அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, June 18, 2010

இனித் தேர்தலில் போட்டியிடுவதில்லை! வன்னி மீள் குடியேற்றம், அபிவிருத்தி ஆகிய இரண்டையும் என்னிடம் விட்டுவிடுங்கள் - ஆனந்தசங்கரி

2010-06-16
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு

அன்புடையீர்


மீள் குடியேற்றப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் பரிதாப நிலை


மீள் குடியேற்றப்பட்ட உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் பரிதாப நிலைமை பற்றி தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர என்னை அனுமதிக்கவும். பொறுமையுடனும் அவர்களின் மீது மிக்க அனுதாபத்துடனும் இதைப்படிப்பீர்களேயானால் நிச்சயமாக உங்களுக்கு என் மீது அதிருப்தி ஏற்படமட்டாது. 1970ம் ஆண்டு நீங்களும் நானும் முறையே பெலியத்த, கிளிநொச்சி ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்துக்கு தெரிவானோம். நீங்கள் நம் அனைவரிலும் இளையவராகவும், நான் உங்களிலும் 14 வயது மூத்தவராகவும் இருந்தோம். அரசியலிலும் நான் உங்களுக்கு மூத்தவனே.

நீங்களும் உங்கள் குழுவினரை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து உரையாடிய விடயங்கள் பற்றி தெரிவித்த கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. அக்கருத்து இடம்பெயர்ந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையம் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தடுப்புக்காவலில் உள்ள தம் பிள்ளைகள் தாமதமின்றி விடுவிக்கப்படுவார்கள் என்றும், தேவைக்கேற்ப வீடுகள் புதிதாக கட்டியும், தேவையானவற்றை திருத்தியும், கூரையற்றவைக்கு கூரை போட்டுக் கொடுகப்படும் என்றே நம்பியிருந்தனர்.

பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளே இடம் பெயர்ந்த மக்களின் பெறுமதி மிக்க பெரும் சொத்தாகும். அதிகாரிகள் அப்பிள்ளைளை சிறிய அளவில் விசாரித்து விடுதலை செய்கின்றோம் என்ற வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டர்கள் என்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். நலன்புரி நிலையங்களுக்கு வந்தடைந்த ஒரு நாள் பயிற்ச்சி பெற்றவர்கள் கூட உயர் அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்தலும் கூட வந்தது. தமக்கு மாத்தளனில் இருந்த போது தப்பிப் போக சந்தர்ப்பங்கள் இருந்தும், போர் முனையில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுடன் தான் போகவேண்டும் என்ற உறுதியுடன் இருந்ததாக அம்மக்களில் பலர் கூறுகின்றார்கள். அவர்களுக்கு மிக்க துன்பத்தை கொடுக்கும் விடயம் யாது எனில், யார் தமது பிள்ளைகளை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்த்தார்களோ அதே ஆட்கள் இராணுவத்தின் புலனாய்வு துறையினர்க்கு தம் பிள்ளைகளை அடையாளம் காட்டுகின்றனர் என்பதே. பல தீவிர போராளிகள் பெரும் தொகைப் பணத்துடன் முகாம்களில் இருந்து தப்பி வந்து நம் நாட்டிலோ அன்றி அயல் நாடுகளிலோ பாதுகாப்பாக வாழ்கின்றனர். மேலும் சிலர் சுகந்திரமாக மக்கள் மத்தியில் வாழ்கின்றனர். அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு ஆலோசனை வழங்கிவந்த அதே பேர்வழிகள் இன்று அரச படைகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். பல பெற்றோர்கள் இவர்களை அடையாளம் காட்டவும் தயாராக உள்ளனர்.

எனது ஆலோசனைகளை கேட்பீர்களேயானால் எதுவித பிரச்சனையோ எதிர்ப்போ இன்றி அவர்களை விடுதலை செய்ய முடியும். ஒரு முதிய சட்டத்தரணி, அத்தியட்சகர் தரத்தில் சேவையில் உள்ள அல்லது இளைப்பாறிய ஒரு பொலீஸ் அதிகாரி, ஒரு கௌரவமான பிரஜை ஆகிய மூன்று பேர் கொண்ட சில குழுக்களை அமைத்து ஒவ்வொரு தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களினையும் விசாரித்து அவர்களின் பிண்ணனி பெற்றோரின் அபிப்பிராயம் முதலியனவற்றை அறிந்து, ஆர்வத்துடன் இயக்கத்தில் செயற்படாதவர் எனக் கருதினால் அக்குழுக்களில் சிலர் இவ் சம்மந்தப்பட்டவரை விடுவிக்கலாம். இக் குழுக்கள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டுமென தீர்மானிக்க வேண்டியது தாங்களே. இது உடனடியாக செய்யக்கூடியதாகும். இதே அடிப்படையில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கும் இக் குழுக்களின் சிபார்சில் விடுவிக்கலாம் அல்லது பிணையில் செல்ல சிபார்சு செய்யலாம். கடும் போக்காக செயற்பட்ட சிலர் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை தெரிவிப்பீர்களேயானால் தம்பிள்ளைகளை காணவில்லை எனத் தவிக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா இல்லையா என அறிந்து கொள்ள முடியும்.

ஐனாதிபதி அவர்களே, வன்னியிலும் - வட கிழக்கின் வேறு பல்வேறு பகுதிகளிலும் நடந்துள்ளவை ஒரு சிறிய சூறாவளியோ அல்லது ஓர் சிறிய பூமி நடுக்கமோ அல்ல என்பதையும், நாட்டின் 25 மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களில் வாழ்ந்த சில இலட்சம் மக்களின் வாழ்வையும் அவர்களின் இருப்பிடங்களையும் நேரடியாக பாதித்துள்ள சம்பவம் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களும் அழிந்து நாசமாகி பல்லாயிரக்கணக்hன வீடுகளும் தரைமட்டமாகியும் இன்னும் பல மோசமாக உடைந்து மீளக்கட்ட வேண்டிய நிலையில் உள்ளன. பெரும் தொகையான வீடுகள் யன்னல், கதவுகள், வளைகள், தீராந்திகள் கூட இல்லாத நிலையில் உள்ளன. இதை தொடர்ந்து மோசமாக வவுனியா மன்னார் மாவட்டங்களும் இதற்கடுத்ததாக யாழ்ப்பாண மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை பற்றி நான் அறியேன். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் கணக்கிடமுடியாத அளவாகும். சுனாமியே படுமோசமாக பெரிய அளவில் பாதிப்பை நம் நாட்டில் ஏற்படுத்திய சம்பவமாகும். சில மணித்தியாலங்களில் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் அதன் தாக்கம் ஐந்து ஆண்டுகளின் பின்பு கூட இன்னும் உணரக்கூடியதாக உள்ளது. ஆனால் வன்னியின் பெரும்பகுதியை நாசமாக்கிய யுத்தம் சில மாதங்கள் நீடித்தன. கிளிநொச்சி, முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னியில் ஏற்பட்ட பெரும் உயிர் இழப்பும் சொத்தழிவுகளும் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு மிக பெரியதாகும்.

ஐனாதியதி அவர்களே, கண்ணால் பார்த்தால்தான் நம்ப முடியுமாதலால் நீங்கள் ஒரு தடவை இவ்வாறு நாசமாக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும். மீளக் குடியேற்றப்பட்ட இவர்களின் பரிதாப நிலையை அண்மையில் சென்று பார்த்த போது என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கிளிநெச்சியில் வாழ்ந்து, அங்கே ஆசிரியராக கடமை ஆற்றி, நீண்டகால பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்ததை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அங்குள்ளவர்களில் அநேகரை பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவு பரீட்சயமானவர்கள். யாழ் தேர்த்தல் மாவட்டத்தில் உள்ள ஏனைய 10 பாராளுமன்ற தொகுதிகளையும் விட இருமடங்கு பெரியதாகிய கிளிநொச்சி தொகுதியின் மூலை முடக்குகள் எல்லாம் நான் அறிவேன். கிளிநெச்சியை தனி மாவட்டமாக்கினேன். கரைச்சி கிராமசபை தலைவராகி 43 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்தை கொண்டுவந்ததும் நானே. கிளிநொச்சி பட்டணசபைத் தலைவராகவும் தொண்டாற்றியுள்ளேன்.

தயவு செய்து நான் அரசியல் இலாபம் தேடுவதாக எண்ணவேண்டாம். அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் என்னால் சேவைசெய்யப்பட்ட வன்னிமக்கள், தப்பாக வழி நடத்தப்பட்டடுள்ளனர். என்னைப் போல் அவர்களுக்கு அக்கறையுடன் சேவையாற்ற எவரும் செல்லமாட்டார்கள். வன்னிமக்கள் தாங்கமுடியாத அளவு கஸ்ட்டப்பட்டுவிட்டார்கள், தாங்கமுடியாத அளவு என்று இரண்டொரு வருடங்கள் அல்ல கால் நூற்றாண்டுக்கும் மேலாக! அவர்களை அக்கறையுடனும் பாதுகாப்பாகவும் கவனிக்க வேண்டும்.

இனித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வாந்துள்ளேன். அவர்கள் கவனிக்கப்படும் முறை எனக்கு திருப்தியில்லை. தயவு செய்து வன்னி மீள் குடியேற்றம் அபிவிருத்தி ஆகிய இரண்டையும் என்னிடம் விட்டுவிடுங்கள். கலங்கிய குட்டையில் யாரையும் மீன் பிடிக்க விடாதீர்கள். சகல அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் வன்னியில் சேவை செய்யவிடுங்கள். அவர்கள் மீது நம்பிக்கை இன்றேல் அவர்களின் நடவடிக்கைகளை அவதானியுங்கள். விடுதலைப் புலிகள் காலத்தில் நடந்தவற்றை மறந்து விடுங்கள். ஏன் எனில் பெரும் நிதி வளங்களை கையாளும் அரச ஸ்தாபனங்கள் கூட புலிகளுக்கு “கப்பம்” கட்டி வந்துள்ளன. மீள் குடியமர்ந்துள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டு. இந்த ஸ்தாபனங்களால் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய உதவிகளை ஏன் கெடுக்க வேண்டும். தென் இலங்கையை சேர்ந்த சில ஸ்தாபனங்களும் இவர்களுக்கு உதவ விரும்புகின்றன.

இறுதியாக ஐனாதிபதி அவர்களே, ஏற்பட்டுள்ள பெரும் அழிவுக்கு அரசை முழுமையாக குற்றம் கூறமுடியாவிட்டாலும் வடக்கு கிழக்கில் வீடில்லா மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டிய பொறுப்பை அரசு தட்டிக்கழிக்க முடியாது. 50000 வீடுகளை கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்தமையை பாராட்டிக்கொண்டு இந்தப் பிரச்சனையில் மற்றைய நாடுகளுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் பேசினால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் உடன்படுவார்கள். ஓரே அடியாக அத்தனையையும் இழந்து ஒட்டாண்டியாக நிற்கும் மக்கள் நட்ட ஈடு கேட்பதை நியாயமற்ற கோரிக்கையாக கொள்ள முடியாது. நன்கொடை வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் குழு அழிவுகள் ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட வைப்பது நன்றாகும்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

2 comments:

AkashSankar said...

சிங்களவனிடம் கெஞ்சினாலும் கெஞ்சுவேன்...மானதோடு தமிழனாய் வாழமாட்டேன் என்கிறார் ஒரு பெரியவர்...

தங்க முகுந்தன் said...

மக்களைக் கொன்றுவிட்டு - வெள்ளைக் கொடிபிடித்து - போராடி மடிந்த வீரர்களைக் கொச்சைப்படுத்தியவர்களைவிட - பிச்சை ஏந்தும் நிலையிலிருக்கும் ஒட்டுமொத்த மக்களுக்காக - உம் கெஞ்சுதல் என்னும் பதம் ஒன்றும் பெரிதாக இழிவில்லை - ராச ராச சோழப் பெருந்தகையே!