அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, July 29, 2009

கலாநிதி நீலன் - படுகொலைசெய்யப்பட்ட 10வருட நிறைவு இன்று!


இந்தப் படத்தை அனுப்பிய நிர்க்குணன் திருச்செல்வம் அவர்களுக்கு நன்றிகள்! படத்தில் அவரும் (பின்னால் நிற்கின்றார்) அவரது இளைய சகோதரன் மித்திரனும் (கிரியை செய்கின்றார்) தமது தந்தையாருக்கு பொரளை கனத்தை மைதானத்தில் இறுதிக் கிருத்தியத்தைச் செய்கின்றார்கள்!

இந்த ஈனச் செயலின் பாவமும் எம்மை சும்மாவிடாது!


அறிவுஜீவியான - அப்பாவிக்குணமுடைய இம் மாபெரும் மேதையை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் மிலேச்சத்தனமாக படுகொலைசெய்த புலிகள் இருந்த கொஞ்சநஞ்ச தமது பெயரையும் கெடுத்தக் கொண்டதுதான் உண்மை. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இவரும் இருந்திருக்கலாம். ஆனால் பிறநாடுகளில் அரசியல் சாசனங்களை வகுக்கும் தனது பணியை இவர் அன்றைய ஜனாதிபதி திருமதி சங்திரிகா அவர்களுடன் இணைந்து - இலங்கையில் புரையோடிப்போயுள்ள பிரச்சனைக்கு - தீர்வுகாண முற்பட்டதற்கு கிடைத்த பரிசே இன்று எம்மக்களைப் பிடித்து ஆட்டிவைக்கிறது! ஒருவகையில் இந்தப் பாவமும் எம்மை சும்மாவிடாது!
இந்தப்படத்தில் அவரது வலதுகை கீழே தொங்கிய நிலையில் இந்த மண்மீது மனித உரிமைகளை நிலைநிறுத்துவேன் என்று சத்தியஞ் செய்கிறதூ?

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி பதவிக்கு வந்த திருமதி சந்திரிகாவின் அரசியல் வழியை எவர் குறைவாக மதிப்பாக மதிப்பிட்டாலும் அவர் தனது கணவருடன் 1985 -1986 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததையும் விடுதலைப்புலிகள் அவர்களை திறந்த ஜீப்பில் யாழ்ப்பாண நகரங்களில் அழைத்துப் போனதையும் நேரடியாகக் கண்டவன் என்ற வகையில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான நாள் - இன்று 22வருடங்கள் நிறைவு!




கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டு இருக்கிறது - விரைவில் வெளிவரும்!

Tuesday, July 28, 2009

சிங்கமாவது - புலியாவது? எருமைகள் ஒன்று சேர்ந்தால் எதுவும் நடக்கலாம்!

பதிவிலிடவேண்டும் என்று பல நாட்களாக எடுத்த வைத்திருந்த இந்த எருமை மாடுகளின் ஒற்றுமையை இன்று 2ஆம் திருவிழா பிதற்றல்களில் இணைக்கின்றேன்! அறிவு இனியாவது எம் தமிழருக்கு வருமா?

எமது நாட்டின் சட்டங்கள் யாவும் ஒவ்வொரு ஆட்சியாளர்களது தேவை மற்றும் தமது ஆதிக்க பலத்தை நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவை! அல்லது மாறஇறத்திற்கு உள்ளாகஇகப்படுபவை! சாதாரண மக்களுடைய தேவை கருதி இயற்றப்படும் சட்டங்களாக எதுவுமே இல்லை!

ஒரு சாதாரண அரச தொழிலுக்கு பல பரீட்சைகள் - நேர்முகத் தேர்வுகள் வைத்து அரச அலுவலராக நியமனம் பெறுபவர்கள் 20வருட காலம் உத்தியோகம் செய்த பின்னர் 55 அல்லது 60 வயதுகளின் பின்பே தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்! ஆனால் பாராளுமன்றில் 5 வருடங்கள் எந்தவித அறிவுமின்றி மக்களுடைய வாக்குகளில் பதவி பெறும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு(சட்டம் பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் நாலந்த எல்லாவலையைக் கொன்ற உளுப்பினரும் சில காலம் தண்டனைபெற்ற பின்னர் - மீண்டும் சபை உறுப்பினரானார்) ஓய்வூதியம் அவர் பதவிமுடிவடைந்த பிறகு வழங்கப்படுகிறது!

நான் ஏன் தேவையில்லாமல் பிதற்றுவான் இதோ அந்த எருமை மாட்டு வீடியோ பாருங்களேன்!
http://www.youtube.com/watch?v=LU8DDYz68kM&eurl=http%3A%2F%2Fwww%2Eorkut%2Ecom%2FFavoriteVideos%2Easpx%3Fuid%3D153820329877180788%26na%3D4%26nst%3D18%26nid%3DdWlkXzI1MzM5NjM0NnxmdF92aWQsbndfMHxhZF8xMjM4NjA0&feature=player_embedded

கௌதமபுத்தருடைய கொள்கைகளை சரிவரப் புரிந்து கொள்ளாத - அவருடைய போதனைகளை தமது நாட்டின் சமயம் என்னும் ஓர் பைத்தியக்கார அரசு - இலங்கை!




இது ஒரு பௌத்த நாடு என்று மார்தட்டும் இலங்கை அரசு பௌத்தம் என்கிற வழியை அது ஒரு சமயமல்ல - பின்பற்றிய மகான் கைக்கொண்ட அகிம்சை - பற்றற்றிருத்தல் என்ற இரு கோட்பாடுகளுக்கும் அப்பாலே தன்வழியில் பைத்தியக்காரத் தனமாக நடைபோடுகிறது!
வானுயர அம் மகானுடைய சிலைகளை வைத்து மற்றவர்களை(வெளிநாட்டினரை) கவர்ச்சி பண்ணுவதற்குத்தான் இந்த உபாயம் - மற்றபடி அவர்களிடத்தில் துளியளவேனும் பஞ்சீலமோ! அஷ்ட சீலமோ! தசசீலமோ என்ன என்று தெரியாமல் சும்மா காவியை உடுத்துக் கொண்டு சகல சௌபாக்கியங்களையும் அனுபவித்துவருவதுதான் இவர்களது செய்கை! இவர்களை தலைக்குமேல் வைத்துக் கொண்டாடுகிறது பாவம் ஏதுமறியாத மாக்கள் கூட்டம்! ஒரு சில துறவிகள் மௌனமாக காடுகளிலும் மக்கள் அதிகமாக இல்லாத பகுதிகளிலும் இருப்பதும் குறிப்பிடத் தக்கது!

Monday, July 27, 2009

யாழ் மாநகரசபைக்கு 4 முதல்வர்களை முதல்வராக்கிய பெருமை திரு. ஆனந்தசங்கரி அவர்களுக்கு இருக்கிறது!

திடீர் திடீரென எழும் சிந்தனைகள் நடந்து முடிந்த சத்தியமான சம்பவங்கள் - இப்போது இங்கு நேரம் காலை 10.00 மணி. இன்று 2 தடவைகள் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள எமது கட்சியின் தலைவரும் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளருமான திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிறகு இப்பதிவைச் சூட்டோடு சூடாக இடுகிறேன். இவ்வளவுக்கும் எனது வலதுகை பத்துப் போடப்பட்டிருக்கிறது. இடதுகையால் இவ்வளவையும் தட்டெழுத்திடவைத்த என் ஐயன் முருகனுக்கு ஒருகோடி கும்புடு! மதியம் 1.30க்கு வைத்தியசாலைக்கும் போக வேண்டும்!
கட்சியிலுள்ள பலர் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல்களைப்பற்றி கவனத்திலெடுக்காமல் பின்னடித்த போதிலெல்லாம் மக்களுக்காக அவர்கள் நசுக்கப்படுவதை எதிர்த்துக் குரல்கொடுக்க கட்சியை யாழ்ப்பாணத்தில் மீள மிளிரச்செய்த பெருமை இவருக்கு உண்டு!
1998 ஜனவரியில் நடந்த மாநகர சபைத் தேர்தலில் எனது பங்களிப்பும் சிறிது உண்டு. அப்போது நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
4 முதல்வர்களை முதல்வராக்கிய பெருமை திரு. ஆனந்தசங்கரி அவர்களுக்கு இருக்கிறது!
திருமதி சரோஜினி யோகேஸ்வரன் அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின் நாம் அவரது முன்னிலையில் சபை உறுப்பினர்களாக உறுதிப் பிரமாணம் செய்துகொண்டோம்.பொன் சிவபாலன் அவர்களும் ஏனைய சபை ஊழியர்கள் மற்றும் அரச படையதிகாரிகளும் நல்லூர் இந்துவிடுதிக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட போது அடுத்த முதல்வர் யாரென கேள்வி கேட்ட நிருபர் ஒருவருக்கு பதில் சொன்ன திரு. ஆனந்தசங்கரி அவர்கள் ஒருவரும் இல்லாவிட்டால் நான் ஏற்கிறேன் என்று துணிந்து சொன்னவர். இதை பத்திரிகையாளர் மாநாட்டில் அன்றைய அமைச்சரவைப் பேச்சாளரான பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அவர்களும் குறிப்பிட்டதை நினைவுபடுத்துவது பொருத்தம்.

உலக நாடுகளின் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ விருதுபெற்ற அவரது ஆளுமையையும் அவரது கடந்த கால நடவடிக்கைகளையும் யாழ் மாநகர மக்கள் மறந்துவிட மாட்டார்கள்! மீதி நாளை!

பிதற்றல்கள் தொடரும் - ஏனென்றால் ஊரைவிட்டு ஓடிப்போனவன் அல்லது விரட்டப்பட்டவன் - ஊரைப்பற்றியும் உறவுகளைப்பற்றியும் ஒவ்வொருகணமும் யோசிப்பவன் நான்!

எப்படி என்னால் இருக்க முடியும்? அதனால்த்தான் இந்தப் பிதற்றல்கள்! உயிரைக் காப்பாற்றிய செந்தமிழ்க்கடவுள் என் உடலில் பல வெளிக் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறான் -
ஆம் 10.10.1987 புரட்டாசிச்சனி மதியம்.
நல்லை ஆதீனத் தொண்டர் அணியினராகிய நாம் வண்ணார்பண்ணைப் பெருமாள் கோவிலில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியம் 1.00 மணியளவில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. கோவில் மூடப்பட்ட பின் அப்போது நான் தங்கியிருந்த கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டிற்குப் போய் சற்று நேரத்தில் எனது நண்பன் ஒருவன் வந்து வாடா நிறைய சனம் காயப்பட்டுக் கிடக்காம். உதவ வேணும் என்று சொல்ல அவனுடன் யாழ்ப்பாண நகருக்குப் போனேன். குண்டுகள் வந்து விழுந்தபடி இருந்தது. என் கண்முன்னாலேயே ஒரு இளைஞன் குண்டடிபட்டு விழுந்தான். சைக்கிளில் விழுந்து கிடந்த சுபாஸ் ஹோட்டலுக்கு முன்பாக இருந்த பிள்ளையார் கோவிலுக்கு நானும் எனது நண்பனும் ஓடிப் போனோம். நாங்கள் எங்கள் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு ராணித் தியேட்டர் பக்கத்திலிருந்து அவருக்குப் பக்கத்தில் செல்லவும் அடுத்த குண்டு அதே இடத்தில். அந்த இடம் ஒரே புகை மண்டலமாயிருந்தது. காதுக்குள் கிண் என்ற சத்தம் மாத்திரம் – அந்த இளைஞனின் உடல் சிதறியிருந்தது.எனக்கு சற்று நேரத்தின்பின்னர்தான் என்னுடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. பார்த்தால் எனக்கு ஒன்பது இடங்களில் ஷெல் துண்டுகள் - சின்னச் சின்ன ஷெல்த் துண்டுகள் 8 இடங்களில் - ஒரு பெரிய துண்டு என் வலது தொடையில்.அடுத்தது 12.06.2006இல் புலிகளால் சுடப்பட்ட நடுநெஞ்சுக் காயம் - துளைத்த குண்டு பின்புறமாக வெளிப்பட்டிருந்தாலும் அவன் செயல் எந்தச் சேதாரமும் இல்லை! இந்த 2 காயங்களுக்கு மேலாக வைத்தியர்களால் உள்ளிருந்த சிந்திய இரத்தத்தை வெளியேற்ற குழாய்கள் பொருத்தத் துளைத்த 3 ஓட்டைகள்! கடந்த 16.07.2009இல் வலதுஉள்ளங்கையில் நுழைந்து மேற்கையால் வெளியேறிய பென்சில் அளவு தடிப்புக் கொண்ட ஒரு மரக் குச்சியும் எதுவும் செய்யவில்லை!
விசர்ச் செல்லப்பாவின் சீடன் யோகரின் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது -

தேகம் நீயல்லவென்றானெங்கள் குருநாதன்
சித்தத்திற்றிகழுகின்றானெங்கள் குரு நாதன்

அதேபாடலில் இறுதியில்

தாகத்தையாக்கிவிட்டானெங்கள்குருநாதன்
சத்தியத்தைக் காணவைத்தானெங்கள்குருநாதன்!
ஆம் சத்தியம் என்று சொல்லப்படும் உண்மைகளைக் காண இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறான் என்னுடைய தமிழ்க் கடவுளான கலியுகவரதன் நல்லூரில் வாழும் முத்தமிழ் வேந்தன்!வள்ளி தெய்வானையுடனுறை சுவாமிநாதன்!

மணிவாசகரின் சிவபுராணத்தில் புறந் தோல் போர்த்தெங்கும் புழுவழுக்குமூடிமலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா! என்று உடம்பில் 9 வாசல்கள் இருப்பதைக் கறிப்பிடுகிறார் எனக்கோ ஒன்பதொடொன்றொடேழு இருக்கிறது! இது சம்பந்தரின் அடிகள்! எல்லாம் அவன் செயல்! சிவன் செயல்!

இன்று நல்லூர் முருகனின் கொடியேற்றம் - யாழ் மாநகர சபைத் தேர்தல்! உதயசூரியனா? வீடா? வெற்றிலையா? - என் பிரார்த்தனை 1


இன்று நல்லூர் முருகனின் கொடியேற்றம் - நான் எப்போது முதன்முதல் அந்த ஆலயத்துள் காலடி எடுத்து வைத்தேனோ அன்றிலிருந்து இன்றுவரை எனது மனம் சொல் செயல்களில் அவனைப் பணிந்து ஏத்தித் தொழுது வருகிறேன்!
இன்று நான் ஓர் சங்கற்பம் செய்கிறேன்! அது என்ன என்பதை நான் முருகனின் 13ஆம் நாள் திருவிழாவன்று வெளிப்படுத்துவேன்! ஆனால் முருகனிடம் வரும் அடியார்களினால் தான் எனக்கு ஒரு மனவேதனை!

இலட்சக் கணக்கான மக்கள் உண்மையாகவே பக்தி செய்கிறார்களா? அல்லது முருகனையே (தங்களையே ஏனென்றால் சீவன்தான் அதாவது உயிர்தான் கடவுள்! அதிலும் உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டோரடி நீங்கா ஒருவனை - இறைவனை)ஏமாற்றுகிறார்களா? என்பதுதான்.


ஆன்மா அழியாதென்று அன்றெனக்குச் சொன்ன மொழி நான் மறந்து போவேனொடி கிளியே நல்லூரான் தஞ்சமடி என்ற யோகரின் பாடலுடன் இன்றைய எனது பதிவை முடிக்கு முன்னர் சமயம் ஒருவனை வழிநடத்தி அவனை நன்னெறியில் நடப்பதற்கும் - அரசியல் மக்களின் பணியை செவ்வனே செய்வதற்கும் ஒரு மார்க்கம் என்ற காந்தி வழியில் சிந்திக்கும் எனது கருத்தை நினைவுபடுத்தி முடிக்கிறேன்

இது முதலாம் திருவிழாப் பிதற்றல்!