அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label சமய நெறி. Show all posts
Showing posts with label சமய நெறி. Show all posts

Monday, March 15, 2010

யோகி அல்லது துறவியின் பக்குவம் - காஞ்சி மஹா பெரியவர்

கடந்த சில காலமாக துறவிகள் ஒரு சிலருடைய நடத்தைகளினால் - சனாதன தர்மம் எனப்படுகின்ற எமது பாரம்பரிய வழிமுறைகளில் ஏதோ தவறுகள் இருப்பதாகவும் - அதனைக் கண்டிக்கின்ற போர்வையில், ஒட்டுமொத்த தர்மப் பாரம்பரியத்தையுமே அவதூறாக விமர்சிப்பதைக் கண்ணுற்று - சகிக்க முடியாமல் இக்கட்டுரையை எழுத முற்படுகிறேன். நானும் திரும்பத்திரும்ப - பலர் சொல்லியபடி - புதிதாக எதையும் சொல்ல வரவில்லை. இருப்பதில் சிறப்பானதும் -தேவையானதும் - உண்மையானதுமான கருத்தை முன்வைக்க விரும்புகின்றேன். இதற்கு நான் உதாரணபுருஷராக முன்னிறுத்துவது எம்மவர்களால் காஞ்சி மஹா பெரியவர் என வாஞ்சையோடு அழைக்கப்படும் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களையே!

அவரை மாத்திரமல்ல பல உண்மைத் துறவிகளையும் இதில் நான் குறிப்பிடுவது அவசியமாகிறது! யாழ்ப்பாணத்து சித்தர் பரம்பரை எனப்படும் சிவயோக சுவாமி குரு பரம்பரையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரொபேர்ட் ஹன்சன் என்ற பிள்ளைத்திருநாமம் கொண்ட ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள், ஈழத்தில் நுவரெலியா இலங்காதீஸ்வரர் ஆலயத்திலிருந்த ஸ்ரீ காயத்திரி சித்தர் தவத்திரு முருகேசு சுவாமிகள், இன்றும் கொழும்பு - மட்டக்களப்பு இராமகிருஷண மிஷன்களில் சேவைபுரியும் ஸ்வாமிகள் போன்றோர் நான் நேரடியாக தரிசித்த பெரியார்களாவார். இவர்களைவிட ரமணமகரிஷி, சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களையும் பட்டியலிடலாம்.

சனாதன தர்மம் எனப்படும் எமது சைவ அல்லது இந்துப் பாரம்பரியத்தில் நான்கு ஆச்சிரம தர்மங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவை பிரமச்சரியம் - கிருகஸ்தம் - வானப்பிரஸ்தம் - சந்நியாசம் என்பவையாகும். சந்நியாசம் என்கிற துறவு முறையை எடுப்பதற்கு - மேற்குறித்த 3 முறையிலும் படிப்படியாக பயிற்சி அடைந்தபின்பே - காவியைப் பெறுவதற்கு தகுதியடைகின்றனர்.

யோகி அல்லது துறவியின் பக்குவம் பற்றி காஞ்சி மஹா பெரியவர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொல்லியதை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்!


துக்கம் என்பது தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி. பாவம் - அதாவது மனஸில் அசுத்தம்தான், துக்கத்துக்குக் காரணம். மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீக்கினால், அதுதானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாடிட்டினாலும் தான் மனஸில் அசுத்தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு சரியான கல்வியின் மூலமும். அப்பியாசத்தின் முலமும், கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களைப் போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து ஜயித்தால், கடைசீயில் தேக வியோகமே பரமாத்மாவுடன் பிரியாமல் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.


யோகிக்கு அடையாளமென்ன. பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.

மனசு அதற்கப்புறம் ஒடவே முடியக் கூடாது. அப்படி ஒடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற அத்தனை தொந்தரவுகளும் தொலைந்துபோகும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும். மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்த்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஒடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்து விடுபட்ட நிலை.

