அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, October 11, 2009

கல்வி பயின்றதொரு காலம் - 2

நான் அரிவரி(Nursery) படித்தது சுழிபுரம் காளுவான் சந்தியிலுள்ள 63 நாயன்மார் குருபூசை மடாலய பள்ளியில். அங்கு இரு ஆசிரியைகள் எமக்கு பயிற்சி கொடுத்தார்கள். படத்தில் பின்வரிசையில் நிற்கும் இடமிருந்து வலமாக 4ஆவதாக நான்.

ஒவ்வொரு நாளும் என்னை இராசா அண்ணன்தான் தனது சைக்கிளில் அழைத்தச் செல்வார். அவர் அப்போது விக்ரோறியாக் கல்லூரியில் படித்தவர். பிள்ளையார் கோவில் தாண்டியிருக்கும் காணிவெளியில் சில நேரங்களில் நான் தலையில் போட்டிருக்கும் ஓலைத் தொப்பி பறந்து விடும். அவர்தான் அதை எடுத்து வந்த தருவார்.

பின்னர் 1971இல் மூளாய் அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஓரிரு வாரங்கள் படித்தபின் என்னை முதல் வகுப்பிலிருந்து 2ஆவது வகுப்புக்குத் தரமுயர்த்தினார்கள்.

அப்போது அதிபராயிருந்தவர் ஜோசப் மாஸ்ரர். அவரது மனைவியார் அரியம்மா ரீச்சர் ஆங்கிலம் சொல்லித் தந்தார். 5ஆம் வகுப்புவரை பல ஆசிரியர்களிடம் கல்வி கற்றது நினைவு. பரமசாமி ரீச்சர் என்று அழைக்கப்படம் சுகிர்தமலர் சீச்சர், சரஸ்வதி ரீச்சர் இருவர், குஞ்சு ரீச்சர், சின்னையா மாஸரர், நல்லதம்பி சேர், கோபாலு மாஸ்ரர் என இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. ஜோசப் மாஸ்ரர் ரிடையர் ஆன பிறகு இராசையா மாஸரர் அதிபரானார்.

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு முன்னர் எனது தாத்தா சுகவீனமுற்றிருந்தார். எனக்கு வழிகாட்டியாக என்னை பக்குவப் படுத்திய பெருமை எனது அப்புவைத்தான் சாரும். தனது இறுதிக்காலங்களில் எங்களுடனேயே வாழ்ந்தவர். அவரது வீட்டில்தான் நான் சிறுவயது முதல் வளர்ந்தேன். எனது தாயாரின் வீடு பொருத்தமில்லாத காரணத்தால் அது எப்பவுமே யாருக்காவது வாடகைக்குத்தான் விடுவதுண்டு. அப்போது மூளாயில் இயங்கிய பவானி என்ற சினிமா தியேட்டர் முதலாளி எங்கள் வீட்டில்தான் குடியிருந்தார்கள். அதனால் நாம் சிலவேளைகளில் ஓசியில் படம் பார்ப்பதுண்டு. பக்தப் பிரகலாதன், கர்ணன் போன்ற படங்கள் அங்கு பார்த்திருக்க வேண்டும். மூளாயில் Co -operative Hospital இருந்தபடியால் எமது ஊர் பிரபலமடைந்திருந்தது. மாலை நேரங்களில் அப்புவுடன் கோவிலுக்கும் காணி வெளிக்கும் போய் வருவதுண்டு! இரவில் பெற்றோமெக்ஸ் வெளிச்சத்தில் அப்புவுக்கு மகாபாரதம் - இராமாயணம் - குசேலர் கதைகளை பிலத்து வாசிச்சுச் சொல்வதுண்டு. பண்டாரவளையில் இருந்த கடைக்கு கடிதம் எழுதுவதாயின் அவர் சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். இதற்காக எனக்கு பல்லிமுட்டை இனிப்பு பரிசாக கிடைக்கும். சோதனைக்கு முதல் 2 நாட்களாக அப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வீட்டிலே தனிமை - 9 வயதில் நடந்த சம்பவம் இன்னும் ஞாபகம். கோயிலுக்குப் போய்விட்டு சோதனைக்குப் போகும்போதே அப்புவிற்கு அறிவில்லை என்று சொன்னார்கள். சோதனை எழுதிவிட்டு வெளியே வந்தபோது சின்னமாமா மோட்டர் சைக்கிளில் காத்திருந்தார் - அப்பு செத்துப்போய்விட்டார் - உடனே வா என்று அழைத்துச் சென்றார். ஒரே கவலை - செத்த வீடு - அப்படி நடந்தது. பறைமேளம் 2 கூட்டம் நல்ல கச்சேரி - சோடனைகள் நிறைந்த பாடையில குடை ஒன்று மேல்வைத்தது - இப்போதும் நினைவு! கோப்பாய் சீனியாச்சி(கிருஷ்ணன் கோவில் அம்மா) காந்தி அப்பு எல்லாரும் வந்திருந்திச்சினம். காந்தியப்பு தேவாரம் பாடேக்கை மாமாமார் அழுதது சிரிப்புத்தான். நிறைய சனம் - முத்தத்தில பெரிய கொட்டில் போட்டு வெள்ளை கட்டி - வெளியில, நாச்சார் வீட்டுக்குள்ள, வளவுக்குள்ள என்று ஓரே சனம். வேலியடைக்கிற கற்பி வந்து வெளியில இருந்த ஒப்பாரி வச்சு அழ நான்போய் வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டுபோய் அப்புவின்ற சவத்துக்கு முன்னால அருந்து அழச் சொன்னன். ஒருத்தரும் ஒண்டும் சொல்லேலை. இல்லாட்டி நான் கேட்டிருப்பன் ஆக்கள் இல்லாத நேரத்தில வீடு கழவ - தூசிதட்ட மட்டும் வரலாம் ஏன் ஆக்கள் நிக்கேக்க வரக்குடாது? என்று - சாதி பார்க்கிற சிஸ்டம் அப்ப நிறைய இருந்திச்சு! இப்பவும் இருக்குது! இன்னும் சனம் திருந்தவில்லை.

அப்புவுடைய 31க்கு வீடு முழுக்க ஒரே அரிசி மரக்கறி சாமான்! வழக்கம்பரை - சித்தங்கேணி - பொன்னாலை - சுழிபுரம் கோயிலில பூசைசெய்யுற ஐயாமார் எல்லாம் நிறைய வந்திருச்சினம். எங்களுக்கு ஐயாமாருக்குத் தானம் கொடுக்க சாமான் அளந்தே கையெல்லாம் களைச்சிட்டு.
சொந்தக்காரரும் பண்ணாகம் - சித்தங்கேணி - மாவடி - யாழ்ப்பாணம் - குரும்பசிட்டி - கட்டுவன் என்று கன இடத்தில இருந்த வந்தவை. நாங்கள் நிறைய பெடி பெட்டையள் ஒரே விளையாட்டுத்தான். இடைக்கிடை வந்து மாமாமார் ஏசி அதட்டிப்போட்டு போச்சினம்.

3 comments:

Jana said...

ஆஹா..சும்மா பின்னிட்டீங்க தங்கமுகுந்தன். நான் நினைக்கின்றேன் உங்கள் மனம் என்னும் குளத்தில் முதன்முதல் கல் எறிந்தவர் உங்கள் அப்புவாகத்தான் இருப்பார். அந்த அழகிய நிலாக்காலம் அழகிய நினைவுகள் நினைத்தாலே இனிக்கும் அல்லவா?

கலையரசன் said...

இளமையில் நடந்தவற்றை அப்படியே ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.

யோ வாய்ஸ் (யோகா) said...

பழசை நினைவு வைத்திருப்பதற்கு ஒரு சலூட்