அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, April 10, 2014

என்னால் மறக்க முடியாத எங்கள் பெரியமாமா!

அமரர் வல்லிபுரம் கணேசானந்தன் (முன்னாள் பண்டாரவளை வல்லிபுரம் அன் சன்ஸ் உரிமையாளர்)

பிறப்பு : 12 ஒக்ரோபர் 1941 -- இறப்பு : 7 மார்ச் 2014

(இக்கட்டுரையில் குறிப்பிடும் அப்பு எனது தாயாரின் தந்தை - அமரர் முத்துக்குட்டி வல்லிபுரம் - முன்னாள் பண்டாரவளை வல்லிபுரம் அன் சன்ஸ் உரிமையாளர்) குரும்பசிட்டி அப்பு - அமரர் மூளாய் நாகலிங்கம் அவர்கள் (வெலிமடை - நாதன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர்), சித்தங்கேணி அப்பு - அமரர் சின்னத்தம்பி அவர்கள் (வெலிமடை - இந்திரா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்)


இன்றும் சோலையாகத் திகழும் எங்கள் அப்பு வீட்டில்தான் நான் பிறந்தேன்! அப்போது எங்கள் வீட்டில் எந்த நிகழ்வானாலும் சித்தங்கேணி அப்பு வீட்டுக்காரரும், குரும்பசிட்டி அப்பு வீட்டுக்காரரும் ஒன்றுகூடுவது வழமை. ஏன் அம்மம்மாவின் வளர்ப்பில் ஏறக்குறைய ஒரு வருடம் நான் வளர்ந்திருக்கிறேன். என்னுடைய முதலாவது பிறந்தநாளில் அம்மம்மாவின் 31. அந்தியேட்டிக்கு வந்தவர்கள் தொட்டிலில் இருந்த என்னை வாழ்த்திப் போனதாக அம்மா சொல்லுவா! நானறிந்தவரை அந்த வீட்டில் அப்பு இருக்கும்வரை நடந்த இரண்டு நிகழ்வுகளை மறக்கமுடியாது. ஒன்று எனது தம்பி துளசியின் மரணச் சடங்கு - மற்றையது பெரிய மாமாவின் திருமணம். 1974 ஒக்ரோபரில் குரும்பசிட்டி அம்மன்கோவிலில் நடந்த பெரிய மாமாவின் திருமணத்தினை மறக்க முடியாது. கார்களில் மூளாயிலிருந்து குரும்பசிட்டி அப்பு வீடு போனதும், பின் அங்கிருந்து அம்மன் கோயில் போனதும், அங்கு திருமணம் முடிந்தபிறகு திரும்ப குரும்பசிட்டி அப்புவீடுபோய் மூளாய் திரும்பியதும், இன்னும் நினைவாயிருக்கிறது. அப்பு 1974 நவம்பரில் காலமானார். அன்று எனக்கு 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை. சின்னமாமா மோட்டார் சைக்கிளில் வந்து என்னை விக்ரோறியாக் கல்லூரியிலிருந்து வீட்டுக்குக் கூட்டிப்போனார். அப்புவின் மரணச்சடங்கில் கோப்பாய் காந்தி அப்பு தேவாரம் பாடியதும், பொற்சுண்ணமிடிக்கும்போது பெரியமாமாவும் சின்னமாமாவும் அழுததும் கணமுன்னே இப்பவும் தெரிகிறது. இங்கே நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். நாம் குழப்படி செய்தால் எல்லாரிடமும் அடிவாங்குவது வழமை. அப்பாவிடம் மிகமோசமாகவும், அம்மாவிடமும், மாமாமாரிடமும் ஓரளவும் நான் வாங்கிக் கட்டியிருக்கிறேன். இங்கு நான் குறிப்பிட வந்ததென்னவென்றால் எனக்கு அப்போது 9 வயது – மாமாமார் இருவரையும் காந்தியப்பு பொற்சுண்ணம்பாடி தோளில் தட்டியபோது குலுங்கிக் குலுங்கி அழுதது. நான் குழப்படி செய்து அவர்களிடம் அடிவாங்கும்போது அழுதது போல. அவர்களும் அழுகிறார்களே! என அப்போது மனதுள் எண்ணிச் சிரித்தேன். பின்னர்தான் அதன் ஆழமான அர்த்தம் எனக்குத் தெரிந்தது.

பண்டாரவளையில் எங்கள் அப்புவின் வல்லிபுரம் அன் சன்ஸ் கடை காந்திமதி ஸ்ரோர்ஸ_க்கும், ஹிதாயா ஹோட்டலுக்கும் நடுவில் இருந்தது. வெளிமடையில் இந்திரா ஸ்ரோர்ஸ_ம், நாதன் ஸ்ரோர்ஸ_ம் அருகருகே இருந்தன. அரசாங்க இலிகிதரான எனது அப்பாவின் புகையிரதச்சீட்டின் மூலம் நாம ஒவ்வொருவருடமும் பண்டாரவளை வெளிமடை என புதுவருடத்திற்கு குடும்பமாக நானும் தம்பிகள் சுகந்தன் அகிலனோடு சென்று, அங்கு ஓரிரு நாட்கள் தங்கி வருவது வழமை. இதிலும் பெரியமாமா தந்கியிருந்த பண்டாரவளைவீடு – சுவாமியார் வீடு என அழைக்கப்படுவதும் அங்கு பாவிக்காமலிருக்கும் ஒரு ஹோலில் திருவாசியுடன் கூடிய ஒரு மேடையும், அதன்கீழ் ஒரு நில அறையும் இருப்பதை நாம் ஒவ்வொரு தடவையும் மறவாது பார்த்து வருவது வழமை. சிறுவர்களான எங்களுக்கு புதிய பணத்தாள்கள் கைவிசேடமாகக் கிடைப்பதும் நாம் அதனை அம்மா அப்பாவிடம் கொடுப்பதும் மறக்க முடியாது. 1977 கலவரங்களின் பின் அனுராதபுரத்திலிருந்து அகதிகளாக வந்த எமக்கு உதவியவர்களில் பெரியமாமாவும் குறிப்பிடத்தக்கவர். நான் க. பொ.த உயர்தரம் கற்கும்வரை எனது பிரத்தியேக வகுப்புக்களுக்காக பண உதவி செய்ததை நான் இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும். 1983 கலவரங்களினால் எமது கடைகள் அனைத்தும் எரியூட்டப்பட்டன. மாமாவும், குணம்மாமாவும், எங்கள் அப்பாவும் கொழும்பில் சிராவஸ்தியில் 2 நாட்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஏயப்பாவின் உத்தியோகபூர்வ வீட்டுக் கூரையினுள் ஒளித்திருந்த பின் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வந்ததையும் எனது அம்மா நினைவுபடுத்தினா! எங்கள் வல்லிபுரம் அன் சன்ஸ் கடையிலிருந்து லொறியில் வந்த எரிந்த பெரிய மூட்டை நிறுக்கும் தராசும், காசு வைக்கும் உடைந்த அயன் சேர்வும் மறக்க முடியாதன.

குரும்பசிட்டியைப் பற்றியும் நான் வரலாறு கருதி சில விடயங்களை பதிவிட வேண்டும், மூளாயைப் போலவே குரும்பசிட்டியிலும், சித்தங்கேணியிலும் அடுத்தடுத்த வீடுகளில் பெற்றோரும் பிள்ளைகளும் உறவினர்களும் வாழ்ந்து வந்தது அந்தக்காலம். அதிலும் சித்தங்கேணி அப்பு தன் பிள்ளைகளுக்கு ஒரே வளவிலேயே 4 வீடுகள் கட்டியிருப்பது உண்மையிலேயே வியக்கத்தக்கது. குரும்பசிட்டியில் கட்டுவன் சந்தியிலிந்து ஒழுங்கையால் போனால் முதலில் வருவது பராமாமிவீடு. அதற்கடுத்தது அப்புவீடு. அதற்குப் பிறகு பெரியப்பா வீடு. அடுத்தது ஒரே பக்கத்தில் புளியடி நின்ற அந்த வளவுக்குச் சொந்தக்காரரான எங்கள் பெரியமாமாவீடு. முன்பாக குணம்மாமாவீடு. அதற்கடுத்ததாக சின்னக்குஞ்சக்காவீடு. 1976இல் பிரபு பிறந்தது முதல் பெரியமாமா வீடு கட்டி புதுதாக குடியேறியது, அந்த வீட்டில் நிரூபா பிறந்தது இவையும் மறக்க முடியாத நிகழ்வுகள். இன்று அந்த ஊரும் மிக அழகான வீடுகளும், மிக நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பூ மரங்களும், முக்கனிகள் நிறைந்த சோலைப் பிரதேசமும் எந்நிலையில் இருக்கின்றன என எவருக்கும் தெரியாது. மூளாயிலிருந்து ஏயப்பாவின் காரிலும் பின் ஜீப்பிலும் நாம் தண்ணீர் எடுத்துச் செல்வோம்! ஏயப்பா வீட்டில் செம்பாட்டு மண் பறிக்கப்பட்டு பூக்கண்டுகளும் வளர்த்தோம். எல்லா இடமும் சுடுகாடாகிக் கிடக்கிறது!
மாமாவுடைய வீட்டில் தங்கியிருந்து படித்த காலங்களில் ஒவ்வொரு பூரணை தினங்களிலும் முழுநிலா இரவுச் சாப்பாடு (Moon Light Dinner) என்று தொடங்கி குணம்மாமா வீட்டிலும், பெரியமாமா வீட்டிலும் இரவு வீட்டு விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு முற்றத்தில் வட்டமாக கதிரைகளை அடுக்கி இராப்போசனம் அருந்தியதெல்லாம் ஒருபோதும் என்நெஞ்சை விட்டகலாத அருமையான பொழுதுகள்! இவை இனி ஒருபோதும் திரும்ப எம்மூரில் வராது! சொந்தக்காரரும் முன்னரைப் போல அருகிலும் இல்லை! உறவினர்களும் ஒன்று சேர்ந்து நேரத்தையும் முன்புபோல செலவழிக்கவும் தயாராயிருக்க மாட்டார்கள்! இயந்திரமான வாழ்க்கை முறை இன்று குசலம் விசாரிக்க மாத்திரம் நேரத்தை ஒதுக்குகிறது.

சுவிற்சர்லாந்தில் இருந்தகாலத்தில் அடிக்கடி மாமாவுடன் தொலைபேசியில் பேசுவேன். நான் செய்யும் வேலைபற்றி மிக விருப்பத்தோடு அவருடன் அளவளாவியது என்றைக்கும் மறக்க முடியாது! பேசி முடித்து வைக்கிறேன் என்றால் தானாக இந்தா ஒரு கதை மாமியோடையும் கதை என்று சொல்லி புஸிமாமியின் குரலையும் கேட்கப்பண்ணிவிட்டுத்தான் தொடர்பை துண்டிப்பார். நிரூபாவுடன் ஓரிரு தடவை தொலைபேசியிலும், பல முறை மின்னஞ்சலிலும் தொடர்பைக் கொண்டிருக்கிறேன்!

மாமாவுடைய பிரிவும் திடீரென எங்கள் அப்புவுடைய மறைவுபோல நடந்திருக்கிறது. பெரியமாமாவின் திருமணத்தின் பின் அப்பு இறந்தார். பெரியமாமா நிரூபாவின் திருமணத்தை நல்ல முறையில் நடத்தியிருந்தார். சுகந்தனுக்கு படங்களை அனுப்பி அவற்றை அல்பமாகத் தரும்படி கேட்டிருந்தார். பிறகு இங்கு வர திட்டமிட்டிருந்த வேளையில் திடீரென அவர் பிரிந்துவிட்டார். மூளாய்ப் பிள்ளையார் கோவிலில் எங்கள் குடும்பத்தின பெயரால் நடக்கும் நவராத்திரி பூசையில் சரஸ்வதி பூசை இறுதி இரு நாட்கள் மாமாவின் உபயம். நவராத்திரி 9 நாட்களாக குறைந்தாலும் சரி 10 நாட்களாக கூடினாலும் சரி மாமாவின் திருவிழாவில்தான் மாற்றம். அந்தப் பூசையை விடாது இன்றுவரை நடத்திய அவரது பக்தியைக் குறிப்பிடும்போது இன்னுமொன்றை நினைவுபடுத்துவது பொருத்தமாகும். செல்வச் சந்நதி முருகன் மீது அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் மாமாவுடன் 1983 இன் இறுதிக் காலங்களிலும், 1984இல் அவர் கனடா செல்லும்வரையும் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் தட்டிவானில் செல்வது வழக்கம். காலையில் போனால் மாலைவரை அங்கேயே பொழுதைக் கழித்து வருவதும் மறக்க முடியாது. நாம் சபரி மலை போகும்வேளையில் எல்லாம் நிரூபாவுக்காக எம்மை வேண்டுமாறு ஒவ்வொரு தடவையும் கேட்டுக் கொள்வார்.

எங்கள் அப்பு அம்மம்மா மற்றும் குரும்பசிட்டி அப்பு ஆச்சி, சித்தங்கேணி அப்பு ஆச்சி இவர்கள் எல்லாரும் யோகர் சுவாமிகள் சொன்னதுபோல “தன்னைப் போலச் சகலமும் ஓம்புக – விண்ணைப் போல வியாபகமாகுக – கண்ணைப் போலக் காக்க அறத்தை” தம்தம் மனம்போல விசாலமான நாற்சார் வீடுகளைக் கட்டி பரோபகாரிகளாகத் திகழ்ந்தார்கள்! அவர்களின் வம்சத்தில் வந்த நாம் அவர்களின் நல்ல பண்புகளையுடைய ஒரு சந்ததியினர் அவர்களைப் போல வாழவேண்டும்! இன்றுள்ள அவர்களது சந்ததியினர் அறிய வேண்டும் என்பதற்காக இதனை சுருக்கமாகவே எழுதியுள்ளேன். கனடாவில் மாமாவின் அந்தியேட்டி நிகழ்வுகள் ஐயப்பன் கோவில் சூழலில் நடைபெற இருப்பது ஓரளவு மனதுக்கு ஆறுதலைத் தருகிறது! தத்வமஸியின் வாக்கியத்திற்கு அமைவாக வாழ்ந்தது எம்குடும்பம். அப்புவைப் போல மாமாவும், மாமாவைப் போல அவரது வம்சமும் தழைக்க அந்த தர்மசாஸ்தாவை வணங்கி என் மனத்தில் உதித்த எண்ணங்களில் ஒரு சிலவற்றை இன்றைய நாளில் அஞ்சலியாக சமர்ப்பிக்கின்றேன். குறை ஏதும் இருந்தால் பொறுத்து - இலங்கையிலிருந்து அவரது முழு அன்பையும்பெற்ற அவரது இளைய சகோதரி ராசாவின் மூத்த மைந்தனாக இந்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். சிறுவயதில் தொட்டிலிலிருந்த தன்னை "ராசா ராசா" என்று அன்பொழுக அழைத்து ஆட்டி தனக்கு நிரந்தரமாக ராசா என்ற பெயரைத் தந்தவர் தன் "அண்ணை" என அம்மா அழுதபடி சொல்லியதை அவரும் தனது கிறுக்கலில் எழுதியிருக்கின்றார். 30 வருடஙகளின் பின் அவரது வரவை எதிர்பார்த்திருந்த எனது அம்மாவும் நாங்களும் ஒரு விதத்தில் கவலையடைந்திருந்தாலும் இன்னொரு பக்கத்தில் பெருமையடைகிறோம்! அவரையும் புஸிமாமியையும், பிரபுவையும், நிருபாவையும், வினோ அக்காவையும் விமான நிலையத்திற்குக் கூட்டிச் சென்று கனடாவுக்கு அனுப்பிவைத்தவர் என் அப்பா! எங்கள் குடும்பத்தில் பல இழப்புக்கள் - என் தம்பி துளசி – என் அப்பா – ஏன் நானும்கூட - ஏதோ அப்பு அம்மம்மா செய்த பலன் செத்துவிட்டான் என்று சொன்ன பின்பும் உயிருடன் பட்ட நன்றிக்காக இதை எழுத இன்னும் உயிருடன் என்னைத் தக்க வைத்த - ஆபத்தில் காத்த ஸ்ரீ தர்மசாஸ்வாகிய அந்தக் காந்தமலை ஜோதியை மனதார பிரார்த்தித்து முடிக்கின்றேன்!

“ஓம் சத்குரு நாதனே சரணம் ஐயப்பா!!!

என்றும் மறவாத நன்றியுள்ள,

மூளாய் மருமகன்,

தங்க. முகுந்தன்.

குறிப்பு - எதிர்வரும் 12.04.2014 சனிக்கிழமை நண்பகல் பெரியமாமாவின் அந்தியேட்டி நடக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் கோவில் குருசுவாமிகளையும், குறிப்பாக சுந்தரலிங்கம் சுவாமிகளையும் நன்கு தெரியும்! அவர்கள் சொந்த ஊரான அனலைதீவு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவிலுக்கு 1985ஆம் ஆண்டு தேர்த்திருவிழாவில் ஊரெழு வைத்தியநாத சிவாச்சாரியாருடன் கலந்து கொண்டதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். சுந்தரலிங்கம் சுவாமிகள் கொள்ளுப்பிட்டி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் எம்முடன் யாத்திரை வந்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.


No comments: