எனது இந்தக் கட்டுரை ஒரு ஆராய்வாக அமைகிறது – காரணம் நூலக வரலாற்றை நான் அறிந்தவரை நிறைய முரணான தகவல்கள் இருக்கின்றதுபோலத் தோன்றுகிறது! நூலகத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மாத்திரம் வரலாறாக பதிய முற்படும்போது வேறு சில விடயங்களையும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காரணம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகத் தெரிகிறது! மேலும் வரலாறு எழுதுபவர்கள் தாம் நினைத்த விடயங்களையும் - தமக்குப் பிடித்தமானவர்களைப் புகழ்பாடும் விதங்களில் சில நிகழ்வுகளைத் தவிர்த்தும் சிலவற்றை புதிதாகப் புகுத்தியும் எழுதி எமது வரலாற்றை கொச்சைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தினாலேயே இக்கட்டுரையைத் தொகுத்து வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டேன். ஏனெனில் யாரும் இவற்றை தொடர்ச்சியாக மறுத்து உரிய நடவடிக்கை எடுக்க தவறியதே உண்மையாகிறது! தமிழ், தமிழர்கள், உரிமை, ஆட்சி என கொக்கரிக்கும் யாருக்கும் வரலாறு என்பது நூல்நிலையத்துடன் சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதை சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது, ஆவணப்படுத்தலில் நூல் நிலையங்களின் பெறுமதியை உணர்ந்தவன் நான்!
ஆதனால்தான் ஆவணப்படுத்தலின் முக்கிய காரணியான நூல் நிலையமொன்றில் வரலாற்றுப் பதிவு தவறானதாக இருக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளேன். அதிலும் யாழ்ப்பாண பொது சன நூலகம் எம்முடைய ஒரு கௌரவமான சொத்து என்பதால் அதில் அதிகூடிய அக்கறையை எடுத்து என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை சரியான ஒரு பதிவை - எங்கெங்கே என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்! எங்கே மறைக்கப்பட்டவை சேர்க்கப்பட வேண்டும்! என்பதை நூலகம் சம்பந்தமாக ஈடுபாடு கொண்டவர்களுக்கு மாத்திரம் சமர்ப்பிக்க இக்கட்டுரைமூலம் விரும்புகின்றேன். இதனை நூலக ஆலோசனைக் குழு மற்றும் நூலகத்தில் அக்கறை கொண்டவர்கள் கொஞ்சம் அவதானத்துடனும் சிரத்தையுடனும் கொள்ளவேண்டும் என பணிவாக வேண்டுகிறேன்.
சமயம் சம்பந்தமாகவும் அல்லது அரசியல் மற்றும் நாட்டுநடப்புகள் பற்றி அதிகம் நான் பத்திரிகைகளுக்கு முன்பும் இன்றைய காலகட்டத்தில் ஊடகங்களோடு, இணையத் தளங்களுக்கும் எழுதியிருந்தும் அவை முழுமையாகப் பிரசுரிக்கப்படாத அல்லது முற்றாகவே பிரசுரிக்கப்படாத மனவேதனை ஒருபுறம் - என்னைப்பற்றி அல்லது நான்சம்பந்தப்பட்ட சம்பவங்களை திரிவுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக செய்திகள் வரும்போதும்; விமர்சிக்கும்போதும் நான் எழுதும் பதில்களைக் கூடப் பிரசுரிக்கத் திராணியற்ற சில பத்திரிகைகளுடன் - மற்றும் இணையத் தளங்களோடு பிரச்சனைப்பட்டிருக்கிறேன். இதற்காக ஒருமுறை வீரகேசரி ஆசிரியர் பீடத்திற்கு நேரில்சென்று கருத்துத்தர்க்கம் செய்தபோது எனக்குக்கிடைத்த மறுமொழி வெளியே போ (பநவ ழரவ). இது நடந்தது தந்தை செல்லாவின் சிலை திறப்பு விழாவின் (1999 ஏப்ரல்) பின்னர்.
மிகவும் வேதனையான விடயம் யாழ்ப்பாண பொது நூலகத் திறப்பு விழாவுக்கு முன்னர் பத்திரிகைகள் நடந்துகொண்ட முறை என்னை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. நேரடியாக யாழ் தினக்குரல் பத்திரிகைக் காரியாலயத்திற்குச் சென்று எனது நண்பனிடம் சற்றுக் கோபமாகவே கேட்டேன். ஏன் என்னுடைய செய்தியைப் பிரசுரிக்கவில்லை என்று! அவர் உள்ளே சென்று எனது அறிக்கையை அவர் தொகுத்திருந்த மாதிரியைக் கொண்டுவந்து காட்டினார். வேறொருவருடைய அறிக்கையை போடுவதற்கு என் அறிக்கை பத்திரிகை மேலிடத்தினரால் அகற்றப்பட்டிருந்தது. இவை என்னை மாத்திரமல்ல – உண்மையான செய்திகளை அறிய விரும்பும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நடுநிலை தவறிய பெருமை அனைத்துத் தொடர்பு சாதனங்களுக்கும் உண்டு என்றால் அது உண்மைதான். யாரோ ஒரு சாராரைத் திருப்திப்படுத்த அல்லது துதிபாடவே பத்திரிகையாளர்கள் துணிந்துநின்றார்கள். சிலவேளை குறிப்பிட்டவர்களால் நடாத்தப்படும் விருந்து மற்றும் உபசாரங்களுக்காகப் பத்திரிகை நடத்துகின்றார்களோ தெரியாது. நான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அகதியாக சுவிற்சர்லாந்தில் இருந்த காலத்தில் என்நாட்டில் எம்மவர்களுடன் வாழமுடியாது என ஏங்கிக்கொண்டிந்த அதேவேளை நாட்டைக் குழப்பிய பெருமையுடைய பத்திரிகையாளர்கள் பலர் தமது உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் தஞ்சம் பெற்று சொகுசாக அங்கு வந்து வாழ்ந்ததோடு மட்டுமல்ல அங்கும் தமது பிதற்றல்களை கக்குவதுதான் வேதனை. இதை யாரிடம் சொல்வது?
கட்டுரையின் நோக்கத்தை விட்டு வெளியே செல்ல விரும்பாவிடினும், சில முக்கிய திட்டமிட்ட செயல்கள் பற்றி நாம் விழிப்புடன் கவனமாயிருப்பது அவசியமாகிறது!
நூலக எரிப்பு நடைபெற்ற காலம் ஒரு தேர்தல் நேரம்! அதுவும் இலங்கையின் வரலாற்றில் ஒரு தமிழ் அரசியற்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி நாட்டின் இரண்டாவது அதிகப்படியான பெரும்பான்மைப் பலம்பெற்று எதிர்க்கட்சியாக இருந்த நேரம்! வரலாற்றிலே பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற 1947இல் 3ம், 4ம் இடங்களிலும், 1952 இல் 5, 6ஆம் இடங்களிலும், 1956,1960, 1965களில் 3 ஆவதாகவும், 1970இல் 4, மற்றும் 6ஆவதாகவும், 1977இல் இரண்டாவதாகவும் 4ஆவதாகவும், அதன்பின் 1989இல் 3, 4ஆவதாகவும், 1994இல் 3ஆவதாகவும் 5ஆவதாகவும், 2000, 2001 இல் 4ஆவதாகவும் 6ஆம் ,7ஆம் இடங்களிலும், பின்னர் தற்போது இறுதியாக 2004, 2010களில் 3ஆவதாகவும் வெற்றிபெற்ற தமிழ்க் கட்சிகளின் விபரங்களை அவதானிக்க வேண்டும். 1977 தேர்தலில் அமோகவெற்றிபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ இலட்சியத்தை மறந்து பாராளுமன்ற சுகபோகங்களில் மூழ்கியருக்கிறது என இளைஞர்கள் தமது பாதையாக வன்முறையை தேர்ந்தெடுத்த காலம் 1980களில் ஆரம்பமானது. அரசியல் முறை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது – சாத்வீகம் சரிவராது எனவும் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் அதிலும் நடைபெறவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முறையால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை எனவும் தீவிரவாதப் போக்குடைய இளைஞர்கள் தேர்தலை எதிர்த்த நேரத்தில் - மே 31ஆந்திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை குழப்பும் நோக்குடன் ஆயுத இயக்கம் ஒன்று காவலுக்கு இருந்த பொலிசாரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் ஆரம்பமாகியது அரச படையினரின் யாழ்ப்பாண அழிப்பு அட்டுழியம்.
அதனால் ஜுன் முதலாந்திகதி எரியூட்டப்பட்டதே யாழ் பொது நூலகம் - இன்றைய இளம் சமூகத்தில் பலருக்கு வரலாறு தெரியாது - ஏதோ 2009இல் முள்ளிவாய்க்கால் படுகொலைதான் எமக்கு நடந்த ஒரு படுபாதகமான செயல் என்ற ஒரு மாயை இன்றும் பலரிடம் இருக்கிறது. அதற்கு முன்பே 1972இல் குடியரசாகிய நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களின் பின் எமது மொழிக்கும் இனத்துக்கும் ஏற்பட்ட அவமானங்கள், அடக்குமுறைகள் போன்றவை விபரமாக எவராலும் நடுநிலையாக எழுதப்படவில்லை. 1974இல் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ந்த அனர்த்தங்களின் பின் வலுப்பெற்ற இளைஞர்களின் தீவிரப் போக்கு – அதன்பின் நடந்த சம்பவங்கள் குறிப்பாக 1977 தொடக்கம் 2009 வரையான சம்பவங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். 1981 மே 31 முதல் நாளிரவு முதல் ஜுன் 4ஆந்திகதி வரை நடந்த நிகழ்வுகள் மிக அருமையாக மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது என்ற நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஆவணப்படுத்தலில் 1. மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, 2. யாழ்ப்பாண பொது நூலகம் மீள்விக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர், 3. யாழ்ப்பாண நூல்நிலையம் - ஓர் ஆவணம் - மூதறிஞர் க.சி. குலரத்தினம் 4. யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு – என். செல்வராஜா 5. யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி.எஸ் துரைராஜா 6 .ஒரு வரலாற்றுக் குற்றம் - NON ஆகியவற்றையே தமிழில் நான் பார்த்திருக்கும் நூல்கள். இவற்றைவிட சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படம் - ('Burning Memories'- A Video documentary by Someetharan) மிகமுக்கியமானது! இவைகளில் நான்காவதாக குறிப்பிட்ட யாழ்ப்பாணப் பொது நூலகம் என்ற நூலில் பக்கம் 92ல் இரண்டாவது பந்தியில் 4வது வரியில் "31.05.1981 அன்று இரவு சிங்களக்காடையர் கும்பலினால்" என்றும், பக்கம் 100ல் மூன்றாவது பந்தியில் "1981 யூன்மாத முதல் நாளின் விடிகாலவேளை மே 31ஆம் திகதியின் நள்ளிரவில்" என்றும், 102ம் பக்கத்தில் கட்டுரையின் முதல் வரியிலே “யாழ் பொது நூலகம் 31.05.1981 அன்று இரவு" என்றும், 106ல் கடைசிப்பந்தியில் 2ஆவது வரியில் "அறிவுப்பெட்டகம் இக்காடையர்களால் 1981மே மாதம் 31ம் திகதி தீமூட்டி எரிக்கப்பட்டது" என்றும் இருப்பவை தவறான செய்தியாகும். 1981 மே 31 ஆந்திகதி நாச்சிமார் கோவிலடியில் பிரச்சினைகள் ஆரம்பமாகி கோவிலின் தேர்க்கொட்டகை, கோபுர கொட்டகை, அருகிலிருந்த சில வீடுகள் வாகனங்கள் மற்றும் கூட்டணி அலுவலகம் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரின் வீடு - அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வகனங்கள் என்பன எரிக்கப்பட்டன இரண்டாம் நாள்
ஜுன் முதலாந்திகதியே யாழ்ப்பாண பொது நூலகம் - குடாநாட்டில் வெளிவந்த ஒரேயொரு பத்திரிகையான ஈழநாடு போன்றவை முற்றாக எரிக்கப்பட்டன. ஆனால் பலரும் மே 31 பிரச்சினைகள் தொடங்கிய நாளில் நூலகம் எரிக்கப்பட்டது என பிழையாக வரலாற்றைப் பதிவிடுவது தவறு!
சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படத்தில் முன்னைய நூலகர் சுலோச்சனா ரகுநாதன் கருத்துத் தெரிவிக்கையில் 9.5.1985 ரொக்கட் லோஞ்சருடன் வந்த இளைஞரொருவரால் கோட்டை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்ட பொழுது தான் ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு நூலகத்தினுள் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டுமெனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆணையாளர் இராணுவ கொமாண்டருடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவித்த சமயத்தில் உடனடியாக அனைவரையும் அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி கூறியதைத் தொடர்ந்து நூலகத்தினுள் இருந்த ஏறக்குறைய 80பேர் வரையில் வெளியேறிய பொழுது கிட்டத்தட்ட மாலை 4.30 மணியாக இருக்கும் எனவும் பின்னர் அன்றிரவு சுமார் 9.30 மணியளவில் பாரிய குண்டுச்சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கிறார்.
ஆவணப்படுத்தல்களில் யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமான தகவல்களில் பிழை இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த விடயங்களை நான் தகுந்த ஆதாரங்களோடு முன்வைக்கின்றேன். குறிப்பிட்ட பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதை நூலகத்திற்குப் பொறுப்பான மாநகர சபையும், நூலக ஆலோசனைக் குழுவும் கூடிய அக்கறை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
1. நூலகத்தின் முன்பாக இருந்த மிக அற்புத வேலைப்பாடுகளைக் கொண்ட யாழ்மங்கையின் சிலை எங்கே என்று முதலில் கண்டறிய வேண்டும். அது எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் 1968இல் வெளியான மாநகர சபை குடிநல - சுகாதார வாரமலரிலும் 1974இல் வெளியான வெள்ளிவிழா மலரிலும் நூல் நிலயத்தின் படங்களுக்கு முன்னால் எந்தச் சிலையும் இருக்கவில்லை. கடந்த (23.04.2014) நூல் நிலையத்திற்குச் சென்று திரு. என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு என்ற புத்தகத்தைப் பார்வையிட்டபோது “நூலகர் நெஞ்சை விட்டகலா நினைவலைகள்” முன்னாள் பிரதம நூலகர் கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்களின் கட்டுரையில் 113 ஆம் பக்கத்தில் "நூலகராகிய எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை சில விஷமிகளால் நூலகத்திலிருந்து பெயர்க்கப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவில் எறியப்பட்டது. இச்சிலை பின்னர் அங்கு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் வேறொரு சரஸ்வதி சிலை நூலக முகப்பில் இன்றும் காட்சியளிக்கின்றது" என்றிருக்கிறது! அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மனக்குமுறலை எழுதுகிறார். அதில் ஆணையாளருக்கும் நூலகருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினை தெரிகிறது. இதை நான் குறிப்பிடுவது ஏனெனில் இந்தக் கதையில் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் இன்றும் தொடர்ந்து கொண்டு இருப்பதனால்தான்! இதில் அவரும் சிலையை சரஸ்வதி என்றே சொல்கிறார். ஆனால் அது சரஸ்வதியின் சிலை அல்ல. யாழை மீட்டும் ஒரு மங்கை! அவர் குறிப்பிட்ட சிலை இன்றும் சுப்பிரமணியம் பூங்காவினுள் இருப்பதையும் அதேபோல முதல்வராயிருந்த அல்பிரட் துரையப்பா அவர்களின் குடும்பத்தவர்கள் இன்றும் அந்த யாழ். மங்கையின் சிலையை ஏனோ நினைவில் கொண்டு பண்ணைப் பாலச் சந்தியில் ஒரு புதிய சிலையை திறந்து வைத்ததும் கவனிக்க வேண்டியதே!
2. யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம் என்னும் மூதறிஞர் க.சி.குலரத்தினம் அவர்களின் புத்தகத்தில் பக்கம் 88ல் குறிப்பிட்ட அமெரிக்கரின் நன்கொடைப்பணம் சம்பந்தமான தமிழில் பொறிக்கப்பெற்ற நினைவுக் கல்லுக்கு என்ன நடந்தது! (யாரும் இதைப்பற்றி அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை) மேலும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2 மிகவும் நகைச்சுவையான விடயங்களையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்! ஏனெனில் கடந்த (23.04.2014) நான் வாசித்துக் கொண்டிருந்த மேசையில் யாரோ ஒரு தம்பி தன் பெயரை பதித்திருந்தார். அதை வாசித்துக் கொண்டிருந்த பொழுது பார்த்தபடியால் குறிப்பிடத் தோன்றியது.
அதாவது அங்கே வாசிக்கச் சென்ற இளைஞர் இருவர் ஒருவர் பின் ஒருவராய்உட்புகுந்து ஹிட்லர், முசோலினி என்று கையொப்பமிட்டு அமைதியாகப் படித்துவிட்டு வெளியேறினார்கள். ஹிட்லர், முசோலினியின் கையொப்பங்களைக் கண்டதும் நூலகருக்கு வெயர்த்துக் கொட்டியது. தன் கண்காணிப்பில் இப்படி நடந்ததே என்று கண்கலங்கினார்.எனினும், சித்தங் கலங்காது ஹிட்லரையும், முசோலினியையும் எதுவிதத்திலும் கண்டு பிடிப்பதற்கு வழிவகுத்தார். மூன்றாம் நாள் இருவரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கு வேறுவழியில்லாமையினால் அவர்கள் மண்டபத்துக்குள் கால்வைத்தலாகாது எனத் தடை விதித்தார். அவர்கள் பெயர்களை அறிந்து அறிவித்தல் பலகையில் தடையுத்தரவை எழுதி ஒட்டியிருந்தார். இளைஞர் இருவரும் அதன்பின் அந்தப்பக்கம் தலைகாட்டவே இல்லை. அக்காலத்துச் சிட்டாசாரம் என்னும் ஒழுக்கம் அத்தகையது.
ஆங்கிலத்தில் ஈசிசெயர் என்றும் சோபா என்றும் வழங்கும் நீண்ட நாற்காலிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு, வசதிக்காக அங்கே இருந்தன. ஒரு நாள் இளைஞன் ஒருவர் அதிலே சாய்ந்து படுத்துப் படித்தபின், புத்தகத்தை நெஞ்சிலே உறங்க வைத்துவிட்டுத் தானுறங்கி குறட்டையும் விட்டபடிக் கிடந்தார்.
காலை, நண்பகல், மாலை ஆகிய முப்பொழுதுகளிலும் நேரில் சென்று மேற்பார்வை செய்து வந்த நகரபிதா சாம். ஏ. சபாபதி அவர்கள் உடனடியாக அலுவலகஞ் சென்று பணியாட்களை அனுப்பி உறங்கியவரைத் தட்டியெழுப்பி, நாற்காலிகளையும் அப்புறப்படுத்திவிட்டார். அதன்பின் வயது முதிர்ந்த ஓய்வூதியக்காரரும் நின்றும் இருந்தும் படிக்க வேண்டியவராயினர்.
இதை நான் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் - படிக்கச் சென்று நூலகத்தில், பலரும் காலை மேசைமேல் வைத்தும், அருகிலிருக்கும் கதிரைமேல் வைத்தும் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதை பலதடவைகள் நேரில் பார்த்திருக்கிறேன். கோவில் என்று எண்ணும் எம்போன்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என அவர்கள் உணர்ந்து, தம்மைத் திருத்தி, வாழ பழகவேண்டும்.
3. நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் 01.06.1981இல் நடந்ததுதான் உண்மை! யாழ்பாணத்தில் அசம்பாவிதங்கள் 31.05.1981 ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் எமது கல்விக் கோவில் எனத் திகழ்ந்த - எமது பொது சன நூல் நிலையம் 1981 ஜுன் மாதம் முதலாந் திகதி திங்கட்கிழமையே எரியூட்டப்பட்டது! ஆனால் பெரும்பாலானோர் மே 31இல் எரிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! இது தவறு!
4. 1981இன் பின்னர் 3 தடவைகள் அது பாரிய தேசதத்திற்குள்ளாகியிருக்கிறது!
1. 1985இல் மே மாதம் 3 திகதிகளில் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் சொல்கின்றன.
அ. சோமீதரனின் எரியும் நினைவுகளில் பதிவிலிருக்கும் 9ஆந்திகதி மாலை.
ஆ. சி.வி.கே. சிவஞானம் அவர்கள் குறிப்பிடும் 10ஆந்திகதி
இ. 11ஆந்திகதி நூலகம் தகர்க்கப்பட்ட செய்தி 12ஆந்திகதி ஈழமுரசில் பிரசுரமாகியிருக்கிறது!
2. 24.08.1986 இல் ஷெல் தாக்குதலுக்குள்ளானது!
3. 15.05.1987இல் எரிக்கப்பட்டது!
5. 1981இல் எரிக்கப்பட்டு அதன்பின் பல தடைவ தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த நூல் நிலையம் சந்திரிகா அரசினால் மீள புனரமைக்கப்பட்டு 14.02.2003ஆம் திகதி திறக்கப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்ட நிலையில் 12ஆந்திகதி நூல் நிலையத்தை திறக்கக்கூடாது என கோரிக்கைகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து 13ஆந்திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் உறுப்பினர்கள் பதவிவிலகியதுடன் நூல்நிலையத் திறப்பு விழாவும் இரத்துச் செய்யப்பட்டது! 13ஆந்திகதி நள்ளிரவு நூலகத் திறப்புகளும் காவலாளிகளிடமிருந்து அபகரிக்கப்பட்டன. 2003.02.14 பத்திரிகைகள் அனைத்திலும் நூலகத் திறப்பு விழா ரத்து என்றும், மேயரும் உறுப்பினர்களும் பதவி துறப்பு என்ற செய்திகள் வந்தபின் - மிக முக்கியமான வரலாற்றுத் தவறாக நூல் நிலையத்தின பிரதான வாசலின் இடது புறத்தில் காணப்படும் 14.02.2003இல் நூலகம் திறக்கப்பட்ட செய்தியையுடைய நினைவுக்கல் 7 வருடங்களின் பின் 2010இல் பொருத்தப்பட்டது.
உடனடியாக இக்கல் அகற்றப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்! காரணம் அக்கல்லில் எனது பெயரும் இருக்கிறது. நடைபெறாத - அதுவும் என்னை சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்த ஒரு நிகழ்வு இன்று நடந்தது என இருக்கையில் நான் கோபம் கொள்ளுவதில் ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யும்? யாராவது இதை மறுப்பார்களா? எந்தத் திகதியில் திறப்புவிழா நடைபெற்றதாக சொல்லப்படுகிறதோ அந்த நாள் வீரகேசரிப் பத்திரிகையின் முற்பக்கத்தில் அதாவது 14ஆந்திகதி வெள்ளிக்கிழமை “ …யாழ் மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளர் இளம்பரிதி அங்கு பிரசன்னமானார். அவரை வரவேற்ற மேயர் பின்னர் அவரை தனது அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றார். உறுப்பினர் முகுந்தனும் இவர்களுடன் சேர்ந்துகொண்டார். மூவரும் பூட்டிய அறைக்குள் சில நிமிட நேரம் உரையாடினர். மாநகர ஊழியர்கள் யாரும் உள்ளே புகுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ..” என்றுள்ளது. பெப்ரவரி 23 – மார்ச் 1 திகதி தினமுரசுப் பத்திரிகையின் 5ஆம்பக்கத்தில் வெளியான “மூடிய அறைக்குள் நடந்த உண்மைகளைத் திறக்கிறார் கந்தையன்” என்ற மேயரின் பேட்டியில் முகுந்தனுக்கும் இளம்பரிதிக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் இளம்பரிதி தனது கதிரையைவிட்டு வேகமாக எழுந்து தனது கோபத்தைக் காட்டினார் என்று கூறியுள்ளார். ஆங்கிலத்தில் 17ஆந்திகதி த ஐலண்ட் பத்திரிகையிலும் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் அறிக்கையிலும் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்றுவரை என்னிடம் யாரும் என்ன நடந்தது என வினவவுமில்லை. நான் வெளிப்படுத்தவுமில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னர் அடுத்தநாள் 15ஆந்திகதி ஈபிஆர்எல்எப் உறுப்பினர் சுபத்திரனின் அறிவுறுத்தலுக்கமைய நாம் மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் ஐ.நா. சபை அலுவலகம், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் இதுபற்றி ஒரு முறைப்பாட்டைத் தெரிவித்திருந்தோம். இதன்பின் நூலகம் திட்டமிட்டபடி திறக்கப்படாததைத் தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் நூல் நிலையத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி கௌரவிக்க ஒரு நிகழ்வை 24.03.2003இல் ஏற்பாடு செய்தது.
இராஜினாமாச் செய்த அத்தனை உறுப்பினர்களையும் இந்நிகழ்வில் பங்குபற்றவும் ஏற்பாடுகள் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்தது.
6. நூலகத்தில் முன்பிருந்த அனைத்து நினைவு நடுகல்கள் வெள்ளைக்கற்களால் ஆனவை. அதாவது நூலகம் 1981இல் எரிக்கப்பட முன்னர் அதற்கு ஆதாரமாக இப்போது இருப்பவை பிரதான கட்டடத்திற்கு வெளியேயுள்ள 3 நினைவுக் கற்கள்.
5 அடிக்கற்களில் முன்வாசலில் இருக்கும் முதல்வர் சாம் சபாபதி அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட கல் காணாமற்போயிருக்கிறது.
அது புதிதாக கறுப்புக் கல்லினால் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வண. பிதா லோங் அடிகளாரின் கல் மாற்றப்பட்டிருக்கிறது. அவரது உருவச் சிலையின் அடியில் பதிக்கப்பட்ட பழைய நினைவு நடுகல் அகற்றப்பட்டு புதிதாக வைக்கப்பட்ட கல்லின் எழுத்துக்கள் இக்கட்டுரை எழுதப்படும்வரை அழிந்த நிலையில் இருக்கிறது.
பழைய கல்லில் தெளிவான எழுத்துக்கள் இருந்ததை நினைவுபடுத்துவதோடு அக்கல்லை சிலையின் மற்றைய 3 பாகங்களில் ஏதெனும் ஒரு பக்கலில் நினைவாக வைக்கவேண்டும் என ஒரு ஆலோசனையை முன்வைக்க விரும்புகிறேன். அதேபோல தற்போது அகற்றப்பட்ட வண.பிதா லோங் அடிகளாரின் பழைய வெள்ளைக் கல்லை புதிய கல்லுக்கு அருகில் வைத்தால் நூலகம் பாதிக்கப்பட்டதற்கான சான்றாக அவை அமையும் என நம்புவதோடு இனிவரும் காலங்களில் ஏனைய 3 அடிக்கல்களை மாற்ற வேண்டி ஏற்பட்டால் அவற்றையும் ஞாபகமாக வைத்துக் கொண்டு புதிய கல்லை அதனருகில் வைக்கலாம் எனவும் ஆலோசனை கூற விரும்புகின்றேன். 1984இல் திறக்கப்பட்ட புதிய கட்டடம் முனியப்பர் கோவிலைப் பார்த்தபடி இருக்கும் வாசலில் இருபக்கத்திலிருந்த கறுப்புக் கற்களில் ஒன்று இன்றுமுள்ளது.
அதாவது மேயர் விசுவாதன் அடிக்கல் நாட்டியது. ஆனால் திறந்து வைக்கப்பட்ட கல் காணாமற் போயிருந்தது.
அதை வைப்பதற்குத் தான் நடைபெறாதிருந்த பெரிய மும்மொழிகளாலும் எழுதப்பட்ட கல் முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் பிரச்சினைக்குரிய அகற்றப்படவேண்டிய கல். இதைவிட இரண்டாவதாக குறிப்பிட்ட தமிழல் இருந்த ஆசியா பவுண்டேசன் பண அன்பளிப்புச் செய்யப்பட்ட கல் புதிதாக ஏற்படுத்தி இருந்ததுபோல முன் வாசலில் வைக்கப்பட வேண்டும்.
7. நூலகம் எரிந்தபொழுது அந்த அதிர்ச்சியில் காலமாகிய வண. பிதா. தாவீது அடிகளாரின் உருவப்படம் பெரியளவில் செய்யப்பட்டு நூலகத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட வேண்டுமென்பது அன்று மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை.
(கடந்த வருடம் அவரது நினைவு அனுட்டிக்கப்பட்ட தும்பளைக்கு நேரில் சென்று அந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட திருப்தி எனக்கு ஓரளவு மன அமைதியை அளித்தது.) இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. பெரிய அளவில் எரிக்கப்பட்ட நூலக மாதிரிப் படங்களுடன் அவரது முழு உருவப் படமும் அடுத்த வருடம் நூலகத்தில் வைக்கப்படவேண்டும் என்பது எனது அவா. இன்றுகூட இக்கட்டுரையையும் இதற்கு ஆதாரமான விடயங்களையும் தொகுத்து ஒரு சிறு நூலாக வெளியிட எண்ணியிருந்தேன். காலம் கைகூடவில்லை. அடுத்த வருடம் இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
யாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ இதுபற்றி யாரும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை! சென்னையில் நண்பன் சோமீதரன் இன்று ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளார்!