அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 27, 2009

பிதற்றல்கள் தொடரும் - ஏனென்றால் ஊரைவிட்டு ஓடிப்போனவன் அல்லது விரட்டப்பட்டவன் - ஊரைப்பற்றியும் உறவுகளைப்பற்றியும் ஒவ்வொருகணமும் யோசிப்பவன் நான்!

எப்படி என்னால் இருக்க முடியும்? அதனால்த்தான் இந்தப் பிதற்றல்கள்! உயிரைக் காப்பாற்றிய செந்தமிழ்க்கடவுள் என் உடலில் பல வெளிக் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறான் -
ஆம் 10.10.1987 புரட்டாசிச்சனி மதியம்.
நல்லை ஆதீனத் தொண்டர் அணியினராகிய நாம் வண்ணார்பண்ணைப் பெருமாள் கோவிலில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியம் 1.00 மணியளவில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. கோவில் மூடப்பட்ட பின் அப்போது நான் தங்கியிருந்த கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டிற்குப் போய் சற்று நேரத்தில் எனது நண்பன் ஒருவன் வந்து வாடா நிறைய சனம் காயப்பட்டுக் கிடக்காம். உதவ வேணும் என்று சொல்ல அவனுடன் யாழ்ப்பாண நகருக்குப் போனேன். குண்டுகள் வந்து விழுந்தபடி இருந்தது. என் கண்முன்னாலேயே ஒரு இளைஞன் குண்டடிபட்டு விழுந்தான். சைக்கிளில் விழுந்து கிடந்த சுபாஸ் ஹோட்டலுக்கு முன்பாக இருந்த பிள்ளையார் கோவிலுக்கு நானும் எனது நண்பனும் ஓடிப் போனோம். நாங்கள் எங்கள் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு ராணித் தியேட்டர் பக்கத்திலிருந்து அவருக்குப் பக்கத்தில் செல்லவும் அடுத்த குண்டு அதே இடத்தில். அந்த இடம் ஒரே புகை மண்டலமாயிருந்தது. காதுக்குள் கிண் என்ற சத்தம் மாத்திரம் – அந்த இளைஞனின் உடல் சிதறியிருந்தது.எனக்கு சற்று நேரத்தின்பின்னர்தான் என்னுடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. பார்த்தால் எனக்கு ஒன்பது இடங்களில் ஷெல் துண்டுகள் - சின்னச் சின்ன ஷெல்த் துண்டுகள் 8 இடங்களில் - ஒரு பெரிய துண்டு என் வலது தொடையில்.அடுத்தது 12.06.2006இல் புலிகளால் சுடப்பட்ட நடுநெஞ்சுக் காயம் - துளைத்த குண்டு பின்புறமாக வெளிப்பட்டிருந்தாலும் அவன் செயல் எந்தச் சேதாரமும் இல்லை! இந்த 2 காயங்களுக்கு மேலாக வைத்தியர்களால் உள்ளிருந்த சிந்திய இரத்தத்தை வெளியேற்ற குழாய்கள் பொருத்தத் துளைத்த 3 ஓட்டைகள்! கடந்த 16.07.2009இல் வலதுஉள்ளங்கையில் நுழைந்து மேற்கையால் வெளியேறிய பென்சில் அளவு தடிப்புக் கொண்ட ஒரு மரக் குச்சியும் எதுவும் செய்யவில்லை!
விசர்ச் செல்லப்பாவின் சீடன் யோகரின் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது -

தேகம் நீயல்லவென்றானெங்கள் குருநாதன்
சித்தத்திற்றிகழுகின்றானெங்கள் குரு நாதன்

அதேபாடலில் இறுதியில்

தாகத்தையாக்கிவிட்டானெங்கள்குருநாதன்
சத்தியத்தைக் காணவைத்தானெங்கள்குருநாதன்!
ஆம் சத்தியம் என்று சொல்லப்படும் உண்மைகளைக் காண இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறான் என்னுடைய தமிழ்க் கடவுளான கலியுகவரதன் நல்லூரில் வாழும் முத்தமிழ் வேந்தன்!வள்ளி தெய்வானையுடனுறை சுவாமிநாதன்!

மணிவாசகரின் சிவபுராணத்தில் புறந் தோல் போர்த்தெங்கும் புழுவழுக்குமூடிமலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா! என்று உடம்பில் 9 வாசல்கள் இருப்பதைக் கறிப்பிடுகிறார் எனக்கோ ஒன்பதொடொன்றொடேழு இருக்கிறது! இது சம்பந்தரின் அடிகள்! எல்லாம் அவன் செயல்! சிவன் செயல்!

No comments: