அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label தொடர் விளையாட்டு. Show all posts
Showing posts with label தொடர் விளையாட்டு. Show all posts

Sunday, October 11, 2009

கல்வி பயின்றதொரு காலம் - 2

நான் அரிவரி(Nursery) படித்தது சுழிபுரம் காளுவான் சந்தியிலுள்ள 63 நாயன்மார் குருபூசை மடாலய பள்ளியில். அங்கு இரு ஆசிரியைகள் எமக்கு பயிற்சி கொடுத்தார்கள். படத்தில் பின்வரிசையில் நிற்கும் இடமிருந்து வலமாக 4ஆவதாக நான்.

ஒவ்வொரு நாளும் என்னை இராசா அண்ணன்தான் தனது சைக்கிளில் அழைத்தச் செல்வார். அவர் அப்போது விக்ரோறியாக் கல்லூரியில் படித்தவர். பிள்ளையார் கோவில் தாண்டியிருக்கும் காணிவெளியில் சில நேரங்களில் நான் தலையில் போட்டிருக்கும் ஓலைத் தொப்பி பறந்து விடும். அவர்தான் அதை எடுத்து வந்த தருவார்.

பின்னர் 1971இல் மூளாய் அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஓரிரு வாரங்கள் படித்தபின் என்னை முதல் வகுப்பிலிருந்து 2ஆவது வகுப்புக்குத் தரமுயர்த்தினார்கள்.

அப்போது அதிபராயிருந்தவர் ஜோசப் மாஸ்ரர். அவரது மனைவியார் அரியம்மா ரீச்சர் ஆங்கிலம் சொல்லித் தந்தார். 5ஆம் வகுப்புவரை பல ஆசிரியர்களிடம் கல்வி கற்றது நினைவு. பரமசாமி ரீச்சர் என்று அழைக்கப்படம் சுகிர்தமலர் சீச்சர், சரஸ்வதி ரீச்சர் இருவர், குஞ்சு ரீச்சர், சின்னையா மாஸரர், நல்லதம்பி சேர், கோபாலு மாஸ்ரர் என இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. ஜோசப் மாஸ்ரர் ரிடையர் ஆன பிறகு இராசையா மாஸரர் அதிபரானார்.

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு முன்னர் எனது தாத்தா சுகவீனமுற்றிருந்தார். எனக்கு வழிகாட்டியாக என்னை பக்குவப் படுத்திய பெருமை எனது அப்புவைத்தான் சாரும். தனது இறுதிக்காலங்களில் எங்களுடனேயே வாழ்ந்தவர். அவரது வீட்டில்தான் நான் சிறுவயது முதல் வளர்ந்தேன். எனது தாயாரின் வீடு பொருத்தமில்லாத காரணத்தால் அது எப்பவுமே யாருக்காவது வாடகைக்குத்தான் விடுவதுண்டு. அப்போது மூளாயில் இயங்கிய பவானி என்ற சினிமா தியேட்டர் முதலாளி எங்கள் வீட்டில்தான் குடியிருந்தார்கள். அதனால் நாம் சிலவேளைகளில் ஓசியில் படம் பார்ப்பதுண்டு. பக்தப் பிரகலாதன், கர்ணன் போன்ற படங்கள் அங்கு பார்த்திருக்க வேண்டும். மூளாயில் Co -operative Hospital இருந்தபடியால் எமது ஊர் பிரபலமடைந்திருந்தது. மாலை நேரங்களில் அப்புவுடன் கோவிலுக்கும் காணி வெளிக்கும் போய் வருவதுண்டு! இரவில் பெற்றோமெக்ஸ் வெளிச்சத்தில் அப்புவுக்கு மகாபாரதம் - இராமாயணம் - குசேலர் கதைகளை பிலத்து வாசிச்சுச் சொல்வதுண்டு. பண்டாரவளையில் இருந்த கடைக்கு கடிதம் எழுதுவதாயின் அவர் சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். இதற்காக எனக்கு பல்லிமுட்டை இனிப்பு பரிசாக கிடைக்கும். சோதனைக்கு முதல் 2 நாட்களாக அப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வீட்டிலே தனிமை - 9 வயதில் நடந்த சம்பவம் இன்னும் ஞாபகம். கோயிலுக்குப் போய்விட்டு சோதனைக்குப் போகும்போதே அப்புவிற்கு அறிவில்லை என்று சொன்னார்கள். சோதனை எழுதிவிட்டு வெளியே வந்தபோது சின்னமாமா மோட்டர் சைக்கிளில் காத்திருந்தார் - அப்பு செத்துப்போய்விட்டார் - உடனே வா என்று அழைத்துச் சென்றார். ஒரே கவலை - செத்த வீடு - அப்படி நடந்தது. பறைமேளம் 2 கூட்டம் நல்ல கச்சேரி - சோடனைகள் நிறைந்த பாடையில குடை ஒன்று மேல்வைத்தது - இப்போதும் நினைவு! கோப்பாய் சீனியாச்சி(கிருஷ்ணன் கோவில் அம்மா) காந்தி அப்பு எல்லாரும் வந்திருந்திச்சினம். காந்தியப்பு தேவாரம் பாடேக்கை மாமாமார் அழுதது சிரிப்புத்தான். நிறைய சனம் - முத்தத்தில பெரிய கொட்டில் போட்டு வெள்ளை கட்டி - வெளியில, நாச்சார் வீட்டுக்குள்ள, வளவுக்குள்ள என்று ஓரே சனம். வேலியடைக்கிற கற்பி வந்து வெளியில இருந்த ஒப்பாரி வச்சு அழ நான்போய் வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டுபோய் அப்புவின்ற சவத்துக்கு முன்னால அருந்து அழச் சொன்னன். ஒருத்தரும் ஒண்டும் சொல்லேலை. இல்லாட்டி நான் கேட்டிருப்பன் ஆக்கள் இல்லாத நேரத்தில வீடு கழவ - தூசிதட்ட மட்டும் வரலாம் ஏன் ஆக்கள் நிக்கேக்க வரக்குடாது? என்று - சாதி பார்க்கிற சிஸ்டம் அப்ப நிறைய இருந்திச்சு! இப்பவும் இருக்குது! இன்னும் சனம் திருந்தவில்லை.

அப்புவுடைய 31க்கு வீடு முழுக்க ஒரே அரிசி மரக்கறி சாமான்! வழக்கம்பரை - சித்தங்கேணி - பொன்னாலை - சுழிபுரம் கோயிலில பூசைசெய்யுற ஐயாமார் எல்லாம் நிறைய வந்திருச்சினம். எங்களுக்கு ஐயாமாருக்குத் தானம் கொடுக்க சாமான் அளந்தே கையெல்லாம் களைச்சிட்டு.
சொந்தக்காரரும் பண்ணாகம் - சித்தங்கேணி - மாவடி - யாழ்ப்பாணம் - குரும்பசிட்டி - கட்டுவன் என்று கன இடத்தில இருந்த வந்தவை. நாங்கள் நிறைய பெடி பெட்டையள் ஒரே விளையாட்டுத்தான். இடைக்கிடை வந்து மாமாமார் ஏசி அதட்டிப்போட்டு போச்சினம்.

Sunday, September 20, 2009

கல்வி பயின்றதொரு காலம் - அனுராதபுரம் விவேகானநதா தமிழ் மகா வித்தியாலயம் - பகுதி 1

இத்தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த யோவொய்ஸ் அவர்களுக்கு முதலில் நன்றி! மருதமூரானுக்கும் இப்பதிவிலுள்ள கட்டுரையைச் சரிப்படுத்தியமைக்கு நன்றி! அரிவரியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தேன். ஒரு சந்தோஷமான நிகழ்வால் இடையிலிருந்து பகுதியாக எழுத விரும்பி இதைப் பதிவிடுகிறேன்.
இன்று இக்கட்டுரையை பதிவிட முற்படும்போது கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் நான் பயின்ற இப்பாடசாலையின் அதிபருடைய மகன் என்னுடன் ஈமெயில் தொடர்பு கொண்டதும் மறக்க முடியாத ஒரு சம்பவம். இந்தப் பதிவுகளை எழுதியதன் திருப்தி இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்றைய பதிவொன்றில் குறிப்பிட்டதுபோல - நட்புக்காக ஏங்கும் எனக்கு 32 வருடத்தின் பின் ஒரு நட்புக் கிடைத்தது ஒரு சந்தோசமான நிகழ்வல்லவா! மீண்டும் நிர்ஷனைத்தான் இன்றும் நினைவுபடுத்தி நன்றி சொல்லவேண்டும் - கிருத்தியத்தை எழுத உதவியமைக்கு!

அதிபருடைய மகனுடைய செய்தியை இதில் போடுவது எனக்கு ஒரு திருப்தியை ஏற்படுத்தும். சில மணி நேரத்துக்கு முன்னர் அவர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசியதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அன்புமிக்க முகுந்தன்,
வணக்கம். இக்கடிதம் உங்கட்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
சுமார் முப்பது ஆண்டுகட்கு முன்னரான தொடர்பு.
அனுராதபுரம் விவேகனந்தாவில் ஒன்றாக படித்தோம். என்னுடைய அப்பா அப்போது அங்கு அதிபராக இருந்தவர். இந்த மெயிலின் பிரதி அப்பாவுக்கும் அனுப்பியுள்ளேன்.
உங்களுடைய தளம் வழியாகவே உங்களுடைய மெயில் முகவரி கிடைத்தது.
உங்களுடைய தளம் மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுகள்.
பல அருமையான தகவல்களை பகிர்ந்து கொள்கின்றீர்கள். உங்கள் எழுத்து தொடர நால்வாழ்த்துக்கள்.
நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.
அன்புடன்,
சி.சிற்சபேசன்
நியூசீலாந்து

காதல்: அழகு: கடவுள்: பணம்= நான் (தொடர் விளையாட்டு)

காதல் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சம்பந்தரின் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்ற தேவாரம் தான்! சிறிய வயதிலிருந்து எனக்குப் பிடித்தமான(காதல்) மிகவும் அழகானவர் - படமாயினும் சரி கடவுளாயினும் சரி - பிள்ளையார்தான்!
இப்போதும் வயிற்றில் 2 தலையணைகளை வைத்துக் கட்டிவிட்டு பெரியதொரு பெற்சீற்றால் வயிற்றை மறைத்தக் கொண்டு பிள்ளையார் வாறார் பிள்ளையார் வாறார் என்று சொல்லி ஆடிப் பாடுவது என் இயற்கையான குணம். பிள்ளையாரின் ஆட்டத்தைப் பார்த்துச் சந்திரன் சிரித்தானாம் - சின்னக் குழந்தைகளின் அழுகையை நிற்பாட்ட - பிள்ளைகள் சிரிப்பதற்காக நான் போட்டு ஆடும் ஒரு விளையாட்டு.
மேலும் எனது தந்தையார் அரச ஊழியராக கடமையாற்றியதன் காரணத்தால் அடிக்கடி நாம் வெளியூர்களில் வாசம் செய்திருக்கிறோம். மாங்குளத்தில் அனுராதபுரத்தில் என குடும்பத்தினருடன் வாழ்ந்தபோதும் எனக்கு மாங்குளம் மாவடிப் பிள்ளையாரும் அனுராதபுரம் விவேனாந்த சபைக் கட்டிடம் அமைந்த இடத்திலிருந்த பிள்ளையார் கோவிலும் மறக்க முடியாத நினைவுகளாக இன்றும் இருக்கிறது. 1977 கலவரங்களின் பிறகு தெல்லிப்பழையில் வாழ்ந்தபோது வீட்டுக்கு அருகிலேயே காசிப்பிள்ளையார்.சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விடுதியில் தங்கியருந்தபோது MLA Hostel வளாகத்திலுள்ள அரச மரத்தடிப் பிள்ளையார். இப்படி நான் போகுமிடமெல்லாம் நான் காதலித்த பிள்ளையாரும் இருந்துகொண்டார்.


இனி காதலைப்பற்றிய என் உண்மையான கருத்து!

நாம் சகோதரர்கள் 4பேரும் வீட்டில் ஆண்கள். இதில் நான் மூத்தவன். பெண்களே இல்லாத என் குடும்பத்தில் பார்க்கும் பெண்களனைவரையும் சகோதரிகளாகவே மதித்துப் பழகியிருக்கிறேன். பாடசாலையில் கல்வி கற்ற நாட்களிலிருந்து திருமணம் முடிக்கும் வரை யாரையும் காதலித்ததில்லை.(நம்ப வேண்டியது உங்கள் கடமை)

காதல் திருமணத்தில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை இருக்கவில்லை. காரணம் எனது அம்மாவும் அப்பாவும் காதலித்துத்தான் திருமணம் புரிந்தார்கள். இதிலும் ஒருதடவை எனது தாயார் வீட்டுக்கத் தெரியாமல் தனது 18 வயதில் தனியாக எனது அப்பாவைத் தேடி புகையிரத மூலம் கொழும்பு சென்றபோது யாரோ எனது தாத்தாவுக்குத் தெரிந்தவர்கள் அம்மாவை புகையிரதத்தில் கண்டு அழைத்துச் சென்று தகவலனுப்பி பின்னர் தாத்தா சம்மமதத்துடன் மிகவும் எளிமையாக எனது தாயாரின் திருமணம் எங்கள் வீட்டிலேயே நடைபெற்றது. காதலித்த பின்னர் கல்யாணமாகிப் பிள்ளைகள் பெற்றதன் பிறகு எனது தம்பி இரத்தப் புற்றுநோயினால் தன் 7ஆவது வயதில் மரணமடைந்தபின் - குடும்ப வருமானம் போதாமையினாலும் - கலவரங்களின் பின்னரும் வீட்டில் ஒரே பிரச்சனைதான்.


மற்றயது எனது மாமனார் ஒருவர் காதலித்தது ஒரு சிங்களப் பெண்மணியை - அவர்களிடத்திலும் பிரச்சனை இருந்திருக்கிறது.

மற்றது ஒன்றுவிட்ட எனது அண்ணன் கதை - இவர்கள் காதலித்து ஒரு பிள்ளை பெற்ற பின்னர் தற்போது பிரிவினையில்!

இவை மாத்திரமல்ல - நாட்டின் பிரச்சனைகள் மற்றும் அழியும் எம் நாட்டின் அவல வாழ்க்கையில் - காதல் என்னைப் பாதிக்கவில்லை என்று சொல்லலாம்.

இதில் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் சமயப் பணிகளுக்காக 1990களில் நான் ஒரு இடத்திற்குச் சென்ற வேளையின்பின் (இடத்தையும் பெயர்களையும் குறிப்பிட விரும்பவில்லை) சில சமய சந்தேகங்களுக்காக என்னுடன் கடிதத்தில் தொடர்பு கொண்ட ஒரு மாணவியினுடைய காதலன் தவறாக என்மீது குற்றம் சாட்டி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததையும் இதைக் கேள்விப்பட்ட அந்த மாணவி பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளாது விட்டதும் உண்மை. பள்ளிப்படிப்பை முடித்தபின் ஊரிலுள்ள பலருக்கு சமயமும் தமிழ், கணிதம் போன்ற பாடங்களும் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறேன். அப்படிப் பயின்றவர்களில் என்னுடைய மனைவியும் ஒருவர். சிலர் இப்போதும் கேட்பதுண்டு -நீங்கள் அப்போதே காதலித்தவரா? என்று. ஆனால் என் பதில் ஒரு போதும் இல்லை என்பதே!

இப்போது திருமணத்தின் பின் நான் காதலிப்பது என் மனைவியையும் பிள்ளைகளையும் மாத்திரமே!.



அழகு என்றால் இயற்கையை மிஞ்சி எதையும் சொல்ல முடியாது! ஏற்கனவே காதலில் குறிப்பிட்டதுபோல அழகிலும் பிள்ளையார் தான் என்னை முதலில் கவர்ந்தவர். அதன்பிறகு அழகுக்குரிய அனைத்தையும் அடக்கலாம். பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது! அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பார்க்கும் எல்லா வடிவமும் எனக்கு அழகாகவே தெரிகிறது.



கடவுள் என்றால் கடந்து உள்ளும் புறமுமாய் இருப்பவர் - மேலான ஒரு சக்தி - பரம்பொருள் - அருவ உருவங்களுக்கு அப்பாற்பட்டவர் - எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் நாம் உருவம் கொடுத்து வழிபடுகிறோம். இயற்கையின் அனைத்திலும் அவரது ஆற்றல் வெளிப்படுகிறது! இதிலும் நான் ஒரு திருமந்திரத்தின் பாடலைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை


பணம் -


இதுபற்றிய எனது கருத்து -

பணம் இருக்கும் மனிதனிடம் குணமிருப்பதில்லை
குணமிருக்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை

பணமென்னடா பணம் பணம்
குணம்தானடா நிரந்தரம்

இன்றைக்கு இது ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் பணம் பத்தும் செய்யும் என்பதுபோல வாழ்க்கைக்கு முக்கியமானதொன்றாக இருக்கிறது.
எனக்கும் இந்தப் பணத்துக்கும் பெரிய போராட்டமே நடக்கிறது! இன்றைக்கு 20ஆந்திகதி ஆனால் கையில் ஒரு சதமும் இல்லை! இதுதான் என்னுடைய நிலை! யாரிடம்?.......

விளையாட்டிற்கு அழைத்த மருதமூரானுக்கு நன்றிகள்.