அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, May 22, 2010

இலங்கையில் அரசியலும் இயற்கையும்!

அரசியலுக்கு மிகச் சிறப்பாக வழிமுறை சொல்லிக் கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர்!


செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள் 541)

குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.

கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.(குறள் 551)

குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

நம்நாட்டில் நடந்துமுடிந்த அல்லது நடக்கின்ற அனைத்து அநீதிகளுக்கும் இந்த இரண்டு குறள்களும் மிகத்தெளிவாகப் பொருள்சொல்கின்றன!

சிங்களப் பெரும்பான்மை அரசும் சரி தமிழர்களுக்கான அரசை நடத்தியவர்களும் சரி குடிமக்கள்மீது காட்டிய பெருந்தன்மையை எல்லோரும் அறிவார்கள்! இதில் இன - மத வேறுபாடின்றி அனைவருமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்!

யாழ்ப்பாணத்துத் தமிழர்களைக் காட்டிலும் - மட்டக்களப்பு - வன்னித் தமிழரைக் காட்டிலும் - மலையகம் தெற்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களும்! தெற்கிலும் மலையக கிராமப் புறங்களிலும் ஏன் கொழும்பில் சேரிப் புறங்களில் ஆற்றோரங்களில் வாழும் பெரும்பான்மைச் சிங்களவர்களும் யாழ்ப்பாணப் பகுதிகளிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களுமாக ஒரு சாரார் எந்த நீதியுமின்றி இன்றும் வாழ்கிறார்களே!

நீதி - நியாயம் பற்றி நான் எழுதினால் பலருக்கு கோபம் வரும்! ஆனால் அறம் செய விரும்பு என இளைய காலத்தில் படித்த வரிகளை நான் யாருக்காகவும் மாற்ற முடியாது! அது என்னுடன் கூடவே என்னுயிருள்ளவரை தொடரும்!

ஒரு சமயம் வடக்கு பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்டபோது மௌனமாயிருந்த சமூகத்திற்கு கடந்த வருடம் நடந்த கொடிய யுத்தத்தின்போது உலக நாடுகளும் மௌனம் சாதித்ததும் தர்மத்துக்கு நாம் தலைவணங்காத பழிதான்! சரி மறுபுறம் நாட்டு மக்களை அரக்கத்தனமாக கொன்றொழித்த அரசு ஒரு வருட காலத்தில் இயற்கைப் பேரழிவால் கதிகலங்கி நிற்கிறது!

தர்மம் சரணம் கச்சாமி என்கிற பௌத்த போதனையும்சரி - அறம் செய விரும்பு என்கிற தமிழ் மூதாட்டியின் கருத்தும் சரி போற்றப்படவேண்டியவர்களால் கைக்கொள்ளப்படாதபோது உலக நீதிக்கு அமைவாக இறையும் இயற்கையும் பழிசெய்தவர்களை கண்டித்தே தீரும் இதுதான் நடக்கிறது! அரசும் ஆட்சி புரிபவர்களும் இதை அலட்சியப்படுத்தினாலும் - தர்ம போதனைகளை அறிந்த பாமர மக்களாவது இனிமேலாவது மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோளாகும்!

(குறளுக்கும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பொருளுக்கும் www.thirukkural.com இணையத்திற்கு நன்றிகள்)

4 comments:

EKSAAR said...

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.. ஆயினும் ஜனநாயக பண்புகளை வளர்க்கமுடியுமா என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது.. எனது அண்மைய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களைப்பார்த்து.. எங்கோ அடிப்படையில் கோளாறு இருக்கிறது. அடையாளம் காணமுடியுமா தெரியவில்லை. இன்னும் தமிழ் ஊடகங்கள் அப்பாவி தமிழர்களை பகடைக்காயாக ஆக்குவதில்தான் குறியாக இருக்கின்றன. முக்கியமாக தமிழ்நாட்டில் நிராகரிக்கப்பட்ட சில சக்திகள் குட்டையை குழப்பும்?

வேகநரி said...

Eksaar கூறுவது முழுக்க சரியானது. தமிழ்நாட்டில் நிராகரிக்கப்பட்ட சில சக்திகள் மட்டும் அல்ல இலங்கை தமிழர்களை பகடைக்காயாக ஆக்கவில்லை,தமிழ்நாட்டு பதிவர்கள் சிலரும் தங்கள் எழுத்து பிரபல்யம் அடைவேண்டும் என்பதற்காக ஓநாய் கண்ணீர், முதலை கண்ணீர் வடித்து எழுதி குட்டையை குழப்புகிறார்கள். எங்கள் நாட்டு ஆள் கூட hitஆவதற்காக நேற்று இதே பாணியில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளாரே!

கவி அழகன் said...

நன்றி நல்ல விளக்கம்

Anonymous said...

" உங்கள் பின்னூட்டம் ஒவ்வொன்றையும் நான் அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்.

அதேபோன்ற அன்போடு அதை அனுமதித்து பதிவு செய்தால் உங்களைப்போல் நாமும் அடியேனாகவும் அன்புள்ளம் கொண்டவனாகவும் ஆகும் வாய்ப்புண்டல்லவா?