அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, May 17, 2014

மறைந்த யாழ். முதல்வர் திருமதி. சரோஜினி யோகேஸ்வரனின் 16ஆவது நினைவு தினம்!

1998 இல் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற யாழ் முதல்வர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் அவர்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

Sunday, May 11, 2014

State Terrorism in Jaffna - Mr. V. Yogeswaran MP


ஒரு வரலாற்றுக் குற்றம்! யாழ் நூலகம் 14.02.2003இல் திறக்கப்படாதமைகுறித்து வெளியிடப்பட்ட ஒரு சிறு நூல்!


Thursday, May 1, 2014

“எமது இயக்கத்திற்கு ஆத்மபலம் தேவை அதற்காகவே உண்ணாவிரதம்” - கூட்டணித் தலைவர் சிவா


(ஈழநாடு 8.7.1981 புதன்கிழமை 5ஆம்பக்கச் செய்தி)

மன்னாரில் இன்று நடைபெறும் உண்ணாவிரதம் 5வது உண்ணாவிரதமாகும். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரதங்களை விட மன்னாரில் நடைபெறும் உண்ணாவிரதம் 2 அம்சங்களால் சிறந்து விளங்குகின்றது. ஒன்று, அதிகளவு வணக்கத்திற்குரிய குருமார்களும், சங்கைக்குரிய சகோதரிகளும் கலந்து கொண்டது. இரண்டாவது இவ்வுண்ணாவிரதத்தில்தான் அதிகளவு இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

இவ்வாறு திருக்கேதீஸ்வரம் மாந்தைச் சந்தியில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரும், நல்லூர் எம்.பி.யுமான திரு. எம். சிவசிதம்பரம் கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்தும் வாகனங்களிலும் சைக்கிள்களிலும் சுமார் 1500 பேர்வருகை தந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை ஏணைகட்டி, தங்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் இருக்கவென 200 அடிநீளம் 200 அடி அகலமான பந்தலை எள்ளுப்பிட்டி தமிழர் விடுதலைக் கூட்டணி இளைஞர்கள் அமைத்திருந்தனர்.

உண்ணாவிரதத்தை மாந்தைச் சந்தியிலிருந்து பொலிசார் கண்காணித்தனர்.

தொடர்ந்து உரையாற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரும், நல்லூர் எம்.பி.யுமான திரு. எம். சிவசிதம்பரம் கூறியதாவது “எமது இயக்கத்திற்கு ஆத்மபலம் தேவை. அதற்காக நாம் உண்ணாவிரதங்களை எல்லாத்தேர்தல் தொகுதியிலும் நடத்தி வருகின்றோம்.

“எரிக்கப்பட்ட யாழ் பொது நூலகத்தை ஈடுசெய்ய முடியாது. இந்த நூல் நிலையத்தில் முதல்முதல் தமிழில் அச்சிடப்பட்ட பைபிள் இருந்தது. இப் பைபிளை கோடி மூபா கொடுத்தாலும் வாங்க முடியாது. யாழ்ப்பாண சரித்திரத்தைப்பற்றி 4 நூல்கள் இருந்தன. இவை எல்லாம் எரிக்கப்பட்டன. நூல்நிலையத்திலுள்ள நூல்களையெல்லாம் குடித்தவெறி முடியுமட்டும் எரித்தார்கள்! எதையும் நாம் மறப்போம். ஆனால் நூல் நிலையத்தை எரித்ததை மட்டும் மறக்க மாட்டோம்.”

“தமிழ் மக்கள் அறிவைப் போற்றுபவர்கள். அறிவை வணங்குபவர்கள். நாம் கல்விக்காக எதையும் செய்வோம். நூல் நிலையம் எரிக்கப்பட்டது பொலிசாரினால் செய்யப்படவில்லை. திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது.”

“1970ஆம் ஆண்டு கூடுதலான தமிழ் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள் என்று அவர்களின் கல்வியை வளரவிடாது செய்ய தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. தமிழர்கள் பல்கலைக் கழகம் செல்லக்கூடாது என்று எண்ணிய அமைச்சர் சிறில் மத்தியூ மீண்டும் தரப்படுத்தலை அமுல் செய்தார். வறுமையாலும், வசதியில்லாததாலும், பல மாணவர்கள் யாழ் நூல்நிலையத்திற்குச் சென்று அறிவைப் பெற்றனர். இதனை அழிக்கவெனவே திட்டமிட்டு யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டது” என்றார்.

மன்னார் எம். பி. திரு. பி.எஸ். சூசைதாசன் கூறியதாவது – “ஆயுதபலத்தைவிட ஆத்மபலமே மேலானது. ஆதனால்தான் இறைவனை வேண்டி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளோம். எமது குறைகளை இறைவனிடம் முறையிட்டு எம் போராட்டத்தை ஆரம்பிப்போம்.

வேலியே பயிரை மேய்வது போல எமது நாட்டைப் பாதுகாப்பவர்களே யாழ் நூலகத்தை எரித்தனர். எமது கல்விவளம், வியாபாரவளம், அரசியல் சுதந்திரம், குடியிருப்பு வீடுகள் எல்லாம் அழிக்கப்பட்டன. யாழ்ப்பாண எம்.பி.யின் வீடும் எரிக்கப்பட்டது. அவரும் அவரது மனைவியும் மயிரிழையில் உயிர்தப்பினர். இவற்றை எல்லாம் ஊருக்கும் உலகிற்கும் எடுத்துக் காட்டவே உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

திருமலை எம்.பி. திரு. இரா. சம்பந்தன் தமதுரையில் கூறியதாவது – யாழ் நூல் நிலையத்தில் எரியாத புத்தகங்களை எரியும் புத்தகங்களுடன் சேர்த்து எரித்தனர். எமது கட்சியின் தலைமையகம் எரிக்கப்பட்டது. “ஈழநாடு” தினப்பதிப்பு நிலையம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண எம்.பி.யின் வீடு எரிக்கப்பட்டது. பல கடைகள் எரிக்கப்பட்டன. பல இளைஞர்கள் காரணமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டனர். எமது கட்சித் தலைவரின் வீட்டின் விறாந்தையில் படுத்திருந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

யாழ்நகரில் இடம்பெற்ற சம்பவங்கள் அறியாமல் நடந்தது என அரசு கூறுகிறது. ஒரு நாள் நடந்திருந்தால் அரசு சொல்வதை நாம்ஏற்கலாம். ஆனால் தொடர்ந்து 6 நாட்கள் அட்டூழியம் நடந்துள்ளது. ஆதலால் அரசு சொல்வதை எம்மால் நம்பமுடியாது. இச்சம்பவங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்த ஆட்சியாளர் எப்படி செயற்படுகிறார்களோ அப்படியே காவல் படையினரும் செயல்படுகின்றனர்.

பட்டிருப்பு எம்.பி. திரு. பூ. கணேசலிங்கம் தமதுரையில் - அண்மையில் நடந்த அட்டூழியங்கள் வவுனியா, திருமலை, அம்பாறை போன்ற தமிழீழ எல்லைகளில்தான் நடக்கும். யாழ்ப்பாணமும், மட்டக்களப்பும் தான் தமிழருக்குப் பாதுகாப்பான இடம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் இப்போது எமது பாதுகாப்பான இடத்திலேயே தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு இந்த அரசு பாதுகாப்பளிக்க மாட்டாது. ஆதலால் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கோப்பாய் எம்.பி. திரு. ஆலாலசுந்தரம் தமதுரையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சம்பவங்களைப் போல் பல வருடங்களுக்கு முன்பும் தமிழருக்கு இன்னல்கள் விளைவிக்கப்பட்டன. இதைப் போல் வேறு இடங்களிலும் நடைபெறலாம் என்றார்.