10.2008


இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் மகாத்மா காந்தி காட்டிய வாழ்க்கை முறையை நாம் முன்னெடுத்துச் செல்வோமாயின், புரிந்துணர்வும், அமைதியும் கூடிய ஒரு சூழலை ஏற்படுத்த முடியும். அவரது குறிப்புக்களிலிருந்து சிலவற்றை மீட்டுப்பார்ப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.

1. அன்பை அடிப்படையாகக்கொண்ட அகிம்சையே என் தெய்வம். சத்தியமே என் தெய்வம். அகிம்சையை நாடிச்செல்லும்போது – சத்தியம் எனக்குச் சொல்கிறது – என்வழியாகத்தான் அதைக்காண்பாய்என்று. சத்தியத்தை நாடித்தேடும்போது – அகிம்சை எனக்குச் சொல்கிறது – என்வழியாகச்செல் - நீநாடும் சத்தியத்தைக் காண்பாய்என்று. இரண்டும் ஒன்றையொன்று பின்னிப்பிணைந்து நிற்கின்றன. ஒன்றின்றி மற்றொன்றில்லை.
2. எல்லா ஜீவராசிகளுடனும் நான் ஒன்றிநிற்கும்நிலையை அடைய ஆசைப்படுகிறேன். சகல ஜீவன்களும், நானும் ஒன்று என உணர முயல்கிறேன். மனிதப்பிறப்பு மட்டுமல்ல, ஊர்ந்துசெல்லும் புழுவின் உயிருடனும் ஒன்றுபட ஆசைப்படுகிறேன். ஊர்ந்து செல்லும் புழுக்களும், நானும் ஒரே பரம்பொருளினின்று உண்டானோம். உயிரானது எந்தவடிவம் கொண்டுநின்றாலும் ஒன்றுதானே!
3. அன்பு என்னும் வேகம் மனிதகுலத்தை நடத்தியிராவிட்டால், மனிதஜாதி அழிந்தே போயிருக்கும். மிருகத்துக்கும் - மனிதனுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் - மனிதன் தன்வாழ்க்கையில் பரஸ்பர அன்புக்குப் பிரதானம் கொடுத்து வருவதேதான். நம்முடைய உள்ளங்களுக்குள் இன்னும் மறைந்துநிற்கும் மிருக தத்துவம் அவ்வப்போது தலைது}க்கி வருகிறது. ஆயினும் அது அன்பின் ஆட்சியைப் பொய்யாக்கிவிடாது. தருமம் உண்மையாயினும், அதை நடத்துவது கடினம். அனைவரும் அன்பின் ஆட்சியை ஒப்புக்கொண்டு அனைத்திலும் அதைச் செலுத்திவிட்டார்களாகில் பூவுலகமே ஆண்டவனுடைய தேவலோகம் ஆகிவிடும்.
4. கிறீஸ்து சமயம், பௌத்த சமயம், இந்து சமயம் - இவற்றைப்போலவே இஸ்லாம் மார்க்கமும் சாந்தி மார்க்கமாகும். பேதங்கள் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், இச்சமயங்கள் அனைத்துக்கும் நோக்கம் ஒன்றே! ஒவ்வொரு சமயத்தினரும் பிற சமயத்தினரை வெறுக்காமல் - பொறுத்துக்கொண்டும், கௌரவித்தும் வரவேண்டும்.
5. ஆண்டவனை நாம் வணங்குவது உண்மையானால், உலகத்திலுள்ள எல்லாமக்களும் நம்முடைய சகோதரர்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எல்லாச் சமயங்களும் சமம் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.
6. அன்பு எதையும் கேட்பதில்லை – கொடுக்கிறது.

ஒழுக்கம் அல்லாத அறிவாற்றல்(கல்வி),
மனிதாபிமானம் இல்லாத அறிவியல்,
உழைப்பில்லாத செல்வம்,
நேர்மையில்லாத வணிகம்,
கொள்கை இல்லாத அரசியல்,
மனச்சாட்சி இல்லாத இன்பம்,
தியாகம் இல்லாத வழிபாடு – என்ற மகாத்மா காந்தி சுட்டிக்காட்டிய 7 சமூக கேடுகளை களைய இன்றைய இந்நாளில் நாம் உறுதி பூணுவோமாக!

வாழ்க காந்திமகான்! வளர்க அவர்காட்டிய கொள்கை!!

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி!

காந்தியைப் போல் அதிகாலை விழிக்க வேண்டும்
கடவுளென்ற கருணையை நாம் கருத வேண்டும்
காந்தியைப் போல் காற்றாட உலவ வேண்டும்
களைதீரக் குளிர் நீரில் முழுக வேண்டும்
காந்தியைப் போல் அளவாகப் புசிக்க வேண்டும்
கண்டதெல்லாம் தின்னாமை காக்க வேண்டும்
காந்தியைப் போல் ஒழுங்காகத் திட்டம்போட்டு
காரியங்கள் செய்முறையில் கடமை வேண்டும்.

சொன்ன சொல்லைக் காந்தியைப் போல் காக்க வேண்டும்
சோம்பலதைக் காந்தியைப் போல் துறக்க வேண்டும்
மன்னவனோ பின்னெவனோ காந்தியைப் போல்
மனிதரெல்லாம் சமமென்று மதிக்க வேண்டும்
சின்னவரோ கிழவர்களோ எவரையேனும்
சிறுமையின்றிக் காந்தியைப் போற் சிறப்புத் தந்து
என்ன குறை எங்கு வந்தீர் எனக் கேட்டு
இன்முகமாய்க் குலவுகின்ற எளிமை வேண்டும்.

(மொத்தம் இதில் 22 பாடல்கள் இருக்கின்றன. இன்றுமுதல் இரண்டு இரண்டாக ஒவ்வொருநாளும் பாடலைப் பார்ப்போமா?)

மகாத்மா காந்தியடிகளின் கருத்துரைகள்.

1. மிதமாகப் பேசு.
2. எவர் எது சொன்னாலும் கேட்டுக்கொள். உனக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்.
3. ஒவ்வொரு நிமிடத்தையும் முக்கியமாகக் கருதிக் குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்.
4. ஏழை போல் வாழ். செல்வத்தில் பெருமை கொள்ளாதே.
5. நீ செய்யும் செலவிற்குக் கணக்கெழுது.
6. மனம் ஒன்றிக் கல்வி கற்றுக்கொள்.
7. நாள் தோறும் உடற்பயிற்சி செய்.
8. அளவோடு சாப்பிடு.
9. நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுது.

நாமக்கல் கவிஞரின் கவிதை மில்க்வைற் தொழிலக அதிபர் சிவதர்மவள்ளல் அமரர் க. கனகராசா அவர்களால் வெளியிடப்பட்ட படிப்பினை என்ற நூலில் இருந்து பதிவிடப் படுகிறது.

Wednesday, October 1, 2008

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா?

நவராத்திரியை முன்னிட்டு நாம் எமது சநாதன தர்மம் எனப்படும் வைதீக நெறியில் கூறப்பட்ட சில நற்கருமங்களைப்பற்றி ஆராயலாம் என்றிருக்கிறோம். இதில்
1. பற்றற்று வேலைசெய்யுங்கள்.
2. இயற்கையே செயல்புரிகிறது.
3. சுயநலம் கூடாது.
4. உலகியல் போகாததுவரை ஆன்மீகம் கிடையாது.
5. எது சமயம்?
6. இறைவன் அவதரித்து நம்மை வழிநடத்துகிறார்.
7. உனக்கு நீயே நண்பனும் பகைவனும்.
8. பலவீனமே பாவம்.
9. யாருடைய நம்பிக்கையையும் குலைக்காதீர்கள்.
10. இயல்புக்கேற்ற வழியைப் பின்பற்றுங்கள்.
11. ஆன்மசொரூபம் நீங்கள்.

என்ற 11 விடயங்களைப் பற்றிக் கூறலாம் என்பதே எமது ஆதங்கம்.
அதற்கு முன்னதாக எமது சநாதன மார்க்கம் மனித வாழ்க்கைக்கு வகுத்துள்ள நெறிமுறைகளை இன்று உலகமே வியந்து பாராட்டுகிறது. இந்த நெறிமுறைகள் மனிதனை வாழ்வாங்கு வாழச் செய்கிறது. அவனைப் பண்படுத்தகிறது. இறையை அறியும் உயர்நிலைக்கு அவனைக் கொண்டு செல்கிறது.
புருஷார்த்தங்கள் ( உறுதிப் பொருட்கள் )
அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்), இன்பம்(காமம்), வீடு(மோட்சம்) என்பவை நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படும்.
1. அறம் - தனது கடமைகளை ஒவ்வொருவரும் சரிவரச் செய்ய வேண்டும். அறநெறிகளைக் காத்து வாழ்க்கை நடத்த வேண்டும்.
2. பொருள் - நல்ல வழியில் பொருள் சேர்க்க வேண்டும். மாறாக தீய வழிகளில் பொருள் சேர்க்க முனைபவன் பாவத்தையே சேர்க்கிறான். பணம் சம்பாதிக்கும்பொழுது அதில் பாவம் கலக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும். எவ்வழியிலேனும் பணம் சேர்க்க வேண்டும் என்ற தவறான ஆசை இன்றைய மனிதனை ஆட்கொண்டு உள்ளது. இவர்கள் பாவத்தையே சேர்க்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை.
3. இன்பம் - மனிதனை இவ்வுலகில் வாழ்ந்திடச் செய்வதற்காக பல்வேறு இன்பங்களை இறைவன் இவ்வுலகில் படைத்துள்ளான். இன்பத்தைத் தேடாத மனிதன் இல்லை. எந்த இன்பத்தை மனிதன் அனுபவிக்கலாம் என்பதை எமது சநாதன நெறி மிகவும் செம்மையாகச் சுட்டிக்காட்டுகிறது. பிறருக்குத் துன்பம் ஏற்படாதவாறு நீதி நெறியைப் பின்பற்றி உலக இன்பங்களை மனிதன் அனுபவிக்கலாம். அதுவே இன்பம்(காமம்).
4. வீடு – மேற்கூறியவாறு அறம் காத்து, பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ்ந்த பின் இறைவனையே எண்ணி இம்மூன்றையும் விட்டு, வீடு பேற்றை அடைவது வீடுபேறு அல்லது முக்தி ஆகும். இம்முயற்சியை மேற்கொண்டு உய்வு பெறவேண்டும் என்று எமது நெறி போதிக்கிறது.

புருஷார்த்தங்களின் பெருமை

ஞானிகள் வகுத்துள்ள மேற்கூறிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களும் மனிதனை இவ்வுலகில் வாழ்வாங்கு வாழவும், பாவம் கலவாத இன்பங்களை அனுபவிக்கவும், அதே நேரத்தில் அவனைப் பண்படுத்தி அவ்வுலக வாழ்வின் உயர்வைப் பெறுவதற்கும் வழிவகுக்கின்றன.