அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, July 20, 2010

சத்தியங்களின் சாட்சியம் - சில பகுதிகள்

நூலில் சில பகுதிகளை மாத்திரம் - தகவலுக்காக இணைக்கின்றேன்.

******

காந்திஜியின் காலத்தில் பாரதத்தில் அகிம்சைக்கு எதிரான இந்திய சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திய பிரபாகரன்கள் உமாமகேஸவரன்கள் ஸ்ரீசபாரத்தினங்கள் பத்மநாபாக்கள் இரத்தினசபாபதிகள் பனாகொடை மகேஸவரன்கள் - அப்படி ஒரு 34 இயக்கப் போராளிகள் AK47 துப்பாக்கிகளோடு தடங்கல்களில்காத்திருந்தார்களா? அவரது காலத்தில் அகிம்சை அரசியல்வாதிகளைச் சுட்டுப் பிரேதங்களைச் சுடலையில் வீசினார்களா? குண்டுதாரிகள் வாகனத்தின் முன்னர் பாய்ந்து வாகனத்தோடு சேர அரசியல்வாதிகளைக் கொன்றார்களா?

அரசியல்வாதிகளைக் கடத்திச் சென்று சுட்டுக்கொன்று காவோலை கொழுத்திக் கருக்கினார்களா? விருந்துக்கு வருகிறோம் என்றுசொல்லி வீடுவந்து விருந்துண்டு முடிய அரசியல்வாதிகளின் மண்டையில் போட்டார்களா? அரசியற் கருத்து வேறுபாட்டுக்காகக் கடத்திச் சென்று சில மாதங்களின் பின்னர் வீடு வந்து "வெள்ளைச் சேலைகட்டிக் கொண்டாடலாம்" என்று இழவு சொன்னார்களா? பசிக்குது என்று கேட்ட போராளிக்கு ஒரு வேளை சோறு போட்டதற்காகக் குடும்பத்தையே சுட்டுக் கொன்றார்களா? தாகத்துக்கு நீர் கேட்ட இந்திய ஜவானுக்கு நீர் கொடுத்த அப்பாவியைச் சுட்டுச் சரித்தார்களா? குடியிருந்த தாய் -தந்தையை -குழந்தை - குட்டியைத் துரத்திவிட்டுத் தாங்கள் அங்கு குடியேறினார்களா? இரவில் ஜன்னலைத் தட்டி நகைகளை எல்லாம் கொண்டு வா என்று வெருட்டினார்களா? வீட்டின் அருகே கண்ணிவெடி புதைக்க - ஐயோ ஆமிவருவான் எடுங்கோ என்று அழுது குளறிக் கெஞ்சின குமர்களைச் சுட்டுச் சாகடித்தார்களா? இன்னும் லட்சம் லட்சம் கொடுமைகளைக் கண்டும் பயத்தில் மௌனம் காத்த பூமி யாழ்ப்பாணம்.

*****

உள்நாட்டுப் போர்க்காலத்தில் 1983 -2009 மொத்தமாக 22 தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தியவர்களால் கொலை செய்யப்பட்டனர்.

******

ஆயுத இயக்கங்கள் அட்டகாச ஆட்சி நடாத்திய காலத்தில் யாழ்ப்பாணத்தில் பரந்த வெளியில் மாடு மேய்க்கின்ற சின்னப் பையனிடம் அல்லது சந்தையிலே சுறா விற்கின்ற அம்மணியிடம் அல்லது புத்தகப் பையை முதுகிலே சுமக்கின்ற பத்து வயதுப் பாலகனிடம் சென்னையில் அரச மாளிகையில் வாழ்கின்ற அமிர்தலிங்கம் போராளிகளை இணைத்துத் தலைமைதாங்கிச் சுதந்திரப் போர் நடாத்த யாழ்ப்பாணம் வருகின்றார். வரலாந்தானே? என்று கேட்டால் படக்கெனப் பதில் வந்திருக்கும்:

ஆளை மேலும் கீழும் பார்த்துவிட்டு "அண்ணே நீ ஊருக்குப் புதுசுபோல! ஜப்பான் ஜீப் அமிர்தலிங்கந்தானே! வரச் சொல்லுங்கோ. மண்டையில போடக் காத்திருக்கிறான்கள்" என்று பதில் சொல்லியிருப்பார்கள். அந்தளவுக்கு அமர்தலிங்கம் அவர்கள் பற்றிய வெறுப்பான கருத்தை எல்லா இயக்கங்களும் ஒட்டுமொத்தமாகப் பரப்புரை செய்து வெற்றி கண்டிருந்தன.

******

அவர் ஒரு மனிதனைப் பார்த்து "நீ முன்னரே செத்திருந்தால்" என்று தன்னையே கீழ்மையாக்கி விழித்து, தானே குற்றங்களைச் சுமத்தி, தானே நியாயவாதியாக வாதாடி, முடிவில் தானே நீதிபதியாக அமர்ந்து, கடூழியத் தண்டனை விதிக்கின்றார். இவர்கள் ஏன் மரணித்த மனிதரைக் கண்டு கிலிபிடித்துப் பேசுகின்றார்கள்? நெற்றிக்கு நேரே பேச முடியாதவன் மரணித்த பின் அவன் பிரேதத்தின் மேல் ஏறிநின்று முகத்தில் தன் சிறு நீரைப் பாய்ச்சுவதுபோல உள்ளது.

******

...அமிர்தலிங்கம் அவர்கள் பக்கம் இருந்த மக்களை ஜனநாயக வழியில் தம்பக்கம் திருப்ப முடியாத ஆயுத இயக்கங்கள் அவர்களைத் தம்பக்கம்சாய்க்கத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இருள் மண்டிய அச்சச் சூழலை ஏற்படுத்தின.காற்றும் காட்டிக் கொடுக்கும் என்ற அச்சம் அரசோச்சியது. துப்பாக்கிகளுடன் சென்று வாகனங்களில் ஏற்றி இறக்கிக் கூட்டம் போட்டு மக்கள் தம்பக்கம் என்றனர். பாடசாலைகளுக்குள் சென்று பலாத்காரமாக மாணவர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று ஊர்வலங்கள் நடாத்தித் தங்கள் செல்வாக்கைப் பறைசாற்றினர். துப்பாக்கி மிரட்டல்களுக்குப் பயந்த சனங்கள் ஜனநாயக உரிமைகளைப் பற்றி வாய்திறக்காமல் சந்தர்ப்ப வேசம் போட்டனர்....

********

....இலங்கைச் சனத் தொகையில் தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து சதவீதம். இற்றைவரை அவர்களது வாழ்க்கையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் படித்து முன்னேறி உள்ளார்கள்.பெரும்பான்மையானவர்கள் அதே கூலி லைன்களில்தான் இன்றும் அல்லல் உறுகின்றனர்.சிறிய சிறிய இடிந்த அறைகள்.சுகாதார வசதிகள் எதுவும் இல்லை. வாழ்க்கைக்குப் போதாத சம்பளம் வேலை நேரக் குறைப்பு மேலும் வறுமையைக் கொடுமையாக்கியுள்ளது.இலங்கையில் ஆகக்குறைந்த சம்பளம் பெறுபவர்கள் தோட்டத் தொழிலாளர்களே! இலங்கையில் ஆகக்குறைந்த வாழ்க்கைத்தரம் உடையோரும் அவர்களே! அவர்களுக்கு வெளியே சென்று வேலை தேடுவதும் முடியாத காரியமாக உள்ளது.

தொண்டமானுடைய தந்தை கருப்பையா அவர்கள் புதுக்கோட்டைஅரச வம்சத்தைச் சேர்ந்தவர்.தொண்டமான் அவர்களால் அந்தச் செழித்த பாரம்பரிய வாழ்க்கையைத் தொடர முடிந்தது. ஆனால் அவரது கட்சித் தொழியாலர்கள் என்றும் பங்சத்து ஆண்டிகளாகவே உள்ளனர்....


(தொடரும்)

No comments: