அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, April 23, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 15)


எனது இந்த ஆராய்வு நூலகத்துடன் மாத்திரமே சம்பந்தப்பட்டதாகையால் அதை மீறி வேறு எதிலும் ஆர்வம் செலுத்த விரும்பவில்லை!ஆனாலும் சில வரலாற்றைப் பதிவிடும்போது நூலகத்தைத் தாண்டிச் செல்லவும் வேண்டியிருக்கிறது. அதனைத் தனியாகப் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்! இறுதியாக தற்போது முடிவுக்கு வரும்போது எங்கெங்கே என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்! எங்கே மறைக்கப்பட்டவை சேர்க்கப்பட வேண்டும்! என்பதை நூலகம் சம்பந்தமாக ஈடுபாடு கொண்டவர்களுக்கு மாத்திரம் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.


1. நூலகத்தின் முன்பாக இருந்ததாகக் கருதப்படும் இந்த மிக அற்புத வேலைப்பாடுகளைக் கொண்ட யாழ்மங்கையின் சிலை எங்கே! அதைப்பற்றி இன்று(23.04.2014) நூல் நிலையத்திற்குச் சென்று திரு. என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பைப் பார்வையிட்டபோது நூலகர் நெஞ்சை விட்டகலா நினைவலைகள் முன்னாள் பிரதம நூலகர் கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்களின் கட்டுரையில் 113 ஆம் பக்கத்தில் "நூலகராகிய எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை சில விஷமிகளால் நூலகத்திலிருந்து பெயர்க்கப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவில் எறியப்பட்டது. இச்சிலை பின்னர் அங்கு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் வேறொரு சரஸ்வதி சிலை நூலக முகப்பில் இன்றும் காட்சியளிக்கின்றது" என்றிருக்கிறது! அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மனக்குமுறலை எழுதுகிறார். அதில் ஆணையாளருக்கும் நூலகருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினை தெரிகிறது. இதை நான் குறிப்பிடுவது ஏனெனில் இந்தக் கதையில் சம்பந்தப்பட்டவர்களை இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிய மாட்டார்கள்! அவர்கள் யாரென விளக்க வேண்டிய அவசியம் ஆவணப்படுத்தலில் மிக முக்கியமானது என்பதையே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

2. யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம் என்னும் மூதறிஞர் க.சி.குலரத்தினம் அவர்களின் புத்தகத்தில் பக்கம் 88ல் குறிப்பிட்ட அமெரிக்கரின் நன்கொடைப்பணம் சம்பந்தமான தமிழில் பொறிக்கப்பெற்ற நினைவுக் கல்லுக்கு என்ன நடந்தது!(யாரும் இதைப்பற்றி அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை)மேலும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2 மிகவும் நகைச்சுவையான விடயங்களையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்!

ஏனெனில் இன்று(23.04.2014) நான் வாசித்துக் கொண்டிருந்த மேசையில் யாரோ ஒரு தம்பி தன் பெயரை பதித்திருந்தார். அதை வாசித்துக் கொண்டிருந்த பொழுது பார்த்தபடியால் குறிப்பிடத் தோன்றியது.

அதாவது அங்கே வாசிக்கச் சென்ற இளைஞர் இருவர் ஒருவர் பின் ஒருவராய்உட்புகுந்து ஹிட்லர், முசோலினி என்று கையொப்பமிட்டு அமைதியாகப் படித்துவிட்டு வெளியேறினார்கள். ஹிட்லர், முசோலினியின் கையொப்பங்களைக் கண்டதும் நூலகருக்கு வெயர்த்துக் கொட்டியது. தன் கண்காணிப்பில் இப்படி நடந்ததே என்று கண்கலங்கினார்.எனினும், சித்தங் கலங்காது ஹிட்லரையும், முசோலினியையும் எதுவிதத்திலும் கண்டு பிடிப்பதற்கு வழிவகுத்தார். மூன்றாம் நாள் இருவரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கு வேறுவழியில்லாமையினால் அவர்கள் மண்டபத்துக்குள் கால்வைத்தலாகாது எனத் தடை விதித்தார். அவர்கள் பெயர்களை அறிந்து அறிவித்தல் பலகையில் தடையுத்தரவை எழுதி ஒட்டியிருந்தார். இளைஞர் இருவரும் அதன்பின் அந்தப்பக்கம் தலைகாட்டவே இல்லை. அக்காலத்துச் சிட்டாசாரம் என்னும் ஒழுக்கம் அத்தகையது.

ஆங்கிலத்தில் ஈசிசெயர் என்றும் சோபா என்றும் வழங்கும் நீண்ட நாற்காலிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு, வசதிக்காக அங்கே இருந்தன. ஒரு நாள் இளைஞன் ஒருவர் அதிலே சாய்ந்து படுத்துப் படித்தபின், புத்தகத்தை நெஞ்சிலே உறங்க வைத்துவிட்டுத் தானுறங்கி குறட்டையும் விட்டபடிக் கிடந்தார்.

காலை, நண்பகல், மாலை ஆகிய முப்பொழுதுகளிலும் நேரில் சென்று மேற்பார்வை செய்து வந்த நகரபிதா சாம். ஏ. சபாபதி அவர்கள் உடனடியாக அலுவலகஞ் சென்று பணியாட்களை அனுப்பி உறங்கியவரைத் தட்டியெழுப்பி, நாற்காலிகளையும் அப்புறப்படுத்திவிட்டார். அதன்பின் வயது முதிர்ந்த ஓய்வூதியக்காரரும் நின்றும் இருந்தும் படிக்க வேண்டியவராயினர். இதை இங்கே குறிப்பிடுவதற்கும் காரணம் இருக்கிறது! படிக்கச் சென்று நூலகத்தில், பலரும் காலை மேசைமேல் வைத்தும், அருகிலிருக்கும் கதிரைமேல் வைத்தும் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதை நானும் நேரில் பார்த்திருக்கிறேன். கோவில் என்று எண்ணும் எம்போன்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என அவர்கள் உணர்ந்து, தம்மைத் திருத்தி, வாழ பழகவேண்டும்.

3.அன்றைய பத்திரிகைகள் அனைத்திலும் நூலகத் திறப்பு விழா ரத்து என்றும், மேயரும் உறுப்பினர்களும் பதவி துறப்பு என்ற செய்திகள் வந்தபின் - மிக முக்கியமான வரலாற்றுத் தவறாக நூல் நிலையத்தின பிரதான வாசலின் இடது புறத்தில் காணப்படும் 14.02.2003இல் நூலகம் திறக்கப்பட்ட செய்தியையுடைய நினைவுக்கல் உடனடியாக அகற்றப்பட வேண்டும்!

4. முன்னைய பாகங்களில் குறிப்பிட்ட நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் 01.06.1981இல் நடந்ததுதான் உண்மை! யாழ்பாணத்தில் அசம்பாவிதங்கள் 31.05.1981 ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் எமது கல்விக் கோவில் எனத் திகழ்ந்த - எமது பொது சன நூல் நிலையம் 1981 ஜுன் மாதம் முதலாந் திகதி திங்கட்கிழமையே எரியூட்டப்பட்டது!

5. பின்னர் 3 தடவைகள் அது பாரிய தேசதத்திற்குள்ளாகியிருக்கிறது!

1. 1985இல் மே மாதம் 3 திகதிகளில் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் சொல்கின்றன.

அ. சோமீதரனின் எரியும் நினைவுகளில் பதவிலிருக்கும் 9ஆந்திகதி மாலை.

ஆ. சி.வி.கே. சிவஞானம் அவர்கள் குறிப்பிடும் 10ஆந்திகதி

இ. 11ஆந்திகதி நூலகம் தகர்க்கப்பட்ட செய்தி 12ஆந்திகதி ஈழமுரசில் பிரசுரமாகியிருக்கிறது!

2. 24.08.1986 இல் ஷெல் தாக்குதலுக்குள்ளானது!

3. 15.05.1987இல் எரிக்கப்பட்டது!

ஆவணப்படுத்தலில் நான் முன்பு குறிப்பிட்ட 2 நூல்களைத் தவிர்த்து (மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, யாழ்ப்பாண பொது நூலகம் மீள்விக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர்) நானறிந்த வரை தற்போது நூலகம் சம்பந்தமாக தமிழில் 1. யாழ்ப்பாண நூல்நிலையம் - ஓர் ஆவணம் - மூதறிஞர் க.சி. குலரத்தினம் 2. யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு – என். செல்வராஜா 3. யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி.எஸ் துரைராஜா 4.ஒரு வரலாற்றுக் குற்றம் - NON ஆகியவற்றையே பார்த்திருக்கிறேன். இவற்றைவிட சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படம் - ('Burning Memories'- A Video documentary by Someetharan) மிகமுக்கியமானது!

எனது செய்திகளில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளேன் - அதற்கு ஆதாரமான செய்திகளை இங்கே இணைத்துள்ளேன்.

No comments: