அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 4, 2008

சமய நெறி நிற்போம்!

உயிர்கள் உய்திபெறவே ஒரு பெருங்கடவுள். உயிர்கள் உய்திபெறப் பயிலும் கலையே வாழ்க்கை. உயிர்கள் உய்யும் நெறியே சமய நெறி. அந்த நெறியில் தலைப்படின் சிந்தையிவே தெளிவு - அறிவிலே ஆக்கம் - ஆற்றலின் கொள்கலம் - அயரா அன்பு - எங்கும் இன்பம் என்ற சூழல் உருவாகும். இதுவே சமய நெறி வழிப்பட்ட சமுதாயம். களவு - காவல், உயர்வு - தாழ்வு, உடையார் - இல்லாதார், என்ற அமைப்பு சமய நெறி சாராதார் அமைப்பு.

ஆனால் இன்றைய சமுதாயத்தில் நிலை தடுமாற்றம். சமயம் இயக்க நியதிகளினின்றும் விலகி, நிறுவனங்களாகி அதுவே களவுக்கும் - காவலுக்கும் ஆளாகி, உயர்வு - தாழ்வு என்ற போராட்டத்தின் களமாகி, உடையாரை உவந்தாக்கியும் இல்லாரை எள்ளி நகையாடி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம் பிரானாட்டம் ஆகமுடியுமா? ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமயநெறி.

ஆலயங்கள் சமய - சமுதாயப்பணி மன்றங்களே!
ஆலயங்கள் நமது சமுதாயத்தின் பொது இடங்களாக விளங்கி மக்கட்பணி செய்தன என்பதை தமிழகத் திருக்கோயில்களில், கல்வெட்டுக்களில் இருந்து அறியக் கூடியதாக இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்கள் இருந்து தமிழாராய்ந்தனர். கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள், கலைபயில் கழகங்கள், நாடக அரங்குகள், மருத்துவமனைகள், ஏன் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் முறை மன்றங்களும் இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழிநடத்தும் கிராம சபைகள் - ஊர்ச்சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன.

இன்று நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. இவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகிவிட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமயநெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாதி, குல, இன, அரசியல் வேறுபாடுகளை அறவே களைந்து, அவற்றிற்கு அப்பாற்பட்டதாக அமைதல் வேண்டும். 'தெரிதல் முறை' அவசியம்.

சமய நிறுவனங்களுடைய தலைவர்கள், ஆலய குருமார்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருக்க வேண்டும்.

2 comments:

தங்க முகுந்தன் said...

வணக்கம் முகுந்தன் அன்ணா தாங்கள் கிருத்தியம் என்ற இனையத்தளம் மூலமாக வெளிநாட்டில் வாழ்ந்தாலும் எமது பாரம் பரிய விழுமியங்களை பேணிக்காப்பதில் இங்கு எப்படி வாழ்ந்தீர்களேh அப்படியே வெளிநாட்டிலும் வாழந்து வருவதை பார்த்தும் கேட்டும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இதனைப் போல் எமது மூளாய் கிராமத்தின் பாரம் பரிய நிகழ்வுகளை உள்ளடைக்கிய ஒர் இனையத்தளம் ஒன்றினை ஆரம்பிக்கலாம் தானே அதற்கு என்னால் செய்யக்கூடிய ஒத்துழைப்பினை வழங்குவேன்.

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
பார்த்தீபன்

தங்க முகுந்தன் said...

அன்புள்ள பார்த்தீபனுக்கு
இந்த நிகழ்வு திடீரென நடந்ததொன்று.
மூளாய் நிகழ்வுகளையும் இதில் இணைக்க இருக்கின்றேன். தனியாக செய்ய இங்கு தற்போது என்னால் முடியாது. ஏனெனில் ஊரைப்பற்றிய முழு விபரங்கள் மற்றும் நடவடிக்கைகள் சகலதும் சரியாகச் செய்ய வேண்டும். பிழை ஏற்பட முடியாதவாறு செய்யவேண்டும். அது கடினமானது. முழு நேரம் அதற்கு செலவிட வேண்டும்.
இது கடந்தகாலங்களில் என்னால் எழுதப்பட் கடிதங்களையும், கட்டுரைகளையும் தொகுத்து என்மீது ஏற்பட்ட சில தப்பபிப்பிராயங்களை நீக்க எடுத்த ஒரு முயற்சி.
இறையருள் இருந்தால் முயற்சிப்போம்.
எனக்கு நீங்கள் முடிந்த நிகழ்வுகளை அனுப்பினால் பிரசுரிக்கலாம்
உமது ஆதரவுக்கு நன்றி.

அன்புடன்
தங்க. முகுந்தன்