அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, March 30, 2009

தந்தை செல்வாவின் 111வது பிறந்த நாள் நாளை (31.03.2009)கீழே தரப்பட்ட கட்டுரை கடந்த 2007ல் தந்தை அவர்களுடைய 109வது பிறந்த நாளுக்காக என்னால் எழுதப்பட்ட கட்டுரை. இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய பத்திரிகைகள் இதனை (முழுவதுமில்லாமல்) வெளியிட்டன.

தந்தையின் வழியில் சென்றவர்களை துரோகிகள் என்று சொல்லி அவர்களை அழித்து ஒழித்து முடிவுகட்டியும் இன்றுவரை இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இன்னும் மக்களுடைய அவல வாழ்க்கை அதிகரித்துவிட்டது என்றே சொல்லமுடியும்.

அரசியல் வாழ்க்கையில் மக்கள் தேவையறிந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்த இக்கட்டுரையை மீள இங்கு பிரசுரிக்கின்றேன்.

வருங்கால சந்ததியினருக்காக சமூகத்தை முன்னேற்ற அரப்பணிப்புடன் உறுதிபூணுவோம்!

ஈழத்துக் காந்தி – பெரியவர் - தந்தை என்று அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களாலும் அன்போடும் மரியாதையோடும் அழைக்க்ப்பட்ட மூதறிஞர் சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் “கண்ணியம்” மிக்கவராய், “நெஞ்சுறுதி” உடையவராய், “பொறுமை”யின் சிகரமாய், “தீர்க்கதரிசனம்” கொண்டவராய் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக, தமிழ்ப்பேசும் மக்களின் தலைவனாக விளங்கினார். எவரையும் மனதால்கூட சினந்து பேசத்தெரியாத பெருமனம் கொண்டவர். எந்த ஒரு உயிருக்கும் அழிவு ஏற்படுவதை விரும்பாத அகிம்சையில் பெரும் நம்பிக்கைகொண்டவர். பேச்சுவார்த்தைகள் - ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தபொழுதிலும், தளர்ந்துவிடாது நம்பிக்கையோடு பின்னர் நடத்தப்படும் பேச்சுக்களில் எல்லாம் கலந்துகொண்டவர்.
1947ல் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியபின் கொண்டுவரப்பட்ட இலங்கைக் குடியுரிமைச் சட்டம், இந்திய பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டம் என்பவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் பிரதிநிதித்துவப்படுத்திய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து கொள்கைக்காக விலகிய உத்தமர். தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்து தான் இறக்கும்வரை தமிழ்ப் பேசும் மக்களின் துயர் தீர்க்கும்பணிக்கு தன்னையும், தனது பெரும் செல்வத்தையும் அர்ப்பணித்த பெருமையுடையவர்.
1972ல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் பாதகத்தை உணர்ந்து - தான் பிரிந்த கட்சியின் தலைவரை நேரில் சென்று ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி தமிழர் கூட்டணி அமைக்க அரும்பாடுபட்டவர்.
அவரது பாராளுமன்ற இறுதிப் பேச்சில் (19.11.1976) இன்றைய நிலையை தீர்க்கதரிசனமாக முற்கூறி வைத்திருக்கும் அதிசயத்தை நாம் அவதானிக்கவேண்டும்.
“தமிழ்ப் பேசும் மக்களின் இழந்த உரிமைகளை மீட்பதற்காக நாங்கள் ஒரு காலத்தில் சமஷ்டி இயக்கத்தை ஆரம்பித்தோம். ஆனால் சமஷ்டி மூலம், தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியப்படாது. கடந்தகால அனுபவங்களின்மூலம் இப்போது அறிந்து கொண்டு விட்டோம்.”
இந்த அனுபவங்களின் அடிப்படையில் நாங்கள் தனியே பிரிந்து வாழவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இதை நாம் செய்யாவிட்டால், தமிழினம், தமது இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக்கொள்ள முடியாது.”
“எங்கள் முன்னோர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கெனத் தனியாட்சியை வைத்திருந்தனர். இலங்கையின் வரலாற்றில் எங்களுக்கென ஒரு இடம் இருக்கின்றது. எங்கள் இயக்கம் நாட்டைப் பிரிக்கும்படி கோரவில்லை. இழந்த எங்கள் உரிமையான இராட்சியத்தை மீள அமைக்க வேண்டுமென்பதே எங்கள் நிலையாகும்.”

“தனித்தமிழ் ஈழத்தை நிறுவும் இலட்சியத்தை நோக்கி எங்கள் இயக்கம் முன்னேறுகிறது. தனித் தமிழ் ஈழம் நிறுவுவது சுலபமான காரியமல்ல என்பதும், மிகவும் கஷ்டமானதென்பதும், எங்களுக்குத் தெரியும், அனால் நாம் ஒன்றில் சிங்களவரின் அதிகாரத்துக்குள்ளிருந்து விடுபட்டு வெளியேற வேண்டும். அல்லது அழிந்துபோக வேண்டும். இது உறுதியானது. எனவே நாங்கள் போராடி தனித் தமிழ் ஈழத்தை நிறுவியே தீருவோம்.”

“நாங்கள் சமஷ்டிக் கோரிக்கையை கைவிட்டுவிட்டோம். எங்கள் தனிநாட்டுக்கான இயக்கம் அகிம்சை அடிப்படையிலேயே நடைபெறும்” என்று கூறியுள்ளார். தந்தையவர்கள் ஏற்படுத்திய கூட்டுமுயற்சி இன்று சின்னாபின்னமாகி பல்வேறு தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் உருவாக்கம்பெற்றதுடன் தற்போது தேர்தல் திணைக்களத்திலும் பதிவுசெய்ய்ப்பட்டுள்ளன.
அகிம்சையின் வழியிலான தத்துவம் மாறி இன்று ஆயுதப் போராட்டத்தின்மூலமே விடுதலைக்கு வழி என்று கூறி - தந்தையின் அணியிலிருந்த பலரும் பிரிந்து சென்று போராடுகின்றனர்.
தமிழ்ச் சமூகம் அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதனால்தான் உணர்ச்சிமிக்க சில இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்கியுள்ளனர்.

ஆயுதங்கள் அழிவுக் கருவிகள். ஆயதத்தைத் தூக்கியவருக்கும் அது அழிவைக் கொடுக்கும். அகிம்சை அப்படியானதல்ல. போராடுபவர்களின் தார்மீக உணர்வை வளர்க்கும். போராடுவோரை ஆளவோ, அடக்கவொ முடியாத நிலையையை ஆளவும், அடக்கவும் முயல்வோருக்கு ஏற்படுத்தும். அகிம்சைப் பாதையில்தான் எம்போராட்டம் அமையும். அதிலிருந்து சற்றும் விலக மாட்டோம்.

இன்று தந்தையின் இந்த இறுதிவார்த்தைகளை மனச்சாட்சியுடன் கைக்கொள்ளும் எவரும் இல்லை என்று துணிந்து சொல்லமுடியும். ஏதோ ஒரு வகையில் வன்முறையை ஆதரித்துக்கொண்டு - தந்தையின் பெயரைக்கூறிக்கொண்டு – அகிம்சையைப் பற்றிய எள்ளளவு அறிவும், அனுபவமும் இன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அவரது கட்சியிலிருந்து அரசியற் பணிபுரிபவர்களுக்காகவோ என்னவோ தந்தை கூறிய வார்த்தை “கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும்” என்று.
தந்தையின் மறைவுக்குப் பின்னர் சுமார் 30 வருட காலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் அன்றிருந்த சுதந்திர வாழ்க்கை கேள்விக்குறியாகி அகதி முகாம்களிலும், சிறைக் கூடங்களிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக தென்இந்தியாவிலும் அவர்களது வாழ்வு பெரும் அவலமாகிவிட்டது. தந்தையவர்கள் இருந்த காலத்தில் இருந்த சுதந்திரமான வாழ்க்கை இன்றில்லை.
இன்று தந்தையவர்களின் 109வது பிறந்த தினநாளில் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகள் பூரணமாகத் தீர்க்ப்பட வேண்டும். மூடப்பட்டிருக்கும் A – 9 வீதி திறக்கப்பட வேண்டும். சந்தேகத்தின் பெயரில் கைதாகி சிறைகளில் வாடுபவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும். தொடரும் வன்முறைகள், தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள், கப்பம் பெறல் போன்ற அநீதியான செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். அகதி முகாம்களில் வாழும் அப்பாவி மக்கள் மீள அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.
ஒற்றுமையுடன் மக்கள் போராட்டத்திற்கென தம்மை அர்ப்பணித்த அனைவரும் கடந்தகால கசப்பான அனுபவங்களை ஒருபுறம் வைத்துவிட்டு மக்களுக்காக அவர்களது அமைதியான வாழ்வுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். எமது வருங்கால சமூகத்தையாவது பிரச்சனையின்றி அமைதியான ஜனநாயகச் சூழலில் வாழ வழியமைக்க - தந்தை செல்வாவின் பிறந்த தினத்தில் அர்ப்பணிப்புடன் உறுதிபூண்டு செயற்படவேண்டும் என தந்தையின்பெயரால் தயவாக கேட்டு இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

9 comments:

ராஜ்குமார் குவைத் said...

"இன்று தந்தையின் இந்த இறுதிவார்த்தைகளை மனச்சாட்சியுடன் கைக்கொள்ளும் எவரும் இல்லை என்று துணிந்து சொல்லமுடியும். "

-Unmai..muttrilum unmai!.Indraya nilaiyil thamizharkalai iraivan mattume kaappattra mudiyum

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா. said...

பல தலைவர்கள் எம்முடன் இல்லாதது தான் எம் சமூகத்தின் பிரச்சினை...
கொள்கைகளுக்காக மட்டும் அரசியல் செய்யும் தலைவர்கள் எமக்குத் தேவை...
தந்தை செல்வா ஆரம்பித்த தமிழர் விடுதலைக் கூட்டணியே பிரிந்து போய் கிடக்கிறது...

Suresh said...

@ தங்க முகுந்தன்

// எங்கள் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள் சுரேஸ்!!!//

வாங்க தங்க முகுந்தன் ( உங்க பெயரே ஒரு அழகு கவிதையாய் உள்ளது)
கண்டிப்பாக உங்கள் வாழ்த்துகள் தான் உற்ச்சாகம் தருது

// விகடமாக எழுதும் உங்கள் எழுத்துக்களுக்கும் எமது பாராட்டுக்கள்.//

ஹா :-) வித்தியாசமா :-) சொன்னிங்க கண்டிப்பா தல
உங்கள் பாரட்டுக்களுக்கு ரொமப ரொம்ப நன்றி

// வாழ்க உமது தமிழ்ப்பணி!!!//

:-) தொடருவோம்

அடிக்கடி சக்கரை கடைக்கு வந்து படித்து சிரித்து சந்தோசமா போங்க

Suresh said...

"இன்று தந்தையின் இந்த இறுதிவார்த்தைகளை மனச்சாட்சியுடன் கைக்கொள்ளும் எவரும் இல்லை என்று துணிந்து சொல்லமுடியும். "

சரி தலைவா .... அது உண்மையும் கூட இன்னொரு ம்காத்தமாவை தான் இந்தியாவும் எதிர் நோக்கின்றது

அத்றக்கு தான் என்னோட
"அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்..." பதிவில்
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html

நம்ம நாட்டை திருத்த நாம் தான்யா முணையனும்
இன்னொரு மகாத்மாவை எதிர் நோக்கும் சோம்பேறிக்ளே ..
போய் கண்ணாடிய பாரு ...
நீ தான்
அந்த இன்னொரு மகாத்மா

குறிப்பு- மேற்க்கோளிட்டு காட்டின இந்த வரிகள் நான் எழுதிக்கொண்டிருக்கும் இன்னொரு மகாத்மா என்ற புத்தகத்தின் சாரம்சம்

Suresh said...

நல்லா அருமையா எழுதுறிங்க தொடர்ந்து எழுதுங்க தல

தங்க முகுந்தன் said...

நன்றி ராஜகுமார்!
கடவுளுக்கும் பல குழப்பம் இருக்கும். யாருக்கு எப்படி உதவுவது என்று?
இப்படி நான் நினைக்கிறேன்!

தங்க முகுந்தன் said...

நன்றி கோபி!
தந்தை செல்வா ஆரம்பித்த தமிழர் விடுதலைக் கூட்டணியே பிரிந்து போய் கிடக்கிறது...
ம்... என்ன பண்ணுவது! கொள்கை என்கிறார்கள்! எந்தக் கொள்கை? என்ன கொள்கை? எதுவுமே புரியவில்லை!

தங்க முகுந்தன் said...

சுரேஷ்!
எனக்கு சர்க்கரை என்றாலே ரொம்பப் பிரியம்!
கடைதானே!
வந்து நிறைய அள்ளிச் சாப்பிடுகிறேன்!
கவலைப்பட வேண்டாமே!!!

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

தந்தை செல்வா பற்றிய பதிவுக்கு நன்றி