அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label அ.தங்கத்துரை. Show all posts
Showing posts with label அ.தங்கத்துரை. Show all posts

Tuesday, July 5, 2011

அமரர் அ. தங்கத்துரையின் 14ஆவது நினைவுதினம் இன்று!

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய மூன்று மாடிக்கட்டடத் திறப்புவிழா முடிவுற்ற பின்னர் இடம் பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் எனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாதது!

ஆம்! இற்றைக்குப் பதின்னான்கு 14 வருடங்களின் முன் நடந்த இந்தக் கொடிய ஈவிரக்கமற்ற சம்பவம் என்னைப் போன்ற பல இளகிய மனம் படைத்தவர்களை விட்டு அகலாது!

தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், த.வி. கூட்டணியின் அமைப்பு நிர்வாகச் செயலாளரும், திருகோணமலை சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தைப் பரிபாலிக்கும் நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை நிதியத்தின் பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளரும் - பொருளாளருமான மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் கல்லூரி அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் கா. சீவரத்தினம், பொறியியலாளர் திரு. வெ. ரட்ணராஜா சமூகசேவகர் பெ.சி. கணேசலிங்கம் ஆகிய அறுவரும் 05.07.1997 சனிக்கிழமை மாலையில் படுகொலைசெய்யப்பட்டனர்.

Sunday, July 4, 2010

நாளை ஆடி 5 - தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் அ. தங்கத்துரையின் 13ஆவது நினைவுதினம்!

தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், த.வி. கூட்டணியின் அமைப்பு நிர்வாகச் செயலாளரும், திருகோணமலை சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தைப் பரிபாலிக்கும் நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை நிதியத்தின் பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளரும் - பொருளாளருமான மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் கல்லூரி அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் கா. சீவரத்தினம், பொறியியலாளர் திரு. வெ. ரட்ணராஜா சமூகசேவகர் பெ.சி. கணேசலிங்கம் ஆகிய அறுவரும் 05.07.1997 சனிக்கிழமை மாலையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய 3 மாடிக்கட்டடத் திறப்புவிழா முடிவுற்ற பின்னர் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் எனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாதது!

Sunday, July 5, 2009

இன்றும் நேற்றும் மனதுக்கு ஓரளவு நிம்மதி!

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினரும் எனது அரசியல் ஆசானுமாகிய அமரர் அ. தங்கத்துரை அவர்களைப்பற்றிய கட்டுரைகள் செய்திகள் சேகரிப்பில் ஈடுபட்டதுடன் அவரது குடும்பத்தவர்களுடன் தொடர்புகொண்டு அவரது பழைய நினைவுகளை மீட்டுப் பேசியதில் எனக்கு ஓரளவு மனத் திருப்தி கிடைத்தது! நேற்று அவரது லண்டனில் இருக்கும் மகளுடனும் திருமலையிலுள்ள அவரது அவரது மூத்த சகோதரர் மற்றும் மகளுடனும் இந்தியாவிலும் பிரான்சிலும் உள்ள அவரது உறவினர்களுடனும் பேசினேன். இன்றும் அவரது மகளுடனும் மகனுடனும் எமது கட்சித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுடனும் (1970களில் திரு.ஆனந்தசங்கரி அவர்களும் திரு. தங்கத்துரை அவர்களும் ஒன்றாகப் பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் - ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடையவர்கள்) டென்மார்க்கிலுள்ள அவரது தம்பியின் மனைவி மற்றும் மகனுடனும் பேசியதில் உண்மையான மன நிம்மதி கிடைத்தது. சுமார் 8வருட கால நெருங்கிய அந்தப் பாசப்பிணைப்பு ஒருபோதும் மனதைவிட்டு அழியாத மாறாத எண்ணங்களே!

அமரர் தங்கத்துரையின் அந்தியேட்டிக் கிருத்தியத்தில் அவரின் தாய்

அமரர் தங்கத்துரையின் அந்தியேட்டிக் கிருத்தியத்தில் அவரின் தாய் மற்றும் அவரது சகோதரர் Dr.A. பாக்கியதுரை உறவினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். பொதுவாக எமது வாழ்க்கையில் தாயின் கடமைகளைத்தான் மகன் செய்வது வழக்கம். ஆனால் எமது நாட்டிலோ பெற்ற பிள்ளைகளுக்கு தாய் மற்றும் தந்தையர் சில கடமைகளை நடத்தும் சாபம் - இது விரைவில் தீருமா?