நதி இருக்கிறது. அதன் மூலம் - உண்டான இடம் - என்ன? சமுத்திரம் - சமுத்திர ஜலம் தான். ஜலம் ஆவியாகிப்போய் வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஒடாத இடமில்லை. இப்படி ஒடி ஒடித்தான் கடைசீயில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம் அதற்குத் தனி ரூபம் உண்டா. ஒட்டம் உண்டா. ஒன்றும் இல்லை. இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் இவற்றைத் தன்னிலேயே சேர்த்துக் கொள்கிற மாதிரி, நம் மனசுகளை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது. சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்துவிட்டு வெளிப் பிரக்ஞையே இல்லாமல் இருக்கும்போதே, இந்த வஸ்துவிடம்தான் சேர்ந்திருக்கிறார்கள். சமாதி நிலைக்கு அப்புறம் ஒரு யோகி அந்த நிலையை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால்கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அவருக்கு அந்தச் சேர்க்கையின் அநுபவமேதான் இருந்து கொண்டிருக்கும். அதனால்தான் அவர் வெளிப் பிரக்ஞையோடு இருக்கிற மாதிரி நமக்குக் தோன்றுகிற போதுகூட, அதை அடைய வேண்டும். இது அடைய வேண்டும் என்ற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருத்தனுக்குத் தோன்றிவிட்டாலும்கூட அவர் யோகி இல்லை. அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்றுதான் அர்த்தம்.

யோகியின் அடையாளத்தை வேறுவிதமாகவும் சொல்லலாம். அதாவது அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்துவிட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளிக்கூட ஆகக் கூடாது. அசையக் கூடாது, அழக்கூடாது, இப்படி இல்லைமல், சித்தம் துளித்துளி சலித்து விட்டால்கூட அவன் பரமாத்மாவை அடையவில்லை என்ற அர்த்தம்.
யோகிக்கு அநேக துக்கம் வரும். அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா! யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும். இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.
அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும். யாரிடத்திலும் கோபம், வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்கு தன்னால் இம்மியும் ஹிம்ஸை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டும் இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம் செய்தாலும், அதெல்லாம் அவனுக்குத் தான் செய்கிறோம் என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல், பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். சில சமயங்களில் வெளியிலே பார்க்கிற காரியம் நமக்குக் கடுமையாக இருந்தாலும்கூட, உள்ளுக்குள்ளேயே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது. மஹா யோகியான பரமேசுவரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு ஜீவனும் எத்தனை பாப ஜீவனாக இருந்தாலும் சிறிய காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்காகவே அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து அந்த வேளையில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி. இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினம் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல் - புனரபி ஜனனம், புனரபி மரணம் - கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான். குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழகினால்தான், கோடாது கோடி ஜனங்களை இந்தமாதிரி, படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயானாலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மநுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.
(http://www.kamakoti.org/tamil/part1kural17.htm)

Wednesday, June 24, 2009

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் திருவிழா ஆரம்பம் - நேற்று கொடியேற்றம்!

வரலாற்றுப்புகழ் மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்தடன் வெகுவிமரிசையாக ஆரம்பமானது.

(மேலேயுள்ள படம் கிருபாகரனின் பதிவிலிருந்த புகைப்படம் - அவருக்கு நன்றி)
இந்தச் செய்தியை எழுதி வெளியிட தேடலுக்கப் போனவேளையில் இலங்கைக் கடற்படையினரின் வலைத்தளத்தில் இருந்த செய்தியைக் கண்ணுற்றேன். படையினரில் மக்களுடன் குறிப்பாகத் தமிழ் மக்களுடன் அன்னியோன்னியமாக வாழ்ந்து பழகி வருபவர்களுள் கடற்படையினரைச் சொல்லலாம். காரணம் காரைநகர் கடற்படை முகாமிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு பொன்னாலை வரும் கடற்படையினர் மூளாய் அரசடிச் சந்திக்குவந்துதான் திரும்ப பொன்னாலைக்குப் போய் தண்ணீர் எடுப்பார்கள். நான் இதனால் சிங்களப்படையினருக்கு பந்தம் பிடிப்பதாக யாராவது இனி எழுதலாம். அதனால் முன்னரே சொல்லி வைக்க விரும்புகிறேன். நெடுந்தீவு குமுதினிப் படுகொலை ஏன் ஏற்பட்டது என்பதை கொஞ்சம் நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.



இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடல்வழிப் பிரயாணத்துக்கு உதவுபவர்கள் அரச மட்டத்தில் இவர்களே!. மக்களோடு சகஜமாகப் பழகும் இவர்கள்பற்றி பழகியவர்களுக்கத்தான் தெரியும்!

சிங்களவர்கள் கொடுமைக்காரர்கள் - முட்டாள்கள்(அனைவரும் அல்ல) - அவர்களைச் சீண்டிப் பார்க்கும் நாம் எப்படிப் பட்டவர்கள் (இங்கும் அனைவரும் அல்லர்) என்பதையும் சற்று நிதானமாக இருந்து சிந்தித்தால் நல்லது!

விரிவாக செய்திக்கும் திருவிழாவையும் கடற்படையினரின் மக்கள் சேவையையும் பார்ப்பதற்கு - http://www.navy.lk/index.php?id=876

(நன்றி - Sri Lankan Navy)

Thursday, November 20, 2008

சபரிமலை யாத்திரையின் குருசுவாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்


சபரிமலை ஐயப்பனுடைய யாத்திரை தொடங்கி 4 நாட்களில் யாத்திரையின் முன்னோடியான குருசுவாமி சிவத்திரு. எம் என் நம்பியார் அவர்கள் பரம்பொருளின் திருவடிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட செய்தியறிந்து ஆழ்ந்த துயரம் அடைந்தோம். அவரை நேரில் தரிசிக்கலாம் என்று நாம் நினைத்ததை இறைவன் இல்லாமல் செய்துவிட்டான். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சபரிகிரிநாதனை மனதால் துதிக்கின்றோம்.

Monday, October 13, 2008

கிருத்தியத்தின் வாசகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பும் - சில மாற்றங்களும்

கடந்த ஒக்டோபர் 02. மகாத்மா காந்தி ஜனனதினம் - கட்டுரை வேண்டும் என்ற செய்திக்கும், 30.09.2008 வாசகர்களின் கவனத்திற்கு என்ற தலைப்பிட்ட செய்திக்கும் எந்தவிதமான கருத்துக்களும் இன்றுவரை தெரிவிக்கப்படாதமையால் அடியேன் எனது கிருத்தியப்பதிவில் தொடர்ந்தும் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளை இடுவதெனவும் முன்னர் குறிப்பிட்டதைப்போல தனியாக சமயத்திற்கு இதை ஒதுக்க முடியாதிருப்பதையும் மிகவும் தயவுடன் தெரிவிக்கின்றேன்.

Wednesday, August 13, 2008

நான்முகன் உபதேசம்

தேவர்களுக்கு அருளியது - தமனம் (கட்டுப்பாடு)

சுகபோகங்கள் நிறைந்த சுவர்க்கலோகத்தில் அளவோடு சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு அவைகளுக்கு அடிமையாகாமல் வாழ்வீர்களாக!

மனிதர்களுக்கு அருளியது - தானம்

செல்வம் சேர்ப்பதில் அதிகமான மோகம் கொண்ட நீவிர் சம்பாதிக்கும் பொருள்களில் குறிப்பிட்டளவு பங்கை இல்லாதாருக்கும் இயலாதவர்க்கும் தானமாக அளியுங்கள்!

அசுரர்களுக்கு அருளியது – தயா (இரக்கம்)

கோபங்ககளும் கொலைவெறியும் ஆதிக்கமோகமும் கொண்ட நீவிர் தயா எனும் நல்வழிகாட்டும் இரக்க குணத்தை திடமாகக் கடைப்பிடித்து வாருங்கள்!

தேவர்களும் மனிதர்களும் அசுரர்களும் பிரம்மதேவரின் உபதேசத்தைக் கடைப்பிடிக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் பெற்றார்கள். பெரும்பாலும் இவர்கள் பிரம்ம வாக்கை மீறிச் சென்று சீர்குலைவு கண்ட நிகழ்ச்சிகள் தான் அதிகம். முறையும் முறைகேடும் கலந்த வாழ்க்கை தான் இன்றும் மனிதர்களையும் மற்றவர்களையும் அல்லற்படுத்திக் கொண்டு இருக்கின்றன.

Sunday, August 10, 2008

ஹிந்துக் கோவில்களுடன் ஹிந்துசமுதாயத்தின் உறவு

ஹிந்துக் கோவில்களுடன் ஹிந்துசமுதாயத்தின் உறவு

முன்னாளில்

கோவில்கள் ஹிந்துக்களின் சமுதாய வாழ்வோடு இரண்டறப்பிணைந்திருந்தன. எந்த ஒரு காரியமும் கோவிலும் பூஜாரியும் கோவில் தர்மகர்த்தாவும் சம்பந்தப்படாமல் ஊரில் நடப்பதில்லை.

தனிநபர் சம்பந்தப்பட்ட கல்யாணம் மரணம் போன்றவையானாலும் பொதுக்காரியமான வழக்கு நியாயத் தீர்ப்பு போன்றiயானாலும் கோவிலை மையமாக வைத்தே நடந்தன.

எல்லாக் கலைகளையும் மாணவர்கள் கற்பதும் கோவிலிலேயே நடந்தது. நாடகம் நடனம் இசை விருந்துகள் மருத்துவம் இலக்கிய விவாதங்கள் தத்துவ ஆராய்ச்சிகள் காவிய அரங்கேற்றங்கள் வேள்விகள் முதலியனவும் கோவிலிலேயே நடந்தன.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் கோவிலில் நடக்கும் போது முதலிலும் இடையிலும் கடையிலும் இறைவனின் வழிபாட்டுடனேயே நடந்தன.

ஹிந்து சமுதாய வாழ்க்கையின் ஒவ்வொரு சடங்கிலும் கோவிலும் இறைவழிபாடும் பின்னிக் கிடந்ததால் இந்து ஒவ்வொருவனும் இந்து சமயம் என்னும் பரந்து விரிந்த பெரும் ஆலமரத்தின் நிழலிலேயே வாழ்ந்திருந்தான்.

கோவில் ஊராரின் பொது இடம் அனைவருக்கும் உரிமைப்பட்ட இடம் அதனால் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளும் அனைவரும் பங்கு பெறும் பொது நிகழ்ச்சியாகவே நடந்தது.

இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஊர்;மக்கள் அனைவரும் பங்கு பெறும்போது இந்துக்களிடையே உருவான ஆழ்ந்த பிணைப்பும் பாசமும் ஒற்றுமையும் அவர்களது சக்தியையும் அறிவையும் வலுப்படுத்தின.

ஒவ்;வொரு சிற்றூரிலும் தனித்தனியே கோவிலை மையமாக வைத்து வாழ்ந்த இந்துக்கள் வருடத்தில் ஓரிருதடவைகள் பெரிய கோவில் திருவிழாக்களை மையமாக வைத்து லட்சக்கணக்கில் ஒன்றாகத்; திரண்டனர். மிகப்பெரிய தேர்களை உருவாக்கி அனைத்து இந்துக்களும் கூட்டமாhகச் சேர்;ந்து இழுத்து இறைபக்தியையும் ஒற்றுமையையும் புதுப்பித்துக் கொண்டனர். இப்படி ஒரு வட்டாரத்தில் உள்ள பல சிற்றூர் மக்கள் தேர்;த் திருவிழாக்களில் ஒன்றாகக் கலக்கமுடிந்தது.

பாரதக்கண்டத்திலும் இமயமலைமுதல் கன்னியாகுமரி வரையிலும்; இந்துக்களின் கலாச்சாரம் செழிக்கவும் பரஸ்பர பாச உணர்வும் ஒற்றுமையும் வளரவும் கோவில் வழிபாடுகளே மையமாக அமைந்தன.

காஷமீரத்து இந்துக்கள் கால்நடையாக கன்னியாகுமரிக்கும் ராமேஸ்வரத்துக்கும் காசிக்கும் வந்தனர். கன்னியாகுமரி இந்துக்களும் அதேபோல கால்நடையகவே கைலாயம் வரை சென்றனர்.

பல மாதங்களும் வருடங்களும் பிரயாணத்தில் செலவுசெய்த இந்துக்கள் அகண்ட பாரதம் முழுவதிலும் ஒரேமாதிரியான ஹிந்து சமய நெறியைப் பரப்பிச் சீர்படுத்தினர்.

ஆன்மநேய ஒருமைப்பாடும் விருந்தோம்பலும் பண்பும் பாசமும் இதனால் ஹிந்துக்களிடையே வளர்ந்தோங்கி இருந்தன. மகா காவியங்களான இராமாயணமும் மகாபாரதமும் கோவில்களில் படித்துப் பொருள் சொல்லப்பட்டன.

இதனால் இளம் உள்ளங்களில் பெற்றோரைப் பற்றிய பாசமும் சகோதர பாசமும் வீரமும் இறை உணர்வும் விதைக்கப்பெற்றன.

கோவிலில் பூஜை செய்யும் பூஜாரி ஒழுக்கத்தின் சின்னமாகவும் மேன்மகனாகவும் வேதங்களை அறிந்தவனாகவும் பாமர இந்துக்களுக்கு அறிவு சொல்லும் ஆசானாகவும் இருந்தார்.

கோவில் பூஜாரிக்கும் ஊர்மக்களுக்கும் இருந்த இறுக்கமான பிணைப்பால் கோவிலின்பால் இருந்த பக்தி மக்களுக்கு மேலும் வளர்ந்தது. கோவில் தர்;மகர்த்தாவும் அதுபோலவே மேன்மகனாhகவும் திறமை வாய்ந்தவனாகவும் இருந்தார். இதனால்; நாத்திகர்களும் இறைவழியாட்டைக் கிண்டல் செய்யும் பேர்வழிகளும் இல்லாதிருந்தனர்.

கோவிலில் ஒருநாளில் குறிப்;பிட்ட நேரங்களில் மட்டுமே இறைவனுக்குத் தீப ஆராதனையும் வழிபாடும் நடந்தன. இறைவனுக்கு அலங்காரம் செய்து நடை திறக்கப்படும் வரை அனைத்து பக்தர்களும் அங்கே கூடியிருந்து தங்களுக்குள் அமைதியாக அளவளாவி பஜனைசெய்து உபன்னியாசம் கேட்டு நேரத்தைச் செலவழித்தனர்.

அலங்காரம் முடிந்து நடைதிறந்ததும் எல்லோரும் ஒரே நேரத்தில் கூட்டமாக சுவாமி தரிசனம் செய்தனர்.

இப்படி ஒரேநேர சுவாமி தரிசனம் மட்டும் இருந்ததால் இந்துக்கள் அந்த நேரத்தில் கட்டாயமாக ஒன்றுசேர்ந்து தங்களுக்குள் பழகி ஒருவர் மற்றவரை அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது.

இந்நாளில்

ஆனால் இந்hளில் ஹிந்துக்களின் முந்தைய நடைமுறைகள் மாற்றப்பட்டுவிட்டன. ஹிந்து சமுதாயத்தின் ஒற்றுமையைக் குலைத்து பாரதத்தின் சக்தியை மழுங்கடிக்கும் திட்டத்தைத் தீட்டிய ஆங்கிலேயக் கிறீஸ்தவர்கள் மிக புத்திசாலித்தனமாகச் செயல்பட்டனர்.

ஹிந்துக்களையும் அவர்களது கோவிலையும் தனித்தனியாகப் பிரித்தனர். கோவில் வேறு சமுதாயம் வேறு என்னும் சிந்தனையை சிறுகச்சிறுக ஊட்டினர்.

இதனால் இன்று ஹிந்துக் கோவில்கள் இந்துக்களின் கையில் இல்லை. அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. அரசியல்-வாதிகளாகவும் நாத்திகர்களாகவும் பணப்பேய் பிடித்து அலைபவர்களாகவும் இருப்பவர்கள் கூட கோவில் தர்மகர்த்தா ஆகிவிடுகிறார்கள். தர்மகர்த்தாவுக்கு கோவில் விவகாரமும் தெரியாது சமுதாய விவகாரமும் தெரியாது. இன்றைய தர்மகர்த்தாக்களே இந்து சமுதாயத்தை இந்துவின் கோவில்களிலிருந்து தூரத்தூர விலகிப்போகும்படி செய்து கொண்டிருக்கிறார்கள்.

கோவில் பூஜாரிக்கும் கும்பிட வருகிறவனுக்கும் தொடர்பே இல்லை. பக்தர்களின் இன்ப துன்பங்களில் பங்குகொண்டு அவர்களது சமுதாய வாழ்வில் முன்னின்று உதவிசெய்து எல்லோருக்கும் நல்லோனாக இருந்த முன்னாளைய பூஜாரி பின்னாளில் கோவிலை விட்டு வெளியே வராதவனாகவும் பிறர் கை பட்டால் தீட்டு பட்டுவிடும் என்று ஒதுங்கி ஓடுகிறவனாகவும் ஆனான்.

பக்தனிடம் அன்புடன் பழகி ஆறுதலும் அறிவும் சொல்லவேண்டிய பூஜாhரி பக்தன் கையிலிருக்கும் அர்ச்சனைத் தட்டை மட்டுமே - அதிலிருக்கும் தட்சணையை மட்டுமே பார்க்கும் சுயநலக்காரனாக ஆனான் அல்லது ஆக்கப்பட்டான்.

பூஜாரி ஹிந்து சமுதாயத்துடனுள்ள தொடர்பை ஜாதியின் பெயராலும் ஆச்சாரத்தின் பெயராலும் அறுத்துக் கொண்ட நாள் முதல் இந்துக்களின் பலம் குன்ற ஆரம்பித்தது.

ஒரே நேரம் நடைதிறந்து எல்லோரும் கூட்டுவழிபாடு நடாத்தும் நிலை மாறி, எந்த நேரத்தில் யார் வந்தாலும் அர்ச்சனை செய்யவும், வழிபாடு என்ற பெயரால் ஏதோ செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டது.

பக்தன் பத்துக் காசை தட்டில் போட்டவுடன் பூஜாரி சூடம் காண்பித்துவிடுவதால் வந்தவனுடைய வழிபாடு பத்து நிமிடத்தில் முடிந்துவிடுகிறது.

இதனால் கோவிலுக்கு வருகிற பக்தனுக்கு கோவிலைப் பற்றியோ, கோவிலுக்கு வரும் மற்ற பக்தர்களைப் பற்றியோ, இந்து சமுதாயத்தைப் பற்றியோ எந்த சிந்தனையும் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

தன்னுடைய சுயநன்மைக்காக, குடும்ப நன்மைக்காக பிரார்த்தனை செய்து, பலனடைவதே பக்தி என்று நம்பத்தொடங்கினர் மக்கள்.

கோவிலில் ஒன்றாகக் கூடுவதும், சேர்ந்து இருப்பதும் போன்ற சந்தர்ப்பங்கள் இல்லாமல் போய்விட்டன. உண்மை பக்தி என்பதை விளக்குவார் இல்லாமல் ஆனது.

தர்மகர்த்தா தரம் கெட்டுப் போனதால் ஊர் வழக்குகள் கோவிலில் தீர்க்கப்படுவதில்லை. இதனால் இளைஞர்கள் பெரியோர் சொல் கேட்பதில்லை.

நகைகள் சில பக்தர்கள் அபரிதமான பக்தியால் தங்க நகைகளையும், விலை உயர்ந்த பொருட்களையும் சுவாமிக்கு அலங்காரம் செய்வதற்காக கோயிலுக்குக் கொடுக்கிறார்கள்.

இவர்கள்; இப்படிக் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் கொடுத்தது மட்டுமல்ல ஒவ்வொருமுறையும் சுவாமிக்குபோட்டு அலங்காரம் செய்ய வற்புறுத்துகிறார்கள்.

கோவிலில் நகைகள் சேரும்போது திருட்டுப் போவதற்கும் கோவில் நிர்வாகிகளே பேராசைப்பட்டு கள்ளக்கணக்கு எழுதுவதற்கும் இந்த விலையுயர்ந்த நகைகள் ஏதுவாகின்றன.

இப்படி நகைகள் ஒரு கோவிலில் இருப்புதையே கருத்தாகக் கொண்டு நாஸ்த்திகர்களும் கூட கோவில் விவகாரங்களில் தலையிட ஆரம்பிக்கிறார்கள்.
கோவிலுக்கு காணிக்கையாக வரும் பொருட்கள் கோவில் பக்தர்கள் நன்மைக்காகவும் இந்து சமயத்தின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படவேண்டும்.

மாறாக பெரும் செல்வத்தை நம் கோவிலில் சேர்த்து வைத்தால் முகமதியர் கொள்ளையடித்ததைப் போல இப்போது நாஸ்த்திகர்கள் கொள்ளையடிப்பதிலேயே தான் போய்முடியும்.


இனிமேல்

நாம் கோவிலுக்குப் பணம் சேர்ப்பதைவிட பக்தர்களையும் உண்மையான இந்துக்களையும் சேர்க்க வேண்டியது மிகமிக அவசியம்.

சிறிய கோவிலாக இருப்பினும் அங்கே வழிபாடு செய்யும் பக்தர்கள் சேர்ந்திருந்து பிரார்த்தனை செய்வதற்கும் சமயக் கருத்துக்களைக்குறித்து உபன்னியாசங்கள் கேட்பதற்கும் சமயவகுப்பு திருவிளக்கு வழிபாடு செய்வதற்குமாக ஒரு மண்டபம் கண்டிப்பாகத்தேவை. அதை விட்டுவிட்டு ஆடம்பரமாக கூட கோபுரங்களைக் கட்டி ஆனால் ஆட்கள் உட்கார இடமில்லாமல் கோவில் அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

வழிபாடு செய்யும்போது பூஜாரி சொல்லும் மந்திரங்களைக் கூறவேண்டும். இதற்காக ஆலய நிர்வாகிகள் ஊர்மக்கள் சமஸ்கிருத, தமிழ் மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளைத் தெளிவாகக் கற்க ஆவன செய்யவேண்டும். அத்துடன் வாரம் ஒரு நாள் சமய வகுப்பு வாரம் ஒரு நாள் சத்சங்கம் மாதம் ஒரு நாள் திருவிளக்கு வழிபாடு ஆகியவை நடைபெற ஏற்பாடு செய்யவேண்டியது ஆலய நிர்வாகிகளின் தலையாய கடமையாகும்.

விழாக்கள் நடத்தும்பொழுது ஊருக்குஊர் யார் அதிகமாக ஆடம்பரச் செலவு செய்வது என போட்டிபோட்டு மக்களின் பணம் விரயமாக்குவது கூடவேகூடாது. இது மகாபாவம் விழாக்களில் ஆன்மீகத்தை ஊட்டாத வளர்க்காத எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாகாது. அவ்வாறு நடத்தினால் நிர்வாகிகளும் ஊர்மக்களும் தெய்வ கோபத்திற்கு ஆளாகி இன்னல் படவேண்டிவரும்.

ஆலயங்களில் அதனைச் சுற்றியிருக்கும் அனைத்து மக்களின் முழுவிவரப் பதிவேடு பேணப்படவேண்டும். பிறப்பு திருமணம் மரணம் இவற்றிற்கானத் தனித்தனி பதிவேடு பேணப்படவேண்டும்.

மேலும் ஊரில் யாருக்கேனும் நல்லது கெட்டது நடந்தால் அங்கு சென்று அவர்கள் வளமுடனும் அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திப்பதற்கு ஒரு பிரார்த்தனைக்குழு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பணம் இல்லை என்ற காரணத்தால் ஊரில் ஒருவரேனும்; கல்வி கற்கச் செல்லாமலோ திருமணம் ஆகாமலோ உணவின்றியோ இருக்கலாகாது. அவ்வாறு வசதியற்றவர்களுக்கு ஆலய விழாக்களுக்காக வசூலிக்கும் பணத்தை முழுவதும் விரயம் செய்யாமல் குறிப்பிட்ட சதவீதம் நிரந்தர சேமிப்பில் வைத்து அதன் வட்டிமூலம் கல்வி மருத்துவம் திருமணம் போன்ற உதவிகள் செய்ய முடியும்.

ஆலயங்களில் அந்தந்த ஊரைச்சார்ந்த பக்தியும் சிரத்iதையும் உடைய ஒருவரே பூஜை முறையைக் கற்று பூஜை செய்யவேண்டும். பூஜை செய்வதை ஒரு வருமானம் செய்யும் தொழில் எனவோ பரம்பரைத் தொழில் எனவோ ஆக்கக்; கூடாது.

கோவிலில் பூஜை என்பது வெறுமனே தீபாராதனை காண்பது என்பதாக இல்லாமல் தினசரி ஊரார் அனைவரும் மாலையில் கூடி பூஜையை கீழ்வருமாறு அமைத்;துக்கொள்ள வேண்டும்.

பஜனை
நன்மொழி வழங்கல்
ஒற்றுமை கீதம்
கூட்டுப் பிரார்த்தனை
தியானம்
நாபஜெபம்
தீபாராதனை கற்பூர ஆரதி
கூட்டாகத் துதிப் பாடல்கள் பாடுதல்
நமஸ்காரம் செய்தல்
பிரசாதம் பெறுதல்

இவ்வாறாக ஆலயங்கள் இருந்தால் நாம் சிறந்த இந்துவாக மாறி பாரதத்தை பாரின் குருவாகக் காண இயலும்.

(சுவாமி ஸ்ரீ மதுரானந்த மகராஜ் அவர்களால் தொகுத்து கன்னியாகுமரி வெள்ளிமலை ஸ்ரீ ஹிந்து தர்ம வித்யாபீடம் வெளியிட்ட இந்து சமயம் முதுநிலை என்ற நூலிலிருந்த தற்போதைய தலைவர் ஸ்ரீ சைதன்யானந்த மகராஜ் அவர்களுடைய அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது)

Friday, July 4, 2008

சமய நெறி நிற்போம்!

உயிர்கள் உய்திபெறவே ஒரு பெருங்கடவுள். உயிர்கள் உய்திபெறப் பயிலும் கலையே வாழ்க்கை. உயிர்கள் உய்யும் நெறியே சமய நெறி. அந்த நெறியில் தலைப்படின் சிந்தையிவே தெளிவு - அறிவிலே ஆக்கம் - ஆற்றலின் கொள்கலம் - அயரா அன்பு - எங்கும் இன்பம் என்ற சூழல் உருவாகும். இதுவே சமய நெறி வழிப்பட்ட சமுதாயம். களவு - காவல், உயர்வு - தாழ்வு, உடையார் - இல்லாதார், என்ற அமைப்பு சமய நெறி சாராதார் அமைப்பு.

ஆனால் இன்றைய சமுதாயத்தில் நிலை தடுமாற்றம். சமயம் இயக்க நியதிகளினின்றும் விலகி, நிறுவனங்களாகி அதுவே களவுக்கும் - காவலுக்கும் ஆளாகி, உயர்வு - தாழ்வு என்ற போராட்டத்தின் களமாகி, உடையாரை உவந்தாக்கியும் இல்லாரை எள்ளி நகையாடி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம் பிரானாட்டம் ஆகமுடியுமா? ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமயநெறி.

ஆலயங்கள் சமய - சமுதாயப்பணி மன்றங்களே!
ஆலயங்கள் நமது சமுதாயத்தின் பொது இடங்களாக விளங்கி மக்கட்பணி செய்தன என்பதை தமிழகத் திருக்கோயில்களில், கல்வெட்டுக்களில் இருந்து அறியக் கூடியதாக இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்கள் இருந்து தமிழாராய்ந்தனர். கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள், கலைபயில் கழகங்கள், நாடக அரங்குகள், மருத்துவமனைகள், ஏன் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் முறை மன்றங்களும் இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழிநடத்தும் கிராம சபைகள் - ஊர்ச்சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன.

இன்று நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. இவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகிவிட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமயநெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாதி, குல, இன, அரசியல் வேறுபாடுகளை அறவே களைந்து, அவற்றிற்கு அப்பாற்பட்டதாக அமைதல் வேண்டும். 'தெரிதல் முறை' அவசியம்.

சமய நிறுவனங்களுடைய தலைவர்கள், ஆலய குருமார்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருக்க வேண்டும்.