சபரிமலை செல்வதற்கு யாழ்ப்பாணத்திலும் பல யாத்திரைக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது மிகவும் பெருமளவில் ஐயப்பயாத்திரீகர்கள் மாலையணிந்து விரதமனுட்டித்தாலும் சரியான முறையில் ஐயப்ப விரதத்தை அறிந்து வைத்திருக்கிறார்களா? என்ற வினா எம்மிடத்தில் எழுகிறது! இது குறித்து என்னால் இன்று எழுதப்பட்ட ஒரு வேண்டுகோளை இங்கு பதிவிட விரும்புகின்றேன்!
அனைத்து சபரிமலை குருஸ்வாமிகளுக்கும் ஒரு பணிவான விண்ணப்பம்!
திருவருளும் குருவருளும் முன்னிற்க!
சபரி மலைக்கு முதன் முறையாகச் செல்லும் கன்னி ஸ்வாமிகளை சில பழ மலை ஸ்வாமிகளும் சில குருஸ்வாமிகளும் சபரிமலை நடைமுறைகளுக்கு ஒவ்வாத தேவையற்ற விடயங்களைச் சொல்லி அவர்களை சபரிமலை விரதத்தின் உண்மைகளை அறிய விடாது தமது கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருக்க விரும்புவது போலத் தெரிகிறது. முதலில் சபரிமலை செல்பவர்கள் அங்குள்ள நடைமுறைகள் - விரதத்தின் நோக்கம் - ஐயப்பனுடைய வரலாறுகளை முழுவதுமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு சில யாழ்ப்பாணத்து குருஸ்வாமிகள் அந்தணர்களாக இருப்பதால் அவர்கள் தமக்குரிய வேத - ஆகம வழிபாட்டை இதனுள்ளும் புகுத்துவதற்கு எத்தனிக்கிறார்கள். சாதாரணமாக அனைவராலும் மேற்கொள்ளப்படும் இவ்விரதத்திலும் தாம் நினைத்தபடி பூசைமுறைகளை ஏற்படுத்தி அதையே தொடர்ந்து பின்பற்றிவருவதும் எம்மைப் போன்ற சில மாலை போட்ட ஸ்வாமிகளின் மனதை வருத்தமுறச் செய்கின்றன. எந்தவித மந்திரமோ, கிரியைகளோ இந்த வழிபாட்டில் சொல்லப்படவில்லை. ஐயப்பன் படத்தை வைத்து அவரவர் வசதிக்கேற்றபடி வணங்கக்கூடிய மிக எளிமையான விரதத்தை பகட்டுக்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு சில குருஸ்வாமிகள் செய்வது அந்த பகவானாலேயே ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு மாபெரும் குற்றமும் தவறுமாகும். மாலை போட்ட ஸ்வாமி தன் வசதிக்கேற்றபடி வீட்டில் ஒரு பூசை செய்ய முயன்றாலும், சில அந்தணப் பெருமக்கள் தாம் கொண்டுசெல்லும் ஐயப்பனின் ஐம்பொன்னாலான உருவச் சிலைக்கு அபிஷேக ஆராதனைகளை தாம் செய்வதற்காக அந்த வீட்டை உபயோகிப்பதும் நல்லதல்ல. குறிப்பிட்ட வீட்டில் நடக்கும் பூசையை குருஸ்வாமி முன்னின்று வழிநடத்த - அந்த வீட்டுக்குரிய ஸ்வாமிகளும் மற்ற குடும்ப அங்கத்தவர்களும் அவரவர் திருக்கரங்களால் செய்ய வேண்டும். இதுதான் அந்த மாலைபோட்ட ஸ்வாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அந்த வீட்டிற்கும் நன்மை பயக்கும், 18 படிகள் வைத்து பூஜை செய்ய வேண்டிய ஐயனின் வழிபாட்டில் அதைத் தவிர்த்து ஐயனை கோபத்திற்குரிய கடவுளாக சித்தரிப்பதும் கண்டிக்கப்படத் தக்கது. குறிப்பிட்ட வீட்டில் ஐயப்பனுடைய பூஜைக்குச் செல்வோர் தவறாது அந்த வீட்டில் வழங்கப்படும் அன்னதானத்தையோ - பிரசாதங்களையோ ஏற்றுக் கொண்டு அங்கேயே உட்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பூசை முடிந்தவுடனே தன் வீட்டிலுள்ள ஐயப்பனுக்கு படைத்த பின்பே சாப்பிடுவேன் எனக்கூறி வந்த இல்லத்தில் உணவருந்தாமல் செல்வது மாபெரும் குற்றமாகும். இதைவிட அவர்கள் அந்தப் பூஜையில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது புண்ணியமாகும். மாலை அணிந்தால் அனைவரும் சமம் என்ற தத்துவமஸி என்கின்ற பேருண்மையைப் புரியாமல் அந்தணர்கள் சிலர் அந்தணரல்லாதோருக்கு பாத நமஸ்காரம் பண்ணாமல் விடுவதும், தனியாகப் போயிருந்து உணவு உட்கொள்வதும் முறையாகாது. இவர்கள் ஐயப்பனின் வழிபாட்டை கேவலப்படுத்தாமல் மாலை அணிவதைத் தவிர்ப்பது சிறப்பாகும். ஐயப்பனின் வழிபாட்டில் அன்னதானம் மிகச் சிறப்புடையது! அன்னதானப் பிரபுவான அவரின் முன்பாக அன்னம் உண்பதைத் தவிர்த்து வீடுகளுக்குச் சென்று உணவருந்த பார்ச்ல் கட்டிக் கொடுப்பதும் ஏற்புடையதல்ல.
ஆலயத்தினுள் இடம்போதாவிடில் ஆலய வளாகத்தில் தனியான ஒரு மண்டபம் அமைத்து ஆலயச் சூழலிலேயே அன்னம் பரிமாற ஆவன செய்யப்பட வேண்டும். மேலும் ஐயப்பனுக்கு படிப்பூசை, ஸ்லோகம் எல்லாம் கூறிவிட்டு பூசை நிறைவில் கறுப்பண்ணஸ்வாமிக்கு பூசை வைப்பதும், வீட்டிற்கு கழிப்பு எனப்படும் பூசணிக்காய் வெட்டி சில சடங்குகளை நடத்துவதும் ஐயப்பனைக் கேலி செய்வதாக அமையும்! ஐயப்பனின் படிப்பூசையை செய்வதற்கு முன் காவலுக்கு உதவும் கறுப்பண்ணஸ்வாமிக்கு பூசையை நடத்தலாம். அதில் தவறில்லை! ஆனால் ஐயப்பனுக்குப் பூசையை நிகழ்த்திவிட்டு பின்னர் சாந்தி செய்வது – ஐயப்பனின் அருள் நிறைந்த வீட்டை குற்றம் சுமத்துவது போலாகும்! நித்திய பிரமச்சாரியான ஐயப்பனின் திருஉருவத்திற்கு அருகில் மஞ்சமாதாவை வைப்பதும், சரிசமமாக ஐயப்பனுடன் வீதியுலா செய்வதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்! மஞ்சமாதா எனக் கூறி சர்வவல்லமை பொருந்திய அம்பிகையின் திருவுருவை வைத்து வழிபடுவதும் மிகவும் தவறாகும். சம்பந்தப்பட்டவர்கள் இதில் அதிக கவனம் எடுத்து ஐயப்பனின் வழிபாட்டை அமைதியாக ஆன்மீக வளர்ச்சிக்கு மாத்திரம் கைக்கொள்ளுமாறும், தேவையற்ற சம்பிரதாயங்களை சடங்குகளாக்கி கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாம் எனவும் சபரிமலை ஸ்ரீ தர்மஸாஸ்தாவின் பெயரால் அவனது அடியவனாக தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment