அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, August 4, 2011

மறக்க முடியாத நல்லூர்! திருவிழா இன்று ஆரம்பம்!


என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்களுள் நல்லூர்த் திருவிழா ஒரு தனியான இடத்தை வகிக்கும்!
சிறு வயதில் எமது கிராமத்துப் பாடசாலை மூலம் அப்போதைய யாழ்ப்பாணப் பட்டணத்துக்கு சுற்றுலா போனது இன்றும் நல்ல ஞாபகம்!
வரும்வழியில் கல்லுண்டாயிலுள்ள உப்பளத்திற்கும் போய் உப்பு விளைவதையும் கண்டுவந்தோம்!
இது நடந்தது 1973 – 1974 காலப்பகுதிகளில் - இற்றைக்கு சுமார் 37 வருடங்களுக்கு முன்னர்.

நல்லூர்க் கோவிலுக்குப் போகுமுன்பு யாழ்ப்பாணப் பட்டணத்திலுள்ள – பழைய சந்தை – வள்ளுவர் - ஓளவையார் - பாரதியார் சிலைகள் – யாழ்ப்பாணக் கோட்டை – நூல்நிலையம் - இவற்றைப் பார்த்த பின்பு நல்லூருக்கப் போனோம்!
அப்போது கோவில் கேணி – தண்டாயுதபாணி கோவில் தனியாக பிரதான வீதிக்கு அந்தப் பக்கம் இருந்தது! அருகில் நாவலர் சிலை மண்டபம்!
இதற்கு முன்பாக கோவில்! கோவிலுக்கு அருகில் வெளியிலேயே ஒரு கூட்டில் அழகான மயிலும் இருந்து அகவியதை இப்போதும் மறக்க முடியாது!


இதன் பின்னர் 1977ல் தேரின்போது பஜனை பாடியதும் ஞாபகம்!

நல்லை நகர் வீற்றிருக்கும் கந்தா நின் சரணம்!
தொல்லைகளைத் தீர்த்தருள்வாய் கந்தா உன் சரணம்!
இல்லை உனக்கீடு என்றோம் கந்தா உன் சரணம்!
இடகரற்ற குரல் கொடுத்தோம் கந்தா உன்சரணம்!

பார்வதியாள் பெற்றெடுத்த பாலா உன் சரணம்!
பார்த்தருள்வாய் பைந்தமிழைக் காத்தருள்வாய் சரணம்!

இதற்குப் பின் 1984 – 1987 காலப் பகுதிகளில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் அங்கத்தவராயிருந்த சமயம் - யாழ் மாவட்ட இந்து இளைஞர் பேரவை - நல்லை ஆதீனத் தொண்டர் சபை மூலம் நல்லூர் மகோற்சவ காலம் 25 நாட்களும் ஆலயத்தின் சுற்றாடலில் நாம் எம்மாலியன்ற தொண்டையும் பணிகளையும் மேற்கொண்டோம்!

ஒரு தடவை சரியாக எந்த ஆண்டு என்று ஞாபகமில்லை 1985 அல்லது 1986 ஆக இருக்க வேண்டும் தீர்த்த நாளன்று அதிகாலை 4மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து கோவிலுக்கு வந்தால் கோவிலின் பிரதான வாசற்கதவு பூட்டப்பட்டிருந்தது! பக்தர்கள் கோவிலின் வாசற்கதவை முண்டியடித்தபடி இருந்தனர்! உள்ளே பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இயக்க இளைஞர்கள் சிலர் கோவில் கூரையின் மேல் எதையோ தேடுவதுபோல இருந்தது! நாங்கள் ஒரு 5,6 தொண்டர்கள் என்னவென அறிவதற்கு முயற்சி எடுத்தோம். கோவிலினுள் யாரோ குண்டு வைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபட்டது! நானும் ஓரிரு தொண்டர்களும் வாயிற்கதவுக்கு போய் பக்தர்களை அமைதிப்படுத்துவது என முடிவு செய்தோம். மிகவும் சிரமப்பட்டு நெரிசலுக்கு மத்தியில் வாயிற் கதவையடைந்தோம். இரும்புக் கதவை தள்ளியபடி கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது! நாங்கள் அவர்களுக்கும் கதவுக்கும் இடையில் சென்று கூட்டத்தை சற்றுப் பின்னகர்த்தி இருக்கும்படி சொன்னோம்! பக்தர்களில் பலர் எமது கருத்தை ஏற்று அமர்ந்திருந்தனர். ஒரு சில வயதான ஆண்கள் இருத்தி என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள் என்று கோபமாகக் கேட்டனர். நீங்கள் நின்று என்ன சாதிக்கிறீர்கள் என்று நான் பதிலுக்குக் கேட்டேன். முருகன் மீது உண்மையான பக்தி வைத்து விரதமிருந்தால் எப்படியும் தீர்த்தம் நாம் பார்க்கலாம்! என்று சொல்லி அடக்க முடியாத கோபத்தால் எனக்கு அழுகையும் வந்து விட்டது. ஒரு சில வயதானவர்கள் தம்பி இவர்களைத் திருத்த முடியாது நீர் ஏன் இவர்களுடன் சண்டையிடுகிறாய் என எனக்குப் பரிந்து பேசினார்கள்! இப்படி நாமும் அவர்களும் சண்டைபிடித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே கோவிலினுள் ஒன்றும் இல்லை என கோவிற்கதவையும் திறந்து விட்டார்கள்! தீர்த்தம் மிகச் சிறப்பாக நடைபெற்றது!

1987இல் திருவிழா முடிந்த பின்னர் ஒக்டோபரில் 10.10.1987இல் புலிகளுக்கும் - இந்திய இராணுவத்திற்குமிடையில் போர் தொடங்கிய நாள் ஒரு சனிக்கிழமை!
புரட்டாதிச் சனிக் கிழமைகளில் வண்ணை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலில் சனீஸ்வரருக்கு எள்ளெண்ணெய்ச் சட்டி எரிப்பவர்களுக்கு வசதியாக நாம் எரிந்த சட்டிகளை எடுத்து அப்புறப்படுத்தவது எமது பணி! இந்த நேரத்தில்தான் சண்டை தொடங்கியது. மதியம் ஒரு மணியிருக்கும். பலத்த குண்டுச் சத்தங்கள். பக்தர்கள் வருகை குறையவே ஆலயத்தையும் பூட்ட ஆயத்தமாக நாம் எமது வீடுகளுக்குச் சென்றோம். அப்போது நான்
கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டில் தங்கியிருந்தேன்! கோவிலிலிருந்து திரும்பிய பின் சிலமணி நேரம் கழித்து எனது நண்பனொருவன் அவசரமாக வந்து "வாடா! நிறையச் சனம் காயப்பட்டுக் கிடக்காம்! உதவ யாருமில்லையாம்! நாங்கள் போவோம்" என்று சொல்ல நானும் அவனுடைய சைக்கிளில் ஏறிப் போனேன்! ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்பாக நாம் செல்லும்போது பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் விழுந்து ஒரு குண்டு வெடித்தது! ஒரு பெடியன் சைக்கிளுடன் விழுவதைப் பார்த்தோம்! அவனுக்கு உதவ நாம் விரைந்த போது மீண்டும் ஒரு குண்டு அதே இடத்தில்!

மீதி நாளை!

நல்லூர்க் கோவிலில் இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய செய்தியும் அடங்கும்!

No comments: