அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, August 7, 2008

சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனை பாகம் - 1


சிவயோக சுவாமிகள் தனது போதனைகளை பாடல்களாகவும், கவிதைகளாயும் இயற்றினார். இவை இன்று நற்சிந்தனைத் தொகுப்பாக உலகெங்கிலும் உள்ள சுவாமியின் பக்தர்களால் படிக்கப்பட்டு வருகின்றது.



தவத்திரு சிவயோக சுவாமிகள் அருளிய நற்சிந்தனைப் பாடல்களில் சில…….


எங்கள் குருநாதன்

என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன்
அன்னைபிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்
அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன்
முன்னைவினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்
நன்மைதீமை யறியாதா னெங்கள்குரு நாதன்
நான்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன். 1

தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்
சித்தத்திற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன்
மோகத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்
முத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன்
வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள் குருநாதன்
சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன். 2

வாசியோகந் தேரென்றா னெங்கள்குரு நாதன்
வகாரநிலை அறியென்றா னெங்கள்குரு நாதன்
காசிதேசம் போவென்றா னெங்கள்குரு நாதன்
கங்குல்பக லில்லையென்றா னெங்கள்குரு நாதன்
நாசிநுனி நோக்கென்றா னெங்கள்குரு நாதன்
நடனந்தெ ரியுமென்றா னெங்கள்குரு நாதன்
மாசிலோசை கேட்குமென்றா னெங்கள்குரு நாதன்
மற்றுப்பற்றை நீக்கென்றா னெங்கள்குரு நாதன். 3

இருவழியை அடையென்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம் விளங்குமென்றா னெங்கள்குரு நாதன்
கருவழியைக் கடவென்றா னெங்கள்குரு நாதன்
கட்டுப்படும் மனமென்றா னெங்கள்குரு நாதன்
ஒருவரும றியாரென்றா னெங்கள்குரு நாதன்
ஓங்கார வழியென்றா னெங்கள்குரு நாதன்
நிருமலனா யிருவென்றா னெங்கள்குரு நாதன்
நீயேநா னென்றுசொன்னா னெங்கள்குரு நாதன். 4

திக்குத் திகாந்தமெல்லா மெங்கள்குரு நாதன்
சித்தத்துள் நிற்கவைத்தா னெங்கள்குரு நாதன்
பக்குவமாய்ப் பேணென்றா னெங்கள்குரு நாதன்
பார்ப்பதெல்லாம் நீயென்றா னெங்கள்குரு நாதன்
அக்குமணி யணியென்றா னெங்கள்குரு நாதன்
அஞ்செழுத்தை ஓதென்றா னெங்கள்குரு நாதன்
நெக்குநெக் குருகென்றா னெங்கள்குரு நாதன்
நித்தியன்நீ யென்றுசொன்னா னெங்கள்குரு நாதன். 5

தேடாமல் தேடென்றா னெங்கள்குரு நாதன்
சீவன் சிவனென்றா னெங்கள்குரு நாதன்
நாடாமல் நாடென்றா னெங்கள்குரு நாதன்
நல்லவழிதோன்றுமென்றா னெங்கள்குரு நாதன்
பாடாமற் பாடென்றா னெங்கள்குரு நாதன்
பத்தரினஞ் சேரென்றா னெங்கள்குரு நாதன்
வாடாமல் வழிபடென்றா னெங்கள்குரு நாதன்
வையகத்தில் வாழென்றா னெங்கள்குரு நாதன். 6

தித்திக்கு மொருமொழியா லெங்கள்குரு நாதன்
சின்மயத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன்
எத்திக்கு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம்நீ யென்றுரைத்;தா னெங்கள்குரு நாதன்
வித்தின்றி நாறுசெய்வா னெங்கள்குரு நாதன்
விண்ணவரு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்
தத்துவா தீதனானா னெங்கள்குரு நாதன்
சகலசம் பத்துந்தந்தா னெங்கள்குரு நாதன். 7

ஆதியந்த மில்லையென்றா னெங்கள்குரு நாதன்
அதுவேநீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
சோதிமய மென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்
சுட்டிறந்து நில்லென்றா னெங்கள்குரு நாதன்
சாதி சமயமில்லா னெங்கள்குரு நாதன்
தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன்
வாதியருங் காணவொண்ணா னெங்கள்குரு நாதன்
வாக்கிறந்த இன்பந்தந்தா னெங்கள்குரு நாதன். 8

முச்சந்திக் குப்பையிலே னெங்கள்குரு நாதன்
முடக்கிக் கிடந்திடென்றா னெங்கள்குரு நாதன்
அச்சமொடு கோபமில்லா னெங்கள்குரு நாதன்
ஆணவத்தை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
பச்சைப் புரவியிலே எங்கள்குரு நாதன்
பாங்காக ஏறென்றா னெங்கள்குரு நாதன்
தச்சன்கட்டா வீட்டிலே எங்கள்குரு நாதன்
தாவுபரி கட்டென்றா னெங்கள்குரு நாதன். 9

நாமேநா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
நமக்குக்குறை வில்லையென்றா னெங்கள்குரு நாதன்
போமேபோம் வினையென்றா னெங்கள்குரு நாதன்
போக்கவர வில்லையென்றா னெங்கள்குரு நாதன்
தாமேதா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
சங்கற்ப மில்லையென்றா னெங்கள்குரு நாதன்
ஓமென் றுறுதிதந்தா னெங்கள்குரு நாதன்
ஊமையெழுத் தறியென்றா னெங்கள்குரு நாதன். 10


ஏத்துக பொன்னடி

எழுக புலருமுன் ஏத்துக பொன்னடி
தொழுது வணங்குக தூநீ றணிக
பழுதிலைந் தெழுத்தும் பன்னுக பன்முறை
அழுது புலம்புக வாய்விட் டரற்றுக
அன்னை பிதாவின் அடியிணை வணங்குக
தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகம் ஆகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை
செய்வன எல்லாஞ் செவ்வனே செய்க
கையும் மெய்யும் கருத்திற் கிசைக
அழுக்காறு கோபம் அவாஅ ஒழிக்க
விழுப்பம் மிக்க மேன்மக்க டம்மை
ஒருபோதும் மறவா துறவு கொள்ளுக
கருவினில் வாராக் காரணங் காண்க
தன்னை அறிக தானே ஆகுக
மின்னை ஒத்த வாழ்வை வெறுக்க
வறுமை வந்துழி மனந்தள ரற்க
மறுமை இன்பம் மறவாது நாடுக
அடியார் தங்கள் அடியிணை மலர்க்கீழ்
குடியாய் வாழுக குறைவெலாந் தீர்க
ஈசன் அடியிணை ஏத்தி ஏத்தி
வாச மலர்கொடு வாழ்த்தி வாழ்த்தி
மத்தன் இவனென மண்ணவர் பேசவும்
சித்தன் இவனெனத் தேவர் கொண்டாடவும்
இவ்வண்ணம்
ஓத்தன ஒத்தன ஊரவர் பேசிடச்
சித்தந் தெளிந்து சிவாயநமவென
நின்று மிருந்துங் கிடந்தும் நினைந்து
பொன்றும் உடலைப் போற்றதல் ஒழிந்து
நன்மை தீமை நாடா தொருவி
அன்னை போல அன்பிற் சிறந்து
பின்னை ஒன்றும் பேசா தடங்கி
என்றும் வாழ்ந்தினி திருத்தல் இன்பமே.


முத்திக்கு வழி

முத்திக்கு வழியை மொழியக் கேண்மோ!
சத்தியம் பொறுமை சாந்த மடக்கம்
நித்தியா நித்திய வத்து விவேகம்
பத்திசெ யடியரைப் பணிதல் பகலவன்
எழுமுன் எமுதல் இரும்புன லாடல்
வழுவிலைந் தெழுத்தும் வரன்முறை பயிலல்
குருபதம் பணிதல் கோலநீ றணிதல்
வரும்பசிக் குண்ணல் வாயுற வாழ்த்தல்
சாத்திரம் பயிறல் தன்போற் பிறரையும்
பார்த்தல் பணப்பற் றொழித்தல் பண்புடன்
வார்த்தை யாடல் வாதனை தீர்த்தல்
கோத்திரங் குலமெனுங் கோட்பா டொழித்தல்
எட்டுணை யேனும்
வேண்டுதல் வேண்டாமை யின்றி யென்றும்
ஆண்டவ னடிக்கீ ழமர்ந்து வாழ்தலே.

சொல்லு சிவமே

சொல்லு சிவமே சொல்லு சிவமே
சுகம்பெற மார்க்கமொன்று சொல்லு சிவமே
வெல்லும் பகையொழியச் சொல்லு சிவமே
வேறுபொரு ளில்லையென்று சொல்லு சிவமே
அல்லும் பகலுமறச் சொல்லு சிவமே
அன்பே சிவமென்று சொல்லு சிவமே
கல்லுங் கரையக் கவி சொல்லு சிவமே
காயமே கோயிலென்று சொல்லு சிவமே.

அல்லலற்று வாழவழி சொல்லு சிவமே
அகம் பிரமாஸ்மியென்று சொல்லு சிவமே
எல்லவர்க்கு நல்லனென்று சொல்லு சிவமே
எல்லாஞ் சசிவன்செயலாய்ச் சொல்லு சிவமே
நில்லாதிவ் வாழ்வென்று சொல்லு சிவமே
நீயுநானு மொன்றென்று சொல்லு சிவமே
பொல்லாப்பிங் கில்லையென்று சொல்லு சிவமே
புத்தடியோம் நாங்களென்று சொல்லு சிவமே.

கொல்லாமை பெரிதென்று சொல்லு சிவமே
கூசாமல் எவர்முன்னுஞ் செல்லு சிவமே
நல்லோர் நடுவிருக்கச் சொல்லு சிவமே
நாமே யனைத்துமென்று சொல்லு சிவமே
உல்லாசமாயெங்குஞ் செல்லு சிவமே
உண்மைமுழுதுமென்று சொல்லு சிவமே
கல்லார்க்குங் கதியென்று சொல்லு சிவமே
கட்டிம னத்தையாளச் சொல்லு சிவமே.

நல்லூர் வீதியில்

பல்லவி

எந்நாளும் நல்லாரை வலம்வந்து வணங்கினால்
இடர்கள் எல்லாம் போமே

அநுபல்லவி

அந்நாளில் ஆசான் அருந்தவம் செய்த இடம்
அதுவாதலாலே அதிசயம் மெத்த உண்டு

சரணம்

வேதாந்த சித்தாந்தம் கற்றதனாலென்ன
வேடிக்கைக் கதைகள் பேசினாலென்ன
வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
வில்லங்கம் எல்லாம் இல்லாமற்போமே.

சத்தியம் பொறுமை சாந்தம் அடக்கம்
நித்தியா நித்தியந் தெரியும் நிபுணர்
பத்திசெய் உத்தமர் பரவும் நல்லூரில்
நித்தியம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே.


நல்லூரான் திருவடி


நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி – கிளியே!
இரவுபகல் காணேனடி. 1

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி – கிளியே!
நல்லூரான் தஞ்சமெடி. 2

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எமக்காமெடி – கிளியே!
கவலையெல்லாம் போகுமெடி. 3

எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் - கிளியே!
காவல் அறிந்திடெடி. 4

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்கௌடி – கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி. 5

பரிதிகாயில் வாடாது
பவனம் வீசில் வீழாது
பரவை சூழில் ஆழாதெடி – கிளியே!
படைகள் மோதில் மாயாதெடி. 6

அந்தமாதி இல்லாத
ஆன்மாவே நாங்களென்று
சிந்தைதந்த செல்வனெடி – கிளியே!
சீரார் நல்லூ ராசானெடி. 7

வந்ததிலும் போனதிலும்
மனதைவை யாதேயென
விந்தையுடன் சொன்னானெடி – கிளியே!
விளங்கு நல்லூர் வாசனெடி. 8

சாதனை செய்தபேர்கள்
சாகார் உலகிலெனக்
காதலுடன் சொன்னானெடி – கிளியே!
கலங்காத வீரனெடி. 9

சுவாமி யோகநாதன்
சொன்னதிருப் பாடல்பத்தும்
பூமியிற் சொன்னாலெடி – கிளியே!
பொல்லாங்கு தீருமெடி. 10



ஒழுக்கம் விழுப்பந் தரும் தம்பிமாரே

ஒழுக்கம் விழுப்பந் தரும் தம்பிமாரே
ஓமென்று சிந்தை செய்வீர் தம்பிமாரே
அழுக்காறவாவெகுளி தம்பிமாரே
ஆன்மாவைப்பந்திக்குந் தம்பிமாரே
வழுக்கி விழுந்தாலுந் தம்பிமாரே
மலரடியை சிந்தைசெய்வீர் தம்பிமாரே
பழுத்த வடியருடன் தம்பிமாரே
பாடிப் பணியவேண்டும் தம்பிமாரே
மூப்புவந் தடையமுன்னே தம்பிமாரே
முழுதும் அறியவேண்டுந் தம்பிமாரே
நாப்பிளக்கப் பொய்யுரைத்துத் தம்பிமாரே
நாட்டிற்பொருள் தேடவேண்டாந் தம்பிமாரே
ஆதியந்தம் நமக்கில்லைத் தம்பிமாரே
ஆன்மாவே நாங்கள்காணும் தம்பிமாரே
ஓதி யுணரவேண்டுந் தம்பிமாரே
உய்யவழி யதுகாhணுந் தம்பிமாரே
சாதிசமய பேதந் தம்பிமாரே
சங்கற்ப மென்றறிவீர் தம்பிமாரே
வாழிவாழி சிவன்நாமந் தம்பிமாரே
மனசாரச் சொல்லுங்கள் தம்பிமாரே
வாழிசிவ னடியார்கள் தம்பிமாரே
மன்னவனுஞ் செங்கோலுந் தம்பிமாரே.


தம்பி கேளடா

தாவித்தாவிச் செல்லும் மனதைத் தம்பிகேளடா
கூவிக்கூவி யழைத்துக் கூடக் குடியிருத்தடா

சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி கேளடா
சிவமேநா மென்றுதினஞ் சிந்தை செய்யடா

பாவித்தும் பாட்டிசைத்துந் தம்பி கேளடா
மூவிதமாம் ஆசைதன்னை முனிந்து வெல்லடா

வாவியாறு சேரிலங்கை நல்ல நாடடா
பாவியென்ற நாமந்தன்னைப் பகைத்து நில்லடா

தூவி மயிலேறும்வேலைத் துதித்துக் கொள்ளடா
நாவினில் நமச்சிவாயம் நவின்று நில்லடா.



கூத்தாடுதே மனமென்ன கொடுமை

பல்லவி

கூத்தாடுதே மனமென்ன கொடுமை
கும்பிட்டேன் குருநாதா உன்னடிமை

அநுபல்லவி

தீர்த்தங்க ளாடினேன் யாத்திரை செய்தேன்
சித்தந் தெளியவில்லை என்னநான் செய்வேன்

சரணம்

பார்த்தவிடமெங்கும் நீயல்லாதில்லை
பாராமல் நானும் பட்டேன் தொல்லை
காத்தெனை யாள்வ துன்றன் கடமை
கருணைக் கடலே நானுன் உடைமை

பக்திசெய் யோக சுவாமி பாட்டைப்
பாடிப் படிப்பவர் பல்லூழி காலம்
உத்தம ராக உலகினில் வாழ்ந்து
வித்தகன் சேவடி விரவிநிற் பாரே.


அப்பா பரமசிவம்

அப்பா பரமசிவம்

அன்று தொட்டு இன்று மட்டும் அடியேனும் தேவரீரும்
அத்துவித மாயிருந்த வித்தைதனை யாரறிவார்

ஒப்பாருமிக்காருமில்லா வொருபொருளே
தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய்

அப்பாலுக் கப்பாலா யாருமறியாத வண்ணம்
ஆடுந் திருநடனம் காணவருள்புரிவாய்.

.......................................................................................................................................................
சிவயோக சுவாமிகள் பற்றி...

சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.

வாழ்க்கைக் குறிப்பு
அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.

கல்வியும் அரசுப் பணியும்
கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்க பாதிரிமாரின் நிறுவனமொன்றில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலமும், தமிழும் படித்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.
தம்முடைய உத்தியோகக் கடமைகள் தவிர கனிதரும் மரங்களை நட்டுக் கவனமாகப் பராமரித்து வந்தார். அவ்வாறு அவர் நட்டு பராமரித்த மாமரம் ஒன்று இன்றும் "சுவாமியார் மரம்" எனும் பெயருடன் கிளிநொச்சியில் உள்ளது.

செல்லப்பா சுவாமிகளுடன் ஐக்கியமாதல்
1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. இவரைக் கண்டவுடனேயே செல்லப்பா சுவாமி சிங்கக் கர்ச்சனையாக "டேய்! நீ யார்?" என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என உறுமினார். செல்லப்பாசுவாமியின் குரலிலும் பார்வை கூர்மையிலும் கட்டுப்பட்ட சதாசிவம் அக் கணமே வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார்.

கொழும்புத்துறையில் ஆசிரமம்
குரு தீட்சை பெற்று சாமியின் மிதியடிகளை வாங்கி கொண்டு அவரின் ஆசீர்வாதத்துடன் கொழும்புத்துறைக்கு போனார். அங்கு ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்திருப்பது வழமை. செல்லப்பா சாமி 1911 இல் சமாதி அடைந்த பின்னர் சாமியின் பக்தர்கள் கொழும்புத்துறையில் சிறு குடில் அமைத்துக் கொடுத்தார்கள். அங்கு சுமார் ஐந்து வருடங்கள் கடும் தியானம் புரிந்தார். ஆனால் யோகருக்கும் குருவைப் போன்று ஊர் சுற்றுவது பிடித்த காரியம். யோகர் கால் படாத தெருவே யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம். வேட்டி, சண்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு இவற்றுடன் எங்கும் நடந்து திரிவார். யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் இவருக்கு பக்தர்கள் இருந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களிலும் மரியாதை இவருக்குக் கிடைக்கப்பெற்றது. டிசம்பர் 1934 இல் சிவதொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தினார். 1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா சென்றார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.

மறைவு
மார்ச் 1964 ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் கொழும்புத்துறையில் உள்ள அவரது ஆசிரமத்தில் காலமானார்.

No comments: