அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, March 14, 2009

கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் ஸ்வாமி மதுரானந்த மகராஜ் அவர்கள் - 1

சுவாமி மதுரானந்தர் (வாழ்க்கைச் சுருக்கம்)

சுவாமிகளுடைய வாழ்க்கை வரலாற்றை வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆச்சிரமத்தினர் சிறிய நூலாக 1999 ஜூனில் வெளியிட்டுள்ளார்கள். அதனை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.

முன்னுரை

இதுவரை ஒரு தூய வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இந்த எனது நீண்ட வாழ்க்கையில் ஒரு தீய எண்ணமோ தீய சிந்தனையோ என் மனத்தில் எழுந்ததில்லை இதுதான் நான் கண்ட அதிசயம் - உங்கள் துறவு வாழ்க்கையில் நீங்கள் கண்ட அதிசயம் என்ன? என்று சுவாமி மதுரானந்தரைக் கேட்டபோது அவர் கூறிய பதில் இது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் இவர்களின் வழி வந்த ஒரு துறவியின் பதில் இப்படித்தான் இருக்கும். சித்து வேலைகளையும் நோய்தீர்ப்பது போன்ற சில ஆற்றல்களையும் அவர்கள் ஒருபோதும் அதிசயமாகக் கொண்டதில்லை. அப்பழுக்கற்ற ஒரு புனித வாழ்வையே அவர்கள் பேரதிசயமாக எண்ணினர். அத்தகையதொரு வாழ்க்கை வாழவே முயன்றனர். இப்படியோர் அதிசய வாழ்வை நம்மிடையே வாழ்ந்தவர் சுவாமி மதுரானந்தர்.

இளமை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் என்ற சிற்றூரில் 1922 ஏப்ரல் 14ஆம் நாள்(சித்திரை மாதம் விசாக நட்சத்திரம்) வெள்ளியன்று சுவாமிகள் பிறந்தார். இவரை மகனாக அடையும் பேறு பண்டாரம்பிள்ளைக்கும் லட்சுமி அம்மையாருக்கும் கிடைத்தது. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பையாபிள்ளை. மிகச் சிறுவயதிலேயே சுவாமிகளிடம் காணப்பட்ட மூன்று முக்கியமான பண்புகள் இறைவனிடம் பக்தி, துறவிகளிடம் ஈடுபாடு, அஹிம்சை ஆகியவை ஆகும்.

அவரது வீட்டிற்கு முன்னால் பஜனை மடம் ஒன்று இருந்தது. அங்கே தினமும் ஸ்ரீராமர் பூஜையும் பஜனையும் நடைபெற்றது. இவை சுவாமிகளின் வாழ்வில் முதல் தாக்கங்களாக அமைந்தன. சிறு வயதிலேயே தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கீதை போன்ற நூல்களைப் படிப்பதற்கான வாய்ப்பும் சுவாமிகளுக்குக் கிடைத்தது.

காவி அணிந்த யாரைக் கண்டாலும் அவரை வணங்கி, வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு கொடுப்பார் சுவாமிகள். அவர்களுக்குச் சேவை செய்வதற்கான எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டார்.

அவர் ஆறாம் வகுப்பில் படிக்கும் போது தமிழாசிரியர் ஒரு நாள் வகுப்பில்,
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்
என்ற திருக்குறளை விளக்கினார். அன்றுமுதல் தாயார் எவ்வளவோ வேண்டிய பின்னும் புலாலை மறுத்துவிட்டார்.

வாலிப நாட்கள்

பக்தி, துறவுவாழ்வில் நாட்டம், அஹிம்சை போன்ற பண்புகள் சுவாமிகளின் வாலிப நாட்களையும் ஆக்கிரமித்திருந்தன. அஹிம்சையில் இவ்வாறு அவர் கொண்ட நாட்டம்தானோ என்னவோ அவரை காந்தியடிகளிடம் மிகவும் ஈடுபடச் செய்தது. கல்லூரி நாட்கள் வரை காந்தியடிகளுக்கும் அவரது கருத்துக்களுக்கும் சுவாமிகளின் வாழ்க்கையில் ஒரு தனியிடம் இருந்தது.

கல்லூரிப் படிப்பிற்காக திருவனந்தபுரத்தில் 1941இல் இன்டர்மீடியட்டில் சேர்ந்தார் சுவாமிகள். அவருடைய கல்லூரிப் படிப்பும் அலாதியாகவே இருந்தது. திருவனந்தபுரம் சித்ரா இந்துமத நூல்நிலையத்தில் தினமும் காலையில் பெரிய பண்டிதர்கள், துறவிகள் சமய வகுப்புகள் நடத்துவது வழக்கம். தினமும் காலையில் அதில் பங்கெடுத்த பின்னரே கல்லூரிக்குச் செல்வார். மாலையிலும் விவேகானந்தர் போன்றோரின் நூல்களைத்தான் படிப்பார். கல்லூரிப் பாடங்களை எப்போது படிப்பது? இறுதித் தேர்விற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான்: அப்போதுதான் கல்லூரிப் பாடங்களைப் படிக்கத் தொடங்குவார், தேறியும் விடுவார்.

இளமையிலும் சரி, வாலிப நாட்களிலும் சரி சுவாமிகளை வழிநடத்தி வந்தது மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை. நல்லொழுக்கம், நற்பண்புகள், ஆன்மீக சாதனைகள் என்று வந்தபோது எந்த நிலையிலும் அவர் தளர்ச்சிக்கு இடம் கொடுத்ததே இல்லை. கல்லூரி நாட்களில் அவர் எழுதிய டயரிக் குறிப்பு ஒன்றில் - இன்று இன்னாரிடம் கோபமாகப் பேசினேன். எனவே இரவு உணவு தவிர்க்கப்பட்டது – என்று காணப்படுகிறது. வாழ்க்கையை அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார், எத்தகைய கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை இதிலிருந்து ஊகிக்கமுடிகிறது.

பக்தி, பஜனை, ஆன்மீகம், தெய்பீகம் என்று அவரது வாழ்க்கை சென்றாலும் அத்தனையையும் முறைப்படுத்தி, ஒரு தகுந்த பாதையில் அவரை வழிநடத்த ஒருவர் தேவைப்பட்டார். அத்தகைய ஒருவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு விரைவில் சுவாமிகளுக்குக் கிடைத்தது.

(தொடரும்)

No comments: