அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label சுவிஸ் அனுபவம். Show all posts
Showing posts with label சுவிஸ் அனுபவம். Show all posts

Thursday, December 19, 2013

1999இல் சபரிமலையில் நிகழ்ந்த அனர்த்தம் பற்றிய என் கருத்து!



(இக்கட்டுரை 1999 பெப்ரவரி மாதத்தில் எழுதப்பட்டது. வேலைப்பளு காரணமாக இதனை நான் கட்டுரையாக குறிப்பிட்ட தினகரன் பத்திரிகைக்கு அனுப்பவில்லை! ஆனால் தற்போது எனது மனத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்தில் எடுத்து இதனைப் பதிவிடுகிறேன்! தயவுசெய்து யாரும் மனம் நோக வேண்டாம்! ஏனக்குத் தோன்றுவதை நான் செய்வதற்கு எனக்கு உரிமை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இதனைப் பதிவிடுகிறேன்.)

"இந்தியா செல்லும் இந்து யாத்திரிகர்களின் நலன்காக்க இந்து கலாசாரத் திணைக்களம் ஏன் முன்வருவதில்லை?" என்றும், “சபரிமலை அனர்த்தத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம்” என்றும் தலைப்பிட்டு 07.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும், அதற்குப் பதிலளிக்கத்தக்க முறையில் 'இந்து யாத்திரிகர்களும் இந்து கலாசாரத் திணைக்களமும்' "வளமும் அதிகாரமும் இருந்தால் செய்து காட்டுவோம்" என்று 14.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும் வெளியான கட்டுரைகளுக்கு ஒரு விதத்தில் பதிலளிக்க வேண்டிய ரீதியிலேயே இக்கட்டுரையை எழுத விரும்புகின்றேன். இதனால் எவருக்கேனும் மனத்தாங்கல் ஏற்படுமாயின், அதற்காக ஐயனிடத்தில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற போது நானும் பம்பைக் கரையிலே மகர ஜோதியைப் பார்த்தவன். இன்று வரை சரியான செய்தி கிடைக்கவுமில்லை. எமக்கு அது பற்றி தெரிய வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை என்றே வெளிப்படையாக உண்மையைக் கூற வேண்டும். குறிப்பிட்ட பகுதியிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தெளிவாக மகர ஜோதியைப் பார்ப்பதற்கு இந்தப் பகுதியில் கூட்டம் கூடுவது சர்வசாதாரணமானதே. ஆனாலும் இம்முறை அளவுக்கதிகமான பக்தர்கள் கூடியிருந்தமையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களது சோதனை நடவடிக்கை. மற்றும் பல்வேறுபட்ட காரணங்களின் நிமித்தம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் ஒரு உண்மையை நான் கூறவேண்டும். நான் சபரிமலை யாத்திரை மேற்கொண்டாலும் சரி. கூட்டமாகக் குழுவாக மேற்கொண்டாலும் சரி. யாத்திரிரை மேற்கொள்ள மாலை அணியும் போது எமது மனங்களிலே ஏற்படும் திடமான ஒரு நம்பிக்கையும், லட்சியமும் - நாம் சபரிமலை சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் கலியுக வரதனுக்கு நெய் அபிஷேகம் செய்வித்து அவன் திவ்ய தரிசனக் காட்சியைக் காணவேண்டும் என்பதுடன் மகர சங்கிராந்தியில் அன்று தோன்றும் ஜோதியையும் விளக்கையும் தரிசிக்க வேண்டும் என்பதே. இக்காட்சியைக் கண்டபின்பே நாம் எமது ஏனைய குடும்ப அல்லது தனிப்பட்ட விடயங்களைச் செய்ய முற்படுவோம். மேலும் யாத்திரை புறப்படும் வேளையில் சுவாமியே சரணம் என்று சொல்லித்தான் புறப்படவேண்டுமே அன்றி போய்வருகின்றேன் என்று கூறல் ஆகாது. நாம் இந்து சமயத்தவர்கள். சனாதன தர்மத்தின்படி, எமது பிறவிக் கோட்பாடுகளின்படி, நாம் செய்த வினைகளுக்கேற்ற முறையில் எமக்குப் பிறவிகள் உண்டு என்பதும், மரணம் என்பது என்றோ ஒருநாள் நிச்சயம் உண்டு என்பதும், அது எப்போது என்பதை நிர்ணயம் செய்பவன் தர்மவான் என்று சொல்லப்படும் யமனுடைய கடமை என்பதும் அறிந்த விடயம்.


சபரிமலைப் புனித யாத்திரை செய்கின்ற ஓர் சுவாமி தேவவியோகம் அடைந்தால் அந்த ஆத்மா நிச்சயம் ஐயனுடைய பரிப+ரண அருளுக்குப் பாத்திரமாகி பேரின்பப் பெருவாழ்வு அடையும் என்பது முடிந்த முடிபு. கடந்த வருடம் (1997-1998இல்)எமது குழுவினருடன் யாத்திரை செய்த இலட்சுமணண் சுவாமி கரிமலையில் தேகவியோகம் ஆகியதை நாம் நினைவு கூர வேண்டும். அவருக்கு மயக்கம் ஏற்பட்ட போது எமது குழுவில் இருந்த ஓரிரு சுவாமிகளும் வெளிநாட்டு சுவாமி ஒருவருமே அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். எனினும் அவரது உயிர் பிரிந்த பின்பும் கூட அவரது உடலை எப்படியாகிலும் இலங்கைக்கு எடுத்துவர வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பெரும் பிரயத்தனம் செய்து அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டர்களின் உதவியுடன் அவரது உடலை பம்பையில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு வந்து பின்னர் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்தது. அவரது பூதவுடலைக் கொண்டு வர முடிந்தமைக்காக காரணம் அவருக்கு அருகில் அந்த நேரத்தில் எமது குழுவினர் இருந்தமையால்தான். இல்லாவிட்டால் அவரது உடலை அருகே பள்ளத்தில் தள்ளி விட்டிருப்பார்கள். இது ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் “எம்மவர்களில் பலர் மாலை அணிந்திருக்கும் போது சில விடயங்களைத் தவிர்ப்பதும் அவை தீட்டு ‘குற்றம்’ எனக் கருதுவதும் மனிதாபிமான அடிப்படையில் தவறாகும்” என்பது எனது கருத்து. இறைவன் கருணை வடிவானவன். சபரிமலை யாத்திரையின் போது ஏழை, பண்காரன், பெரியவன் சிறியவன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற எண்ணம் எல்லாம் மறையப் பெற்று நாம் அனைவரும் ஒரு குலம் என்ற ஒற்றுமை வலுப்பெறுகின்றது. மக்கள் அனைவரும் ஒரு குலம். இறைவன் அனைவருக்கும் பொதுவானவனே. அவனது சந்நிதியில் அனைவரும் சமமே. அதுவே உண்மையான ஜீவாத்மா, பரமாத்மா சங்கமம். அதுவே தத்வமஸி எனும் மகா வாக்கியத்தின் பொருளுமாகும்!


ரிஷி அவர்களின் கட்டுரையின் ஆரம்பத்திலேயே “பக்தர்களில் 52 பேர் தத்தமது வீடுகளுக்கு உயிருடன் திரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். வருடாவருடம் சபரிமலையில் பலர் மாரடைப்பினாலும் நெரிசலில் சிக்குண்டும் சரணமடைந்திருப்பினும் இம்முறை குறிப்பிட்ட அனர்த்தத்தால் பலர் சரணமடைந்துள்ளனர். இதற்கான காரணத்தை நாம் விரிவாக ஆராய வேண்டும்.

பிரார்த்தனை என்பது வீண்போவதில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு எமது பிரார்த்தனைகள் பக்தி ப+ர்வமாக அமைகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு பலன்களையும் நாம் எதிர்பார்க்க முடியும். உதாரணமாக எனது அனுபவத்தில் நான் கண்ட அனுபவங்களையும் பெற்ற பேறுகளையும் கண்டிப்பாக சொல்லியே தீர வேண்டும்.

முதலில் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டுமாயின் இலங்கை பக்தர்களுக்குக் கடவுச்சீட:டும், இந்தியா செல்வதற்கான அனுமதியும் “விசா”வும், குறிப்பிட்ட தினத்தில் யாத்திரை மேற்கொள்ள விமானப் பயணச் சீட்டும் அவசியம். இம்மூன்றையும் சரிவரப் பெற்றபின்னர் தான் இந்தியா சென்று எமது யாத்திரையைத் தொடர முடியும். கார்த்திகை முதலாம் நாள் மாலையணிந்த சபரிமலை யாத்திரையைத் தொடங்குவதே பண்டைய நெறிமுறை. அதற்கேற்ற வகையிலேயே ஸ்ரீஐயப்ப சன்னிதானமும் கார்த்திகை முதலாம் நாளில் இருந்து மண்டலப் பூர்த்தி வரை “41 நாட்கள்” ஆலயம் திறந்திருக்கும். அதன் பின் மகரஜோதி தரிசனத்திற்காக ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 20 நாட்களுக்கு 20ஆம் திகதிவரை திறந்திருக்கும்.

எனக்குக் கரிமலை இறக்கத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை நான் முக்கியமாக குறிப்பிட்டே ஆக வேண்டும். ஐயனின் திருவருளுக்கும் எனது பற்றற்ற வாழ்க்கைக்கும் இது உதாரணமாகும். ஸ்ரீபம்பா விக்னேஸ்வரா சத்தியாலாயா குழுவினரால் நடாத்தப்படுகின்ற அன்னதானத்தில் நானும் பங்குகொண்டு அடியார்களுக்கு உணவு பரிமாறுவதில் உதவ சீக்கிரமாக நடந்து சென்று உதவ வேண்டும் என்ற ஆதங்கப்பட்டு முன்பு இரு தடவைகள் பங்கேற்றது போலு இம்முறையும் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் எருமேலியில் இருந்து பம்பைக்குச் செல்ல முடிவு செய்து இன்னோர் பழமலை சுவாமியுடன் யாத்திரையைத் தொடர்ந்தேன். முதல் தடவை நாம் எருமேலியில் இருந்து ஆரம்பித்து அழுதையிலும் கரியிலம்pதோட்டிலும் தங்கியே பம்பையை அடைந்தோம். இரண்டாவது முறை அழுதையில் தங்கி கரியிலந்தோட்டில் தங்காது பெரியாணை வட்டத்தில் மழையில் நனைந்து பம்பையை அடைந்து அன்றிரவு முழுவதும் நல்ல காய்ச்சலினால் அவதிப்பட்டு அடுத்தநாள் ஊசி மருந்து எடுத்ததன் மூலம் சுகமாகி முதன் முதல் அன்னதானத்தில் பங்கு கொண்டு பணிசெய்தேன். கடந்த தடவை எவ்வித தடங்கலுமின்றி அழுதையில் தங்கி கரிவலந்தோட்டில் சக்தி ப+சைக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்துதவி செய்தபின் பம்பையை அடைந்து அன்னதானத்தில் பங்கு கொண்டேன். இம்முறை அழுதையிலும் தங்காது புறப்பட்டு முக்குளித் தாவளத்தில் அம்மன் கோவிலில் வைத்து என்னுடன் கூடவே வந்த பழமலை சுவாமியைவிட்டுப் பிரிந்து அவரைத் தேடிக் காணாமல் எனது யாத்திரையைத் தொடரவும் மழை ஆரம்பிக்கவும் ஒரு தாவளத்தில் தங்கினேன். மழையையும் பொருட்படுத்தாமல் பலர் தமது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். நானும் தொடர ஆயத்தமான வேளையில் இரண்டு ஐயப்ப சேவா தொண்டர்கள் பெரிய தடியொன்றில் வேட்டியை மடித்துக் கட்டி “ஏணை போல” ஒருவரைத் தூக்கிச் செல்ல ஒரு வயதுபோன அம்மா சுவாமி தொடர்ந்து கண்ணீர் வடித்துச் செல்வதைக் கண்டு அங்கேயே தங்கிச் செல்ல முடிவு செய்தேன். பதினைந்து ரூபா தங்குவதற்கு வாடகை கொடுத்து விரிப்பு எடுத்தேன். அதிகாலை நான்கு மணிகெல்லாம் சரியாக யாத்திரையைத் தொடர்ந்து கரிவலந்தோடு தாண்டி கரிமலை ஏற்றமும் ஏறி பின் இறக்கத்தை அடைந்தேன். மழை பெய்திருந்த காரணத்தாலும் அந்த இறக்கம் மிகவும் ஆபத்தானதாக இருந்தமையாலும் மிகவும் அவதானத்துடன் மிக மெதுவாக இறங்கிச் சென்ற வேளையில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாகி ஒவ்வொருவராக இறங்க கவனமாக நடந்து கொண்டிருந்த வேளையில் என்பின்னால் சரக் சரக் என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதும் பின்பு கவனமாக இறங்குவதிலும் அவதானமாயிருந்தேன். பலர் இடிபட்டுக் கொண்டிருந்தார்கள். எனது சோல்னாப் பையை சரிசெய்து கொண்டு இறக்கத்தில் இறங்கி “இந்த வேளையில் நாம் எமது இரு கைகளாலும் இருமுடி சரிந்து விழாவண்ணம் பிடித்துக் கொண்டு கண்களைப் பாதையில் நிலைப்படுத்தி சரணம் விழித்துக் கொண்டு சமனிலையைப் பேணிபடி நடந்து செல்வோம். பெரியாணை வட்டம் தாண்டியப pன் சிறியாணை வட்டத்தில் வத்தகைப் பழத்தின் நீர் குடிப்பதற்காக இருமுடியை இறக்கி வைக்க எனது சோல்நாப் பையைக் கழற்றிய போது தாவளத்தில் இருந்த ஒரு மணிகண்ட சுவாமி எனது சோல்னாப் பையை யாரோ வெட்டியிருக்கிறார்கள் என்று கூறவும் அப்போதுதான் என்னிடம் குருசுவாமி தந்த ரூபா 10,000 இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அவசரம் அவசரமாக இருமுடியை இறக்கி வைத்துவிட்டு சோல்னாப்பையைப் பார்த்தபோது பம்பா கணபதிக்கு அடிக்க வேண்டிய தேங்காயும் கற்ப+ரமும் முன்பாகத் தெரிந்தது. கைப்பையின் உள்ளே பத்திரமாக நூறு ரூபாத் தாள்கள் கட்டாக குருசுவாமி தந்த பணம் அப்படியே இருந்தது. பின்னர் அந்த சுவாமியின் கூற்றுப்படி தலையிலேயே வேட்டி ஒன்றினுள் சோல்னாப் பையை வைத்து அதன்மீது இருமுடியை வைத்து பம்பை நதிக்கரையை அடைந்த போது ஒருநாளும் இல்லாதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. கன்னிமூலகணபதிக்கு முன்பாக இருந்த படிக்கட்டினால் மாத்திரமே பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அதிலும் சந்தேகத்திற்கு இடமான பக்தர்களின் சோல்னாப் பைகள் சோதனையிடப்பட்டன. விமான நிலையத்தில் இருப்பது போல பம்பா கணபதி ஆலய சுற்றுவட்டத்தில் சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதனூடாகவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது நடந்தது 13.01.1999 புதன்கிழமை. ஒருசில முக்கிய பிரமுகர்களுக்காக (“V.I.P”) வருகின்ற அத்தனை அடியார்களையும் சோதனையிடுவது ஒரு முறையான செயல் அல்ல. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்கள் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்திப் பார்க்கும்போது அனர்த்தத்துக்கு போதுமான காரணங்கள் பல கிடைக்கும்.

எமது யாத்திரைக் குழு மகர சங்கிராந்தி தினத்தன்று பம்பையில் தங்கி - ஜோதி பார்த்த மறுதினம் அன்னதானம் - பம்பா சக்தி மற்றும் பம்பா விளக்கு நிறைவு செய்து அடுத்த நாள் அதிகாலையிலேயே சுவாமி தரிசனத்திற்காக சபரிமலை சென்று நெய்யபிஷேகம் செய்வித்து அதன்பின் அலங்கார ரூபத்திலிருக்கும் ஐயனைத் தரிசித்து இரவு பம்பைக்கு வந்து புறப்படுவது வழக்கம்.


ஜோதி பார்த்தவுடனேயே பலர் மலைக்குச் செல்வதற்கும், பலர் வீடு திரும்புவதற்கும் ஆயத்தமாகி நெருக்கியடித்துக் கொள்ளுவது வழமை. மழைபெய்திருந்த காரணத்தாலும், தற்காலிகமாக வெட்டிச் சமப்படுத்திய மணற்திட்டிகள் கூட்டத்தின் பாரத்தால் சரிந்து கீழே இருந்தவர்கள் மீது விழுந்தமையாலேயே மூச்சுத் திணறி இப்பரிதாபகரமான நிகழ்வு நிகழ்ந்தது. மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என்ற செய்தியுடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பினும் இன்றுவரை சரியான காரணத்தை எவரும் அறிவிக்க வில்லை. இந்தச் சம்பவத்திற்கும் இங்கு நம்நாட்டில் உள்ள இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும் முடிச்சுப் போடுவதுதான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆலயம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகப் பூசைகள் இன்றிப் பூட்டப்பட்டு இருக்கின்றது. இங்கு நடைபெறும் மார்கழிமாத இராமர் பஜனைப் பிரச்சினையால் இந்த ஆலயம் இந்நிலைக்க ஆளாகியது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் தான் நான் சபரிமலைக்குக் கொண்டுபோகும் தேங்காயை பூசையில் வைத்து எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த வருடத்திற்கு முன்னரே 1997 இல் சபரிமலை யாத்திரையை நிறைவு செய்து கொண்டு திரும்பிய பின் இந்த ஆலயத்தில் வைத்தே எனது பிரசாதத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஓடோடிச் சென்ற போது ஆலயம் பூட்டப்பட்டு இருந்தது. அதன்பின் கடந்த வருடமும் நான் உள்ளுராட்சித் தேர்தல் முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்தபின் சென்றேன். அப்போதும் ஆலயம் பூட்டப்பட்டிருந்தது. கடந்த 16.04.1998 அன்று இவ்வலயத்தில் தீவிபத்து ஒன்று நடந்ததைச் சுட்டிக்காட்டி செயலாளருக்கு அவ்வாலயத்தின் அறங்காவலர் “தலைவர்” எழுதிய பிரதி இந்தத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தும் இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுத்தாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட ஆலயத்தின் அனுசரணையோடு நடைபெறும் அறநெறிப் பாடசாலையின் போசகராக நான் முன்னர் இருந்தேன். 23.10.1994 இல் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்டத்தில் இந்து சமயப் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த 7 அறநெறிப் பாடசாலைகள் பங்குபற்றாமல் பகிஸ்கரித்த காரணத்தால் அப்போட்டிகள் விசாரணையின் பின்னர் 5.03.1993 இல் மீண்டும் நடாத்தப்பட்டது. அதற்கான பரிசில்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை. இந்த வரைவிலக்கணத்தில் ஒழுங்காக இங்குள்ள கடமைகளைச் செய்ய முடியாத திணைக்களம் எவ்வாறு சபரிமலை யாத்திரையில் சம்பந்தப்பட்டு தீர்வுகாணப் போகின்றது. எனது மனக் கவலை யாதெனில் கடந்த 3 வருடங்களாக இந்த ஆலயத்தின் சுற்றுவீதியில் உள்ள மரங்களில் இருந்து பெற்ற தேங்காய்களையே ஒவ்வொரு தடவையும் நான் யாத்திரையின் போது நெய் நிரப்பி இருமுடியில் சுமந்து செல்வேன். இம்முறை மாலையிட்ட பின் இந்த ஆலயத்தை வந்து திறந்து பார்க்கவுமில்லை. இங்கு தேங்காய் பூசையில் வைக்கவுமில்லை. இந்தக் குறையும் இப்படிப்பட்ட அனர்த்தத்திற்குக் காரணம் ஆகுமா என்ற வினா என் மனதில் எழுகின்றது. கந்த 14.09.1992 சிவராத்திரி தினத்தன்று குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்ற என்னை ஒரு ஆசிரியர் (எனது நெருங்கிய நண்பரும் கூட) சபரிமலை குறித்தும் இவ்வாலயம் குறித்தும் என்னைக் கேட்ட சில கேள்விகள் குற்றம் சுமத்துவது போல உள்ளுர என்னை உறுத்துகின்றது. குறிப்பிட்ட இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாகப் பல தடவைகள் நவராத்திரி விழாவைச் சிறப்பாக நடாத்தி வந்தோம். கடந்த வருடம் நவராத்திரி நடக்கவுமில்லை. என்னை அழைக்கவுமில்லை. நானும் போகவுமில்லை. இங்குள்ள மக்கள் செய்கின்ற குறைகளால் அங்கு அனர்த்தம் ஏற்பட்டிருக்குமா என்றும் ஒரு வினா எழும்புகின்றது. காரணம் இங்கு மலையகத்தில் வாழுபவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது.

குறிப்பிட்ட கட்டுரையில் பிஸ்னஸ் ஆகக் கருதுவோர் என்ற ஒரு சொல் இருக்கின்றது. உண்மைதான். சில பக்தர்கள் விமான நிலையத்தில் தீர்வையற்ற வியாபார நிலையங்களில் மதுபானப் போத்தல்களை எடுத்துச் செல்வதும் இங்கிருந்து போவோர் பலர் தமது பயணப் பொதிகளில் கராம்பு, ஏலம் போன்றவற்றை எடுத்துச் செல்வதும் சர்வசாதாரணமே. ஆனால் எமது யாத்திரைக் குழுவில் இப்படியான தேவையற்ற செயல்களை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால் பல குழுவினர் சுங்கப்பகுதியில் இதனால் பலமணிநேரம் தாமதப்படுவதை என் கண்களால் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன்.

Wednesday, June 5, 2013

ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற கோரவிபத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன்!

சுவிற்சர்லாந்தில் நான் தங்கியிருந்த காலத்தில் அடிக்கடி சூரிச் முருகன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். ஏனெனில் அங்கு சென்று தமிழ்க் கடவுளான செந்தமிழ்க் குமரனை வழிபட நிறையவும் ஆசை! ஆலயத்திலும் எனக்கு எமது ஊரைப் போல மனம்விட்டுப் பாடவும் பேசவும் தாராளமாக சுதந்திரம் தந்திருந்தனர். அப்போது பழகியவர்கள் எல்லோரும் ஒரு குடும்பத்தைப் போல அன்பைப் பரிமாறிக் கொண்டோம். அப்படிப்பட்டவர்களில் ஒரு குடும்பமே - எமது அன்புக்குரிய திரு. ஜவீன் குடும்பம்.

சனிஞாயிறு விடுமுறை தினங்கள் விசேட நாட்களில் அவர்கள் அனைவருமே கோவிலுக்கு ஆஜராவார்கள்!எல்லாருடனும் அன்பாகப் பேசுவார்கள். பழகுவார்கள். ஆலயத் திருவிழா என்றால் கோவில் முன்பாக ஒரு கடையில் நின்று தம்மையே அர்ப்பணித்து ஆலயத்தை முன்னேற்றுவதில் அக்கறை காட்டிய பெருந்தகைகள். அவர்கள் மாத்திரமல்ல. அங்கு தம்மை அர்ப்பணித்தே அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் சேவை செய்தனர். அதனால்த்தான் சுவிஸ் முருகன் என்றால் சூரிச் அட்லிஸ்வில் முருகன்தான் முன் தோன்றுவார்!

ஆவணப்படுத்துவது எனக்கு ஒரு பைத்தியமாக இருப்பதால் சுவிசில் இருக்கும்போது ஒரு புகைப்படக் கருவியை வாங்கி - போகும் வழிகளிலும், வரும்வழிகளிலும் கண்ணில் படும் அபூர்வமான காட்சிகளை பதிவிடுவது வழக்கம். "கண்ணில் தெரியும் காட்சியெல்லாம் கமலக்கண்ணா உன்தோற்றம்"

ஒரு தடவை ஒரு பட்டிமன்ற நடுவராக மேடையேறிய பொழுது கூறியது இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது. நாம் சொர்க்கலோகம் என்பதைப் பற்றி கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால் இது உண்மையான சொர்க்கபுரி! கைலைக் காட்சி போல வெண்பனிமூட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த நாடு இதுவென அன்று விளித்துக் கூறினேன்.

அங்கிருந்த ஜவீன் ஜெயந்தி தம்பதியினரின் பிள்ளைகள் ஜனன், ஜனனி இருவருடனும் நான் கோவிலில் மிக அன்பாகப் பழகினேன். அவர்கள் மட்டுமல்ல கோவிலுக்கு வரும் அத்தனை சிறுவர் சிறுமியருடனும் நன்றாகவே பழகினேன். அவர்களைப் பாடும்படி - பேசும்படி ஊக்கமளிப்பேன்.இப்போது நான் பதிவிடுவதன் காரணம் சுவிற்சர்லாந்தில் எடுத்த புகைப்படங்கள் பலவற்றில் இந்தப் பிள்ளைகளின் படங்கள் அடிக்கடி முன்னே வந்துகொண்டிருப்பதாலேயே!

ஒரு கனவுபோல ஒரு மாதம் அவர்கள் இல்லாததை இந்தப் படங்கள் மறுத்துச் சொல்கிறது!உண்மையாகவே அவர்கள் எம் மனங்களில் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்!!!

Thursday, May 9, 2013

படுகாயமடைந்த சுவிஸ் சிறுவன் ஜனன் ஜவீன் அவர்களும் மரணம்!


செல்வன் ஜவீன் ஜனன்

அன்னை மடியில் 3 பெப்ரவரி 2001 இறைவன் அடியில் 8 மே 2013

கார் விபத்துக்குள்ளாகி அவசரசிகிச்சைப்பிரிவல் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஜனன்{11) அவர்களும் நேற்று மதியம் காலமானார். சுவிற்சர்லாந் - சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர். இவர்களுடன் ஜவீனின் சகோதரியின் மகள் பாலசூரியன் வாரணியும் (29) இணைந்து பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா சென்ற பின்னர் கடந்த 5.5.2013 ஞாயிறு இரவு 10.00 மணியளவில் வெள்ளவத்தை விகாரை லேன் முன்பாக மஞ்சள் கடவையில் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் கார் ஒன்று மோதியதில் கோர விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தனர். இவ் விபத்தில் ஜவீனின் சகோதரியின் மகள் பாலசூரியன் வாரணி (29) உயிரிழந்ததுடன், ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் காலமானார்.

செல்வி ஜவீன் ஜனனி

அன்னை மடியில் 20 டிசெம்பர் 1996 ஆண்டவன் அடியில் 6 மே 2013


செல்வி வாரணி பாலசூரியன்

மண்ணில் : 22 நவம்பர் 1983 — விண்ணில் : 5 மே 2013

படங்களுக்காக நன்றி லங்காசிறீ

Monday, May 6, 2013

வெள்ளவத்தை வாகனவிபத்தில் இரு பெண்பிள்ளைகள் உயிரிழப்பு - 5.5.2013


சுவிசிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த திரு. திருமதி ஜவீன் ஜெயந்தி தம்பதியினரின் பிள்ளைகள் ஜனன், ஜனனி இருவருடன் எமது இலங்கைப் பதிவரும் வைத்தியருமான பாலவாசகனின் சகோதரியும் வாகனவிபத்தில் சிக்கி பாலவாசகனின் சகோதரியும் ஜனனியும் அகாலமரணமடைந்து விட்டதாகவும் ஜனன் கொழும்பு ஆதார வைத்தியசாலையில்­­ அவசர சிகிச்சைப்பிரிவ­­ில் அனுமதிக்கப்ட்டு­­ள்ளதாகவும் அறிந்துள்ளேன். நேற்றிரவு (05.05.2013) வெள்ளவத்தையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

Friday, July 1, 2011

சுவிற்சர்லாந்தில் கடும் மழை - வெள்ளம், மண்சரிவு! !

நேற்று முன்தினம் புதன்கிழமை(29.06.2011) பெய்த கடும் மழைகாரணமாக சுவிற்சர்லாந்தின் மத்திய பிரதேசங்களான சுக்(Zug), ஒப்வால்டன்(Obwalden), நிற்வால்டன்(Nidwalden), சுவிற்ஸ்(Schwyz) மாநிலங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டதுடன் . ஒப்வால்டன், நிற்வால்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பல மணிநேரம் போக்குவரத்தும் தடைப்பட்டது.



















படங்கள் - 20 நிமிடங்கள், மற்றும் பேர்னர் பத்திரிகை(http://www.20min.ch/news/zentralschweiz/story/17204997)
(http://www.bernerzeitung.ch/panorama/vermischtes/Engelberg-ist-nach-Unwetter-von-der-Umwelt-abgeschnitten/story/22187436)

Sunday, March 7, 2010

இரு வாரங்களின் பின் திடீரெனப் பெய்த பனிக் காட்சிகள் சில!

சுவிற்சர்லாந்தின் பருவ காலம் 4. இலைதுளிர்காலம் பங்குனி - வைகாசி. கோடை ஆனி - ஆவணி. இலையுதிர்காலம் புரட்டாதி - கார்த்திகை. பனிகாலம் மார்கழி - மாசி. காலமும் சிலவேளை முந்திப்பிந்திவரும். இம்முறை எதிர்பார்த்ததைவிட பனி அள்ளிக் கொட்டியதால் இருப்பில் வைத்திருந்த உப்பு நிறைவடைந்து பக்கத்தில் இத்தாலியில் வாங்கியிருக்கிறது சுவிஸ அரசு. இங்கு கடல் இல்லாதபடியால் உப்பின் விலை சற்று அதிகம். என்ன 95றாப்பன். எமது நாட்டுப் பணத்தில் அண்ணளவாக 100ரூபா. இங்கு பனிக்காக வீசும் உப்பு செயற்கையாகச் செய்யப்படுவது. பனி கொட்ட ஆரம்பித்ததும் கரைப்பதற்கு அதை வீசுவதும் - பனியை அள்ளுவதும் கடினமான வேலை - இங்கு இவர்களுக்கு இது பழகிவிட்டது.

எப்போது இனிப் பனி வரும் என அங்கலாய்த்தபடி இருந்தேன். இன்று காலையில் எழுந்து வெளியே பார்த்தால் ஒரே வெள்ளைமயமாக இருந்தது. குதூகலித்துக்கொண்டு சில காட்சிகளை நண்பனொருவனிடமிருந்து பறித்துக்கொண்டுவந்த ஒரு புகைப்படக்கருவியால் பதிவுசெய்தால் என்னுடைய கெட்டகாலம் படங்கள் கணனியில் ஏற்றும்போது நடந்த சிறுதவறால் முழுப்படங்களும் அழிந்துவிட்டன. பிறகும் மனம் தளராமல் சென்று பிடித்தவற்றை பதிவிட்டுள்ளேன். நாளைக்கும் பனி பெய்யுமாம். இன்னும் எனக்குப் பிடித்த சிலவற்றை தரலாம் என்று இருக்கிறேன். நாளைய கால நிலையைப் பொறுத்து என் எண்ணம்.....







Sunday, September 13, 2009

சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 5

எனக்கு சுவிற்சர்லாந்தின் மத்திய பகுதியான Schwyz (சுவிற்ஸ்) என்ற இடத்தில் வாழுவதற்கு அனுமதி கிடைத்தது. நாட்டின் பொதுப் பெயர் Schweiz -சுவைற்ஸ் என்று உச்சரிப்பார்கள். எனது பொருட்களை சரிபார்த்துப் பெற்றுக் கொண்டு (கைத் தொலைபேசியின் சிம் மாத்திரம் தரவில்லை)முகாமைவிட்டு வெளியேறினேன். புறப்படும்போதே போகுமிடத்திற்கு வரைபடமும் ஒரு நாள் முழுவதும் சுவிசுக்குள் பாவிக்கத்தக்க ரயில் ரிக்கற்றும் தருவார்கள். இந்த ரிக்கற்றில் ரயில் பஸ் மற்றும் கப்பல்களில் பயணம் செய்ய அனுமதி உண்டு. புகையிரத மூலம் சூரிச் சென்று அதன்பின் வேறு ரயில் மாறி எனது பயணத்தை ஆரம்பித்தேன். மாற்றலாகி செல்லும் விபரம் முதல்நாளிரவு விளம்பரப் பலகையில் போடப்படும். அதிகாலை 6.00 மணிக்கு காவலர்கள் வந்து எனது பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதாவது நான் உபயோகித்த பெற்சீற், தலையணை, அதன் உறை, போர்வை மற்றும் எனது அலுமாரித் திறப்பு இவற்றை சரிபார்த்துப் பெற்றுக் கொள்வார்கள். இத்தாலி நோக்கிச் செல்லும் ரயிலில் சுமார் 50 நிமிடப் பயணத்தின் பின்னர் Schwyz என்ற புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். மாறிவரும் மாநிலத்தின் தலைநகரம் இது. மாநிலத்தின் பெயரும் இதுதான். அங்கிருந்து 1ம் இலக்க பஸ்ஸில் ஏறி Schwyz Post என்ற இடத்தைச் சென்றடைந்தேன்.இதுதான் மத்திய பேரூந்து நிலையம் - தபாற் கந்தோர் - பொலிஸ் மற்றும் தேவாலயம் - கல்லூரி - நூல்நிலையம் - வங்கிகள் என்று அனைத்துமே இருக்குமிடம். அங்கிருந்து குறிப்பிட்ட பதியுமிடத்திற்கு வந்து - தந்த கடிதத்தைக் கொடுக்கவும், எனக்கு அடையாள அட்டையுடன் இன்னுமொரு முகாமிற்கான கடிதத்தைத் தந்து அதற்குப் போகும் வழியையும் சொல்லிவிட்டார்கள். நான் பின்னர் அதே இடத்தில் வந்து Brunnen என்ற இடத்திற்கு 2ஆம் இலக்க பஸ்ஸில் சென்று பின் 4ஆம் இலக்க பஸ்ஸில் Morschach என்ற இடத்தை அடைந்தேன். பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் என்னுடன் பிரயாணம் செய்த 2 ஈராக் நாட்டினர் என்ன புதிதாக வருகிறீரா என்று கேட்கவும் நானும் ஓமென ஆங்கிலத்தில் மறுமொழி சொல்ல அங்குதான் போக வேண்டும் என்று எதிர்ப்புறத்திலிருந்த மலையைக் காட்டினார்கள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன ஆனந்தம்! மகிழ்ச்சி! கொழும்பிலிருந்த சமயத்தில் சனி ஞாயிறு என்றால் இரத்தினபுரி - கண்டி - நுவரெலியா என ஓடும் எனக்கு கடவுளாகப் பார்த்து மலையில் வாழ வழியமைத்துத் தந்திருக்கிறானே என்று மனதார நன்றி சொல்லியபடி இயற்கையை ரசித்துக்கொண்டு மலையேறினேன். நான் அங்கு சென்றபோது மதியம் 2 மணியாகிவிட்டது. வரவேற்புப் பகுதியில் நின்றிருந்த அலுவலரிடம் கொண்டுவந்த கடிதத்தைக் கொடுக்கவும் என்னை அழைத்துச் சென்று எனது தங்கும் அறையைக் காட்டி இலக்கம் 13- உரிய பொருட்களை என்னிடம் ஒப்படைத்தார். தனியாகச் சமைத்துச் சாப்பிடத் தேவையான சகல பாத்திரங்களும் - அன்றாடத் தேவைக்கான (பழைய முகாமில் தந்ததுபோல) துவாய், பெற்சீற், தலையணை, போர்வை மற்றும் அலுமாரித் திறப்பு போன்ற அனைத்தையும் தந்துவிட்டு கீழே அழைத்தச் சென்று சமையலறையையும் அங்குள்ள அலுமாரி - குளிர்சாதனப் பெட்டி அவற்றிற்கான திறப்புக்களையும் தந்தார். அதன்பின் சற்றுநேரம் பொறுக்கும்படி சொல்லி என்னை வரவேற்புப் பகுதியின் இருக்கையில் அமருமாறு சொன்னார். நானும் காத்திருந்தேன். அந்த முகாம் கரிதாஸ் Caritas நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கிறது. இதன் பொறுப்பாளர் அன்று இல்லாதபடியால் அவருக்கு அடுத்த நிலையிலிருந்கும் டொச் படிப்பிக்கும் ஆசிரியர் வந்து எனக்கு குறிப்பிட்ட ஒரு வாரத்திற்க்குத் தேவையான உணவுப் பணத்தை தந்துவிட்டுச் சென்றார். அன்று வெள்ளிக்கிழமையாதலால் நான் வழமைபோல எனது பேர்னிலுள்ள நண்பரின் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டேன். அதற்கான படிவமொன்றைப் பூர்த்தி செய்தபின் அவர்களின் அனுமதியோடு நான் பேர்னுக்குப் புறப்பட்டேன்.