அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, June 26, 2010

மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது - வீ. ஆனந்தசங்கரி

ஊடக அறிக்கை

2010-06-25

அரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் யார்?

யுத்தம் முடிந்த பின் நாட்டின் புனர்நிர்மாணம், மீளக்கட்டியெழுப்புதல் போன்றவகைகளுக்கு அரசுக்கு உதவ முன்னைநாள் போராளிகளின் அனுதாபிகள், புத்திஜீவிகள் முன்வந்துள்ளதாகிய செய்தி, வெறும் கேலிக் கூத்தாகும். யார் இந்த கே.பி என அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர்? அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன? பிற நாடுகளில் இருந்து தூதுக் குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்?. சர்வதேச அரங்கில் பிரசித்தி பெற்ற பெயர் போன பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட கே.பி.யின் தலைமையில் இக் குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும், வெளிவிகார அமைச்சரையும் சந்தித்துள்ளது என்ற செய்தி எனக்கு பெரும் ஆச்சரியமாகவும்,அனேகமாக முழு இலங்கையருக்கு அதிர்ச்சியும் தந்துள்ளது.

திரு.பிரபாகரன் மரணித்த உடன் அவரின் வாரிசாக உரிமை கோரிக்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொண்ட திரு. கே.பி அவர்கள் அதிகாரிகளிடம் தானாக சரணடையவில்லை. மிக்க தந்திரமான முறையில் அவர்கள், கைது செய்யப்படாதிருந்தால் இன்று அவர் கடந்த காலத்தில் திரு. பிரபாகரன் யார் யாருக்கு அச்சுறுத்தலாக இருந்தாரோ அத்தனைபேருக்கும் இவர் அச்சுறுத்தலாக இருந்திருப்பர். இப்போது கூட அவர் எதிர் காலத்தில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. அரசுக்கு அதன் புனர்நிர்மாண மீள் கட்டுமாண பணிகளுக்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து உதவ முன்வந்துள்ள தூதுக் குழுவில் இடம் பெற்றுள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்? சரிபிழைகளை ஆராய்ந்து அறிவை வளர்ப்பவரே புத்திஜீவியாவார். ஆனால் இந்த புத்திஜீவிகள் என்ன செய்தார்கள். சரிபிழைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறதா?

சிறிய அபிப்பிராய பேதங்களுக்கு நாம் இடம் கொடுக்கப்படாது. பல கஸ்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திரு. கே.பி.யோ அன்றி அவரின் அணியில் உள்ள வேறுயாருமோ எமக்கு கூறுவது கேலிக்கிடமாகும்.

இலங்கையராகிய நாங்கள் இந்த புத்திஜீவிகள் யார் என்பதனையும் வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு உதவுபவர்கள், நாட்டின் கள நிலையை விளங்கிக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று உத்தரவாதம் தருவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

