அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, April 17, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 12)

தவறான வரலாறு

நூல் நிலையம் 14.02.2003ஆம் திகதி திறக்கப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்ட நிலையில் 12ஆந்திகதி நூல் நிலையத்தை திறக்கக்கூடாது என கோரிக்கைகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து 13ஆந்திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் உறுப்பினர்கள் பதவிவிலகியதுடன் நூல்நிலையத் திறப்பு விழாவும் இரத்துச் செய்யப்பட்டது! 13ஆந்திகதி நள்ளிரவு நூலகத் திறப்புகளும் காவலாளிகளிடமிருந்து அபகரிக்கப்ட்டன.ஆனால் அதே திகதியில் நூலகம் திறக்கப்பட்டது என்ற நினைவுக் கல் 7 வருடங்களின் பின் பொருத்தப்பட்டது உண்மைக்குப் புறம்பான செயலாகும். இவ்வரலாறு தவறானது!

நூலகம் திட்டமிட்டபடி திறக்கப்படாததைத் தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் நூல் நிலையத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி கௌரவிக்க ஒரு நிகழ்வை 24.03.2003இல் ஏற்பாடு செய்தது. இராஜினாமாச் செய்த அத்தனை உறுப்பினர்களையும் இந்நிகழ்வில் பங்குபற்றவும் ஏற்பாடுகள் செய்தது.இந்நிகழ்வுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்தது.

Wednesday, April 16, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 11)

நீண்ட இடைவெளிக்குப் பின் இத்தொடரை எதிர்வரும் 01.06.2014ஆந் திகதி 33வருடங்கள் நிறைவடைய முன் எழுதவேண்டியிருப்பதால் கிடைத்த தகவல்களைப் பதிவிட விரும்புகிறேன்.

1959.10.11இல் அன்றைய மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டபொழுது நூல்நிலைய வாசலில் இருந்த யாழ் நங்கையின் சிலை - எதற்காக, யாரால், எப்போது சரஸ்வதி சிலையாக மாற்றம் பெற்றது என்பது எனது தற்போதைய புதிய கேள்வி! ஏனெனில் யாழ் நங்கையின் சிலையை ஏன் அமரர் துரையப்பாவின் குடும்பத்தினர் நினைவு படுத்தி வருகின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.
பண்ணைச் சந்தியில் அதை சிறிது காலத்தின் முன்
நிறுவியுமுள்ளனர்! அத்துடன் சுப்பிரமணியம் பூங்காவில் இந்தச் சிலை தண்ணீர்த் தொட்டிக்குள் இருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்! மாநகர சபைக் கட்டிடம் இருந்த இடத்தைப் பார்க்கத்தக்கதாக இந்தச் சிலை கண்டி வீதியை நோக்கி இருக்கிறது.

நூல் நிலையம் தற்போது நான் சேகரித்த தகவல்களின்படி 4 தடவைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

1. 1981 ஜுன் 1ஆந்திகதி - இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்!

2. 1985.05.10 அரச படையினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது என 2010.ஜுலையில் திரு. சி.வீ.கே. சிவஞானத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இச்செய்தி எனது கிருத்தியத்தில் 6.7.2010 திகதியில் "நினைவுக்கல்லில் குறிப்பிடப்பட்ட திகதியில் யாழ்.பொது நூலகம் திறக்கப்படவில்லை முன்னாள் ஆணையாளர் தெரிவிக்கிறார் - உதயன் செய்தி" என்று பதியப்பட்டுள்ளது.

3.24.08.1986இல் கோட்டையிலிருந்து ஏவப்பட்ட ஷெல் தாக்குதல்களினால் நூலகக்கட்டிடத்தில் பாரிய சேதம் ஏற்பட்டதை அடுத்த நாள் (25.08.1986) ஈழமுரசு "யாழ் நூலகமும் சேதம் -நகரம் நேற்றிரவு முழுவதும் இருளில்" என்று செய்தி வெளியிட்டது.


4. 15.05.1987இல் எரிக்கப்பட்டது இதனை - யாழ் பொது நூலகம் எரிந்தது - என்று 17.05.1987 வார முரசொலி பத்திரிகை செய்தி வெளியிட்டது.


Thursday, April 10, 2014

இன்று சிவயோக சுவாமிகளின் 50ஆவது குருபூசை!


ஈழத்துச் சித்தர் பரம்பரையில் யாழ்ப்பாணத்து விசர்ச் செல்லப்பா சுவாமிகளைப் பற்றி பலரும் தெரிந்திருப்பார்கள்! அவரது சீடரான சிவயோகசுவாமிகளின் 50ஆவது குருபூசைத் தினம் இன்றாகும் - பங்குனி ஆயிலியம்! யாழ்ப்பாணத்துக் கடைவீதிகளிலும் - நல்லூர்த்தேரடியிலும் இன்னும் பல வேறு இடங்களிலும் சுற்றித் திரியும் சுவாமிகளுக்கு பல அடியார்கள் பக்தர்களாக இருக்கிறார்கள். அவரை நேரடியாக காணாதபோதிலும்- அவரது சரிதத்தை அறிந்து வைத்திருக்கும் நான் அவரது சீடரான அமெரிக்க சைவசித்தாந்த திருச்சபையின் ஸ்தாபகர் ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் அளவெட்டி ஆச்சிரமத்தில் 1985ஆம் ஆண்டுகளில் பணியாற்றினேன். திருச்சபையின் அமைச்சராக இலங்கையில் பணிபுரிந்த கலாநிதி சோ.சண்முகசுந்தரம் ஐயா யோக சுவாமிகளின் வாழ்வு அனுபவத்தை மிக அருமையாகச் சொல்லக் கேட்பேன்!
ஏறக்குறைய 28 வருடங்கள் மானசீகமாக சுவாமிகளை வழுத்திவருகிறேன். நற்சிந்தனையின் எழுக புலருமுன் ஏத்துக பொன்னடி என்ற பாடலில் தன்னைப் போலச் சகலமும் ஓம்புக விண்ணைப் போல வியாபகமாகுக கண்ணைப் போலக் காக்க அறத்தை ... என்ற இந்த 3 வரிகளை ஏனோ என்மனம் இறுகப்பற்றியது! இன்றும் உயிருடன் - வாழ்வதற்கும் இதுவே உற்ற துணையென நான் உணர்கிறேன். இன்றைய நாட்டு நிலையை கருத்தில்வைத்து சுவாமிகள் சொன்னதாக நான் கேட்ட அடிவாங்கிச் சாகப்போறாங்கள்! அடிபட்டுச் சாகப்போறாங்கள்! எப்பவோ முடிந்த காரியம் - ஒரு பொல்லாப்புமில்லை - யாமறியோம் - முழுதும் உண்மை. இந்த வார்த்தைகள் இன்றைய நிலைக்குப் பொருத்தமாகவே அமைகிறது. எமக்குள் அடிபட்டுச் செத்ததையும் - மற்றவர்களிடம் அடிவாங்கியதையும் சொல்லலாம். இன்றைய குருபூசை நன்னாளில் - எம்மை நல்வழிகாட்ட - அவரது பாடல்களான நற்சிந்தனையை நாம் படித்து முன்னேறுவோமாக!

என்னால் மறக்க முடியாத எங்கள் பெரியமாமா!

அமரர் வல்லிபுரம் கணேசானந்தன் (முன்னாள் பண்டாரவளை வல்லிபுரம் அன் சன்ஸ் உரிமையாளர்)

பிறப்பு : 12 ஒக்ரோபர் 1941 -- இறப்பு : 7 மார்ச் 2014

(இக்கட்டுரையில் குறிப்பிடும் அப்பு எனது தாயாரின் தந்தை - அமரர் முத்துக்குட்டி வல்லிபுரம் - முன்னாள் பண்டாரவளை வல்லிபுரம் அன் சன்ஸ் உரிமையாளர்) குரும்பசிட்டி அப்பு - அமரர் மூளாய் நாகலிங்கம் அவர்கள் (வெலிமடை - நாதன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர்), சித்தங்கேணி அப்பு - அமரர் சின்னத்தம்பி அவர்கள் (வெலிமடை - இந்திரா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்)


இன்றும் சோலையாகத் திகழும் எங்கள் அப்பு வீட்டில்தான் நான் பிறந்தேன்! அப்போது எங்கள் வீட்டில் எந்த நிகழ்வானாலும் சித்தங்கேணி அப்பு வீட்டுக்காரரும், குரும்பசிட்டி அப்பு வீட்டுக்காரரும் ஒன்றுகூடுவது வழமை. ஏன் அம்மம்மாவின் வளர்ப்பில் ஏறக்குறைய ஒரு வருடம் நான் வளர்ந்திருக்கிறேன். என்னுடைய முதலாவது பிறந்தநாளில் அம்மம்மாவின் 31. அந்தியேட்டிக்கு வந்தவர்கள் தொட்டிலில் இருந்த என்னை வாழ்த்திப் போனதாக அம்மா சொல்லுவா! நானறிந்தவரை அந்த வீட்டில் அப்பு இருக்கும்வரை நடந்த இரண்டு நிகழ்வுகளை மறக்கமுடியாது. ஒன்று எனது தம்பி துளசியின் மரணச் சடங்கு - மற்றையது பெரிய மாமாவின் திருமணம். 1974 ஒக்ரோபரில் குரும்பசிட்டி அம்மன்கோவிலில் நடந்த பெரிய மாமாவின் திருமணத்தினை மறக்க முடியாது. கார்களில் மூளாயிலிருந்து குரும்பசிட்டி அப்பு வீடு போனதும், பின் அங்கிருந்து அம்மன் கோயில் போனதும், அங்கு திருமணம் முடிந்தபிறகு திரும்ப குரும்பசிட்டி அப்புவீடுபோய் மூளாய் திரும்பியதும், இன்னும் நினைவாயிருக்கிறது. அப்பு 1974 நவம்பரில் காலமானார். அன்று எனக்கு 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை. சின்னமாமா மோட்டார் சைக்கிளில் வந்து என்னை விக்ரோறியாக் கல்லூரியிலிருந்து வீட்டுக்குக் கூட்டிப்போனார். அப்புவின் மரணச்சடங்கில் கோப்பாய் காந்தி அப்பு தேவாரம் பாடியதும், பொற்சுண்ணமிடிக்கும்போது பெரியமாமாவும் சின்னமாமாவும் அழுததும் கணமுன்னே இப்பவும் தெரிகிறது. இங்கே நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். நாம் குழப்படி செய்தால் எல்லாரிடமும் அடிவாங்குவது வழமை. அப்பாவிடம் மிகமோசமாகவும், அம்மாவிடமும், மாமாமாரிடமும் ஓரளவும் நான் வாங்கிக் கட்டியிருக்கிறேன். இங்கு நான் குறிப்பிட வந்ததென்னவென்றால் எனக்கு அப்போது 9 வயது – மாமாமார் இருவரையும் காந்தியப்பு பொற்சுண்ணம்பாடி தோளில் தட்டியபோது குலுங்கிக் குலுங்கி அழுதது. நான் குழப்படி செய்து அவர்களிடம் அடிவாங்கும்போது அழுதது போல. அவர்களும் அழுகிறார்களே! என அப்போது மனதுள் எண்ணிச் சிரித்தேன். பின்னர்தான் அதன் ஆழமான அர்த்தம் எனக்குத் தெரிந்தது.

பண்டாரவளையில் எங்கள் அப்புவின் வல்லிபுரம் அன் சன்ஸ் கடை காந்திமதி ஸ்ரோர்ஸ_க்கும், ஹிதாயா ஹோட்டலுக்கும் நடுவில் இருந்தது. வெளிமடையில் இந்திரா ஸ்ரோர்ஸ_ம், நாதன் ஸ்ரோர்ஸ_ம் அருகருகே இருந்தன. அரசாங்க இலிகிதரான எனது அப்பாவின் புகையிரதச்சீட்டின் மூலம் நாம ஒவ்வொருவருடமும் பண்டாரவளை வெளிமடை என புதுவருடத்திற்கு குடும்பமாக நானும் தம்பிகள் சுகந்தன் அகிலனோடு சென்று, அங்கு ஓரிரு நாட்கள் தங்கி வருவது வழமை. இதிலும் பெரியமாமா தந்கியிருந்த பண்டாரவளைவீடு – சுவாமியார் வீடு என அழைக்கப்படுவதும் அங்கு பாவிக்காமலிருக்கும் ஒரு ஹோலில் திருவாசியுடன் கூடிய ஒரு மேடையும், அதன்கீழ் ஒரு நில அறையும் இருப்பதை நாம் ஒவ்வொரு தடவையும் மறவாது பார்த்து வருவது வழமை. சிறுவர்களான எங்களுக்கு புதிய பணத்தாள்கள் கைவிசேடமாகக் கிடைப்பதும் நாம் அதனை அம்மா அப்பாவிடம் கொடுப்பதும் மறக்க முடியாது. 1977 கலவரங்களின் பின் அனுராதபுரத்திலிருந்து அகதிகளாக வந்த எமக்கு உதவியவர்களில் பெரியமாமாவும் குறிப்பிடத்தக்கவர். நான் க. பொ.த உயர்தரம் கற்கும்வரை எனது பிரத்தியேக வகுப்புக்களுக்காக பண உதவி செய்ததை நான் இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும். 1983 கலவரங்களினால் எமது கடைகள் அனைத்தும் எரியூட்டப்பட்டன. மாமாவும், குணம்மாமாவும், எங்கள் அப்பாவும் கொழும்பில் சிராவஸ்தியில் 2 நாட்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஏயப்பாவின் உத்தியோகபூர்வ வீட்டுக் கூரையினுள் ஒளித்திருந்த பின் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வந்ததையும் எனது அம்மா நினைவுபடுத்தினா! எங்கள் வல்லிபுரம் அன் சன்ஸ் கடையிலிருந்து லொறியில் வந்த எரிந்த பெரிய மூட்டை நிறுக்கும் தராசும், காசு வைக்கும் உடைந்த அயன் சேர்வும் மறக்க முடியாதன.

