அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, December 7, 2009

ஐயப்பன் பஜனைப் பாடல்கள்


ஓம் ஸ்வாமியே! ஸரணம் ஐயப்பா!!

கொள்ளுப்பிட்டி 9ஆம் மாடி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஸ்ரீ ஐயப்பசுவாமி திருக்கோவிலில் வெளியிடப்பட்ட பஜனைப் புத்தகத்தின் சில பக்கங்களை (அடியேனிடம் இருந்தது) இந்தப் பதிவில் இணைக்கின்றேன். இதைவிட நாம் பாடும் சில பஜனைப்பாடல்களையும் மேலதிகமாகச் சேர்த்துள்ளேன்.
















தந்தனத்தான் பாடுங்க தாளம் போட்டு ஆடுங்க
சபரிமலைக்கு வாருங்க சன்னதியைப் பாருங்க
எருமேலிக்கு வாருங்க பேட்டைதுள்ளி ஆடுங்க
சாமி திந்தக்கத்தோம் தோம் ஐயப்ப திந்தக்கத்தோம் தோம்
வாவரையும் கேளுங்க வந்திடுவார் துணைக்குங்க
அழுதமலையில் ஏறுங்க ஆனந்தமாய் இறங்குங்க
கரிமலையை கடந்து பம்பா நதிக்கரைக்கு வாருங்க
பாவம் தீர குளியுங்க தாகம் தீர குடியுங்க
மூப்பு நோய் பிணியாவும் நொடிப் பொழுதில் மறையுங்க
ஊமைகளும் பேசுங்க ஊழ்வினையும் கலையுங்க
உத்திரத்தில் உதித்த அந்த உத்தமனைப் பாடுங்க

---------

சரணம் சரணம் ஐயப்பா
சபரிமலை சாஸ்தாவே ஜோதி நீயப்பா

தந்தனத்தான் பாடும் மலை
சரணகோஷம் முழங்கும் மலை
சஞ்சலங்கள் தீர்க்கும் மலை
ஸ்வாமி வாழும் சபரி மலை

பம்பை நதி ஓடும் மலை
பம்பா வாசன் வாழும் மலை
பாவங்கள் போக்கும் மலை
ஸ்வாமி வாழும் சபரி மலை

------

கல்லும் முள்ளும் நிறைந்த காடு சபரியென்று சொன்னாங்க! –
ஆமா சபரிமலை என்றாங்க!
கால்வைச்ச இடமெல்லாம் பஞ்சாயிருக்கு என்னாங்க!
கள்ளங்கபடம் இல்லாத உள்ளத்தோடு வந்தாலே
மலையில் உள்ள எல்லாமே மாறும் பாரு தன்னாலே! – (கல்லும்)

கொல்லும் வேங்கை திரியும்காடு சபரியென்று சொன்னாங்க! –
ஆமா சபரிக்காடு என்றாங்க!
அவை எல்லாம் சிலைபோல அமர்ந்திருக்கு என்னாங்க!
விரதம் இருந்து வந்தாலே விலகும் யாவும் தன்னாலே
ஐயனைத் தியானம் செய்தாலே அவனிருப்பான் முன்னாலே! – (கல்லும்)

ஆனைக் கூட்டம் உலவும் காடு சபரிமலை என்றாங்க! –
ஆமா சபரிமலை என்றாங்க!
கணபதியே முன்னாலே காட்சி தந்தது என்னாங்க!
தினமும் பூஜை செய்தாலே தெய்வபலம் தன்னாலே
வணங்கும் தெய்வம் எல்லாமே வந்து நிற்கும் முன்னாலே! - (கல்லும்)

கரிமலையை கடப்பதெல்லாம் கடினமென்று சொன்னாங்க! –
ஆமா கடினமென்று சொன்னாங்க!
மனசுக்குள்ளே அவனிருந்தான் காற்றுப் போல வந்தேங்க!
அவனை நம்பி நின்றாலே கைகொடுப்பான் தன்னாலே
பக்தியோடு வந்தாலே காத்திருப்பான் முன்னாலே! – (கல்லும்)

பனிபெய்யும் இரவினிலே பாதையெல்லாம் கோஷம்தான்! -
பெரிய பாதையெல்லாம் கோஷம்தான்!
மணிகண்டன் அதனைக் கேட்டு ஓடிவரும் நேரம்தான்!
குரலைக் கேட்ட பின்னாலே குதித்திடுவான் முன்னாலே
தஞ்சமென்று நின்னாலே தாங்கிடுவான் முன்னாலே! - (கல்லும்)

மகரஜோதி எல்லோருக்கும் தெரியுமான்னு கேட்டாங்க! –
ஆமா தெரியுமானு கேட்டாங்க!
மனசுக்குள்ளே இருட்டினிலே விண்ணில் ஜோதி கண்டோங்க!
சரணம் சொல்லி நின்னாலே ஜோதி ரூபம் முன்னாலே
வாஞ்சையோடு வந்தாலே வாழ்த்திடுவான் மெய்யாலே! – (கல்லும்)

-------

அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொல்லி அழைக்கும் வாபருக்கு ஸ்வாமி தோழனாம்
திருநீறினைப் பூசும் கானக வாஸன் வாபரின் உயிர் நண்பனாம் - வாபரின் உயிர் நண்பனாம்

மக்காவின் தூதன் ஸபரிக்குத் தோழன் சொன்னது வரலாறு
அட மானிடா! இதைக் காணடா! மதபேதம் சரிதானா? – மத பேதம் சரிதானா?

லாஹிர் லாஹா என்றாலே ஐயப்ப ஸ்வாமி வருவாராம்!
பகவான் ஸரணம் என்றாலே வாபர் ஸ்வாமி வருவாராம்!

மந்திரம் தந்திரம் கொள்ளைகள் எல்லாம் வாபரின் தொழில்தானே!
புலி ஏறும் நாதன் போகிற வேளை ஸரணாகதிதானே!
ஹரிஹர சுதனின் ஆயுதம் என்ன பாசவலைதானே!
இதை வாபரின் மேலே வீசினதாலே நண்பரானாரே! நண்பரானாரே!

உன்னிடம் என்னிடம் ஓடும் ரத்தம் எல்லாம் ஒரு நிறம் தான்!
இதை பார்வதி மகனும் பாத்திமா மகனும் காட்டிய இடம் இதுதான்!
மனிதனை மனிதன் வணங்கிட வேண்டும் செய்தவன் மணிகண்டன்தான்!
அந்த அரபிக் கடலும் பம்பாநதியும் நீரால் ஒருநிறம்தான்!
மனிதர்கள் ஒரு குலம்தான்! – மனிதர்கள் ஒருகுலம்தான்!

-------

ஸ்வாமி ஸ்வாமி ஸ்வாமி என்று
நாமம் சொல்லிப் பாடணும்
நாவினில் வராது போனால்
நால்வரோடு சேரணும்

எண்ணி எண்ணிப் பார்க்கணும்
ஏகாந்தமாய் இருக்கணும்
என்றும் அவன் சொரூபத்தில்
ஈடுபட்டிருக்கணும்

கெஞ்சிக் கெஞ்சி அவனிடத்தில்
தஞ்சமென்று இருக்கணும்
வஞ்சமின்றி அவன் நாமம்
வாயார உரைக்கணும்

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா என்று
பஜனை செய்து பாடணும்
பஜனை செய்ய வராவிட்டால்
பக்தரோடு சேரணும்

ஸ்வாமி ஸ்வாமி ஸ்வாமி என்று
கையைத் தட்டிப் பாடணும்
கையைத் தட்ட வராவிட்டால்
கூட்டத்தோடு சேரணும்

சரணங்கள் பாடணும்
சாஸ்தாவை நாடணும்
ஸ்வாமி ஸ்வாமி ஸ்வாமி என்று
வேண்டி வேண்டித் துதிக்கணும்

ஸ்வாமியின் ஸரணங்களை
சத்தத்தோடு பாடணும்
ஸ்வாமி ஸ்வாமி ஸ்வாமி என்று
வேண்டி வேண்டித் துதிக்கணும்

--------

ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள்
கண்ணில் தெரியுது பம்பை ஆற்றில்
மணிகண்டன் பிறந்தது பம்பை ஆற்றில்

சரணம் சரணம் ஐயப்பா சரணாகரணே ஐயப்பா
சரணம் சரணம் சரணாகரணே ஸ்ரீமணிகண்டா ஐயப்பா

எருமேலிதானே சென்றிடுவோம் பேட்டைதானே துள்ளிடுவோம்
பேட்டை துள்ளி வாபரை வணங்கி வனத்தின் நடுவே சென்றிடுவோம்

அழுதா நதியை அடைந்திடுவோம் அளவில்லா இன்பம் கொண்டிடுவோம்
அழுதையில் மூழ்கி கல்லினை எடுத்து கல்லிடும் குன்றில் இட்டிடுவோம்

கரிமலை ஏற்றம் ஏறிடுவோம் கரிமலை அம்மனை வணங்கிடுவோம்
கரிமலை அம்மனை வணங்கிக்கொண்டு வனத்தின் நடுவே சென்றிடுவோம்

கரிமலை இறக்கம் இறங்கிடுவோம் பம்பா நதியை அடைந்திடுவோம்
பம்பா சக்தி நடத்திச் சென்று பம்பா வாசனை வேண்டிடுவோம்

பதினெட்டுப் படியை அடைந்திடுவோம் படியில் தேங்காய் உடைத்திடுவோம்
படியில் தேங்காய் உடைத்துச் சென்று நெய்யபிஷேகம் செய்திடுவோம்

---------------------------


நிலாவில் ஒளி வீசும் நின்னுடைய நீலவானம் ஐயா!
இந்த உலகில் அனைவரையும் ஒன்றாக்கும் உந்தன் நாமம் ஐயா!

மலைகள் கடந்து வந்தோம் ஐயப்பா! மனமிரங்கி வருவாய்! - இந்த
அலையும் மனதினிலே ஐயப்பா! அமைதி தாராயோ!

வனங்கள் கடந்து வந்தோம் எமக்கொரு மார்க்கம் அருளாயோ! – அக
இருளை அகற்றிடவே எம்வாழ்வில் இன்பம் தாராயோ!

நியமம் ஒன்றறியேன் நின்னுடைய நிழலில் நின்றறியேன்
கயவன் நானறியேன் ஐயப்பா! கருணை புரியாயோ!

மதுராபுரி வதனா! ஐயப்பா! மதன மோகனனே!
வணங்கும் குருமுனிவன் நன்மொழியால் மகிழும் சிவமணியே!

-----------

இருமுடி தாங்கியே செல்லுவோம்
இறைவன் ஐயப்பனைக் காணவே!
ஸ்வாமி ஸரணம் ஐயப்ப ஸரணம்
ஸ்வாமியே ஸரணம் ஐயப்ப ஸரணம்

கூட்டம் கூட்டமாய் வருகிறார் - அங்கே
கூடிக் கூத்தாடிச் செல்கிறார் - அவர்
கூறும் மொழியெல்லாம் சரணமே – அந்தக்
கூட்டத்திலும் ஐயப்பனும் இருக்கிறார்!

பாரத்தவர் மறுபடியும் பார்ககிறார் - அதை
பாராதவர் சபரியை நோக்கிறார் - பாராத
சபரியில் ஐயப்பன் அவரைக் காணவே
சபரி மலைக்குச் செல்லுவோம்!

எருமேலி என்னும் வனத்திலே – எங்கள்
இறைவன் ஐயப்பனும் இருக்கிறார் - அவர்
எங்கும் எதிலும் இருப்பவர் - அவர்
எல்லா லீலைகளும் புரிபவர்!

----------------------------------------------------------

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் - சபரியில் ஐயனை நீ காணலாம்!
ஐயப்பா! ஸ்வாமி ஐயப்பா!ஐயப்பா! ஸரணம் ஐயப்பா!

அவனை நீ நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்! - உன்னை
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்!
இருப்பது காடு வணங்குது நாடு -
இவனைக் காண தேவை பண்பாடு
ஐயப்பா! ஸ்வாமி ஐயப்பா! ஐயப்பா! ஸரணம் ஐயப்பா!

பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்! - நல்ல
பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்!
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும் அன்பரையெல்லாம் வாழவைப்பான்
ஐயப்பா! ஸ்வாமி ஐயப்பா! ஐயப்பா! ஸரணம் ஐயப்பா!

-----

துளசிமணி மாலைகட்டி இருமுடியும் தலையில் ஏந்தி
சபரி நோக்கி நடையைப்போடு கன்னிஸ்வாமி – அங்கே
சாஸ்தாவின் அருள்கிடைக்கும் கன்னிஸ்வாமி

எருமேலிப் பேட்டையிலே கரிமலையில் நடக்கையிலே
எத்தனையோ இன்பமுண்டு கன்னிஸ்வாமி – நீயும்
வந்து பார்த்து வரத்தைக் கேளு கன்னிஸ்வாமி

பாட்டுப்பாடி பஜனைபாடி பம்பா நதி தீர்த்தமாடி
காட்டுக்குள்ளே குடியிருப்போம் கன்னிஸ்வாமி அதிர்
வேட்டுவைத்து வழிநடப்போம் கன்னிஸ்வாமி

மலையதிரச் சரணம்போட்டு மனமுருகப் பாட்டுக் கேட்டு
அலையலையாய் நடந்துவந்தோம் கன்னிஸ்வாமி – அங்கே
ஆனந்த ஜோதி பார்ப்போம் கன்னிஸ்வாமி.

------------

வாறாராம் ஸ்வாமி வாறாராம் - வரிப்புலி தானேறி ஐயப்பன் வாறாராம்
வாறாராம் ஸ்வாமி வாறாராம் - வன்புலி தானேறி ஐயப்பன் வாறாராம்

கன்னிஸ்வாமி பூஜையிலே கலந்துகிட வாறாராம் -
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
சன்னிதான மேடைவிட்டு சடுதியிலே வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
அன்னதானம் எடுப்பதற்கு அன்புடனே வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
என்னவரம் வேணுமென்று அள்ளித்தர வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்

பூஜையிலே கலந்துகிட புண்ணியரு வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
பூதகணம் முன்னடக்க புலியேறி வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
வில்லெடுத்து தோளில்போட்டு வீரமணி வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
கல்லெடுத்த குன்றுதாண்டி கணப்பொழுதே வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்

தேவாதி தேவருக்கு மூத்தவரு வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
தேடினாலும் கிடைக்காத தேவனவர் வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
கற்பூர தீபத்திலே கலந்துக்கவே வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்
காந்தமலை ஜோதி நம்ம கண்களுக்குள் வாறாராம்
வாறாராம் ஐயப்பன் வாறாராம்

1 comment:

Unknown said...

pls add more songs to the pages.good job keep it up.