அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 7, 2008

"நன்றே நினைமின் நமன் இல்லை..."

“தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை”- யோகர் சுவாமி நற்சிந்தனை

எப்பவோ முடிந்த காரியம்.நாமறியோம்.முழுதும் உண்மை.ஒரு பொல்லாப்பும் இல்லை.

“அன்பாலும் அமைதியாலும் ஒருவனை உன்பால் ஈர்க்க முடியும். ஆனால் ஆணவத்தால் ஈர்க்கவோ அன்றி அவனைப் பார்க்கவோ முடியாது” என்பது ஆன்றோர் வாக்கு.
என்னடா சிறிய ஒரு துண்டு மாத்திரம் அனுப்பினான், இப்ப என்னவென்றால் பெரியதொரு பாரதம் எழுதுகிறான் என எண்ணும் உமக்கு நான் கூறும் வாக்கியம் கீழ்க்கண்ட குறளாகத் தருகின்றேன். பொருளை அறியவும்.
“நவில்தொறும் நூல் நயம்போலும்
பயில் தொறும் பண்புடையார் தொடர்பு”. ( குறள் 783)

“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில்
கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை”. ( குறள் 789)

‘சுயநலமற்ற அன்பே எனது உயிர்’.நான் ஒரு இந்து. அதிலும் அமெரிக்க வைச சித்தாந்த திருச்சபையின் அங்கத்தவன். அதனால் நான் சைவ சமயக் கொள்கைகளை மாத்திரம் கடைப்பிடிப்பவன் எனக் கொள்ளவேண்டாம். திருக்குறள் - திருமந்திரம் என்னும் நு}ல்கள் கூறும் பொது வையகம் - அதனை ஏற்படுத்தவும், அந்த முறையில் வழிநடக்கவும் பெரிதும் விரும்புபவன். பிற சமயக் கொள்கைகளை நான் பெரிதும் விரும்புகிறேன். அத்தோடு அனைத்து உயிர்களிடத்திலும் நான் அன்பு கொள்கின்றேன்.

விலங்கினங்களைப் போலவே மனிதனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றான். உணவு உண்பது,உலாவித் திரிவது, சண்டை செய்வது, இளைப்பாறுவது, இனத்தை விருத்தி செய்வது. அனைத்தும் அவற்றின் வழியே.
சிந்தனை செய்வது ஒன்றே மனிதனுக்கு மேலாகிய அறிவும், அவனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடையும் ஆகும். இச்சுயசிந்தனையை விருத்தி செய்யவே சமயம் என்ற சாதனம் தேவை.
எளிய வாழ்வு , உயர்ந்த உள்ளம், பரந்த உள்ளம், ஆழ்ந்த அன்பு இந்த நான்குமே ஒருவனுக்கு இம்மண்ணுலகத்திலேயே விண்ணுலக வாழ்வை அளிக்கவல்லன.

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை ..........” என்கிறது மந்திரம். இக்கொள்கையை ஒவ்வொரு மனிதனும் ஏற்றுக்கொண்டால், நாமனைவரும் பேரானந்தப் பெருவாழ்வு வாழலாம், என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஆனால் இதுவரை பலருக்கு இதுபற்றி எடுத்துக்கூறியும், ஒருவராவது சாதகமான முடிவு தரவில்லை. அதனால் நான் சலிக்கவில்லை. எனது உயிர் எனது உடலை விட்டுப்பிரிய முன்னர் இக்கொள்கைகளை ஏற்கக்கூடிய ஒரு மனிதனைக் காண்பேன் - கண்டுகொள்வேன் என்பது எனது திடமான சங்கற்பம்.

அந்த அளவில் நான் எனது முயற்சிகளைத் துரிதப்படுத்திக்கொண்டு வருகிறேன். இதற்காக நான் சுமார் 50க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதி பலவகைப்பட்டவர்களுக்கும் அனுப்பியுள்ளேன். கடந்த இருபது நாட்களாக நான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எந்த பதிலும் வராதமை மிக வேதனையே. அதற்காக யான் என்ன செய்வது? ஏதோ தொடர்ந்தும் எழுதுகிறேன். எழுதிக்கொண்டேயிருப்பேன்.

“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்பது முதுமொழி. எனினும் இன்று வரை எனக்கு இது புதுமொழியாக - பொன்மொழியாக இருந்து வருகிறது.

(1985 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்திலிருந்து...)

2 comments:

கோவி.கண்ணன் said...

//“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை ..........” என்கிறது மந்திரம். //

தங்க முகுந்தன்,

மிக்க நன்று. தாங்கள் ஆன்மீகம் எழுதுபவர் போல் தெரிகிறது. வாழ்க வளர்க, பணி தொடர்க !

தங்க முகுந்தன் said...

திரு. கோவி. கண்ணன் அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
ஏதோ ஆன்மீக தாகத்தால் கிறுக்கியதையும் குறித்துவைத்தவற்றையும் கொட்டுகின்றேன். ஏனையோருக்குப் பிரயோசனப்பட்டால் அது என் பாக்கியம்.
நீண்டநாள் கனவொன்று நனவாகிறது.

என்றும் நன்றியுள்ள
தங்க. முகுந்தன்.