அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 27, 2009

கால்நூற்றாண்டில் கால் பதிக்கும் சேரனுக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கூகுளுக்கு இன்று அகவை பதினொன்று - தமிழ் எக்காளம் சொல்கிறது!
உலக இதய தினம் இன்று என சிங்கக்குட்டியாரும் - துபாய் ராஜாவும் பதிவிட்டிருக்கிறார்கள்!
நவராத்திரியின் மகா நவமியும் இன்று! ஆம் வீடுகளில் இன்று சரஸ்வதி கொலுபூசை!
இலங்கைப் பதிவர் சந்திப்போடு அறிமுகமாகிய - கல்வித்தாயின் பூரண கிருபை கொண்ட - ஈழப் பதிவர் சேரன் கிறிஷ் அவர்களின் 25ஆவது பிறந்த நாளும் இன்று! அவர் தன் வாழ்வில் நலம்பெறவும் பதிவுலகில் தமது பாரிய பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் கிருத்தியம்(என் சார்பில்) தனது மனம் நிறைந்த பிறந்த நாள்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது!

செப்டெம்பர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் விசேட குண அம்சங்களையும் இன்றைய நாளில் குறிப்பிடுவது நல்லதென நினைக்கின்றேன்! ஏனெனில் நானும் இந்த மாதத்தில்தான் பிறந்தேன்!

Suave and compromising
Careful, cautious and organised
Likes to point out people's mistakes
Likes to criticize
Quiet but able to talk well
Calm and cool
Kind and sympathetic
Concerned and detailed
Trustworthy, loyal and honest
Does work well
Sensitive
Thinking
Good memory
Clever and knowledgeble
Loves to look for information
Must control oneself when criticising
Able to motivate oneself
Understanding
Secretive
Loves sports, leisure and travelling
Hardly shows emotions
Tends to bottle up feelings
Choosy especially in relationships
Loves wide things
Systematic

Sunday, September 20, 2009

கல்வி பயின்றதொரு காலம் - அனுராதபுரம் விவேகானநதா தமிழ் மகா வித்தியாலயம் - பகுதி 1

இத்தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த யோவொய்ஸ் அவர்களுக்கு முதலில் நன்றி! மருதமூரானுக்கும் இப்பதிவிலுள்ள கட்டுரையைச் சரிப்படுத்தியமைக்கு நன்றி! அரிவரியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தேன். ஒரு சந்தோஷமான நிகழ்வால் இடையிலிருந்து பகுதியாக எழுத விரும்பி இதைப் பதிவிடுகிறேன்.
இன்று இக்கட்டுரையை பதிவிட முற்படும்போது கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் நான் பயின்ற இப்பாடசாலையின் அதிபருடைய மகன் என்னுடன் ஈமெயில் தொடர்பு கொண்டதும் மறக்க முடியாத ஒரு சம்பவம். இந்தப் பதிவுகளை எழுதியதன் திருப்தி இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்றைய பதிவொன்றில் குறிப்பிட்டதுபோல - நட்புக்காக ஏங்கும் எனக்கு 32 வருடத்தின் பின் ஒரு நட்புக் கிடைத்தது ஒரு சந்தோசமான நிகழ்வல்லவா! மீண்டும் நிர்ஷனைத்தான் இன்றும் நினைவுபடுத்தி நன்றி சொல்லவேண்டும் - கிருத்தியத்தை எழுத உதவியமைக்கு!

அதிபருடைய மகனுடைய செய்தியை இதில் போடுவது எனக்கு ஒரு திருப்தியை ஏற்படுத்தும். சில மணி நேரத்துக்கு முன்னர் அவர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசியதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அன்புமிக்க முகுந்தன்,
வணக்கம். இக்கடிதம் உங்கட்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
சுமார் முப்பது ஆண்டுகட்கு முன்னரான தொடர்பு.
அனுராதபுரம் விவேகனந்தாவில் ஒன்றாக படித்தோம். என்னுடைய அப்பா அப்போது அங்கு அதிபராக இருந்தவர். இந்த மெயிலின் பிரதி அப்பாவுக்கும் அனுப்பியுள்ளேன்.
உங்களுடைய தளம் வழியாகவே உங்களுடைய மெயில் முகவரி கிடைத்தது.
உங்களுடைய தளம் மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுகள்.
பல அருமையான தகவல்களை பகிர்ந்து கொள்கின்றீர்கள். உங்கள் எழுத்து தொடர நால்வாழ்த்துக்கள்.
நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.
அன்புடன்,
சி.சிற்சபேசன்
நியூசீலாந்து

காதல்: அழகு: கடவுள்: பணம்= நான் (தொடர் விளையாட்டு)

காதல் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சம்பந்தரின் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்ற தேவாரம் தான்! சிறிய வயதிலிருந்து எனக்குப் பிடித்தமான(காதல்) மிகவும் அழகானவர் - படமாயினும் சரி கடவுளாயினும் சரி - பிள்ளையார்தான்!
இப்போதும் வயிற்றில் 2 தலையணைகளை வைத்துக் கட்டிவிட்டு பெரியதொரு பெற்சீற்றால் வயிற்றை மறைத்தக் கொண்டு பிள்ளையார் வாறார் பிள்ளையார் வாறார் என்று சொல்லி ஆடிப் பாடுவது என் இயற்கையான குணம். பிள்ளையாரின் ஆட்டத்தைப் பார்த்துச் சந்திரன் சிரித்தானாம் - சின்னக் குழந்தைகளின் அழுகையை நிற்பாட்ட - பிள்ளைகள் சிரிப்பதற்காக நான் போட்டு ஆடும் ஒரு விளையாட்டு.
மேலும் எனது தந்தையார் அரச ஊழியராக கடமையாற்றியதன் காரணத்தால் அடிக்கடி நாம் வெளியூர்களில் வாசம் செய்திருக்கிறோம். மாங்குளத்தில் அனுராதபுரத்தில் என குடும்பத்தினருடன் வாழ்ந்தபோதும் எனக்கு மாங்குளம் மாவடிப் பிள்ளையாரும் அனுராதபுரம் விவேனாந்த சபைக் கட்டிடம் அமைந்த இடத்திலிருந்த பிள்ளையார் கோவிலும் மறக்க முடியாத நினைவுகளாக இன்றும் இருக்கிறது. 1977 கலவரங்களின் பிறகு தெல்லிப்பழையில் வாழ்ந்தபோது வீட்டுக்கு அருகிலேயே காசிப்பிள்ளையார்.சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விடுதியில் தங்கியருந்தபோது MLA Hostel வளாகத்திலுள்ள அரச மரத்தடிப் பிள்ளையார். இப்படி நான் போகுமிடமெல்லாம் நான் காதலித்த பிள்ளையாரும் இருந்துகொண்டார்.


இனி காதலைப்பற்றிய என் உண்மையான கருத்து!

நாம் சகோதரர்கள் 4பேரும் வீட்டில் ஆண்கள். இதில் நான் மூத்தவன். பெண்களே இல்லாத என் குடும்பத்தில் பார்க்கும் பெண்களனைவரையும் சகோதரிகளாகவே மதித்துப் பழகியிருக்கிறேன். பாடசாலையில் கல்வி கற்ற நாட்களிலிருந்து திருமணம் முடிக்கும் வரை யாரையும் காதலித்ததில்லை.(நம்ப வேண்டியது உங்கள் கடமை)

காதல் திருமணத்தில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை இருக்கவில்லை. காரணம் எனது அம்மாவும் அப்பாவும் காதலித்துத்தான் திருமணம் புரிந்தார்கள். இதிலும் ஒருதடவை எனது தாயார் வீட்டுக்கத் தெரியாமல் தனது 18 வயதில் தனியாக எனது அப்பாவைத் தேடி புகையிரத மூலம் கொழும்பு சென்றபோது யாரோ எனது தாத்தாவுக்குத் தெரிந்தவர்கள் அம்மாவை புகையிரதத்தில் கண்டு அழைத்துச் சென்று தகவலனுப்பி பின்னர் தாத்தா சம்மமதத்துடன் மிகவும் எளிமையாக எனது தாயாரின் திருமணம் எங்கள் வீட்டிலேயே நடைபெற்றது. காதலித்த பின்னர் கல்யாணமாகிப் பிள்ளைகள் பெற்றதன் பிறகு எனது தம்பி இரத்தப் புற்றுநோயினால் தன் 7ஆவது வயதில் மரணமடைந்தபின் - குடும்ப வருமானம் போதாமையினாலும் - கலவரங்களின் பின்னரும் வீட்டில் ஒரே பிரச்சனைதான்.


மற்றயது எனது மாமனார் ஒருவர் காதலித்தது ஒரு சிங்களப் பெண்மணியை - அவர்களிடத்திலும் பிரச்சனை இருந்திருக்கிறது.

மற்றது ஒன்றுவிட்ட எனது அண்ணன் கதை - இவர்கள் காதலித்து ஒரு பிள்ளை பெற்ற பின்னர் தற்போது பிரிவினையில்!

இவை மாத்திரமல்ல - நாட்டின் பிரச்சனைகள் மற்றும் அழியும் எம் நாட்டின் அவல வாழ்க்கையில் - காதல் என்னைப் பாதிக்கவில்லை என்று சொல்லலாம்.

இதில் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் சமயப் பணிகளுக்காக 1990களில் நான் ஒரு இடத்திற்குச் சென்ற வேளையின்பின் (இடத்தையும் பெயர்களையும் குறிப்பிட விரும்பவில்லை) சில சமய சந்தேகங்களுக்காக என்னுடன் கடிதத்தில் தொடர்பு கொண்ட ஒரு மாணவியினுடைய காதலன் தவறாக என்மீது குற்றம் சாட்டி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததையும் இதைக் கேள்விப்பட்ட அந்த மாணவி பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளாது விட்டதும் உண்மை. பள்ளிப்படிப்பை முடித்தபின் ஊரிலுள்ள பலருக்கு சமயமும் தமிழ், கணிதம் போன்ற பாடங்களும் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறேன். அப்படிப் பயின்றவர்களில் என்னுடைய மனைவியும் ஒருவர். சிலர் இப்போதும் கேட்பதுண்டு -நீங்கள் அப்போதே காதலித்தவரா? என்று. ஆனால் என் பதில் ஒரு போதும் இல்லை என்பதே!

இப்போது திருமணத்தின் பின் நான் காதலிப்பது என் மனைவியையும் பிள்ளைகளையும் மாத்திரமே!.



அழகு என்றால் இயற்கையை மிஞ்சி எதையும் சொல்ல முடியாது! ஏற்கனவே காதலில் குறிப்பிட்டதுபோல அழகிலும் பிள்ளையார் தான் என்னை முதலில் கவர்ந்தவர். அதன்பிறகு அழகுக்குரிய அனைத்தையும் அடக்கலாம். பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது! அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பார்க்கும் எல்லா வடிவமும் எனக்கு அழகாகவே தெரிகிறது.



கடவுள் என்றால் கடந்து உள்ளும் புறமுமாய் இருப்பவர் - மேலான ஒரு சக்தி - பரம்பொருள் - அருவ உருவங்களுக்கு அப்பாற்பட்டவர் - எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் நாம் உருவம் கொடுத்து வழிபடுகிறோம். இயற்கையின் அனைத்திலும் அவரது ஆற்றல் வெளிப்படுகிறது! இதிலும் நான் ஒரு திருமந்திரத்தின் பாடலைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை


பணம் -


இதுபற்றிய எனது கருத்து -

பணம் இருக்கும் மனிதனிடம் குணமிருப்பதில்லை
குணமிருக்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை

பணமென்னடா பணம் பணம்
குணம்தானடா நிரந்தரம்

இன்றைக்கு இது ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் பணம் பத்தும் செய்யும் என்பதுபோல வாழ்க்கைக்கு முக்கியமானதொன்றாக இருக்கிறது.
எனக்கும் இந்தப் பணத்துக்கும் பெரிய போராட்டமே நடக்கிறது! இன்றைக்கு 20ஆந்திகதி ஆனால் கையில் ஒரு சதமும் இல்லை! இதுதான் என்னுடைய நிலை! யாரிடம்?.......

விளையாட்டிற்கு அழைத்த மருதமூரானுக்கு நன்றிகள்.

இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தியதன் பின் விளைவு!


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைப் பதிவர் சந்திப்பு நடந்தது. நட்புக்காக ஏங்கும் என்போன்றவர்களுக்கு இது ஒரு வரப் பரிசாதமே! பலருடன் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டேன். சிலருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பானேன்.எல்லோருடனும் தொடர்பாக இருக்க வேண்டும் என்பதில் நான் அதிக அக்கறை கொண்டிருக்கிறேன். மேலும் இந்த இலங்கைப் பதிவர்கள் பரந்து விரிந்து மாவட்ட மட்டங்களில் ஒரு கூட்டாக இயங்கினாலும் நன்மை பயக்கும். இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின் ஒரு பதிவிட எண்ணியிருந்தேன். அது இன்னும் நிறைவேறவில்லை.

நல்ல பதிவுகளைப் பார்க்கும் போது நேரமிருந்தால் அதற்கு ஒரு பதிலிடுகை செய்வது என் வழக்கம்.மருதமூரான் எழுதிய
"என்னை புடம்போட்ட பள்ளிகள்: பள்ளி பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு)" என்ற பதிவுக்கு ஒரு இடுகையைப் பின்வருமாறு இட்டேன்.

வணக்கம் மருதமூரரே!
பசுமையான பழைய நினைவுகளை மீட்ட இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது!
என்ன இப்படியெல்லாம் தொடர் விளையாட்டெல்லாம் நடக்குதா? எங்களை நீங்கள் இதுக்கெல்லாம் கூப்பிடமாட்டியள் தானே! ம்.. என்ன செய்வது கொஞ்சம் பழசாப் போனோம் இல்லையா! சரி எப்படியென்றாலும் என் அனுபவங்களில் கட்டாயம் இதுவரும்! பரவாயில்லை நீராவது 4 பாடசாலைகளில் படித்திருக்கிறீர். நான் மொத்தம் 8 பாடசாலைகள் பெயரைச் சொல்ல வெளிக்கிட்டாலே நிறைய எழுதவேண்டிவரும். ஆறுதலாக எனது பதிவில் போடுகிறேனே!

ஏற்கனவே நான் எழுதிய பல பதிவுகள் அரைகுறையாக இருக்கிறது. எழுதவே நேரமில்லாத என்னை பதிவிட மேலும் விளையாட்டுக்கு அழைப்பார்கள் என்று நான் சத்தியமாக நம்பவே இல்லை. இப்போது நட்புத் தொல்லை கூடிவிட்டது. சும்மா பகிடியாகவே கருத்தைச் சொல்கிறேன் யாரும் கோபிக்க வேண்டாம்.

மருதமூரான் தன்னுடைய காதல்: அழகு: கடவுள்: பணம்= நான் (தொடர் விளையாட்டு) பதிவில் 1.முதலாமவர், தங்க முகுந்தன்: இவரின் வாழ்க்கை அனுபவங்கள் இந்த தலைப்பில் அழகாக தெறிக்கும் என்று நினைக்கிறேன் என்றும்,

யோ வொய்ஸ் தன்னுடைய பள்ளிப் பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு) பதிவில் 01. தங்க முகுந்தன் (தொடர் பதிவுக்கு மருதமூரான் அழைக்கவில்லை என கவலை பட்டீங்கதானே? இப்ப மாட்டிகிட்டீங்க)
என்றும்,
தமது பதிவுகளில் குறிப்பிட்டு என்னை இப்போது பெருஞ்சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.

மேலும் யோவொய்ஸ் என்னை நன்றாகப் புரிந்துகொண்டு மருதமூரானுக்கு இட்ட ஒரு இடுகையில் பாவம் அவர் நானும் ஒரு தொடர் பதிவுல மாட்டி விட்டுட்டேன். நேற்று தொலைபேசியில் என்னுடன் பேசி ஏன் மாட்டி விட்டீங்க என கேட்டவர், இன்று கட்டாயம் உங்களிடமும் கேட்பார். இவருக்கு அடுத்தடுத்து வைக்கும் இரண்டாவது ஆப்பு?.. என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்.



அவர் குறிப்பிட்டதுபோலவே நான் மருதமூரனுடன் தொடர்பு கொண்டு பேசினேன். இந்த இருவருக்கும் எனது கோபத்துடன் கூடிய அன்பான நன்றிகள். உங்களுடைய கட்டளைக்கு தலைவணங்கி கூடிய விரைவில் நீங்கள் எதிர்பார்த்த கட்டுரைகளை எழுதி பதிவிடுகிறேன். அதுவரை சற்றுப் பொறுத்திருக்கவும்.

இரத்தினபுரி கஹவத்த தலுகலை ஹவுப்பைத் தோட்டம் ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பு


இவ்வாலயப் புனரமைப்புக்காக 1995-6-23இல் அச்சிடப்பட்ட வேண்டுகோளின் பிரதி இன்றுவரை என்னுடன் இருக்கிறது என்றால் நான் அந்த ஆலயத்துடன் எவ்வளவு தொடர்புபட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் உணரமுடியும். இவ்வாயலத்தில் நானே பல தடவைகள் பூசை செய்திருக்கிறேன். இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மகணானந்த மகாராஜ் வருகைதந்ததைப் பற்றியும் அவருக்கு எழுதிய கடிதங்கள் பற்றியும் ஏற்கனவே ஒரு பதிவிட்டிருக்கிறேன். இவ்வாலயம் இன்றுவரை கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாகவே இருக்கிறது. இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போதே எனது ஆருயிர் நண்பன் சிவா பாஸ்கரராவ் அவர்களுடன் தொலைபேசியில் பல மாதங்களுக்குப்பிறகு பேசினேன்.
கோவிலை முற்றுமுழுதாக்கும் வேலைகளுக்கு நான் என்னால் முடிந்ததை மீண்டும் செய்ய வேண்டிய நிலையில் இப் பதிவை இடுகிறேன்.

Tuesday, September 15, 2009

நட்சத்திரப் பதிவர் வந்திக்காக - சர்வதேச இந்து இளைஞர் சங்கம் நடத்திய இந்துக்களின் இன்றைய பிரச்சனைகள் கருத்தரங்கு

யாழ்தேவியின் இவ்வார நட்சத்திரப் பதிவர் வந்தியத் தேவனின் வேண்டுகோளை மதித்து நான் பதியவேண்டும் என்று நினைத்திருந்தாலும் அவரது பதிவர் வாரத்தில் இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்.
முதலில் ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டு பின்னர் எனது அனுபவத்தைப் பகிரலாம் என்று யோசித்து எழுதுகிறேன். யாராவது பங்கு கொண்டவர்கள் தமது அனுபவங்களையும் தெரியப் படுத்தினால் உதவியாயிருக்கும்.

வீரகேசரியின் நிருபர் திரு. ஸ்ரீ முருகன் அவர்களும் இக்கருத்தரங்கிற்கு வருகை தந்தார். அவர் 23.10.1990 வீரகேசரியில் இந்துக்களின் தேவைகளை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிப் பேச எவரும் இல்லாத நிலை என்ற தலைப்பிட்டு தொகுப்பாக அரைப் பக்கத்தில் செய்தியைப் பிரசுரித்தார்.

செய்தியை அப்படியே இங்கு குறிப்பிடுகிறேன்.

நோன்பு பெருநாளின்போது பேரீச்சம் பழத்திற்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. உடனே இப்பிரச்சினையை முஸ்லிம் கலாசார அமைச்சர் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்தார். பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்பட்டது. நோன்புப் பெருநாளும் திருப்தியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அண்மையில் நடைபெற்ற நவராத்திரி விழாவுக்கு அவலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. விலையோ நெருப்புவிலை. அந்த விடயத்தைச் சுட்டிக்காட்டி பாராளுமன்றத்தில் பேச எவரும் இருக்கவில்லை. நாம் நாதியற்றப் போனோம். இவ்வாறு அண்மையில் வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச இந்து இளைஞர் அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய குரு பிரவேச அமைப்பாளர் மணி ஸ்ரீநிவாச சர்மாவும் தமிழ் கலாசார மன்ற கு. குருசுவாமி ஆகியோர் ஒரே கருத்தை வெளியிட்டனர்.

சர்வதேச இந்த இளைஞர் அமைப்பு கடந்த 13, 14 ஆம்திகதிகளில் இருநாள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இதனை தெற்காசிய இந்த இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் குமரகுருபரனும் முகுந்தனும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்துக்களின் இன்றைய பிரச்சினைகள் எனும் தலைப்பில் கருத்தரங்கு களை கட்டியது.

கருத்தரங்கில் 40க்கும் மேற்பட்ட இந்த மன்றங்கள் கலந்து கொண்டன.

திருகோணமலை இந்து இளைஞர் பேரவை செயலாளர் செ. சிவபாதசுந்தரம் பேசுகையில் கூறியதாவது:-

தலைநகரில் இந்து அமைப்புகள் மிகமிக மந்தகதியிலேயே செயற்படுகின்றன. திருகோணமலையில் கோயில்கள் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டன. இச்செய்திகள் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

அண்மைக்கால போர் நடவடிக்கையினால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளன. அதில் 85 குழந்தைகளை நாம் பராமரித்து வருகிறோம்.

கந்தளாயில் 25 ஏக்கர் நெல்வயலும் ஒரு பெரிய கட்டடமும் இராம கிருஷ்ண மடத்திற்கு ஒரு செட்டியாரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. அதனை இராமகிருஷ்ண மடம் இதுவரை பொறுப்பேற்கவில்லை. திருகோணமலையில் இந்துக்களின் காணிகளில் குடியேற்றங்கள் நடக்கின்றன. கோணேஸ்வர ஆலயம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கின்றது.

கருத்தரங்கு அமைப்பாளர் முகுந்தன் பேசுகையில் அமைச்சில் 45 இந்து மன்றங்கள் பதியப்பட்டுள்ளன. அவறஇறிற்கு அழைப்பு அனுப்பினோம். பல அழைப்புகள் திரும்பி வந்துவிட்டன. அவ்வாறான சங்கம் ஒன்று இல்லை என எமக்கு அறிவிக்கப்படுகிறது என்றார்.

ஆன்மீகப் பணி அவசியம்

விவேகானந்தா மகா வித்தியாலய அதிபர் மாணிக்கவாசகர் பேசுகையில் இளைஞர்களால் சமய பணியும் செய்ய முடியும். புத்தர், யேசு போன்ற மகான்கள் இளைஞர்களாக இருக்கும்போதே ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டனர்.

நாம் நிறைய பேசுவோம். நடைமுறைப்படுத்துவதில்லை அதனாலாயே மத மாற்றங்கள் நடைபெறுகின்றன என்றார்.

துணிவு வேண்டும்

ஆசிரியர் சந்திரசேகரம் பேசுகையில் துணிவுஇருப்பின் வெற்றி காணலாம். விவேகானந்தரும் துறவிதான். ஆனால் முட்டவந்த மாட்டை கொம்பில் பிடித்து நிறுத்தினார். துணிவிருந்தால் ஆன்மீக வழியில் நிறைய சாதிக்கலாம் என்றார்.

மீதி பின் தொடரும்

சமயத்திற்காக.........பகுதி - 1.

1983 ஓகஸ்ட்டில் உயர்தரப் பரீட்சை எடுத்த பிறகு ஊரில் இருந்து பொதுவேலைகள் செய்த வேளையில் - சைவமஞ்சரி கையெழுத்துப்பிரதியை எழுதி இந்து இளைஞர் மன்ற நூலகத்தில் வைத்தோம். இதில் மாணவர்களுக்கான வினாவிடை மற்றும் குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தி மன்றத்தின் விழாக்களில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வந்தோம். இப்பணிகளில் என்னுடன் உதவியாயிருந்த சமய மன்ற அங்கத்தவர்களுக்கும், இளைஞர் மன்ற அங்கத்தவர்களுக்கும் எனது 25 ஆண்டுகள் கடந்த நிலையில் எனது நன்றிகளை நினைவுபடுத்தி தெரிவிக்கும்போது மனநிறைவு தானாக வருகிறது.

ஒரு சில முன் பக்கப் பிரதிகள் மாத்திரம் என்னிடம் இருக்கிறது - அதை இப்பதிவில் இணைத்துள்ளேன்.


கார்த்திக் சுபராஜ் அவர்களின் இனியொரு பதிவில் என்னுடைய இடுகை!

காட்சிப்பிழை – ஈழப்பிரச்சனையைத் தொட்டுச்செல்லும் 4நிமிடங்களும் 51 செக்கன்கள் கொண்ட அந்தக் குறும்படத்தைப் பார்த்ததும் உடனேயே (23.07.2009இல்) இட்ட இடுகையை ஒரு பதிவுக்காக இங்கு பதிவிலிடுகிறேன்.

எனக்கு இதைப் பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் பல உருண்டோடின. அதில் ஒன்று இந்திய அமைதி காக்கும்படையுடன் விடுதலைப் புலிகள் யுத்தத்தை மேற்கொண்ட 10.10.1987 புரட்டாசிச்சனி மதியம்.
நல்லை ஆதீனத் தொண்டர் அணியினராகிய நாம் வண்ணார்பண்ணைப் பெருமாள் கோவிலில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியம் 1.00 மணியளவில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. கோவில் மூடப்பட்ட பின் அப்போது நான் தங்கியிருந்த கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டிற்குப் போய் சற்று நேரத்தில் எனது நண்பன் ஒருவன் வந்து வாடா நிறைய சனம் காயப்பட்டுக் கிடக்காம். உதவ வேணும் என்று சொல்ல அவனுடன் யாழ்ப்பாண நகருக்குப் போனேன். குண்டுகள் வந்து விழுந்தபடி இருந்தது. என் கண்முன்னாலேயே ஒரு இளைஞன் குண்டடிபட்டு விழுந்தான். சைக்கிளில் விழுந்து கிடந்த சுபாஸ் ஹோட்டலுக்கு முன்பாக இருந்த பிள்ளையார் கோவிலுக்கு நானும் எனது நண்பனும் ஓடிப் போனோம். நாங்கள் எங்கள் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு ராணித் தியேட்டர் பக்கத்திலிருந்து அவருக்குப் பக்கத்தில் செல்லவும் அடுத்த குண்டு அதே இடத்தில். அந்த இடம் ஒரே புகை மண்டலமாயிருந்தது. காதுக்குள் கிண் என்ற சத்தம் மாத்திரம் – அந்த இளைஞனின் உடல் சிதறியிருந்தது. எனக்கு சற்று நேரத்தின்பின்னர்தான் என்னுடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. பார்த்தால் எனக்கு ஒன்பது இடங்களில் ஷெல் துண்டுகள் – உடனேயே கத்தினேன் – ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள் என்று!

இதை எழுதியதற்கு கார்த்தி எழுதிய பதில் - Hi thanga mukunthan..Your experience is really painful.Endru adangum nam thuyar?????

Sunday, September 13, 2009

யாழ்தேவி திரட்டிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!


யாழ்தேவிக்காரர்களே! என்னுடைய பதிவுகளை இனி நான் ஆறுதலாக இடலாம் தானே! தினமும் இடவேண்டும் என்ற நிபந்தனை இன்றுடன் முடிந்தவிட்டதுதானே!

அப்பாடா!!!

யாழ்தேவி திரட்டியினர் கடந்த ஒரு வாரம் நட்சத்திரப் பதிவர் என்ற நாமத்தை இட்டார்கள் - அதனால் நான் பட்டபாடு - அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஏனோ தெரியவில்லை - இப்போது எதையாவது எழுதுவது என்றாலும் - கணினியின் முன்பிருக்கச் சென்றாலும் கொஞ்சம் அலுப்பு வருகிறது. கையில் ஏற்பட்ட காயத்தின் வலி சிறிது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை எல்லாவற்றிலும் ஒரு விரக்திநிலை! எழுதவேண்டியவை நிறைய இருக்கிறது! பதிவிலிட மட்டுமல்ல. இங்கு டொச் மொழி படிக்க - வேண்டிய வீட்டுவேலை - இங்குள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாக செய்யவேண்டியவை. இங்கு அடுத்தவாரங்களில் நடைபெற இருக்கின்ற சில நிகழ்வுகளுக்கான ஆயத்தங்களைத் தயார்படுத்த வேண்டிய வேலைகள் என்று கனக்கச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாய்வாலை நிமிர்த்த முடியாது - உலகத்தைத் திருத்த முடியாது

உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும் என்று சுவாமி சிவானந்தர் சொல்கிறார்.

உலகம் எப்பவும் அழுக்குத்தான். அதைத் துப்பரவு செய்ய முடியாது - இதை யோக சுவாமிகள் மிகவும் சிறப்பாகச் சொல்லியிருகிறார். யேசு வந்தார் - புத்தர் வந்தார் - உலகின் அழுக்கைத் தோய்த்துப் பார்த்தார்கள் - கொஞ்ச நேரம் வெள்ளையாக இருக்கும் பின்னர் பழையபடி அழுக்கு நிறைந்து விடும் - இவர்கள் சோப்புக் கட்டிகள் போல தேய்ந்து காணாமற் போனதுதான் மிச்சம்! என்று.

அண்மையில் இடம்பெற்ற இலங்கைப் பதிவர் சந்திப்பில் நானும் சிறிது ஆர்வம் எடுத்தேன். நல்லது நடக்கும்போதும் ஏதாவது புதிய நிகழ்வுகள் இடம்பெறும் போதும் என் ஆவல் அந்தப்பக்கம் செல்லும். இலங்கைப் பதிவர் சந்திப்பு நடந்த அன்றே பலருடன் தொடர்பு கொண்டேன். சந்திப்பைப் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். நான் ஒரு இடுகை இடலாமென்றால் நேரம் என்னை விட்டுத் தொலைதூரம் சென்றுவிட்டது. ஒரு சில புதிய இலங்கைப் பதிவர்களுடன் தொடர்பு கொண்டேன். ஏனையவர்களுடன் இனித்தான் தொடர்பு கொள்ள வேண்டும்.

சந்திப்பு நடைபெற்ற அன்றே வந்தியத்தேவனுடன் தொடர்பு கொண்டபோது அவர் எப்பவோ ஒரு நாள்(12, 13 October, 1990களில்) நாம் நடத்திய இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய கருத்தரங்கு நிகழ்வுகளையும் - மலையகத்தில் செய்த சமயப் பணிகள் பற்றியும் பதிவிடுமாறு வேண்டினார். நானும் ஒரு சில பத்திரிகைச் செய்திகளை வரும்போது மறவாமல் எடுத்து வந்ததால் அதைப் பதிவிடலாம் என்ற நினைத்தாலும் நேரம்தான் கிடைக்கமாட்டேன் என்கிறது.(கூடிய விரைவில் எழுகிறேன் - வந்தியத்தேவரே!)

கரூரில் நடைபெற்ற விசுவின் மக்கள் அரங்கத்தில் (Nov 17) ஒரு இளைஞன் (அ. இராமமூர்த்தி) சொல்கிறான் - ஐயா இன்னும் சொல்லப்போனால் எனக்கு இந்த 24 மணிநேரமும் பத்தலிங்க ஐயா! என்று சொல்வதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

இலங்கையில் பல பதிவர்கள் இருக்கையில் யாழ்தேவி திரட்டியினரும் என்னை ஓர் நட்சத்திரப் பதிவராக 8ஆவது இடத்தில் வைத்தமைக்கும் நான் அவர்களை நன்றியோடு நினைவு கூறித்தான் ஆக வேண்டும். ஏற்கனவே சுபாங்கனின் ஐந்தறைப்பெட்டி - சாயினியின் Sketch- மருதமூரானின் மருதமூரான் - த. ஜீவராஜின் ஜீவநதி - அமுதனின் அமுதனின் பக்கங்கள் - ஈழவனின் களத்துமேடு - சுதாவின் ஹரன் - என்ற 7 நட்சத்திரப்பதிவர்கள் அலங்கரித்த இடத்தை எட்டிப்பிடிக்க வைத்த இறைவனுக்கும் நன்றிகள்!

நட்சத்திரப் பதிவராக இருந்த இந்த ஒருவார காலத்தில் பதிவுகளுக்கு - முக்கியமாக யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவரானமைக்கு வாழ்த்துத் தெரிவித்து - இடுகையிட்ட சிலருக்கு நான் எந்த மறுமொழியும் இடவில்லை - காரணம் அவர்களுக்கு ஒரு பதிவிலியே மறுமொழி இடுவதுதான் சிறப்பு என்று கருதி இன்றுவரை பொறுத்திருந்தேன். அதற்காக அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

குறிப்பாக இதில் சில பெயரிலிகளும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்! தேவைகளை மாத்திரம் பயன்படுத்தி விட்டு மீதி அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டேன். அதற்காக அந்த வெளிக்காட்ட மறுப்போர் என்னை மன்னிப்பார்களாக!

முதலாவதாக ஈழவன் - இன்றுவரை எங்கிருக்கிறார் - அவர் எப்படிப் பட்டவர் என்ற - முகம் தெரியாத நண்பருக்கு எனது மனம்நிறைந்த நன்றிகள்.

இரண்டாவதாக யோ வாய்ஸ் (யோகா) - இவரை இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின் தொடர்பு கொண்டு - தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அவருக்கும் எனது நன்றிகள்.

மூன்றாவதாக வன்னிசிங்கம் - அவரது இடுகையை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமானதென நினைக்கிறேன் - காரணம் ஒருவராதல் என் எழுத்தை மெச்சி ஒரு சான்றிதழ் தந்திருக்கிறாரல்லவா! அது என் எழுத்துக்கு ஒரு பரிசு கிடைத்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சில எழுத்துக்கள் வெளியே கொண்டுவரப்பட்டே ஆகவேண்டும்.வாசிக்கப்பட்டே ஆகவேண்டும்.அந்தவகைப்பதிவுகள் உங்களுடையவை. எதையும் பட்டுப்பட்டென வெளிப்படையாக சொல்லும் உண்மையான பதிவுகள் பகிரப்படவேண்டும்.நன்றி யாழ்தேவி.நட்சத்திரப்பதிவரானதற்கு வாழ்த்துக்கள் தங்க முகுந்தன்

நான்காவதாக ஆதிரை - அவருடனும் நான் இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். அவருக்கும் எனது நன்றிகள்!

ஐந்தாவதாக மருதமூரான் - இவரையும் பதிவர் சந்திப்பின் பின்னர் தொடர்பு கொண்டு பேசியிருந்தேன். அவர்களுடைய வீரவிளையாட்டே எனது நட்சத்திரப் பதிவர்! பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் இவருக்கு என் மனம்நிறைந்த நன்றிகள்!( கோபிக்க வேண்டாம் சும்மா ஒரு பகிடிக்காக இதைக் குறிப்பிட்டேன்! சரியா!)

ஆறாவதாக ஈழவன் திரும்பவும்
நட்சத்திரப் பதிவரானால் போதுமா, தினமும் தவறாமல் பதிவு இட வேண்டும், எங்கே இன்று எதையும் காணவில்லையே, என்ன முகுந்தன் வேலையாக இருக்கின்றீர்களோ! இலங்கையருக்கான திரட்டியென "யாழ்தேவி" இருப்பதால் தானே நட்சேத்திரப் பதிவரெனும் மகுடமெல்லாம் எங்களுக்கு! ஆகவே யாழ்தேவி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வாழ்த்துவோம்! என்று பதிவிட்டார் - நானும் எனது யாழ்தேவி அனுபவத்தை எழுதலாம் என்று அதை எழுதினேன்.

ஏழாவதாக தேவதாசன் dilshaad - அவருக்கும் எனது நன்றிகள்!
அடுத்ததாக கனககோபி - அவருக்கும் எனது நன்றிகள்!
எல்லாவற்றுக்கும் மேலாக என்னை பதிவிட இந்த உலகுக்குள் கொண்டுவந்த தள்ளிய மேடை - புதிய மலையகம் புகழ் நிர்ஷனுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

மீண்டும் பதிவுகளை கிரமமாக எழுத எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்த யாழ்தேவி திரட்டியினருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்!

மொக்கு கேள்விப்பட்டிருக்கிறேன் - மொக்கை என்ற சொல்லை கேள்விப்படவில்லை - அது என்ன மொக்கைப் பதிவு! யாராவது தெரிந்தவர்கள் விளக்குங்கள்!

தற்போது இலங்கையிலும் இச்சொல் பயன்படுத்தப் படுகிறதுபோல தோற்றம் பெறுகிறது. தயவுசெய்து அகராதியில் இச் சொல்லுக்கான அர்த்தத்தை யாராவது எனக்கு விளக்கிச் சொல்ல முடியுமா? இதற்குரிய ஆங்கிலப் பதத்தையும் தந்தால் மிகவும் நன்றியாயிருப்பேன். எமது நாட்டில் மொக்குத்தனமாக, முட்டாள்தனமாக, லூசாக, பைத்தியக்காரத்தனமாக என்ற சொல்தான் பாவிக்கப்பட்டுவருகிறது.

பதிவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! - பகுதி 1 - காகம் திட்டி மாடு சாகாது!

இக்கட்டுரை பல நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தாலும் சில அவசிய தேவை கருதியும் பதிவர்களிடத்தில் ஒரு வலுவான நட்பு உருவாக வேண்டும் என்ற ஆதங்கத்திலும் இதைக் குறிப்பிடுகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
பதிவர்கள் பலவிதம் - அவரவர் தன்மைக்கும் தகுதிக்கும் ஏற்ப பதிவுகளை அவர்கள் தமது இஷ்டத்திற்கு எழுதி வருகிறார்கள். இது அவர்களின் உரிமை - இதில் தவறோ குறையோ இருந்தால் சகித்துக்கொண்டு தமக்கு எது விருப்பமோ அதை பின்பற்றவோ அல்லது எதில் நாட்டமில்லையோ அதை தவிர்ப்பதும் அவரவர் கடமையாகிறது. இதில் ஒருவரைப் பற்றி ஒருவர் குறைசொல்லி விமர்சிப்பதும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பதும் தரக்குறைவாக பதிவுகளை இடுவதும் தவிர்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஈழத்தில் அப்படிச் சொல்லுவதில் ஒரு தவறும் கிடையாது. நான் சிறு வயதில் படித்த புத்தகப் பாடல் -

ஈழம் எங்கள் நாடடா
இன்பமான வீடடா
நீல நீளக் கடலிலே
நிமிர்ந்து நிற்கும் தீவடா!

இப்பாடலை இப்போதைக்கு இப்படி மாற்றம் செய்து பாடலாம்!
ஈழம் எங்கள் நாடடா
துன்பமான காடடா
நீல நீளக் கடலிலே குனிந்து நிற்கும் தீவடா!
மனித உரிமை மீறலில் நிமிர்ந்து நிற்கும் தீவடா!

ஒரு காலத்தில் ஏன் இப்போதும் கூட இலங்கையைப் பற்றிப் பெருமையாகச் சொல்லக் கூடிய விடயங்கள் சில உண்டு.

அதாவது

உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.
ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.
ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு.
உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.
உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கறுவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் இலங்கையிலேயே அமைக்கப்பட்டது.
கிரிகட் உலகக் கிண்ணத்தை 1996ஆம் ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.

ஆனால் இன்று மனிதப் படுகொலைகளுக்கப் பெயர்பெற்ற நாடாகவும் என் நாடு திகழ்கிறது. நாம் ஒருவரும் பிறந்த நாட்டையும் பிறந்த ஊரையும் எந்த நாட்டில் அகதியாக வாழ்ந்தாலும் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றாலும் இந்த தகவல்களை மாற்ற முடியாது! இது மறுப்பதற்கோ மறைப்பதற்கோ உரிய விடயமல்ல. சரி விடயத்திற்கு வருகிறேன்!

பதிவர்களில் ஈழத்தில் இப்போதும் இருப்பவர்கள் அடக்கித்தான் தமது செய்திகளை எழுகிறார்கள் - தெரிவிக்கிறார்கள்! ஏனெனில் அவர்கள் அடக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள் என்பதே உண்மை! இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழும் ஈழத்தவர்கள் சற்று வெளிப்படையாகவே உரத்த தொனியில் தமது கருத்துக்களை இடுகிறார்கள் - நானுட்பட! ஆனால் இலங்கையில் என்ன நடந்தது! நடந்து கொண்டிருக்கிறது என்ற விடயங்களை முற்றாக அறியாமல் சில வெளிநாட்டுத் தமிழர்கள் குறிப்பாக இந்தியாவில் வாழ்பவர்கள்(ஒரு சிலரைத் தவிர்க்கலாம்) தமது மனம் போன போக்கில் பல விடயங்களைத் தெரிவித்து வருவதும் வீணான சர்ச்சைகளை ஏற்படுத்துவதும் தான் மனக் கவலை அளிக்கிறது! இதை நான் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றேன். தயவுசெய்து என்னை மன்னிக்கவும். ஆனால் ஒரு பழமொழி இருக்கிறது – காகம் திட்டி மாடு சாகாது!

இன்று பலரும் பலவிதமாக பலரையும் குறைவாகப் பேசியும் - திட்டியும் தாக்கியும் வருவது தெரிந்ததே! நானும் இதற்கு விதிவிலக்கல்ல! பதிவுலகில் இருப்பவர்கள் தம்மை எழுத்தாளர்கள் - பதிவர்கள் என்று சொல்பவர்கள்(இதில் பிரபல பதிவர் என்று தம்மைத் தாமே சொல்பவர்களும் இருக்கிறார்கள்) நான் ஏதோ எனக்குத் தெரிந்தவற்றை உண்மையை மட்டும் - நான் நேரடியாகத் தெரிந்து பட்டு அனுபவங்களை – மேலும் அறிந்தவற்றை பத்திரிகையில் எழுதப்பட்டவற்றை – வரலாற்றை எழுதுகிறேன் - மீண்டும் தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் - நான் எக்கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிப்பவன் என்ற காரணத்தால் இன்று இக்கருத்தை மிகவும் இயலாத ஒரு வெறுப்பு உணர்வோடு எழுதுகிறேன்.
எவருக்கும் கருத்துச் சொல்லும் உரிமையும் - எழுதும் உரிமையும் இருக்கிறது - இது ஜனநாயகப் பண்பாடு – நடைமுறை! பொதுவாக தமிழகத்தில் தமக்குள் வேறுபாடுகளையுடைய பல கட்சிகள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் நிலை அங்கு இருக்கிறது!

என் நாட்டில் அந்த நிலை தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் தற்போது இல்லை என்றே சொல்லலாம்! தமக்கு எதிரான கருத்து – கொள்கையுடையவர்களை மேலுலகம் அனுப்பும் வழக்கம் எம்மிடத்தில் எம்மினத்தில் இருக்கிறது! எமது விடுதலைப் போராட்ட வரலாறு இன்று இவ்வளவு சின்னாபின்னாமாகியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இதில் குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால் சிங்கள இனத்தில் தற்போது அரசியற் கட்சியாக 3ஆவது பெரும்பான்மையாக உள்ள ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி கடந்த 20 வருட காலத்திற்கு முன்னர் பயங்கர அமைப்பாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது!
தனி மனித சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது! யாரும் தமது கருத்தை வெளிப்படையாக சுதந்திரமாக வெளியிடவேண்டும். உதாரணமாக தனக்குப் பிடித்தவர்களையும் தான் அங்கம் வகிக்கும் இயக்கமோ அல்லது கட்சியின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களையோ தலைவர்களையோ அல்லது சக தோழர்களையோ உறுப்பினர்களையோ போற்றியும் - தமக்கு எதிரான கருத்து கொள்கையுடைய ஏனையோரை விமர்சித்தும் எழுத பேச கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது! ஆனால் இது எமது நாட்டிற்குப் பொருத்தமற்றதாக இருக்கிறது.
அரசு தம்மை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் எதிரணியினர் ஏன் பொதுமக்களையும் கைது செய்கிறது! விசாரணை செய்கிறது! சில வேளைகளில் கொலையும் செய்கிறது!
அரசுதான் அப்படியானால் கட்சிகள் - இயக்கங்கள் கூட இதில் முன்னுக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்தச் சுதந்திரம் - நடமாடும் சுதந்திரம் - பகிரங்கமாக எந்த இடத்திலும் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கான சுதந்திரம் அனைத்தையும் நாம் எதிர்பார்த்திருக்கிறோம் - எமது சொந்த நாட்டில். இங்கு சுவிற்சர்லாந்தில் இது தாராளமாக அளவுக்கு அதிகமாக இருக்கிறது. மற்றவரை அவரது உரிமைகளைப் பாதிக்காதவரை - இடையூறு செய்யாமல் இருக்கும்வரை! இதனால் இங்கு வாழ எனக்கு ஓரளவு பிடிக்கிறது! காரணம் இவர்கள் தாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கிறார்கள்!(பெரும்பாலானோர் - ஒரு சிலர் எதிராக இருக்கத்தான் செய்வார்கள்)

ஆனால் என் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 5

எனக்கு சுவிற்சர்லாந்தின் மத்திய பகுதியான Schwyz (சுவிற்ஸ்) என்ற இடத்தில் வாழுவதற்கு அனுமதி கிடைத்தது. நாட்டின் பொதுப் பெயர் Schweiz -சுவைற்ஸ் என்று உச்சரிப்பார்கள். எனது பொருட்களை சரிபார்த்துப் பெற்றுக் கொண்டு (கைத் தொலைபேசியின் சிம் மாத்திரம் தரவில்லை)முகாமைவிட்டு வெளியேறினேன். புறப்படும்போதே போகுமிடத்திற்கு வரைபடமும் ஒரு நாள் முழுவதும் சுவிசுக்குள் பாவிக்கத்தக்க ரயில் ரிக்கற்றும் தருவார்கள். இந்த ரிக்கற்றில் ரயில் பஸ் மற்றும் கப்பல்களில் பயணம் செய்ய அனுமதி உண்டு. புகையிரத மூலம் சூரிச் சென்று அதன்பின் வேறு ரயில் மாறி எனது பயணத்தை ஆரம்பித்தேன். மாற்றலாகி செல்லும் விபரம் முதல்நாளிரவு விளம்பரப் பலகையில் போடப்படும். அதிகாலை 6.00 மணிக்கு காவலர்கள் வந்து எனது பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதாவது நான் உபயோகித்த பெற்சீற், தலையணை, அதன் உறை, போர்வை மற்றும் எனது அலுமாரித் திறப்பு இவற்றை சரிபார்த்துப் பெற்றுக் கொள்வார்கள். இத்தாலி நோக்கிச் செல்லும் ரயிலில் சுமார் 50 நிமிடப் பயணத்தின் பின்னர் Schwyz என்ற புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். மாறிவரும் மாநிலத்தின் தலைநகரம் இது. மாநிலத்தின் பெயரும் இதுதான். அங்கிருந்து 1ம் இலக்க பஸ்ஸில் ஏறி Schwyz Post என்ற இடத்தைச் சென்றடைந்தேன்.இதுதான் மத்திய பேரூந்து நிலையம் - தபாற் கந்தோர் - பொலிஸ் மற்றும் தேவாலயம் - கல்லூரி - நூல்நிலையம் - வங்கிகள் என்று அனைத்துமே இருக்குமிடம். அங்கிருந்து குறிப்பிட்ட பதியுமிடத்திற்கு வந்து - தந்த கடிதத்தைக் கொடுக்கவும், எனக்கு அடையாள அட்டையுடன் இன்னுமொரு முகாமிற்கான கடிதத்தைத் தந்து அதற்குப் போகும் வழியையும் சொல்லிவிட்டார்கள். நான் பின்னர் அதே இடத்தில் வந்து Brunnen என்ற இடத்திற்கு 2ஆம் இலக்க பஸ்ஸில் சென்று பின் 4ஆம் இலக்க பஸ்ஸில் Morschach என்ற இடத்தை அடைந்தேன். பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் என்னுடன் பிரயாணம் செய்த 2 ஈராக் நாட்டினர் என்ன புதிதாக வருகிறீரா என்று கேட்கவும் நானும் ஓமென ஆங்கிலத்தில் மறுமொழி சொல்ல அங்குதான் போக வேண்டும் என்று எதிர்ப்புறத்திலிருந்த மலையைக் காட்டினார்கள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன ஆனந்தம்! மகிழ்ச்சி! கொழும்பிலிருந்த சமயத்தில் சனி ஞாயிறு என்றால் இரத்தினபுரி - கண்டி - நுவரெலியா என ஓடும் எனக்கு கடவுளாகப் பார்த்து மலையில் வாழ வழியமைத்துத் தந்திருக்கிறானே என்று மனதார நன்றி சொல்லியபடி இயற்கையை ரசித்துக்கொண்டு மலையேறினேன். நான் அங்கு சென்றபோது மதியம் 2 மணியாகிவிட்டது. வரவேற்புப் பகுதியில் நின்றிருந்த அலுவலரிடம் கொண்டுவந்த கடிதத்தைக் கொடுக்கவும் என்னை அழைத்துச் சென்று எனது தங்கும் அறையைக் காட்டி இலக்கம் 13- உரிய பொருட்களை என்னிடம் ஒப்படைத்தார். தனியாகச் சமைத்துச் சாப்பிடத் தேவையான சகல பாத்திரங்களும் - அன்றாடத் தேவைக்கான (பழைய முகாமில் தந்ததுபோல) துவாய், பெற்சீற், தலையணை, போர்வை மற்றும் அலுமாரித் திறப்பு போன்ற அனைத்தையும் தந்துவிட்டு கீழே அழைத்தச் சென்று சமையலறையையும் அங்குள்ள அலுமாரி - குளிர்சாதனப் பெட்டி அவற்றிற்கான திறப்புக்களையும் தந்தார். அதன்பின் சற்றுநேரம் பொறுக்கும்படி சொல்லி என்னை வரவேற்புப் பகுதியின் இருக்கையில் அமருமாறு சொன்னார். நானும் காத்திருந்தேன். அந்த முகாம் கரிதாஸ் Caritas நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கிறது. இதன் பொறுப்பாளர் அன்று இல்லாதபடியால் அவருக்கு அடுத்த நிலையிலிருந்கும் டொச் படிப்பிக்கும் ஆசிரியர் வந்து எனக்கு குறிப்பிட்ட ஒரு வாரத்திற்க்குத் தேவையான உணவுப் பணத்தை தந்துவிட்டுச் சென்றார். அன்று வெள்ளிக்கிழமையாதலால் நான் வழமைபோல எனது பேர்னிலுள்ள நண்பரின் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டேன். அதற்கான படிவமொன்றைப் பூர்த்தி செய்தபின் அவர்களின் அனுமதியோடு நான் பேர்னுக்குப் புறப்பட்டேன்.

சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 4

உலகில் அழகான நாடு என்பதில் சுவிசுக்கு முதலிடம். இங்குதான் நானும் வாழ்கிறேன் என்பதில் கொஞ்சம் திருப்தி. இங்கு நான் வாழ்ந்தாலும் இது என் சொந்த நாடு இல்லைத்தானே! அதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். இங்கு நாம் அகதிகள் - ஆங்கிலத்தில் சொன்னால் Refugees -இந்குள்ள டொச் மொழியில் Auslander.



.
படங்களில் இங்குள்ள சில வியாபார நிலையங்களும், புகையிரத நிலையங்களும் மற்றும் புகையிரதச் சீட்டை நாமே இயக்கிப் பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களும்தான்.