Slain TULF MP, Arunachalam Thangathurai's wife Sathyashri, son Ahilan and youngest daughter Dharmini at the funeral last week. Pic. by Sanjeeva Niroshana The Sunday Times 13.07.1997

மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களைப்பற்றிய எனது நீங்காத நினைவுகள்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், த.வி. கூட்டணியின் அமைப்பு நிர்வாகச் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவரும், திருகோணமலை சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தைப் பரிபாலிக்கும் நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை நிதியத்தின் பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளரும் - பொருளாளருமான மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களைப்பற்றிய எனது நீங்காத நினைவுகள்.
ஜூலைமாதம் 5ஆந்திகதி – சனிக்கிழமை இரவு 8.05 மணி ரிஎன்எல்(TNL) தொலைக்காட்சியில் ராமாயணம் திரையிடப் படுகிறது. சிவதனுசு வில் ஒடிக்கப்பட்ட செய்தி, ராமர் சீதை திருமணம் பற்றிய செய்தி - இவற்றைத் தாயிடம் கூற பிள்ளைகள் புதிர் போடுகிறார்கள்! என்ன செய்தி என்று அறிவதில் பதட்டமான ஒரு நிலையில் - தொலைபேசியில் கஹவத்தையிலிருந்து நண்பர் ஒருவர் திருமலை தந்திரதேவா சுவாமி நாளை ஞாயிற்றுக்கிழமை பலாங்கொடை, நீலகாமம், தலுக்கல்லைப் பகுதிகளுக்கு வருகிறார். கட்டாயம் வரவேண்டும் என்ற அழைப்பு – சரி வருகிறேன் என்று கூறி முடிக்கு முன்பே மற்றைய தொலைபேசியில் திரு. தங்கத்துரை கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சிச் செய்தி வரவும் மறுதொலைபேசியில் வரமுடியாது – அதிர்ச்சியான செய்தி என்று கூறித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு திருமலைக்குத் தொடர்பை ஏற்படுத்தி விசாரித்தால் செய்தி ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இதனிடையில் 9.00 மணி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியிலும் தகவல் வெளியிடப்பட்டது. திரு. ஜோசப் பரராஜசிங்கமும் பாரியாரும் கூட்டணி அலுவலகத்திற்கு வந்து தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களைச் சந்தித்து இதுபற்றி நீண்டநேரம் கதைத்தவண்ணமிருந்தனர். ஏற்கனவே அனுபவத்தைப் பெற்று இவ் இம்சையின் கொடுமையை உணர்ந்த தலைவர் சிவா ஐயா கண்கள் குளமாக வேதனையுடன் மௌனமாக இருந்தார். பல வெளிநாடுகளிலிருந்தம் செய்தி அறிந்து பலர் இரவிரவாகத் தொடர்பு கொண்டவண்ணம் இருந்தனர்.
3.7.1997 சென்னையிலிருந்து வந்த திரு. தங்கத்துரை பா.உ அவர்கள் 4.7.97 வெள்ளிக்கிழமை தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு எம்முடன் பேசினார்கள். 5.7.97 சனிக்கிழமை காலையில் வாகனத்தில் திருமலை சென்று அன்றிரவு ஸ்ரீ சண்முகா இந்த மகளிர் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்புவிழாவின் நிறைவில் குண்டுத் தாக்குதலில் பலியானார். கூடவே அவருடன் அதே கல்லூரியின் அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், அதே கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர் திரு. பெ.சி. கணேசலிங்கம், திருக்கடலூர் நாமகள் வித்தியாலய அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் திரு. கா. சீவரத்தினம் ஆகியோர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த பொறியியலாளர் திரு. வே. ரட்ணராஜா அவர்கள் இரண்டு நாட்களின் பின்னர் மரணமடைந்தார். கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சமுதாயம் ஒருபோதும் இப்படிப்பட்ட மிருகத்தனமான படுகொலைகளை ஏற்க முன்வரமாட்டார்கள்.
எளிமை அன்பு பொறுமை உண்மை நியாயம் துணிவு இரக்கம் என்பவற்றிற்கு இலக்கணமாக சகிப்புத் தன்மைக்கு உதாரண புருஷராக எந்நேரமும் புன்சிரிப்புடன் இளவயதினர் அனைவரையும் தம்பி என்று அன்பு ததும்ப அழைக்கும் திரு. அ. தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எனது எண்ணங்களால் நம்பக்கூடிய ஒன்றாக இதுவரை புலப்படவில்லை.
கடந்த 8 வருடங்களாக அவருடன் கொண்டிருந்த அன்புப் பிணைப்பு ஏதோ வருடத்திற்கோரிருதடவை வழமைபோல இந்தியா போய் வருபவர் தற்போதும் இந்தியா போய்விட்டார். நிச்சயம் திரும்பி வருவார் என்றே எண்ணத் தோன்றுகிறது! எந்நேரமும் எம்முடனேயே இருக்கின்ற உணர்வு - என்னைவிட்டு இன்னும் மறையவில்லை.
உயரத்தில் சற்றுக் குறைவானாலும் - நிமிர்ந்த நடையும் மேவியிழுத்த சிகையும் கூர்மையுடன் ஆழம் பார்க்கும் விழியும் நெற்றிப்புரவ அசைவுகள் கொண்ட பேச்சும் எந்நேரமும் முறுவல் பூத்த இன்முகமும் எளிமையும் காந்தீயமும் நிறைந்த – 4 முழ வேட்டியும் அரைக் கைச் சேட்டும் அணிந்த உருவமும் - சிந்தனையிலிருக்கும்போது இமைக்காத விழியும் மௌன நிலையும் காலையில் எழுந்ததும் தனக்கே உரித்தான ஒரு தடித்த ம்..ம்.. என்ற செருமலும் (தான் எழுந்துவிட்டதை எமக்குத் தெரிவிக்கும் ஒரு அறிவிப்பு) சிலரைத் தொலைபேசியில் அழைத்தபின் சிரிக்கும் பெரியதொரு அஹ்..ஹ்..ஹா என்ற அசுரச் சிரிப்பும் நெருங்கிப் பழகுவோர் சிலருடன் அன்பாக மச்சான் என்றழைக்கும் விதமும் - இவை என்றுமே அவரை எண்ணத் தோன்றியபடி இருக்கவே செய்யும்.
1989ஆம் ஆண்டு ஜூலை 13இல் படுகொலை செய்யப்பட்ட திருவாளர்கள் அ. அமிர்தலிங்கம் வெ. யோகேஸ்வரன் ஆகியோரின் மறைவுக்குப் பின் எங்களுடனேயே வந்து தங்கியிருந்து – தகர்த்து நொருக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை தூக்கி நிலை நிறுத்திய – ஒரு கற்றூணாக அர்ப்பணிப்புச் செய்த அவரின் தன்மையை எண்ணிப் பார்க்கின்றேன். அன்று தொட்டு படுகொலைசெய்யப்பட்ட நாள்வரை தனது பணியை அமைதியாக – சலசலப்பில்லாமல் - விளம்பரம் செய்யாமல் நிதானமாகக் கூடிய அக்கறையுடன் முன்னெடுத்துச் சென்றதை நினைவுகூருவது என் கடமையாகிறது!
வடக்குக் கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக திருமலை மாவட்டத்தில் சிறப்பாகப் பின்தங்கிய பிரதேசங்களுக்கத் தன்னாலான அனைத்தையும் இரவு பகல் பாராது கடமையுணர்வும் - பற்றுறுதியும் கொண்டு செயற்கரியனவற்றைச் செய்தார். அதனால்தான் 1970ஆம் ஆண்டு மூதூர்த் தொகுதியில் இரண்டாவது அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டபோது பெற்ற வாக்குகளை விட(19,787) 24 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலை மாவட்டத்தில் 1994ஆம் ஆண்டில் கூடிய விருப்புவாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையையும்(22,409) பெறுகின்றார். 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற வாக்ககள் 44,692. திரு. தங்கத்துரை அவர்களே சபைத் தலைவராக இருந்தார்.
1991ஆம் ஆண்டு நாள் சரியாக எனக்கு ஞாபகமில்லை. வடக்குக் கிழக்குப் பகுதியின் புனரமைப்பு புனர்நிர்மாணங்களுக்காக வெளிநாட்டு உதவி ஒன்று கிடைக்கவிருந்த சமயத்தில் ஒரு பெரிய திட்டம் (Project ) ஒன்றை நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஏறக்குறைய 2.30 மணிவரை தனியாக இருந்து ஆங்கிலத் தட்டச்சில் அதைத் தயார் செய்து முடித்ததை நினைவுக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். அவரது வழிகாட்டலில் சில வரைபடங்களை நாமே கீறிக் கொடுத்தோம். நானும் எனது நண்பன் சபாபதி அவர்களும் அதைச் செய்து முடித்தோம். (இக்கட்டுரை எழுதியது 1997 காலப்பகுதியில் - அவர் பதுளை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்தார் - 1990 களில் நாம் கொழும்பில் இந்து சமய ஒற்றுமைப் பேரவையை நடத்திய காலங்களில் அவர் அதன் பொருளாளராக இருந்தவர் மலையகத்தைச் சேர்ந்த அவர்; எமது மறைந்த தலைவர்கள் அனைவருடனும் அன்னியோன்னியமாக பழகியதையும் இன்று நான் சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும் என நினைக்கின்றேன்.) வடக்கு கிழக்கு நெடுஞ்சாலைகளில் செப்பனிடப்படவேண்டிய பகுதிகள், மின்சாரம் வழங்க வேண்டிய பகுதிகள், பாடசாலைகளுக்கான புதிய கட்டடங்கள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், மாணவர் ஆசிரியர் விடுதிகள், திருத்தப்படவேண்டிய குளங்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் வசதிக்கான கிணறு அமைத்தல் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
கல்விக்கும் கல்வி வளர்ச்சிக்கும் - ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் பாடசாலை வளங்களை அதிகரித்தல் போன்ற சகல பணிகளிலும் அவர் கூடிய அக்கறை காட்டிவந்தார்.
கைது செய்யப்பட்டுக் காணாமற் போனோர் பற்றிய விபரங்களைப் பெற்று அவற்றைத் தொடர்புடைய ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை இவர்களுடன் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க அல்லது வழக்குகள் ஒழுங்கு செய்து அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணப் பெரிதும் உழைத்தார். எமது அலுவலகத்தில் இந்தப் பத்திரங்களின் பிரதிகள் இன்றும் அவரது மனித உரிமை மீது கொண்ட மதிப்பை உணரச் சான்றுகளாக உள்ளன.
அவருடைய தேசிய அடையாள அட்டையில் தொழில் என்ற பகுதியில் கமம் என்று இருக்கக் காணப்பட்டது. நான் ஏன் நீங்கள் நீர்ப்பாசன இலாகா உத்தியோகத்தர் அல்லது சட்டத்தரணி என்று குறிப்பிட்டிருக்கலாமே என்று ஓர் நாள் சொன்னதற்கு – அது எமது பரம்பரை பரம்பரையான தொழில் அதை நாம் ஏன் குறிப்பிடுவதில் தயக்கம் காட்ட வேண்டும் என்று சொன்னார்.
மிகவும் எளிமையும் அன்பும் கொண்ட அவர் 1994இல் தேர்தலில் வெற்றிபெற்றபின் 1995 மார்ச்சில் மாதிவெலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதிக்குச் சென்றார். அதுவரை சுமார் 6 வருடங்களாக நாமே அவருக்கும் ஏனைய அலுவலகத்தில் தங்கியிருந்த தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களுக்கும் மூத்த துணைத்தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கும் தேனீர் தயாரிப்பதிலிருந்து – கடையில் போய் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதுவரை நாமே செய்தோம். வீட்டில் சமையல் செய்ய ஒருவர் இருந்தபோதும் பெரும்பாலும் கற்பகத்திலும், சாந்தி விஹாரிலும் - கிறீன்லன்ட் மற்றும் வெள்ளவத்தை மயூரியிலும்தான் சாப்பாடு. சாப்பாட்டு விடயத்தில் இதுதான் வேண்டும் என்று ஒரு நாளும் யாரும் சொன்னது கிடையாது. இதில் அமரர் தங்கத்துரை அவர்களுக்கு வெறும் தேனீர் தான் சீனியில்லாமல் கொடுப்பது வழக்கம். மத்தியகுழுக் கூட்டங்களின்போது (ஒவ்வொரு கூட்டங்களும் பலமணிநேரம் நடைபெறும்) காலையில் 10.00 மணிக்கு தேநீர் - மதிய உணவு பின்னர் மாலையில் வடையுடன் தேநீர் ஓரிரு தடவைகள் இரவு உணவும் கொடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினராகிய பின்னரும் முன்னரைப் போலவே நடந்து தனியாகவும் - பஸ்வண்டிகளிலும் பிரயாணம் செய்வார். தனது பாதுகாப்பைப்பற்றி சிறிதேனும் அவர் கவலைப்படவில்லை. நீதி நியாயம் உண்மை உள்ளவன் ஏன் கவலை கொள்ள வேண்டும் - அவனுக்கு என்ன பயம் என்று அடிக்கடி சொல்லுவார். ஒரு தடவை திருமலை செல்லப் புகையிரத நிலையம் போவதற்கு 138 இலக்க பஸ் வண்டியில் அவர் முன்பு ஏற பின் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏற அவரை வழியனுப்பி வைத்ததும் மறக்க முடியாத சம்பவம்.
அவரது அறையில் - காலைக்கடன்களை முடித்துவிட்டு ஏறக்குறைய அரை மணிநேரம் தியானத்தில் அமர்வார். காலையில் வாக்கிங்போகும் அமைச்சர் மஜீத் நேரே அவரது அறைக்குள் போய் அவர் தியானத்திலிருந்தால் பரவாயில்லை மேணை! அவர் தியானம் முடிந்த பிறகு கதைக்கலாம் என்று சொல்லி அவருக்கு முன்பாக கதிரையில் அமர்ந்த அவரையே பார்த்தபடி இருப்பதும் மறக்கமுடியாது.
தனது தந்தையார் அருணாசலம் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்து ஓரிரு நாட்கள் எமது அலுவலகத்தில் தங்கியிருந்த பின் அவரை திருமலைக்கு அனுப்பி வைப்பதற்காக அதிகாலை புகையிரத நிலையத்துக்குச் சென்று வழியனுப்பிய அன்று அவரது நடவடிக்கைகள் மிக வித்தியாசமாக இருந்தது! புகைவண்டியிலிருந்த பலரும் அவரின் கையைப் பிடித்து இழுத்து தங்களுடன் வரும்படி கேட்டு தொல்லை கொடுத்தபோது வேலைகள் நிறைய இருக்கின்றன. பின்பு கட்டாயம் வருவேன் என்று சொல்லி அவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பல நிமிடநேரம் சிரித்து அளவளாவியதையும் மறக்க முடியவில்லை. அவருக்கு முஸ்லிம் சிங்கள நண்பர்கள் எனப் பலர் இருந்தனர். சகலரையும் மதித்து அவரவர் கொள்கை - இலட்சியங்களுக்கு இயைந்த போக்கினைக் கடைப்பிடிக்கும் அவரது தாராள குணம் ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தினால் அவர் - நீதி கோருபவன் தான் நீதி வழங்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை எமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவார்.
(மீதி பின்னர்.)

12 வருடங்களுக்கு முன்னர் நடந்த திருமலைப் பாராளுமன்ற உறுப்பினர் அ. தங்கத்துரை மற்றும் கல்லூரிச் சமூக படுகொலை

மேலே 1999இல் தினக்குரலில் வெளிவந்த எனது கட்டுரை
---------------------------------------------------------
கீழே 1998இல் அவரது மறைவுக்கு திருகோணமலையில் நடந்த அமரர்களின் நினைவில் என்னால் நிகழ்த்தப்பட்ட நினைவுக் கவி!
பாணர் மாநகர் சபையில்
பிரதிநிதிப் பதவியேற்று
பொது நிகழ்வு முதலிதுவில்
கலங்குகின்றேன் - மனம் வெதும்புகின்றேன்.
ஈனச் செயலின் கொடுமையால்
இன்று இங்கில்லாத
அமரர்கள் அறுவர்க்கும்
பாவால் அஞ்சலிகள்!
அமரர் அருணாசலம் தங்கத்துரை
நினைவுப் பணி மன்ற ஏற்பாட்டில்
அமரர்களின் முதலாம் ஆண்டு
நினைவு தினக் கூட்டத்தில்
என்னையும் நினைவுக் கவிதை நிகழ்த்த
அழைப்பித்த மன்றத்தினருக்கு நன்றி!
அமரர்கள் பணிகளை மீட்டிடக்
குழுமிய கூட்டத்தினர் நீவிர்
அனைவருக்கும் எனது
முதற்கண் வணக்கங்கள்.
அரங்கினை வழிநடத்தும் தலைவர்க்கும்
வரவேற்புரை நிகழ்த்தியவர்க்கும்
தமிழ்வாழ்த்து இசைப்பித்த இளவர்க்கும்
நினைவுரை -பாடல் - கீதம் - சிறப்புரை
நன்றி இவைகளுக்காய் வந்திட்ட பெரியோர்க்கும்
கவிதைச் சரம் நிகழ்த்திய தம்பி ஈழபாரதிக்கும்
அமரராம் எம்பியின் அருமைத் துணைவிக்கும்
உடன்பிறவாச் சகோதரன் அகிலனுக்கும்,
தங்கை தர்மினிக்கும் மற்றும்
அமரரின் குடும்பத்தவர் உறவினர்
நண்பர்கள் அனைவர்க்கும் எனது
மனம் நிறைந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
கவிதை ஞானம் ஏதுமில்லா எனக்கு
நினைவுக் கவிதை தந்துள்ளார்கள்.
தமிழறிவில் யான் என் அறிவுக்கு எட்டியவாறு
உங்கள் முன் என் அரசியல் குரு
அமரர் தங்கத்துரை அவரின்
நினைவை மீட்கவுள்ளேன்.
குற்றம் நீக்கிக் குணம் கொள்ள வேண்டுகிறேன்.
அமரரை அன்பாய் அழைத்த மாமா எனும் பதத்தை தொடரும் கவியிடையில் சேர்ப்பேன். ஏற்றுக்கொள்ள தாழ்வாய் வேண்டி தொடருகிறேன் என்கவிப் பேச்சை!
89இல் நடந்ததோர் பயங்கரம்!
புல்லர்ஸ்வீதியில் புல்லட்டுக்களின் சத்தம்!
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சூடு!
கொல்லப்பட்டனர் இருவர்! – படுகாயமடைந்தார் தலைவர்!
குறிப்பினை அறிந்து உதவிட்டார் மாமா!
அவர்தனுடன் நானும் அறிமுகமானேன்!
மாடிவீட்டில் அருகருகில் இரு அறைகளில் வாசம்!
மாமா அவர்கள் நல்ல உயரமில்லை.
ஆனால் உள்ளத்தால் உயர்ந்தவர்!
எளிமை – அன்பு புன்சிரிப்போடு
பின் கை கட்டும் தனியான மிடுக்கு!
ஆழ்ந்து சிந்திக்கையில் அரிய தவயோகி!
தம்பி என எல்லோரிடமும் சகசமாய்ப்பழகி
பற்பல வேலை புரிவார்!
தட்டெழுத்தச்சையும் தானே செய்வார்!
கோபம் என்பதை தானும் அறியார்!
அது எட்டிப் பார்க்க இடமில்லாத
பொறுமைப் பெட்டி நீங்கள் மாமா!
நடைதான் அவரது பெரும்பொழுது வாகனம்.
தூரவரும் போது செருப்புச் சத்தம் கேட்டால்
நள்ளிரவில் மாமா தானென்று நம்பி – கதவு துறப்பேன்!
கோட்டைப் புகையிரத நிலையத்தில் அப்பா அருணாசலத்தை வழியனுப்பிவைக்க நானும் சென்றேன்.
ரெயிலில் ஏறி ஊரவர் நண்பர்
தம்முடன் வாருங்கள் என அழைக்க
பின்பொருமுறை வருவேன் என்றே கூறி
அவர்தம் கைபிடித்தும் - கட்டியணைத்தும் - ரெயிலில்
அவர்தம்மோடு இருக்கையில் அமர்ந்தும்
குழந்தைபோல இருந்த காட்சி
இப்போதும் எனக்கு மறக்கவில்லை.
அரசியலில் குரு நீரே எமக்கு!
எத்தனை விளக்கம் அளிப்பீர் நமக்கு!
நேரகாலம் போவதும் தெரியாது!
அகிம்சை அன்பு மக்கள் சேவகன் - மக்களோடு இருத்தல்
நேர ஒதுக்கீட்டைத் தவிர்த்து எந்நேரமும்
அவர்பணி புரிதலே நீதி என்று கூறுவீர்கள்.
காந்தியின் மீது அளவில்லா பற்று!
அகிம்சையும் அவர்தம் மூச்சு!
தந்தை செல்வா வழிதனை ஏற்று
மூதூர்த் தொகுதி சபையில் வென்று
தமிழரசுக் கட்சியில் தொண்டும் ஆற்றி
தலைவரும் ஏகி ஏற்றம் கண்டீர்!
ஆம் இறக்கும்போது தமிழரசுக் கட்சித் தலைவர்!
காணாமற் போவோர் - கைதாவோர்
அனைவர்க்கும் பிரிவு பிரிவாய் - தொகுதி
மாவட்டம் மாகாணம் எனப் படிவம் அச்சிட்டுப்
பாங்காய்ப் பணிபுரிந்து அபலைகள் - உறவினர்
குடும்பத்தவர்க்கு ஆறுதல் அளித்தீர்!
இரக்கம் எனும்போது ஓர் கடிதம்
நினைவுக்கு - கூறுகிறேன் சபையோரே!
இது ஒன்றே போதும் மாமா
மக்களுடன் கொண்டிருந்த
ஆழமான தொடர்பு!
ஆலய வீதி பாலையூற்று
அந்தோனியம்மா எழுதிய கடிதமிது!
எனது மகன் கைது செய்யப்பட்ட விபரம் அனுப்பியிருந்தேன். எங்களோடு அனுப்பிய சிலர் கையெழுத்துப் போடவில்லை என்பதனால் திருப்பி அனுப்பியிருந்தீர்கள்!
அப்படி அக்கறையோடும் இரக்க சிந்தனையோடும்
நல்லிதய நோக்கோடும் நீங்கள் செயற்படுவதை
என்னால் உணர முடிகிறது!
மேலும் தகவல் அறிந்தால் தயவாக அறிவியுங்கள்!
தங்கள் உடல் உள ஆன்மீக தேவைகளை
நிறைவாக அளித்தருள இறைவனைப்
பிரார்த்தனை செய்கின்றேன்.
இரக்கம் - அன்பு கிராமத்தில் பிறந்த உங்கட்கும்
எமக்கும் தொட்டில் பழக்கம்!
மாமா நீங்கள் மூதூர் - நான் மூளாய்!
மூன்றெழுத்துப் பெயர்கொண்ட
சிறு கிராமத்தவர் நாம்.
பட்டணத்துக்காரரின் பகட்டு
வெறுப்பு எமக்கில்லை!
இதன் நிமித்தம்தானோ?
உங்களுடன் கூடவே பழகும்
வாய்ப்பும்இன்றும் நீங்களில்லா
வேளையும் தொடர்ந்து கொண்டிருக்கும்?
ஆகா என்ற அசுரச் சிரிப்பும்
ஓம் மச்சான் என்று உறவுமாடி
பற்பல பணிகளாற்றிய மாமா
உம்பணி எடுத்துச் சொல்ல நானும்
வந்த நேரம் போதாதெனினும்
ஓரிரு சிறப்பை அவையோர் அறிய
சொல்கிறேன் தொடர்ந்து கேட்டறிவீரே!
கேட்டறியத் தேவையில்லை உங்கள் எம்பி ஊருக்குச் செய்தது! நீங்கள்தானே அவரின் பணியை மெச்சி
இங்கு நினைவு கொள்ள வந்துள்ளீரே!
தன்னூர் - தொகுதி – மாவட்டம் மற்றும்
மாகாணம் மாநிலம் பரந்து
பின்தங்கிய பகுதிகளில் எல்லாம்
தான் பட்ட துயர் கல்வியில்
மாணவர் பெறாமல் வசதி வாய்பை
குறிப்பால் உணர்ந்து பள்ளிகளுக்கு
பன்முகப்படுத்திய நிதியின் மூலம்
பலமாடி கட்டியும் பலவளம் பெருக்கியும்
பாராதிருந்த சாலைகள் திருத்தியும்
மின்னொளி வேண்டியும் உழைத்திட்டார் பலபணி!
இன்று திருமலையில் காணும்
கல்விச் சாலைகள் எல்லாம்
மாடிக்கட்டிடம் இருப்பது அவர்
செய்துபோன அரும்பணி அன்றே!
ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்க்கு
சிவானந்த தபோவனம் சீராய்ச்சிறக்க
நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை
நிதியப் பொறுப்பையேற்று பொருள் சேகரித்து
ஆண்கள் விடுதி கட்டி முடித்து அரும்பணி புரிந்தீர்!
மாமாவின் பொறுமைக்கு பம்பலப்பிட்டி
சரஸ்வதி ஹோலில் கொழும்பு வாழ் தமிழர்
பணிக்குழு நடத்திய கூட்டத்தில் நடந்த
வேறோர் சம்பவம் - கேடுகெட்ட தமிழர்
எனப்பேசி கைதட்டுவாங்கிய குமாரருக்கும்,
மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரனுக்கும்
டெலோ சிறீகாந்தாவுக்கும் ஒற்றுமை இருந்தது– பேச்சில்!
வீறான பேச்சு! நிமிடத்துக்கு ஒருதடவை
கைதட்டும் கரகோசமும் - இறுதியாக
மாமா – அமைதியும் பொறுமையும் நிறைந்த
ஆராய்ச்சிப் பேச்சு! கேடு கெட்டுப் போனால்
நல்லதுதானே! ஆவேசப் பேச்சால் கொதித்திருந்த
கூட்டம் அமைதிப் பேச்சினால் அடங்காமல்
எழுந்து கூச்சல் போட்டது! கேள்வி கேட்டது!
எந்தப் பதட்டமும் இன்றி நிதானமாய்ப் பதிலளித்தார்!
மாமா தங்கத்துரை. இறுதியாக அனைவருடனும்
அன்பாய் அளவளாவி விடைபெற்று வந்தார்.
நிர்வாகத் திறனுக்கு உங்களுக்கு நிகர் எவருமில்லை!
கூட்டணியில் அமைப்பு நிர்வாகச் செயலாளராய்
இருந்திட்ட வேளை – தனித்தனி ஒவ்வொரு
நிர்வாக உறுப்பினருடன் விவாதித்து முடிவு எடுப்பீர்கள்.
அதனால் தான் கூட்டணிக்குள்
உங்களின் கருத்தை அறிவதில்
ஆர்வம் காட்டினர் பலர்.
சண்முகா இந்த மகளிர் கல்லூரியில்
மாடிக்கட்டிடத்தைத் திறந்து வைத்துப்
பேசியபின் உள்ளம்குளிர – உறவானோர்
ஐவருடன் உலகத்தை விட்டுப் பிரித்துவைத்த
ஈனர்கள் கூட்டம் யாரென உங்களிடம் கேட்டு
என் நினைவை முடிக்கின்றேன் மாமா!
யாரென்று நீங்கள் சொல்லுங்கள் மாமா!
வணக்கம்.
ஒரு பத்திரிகைச் செய்தி
The heartbreak behind those headlines (13th July The Sunday Times news paper)
For many, an assassination is just news. For others it is a political issue. But for the family of the victim, it is heartbreak and shocked disbelief. Roshan Peiris spoke to the family of Arunasalam Thangathurai. Away from the headlines and the political ha ho she சா the trauma of a breaking heart.
She is eighty eight years old and last Saturday night her acquaintance with death, when her much-loved son Arunasalam Thangathurai was assassinated is something her mind cannot take. She sits alone with her morbid thoughts and does not eat, drink or talk to anyone but only in a soft endearing voice, full of pain she keeps repeating her beloved son's name.
The late Mr. Thangathurai's only son, twenty three-year old Ahilan, a second year CIMA student who lived with his father at the M. P's. hostel was out when the shattering news came. When he returned, there were crowds of people waiting to see him, but to lessen the shock he was first not told of the death of his father, a Deputy President of the T. U. L. F. and one dedicated to peace and harmony among all people. He was told his father was badly injured.
Ahilan said "my father being a kind man thought he had no enemies, and when he went to Trinco he refused to take his security men with him. I saw him on Saturday morning and he told me he would return by Monday as he had to attend Parliament. But he did not came back. I still cannot believe it.
"He was strict on discipline but always made me and my two sisters make our own decisions by subtly guiding us. He never smoked and did only a very little social drinking.
He often told us, the family, that he had no enemies and no threats. He was a simple man and believed that there was no evil in people.
One of my sisters is in London and the other with my mother is living with an uncle in Madras. They received the news of his death before me and returned that same night.
"I still wonder how my mother stood the journey. She is so distraught and traumatised that she said she could not speak.
"One of the last things my beloved father told me was that he was hoping to go to Trinco on July 12 (yesterday) to attend St. Mary's College annual get together.
"He was keenly conscious at all times on the need for good education for all. But now he won't make the journey. Instead he lies cremated with only his sacred ashes left for us.
"My mother is fifty-four and I just don't know how she will carry on without my father. They were very close".
His voice broke as he said "I still can't believe he is dead and feel that at any moment he will walk in with his natural smile."

Saturday, July 4, 2009

ஜூலை 05 (நாளை)- எனது வாழ்க்கையில் மறக்க முடியாத துயரமான சம்பவம் நடந்த நாள்!

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் கல்லூரி அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் கா. சீவரத்தினம், பொறியியலாளர் திரு. வெ. ரட்ணராஜா சமூகசேவகர் பெ.சி. கணேசலிங்கம் ஆகிய அறுவரும் 05.07.1997 சனிக்கிழமை மாலையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய 3மாடிக்கட்டடத் திறப்புவிழா முடிவுற்ற பின்னர் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் எவராலும் நியாயப்படுத்த முடியாத கொடிய மனிதாபிமானமற்ற மிருகத்தனமான செயலாகும். இச்சம்பவத்தில் உயிர் நீத்த அறுவரையும் எனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது! ஒரு தகவலுக்காக முன்கூட்டி இச்செய்தியைப் பிரசுரிக்கின்றேன். நாளை கட்டுரை வெளிவரும்.