அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, July 10, 2010

கிளிநெச்சி மந்திரிசபை கூட்டமும் இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சனைகளும் - வீ. ஆனந்தசங்கரி

2010-07-07

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு,

அன்புடையீர்

கிளிநெச்சி மந்திரிசபை கூட்டமும்
இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சனைகளும்



கிளிநெச்சியில் மந்திரிசபை கூட்டம் கூட்டுவதென்ற உங்கள் தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன். ஆனால் அதை அவசரமாக செய்கின்றீர்கள் என தோன்றுகின்றது. என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் கொஞ்சம் தாமதிக்குமாறு கூறியிருப்பேன்.

கிளிநெச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும். அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளும் சொத்தழிவுகளும் மிகப்பெரியதாகும். இம் மாவட்டங்களில் மக்கள் தமக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னம் மீளவில்லை. சிலர் இன்றும் தாம் இழந்த உறவுகளைத் தேடி அலைகின்றனர். இச் சூழ் நிலையில் அமைச்சர்கள் அடிக்கடி திறப்பு விழாக்கள் செய்வதும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொள்வதும் மக்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. மேலும் முன்னைய நிர்வாகத்தின் தாளத்துக்கு ஆடியவர்கள் சிலரும் அரசு ஒதுக்கீடு செய்த பணத்தில் வேலை எதுவும் நடைபெறமலே முழுப்பணத்தையும் முன்னாள் நிர்வாகத்துக்கு கொடுத்தவர்களும் தான் இன்று அரசுக்கு ஆலோசனை வழங்குகின்றார்கள். இடம் பெயர்ந்தோர் மீளக்குடியேறி ஒரு வருடத்தின் பிpன்னரும் கூட மக்கள் சீரான முறையில் மீளக்குடியேறவில்லை. இப்போது பெரிய மரங்களின் நிழலிலும், ஆதிகால குடிசைகள் போன்றவற்றிலும் தம் காலத்தை கழிக்கின்றனர். அவர்கள் அனேகரின் வீடுகளுக்கு கூரை, கதவு, யன்னல் முதலியன கிடையாது. அரசு கொடுக்கும் சொற்ப தகடுகள், சீமெந்து, இதனுடன் தர்பலின் கூடாரத் துண்டுகளை வைத்து அவர்கள் என்னத்தைச் செய்யமுடியும்?

நீங்கள் முயற்சி எடுத்து ஒரு தடவை கிளிநொச்சி மாவட்டமாகிய கிளிநொச்சி தொகுதியை சுற்றி வருவதோடு அமைச்சர்களை கிராமப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள கள நிலைமைகள், மக்களின் வாழ்க்கை முறை அவர்கள் எதிர் நோக்கும் தேவைகள் பற்றி ஆய்வு செய்து பாரபட்சமற்ற ஒரு அறிக்கை தருமாறு பணிப்பீர்களேயானால் அதை மிகவும் பாராட்டுவேன். கிளிநொச்சித் தொகுதியை மாவட்டமாக்கி அத் தொகுதியை 13 ஆண்டுகளுக்கு மேல் பிரதிநிதித்துவப்படுத்திய என்னுடன், நீங்கள் உட்பட யாரும் தொகுதியின் நலம், அபிவிருத்தி, மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் உட்பட எதையும் கலந்துரையாடவில்லை. பல்வேறு விடயங்களில் எனது ஆலோசனை பெறப்பட்டிருந்தால் ஏழை மக்களின் பல கோடி பணத்தைக்க காப்பாற்றியிருக்க முடியும்.

நான் கிளிநொச்சியில் மக்களுக்கு அரை நுற்றாண்டுக்கு மேல் சேவை செய்துள்ளேன். தொடர்ந்து இறக்கும் வரை என் பணியை தொடர விரும்புகின்றேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட 1970ம் ஆண்டு தொடக்கம் வாடகைக்கு குடியிருந்த வீடு திரு. தம்பிப்பிள்ளை என்பவருக்கு சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் அவர் ஆற்றிய சேவையின் காரணமாக நன்கொடையாக வழங்கப்பட்டது. அக்காணியை அவர் தனது மகளுக்கு நன்கொடையாக வழங்கி இருந்தார். அவர் இருக்கும் போதே இக்காணியின் மூன்று சிறு துண்டுகள் வேறு மூவருக்கு விற்க்கப்பட்டுள்ளது. மீதிக்காணி கூட சொந்தக்காரர் தனது மகளுக்குச் சீதனமாக வழங்கியுள்ளதாக அறிகின்றேன். வட இலங்கைப் போக்குவரத்துச்சபை பலாத்காரமாகவே இக்காணியை பிடீத்து வைத்துள்ளது. வீட்டின் முற்பகுதியை என்னிடம் கையளிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் கட்டளை பிறப்பித்திருந்தாலும் வட இலங்கை போக்குவரத்துச்சபை இன்று வரை அதைச் செயல்படுத்தவில்லை. வட இலங்கை போக்குவரத்துச் சபையின் இப்போக்கை எவரும் பாராட்டமாட்டார்கள். தயவு செய்து இவ்வீட்டை நான் இருக்கக் கூடியதாக தலையிட்டு பெற்றுத்தரவும். தாங்கள் கிளிநெச்சியில் அமைச்சர் கூட்டம் நடத்த வருகின்ற போது இதற்கு ஒரு தீர்வைப் பெற்று தருவீர்கள் என நம்புகின்றேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

No comments: