அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 4, 2008

அறிமுகம்: வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறேன் !

ஏகனாகவும் அனேகனாகவும் எங்கும் எதிலும் எல்லாமாகவும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் திருவருளுடனும் குருவருளின் துணையுடனும் "கிருத்தியம்" என்ற வலைத்தளத்தை ஆரம்பிக்கின்றேன்.

மஹாத்மா காந்தி கூறிய
1. ஒழுக்கமில்லாத அறிவாற்றல்(கல்வி)
2. மனிதாபிமானமில்லாத அறிவியல்
3. உழைப்பில்லாத செல்வம்
4. நேர்மையில்லாத வணிகம்
5. கொள்கையில்லாத அரசியல்
6. மனச்சாட்சியில்லாத இன்பம்
7. தியாகமில்லாத வழிபாடு என்ற சமூகக்கேடுகளை அறவே ஒழித்து மக்கள் அனைவரும் நீதியான வாழ்வு வாழவேண்டும் என்பதில் எனக்கும் ஒரு அவா. கிருத்தியம் பஞ்ச கிருத்தியங்களைச் செய்யும் தாண்டவ மூர்த்தியின் அசைவினால் இப்பிரபஞ்சம் நடக்கின்றது. வீட்டுக் கிருத்தியம் என அழைக்கப்படும் கிரியை இல்லத்தைச் சுத்திகரிக்கப் பயன்படுகிறது.

ஆன்மாவைப் பேரானந்தப் பெருவாழ்வுக்கு இட்டுச் செல்ல ஒரு பெரிய பாதையாக நெறியாக வழியாக முறையாக கிருத்தியம் இருக்க வேண்டும் என்பது அடியேனது எண்ணம். உங்களது அபிப்பிராயங்கள் எதுவாகினும் தாராளமாக அடியேனுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பெயரையும் சொல்லி எனது இந்த வலைத் தளத்தை ஏற்படுத்தி எனது நீண்டநாள் கனவை நனவாக்கிய தம்பி நிர்ஷனுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.

சமயம் சம்பந்தமாகவும் அல்லது அரசியல் மற்றும் நாட்டுநடப்புகள் பற்றி அதிகம் எழுதியிருந்தும் அவை முழுமையாகப் பிரசுரிக்கப்படாத அல்லது முற்றாகவே பிரசுரிக்கப்படாத மனவேதனை ஒருபுறம் - என்னைப்பற்றி அல்லது நான்சம்பந்தப்பட்ட சம்பவங்களை திரிவுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக எழுதும்போதும் விமர்சிக்கும்போதும் எழுதும் பதில்களைக் கூடப் பிரசுரிக்கத் திராணியற்ற பத்திரிகைகளுடன் பிரச்சனைப்பட்டிருக்கிறேன். இதற்காக ஒருதடவை வீரகேசரி ஆசிரியர் பீடத்திற்கு நேரில்சென்று கருத்துத்தர்க்கம் செய்தபோது எனக்குக்கிடைத்த மறுமொழி வெளியே போ (get out). மிகவும் வேதனையான விடயம் யாழ்ப்பாண பொது நூலகத் திறப்பு விழாவுக்கு முன்னர் பத்திரிகைகள் நடந்துகொண்ட முறை என்னை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. நேரடியாக யாழ் தினக்குரல் பத்திரிகைக் காரியாலயத்திற்குச் சென்று எனது நண்பனிடம் சற்றுக் கோபமாகவே கேட்டேன்.

அவர் சென்று எனது அறிக்கையை அவர் தொகுத்திருந்த மாதிரியைக் கொண்டுவந்து காட்டினார். வேறொருவருடைய அறிக்கையை போடுவதற்கு என் அறிக்கை பத்திரிகை மேலிடத்தினரால் அகற்றப்பட்டிருந்தது. இவை என்னை மாத்திரமல்ல – உண்மையான செய்திகளை அறிய விரும்பும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நடுநிலை தவறிய பெருமை அனைத்துத் தொடர்பு சாதனங்களுக்கும் உண்டு என்றால் அது உண்மைதான். யாரோ ஒரு சாராரைத் திருப்திப்படுத்த அல்லது துதிபாடவே பத்திரிகையாளர்கள் துணிந்துநின்றார்கள்.

சிலவேளை குறிப்பிட்டவர்களால் நடாத்தப்படும் விருந்து மற்றும் உபசாரங்களுக்காகப் பத்திரிகை நடத்தினார்களோ தெரியாது. இன்று நான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகித்தப்பி இங்கு வந்து என்நாட்டில் எம்மவர்களுடன் வாழமுடியாது ஏங்கிக்கொண்டிருக்கும் அதேவேளை நாட்டைக் குழப்பிய பெருமையுடைய பத்திரிகையாளர்கள் பலர் தமது உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் தஞ்சம் பெற்று சொகுசாக வாழ்வதுடன் இங்கும் தமது பிதற்றல்களை கக்குவதுதான் இன்னும் வேதனை. இதை யாரிடம் சொல்வது. இதற்காக இந்தக் கிருத்தியம் ஏதேனும் செய்ய வேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும்
என்றும் மறவாதவன்.

என்னைப்பற்றி ………
பிறப்பிடம் - இலங்கை – வடமாகாணம் - வலிகாமம் மேற்கு மூளாய் கிராமம் என் அம்மாவின் சொந்தஊர்.
வளர்ந்ததும் படித்ததும் - தந்தையார் அரச சேவையில் இருந்தமையால் ஆரம்பத்தில் ஊரிலும் பின்னர் மாங்குளம், அனுராதபுரம், தெல்லிப்பழை, மயிலிட்டிதெற்கு(கட்டுவன், குரும்பசிட்டி எல்லையில்) (என் தந்தையின் சொந்தஊர்)
படித்த பாடசாலைகள் கல்லூரிகள் - மூளாய் அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, வயாவிளான்(வசாவிளான்) மத்திய மகா வித்தியாலயம் காரைநகர் இந்துக் கல்லூரி(தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம்.


மறக்கமுடியாத சில இளமைப் பராய (12 வயதுக்குட்பட்டகால) நினைவுகள்
ஊரிலுள்ள பிள்ளையார் முருகன் வைரவர் கோவில்கள் பொன்னாலைக் கிருஷ்ணன் கோவில் இங்கு சின்னமேளம் நாடகங்கள் பார்த்தது திருவடிநிலைக் கடற்கரை காரைநகர் கச்சோரினா பீச்(கடற்கரை) கீரிமலைக் கேணி எனது அப்புவுக்கு(அம்மாவின் அப்பா) இரவுநேரங்களில் பல சமயநூல்களை வாசித்து விளக்கம் பெறுவது இந்தப் பழக்கம் இன்றும் புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் போன்றவற்றை வாசிக்கவும் உலக அறிவைப் பெறவும் என்னைத் தூண்டிநிற்கிறது.

அந்தக் காலத்தில் இருந்த் 1ரூபாத்தாள் 2ரூபாத்தாள் அரைச்சதம் ஒருசதம் ஐந்துசதம் பத்துச்சதக் குத்திகள் (பித்தளை நாணயங்கள்) இவற்றை சேர்ப்பது அன்றைய 15சதப் பெறுமதியான தாமரை முத்திரை நயினாதீவுக்கு காரைநகர்ப் பாதையால் (ஊர்காவற்றுறைபோய்) போனது ஒவ்வொரு சித்திரை, ஆவணி, மார்கழி விடுமுறைக்கும் புகையிரதமூலம் கொழும்புக்கும் பண்டாரவளைக்கும் நுவரெலியாவுக்கும் வெலிமடைக்கும் போவது அனுராதபுரத்தில் மல்வத்தோயா ஆற்றில் நீராடப்போய் கபரக்கொய்யாவைக் கண்டால் குளிக்காமல் ஓடிவருவது புராதன இடங்களைப் பார்வைவயிட்டது சனிக் கிழமைகளில் பெரமுன ரீச்சருடன் அந்த இடங்களுக்குச் சென்று சிங்களம் படித்தது மற்றைய உறவினர்களிடமும் நண்பர்களிடமும் செல்வது இன்னும் பல எழுதுக் கொண்டே போகலாம் …..

தரிசித்த மஹான்கள் -
ஹரிதாஸ்கிரி சுவாமிகள்
திருமுருக கிருபானந்தவாரியார்
நல்லை ஆதீன முதல்வர்கள்
பூர்ணானந்தகிரி சுவாமிகள்
முருகேசு சுவாமிகள்(சுவாமிகளுடைய நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் கோவிலில் பல நாட்கள் தங்கியிருந்தேன்)
குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள்(அவரது அளவெட்டி ஆச்சிரமத்தில்; பணியாற்றினேன் கோப்பாய்க் கோட்டத்துடனும் தொடர்பாயிருந்தேன்.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
விஐயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ஸ்ரீரங்கம் அகோபிலமடம் ஸ்ரீ ஜீயர் சுவாமிகள்
சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீர்த்த வித்தியா சரஸ்வதி சுவாமிகள்
திருப்பனந்தாள் ஆதீனமுதல்வர்
திருவாவடுதுறை ஆதீன முதல்வர்
மதுரை ஆதீன முதல்வர்
ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்கள்
ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் ஜீவானந்த மகராஜ், ஆத்மகணானந்த மகராஜ், அஜராத்மானந்த்த மகராஜ்,
கன்னியாகுமரி வௌள்ளிமலை விவேகானந்த ஆச்சிரமத்தின் தலைவர்கள்
ஸ்ரீ மதுரானந்தர் சுவாமிகள்
சைதன்யானந்தா மகராஜ்
கொழும்பு மௌனாச்சிரம துறவி சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி சுவாமிகள்
தவத்திரு. சிவகுருநாதன் அடிகள் போன்றோர்

மானசசீகமான நினைவில் இருப்போர் (வழிகாட்டிய சான்றோர்கள்)
இந்திய தேசபிதா மகாத்மா காந்தி,
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
சற்குரு சிவயோக சுவாமிகள் சுவாமி
விவேகானந்தர்சுவாமி
விபுலானந்தர்
நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
நாவலப்பிட்டி ஆத்மஜோதி முத்தையா அவர்கள்
அன்னை திரேசா

ஆசான்கள் (தமிழ் சமய அறிவை ஊட்டியவர்கள்)
அரிவரிவகுப்பில் சுழிபுரம் குருபூசை மடாலயத்தில் எனக்கு அடிப்படை போதித்த இரண்டு ஆசிரியைகள்(பெயர் தெரியவில்லை) யோசப் மாஸ்ரர் சின்னத்தம்பிசேர்; இராசையா மாஸ்ரர், குஞ்சுரீச்சர், நாகபூஷணிரீச்சர், சுகிர்தமலர்ரீச்சர்(பரமசாமிரீச்சர்), சரஸ்வதிரீச்சர் இருவர், நல்லதம்பிசேர், கோபால்மாஸ்ரர், விநாயகரட்ணம்சேர், செல்வராசாமாஸ்ரர், சங்கீதம் கற்பித்த மலர்தேவிரீச்சர், நாகம்மாரீச்சர், திலகேஸ்வரன்மாஸ்ரர், பண்ணிசை ஆசிரியர் திருஞானசம்பந்தர், ஏனைய எனது நான் கல்விகற்ற 5 பிரபல்யமான பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் அனைவரும்.
நல்வழி காட்டிய பெருமைக்குரியவர்கள்.

எனது பெற்றோர் அவர்களுடன் கூடப்பிறந்தோர் உறவினர்கள் எமது கோவில் பாலசுப்பிர மணியக் குருக்கள் ஐயாஅவர்கள் தெல்லிப்பழை பாலர் ஞானோதயசபைத்தலைவரும் காசிப்பிள்ளையார்கோவில் பிரதமகுருவுமாகிய சிவஸ்ரீ கணேசலிங்கக்குருக்கள் ஐயா ம.சி.சிதம்பரப்பிள்ளை துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சிவநெறிப் புரவலர் மில்க்வைற் தொழிலதிபர் க.ந்தையா கனகராசா அவர்கள் அவருடைய துணைவியார் அளவெட்டி ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் ஆச்சிரமப் பொறுப்பாளர் சிவத்திரு. சோ. சண்முகசுந்தரம் அவர்கள் கோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்டத்தின் தலைவர் ரமேஸ்அண்ணன் (இன்று துறவியாகி அமெரிக்காவில் தொண்டுநாதன் என்ற பெயருடன் ஈழத்துக் குருபரம்பரையை வாழையடி வாழையாக கொண்டுசெல்பவர்) அவருடைய பெற்றோர்கள் (கோட்டத்தை இன்றும் வழிநடத்திக்கொண்டிருப்பவர்கள்) தெல்லிப்பழை செல்லப்பாஐயா, பண்டிதர் க.சி.குலரத்தினம் ஐயா, திருகோணமலை காந்தி மாஸ்ரர், சிவபாலன்அண்ணன் நல்லூர் தேரடி 63 நாயன்மார் குருபூசை மடத்தில் என்னைத் தொண்டில் ஈடுபடுத்திய நவரட்ணம்மாஸ்ரர் இன்னும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட தரிசித்த மகான்கள் வரிசையில் சிலரும் மற்றும் பலர் (நினைவிலிருப்பவர்கள் இவர்கள்) காரணம் கீழே குறிப்பிலே சொல்கிறேன்.

தந்தை செல்வா எனது பெரியப்பா அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் யோகேசுவரன் தங்கத்துரை சேனாதிராசா ஆனந்தசங்கரி சம்பந்தன் நீலன் திருச்செல்வம் ஜோசப் பரராசசிங்கம் அவரது துணைவியார் சுகுணம் யோசப் சாம் தம்பிமுத்து அவரது துணைவியார் கலா தம்பிமுத்து சரோஜினி யோகேசுவரன் சிவபாலன் மதிமுகராசா.

என் சமயப்பணிகளுக்கு உதவியளித்து என்னை இலங்கையில் அனைத்து மக்களுடனும் தொடர்பு படச் செய்தவர்கள்
குறிப்பாக ஆசான்கள் (தமிழ் சமய அறிவை ஊட்டியவர்கள்) நல்வழி காட்டிய பெருமைக்குரியவர்கள் என்று நான் முன்குறிப்பிட்டவர்களுடன் இறக்குவானை முத்துமாரியம்பாள் ஆலய பரிபாலன சபைத்தலைவரும் வைரவன் டிரான்ஸ்போர்ட் உரிமையாளருமான பெருமாள் ஐயா மற்றும் தொண்டர்களும் களுத்தறை இந்து இளைஞர் மன்றத்தினர் பூனாகலை இந்து கலாசாரப் பேரவையினர், தலவாக்கொல்லை இந்து சமய கலை கலாச்சாரப் பேரவையினர், கேகாலை குருப்பிரவேச ஸ்தாபனத்தினர் பொகவந்தலாவ இந்து மா மன்றத்தினர் கொழும்பு விவேகானந்த இந்து இளைஞர் சங்கத்தினர் காலி சிவன்கோவில் நிர்வாகத்தினர், காலி கதிர்வேலாயுத சுவாமிகோவில் நிர்வாகத்தினர் மாத்தறை அருந்ததி நற்பணிமன்றத்தினர், முந்தல் இந்துமகாசபை நிர்வாகத்தின் காணாமற்போன வீர வேலாயுதர், தெரணியாகலை, வத்துகாமம், கண்டி - பள்ளேகலை, இரத்தினபுரி, பலாங்கொடை, நாவலப்பிட்டி, சாமிமலை, நுவரெலியா, பண்டாரவளை, கொஸ்லாந்தை, நீர்கொழும்பு திருகோணமலை இந்து இளைஞர் சங்கத்தினர் ஆலய நிர்வாகத்தினர் இன்னும் பலர் தங்கள் பகுதிக்கு என்னை அழைப்பித்து சமயப் பேசச்சுக்கள் பண்ணிசைகள் நிகழ்த்தியதுடன் எனக்கு தங்குமிடவசதி செய்து போக்குவரத்துக்கும் ஏற்பட்ட செலவைத் தந்துதவினார்கள். கஹவத்தை ஹவுப்பைத் தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்தினர் என்னை 1992ல்அழைப்பித்த பின் அந்த ஊரில் நானும் ஒருவனானேன். எனது ஆருயிர் நண்பர் சிவா. பாஸ்கரராவ் அவர்களைப்பற்றி கட்டாயம் குறிப்பிடவேண்டிய கடமை எனக்குண்டு. சமயப் பணிகளுக்காக இந்து சமய கலாச்சார அமைச்சுடனும், திணைக்களத்துடனும் இன்றும் நாம் பிரச்சனைபண்ணிவருவதையும் குறிப்பிடுவது பொருத்தமானது. காலியில் பகவான் சத்திய சாhயிபாபாவினுடைய சமித்தி மண்டலத்தினர்(பெரும்பாலான சிங்கள பௌத்த சமயத்தவர்கள்) வருடாவருடம் காலி நகரசபை மண்டபத்தில் நடத்தும் பகவானின் ஜெயந்தி தினத்தன்று என்னைத் தமிழில் உரையாற்ற அழைப்பதும் இதற்கு திருவாளர்கள் சேதுராமனும் ராஜரட்ணம் அவர்களும் பெரிதும் உதவிபுரிந்தனர். நான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மறுதினம் என்னுடன் தொடர்பை
ஏற்படுத்தி பகவான் துணைநிற்பார் என்று கூறியவர்கள் சமித்தியின் தலைவர் திரு. ராஜரட்ணமும் மறக்கமுடியாதவர்கள்.


என்னாலும் என் நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள்
மூளாய் இந்து சமய மன்றம் வாகீசர் சிவத்தமிழ்ப்பணி மன்றம்இந்து சமய ஒற்றுமைப் பேரவைகாந்தி அறப்பணி நிலையம்
என் சமயப்பணிகளுக்கு உதவியளித்து என்னை இலங்கையில் இந்துமக்களுடன் தொடர்புபடச் செய்தவர்கள் பலர்.
குறிப்பு – நினைவிலிருப்பவர்களை மட்டும்தான் இப்போது குறிப்பிட்டுக்கொண்டு வருகின்றேன். காரணம் - என்னுடைய நினைவுகள் தொலைந்துவிட்டன. உடல்தான் இங்கிருக்கிறது. என் நினைவுகளும் எண்ணங்களும் என்நாட்டில்தான். ஒவ்வொரு நாளும் இணையத்தளங்களில் வருகின்ற செய்திகள் ஏன் நம்நாட்டில் இப்படி நடக்கிறது என்ற பெருங்கவலையை தோற்றுவிக்கும்.

15 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள் அண்ணா. தங்கள் பணி மேலும் தொரட்டும்.
உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

ஈழத்திலிருந்து இன்னுமொரு பதிவரா? வாருங்கள்.
சமயத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்களை காண்பதும் அரிதாகத்தான் இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

மாயா, வந்தியத்தேவன்,பகீ, இறக்குவானை நிர்ஷன், ரிஷான், கானாபிரபா, மயூரன் ஆகியோர் இலங்கை பதிவர்களை ஒன்றிணைக்க சிரமப்படுகிறார்கள்.

அவர்களுக்கும் நன்றிகள்.
ஈழத்துப் பெண் என்ற வகையில் நானும் சந்தோஷப்படுகிறேன்.

தங்க முகுந்தன் said...

அன்புக்குரிய சகோதரி ஈழத்துப்பெண் பவா அவர்களுக்கு,

ஈழத்தவனாயிருந்தாலும் இன்றங்கில்லை. காலத்தின் கோலம் கடல்கடந்திருக்கிறேன். குறிப்பிட்ட இலங்கை – பதிவர்களில் இறக்குவானை நிர்ஷனை மாத்திரம் தெரிந்தவன். ஏனையவர்களின் பெயரைத் தந்துதவியமைக்கு நன்றி. அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முயல்கிறேன் முடிந்தால் தொடர்பை நீங்களே ஏற்படுத்தினாலும் நல்லது. பலர் பெயரூரற்ற நிலையில் பதுங்கியிருக்கிறார்கள். துணிந்து கருத்துரைத்தமைக்குத் தலைவணங்குகிறேன்.

தொடர்ந்து எழுத முன்னர் எழுதியவற்றை முதலில் வழங்க முயற்சிக்கின்றேன்.

என்றும் நன்றியுடன்
அன்புச்சோதரன்
தங்க. முகுந்தன்.

Anonymous said...

வாழ்த்துக்கள்!!!!
சமயம் சம்பந்தமான வலைத்தளங்கள் குறைவுதான்.
கேள்வி பதிலும் போட்டால் சூடேறும்.

-சென்னை மாரன்.

தங்க முகுந்தன் said...

திரு. சென்னை மாரன் அவர்களுக்கு,

வணக்கம். வருகை வாழ்த்துடன் அபிப்பிராயமும் தெரிவித்திருக்கிறீர்கள். இதயபூர்வமான நன்றிகள்.
நமது நாட்டில்(இலங்கையில்) சமயம் கட்டாயபாடமாக இருக்கிறது.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அமைச்சு இருக்கிறது.
வாரந்தோறும் ஞாயிறு அறநெறிப் பாடசாலையாக சில பாடத்திட்டங்களுடன் முறையாக ஆலயங்களிலும் சமய நிறுவனங்களிலும் நடைபெற்று வருகிறது.
சிறுவயதில் நானும் பாடம் படித்து பின்னர் போதித்ததில் ஓரளவு அனுபவம் உண்டு. வினாவிடையுடன் மாதமொருதடவை குறுக்கெழுத்துப் போட்டியொன்றினையும் எதிர்வரும் நவராத்திரி - வித்தியாரம்பம் முதல் ஆரம்பமாக ஏற்பாடு செய்து வருகின்றேன்.
எல்லாம் திருவருள் துணையுடன் இனிதே நடைபெறவேண்டும்.
அத்துடன் உங்களுடைய ஊக்கங்களும் எமக்குத் தேவை.
தொடர்பாக இருங்கள்.

என்றும் நன்றி மறவாத
தங்க. முகுந்தன்.

தங்க முகுந்தன் said...

அன்புத்தம்பி நிர்ஷனுக்கு

முதற்கண் நன்றிகள்.

என்னை ஆட்டுவிப்பவனே வாழ்த்துக்கூறுவது முறையாகுமா?

எழுதிய என்னை மீண்டும் எழுத வைத்தது நீர். உமக்கு ஞாபகமிருக்கிறதோ தெரியாது. துர்க்காதுரந்தரி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அம்பிகையின் பாதாரவிந்தங்களை இறுகப்பற்றிக்கொண்டார் என்ற செய்தி கேட்டதும் உம்முடன் தொடர்புகொண்டு நான் கேட்டது உயர்நீதியரசர் சிவத்திரு சீ.வி. விக்னேஸ்வரன் அவர்கள் ஏதாவது எழுதினாரா? என்று. அதன்பின் நான் என் அனுபவங்களை எழுதி உமக்கு அனுப்ப நீர் அதற்கு முன்னுரையிட்டு உமது மேடையில் பிரசுரித்தீர். தற்போது இந்தக் கிருத்தியத்தின் பணியிலும் முழுமூச்சாக இயங்கும் உமது அன்பான அர்ப்பணிப்புக்கு என்ன கைம்மாறு செய்வேனோ – நானறியேன்.

இன்னுமொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இதைக் குறிப்பிடுவதன்மூலம் என்னுடைய ஆதங்கமும் எதிர்பார்ப்பும் வெளிப்படும். அத்துடன் பதிவைப் பார்க்கும் அனைவரும் இவ்விடயங்களில் ஏதேனுமொரு முயற்சிக்கு தமது பங்களிப்பைச் செய்யமுடியும் என நான் எண்ணுகின்றேன். 1997ல் உமது தாத்தாவின் இறுதிக்கிரியைகளை உங்கள் முறைப்படி நடாத்திவிட்டு (நான் நீங்கள் என்று பிரித்துக்காட்ட விரும்பவில்லை - ஆனால் பலருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக கூறுகிறேன் - யாழ்ப்பாணத்தவரைப் போல சைவக்கிரியை செய்யும் முறை உங்கள் மலையகப் பகுதிகளில் இல்லை. மலையகத்தில் மாத்திரமல்ல வவுனியாவிலும் இல்லை. ஏனெனில் நான் எனது தந்தையின் தமையனாருக்கு இதே கிரியை வவுனியாவில் செய்தேன். ஆனால் அது அவரது பூதவுடலுக்கும் சேர்த்து) அந்தியேட்டிக்;கு என்னை வரமுடியுமா என வினவி நானும் அதற்கு உடன்பட்டு வந்து என்னால் முடிந்தளவு உமது அண்ணன் பாஸ்கரராவுடன் சேர்ந்து அந்தக் கிருத்தியத்தை நடத்தியிருந்தேன். இதற்கு முன் உங்கள் அண்ணனின் ஆலயத்தில் (பரிபாலனசபைத் தலைவராக இருந்தமையால்) நவராத்திரி சிறப்பாக நடத்திய நான் அவரது தந்தையின் அழைப்பின்பேரிலேயே உங்கள் மாதம்பை வீட்டுக்கு வந்தேன். அதை முழுவதும் விரிவாகச் சொல்ல வேண்டியதன் அவசியம் விக்கிபேடியா இணையத்தளத்தில் சைவசமயம் - அதன்கீழ் சைவசமயத்தின் குறைபாடுகள் என்ற தலைப்பின்கீழ் சைவம் சாதி முறையை ஏற்று வலியுறுத்துகின்றது. விளங்காமொழியில் வழிபாடு என்று இரு உபதலைப்புக்களில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. பேராசிரியர் வி. நித்தியானந்தம் ஈழத்தமிழர் மத்தியில் இந்துமதம் அதன் சமூகப்பொருளாதாரப் பரிமாணம் பற்றிய சில சிந்தனைகள் என்ற ஆய்வுக் கட்டுரையில் விளங்கா மொழியில் வழிபாடு, சைவக்குருமார்கள் மக்களிடம் அன்னியப்பட்டு நிற்றல், சமூக சேவையை முன்நிறுத்தாதல், போட்டி மனப்பான்மையை ஏதுவாக்கி ஒற்றுமையை சீர்குலைத்தல், சமூகவளங்களை வீணடித்தல் சைவம் முதலாளிகளின் சமயமாகப் பரிணாமித்து பொதுமக்களிடம் இருந்து விலகிச் செல்லல் என்று குறிப்பிட்டிருப்பதாக இருக்கிறது.

இதற்கு பதில் விரிவாக அளிக்க வேண்டும். ஆனால் சுருக்கமாக இங்கு குறிப்பிட்டால் அது மற்றவர்களுக்கு ஆதாரமாக அமையலாம்.

சைவசமயத்தின் முழுமுதற்கடவுளான சிவன் - அன்பே வடிவானவர். தாயினும் நல்ல தலைவர். திருவிளையாடற் புராணத்தில் முதல் கதையே பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்தது. இது பெரும்பாலான மனிதர்களாலே வெறுக்கப்படும் ஒரு மிருகம். அதற்கு பரிவுகாட்டியதன் மூலம் எமக்கு எல்லா உயிர்களிடத்திலும் ஈசன் நிறைந்திருக்கிறான் என்று உணர்த்தியிருக்கிறார். அடுத்தது பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்தில் 63 தனியடியார்களையும் 9 தொகையடியார்களையும் பற்றிக் குறிப்பிட்ட கதைகளில் வரும் அடியார்கள் அனைவரும் சாதிமுறையால் வேறுபட்டவர்கள். அத்தனை பேருக்கும் இறைவன் காட்சி கொடுத்திருக்கிறான். பேரருள்வழங்கி முத்தியின்பம் அளித்துள்ளான். தமிழ் மூதாட்டி ஒளவை சாதி இரண்டொழிய வேறில்லை என தன் நல்வழியிலும் திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமந்திரத்திலும் மணிவாசகர் சாதிகுலம் பிறப்பென்னும் என்று திருவாசகத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

என்னுடைய ஆதங்கம் படித்தவர்கள், பெரியவர்கள் இதைப்பற்றிச்சதாகாலமும் சொல்லிக்கொண்டும் எழுதிக்கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏன் எதையும் செய்ய முன்மாதிரியாக வருகிறார்கள் இல்லை என்பது. நான் இலங்கையில் இருக்கும் அனைவரையும் அப்படிக் கூறினால் அது ஈசனுக்கே அடுக்காது. ஒரு சிலருக்குப் பொருந்தும் என்பதை விட பொருந்தாது என்பது பொருத்தமாக அமையும். உமது பதிவொன்றில் இதுபற்றிப் பார்த்திருந்தேன். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் இதுபற்றி ஒரு நீதியான கட்டுரையை எழுதவிருக்கின்றேன். இது இரண்டுக்கும் பொருந்தும் என நினைக்கின்றேன்.

நிறைய எதிர்பார்த்திருக்கும் உமக்காக முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன். எல்லாம் அவன் செயல்.

என்றும் மறவாத நன்றியுள்ள
அன்புஅண்ணன்
தங்க. முகுந்தன்.

கோவை விஜய் said...

அன்பே கடவுள்
அறிவவே தெயவம்
இனியவையே இறைவன்
ஈகையே ஆண்டவன்
உண்மையே பரம்பொருள்
ஊர்நலமே உமையொருபாகன்
எங்கெங்கும் சக்திதான்
ஒற்றுமையே தேவன்


மக்களை அன்பாளர்களாய் ஆக்கும் நன்முற்சி வெற்றிபெற வாழ்த்துகிறென்.

இயற்கையை காப்போம்
அன்பாய் இருப்போம்
வழமாய் வாழ்வோம்
வாழ்வாங்கு.

வாழ்த்துக்கள்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

தங்க முகுந்தன் said...

இயற்கை அன்னையை பெருமைப்படுத்தும்
தவப்புதல்வர் தி.விஜய் அவர்களே!

இயற்கை ரசனையை அனுபவித்து
கற்கும் கலையின் மூலம் வெளிப்படுத்தும்
தங்களின் பதிவு ஏனோ தானோ என்றின்றி
பல தகவல்களைக் கொண்டிருக்கிறது.

கிராமத்தவனுக்கு பட்டப்படிப்புத் தேவையில்லை
வாழும் படிப்பே போதும் என்பதை எளிய தமிழில்
உமது அறிமுகம் கூறுகிறது.

அன்பாளர்களாய் ஆக்கும் நன்முயற்சி என்ற வரி
தங்கள் மனதைப் புடம்போட்டுக் காட்டிநிற்கிறது.

அனைவரும் செய்ய வேண்டிய கடமை -
பிறப்பின் கடனை அடைக்க உபாயம் சொல்லிய பாங்கு
என்னை நெகிழ வைக்கிறது.

தங்கள் தரமான திறத்துக்கு என்மனம் நிறைந்த
நன்றியுடனான வாழ்த்துக்கள்.

வாழ்க உம்பணி! வளர்க வையகம்!!

முகம் காணாவிட்டாலும்
என்றும் மனதார வாழ்த்தும்
தங்க. முகுந்தன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முகுந்தன்,

வணக்கம்!
தங்கள் தளத்தை இப்போது தான் கண்டேன்! செய்திக் களஞ்சியமாய் உள்ளது தங்களைப் போலவே! இருங்க, முழுக்க வாசித்து மீண்டும் வருகிறேன்!

எழுத்தும் பேச்சும் மட்டுமல்லாது, நடைமுறை வாழ்விலும் தமிழ் மக்களுக்குத் தமிழ்ச் சமயத்தைக் கொண்டு சேர்க்கும் தங்கள் பணி மகத்தானது!

பத்திரிகைகளுடனான உங்கள் கருத்து மோதல்கள் சுவாரஸ்யமானவை! :)
தொடர்ந்து பதியுங்கள்!
நல்லன் சொல்லிட நடுக்கம் இல்லை!
அல்லன அகற்றிட தயக்கம் இல்லை!

அடியேனின் வாழ்த்துக்கள்! :)
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
அவை தரு வித்தருள் பெருமாளே!

தங்க முகுந்தன் said...

வணக்கம் மும்மூர்த்திகளும் அடக்கமான பெயரையுடையவரே!
(கண்ணபிரான் - இரவி - சங்கர்)

ஒவ்வொரு சொல்லுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

என் கடன் பணி செய்து கிடப்பதே

நாமார்க்கும் குடியல்யோம் நமனை அஞ்சோம் - நாவுக்கரசர் வாக்கிற்கடைய எம் பணி தொடரும்

என்றும் மறவாதவன்

சிவத்தமிழோன் said...

மதிப்புக்குரிய தங்க முகுந்தன் அவர்களுக்கு,

அடியேனின் தவறினால் தங்களின் அருமையான தளத்தை காணத்தவறி, பயன்பெறத் தவறிவிட்டேன். மன்னிக்க. சிவனருள் என்னை இங்கு அழைத்துவந்து எனக்கு அருள் பாலித்தது என்றே நவில்வேன். தாங்கள் அழகு செழித்த மூளாய்யை பிறப்பிடமாக கொண்டவர் என்று அறிந்ததும் ஆனந்தம் பெருகியது. அடியேன் தொல்புரம். பத்து வயதில் அழகான என் ஊரைப் பிரியும் கொடுமை என்னை ஆட்கொண்டது. மூளாய் வரதின்புலோ சித்திவிநாயகர் ஆலயமும்,அதனோடு அருகில் அருள் ஆட்சிபுரிகின்ற முருகன் ஆலயமும் எனக்கு சிறுபிராயத்தில் சைவ வாழ்க்கையை போதித்த ஆலயங்கள். பொன்னாலை வரதராசாப் பெருமாள் ஆலயம் எங்கள் குலதெய்வமாய் என்னை ஆட்கொண்டு, சிவனருளை பெறும்பேறை எனக்கு ஊட்டியது.

சைவம், வைணவம் என்று குழம்புவோர் மத்தியில் சிவபூமியிலே சைவநெறியில் காத்தற்கடவுளாக, சிவனின் சக்திகளில் ஒன்றாக, கரிகர மூர்த்தமாக விளங்கும் நாராயணன் என்னை பொன்னாலயத்தில் திருமகள்,பூமகள் சமேதராய் வரதராசராய் வந்து ஆட்கொண்டு, சிவனருளை போதித்து அறவழிப்படுத்திய அருமை அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்று நம்புகிறேன்.

தங்களுடைய சிவப்பணி, தமிழ்ப் பணி, சமூகப் பணியை உணரும் பாக்கியத்தைப் பெற்றேன். தங்கள் சிவசேவை தொடர எல்லாம் வல்ல எம்பெருமான் தங்களோடு என்றும் இருக்க வேண்டுகின்றேன். என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று வாழும் வரத்தை சிவனருளிடம் வேண்டி நிற்கும் எளியன் யான். சிவனருள் கூடும்வேளை தங்க்ளோடு கரம் கோற்க விரும்புகின்றேன். எல்லாம் திருவருள் சம்மதமே.

வாழ்க உங்கள் பணி.
திருச்சிற்றம்பலம்
நன்றி
சிவத்தமிழோன்

தங்க முகுந்தன் said...

அருமைக்கும் பெருமைக்குமுரிய எமதூர்களின் சிறப்பை நல்ல கருத்தாழத்துடன் பகிர்ந்து கொண்ட சிவத்தமிழோன் அவர்களே!
வணக்கம். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் எனது நன்றிகள். தங்களைப் பற்றி இரத்மலானை சிவத்திரு. சங்கர் ஐயா எனக்குத் தொலைபேசிமூலம் ஒரு சில தகவல்களை மாத்திரம் கூறியிருந்தார். தாங்கள் தொல்புரப் பதியைச் சேர்ந்தவராயிருப்பதால் என்னை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அத்துடன் இரத்மலானை இந்துக் கல்லூரியில் நீங்கள் தொடர்புடையவராயிருந்தாலும் என்னை அறிந்திருக்க முடியும்.
எமது நாட்டைப் பொறுத்தவரையிலும் எமதூர்களைப் பொறுத்தவரையிலும் நாம் எமது சமயத்தினுட் பிரிவுகளிடையே வேறுபாட்டை பெரிதும் வளர்த்ததில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கிணங்கவே எமது வாழ்வு சமயத்துடன் ஒன்றுபட்டிருந்தது. இன்றும் அப்படியே ஒன்றுபட்டிருக்கிறது. மேற்கில் பொன்னாலையில் வரதராஜப் பெருமாள் ஆலயமும் வடக்கில் கீரிமலை கிருஷ்ணராலயமும்(இளம்பராயத்தினர் பலருக்கு இது இருக்கின்ற இடமே தெரியாதிருக்கலாம் - கீரிமலைச் சிவன் கோவிலுக்கும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கும் இடையில் இவ்வாலயம் அமைந்திருக்கிறது) கிழக்கில் வல்லிபுர ஆழ்வார் கோவிலும் தெற்கில் வண்ணார்பண்ணை வெங்கடேசப் பெருமாள் கோவிலும் அமைந்திருப்பது யாழ்ப்பாணத்திற்குப் பெருமைதருபவையே!
எனது பெயர் கூட பொன்னாலைக் கிருஷ்ணரை நினைத்து வைத்ததாக எனது தாயார் கூறுவார். தங்களுடைய தொல்புரப் பதியில் கோயில்கொண்டிருக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கும், டச்றோட்டில் அமைந்திருக்கும் ஆதிவைரவப் பெருமான் கோவிலுக்கும் அடிக்கடி வருவதுண்டு. குறிப்பாக ஆதிவைரவப் பெருமான் கோவிலில் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்ற இரு சமயங்களில் தொடர் சொற்பொழிவும் இசைக் கச்சேரிகள் நடத்தியதும் - வழக்கம்பரை அம்பாள் ஆலய பிரதம குருக்கள் விழாக்களைச் சிறப்பாக நடத்தியதும் தொல்புரத்தைப் பற்றி நினைக்கும்போது மறவாத பேரின்பத்தினைத்தரும்.
உமது பதிவைக் கண்டதுமே இன்றே சிவனருள் கூடிநிற்கிறது என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. எமது சமய தமிழ் சமூகப் பணிகளில் தாராளமாக உடனேயே தொடர்பு கொண்டு உமது பங்களிப்பைச் செய்ய இருகரம் கூப்பி அன்புடன் வேண்டுகிறோம். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும் உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று காத்திருக்கும் எனக்குத் தங்களின் பதிவுக் கருத்து மேலும் ஒரு புதிய உற்சாகத்தைத் தருகிறது. தொடர்பைப் பெற முன்பே தங்களின் அனுமதியின்றி உங்கள் பெயரை எனது நண்பர் கூட்டம் என்ற பகுதியில் சேர்த்தமைக்கு முதலில் மன்னிக்கவும். அத்துடன் கடந்த 9.9.2008 எனது பதிவில் யாழ்ப்பாண மாநகரத்தின் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி முதல்வர்களின் ஞாபகார்த்தமாக…. (களத்துமேட்டின் ஈழவனுக்காக இதைச் சமர்ப்பிக்கின்றேன்) என்ற கட்டுரையிலும் உமதும் வேறு சில பதிவாளர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருப்பதையும் இந்த இடத்தில் நான் தெரிவிக்கவேண்டியவனாகின்றேன்.
மீண்டும் தங்களை என்னுடன் தொடர்புபடவைத்த எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த என்றும் உள்ள எல்லாம் அறிபவராகிய செம்மைப் பொருளாம் அன்பேயுருவான சிவத்துக்கு மனதார நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து உமக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து இதனை தற்போதைக்கு முடிக்கின்றேன்.
என்றும் மறவாதவன்.

M.Rishan Shareef said...

அன்பின் முகுந்தன்,

இலங்கையிலிருந்து இன்னுமொரு பதிவராக உங்களை இங்கு காண்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே :)

தங்க முகுந்தன் said...

அன்புக்குரிய ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு,
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.
ஹேமா உங்களைப் பற்றியும் ஏனைய சில வலைப் பதிவாளர்களைப் பற்றியும் எனக்கு முதன் முதல் கருத்துத் தெரிவித்தபோது குறிப்பிட்டதைத் தொடர்ந்து ஓரிரு தடவை உங்கள் பதிவைப் பார்த்தேன்.
தமிழ் வளர்க்கும் அறிஞர் பெருமக்களில் முஸ்லிம்களும் பெரும் பங்குவகிக்கின்றார்கள் என்பதில் நான் அதிகம் பெருமை கொள்வது வழக்கம். காரணம் பல நண்பர்கள் இலங்கையின் பலபகுதிகளிலும் எனக்கு இருக்கிறார்கள். அதில் முகம் காணாத நண்பர்கள் வரிசையில் நீங்கள் 2ஆவது இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவராகின்றீர். முதல் நபர் காத்தான்குடி அலி. இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாநகரத்தின் பெண் முதல்வர் திருமதி. சரோஜினி யோகேஸ்வரன் அவர்கள் படுகொலைசெய்யப்பட்டதற்கு ஒரு அனுதாபத்தைத் தெரிவித்து கடிதமூலமாக எமது தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டார். அதிலிருந்து ஆரம்பித்த அவருடைய நட்பு பின் அவரை நேரடியாக மூன்று நான்கு தடவைகள் சந்திக்கும் வாய்ப்பைத் தந்ததுடன் அத்தொடர்பு இன்றுவரை சுமார் 10 வருடங்களாக சுவிசுக்கும் தொடர்ந்தபடியுள்ளது. தங்களின் கருத்துக் கிடைத்ததும் தங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ள தங்களுக்கு மின்னஞ்சலில் தகவல் தெரிவித்ததும் தாங்கள் தொடர்பு இலக்கத்தைத் தெரிவித்த பின்னர் தங்களுடன் மனம் விட்டு ஒரு உரிமையுடன் பேசிய பின் இக்கருத்தைப் பதிவிடுகிறேன். உம்மைப் போன்ற மனிதநேயமிக்கவர்களுடைய தொடர்புகள் தான் எம்மை விரக்தியைப் போக்கி இவ்வுலக வாழ்வில் சிறிது காலத்திற்கு வாழவேண்டும் என்ற மன தைரியத்தைத் தருகிறது. தொடர்பு கொள்ள வைத்த ஆண்டவனுக்கு அவர் அல்லாவாக உமக்கிருக்கலாம் எனக்குச் சிவனாக எப்படியோ! ஏதோ ஒரு ரூபத்தில் ஏதோ ஒரு வகையில் எம்மை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
நன்றி. தொடர்பாக இருங்கள்.
என்றும் அன்புள்ளவன்
தங்க. முகுந்தன்.

சிவாஜி said...

அன்பு நண்பருக்கு வணக்கம்,
CUTE PICTURES -ல் தங்களின் பின்னூட்டம் என்னை மகிழ்வித்தது. நன்றி!
தங்களின் சமயப் பணி உயர்வானது. என் வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
என்னுடைய வலைப்பூவில் TRUTH RELATIVISM-ல் தங்களின் இணைப்பு கொடுத்திருக்கிறேன்!