இவர்களுக்கு இதுவரை காலமும் களநிலை பற்றி விளங்காமல் போனது கவலைக்குரியதே. மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது. இத்தகைய எவருடனும் அரசு எத்தகைய தொடர்பு வைத்திருப்பதை ஆட்சேபிக்கும் உரிமை எனக்குண்டு. இவர்களுடன் நாம் உறவு வைத்திருப்பதை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் என்பதோடு, இந்நாட்டு மக்கள் ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே துரோகம் செய்ததாக கருதப்படும். நம் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நாம் ஏறக்குறைய இரண்டு லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அவற்றில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளுடன் இணைக்கப்பட்ட போராளிகள் பலர் அடங்குவர். ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 42000 விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எத்தனையோபேர் தமது பார்வைகளையும், கால் கைகளையும் இழந்துள்ளனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவர்கள், ஒரு காலால் நடப்பவர்கள், தவழ்ந்து திரிகின்றவர்கள் இவ்வாறு பலர். இந்த அப்பாவிகள் அனைவரும் எஞ்சியுள்ள நாட்களை இப்படித்தான் செலவிட வேண்டும் என்பது விதி. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தம் கல்வியை இழந்துள்ளனர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு உயிரற்ற சடலங்களாக கண்டபோது அனுபவித்த கவலைகள் பற்றி இப் புத்திஜீவிகள் அறிவார்களா? ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு அல்லது தமக்கு மிகவும் விருப்புடைய ஒரு உறவை இழந்திருந்தால் மட்டும்தான் இந்த வேதனையை உணர முடியும். எத்தனை குடும்பங்கள் முழு உறவினரையும், சில குடும்பங்கள் உறவுகள் சிலரையும் இழந்துள்ளனர். பல கோடி பெறுமதியான தனியார் பொது சொத்துக்கள் அழிக்ககப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுயில் முழுமையான ஒரு வீடும் இல்லை. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கும் இதே கதிதான். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்பும் எமது மக்கள் கூடாரங்களில் தான் வாழுகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அக்கிராமங்கள் எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளன என்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளையும் அரசு பார்வையிட வேண்டும். முல்லைத்தீவு, கிளிநெச்சி மக்கள் முற்றாகவும் மன்னார், வவுனியா பகுதியில் உள்ள மக்களில் பெரும் பகுதியும் வீட்டுக்கூரை யன்னல் கதவு உட்பட எதுவும் இல்லை. உண்மையாக நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை உணருகின்றேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதை விட அதிகமாகும். இப்புத்திஜீவிகள் எங்கிருந்து வந்தார்களோ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இவர்களை நாடுகடத்தி தரும்படி இலங்கையரசு கோரிக்கை விடவேண்டும். இதுவரை எந்த ஒரு நாடும் விடுதலைப்புலிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் தடைகளை நீடித்துள்ளன.

இத்தகைய நபர்களே, நாம் இழந்த அத்தனை இழப்புக்கும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை உபசரிப்பது மறைமுகமாக அவர்களின் தடைகளை நீக்குவதற்குச் சமமாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விடுதலைப்புலிகளின் கடும் போக்காளர்களை இராணுவம் உபசரிக்கும் போது, தடுப்புக்காவலில் உள்ள 10000 பேரில் பெரும் பகுதியினர் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டிருப்பதனால் அவர்களை ஏன் தொடர்ந்தும் தடுப்புக்காவலிலும் சிறையிலும் அரசு வைத்திருக்கின்றது என்று கேட்கின்றார்கள். இத்தகைய நபர்கள் தான் பின்னணியில் இருந்து எமக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பொருள் இழப்புகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே அரசு வீடு முற்றாகவும் பகுதியாகவும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக உயிர் இழப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இழப்புகளுக்கும் முழு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரசு மேலும் தாமதிக்காது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகளின் பெறுமதியை கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். குண்டு வெடிப்பு, தற்கொலைத் தாக்ககுதல், கண்ணிவெடி போன்றவற்றிற்கு பலியாகிய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சேர்ந்தவர்களுக்கு முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். நாட்டின் பிற பகுதியில் இருந்து 500 ரூபாயுடன் வெளியேற்றப்பட் இஸ்லாமிய மக்கள் முழு சொத்தையும் இழந்தமையால் முழு நட்ட ஈட்டுடன் மீள குடியமர்த்தப்பட வேண்டும். அன்று தொட்டு இன்று வரையும் இவர்களில் அனேகர் மிக வறுமைப்பட்டு வாழ்கின்றார்கள்.

இந்த நபர்களின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் இலட்சியத்துடன் செயறட்படாது சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது தெரியாமல் கண்மூடிதனமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த நபர்களின் தற்போதய கருத்து இதுவாகும். பல ஆண்டுகள் அமைதியான தூக்கம் இன்றி சுதந்திரமான முறையில் வீதியில் நடமாட முடியாது, கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு சிலரைப் போல் வாழ்ந்தவன் நான்.

இதுபலவிதத்தாலும் பாதிக்கப்ட்ட ஒரு தனி மனிதனின் உணர்ச்சிமிக்க உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகும். கிளிநொச்சியில் வாழுகின்ற உரிமை மறுக்கப்பட்டது உட்பட. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் குறிப்பாக வட-கிழக்கு வாழ் மக்களின் கருத்துக்களினைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். நான் செய்வது தவறு என யாரும் கருதினால் நான் அவர்களிடம் அதற்கு மன்னிப்புக்கோரி, ஒத்த கருத்துள்ளவர்களை எனது பணி தொடர ஆதரவு நலகுமாறு வேண்டுகிறேன்.



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

No comments: