அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, October 10, 2012

மறக்க முடியாத இன்றைய நாள் - ஒக்ரோபர் - 10


இன்று 10-10-2012

25 வருடங்களுக்கு முன்னர் 10-10-1987ல் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வு! அப்போது நாம் இந்து இளைஞர் மன்றத்தின் அங்கத்தவராக நிர்வாக சபையில் இருந்த காலம். யாழ் மாவட்ட இந்து இளைஞர் பேரவை - நல்லை ஆதீன தொண்டர்களாகப் பணிபுரிந்த நேரம்!

10.10.1987 புரட்டாதி 4ம் சனிக்கிழமை வழமைபோல வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு எள் எண்ணெய் எரிப்பவர்களுக்கு வசதியாக எமது தொண்டர்கள் எரிந்து முடிந்த சிட்டிகளை எடுத்து துப்பரவு செய்வது வழக்கம். காலையிலிருந்து எமது தொண்டைச் செய்து கொண்டிருந்தோம். இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சண்டை ஆரம்பித்த நாள்! மதியம் 12 மணிக்கு மேல் குண்டுச் சத்தங்கள் கேட்கவும் நாம் கோவில் பூட்டியபின்னர் வீடு திரும்பினோம்! அப்போது ஆதீனத்திலும் - கந்தர்மடம் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டிலும் - ஊரெழு சிவஸ்ரீ வைத்தியநாத சிவாச்சாரியார் அவர்களது வீட்டிலும் தங்குவது வழமை. வழமைபோல பழம்றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டிற்குச் சென்ற சில நிமிடங்களில் சில தொண்டர்கள் நகரத்தில் பலர் காயமடைந்து இருப்பதாகவும் அவர்களுக்கு உதவ ஆட்கள் தேவையெனவும் வந்து செய்தி தெரிவிக்க, நானும் அவர்களுடன் சைக்கிளில் ஏறிச் சென்றேன். ஸ்ரான்லி வீதியிலிருந்து பஸ்நிலையத்திற்குச் செல்லும் குறுக்குப் பாதையால் நாம் போன நேரத்தில் ஒரு ஷெல் வந்து வைரவர் கோவில் முன்பாக புதிய சந்தைக்கும் பஸ் நிலையத்திற்கு மிடையில் விழுந்து வெடித்தது. எம் கண்முன்னேயே ஒரு 12, 13 வயதுடைய இளைஞன் அதில் காயமடைந்து உதவிக்கு எம்மை அழைத்தார். நாம் எமது சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு அவருக்கு அருகில் சென்றபோது மீண்டும் ஒரு ஷெல் அதே இடத்தில் விழுந்தது - அச்சிறுவனும் சைக்கிளும் துண்டுதுண்டாக சிதறின. ஒரே புகை மண்டலம். எமது காது கிண்ணென்று ஒலித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் எமது உடைகளிலெல்லாம் ஒரே ரத்தம். எனக்கு வாயில் ஒரு விதமான உணர்வு எற்பட்டது - முகமெல்லாம் ஷெல் துண்டுகள். வலதுகாலில் 2 இடங்களிலும் காதுப்பகுதியிலும் காயங்கள். எனக்கு எனது ரத்தத்தைப் பார்த்த பிறகு நடக்க முடியவில்லை. அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டேன். பின்னர் ரக்ரரில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டேன் . அன்று இரவு சராமாரியாக ஷெல் தாக்குதல்கள்! நாம் கட்டிலில் படுக்காமல் கீழே ஒளிந்து கொண்டிருந்தோம்.

காலையில் மேலும் பலர் அனுமதிக்கப்பட்டனர். உயிர் பிரிந்த நிலையில் பலரது உடல்கள் கொண்டுவரப்பட்டு வெளியே கிடத்தி வைக்கப்பட்டன. பாதிரியார் ஒருவர் தனியாக அவர்களுக்காகப் பிரார்த்தித்தார். நானும் அவருக்கருகில் நின்று இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தேன். அனேகமானவை இயக்கத்தினருடையவை. சிகிச்சைக்காக operation theaterக்குள் கொண்டு செல்லப்பட்டோம். நாம் உள்ளே கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட இருந்த வேளையில் பலரை தள்ளுவண்டிகளிலும் தூக்கிக்கொண்டும் ஓடி வந்தார்கள். ஒரு 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நடந்து தமது வயிற்றுப் பகுதியிலிருந்து வெளியே வந்த சதைகளைப் பிடித்தபடி வர நான் எனது இருக்கையை விட்டு எழுந்து எனக்கு மருந்து கட்ட முற்பட்ட தாதியிடம் "இவர்களுக்கு முதலில் சிகிச்சை அளியுங்கள் எமக்கு சிறுகாயங்கள்" எனச் சொல்லிவிட்டு வைத்தியசாலையை விட்டு வெளியேறி சிதறியிருந்த யாழ்ப்பாண நகரைக் கடந்து நொண்டியபடி பழம்றோட் பிள்ளையார் கோவில் ஐயாவீட்டை அடைந்தேன். அப்போது தான் அவர்களுக்குத் தெரியும் நான் காயமடைந்த விடயம். 5ம் சனி 17ல் மூளாயில் எமது வீட்டுக்குச் சென்ற பின்னர்தான் வீட்டாருக்கு நான் காயப்பட்ட விடயம் தெரியும். உடனேயே மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மயக்கமருந்து அற்ற நிலையில் எனது காலைக் கிளறியபோது "என்ரை சிவனே" என நான் அலறவும் எனது தந்தையார் மயக்கமடையவும், எனது தம்பி வைத்தியருடன் சண்டைபிடிக்கவும் - இப்படி நடைபெற்ற சம்பவம் என்னால் ஒரு போதும் மறக்க முடியாது!

No comments: