அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, June 13, 2011

ஜேர்மனி ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா


எனது வாழ்க்கையின் 2 ஆவது அத்தியாயத்தின்(மறுபிறவி) 5 வருடங்கள் நேற்றுடன்(12-06-2011) முடிந்தது! இந்த 5ஆவது ஆண்டு நிறைவு நாளில் எனக்கு மிகவும் பிடித்த அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பிகையின் சந்நிதானத்தில் எனது பொழுதைப் போக்க ஆண்டவன் அளித்திருந்த திருவருளை எண்ணி வியந்தபடி இக்கட்டுரையை எழுதுகிறேன்!


பஞ்சபூதத்தலங்களில் முதன்மையாகிய காஞ்சிபுரத்திலுள்ள அம்பாளின் அதே உயர அகலத்தில் அமையப் பெற்ற கருவறையில் எழுந்தருளியிருக்கும் அம்பாளைக் கண்டதும் தன்னிலை மறக்கும் நிலை ஏற்படுவது உறுதி!

நான் உலகிலுள்ள 3 காமாட்சி அம்பாள் தலங்களைத் தரிசித்திருப்பது நான் செய்த பாக்கியம்! முதலாவதாக எமது யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் என அழைக்கப்படும் நாச்சிமார் கோவில் அம்பாளின் கும்பாபிசேக வைபவத்தில் கலந்து கொண்டேன். (1981ஆம் ஆண்டு முதலில் இனப்பிரச்சனை ஆரம்பித்த அடம் இதுதான். அதைத் தொடர்ந்தே யாழ்ப்பாண நகரம் தீக்கிரையாக்கப்பட்டது)

அடுத்தது காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில்! காஞ்சி மகா பெரியவரையும் இங்கு எழுந்தருளிய காமாட்சி அம்பாளையும் ஒரே நாளில் தரிசித்தமை பெரும் பேறு!

அடுத்து ஜேர்மனி ஹம் நகரிலுள்ள இந்த காமாட்சி அம்பாள்!

கடந்த 11.06.2011 சனிக்கிழமை நண்பகலில் தேவன் என்ற நண்பருடனும் எமது அடில்ஸ்வீல் முருகன் கோவில் சபரிமலை யாத்திரை குருசுவாமி சண்முகலிங்கம் அவர்களுடனும் சுவிற்சர்லாந்திலிருந்து ஜேர்மனிக்குப் புறப்பட்டு மாலையில் நேராக கோவிலுக்குச் சென்றபோது அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சப்பறத்தில் புறப்பட்டு ஆலயத்திற்கு வெளியே எழுந்தருளிய காட்சி மிக அருமையாக இருந்தது!

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்! நீண்ட காலத்திற்குப் பிறகு எனது சித்தப்பாவை(திரு. தம்பிநாதர் புவனேந்திரன் அவர்களை)ச் சந்தித்தேன். மூளாய் அருணகிரிநாதன் அண்ணனின் மகன் சரவணன் என்னைக் கண்டதும் ஓடோடிவந்து கதைத்தார்.

அன்றிரவு ஒரு அருமையான தங்குமிடத்தில் தங்கியபின் அடுத்த நாள் 12.06.2011 காலையில் தேருக்குப் புறப்பட்டோம். வாகனத் தரிப்பிடம் அனைத்தும் நிறைந்திருந்ததால் ஆலயத்தின் பின்புறம் சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்திலிருந்த தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து கோவிலுக்குச் சென்றபோது கோவில் நிறைந்திருந்தது! பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்து கோவிலை நிறைத்திருந்தார்கள்! உள்ளே கொடித்தம்ப பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது!தம்பபூஜையில் தேவார புராணங்களுக்கு இடமளிக்கப்பட்டது - புதுமையாக இருந்தது. தொடர்ந்து ஆசீர்வாதம் நடைபெற்ற பின்னர் அஸ்திரதேவர் சுற்றுப்பலிப்பூஜைக்குப் புறப்பட்டார். கோவிலின் இரண்டாவது வீதியில் இது நடைபெற்றது.

பின்னர் வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று உள்வீதியுலாவைத் தொடர்ந்து யாகபூஜையின் பின்னர் இரண்டாவது வீதியில் வலம்வந்து தேருக்கு எழுந்தருளிய ஸ்ரீ காமாட்சி அம்பாள் விநாயகர் - சண்டேசுவரி சகிதம் அடியார்களுக்கு அருள்புரிந்தார்.


























6 comments:

வந்தியத்தேவன் said...

அழகான படங்களும் பதிவும். காலையில் ஜிடிவியில் செய்தியில் பார்த்தேன்.

தங்க முகுந்தன் said...

நன்றி வந்தியத் தேவரே! எப்படி இருக்கிறீர்?

Ashwin-WIN said...

அஹா இங்க நம்ம ஊருல நடக்குரதவிட சிறப்பாவும் அழகாவும் இருக்கே..

ARV Loshan said...

பக்தியில்லை. ஆனால் பதிவும் படங்களும் அழகா இருக்கு அண்ணா..
நல்லா இருக்கீங்களா?

தங்க முகுந்தன் said...

உண்மைதான் அஸ்வின்!

சிறப்பாக - பக்திமயமாக நடக்கிறது! இதுபற்றி இன்னுமொரு பதிவு விரைவில் எழுத இருக்கிறேன்!

தங்க முகுந்தன் said...

நன்றி லோஷன்! ம்... ஏதோ இருக்கிறேன்! விரைவில் வருவதற்கு எண்ணியுள்ளேன். நீங்கள் எப்படி? எப்பவோ கதைத்ததற்குப்பிறகு தொடர்பு கொள்ளவில்லை. மன்னிக்கவும்! விரைவில் தொடர்பு கொள்கிறேன்!