அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, July 6, 2010

நினைவுக்கல்லில் குறிப்பிடப்பட்ட திகதியில் யாழ்.பொது நூலகம் திறக்கப்படவில்லை முன்னாள் ஆணையாளர் தெரிவிக்கிறார் - உதயன் செய்தி

யாழ். பொது நூலகத்தில் தற்போது பொருத்தப்பட்ட நினைவுக்கல்லில் நூலகம் 14.02.2003 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அந்தத் திகதியில் நூலகம் திறந்து வைக்கப்படவில்லை. சம்பிரதாயங்கள் ஏதுமின்றி 23.02.2004 இல் மாநகர ஆணையாளரால் மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. யாழ்.மாநகர முன்னாள் ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

கடந்த 02.07.2010 ஆம் திகதிய உதயன் நாளிதழில் ""யாழ்.பொதுநூலகத் திறப்பு விழா நினைவுக்கல் ஏழு வருடங்களின் பின் வைக்க ஏற்பாடு'' என்ற தலைப்பிலான செய்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இச்செய்தியில் "1981ஆம் ஆண்டு சிங்கள குண்டரின் வெறியாட்டத்துக்கு இரையான யாழ்.பொதுசன நூலகம் பெரும் சிரமத்திற்கு மத்தியில் புனரமைக்கப்பட்டு கடநத 2003ஆம் ஆண்டு திறந்துவைக்கப் பட்டது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

01.06.1981ஆம் திகதி அரச ஆயுதப் படையினரால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகம் அக்காலத்தில் பதவியிலிருந்த மாநகர சபையினாலும் 01.06. 1983ஆம் திகதிக்குப் பின்பு சபையின் ஆணையாளராகவிருந்த நானும் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, எரியூட்டப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டதுடன் மேற்குப்புறக் கட்டடம் புதிதாக அமைக்கப்பட்டு 04.06.1984 திகதி எமது வேண்டுகோளின் பேரில் முன்னாள் காங்கேசன்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லினை மீளப்பொருத்துமாறு கடந்த ஆண்டு மாநகர சபை ஆணையாளருக்கும் மாநகர முதல்வருக்கும் நாம் கடிதம் எழுதியமை நினைவுகூரப்பட வேண்டியவை.

இதன் பின்பு 10.05.1985 இல் மீண்டும் அரச படையினரால் குண்டுவைத்துத் தாக்கப்பட்டது. அதன் பின்பு நூலகத்தின் பாவனை இடைநிறுத்தப்பட்டது. அதற்குப் பின்பு ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அழிவின் நினைவூட்டலாக பேணுவதற்காக நாம் திருத்தம் செய்யாமல் ஒதுக்கி வைத்து அழிவுற்ற கட்டப் பகுதியையும் புனரமைப்புச் செய்தனர். அழிப்பின் சுவடி இருக்கக்கூடாது என்பதே இதன் அடிப்படை நோக்கம்.

இவ்வாறு எமது நூலகத்தை நாமே புனரமைத்து எமது மதிப்பார்ந்த தமிழினத் தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் மூலம் திறந்துவைத்த வரலாற்று நிகழ்வு வசதியாக மூடி மறைக்கப்படுவது வேதனைக்குரியது. இதை ஒரு தற்செயல் நிகழ்வு என புறந்தள்ளிவிட முடியாது. இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். அரச ஆயுதப் படையினரால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்தை ஸ்ரீலங்கா அரசே புனரமைத்தது என்ற தோற்றப்பாட்டை வரலாற்றுப் பதிவாக மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியே ""1981இல் எரியூட்டப்பட்ட பொது நூலகம் சிரமத்திற்கு மத்தியில் புனரமைக் கப்பட்டு 2003இல் திறந்து வைக்கப்பட்டது'' என்பதாகும்.

அடுத்து தற்பொழுது பொருத்தப்படும் நினைவுக் கல்லில் இந்த நூலகம் 14.02.2003ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அத்திகதியில் நூலகம் திறந்துவைக்கப் படவில்லை. 31.12.2003 இல் எஞ்சிய வேலைகள் அநேகமானவை பூர்த்திசெய்யப்பட்டு மாநகர ஆணையாளரிடம் கையளிக்கப் பட்டதைத் தொடர்ந்து நூலக்தை பொது மக்களதும், மாணவ சமூகத்தினதும் பாவனைக்கு விடப்படாமை பொருத்த மான துமல்ல, விருப்பத்தக்கதுமல்ல என்றும் சம்பிரதாய பூர்வமான திறப்பு விழாவொன்றை இனி எப்பொழுது மேற்கொண்டாலும் அது அரசியல் கலந்து சர்ச்சைக்குரியதாவே அமையும் என்றும் 15.01.2004ஆம் திக திக்குப் பின்பு பொருத்தமான ஒரு நாளில் யாழ்ப்பாண பொதுநூலகம் பொதுமக்களதும் மாணவர்களதும் பாவனைக்கு திறந்திருக்கும் என ஊடங்கள் மூலமாக அறி வித்தல் வெளியிட்டு நூலகத்தை இயங்க வைக்க வேண்டும் என மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான தமிழ்பேசும் மக்களின் அமையத்தின் இணைப்பாளராகவிருந்த எம்மால் 03.01.2004ஆம் திகதி மாநகர ஆணையாளருக்கு கடிதம் எழுதப் பட்டது.

இதன்படி 23.02.2004ஆம் திகதி ஊடக அறிவித்தல்களுக்கமைய சம்பிரதாயங்கள் ஏதுமின்றி மாநகரசபை ஆணையாளரால் நூலகம் மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. இதுவே உண்மையான நிகழ்வுப் பதிவாகும். காரணம் எதுவாக விருப்பினும் வரலாற்றுப் பதிவுகள் சரி யானதாகவும் உண்மையானதாகவும் இருத்தல் வேண் டும் என்பதை எவரும் மறுக்க முடியாது - என்றுள்ளது.

நன்றி - உதயன்

1 comment:

தமிழ் மதுரம் said...

""1981இல் எரியூட்டப்பட்ட பொது நூலகம் சிரமத்திற்கு மத்தியில் புனரமைக் கப்பட்டு 2003இல் திறந்து வைக்கப்பட்டது'' என்பதாகும்//


ஒரு சில வார்த்தைகள் மாறினால் வரலாறே மாறினால் வரலாறே மாறிவிடும் என்பது இதனைத் தானே?
’சிங்கிள் கப்பிலை சிக்ஸர்’ அடிக்கிறது என்படு இதனைத் தானே?

புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நூலகம் திறப்பு என்று போட்டால் சரியாக இருந்திருக்கும். என்ன செய்ய எல்லோரும் மிளகாய் அரைக்க எம் தமிழர்களின் தலைகள் தானே கிடைத்தது.

பகிர்விற்கு நன்றிகள் நண்பா!