அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, April 30, 2014

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஒதுங்குதல்!


யாழ்ப்பாணம், 30.04.2014.

திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள், செயலாளர் நாயகம், தமிழர் விடுதலைக் கூட்டணி.

அன்புடையீர்,

தாங்கள் இருக்கும்வரை எமது கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவிதமான ஆக்கபூர்வமான பணிகளையும் மக்களுக்குச் செய்ய முடியாது என்பதால் தாங்கள் எமது கட்சியைவிட்டுப் போகும்வரை அல்லது உங்களது இறுதிக்காலத்தின் பின்னர் கூட்டணியில் எனது பணியை நான் செய்யலாம் என முடிவெடுத்துள்ள படியால் இத்தால் நான் கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறியத் தருகிறேன். கடந்த 6.4.2014, மற்றும் 28.4.2014 உங்களுடன் வாக்குவாதப் பட்ட பின் இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அலுவலகத்திலிருந்து வெளியேறுவேன் என்பதையும் அறியத்தருகிறேன். மேலும் சில விடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனபதற்காக இலக்கமிட்டுப் பிரச்சினைகளையும் உங்களுக்கு விளக்கமாக குறிப்பிட விரும்புகிறேன்.

1. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டம் கடந்த 5.4.2014 சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் செய்தபொழுது நியாயமாக நீங்களும், மற்றயவர்களும் செயற்பட்டீர்களா என்பதை உங்களிடம் வினவ விரும்புகிறேன். இக்கூட்டத்திற்கு பல உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பாமல் தவிர்த்தமை எதற்காக?

2. புதிதாக வவுனியாவில் ஒரு கிளையை ஆரம்பித்து தலைவராக முன்னைய ஈபிஆர்எல்எப் பா.உ திரு. இராஜா குகனேஸ்வரனைத் தெரிவுசெய்து அதன் உறுப்பினர்களை இக்கூட்டத்துக்கு அழைப்பித்து அவர்களால் 5ஆந்திகதிக் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதையும் பல எமது கட்சியின் பழைய உறுப்பினர்கள் இதனால் மனமுடைந்து கூட்டத்திலிருந்து வெளியேறியதையும் நீங்கள் அறிவீர்களா?

3. நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சை எல்லோரும் கேட்கவேண்டும். ஆனால் மற்றவர்கள் பேசும்போது அதை இடைநிறுத்தி அல்லது அதற்கு ஏதேனுமொரு மறுமொழி கூறி பேச்சைக் குழப்புவதும் பேசவந்த விடயங்களை பேச முடியாதவாறு குறுக்கீடு செய்வதால் முழுமையான அவர்கள் கருத்துக்கள் தெரிவிக்காமல் போவதும் சில வேளைகளில் பேச்சை முடிக்குமாறு கூறி தடுப்பதும் நியாயமா? இது 5.4.2014 கூட்டத்தில் நடைபெற்றதா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த நடைமுறை நான் கட்சியிலிருந்த கடந்த 1990 களிலிருந்து உங்களால் மட்டுமல்ல, சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் ஏன் அதற்கு முன்பு 1977களின் பின் அமிர்தலிங்கம் காலத்திலிருந்து நடைபெறுகிறது - இதற்கு ஒரு தடவை கொழும்பு திம்பிரிகஸ்யாய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. இரா. சம்பந்தனுக்கு திருகோணமலை ஈழத்துநாதன் சொன்ன கருத்துத்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது! அதாவது கட்சியில் நீங்கள் சொல்லுபவை எல்லாம் கேட்கவேண்டும் என்பதற்காக நாம் ஒன்றும் தெரியாதவர்கள் என்று எம்மை எண்ணி விடாதீர்கள்! கட்சியில் எல்லாருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. பதவியை வகிப்பதால் நீங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்றிவிடுங்கள்!

4. சாதாரணமாக ஒரு அங்கத்தவரைச் சேர்ப்பதென்றால் அவரது விண்ணப்பப்படிவம் பொதுச்சபையில் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுவதே முறை இந்த நடைமுறை 2004களின் பின் நடைமுறையில் இருக்கிறதா என்பதே எனது அடுத்த கேள்வி.

5. கடந்த 2003இன் பின் ஏற்பட்ட சில முக்கிய பிரச்சனைகளால் அன்றிலிருந்து இன்றுவரை 2003 – 2009 வரை விடுத்தாலும் 2009 இல் நடைபெற்ற எல்லா அழிவுகளின் பின்னரும் நீங்கள் ஒருவரே கூட்டமைப்புத் தலைவர்களையும் சில உறுப்பினர்களையும் விமர்சித்து கடிதங்கள் எழுதிவருகிறீர்கள். ஒரு சிலரைத் தவிர ஏனையோர் பெருந்தன்மையுடன் இருப்பதால் உங்களின் நடவடிக்கை எல்லை மீறிப் போவதை நாம் சிலர் கட்சியில் இருந்தும் எதுவித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது உங்களுக்கு வாய்ப்பாக இருக்கிறது போலத் தெரிகிறது. இதுவரை காலமும் சிலவேளை உங்களிடம் நேரடியாக கருத்துக்களைத் தெரிவித்து வாக்குவாதப் பட்டிருந்தாலும் இன்று உங்கள் பாணியில் உங்களுக்கு ஒரு கடிதம் வரைய முடிவெடுத்துள்ளேன். ஏனெனில் உங்களுக்கு சில விடயங்கள் தெரியாமல் நினைத்த பாட்டுக்கு எழுதிவருகிறீர்கள். ஆனால் நான் ஆதாரத்தோடே எழுதுகிறேன்.

6. 1977இல் தமிழரசுக்கட்சியின் சின்னம் தேரதலில் பாவிக்கப்பட்ட பின்னர் முடக்கி வைக்கப்பட்டதாக எழுதிவருகிறீர்கள். அதற்கு முன் உங்ளுக்குத் தெரியாத ஒரு விடயம் 1989 ஆடி 13 அமரர்கள் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் கொல்லப்பட்ட பின் மாவை. சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா கூட்டிய சர்வகட்சி மாநாட்டில் பிரதிநிதிகள் - கட்சி சார்பில் கலந்து கொண்ட போது அதிகமானவர்கள் கலந்து கொள்ள வசதியாக எமது கூட்டணியிலிருந்தும் தமிழரசுக் கட்சியிலிருந்தும் அந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். குறிப்பாக நீங்கள் அந்தக் காலத்தில் இங்கிருக்கவில்லை. இந்தியாவுக்கு அடிக்கடி போய் வருவீர்கள்! நீலன் திருச்செல்வம், சட்டத்தரணி சிவபாலன் ஆகியோர் கூட்டணி சார்பிலும், தங்கத்துரை, சின்னத்துரை ஆகியோர் தமிழரசுக் கட்சி சார்பிலும் கலந்து கொண்டார்கள். திரு. சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினர் என்ற கோதாவில் கூட்டணி சார்பில் கலந்து கொண்டாரா அல்லது தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்று அந்தக் கட்சியில் பங்கு கொண்டாரா என்பதை அவரிடம் தான் கேட்டுத் தெரிய வேண்டும். திரு இராஜேந்திரனும் இடைக்கிடை போனதாக ஞாபகம். 2004 இல் புலிகளை ஏகப்பிபரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட கூட்டணியினரின் பெரும்பாலானோரும், விடுதலைப் புலிகளும், ஏனைய இயக்கங்களும் தாம் தேர்தலில் நிற்பதற்காக தமிழரசுக் கட்சியை தெரிவு செய்தார்கள். என்னதான் ஆயுதப் போராட்டத்தை ஏற்றிருந்தாலும் ஜனநாயக வழியில் தேர்தல் என்று வரும்போது தந்தையின் பெயரையும் அவரது கட்சியின் சின்னத்தையும் பாவித்தாலேயே தமக்கு வாய்ப்பு உண்டு என்பதை நன்கு அறிந்து அதில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்கள். பேச்சுவார்த்தை சரிவராது என்றுகூறி ஆயுதப் போராட்டம்தான் தீர்வு என்று புறப்பட்ட அனைவரும் 1983 – 1987 காலங்களில் கூடுதலாக எமது கட்சியை விமர்சித்தே வந்தார்கள்! கூட்டணித் தலைவர்களில் ஒரு சிலரைக் கொன்றதும் இவர்களே! பாராளுமன்றை அவமதித்து உறுப்பினர்களைக் கொன்று மக்களுக்கு விடிவுதேடப் புறப்பட்டவர்கள் இன்று மக்களை மறந்து சுகபோகம் அனுபவிக்கிறார்கள்! இதில் விடுதலைப் புலிகளின் அரசியற்கட்சி பதிவிலிருந்தும் அவர்கள் தமது சின்னத்தையோ கட்சிப் பெயரையோ எந்தத் தேர்தலிலும் பாவிக்கவில்லை. ஆனால் இரு தடவைகள் தந்தையின் கட்சியான எமது கூட்டணி தமிழர்பகுதியில் தேர்தலில் பெரும்பான்மையாக வராது போனதை நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். காலத்தின் தேவைகருதி நான் அதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று 1989இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றது 1994 பாராளுமன்றத் தேர்தல். இந்த 2 தேர்தல்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கில் பெரும்பான்மையைப் பெறவில்லை. 1989இல் ஈரோஸ் அமைப்பின் சுயேட்சைக் குழு 13 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. கூட்டணிக்கு 10 இடங்கள். 1994இல் ஈபிடிபிக்கு 9 ஆசனங்கள் கூட்டணிக்கு 5 ஆசனங்கள்.

7. எல்லாக் கடிதங்களிலும் திரு. சேனாதிராசாவை நான்தான் பாராளுமன்ற உறுப்பினராக்கினேன் என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் மட்டும் அல்ல. கட்சியின் எல்லா உறுப்பினர்களும் இணைந்தே அந்த முடிவை எடுத்தார்கள்! உங்களுக்கு ஆசையிருந்திருந்தால் அதை சொல்லியிருக்கலாம். உங்களால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் பலரும் எம். பி பதவியில் ஆசைப்பட்டிருந்தார்கள் என்பதை நான் அறிவேன். 1994தேர்தலின் பின் திருமலையில் தோல்வியடைந்த இரா. சம்பந்தனும், அம்பாறையில் தோல்வியடைந்த மாவை. சேனாதிராசாவும் ஆதரவாளர்களுடன் வந்தபோது நல்லவேளை வவுனியாவில் தலைவர். சிவசிதம்பரத்திற்கு அடுத்ததாக நீங்கள் வந்தபடியால் சிவசிதம்பரம் கண்டிப்பாக வவுனியாக் கிளையினருக்கு கூறிவிட்டார் - ஒருவரும் வரப்படாது என்று. தேசியப்பட்டியலில் பெயர்குறித்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அந்த கூட்டத்தில் அடுத்தவர்கள் பதவிக்கு ஆசைப்படும் கதைகளைப் பார்த்து இறுதியில் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தபோது கண்கலங்கியது இன்றும் எனக்கு ஞாபகத்திலிருக்கிறது.

8. நான் அதிகம் பழைய வரலாறுகளைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனாலும் அமரர் மு. சிவசிதம்பரத்தின் மறைவின்பின் பெயர் குறிப்பிடப்பட்ட திரு. முத்துலிங்கத்துக்கு எம்.பி பதவி வழங்காது சம்பந்தனும், ஜோசப்பும் அவரது எடுபிடிகளும் சிவசிதம்பரத்தின் பூதவுடலுக்கு தீமூட்டியவுடனேயே முகமாலைக்குப் போய் விடுதலைப் புலிகளிடம் கோள்மூட்டிய நிகழ்வுகளையும், அதன்பின் எமது கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டதும் நாம் மறப்பதற்கில்லை.

9. கடந்த மாகாண சபைத் தேர்தலில் 5 கட்சிகளின் தலைவர் என்ற கோதாவில் நடைபெற்ற கூட்டத்தில் நீங்கள் இதய சுத்தியோடு பங்குபற்றினீர்களா? முதலாவது கூட்டத்தில் பங்குபற்றிய பிறகு எச்சந்தர்ப்பத்திலாவது நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா? தேர்தல் நியமனப் பத்திரத்தில் கையெழுத்திட முதன்முதல் தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்குப் போனபோது, சிறிது நேரம் கழித்து நான் அங்கு வந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.

10. கடந்த 27ஆந்திகதி கடைசியாக நான் பிரச்சினைப்பட்ட விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உங்களிடம் தருமாறு கோரி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுத முற்பட்டபோதே! அதாவது பத்திரிகைகளுக்கு 2001இல் வெளியிட்ட கடிதத்தைக் காட்டி தேர்தல் ஆணையாளரிடம் நியாயம் கோருவது எவ்விதத்தில் நியாயம் என எனது அறிவுக்கு எட்டிய வரை உங்களுக்குக் கூறியும் நீங்கள் கடிதம் எழுதியே தீரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கொழும்பிலிருந்து கடிதம் தயார்பண்ணி அனுப்பிவைத்துள்ளீர்கள்! இது நியாயமாக எனக்குப் புலப்படவில்லை. 2013 தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் பதவிக்காக 2004இலிருந்து கட்டிக்காத்த கொள்கையை விட்டு - வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு அவர்களது துரோகத்தனத்தால் படுதோல்வியடைந்த பின் தேவையற்ற விதத்தில் இருக்கும் கொஞ்ச மரியாதையையும் இழக்கவே இந்தப் புதிய தாண்டவம் ஆடுகிறீர்கள்! கடிதம் எழுதியே சாதனை படைக்கும் நீங்கள் 2009இன் பின் யுத்தம் முடிவடைந்த பிறகு கூட்டமைப்பால் ஒழுங்காக நிரப்பப்படாது நிராகரிக்கப்பட்ட 2 சபைகளில் வெற்றிபெற்ற வாக்குகளைக் கூட தக்கவைக்க முடியவில்லை! 2000ஆம் ஆண்டு தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த திரு. சித்தார்த்தன் கடந்த மாகாணசபைத் தேர்தலில் 3ஆவதாக வர முடியுமானால் நீங்கள் இங்கு போட்டியிட்டிருந்தால் கட்டாயம் வெற்றிபெற்றிருக்க முடியும். ஆனால் வம்புக்கு கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருடன் மல்லுக்கட்டப் போய் கடைசியாக நீங்கள் உங்கள் கட்சி உறுப்பினர்களிடமே வாங்கிக்கட்டியதுதான் மிச்சம். 2010 பாராளுமன்றத் தேர்தலில் தெரிவான கௌரவ. சிறீதரனின் அலுவலகம் இருக்கத் தக்கதாக கிளிநொச்சியில் எமது கட்சி அலுவலகத்தை திடீரென கூட்டமைப்பு அலுவலகமாக மாற்றியபோதே உங்கள் இயலாமை தெரிந்துவிட்டது.

இறுதியாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் அவர்கள் மட்டுமல்ல கூட்டணியே 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் பின் நடைபெற்ற வன்செயல்களுக்காக குறிப்பாக நூலக எரிப்புக்கு சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தது. தலைவர் சிவா ஐயா மிக அருமையாக இந்தவிடயங்களை நடைபெற்ற உண்ணாவிரதக் கூட்டங்களில் தெரிவித்திருக்கிறார். 1983 கலவரங்கள், அதன்பின் 2009வரை நடைபெற்ற அனர்தங்களுக்கு இப்போதுதான் ஒரு விடிவு தெரியும்போது உங்களுடைய முட்டாள்த்தனமான அறிக்கைகள் நீங்கள் தமிழருக்காக அரசியல் செய்கிறீர்களா அல்லது பெரும்பான்மையினத்துக்கு சாதகமான அரசியல் செய்கிறீர்களா என சாதாரண பொதுமகனுக்கு மாத்திரமல்ல எங்களுக்கே புரியாமல் பெரும் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் கூட்டணியில் இருக்கும்வரை கடிதம் எழுதும் பணியை மாத்திரமே செய்வீர்கள்! மக்களுக்கு எந்தவிதமான உருப்படியான பணியை - கூட்டமைப்பில் எவருமே செய்வதாக இல்லை! இதில் நீங்களும் அடங்குவீரகள்! நாம் ஏதாவது செய்ய வேண்டும் - இல்லாவிட்டால் ஒதுங்கியிருப்பது மேல் எனக் கருதி இம்முடிவை எடுத்துள்ளேன்.

என்றும் மக்கள் நலனில் அக்கறையுள்ள,

(ஒப்பம்)தங்க. முகுந்தன்.

Monday, April 28, 2014

தந்தை செல்வா சமாதியில்!

நேற்று முன்தினம் நடைபெற்ற செல்வா நினைவுப் பேருரை சம்பந்தமான செய்திகள் எதுவுமே இதுவரை வெளிவரவில்லை! என்ன உலகமடா இது!

படங்களைப் பதிவிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதால் மேலதிக படங்களை இணைக்க முடியவில்லை! மன்னிக்கவும்!

Friday, April 25, 2014

துறவி - காஞ்சிப் பெரியவரின் சில அரிய புகைப்படங்கள்!


கடந்த 20ஆந்திகதி(20.04.2014) எனது முகப்புத்தகத்தில் எழுதியதை அப்படியே பதிவிடலாம் என நினைக்கின்றேன்!

சரியாக இப்போது 2மணிக்கு திடீரென தூக்கம் கலைந்தது!

சில சம்பவங்கள் திடீரென்று மனதில் கனவா அல்லது நனவா எனத் தெரியவில்லை! ஏன் எனக்கு மட்டும் இந்த நினைவுகள் வந்து போகின்றது!

நூல்நிலையம் என்றால் என்ன! முள்ளிவாய்க்கால் என்றால் என்ன! யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்றால் என்ன! கஹவத்தை தலுகல்லை முத்துமாரியம்மன் கோவில் என்றால் என்ன! 2005 அல்லது 2006 ஆண்டு சரியாக ஞாபகமில்லை - நடந்து வந்த பௌத்த துறவியை இரவு காவலுக்கு நின்றவர்கள் பொன்னாலையைக் கடக்க தடை பண்ணிய பின் எங்கள் ஊர்த் தேர்த் திருவிழாவுக்கு முதல் நாள் மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு வந்தவரை நான் எங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்று என் தாயாரை எங்கள் வீட்டில் படுக்கச் சொல்லி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்துவிட்டு கோவிலுக்குப் போய் திருவிழாவை முடித்து வந்து அவரோடு தங்கி அடுத்த நாள் அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து மதியம் தேர் வீதிசுற்றி வந்த பின்னர் அவருக்கு மதியம் உணவளித்த பின் விபுலனிடம் சொல்லி அவரை சித்தங்கேணியில் கொண்டு போய் விட்டது! புதிதாக கட்டப்பட்ட 20 அடி உயரமான சிவனிடம் சித்தரைக் காண கண்டியிலிருந்து வந்த சீலனையும், ஹேம்தீப்பையும் கூட்டிச் சென்றபோது சித்தர் எனக்கு எதுவும் சொல்லாமல் விட்டதென்ன! எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் இருக்கும்போது எனக்கு மட்டும் வேதாந்த மட ஸ்வாமிகள் கடிதம் எழுதியது ஏன்! நல்லதொரு வாழ்க்கையை வாழ சுவிற்சர்லாந்து சென்ற எனக்கு எல்லாரும் போக வேண்டாம் என்று சொல்லியும் திரும்ப இங்கு வந்ததேன்! நூலகம் எரிக்கப்பட முன்பே என் அம்மா நான் காசிப் பிள்ளையார் கோவிலுக்கும் துர்க்கையம்மன் கோவிலுக்கும் அடிக்கடி போய் வருவதால் னில்லாத சமயத்தில் என் சமயப்புத்தகங்கள் - ஸ்வாமியறையிலுந்த மணி தொடக்கம் அத்தனை பூசைப் பொருட்களையும் கொண்டுபோய் குப்பையில் போட்டு எரித்ததை எப்படியோ தெரிந்து ஓடிவந்து தண்ணீரூற்றி அணைத்தது என்ன! எல்லோரும் சும்மா இருக்க கீரிமலையில் சடையம்மா மடத்திலிருந்து சிவனுக்கு பூசை பண்ணிய அந்த காலத்தை நினைத்து இப்போதும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டிய ஆவல் ஏன்! காஞ்சிப் பெரியவரிடமும் - திருச்சி ஸ்ரீரங்கம் கட்டிமுடிக்க ஆசியருளிய ஸ்ரீஜீயர் சுவாமிகளிடமும் ஆசிபெற்று - எனது பெரிய தந்தையாருடன் ஸ்ரீசத்தியசாயிபாபாவைத் தரிசனம் செய்யச் சென்றது எதற்கு! எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் யாழ்ப்பாணப் பொறுப்பாளரோடு எதற்காகமேயர் கந்தையனுடன் சென்று விவாதிக்க வேண்டியிருந்தது? கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் எதற்காக ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அகண்டநாம பஜனை செய்து நானே அபிஷேகமும் ஹோமமும் பண்ண வேண்டியிருந்தது! இப்போது இந்தத் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிக்காக ஏன் எல்லாரிடமும் தந்தை செல்வாவுக்காக சண்டைபோடுவது என

ஏராளமான கடந்தகால சரித்திர உண்மை நிகழ்வுகள் வந்துபோனதோ தெரியவில்லை!

ஒரே குழப்பமாக இருக்கிறது!

கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தால் வாசலில் ஆமியும் பொலிசும் நிற்கிறார்கள்!

இறைவா இது ஏன் - எனக்கு மாத்திரம் இப்படியொரு மன அலைச்சல்?

யோகரின் கொல்லாமை பெரிதென்ற விடயமும், பௌத்த தர்மத்தை உபதேசித்த புத்தபகவானின் கொள்கையும் இன்று வரை மகாத்மாவின் அகிம்சையை விட்டு விலகிச் செல்லாதபடி இருப்பதும்!

பட்டினத்தாரின் காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே எனது 3, 4ஆம் வகுப்புகளில் மகிவும் தீவிரமாக எனது தாத்தாவுக்கு கதைகள் வாசித்துச் சொல்லும்போது ஏற்பட்ட மன உறுதியால் 12 வயதில் நான் சேர்ததுவைத்த சல்லிமுட்டிக் காசு களவு போனதையும், 1978களில் தெல்லிப்பழையில் வீடுபுகுந்த கள்வன் எனது மர உண்டியலுக்குள் இருந்த பித்தளைச் செப்புக்காசுகளை களவெடுத்த பின்பும் கவலைப்படாத நான், ஆவணங்களை மட்டும் எனது பெரியப்பாவின் வீட்டில் புலிகள் கொழுத்தி எரித்தபோது வந்த ஆத்திரம் எதற்காக! இப்போது இந்த யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமாக நான் எதற்காக மண்டையைப் போட்டுக் குளப்பியடிக்க வேண்டும்? இப்படி பல நினைவுகள் மூளாத தீயாக உள்ளே கனன்று கொண்டு இருப்பது எதற்காக! யாராவது வழி சொல்வீர்களா?

இப்பதிவு எழுதும்வரை எனது இந்தப் பதிவுக்கு பதிலிட்டவர்களின் கருத்தையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.

Vicky Theivendram Sleep well then think about the social work 20 April at 03:08 · Thangarajah Mukunthan நித்திரை வரவில்லையே! 20 April at 03:09 · Vicky Theivendram Mugunthan, I went to your perriyamma, 31st last week your mag was read, & your moms too, I met bot perriamma too at the funeral . 20 April at 03:12 · Thangarajah Mukunthan ம்! எங்கள் மாமாவினுடைய அந்தியேட்டிக்குகூட ஒரு சிறிய நினைவு மலர் வெளியிட்டிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்! ஆனால் மாமி விரும்பவில்லை! அந்தச் செய்தி மிகச் சுருக்கமாக நான் எழுதிய கட்டுரையிலிருந்து தொகுத்தது! 20 April at 03:14 · Vicky Theivendram Yes I read all in Kirithiyam 20 April at 03:14 · Thangarajah Mukunthan Ohh! Nantri! he helped me! 20 April at 03:15 · Vicky Theivendram The 31st went well master perriappa & perriamm canada did good job at tt day 20 April at 03:16 ·

Star Sundar anna sleep weel take care of your health na. 20 April at 03:19 · Thangarajah Mukunthan நன்றி சுந்தர்! உம்மை மறக்க முடியாது! சுவிசில் இருந்தபோது நட்பாகி முதல்முதல் கடந்த 26.02.2014இல் நான் மதுரைக்கு வந்தபோது எனக்காக வந்து ஹோட்டல் மகாராஜாவில் அறை எடுத்துத் தந்து எனக்குப் பண உதவி செய்ததையும், அடுத்தநாள் உமது மோட்டார் சைக்கிளில் காலையிலேயே வந்து விமான நிலையத்திற்கு கூட்டி வந்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்! You are one of the Special friend!!! 20 April at 03:25 · Star Sundar anna ethalam nenga solanuma na.ungala parthatula enaku romba santhosam na.enaikum ungala mara mudiuathu na 20 April at 03:28 ·

Sivaa Nandah தியானம் பண்ணுங்கள் உங்களால் ஏதோ நடத்த இறைவன் திட்டமிட்டுள்ளேன் 20 April at 13:07 ·

Parameswaraiyer Ambikapathy நினைவுகள் - கணனியின் நினைவுக் குச்சி போல - நாம் இட்டவற்றை தேக்கி வைத்திருக்கும் குப்பைத்தொட்டி. இவற்றின் சேர்க்கை ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிக்கும் ....... உள் நோக்கிய - ஆன்மாவை அறியும் நோக்குடன் கூடிய - சிந்தனைகள் சிறப்புடன் வாழ வழிவகுக்கும். தூங்குதல் ஒருவிதத்தில் இறப்பையும் பின் எழுதல் பிறப்பையும் ஒக்கும். ....... >>>>>???????? 20 April at 13:44 ·

Rajanayagam Kesavanathan. ஆழ் மனதின் சக்தி.. 21 April at 05:32 ·

தந்தை செல்வாவின் 37ஆவது நினைவு தினம் நாளை - 26.04.2014!


தந்தை செல்வாவைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தக் கட்டுரைகளையும் படங்களையும் சேரத்துள்ளேன்! தினகரனில் வெளியான படங்களும், வீரகேசரியில் வெளியான கட்டுரைகள் இரண்டும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ஈழசுதந்திரனில் நான் எழுதிய கட்டுரையும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. தந்தை செல்வாவின் நூற்றாண்டு விழா அவையினரால் வெளியிடப்பட்ட 4 பக்க குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 23, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 15)


எனது இந்த ஆராய்வு நூலகத்துடன் மாத்திரமே சம்பந்தப்பட்டதாகையால் அதை மீறி வேறு எதிலும் ஆர்வம் செலுத்த விரும்பவில்லை!ஆனாலும் சில வரலாற்றைப் பதிவிடும்போது நூலகத்தைத் தாண்டிச் செல்லவும் வேண்டியிருக்கிறது. அதனைத் தனியாகப் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்! இறுதியாக தற்போது முடிவுக்கு வரும்போது எங்கெங்கே என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்! எங்கே மறைக்கப்பட்டவை சேர்க்கப்பட வேண்டும்! என்பதை நூலகம் சம்பந்தமாக ஈடுபாடு கொண்டவர்களுக்கு மாத்திரம் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.


1. நூலகத்தின் முன்பாக இருந்ததாகக் கருதப்படும் இந்த மிக அற்புத வேலைப்பாடுகளைக் கொண்ட யாழ்மங்கையின் சிலை எங்கே! அதைப்பற்றி இன்று(23.04.2014) நூல் நிலையத்திற்குச் சென்று திரு. என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பைப் பார்வையிட்டபோது நூலகர் நெஞ்சை விட்டகலா நினைவலைகள் முன்னாள் பிரதம நூலகர் கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்களின் கட்டுரையில் 113 ஆம் பக்கத்தில் "நூலகராகிய எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை சில விஷமிகளால் நூலகத்திலிருந்து பெயர்க்கப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவில் எறியப்பட்டது. இச்சிலை பின்னர் அங்கு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் வேறொரு சரஸ்வதி சிலை நூலக முகப்பில் இன்றும் காட்சியளிக்கின்றது" என்றிருக்கிறது! அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மனக்குமுறலை எழுதுகிறார். அதில் ஆணையாளருக்கும் நூலகருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினை தெரிகிறது. இதை நான் குறிப்பிடுவது ஏனெனில் இந்தக் கதையில் சம்பந்தப்பட்டவர்களை இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிய மாட்டார்கள்! அவர்கள் யாரென விளக்க வேண்டிய அவசியம் ஆவணப்படுத்தலில் மிக முக்கியமானது என்பதையே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

2. யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம் என்னும் மூதறிஞர் க.சி.குலரத்தினம் அவர்களின் புத்தகத்தில் பக்கம் 88ல் குறிப்பிட்ட அமெரிக்கரின் நன்கொடைப்பணம் சம்பந்தமான தமிழில் பொறிக்கப்பெற்ற நினைவுக் கல்லுக்கு என்ன நடந்தது!(யாரும் இதைப்பற்றி அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை)மேலும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2 மிகவும் நகைச்சுவையான விடயங்களையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்!

ஏனெனில் இன்று(23.04.2014) நான் வாசித்துக் கொண்டிருந்த மேசையில் யாரோ ஒரு தம்பி தன் பெயரை பதித்திருந்தார். அதை வாசித்துக் கொண்டிருந்த பொழுது பார்த்தபடியால் குறிப்பிடத் தோன்றியது.

அதாவது அங்கே வாசிக்கச் சென்ற இளைஞர் இருவர் ஒருவர் பின் ஒருவராய்உட்புகுந்து ஹிட்லர், முசோலினி என்று கையொப்பமிட்டு அமைதியாகப் படித்துவிட்டு வெளியேறினார்கள். ஹிட்லர், முசோலினியின் கையொப்பங்களைக் கண்டதும் நூலகருக்கு வெயர்த்துக் கொட்டியது. தன் கண்காணிப்பில் இப்படி நடந்ததே என்று கண்கலங்கினார்.எனினும், சித்தங் கலங்காது ஹிட்லரையும், முசோலினியையும் எதுவிதத்திலும் கண்டு பிடிப்பதற்கு வழிவகுத்தார். மூன்றாம் நாள் இருவரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கு வேறுவழியில்லாமையினால் அவர்கள் மண்டபத்துக்குள் கால்வைத்தலாகாது எனத் தடை விதித்தார். அவர்கள் பெயர்களை அறிந்து அறிவித்தல் பலகையில் தடையுத்தரவை எழுதி ஒட்டியிருந்தார். இளைஞர் இருவரும் அதன்பின் அந்தப்பக்கம் தலைகாட்டவே இல்லை. அக்காலத்துச் சிட்டாசாரம் என்னும் ஒழுக்கம் அத்தகையது.

ஆங்கிலத்தில் ஈசிசெயர் என்றும் சோபா என்றும் வழங்கும் நீண்ட நாற்காலிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு, வசதிக்காக அங்கே இருந்தன. ஒரு நாள் இளைஞன் ஒருவர் அதிலே சாய்ந்து படுத்துப் படித்தபின், புத்தகத்தை நெஞ்சிலே உறங்க வைத்துவிட்டுத் தானுறங்கி குறட்டையும் விட்டபடிக் கிடந்தார்.

காலை, நண்பகல், மாலை ஆகிய முப்பொழுதுகளிலும் நேரில் சென்று மேற்பார்வை செய்து வந்த நகரபிதா சாம். ஏ. சபாபதி அவர்கள் உடனடியாக அலுவலகஞ் சென்று பணியாட்களை அனுப்பி உறங்கியவரைத் தட்டியெழுப்பி, நாற்காலிகளையும் அப்புறப்படுத்திவிட்டார். அதன்பின் வயது முதிர்ந்த ஓய்வூதியக்காரரும் நின்றும் இருந்தும் படிக்க வேண்டியவராயினர். இதை இங்கே குறிப்பிடுவதற்கும் காரணம் இருக்கிறது! படிக்கச் சென்று நூலகத்தில், பலரும் காலை மேசைமேல் வைத்தும், அருகிலிருக்கும் கதிரைமேல் வைத்தும் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதை நானும் நேரில் பார்த்திருக்கிறேன். கோவில் என்று எண்ணும் எம்போன்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என அவர்கள் உணர்ந்து, தம்மைத் திருத்தி, வாழ பழகவேண்டும்.

3.அன்றைய பத்திரிகைகள் அனைத்திலும் நூலகத் திறப்பு விழா ரத்து என்றும், மேயரும் உறுப்பினர்களும் பதவி துறப்பு என்ற செய்திகள் வந்தபின் - மிக முக்கியமான வரலாற்றுத் தவறாக நூல் நிலையத்தின பிரதான வாசலின் இடது புறத்தில் காணப்படும் 14.02.2003இல் நூலகம் திறக்கப்பட்ட செய்தியையுடைய நினைவுக்கல் உடனடியாக அகற்றப்பட வேண்டும்!

4. முன்னைய பாகங்களில் குறிப்பிட்ட நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் 01.06.1981இல் நடந்ததுதான் உண்மை! யாழ்பாணத்தில் அசம்பாவிதங்கள் 31.05.1981 ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் எமது கல்விக் கோவில் எனத் திகழ்ந்த - எமது பொது சன நூல் நிலையம் 1981 ஜுன் மாதம் முதலாந் திகதி திங்கட்கிழமையே எரியூட்டப்பட்டது!

5. பின்னர் 3 தடவைகள் அது பாரிய தேசதத்திற்குள்ளாகியிருக்கிறது!

1. 1985இல் மே மாதம் 3 திகதிகளில் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் சொல்கின்றன.

அ. சோமீதரனின் எரியும் நினைவுகளில் பதவிலிருக்கும் 9ஆந்திகதி மாலை.

ஆ. சி.வி.கே. சிவஞானம் அவர்கள் குறிப்பிடும் 10ஆந்திகதி

இ. 11ஆந்திகதி நூலகம் தகர்க்கப்பட்ட செய்தி 12ஆந்திகதி ஈழமுரசில் பிரசுரமாகியிருக்கிறது!

2. 24.08.1986 இல் ஷெல் தாக்குதலுக்குள்ளானது!

3. 15.05.1987இல் எரிக்கப்பட்டது!

ஆவணப்படுத்தலில் நான் முன்பு குறிப்பிட்ட 2 நூல்களைத் தவிர்த்து (மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, யாழ்ப்பாண பொது நூலகம் மீள்விக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர்) நானறிந்த வரை தற்போது நூலகம் சம்பந்தமாக தமிழில் 1. யாழ்ப்பாண நூல்நிலையம் - ஓர் ஆவணம் - மூதறிஞர் க.சி. குலரத்தினம் 2. யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு – என். செல்வராஜா 3. யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி.எஸ் துரைராஜா 4.ஒரு வரலாற்றுக் குற்றம் - NON ஆகியவற்றையே பார்த்திருக்கிறேன். இவற்றைவிட சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படம் - ('Burning Memories'- A Video documentary by Someetharan) மிகமுக்கியமானது!

எனது செய்திகளில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளேன் - அதற்கு ஆதாரமான செய்திகளை இங்கே இணைத்துள்ளேன்.

Saturday, April 19, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 14)

இன்றைய இந்தப் பகுதியுடன் நான் சேகரித்து வைத்திருக்கும் ஆவணங்களுடன் எனக்குத் தெரிந்த அத்தனையையும் பதிவிட்டு இக்கட்டுரையைப் பூர்த்தி செய்ய விரும்புகிறேன்! நான் பல தடவைகள் கேட்டதற்கு அமைவாக யாராவது புதிய தகவல்களைத் தந்தால் இதனைத் தொடர முடியும் இல்லாவிட்டால் இவற்றை வைத்துத் தான் என் ஆவணத்தைத் தயாரிகக் வேண்டும்!

பொறுப்பு வாய்ந்த ஒரு சில அரச அதிகாரிகள் (உண்மைகள் மறைக்கப்பட்டது ஒருபுறம் - வரலாற்றை மறந்தவர்கள்) தாம் பதவியிலுள்ளபொழுது நடைபெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் பேசாமல் இருந்துவிட்டு தமது வேலை முடிவடைந்து ஓய்வூதியம் பெற்ற பின்னர் தவறெனச் சுட்டிக் காட்டுவது எந்தவகையில் நியாயம்? அரசியல்வாதிகளுக்கும், அரச ஊழியர்களுக்குமிடையில் நிகழும் ஒரு சாதாரண பிரச்சினை இதுவாக இருக்கிறது - சட்டத்தில் இதற்கான திருத்தம் அவசியம்!

எந்தவிதமான படிப்பறிவுமற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டாலும் பரவாயில்லை - அமைச்சர்களாகி தமது இஷ்டத்திற்கு செயலாளர்களையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் தமக்கு விரும்பியபடி ஏற்பாடு செய்வது ஒருபோதும் நியாயமாகாது!இந்த விடயத்தில் பல சம்பவங்களை என்னால் உதாரணம் காட்டமுடியும்! யாழ்ப்பாண மாநகர சபையில் ஏறக்குறைய ஆணையாளரிடமிருந்த 15 வருட காலப்பகுதியின் பின் 1998இல் பொறுப்பேற்ற முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் அவர்கள் பல பாரிய முரண்பாடுகளுக்கிடையில் சபையை நடத்தியது! இதில் 15 வருட காலம் ஆணையாளர் தமது விருப்பிற்கு செய்பட்டாரோ அல்லது விடுதலைப் புலிகளின் நெருக்குவாரத்தினுள் இருந்தாரோ அதுபற்றி எதுவித தகவலை இன்றுவரை சொல்லவுமில்லை. ஆனால் ஜனநாயக முறைப்படி ஒரு தேர்தல் மூலம் தெரிவாகியவர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் ஏராளமுண்டு. ஏன் இன்றும்கூட முதலமைச்சருக்கும் பிரதம செயலாளர் முரண்பாடாயிருந்தாலும்சரி, வட மாகாண சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்குமிடையிலான முரண்பாடாயிருந்தாலும்சரி தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் பல அரச அதிகாரிகளுக்கு இடையிலும், அரசியல்வாதிகளுக்கிடையிலும் உண்டு!

04.06.1984இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் பிற்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பகுதி திறக்கப்பட்டபொழுது முன்னைநாள் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கேசந்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அமிர்தலிங்கம் அவர்களைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை அன்றைய தினபதிப் பத்திரிகையின் நிருபர் அழகாக செய்தியாகத் தொகுத்து வழங்கியிருந்தார்! நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்களையும் எந்த முறையில் நிகழ்வு நடைபெற்றது என்பதையும் விபரமாக ஒரே செய்தியில் குறிப்பிட்டிருப்பதுதான் அழகும்கூட!

அந்நிகழ்வில் பங்குகொண்டவர்களில் சிலர் தற்போது அந்த வரலாற்று நிகழ்வின் செய்திகளை மறைப்பதும் தவிர்ப்பதும்தான் - எனக்கு, (நான் அவ்விபரங்களை அறிந்திருப்பதால்) வேதனை தருகிறது! நடைபெறாத விடயங்கள் நடந்ததாக நினைவுக்கல் பொருத்தப்பட்ட பொழுது(2010இல்) நான் சுவிற்சர்லாந்திலிருந்து அதைச் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தேன். எல்லோருமே மௌனம் காத்ததுடன் மட்டுமல்ல தற்போது சபையில் உறுப்பினராக இருக்கும் சிலரின் திட்டமிட்ட செயலே இதுவென எனக்குத் தகவல் கிடைத்தது! பத்திரிகையில் அறிக்கைவிட்ட முன்னாள் ஆணையாளர்கூட 2009இன் பின்தான் அமிரதலிங்கம் அவர்களின் கல்லைப்பற்றியே கதைத்திருக்கிறார். அதற்கு முன் புலிகளுக்குப் பயந்து மௌனமாயிருந்தார்! நாங்கள் மாநகர சபையில் 2003இல் திறப்பு விழா செய்ய இருந்தபோது தேடிய அமிரின் நினைவுக் கல் - திறப்புவிழாப் புகைப்படம் எதுவுமே அன்று எம்கைகளுக்கு கிட்டவில்லை!அவரது 26.08.2009ஆந்திகதி வலம்பரி முழுப்பக்கக்கட்டுரையில் அந்தக் கல் பொருத்தப்பட வேண்டுமென பிரசுரமாகியிருக்கிறது. இதற்கு முதல் அந்தப் படம் எந்த வித ஆவணங்களிலும் வெளியாகியிருக்கவில்லை. புதிய திறப்பு விழா நினைவுக் கல் பொருத்தப்பட்டபோது அந்தக் கல்லும் புதிதாகச் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கிறது!
சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படத்தில் முன்னைய நூலகர் சுலோச்சனா ரகுநாதன் கருத்துத் தெரிவிக்கையில் 9.5.1985 ரொக்கட் லோஞ்சருடன் வந்த இளைஞரொருவரால் கோட்டை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்ட பொழுது தான் ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு நூலகத்தினுள் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டுமெனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆணையாளர் இராணுவ கொமாண்டருடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவித்த சமயத்தில் உடனடியாக அனைவரையும் அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி கூறியதைத் தொடர்ந்து நூலகத்தினுள் இருந்த ஏறக்குறைய 80பேர் வரையில் வெளியேறிய பொழுது கிட்டத்தட்ட மாலை 4.30 மணியாக இருக்கும் எனவும் பின்னர் அன்றிரவு சுமார் 9.30 மணியளவில் பாரிய குண்டுச்சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கிறார்.

ஆரம்பத்தில் இன்றே இதனை முடிக்கலாம் எனக் கருதியிருந்தாலும் ஒரு சிலருடைய பதிவிடும் யுக்தியை எண்ணும்போது எமது இந்தத் தமிழினம் எப்போது உருப்படும் என்ற சிந்தனை தோன்றுகிறது! ஆவணப்படுத்தலில் பின்வந்தோர் தமது ஆவணங்களில் எப்படி சில தகவல்களை மறைக்க சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பதை - யாரிடம் சொல்லி முறையிடலாம் என எண்ணத் தோன்றுகிறது! ஒரு தலைப்பட்சமாக எழுதப்படும் ஆவணப்படுத்தல் எங்கே எமது வரலாற்றைக் கொண்டுபோய் முடிக்கப் போகிறதோ தெரியவில்லை என்பதை மட்டும் நான் உறுதியாக கூறியபடி - ஏராளமான குழப்ப மனநிலையால் பின்னர் இன்னொரு தொடருடன் முடிக்கலாம் என இதை இத்தோடு முடிக்கிறேன்!