குரும்பசிட்டியைப் பற்றியும் நான் வரலாறு கருதி சில விடயங்களை பதிவிட வேண்டும், மூளாயைப் போலவே குரும்பசிட்டியிலும், சித்தங்கேணியிலும் அடுத்தடுத்த வீடுகளில் பெற்றோரும் பிள்ளைகளும் உறவினர்களும் வாழ்ந்து வந்தது அந்தக்காலம். அதிலும் சித்தங்கேணி அப்பு தன் பிள்ளைகளுக்கு ஒரே வளவிலேயே 4 வீடுகள் கட்டியிருப்பது உண்மையிலேயே வியக்கத்தக்கது. குரும்பசிட்டியில் கட்டுவன் சந்தியிலிந்து ஒழுங்கையால் போனால் முதலில் வருவது பராமாமிவீடு. அதற்கடுத்தது அப்புவீடு. அதற்குப் பிறகு பெரியப்பா வீடு. அடுத்தது ஒரே பக்கத்தில் புளியடி நின்ற அந்த வளவுக்குச் சொந்தக்காரரான எங்கள் பெரியமாமாவீடு. முன்பாக குணம்மாமாவீடு. அதற்கடுத்ததாக சின்னக்குஞ்சக்காவீடு. 1976இல் பிரபு பிறந்தது முதல் பெரியமாமா வீடு கட்டி புதுதாக குடியேறியது, அந்த வீட்டில் நிரூபா பிறந்தது இவையும் மறக்க முடியாத நிகழ்வுகள். இன்று அந்த ஊரும் மிக அழகான வீடுகளும், மிக நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பூ மரங்களும், முக்கனிகள் நிறைந்த சோலைப் பிரதேசமும் எந்நிலையில் இருக்கின்றன என எவருக்கும் தெரியாது. மூளாயிலிருந்து ஏயப்பாவின் காரிலும் பின் ஜீப்பிலும் நாம் தண்ணீர் எடுத்துச் செல்வோம்! ஏயப்பா வீட்டில் செம்பாட்டு மண் பறிக்கப்பட்டு பூக்கண்டுகளும் வளர்த்தோம். எல்லா இடமும் சுடுகாடாகிக் கிடக்கிறது!
மாமாவுடைய வீட்டில் தங்கியிருந்து படித்த காலங்களில் ஒவ்வொரு பூரணை தினங்களிலும் முழுநிலா இரவுச் சாப்பாடு (Moon Light Dinner) என்று தொடங்கி குணம்மாமா வீட்டிலும், பெரியமாமா வீட்டிலும் இரவு வீட்டு விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு முற்றத்தில் வட்டமாக கதிரைகளை அடுக்கி இராப்போசனம் அருந்தியதெல்லாம் ஒருபோதும் என்நெஞ்சை விட்டகலாத அருமையான பொழுதுகள்! இவை இனி ஒருபோதும் திரும்ப எம்மூரில் வராது! சொந்தக்காரரும் முன்னரைப் போல அருகிலும் இல்லை! உறவினர்களும் ஒன்று சேர்ந்து நேரத்தையும் முன்புபோல செலவழிக்கவும் தயாராயிருக்க மாட்டார்கள்! இயந்திரமான வாழ்க்கை முறை இன்று குசலம் விசாரிக்க மாத்திரம் நேரத்தை ஒதுக்குகிறது.

சுவிற்சர்லாந்தில் இருந்தகாலத்தில் அடிக்கடி மாமாவுடன் தொலைபேசியில் பேசுவேன். நான் செய்யும் வேலைபற்றி மிக விருப்பத்தோடு அவருடன் அளவளாவியது என்றைக்கும் மறக்க முடியாது! பேசி முடித்து வைக்கிறேன் என்றால் தானாக இந்தா ஒரு கதை மாமியோடையும் கதை என்று சொல்லி புஸிமாமியின் குரலையும் கேட்கப்பண்ணிவிட்டுத்தான் தொடர்பை துண்டிப்பார். நிரூபாவுடன் ஓரிரு தடவை தொலைபேசியிலும், பல முறை மின்னஞ்சலிலும் தொடர்பைக் கொண்டிருக்கிறேன்!

மாமாவுடைய பிரிவும் திடீரென எங்கள் அப்புவுடைய மறைவுபோல நடந்திருக்கிறது. பெரியமாமாவின் திருமணத்தின் பின் அப்பு இறந்தார். பெரியமாமா நிரூபாவின் திருமணத்தை நல்ல முறையில் நடத்தியிருந்தார். சுகந்தனுக்கு படங்களை அனுப்பி அவற்றை அல்பமாகத் தரும்படி கேட்டிருந்தார். பிறகு இங்கு வர திட்டமிட்டிருந்த வேளையில் திடீரென அவர் பிரிந்துவிட்டார். மூளாய்ப் பிள்ளையார் கோவிலில் எங்கள் குடும்பத்தின பெயரால் நடக்கும் நவராத்திரி பூசையில் சரஸ்வதி பூசை இறுதி இரு நாட்கள் மாமாவின் உபயம். நவராத்திரி 9 நாட்களாக குறைந்தாலும் சரி 10 நாட்களாக கூடினாலும் சரி மாமாவின் திருவிழாவில்தான் மாற்றம். அந்தப் பூசையை விடாது இன்றுவரை நடத்திய அவரது பக்தியைக் குறிப்பிடும்போது இன்னுமொன்றை நினைவுபடுத்துவது பொருத்தமாகும். செல்வச் சந்நதி முருகன் மீது அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் மாமாவுடன் 1983 இன் இறுதிக் காலங்களிலும், 1984இல் அவர் கனடா செல்லும்வரையும் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் தட்டிவானில் செல்வது வழக்கம். காலையில் போனால் மாலைவரை அங்கேயே பொழுதைக் கழித்து வருவதும் மறக்க முடியாது. நாம் சபரி மலை போகும்வேளையில் எல்லாம் நிரூபாவுக்காக எம்மை வேண்டுமாறு ஒவ்வொரு தடவையும் கேட்டுக் கொள்வார்.

எங்கள் அப்பு அம்மம்மா மற்றும் குரும்பசிட்டி அப்பு ஆச்சி, சித்தங்கேணி அப்பு ஆச்சி இவர்கள் எல்லாரும் யோகர் சுவாமிகள் சொன்னதுபோல “தன்னைப் போலச் சகலமும் ஓம்புக – விண்ணைப் போல வியாபகமாகுக – கண்ணைப் போலக் காக்க அறத்தை” தம்தம் மனம்போல விசாலமான நாற்சார் வீடுகளைக் கட்டி பரோபகாரிகளாகத் திகழ்ந்தார்கள்! அவர்களின் வம்சத்தில் வந்த நாம் அவர்களின் நல்ல பண்புகளையுடைய ஒரு சந்ததியினர் அவர்களைப் போல வாழவேண்டும்! இன்றுள்ள அவர்களது சந்ததியினர் அறிய வேண்டும் என்பதற்காக இதனை சுருக்கமாகவே எழுதியுள்ளேன். கனடாவில் மாமாவின் அந்தியேட்டி நிகழ்வுகள் ஐயப்பன் கோவில் சூழலில் நடைபெற இருப்பது ஓரளவு மனதுக்கு ஆறுதலைத் தருகிறது! தத்வமஸியின் வாக்கியத்திற்கு அமைவாக வாழ்ந்தது எம்குடும்பம். அப்புவைப் போல மாமாவும், மாமாவைப் போல அவரது வம்சமும் தழைக்க அந்த தர்மசாஸ்தாவை வணங்கி என் மனத்தில் உதித்த எண்ணங்களில் ஒரு சிலவற்றை இன்றைய நாளில் அஞ்சலியாக சமர்ப்பிக்கின்றேன். குறை ஏதும் இருந்தால் பொறுத்து - இலங்கையிலிருந்து அவரது முழு அன்பையும்பெற்ற அவரது இளைய சகோதரி ராசாவின் மூத்த மைந்தனாக இந்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். சிறுவயதில் தொட்டிலிலிருந்த தன்னை "ராசா ராசா" என்று அன்பொழுக அழைத்து ஆட்டி தனக்கு நிரந்தரமாக ராசா என்ற பெயரைத் தந்தவர் தன் "அண்ணை" என அம்மா அழுதபடி சொல்லியதை அவரும் தனது கிறுக்கலில் எழுதியிருக்கின்றார். 30 வருடஙகளின் பின் அவரது வரவை எதிர்பார்த்திருந்த எனது அம்மாவும் நாங்களும் ஒரு விதத்தில் கவலையடைந்திருந்தாலும் இன்னொரு பக்கத்தில் பெருமையடைகிறோம்! அவரையும் புஸிமாமியையும், பிரபுவையும், நிருபாவையும், வினோ அக்காவையும் விமான நிலையத்திற்குக் கூட்டிச் சென்று கனடாவுக்கு அனுப்பிவைத்தவர் என் அப்பா! எங்கள் குடும்பத்தில் பல இழப்புக்கள் - என் தம்பி துளசி – என் அப்பா – ஏன் நானும்கூட - ஏதோ அப்பு அம்மம்மா செய்த பலன் செத்துவிட்டான் என்று சொன்ன பின்பும் உயிருடன் பட்ட நன்றிக்காக இதை எழுத இன்னும் உயிருடன் என்னைத் தக்க வைத்த - ஆபத்தில் காத்த ஸ்ரீ தர்மசாஸ்வாகிய அந்தக் காந்தமலை ஜோதியை மனதார பிரார்த்தித்து முடிக்கின்றேன்!

“ஓம் சத்குரு நாதனே சரணம் ஐயப்பா!!!

என்றும் மறவாத நன்றியுள்ள,

மூளாய் மருமகன்,

தங்க. முகுந்தன்.

குறிப்பு - எதிர்வரும் 12.04.2014 சனிக்கிழமை நண்பகல் பெரியமாமாவின் அந்தியேட்டி நடக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் கோவில் குருசுவாமிகளையும், குறிப்பாக சுந்தரலிங்கம் சுவாமிகளையும் நன்கு தெரியும்! அவர்கள் சொந்த ஊரான அனலைதீவு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவிலுக்கு 1985ஆம் ஆண்டு தேர்த்திருவிழாவில் ஊரெழு வைத்தியநாத சிவாச்சாரியாருடன் கலந்து கொண்டதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். சுந்தரலிங்கம் சுவாமிகள் கொள்ளுப்பிட்டி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் எம்முடன் யாத்திரை வந்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.


Thursday, December 19, 2013

1999இல் சபரிமலையில் நிகழ்ந்த அனர்த்தம் பற்றிய என் கருத்து!



(இக்கட்டுரை 1999 பெப்ரவரி மாதத்தில் எழுதப்பட்டது. வேலைப்பளு காரணமாக இதனை நான் கட்டுரையாக குறிப்பிட்ட தினகரன் பத்திரிகைக்கு அனுப்பவில்லை! ஆனால் தற்போது எனது மனத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்தில் எடுத்து இதனைப் பதிவிடுகிறேன்! தயவுசெய்து யாரும் மனம் நோக வேண்டாம்! ஏனக்குத் தோன்றுவதை நான் செய்வதற்கு எனக்கு உரிமை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இதனைப் பதிவிடுகிறேன்.)

"இந்தியா செல்லும் இந்து யாத்திரிகர்களின் நலன்காக்க இந்து கலாசாரத் திணைக்களம் ஏன் முன்வருவதில்லை?" என்றும், “சபரிமலை அனர்த்தத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம்” என்றும் தலைப்பிட்டு 07.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும், அதற்குப் பதிலளிக்கத்தக்க முறையில் 'இந்து யாத்திரிகர்களும் இந்து கலாசாரத் திணைக்களமும்' "வளமும் அதிகாரமும் இருந்தால் செய்து காட்டுவோம்" என்று 14.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும் வெளியான கட்டுரைகளுக்கு ஒரு விதத்தில் பதிலளிக்க வேண்டிய ரீதியிலேயே இக்கட்டுரையை எழுத விரும்புகின்றேன். இதனால் எவருக்கேனும் மனத்தாங்கல் ஏற்படுமாயின், அதற்காக ஐயனிடத்தில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற போது நானும் பம்பைக் கரையிலே மகர ஜோதியைப் பார்த்தவன். இன்று வரை சரியான செய்தி கிடைக்கவுமில்லை. எமக்கு அது பற்றி தெரிய வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை என்றே வெளிப்படையாக உண்மையைக் கூற வேண்டும். குறிப்பிட்ட பகுதியிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தெளிவாக மகர ஜோதியைப் பார்ப்பதற்கு இந்தப் பகுதியில் கூட்டம் கூடுவது சர்வசாதாரணமானதே. ஆனாலும் இம்முறை அளவுக்கதிகமான பக்தர்கள் கூடியிருந்தமையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களது சோதனை நடவடிக்கை. மற்றும் பல்வேறுபட்ட காரணங்களின் நிமித்தம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் ஒரு உண்மையை நான் கூறவேண்டும். நான் சபரிமலை யாத்திரை மேற்கொண்டாலும் சரி. கூட்டமாகக் குழுவாக மேற்கொண்டாலும் சரி. யாத்திரிரை மேற்கொள்ள மாலை அணியும் போது எமது மனங்களிலே ஏற்படும் திடமான ஒரு நம்பிக்கையும், லட்சியமும் - நாம் சபரிமலை சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் கலியுக வரதனுக்கு நெய் அபிஷேகம் செய்வித்து அவன் திவ்ய தரிசனக் காட்சியைக் காணவேண்டும் என்பதுடன் மகர சங்கிராந்தியில் அன்று தோன்றும் ஜோதியையும் விளக்கையும் தரிசிக்க வேண்டும் என்பதே. இக்காட்சியைக் கண்டபின்பே நாம் எமது ஏனைய குடும்ப அல்லது தனிப்பட்ட விடயங்களைச் செய்ய முற்படுவோம். மேலும் யாத்திரை புறப்படும் வேளையில் சுவாமியே சரணம் என்று சொல்லித்தான் புறப்படவேண்டுமே அன்றி போய்வருகின்றேன் என்று கூறல் ஆகாது. நாம் இந்து சமயத்தவர்கள். சனாதன தர்மத்தின்படி, எமது பிறவிக் கோட்பாடுகளின்படி, நாம் செய்த வினைகளுக்கேற்ற முறையில் எமக்குப் பிறவிகள் உண்டு என்பதும், மரணம் என்பது என்றோ ஒருநாள் நிச்சயம் உண்டு என்பதும், அது எப்போது என்பதை நிர்ணயம் செய்பவன் தர்மவான் என்று சொல்லப்படும் யமனுடைய கடமை என்பதும் அறிந்த விடயம்.


சபரிமலைப் புனித யாத்திரை செய்கின்ற ஓர் சுவாமி தேவவியோகம் அடைந்தால் அந்த ஆத்மா நிச்சயம் ஐயனுடைய பரிப+ரண அருளுக்குப் பாத்திரமாகி பேரின்பப் பெருவாழ்வு அடையும் என்பது முடிந்த முடிபு. கடந்த வருடம் (1997-1998இல்)எமது குழுவினருடன் யாத்திரை செய்த இலட்சுமணண் சுவாமி கரிமலையில் தேகவியோகம் ஆகியதை நாம் நினைவு கூர வேண்டும். அவருக்கு மயக்கம் ஏற்பட்ட போது எமது குழுவில் இருந்த ஓரிரு சுவாமிகளும் வெளிநாட்டு சுவாமி ஒருவருமே அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். எனினும் அவரது உயிர் பிரிந்த பின்பும் கூட அவரது உடலை எப்படியாகிலும் இலங்கைக்கு எடுத்துவர வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பெரும் பிரயத்தனம் செய்து அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டர்களின் உதவியுடன் அவரது உடலை பம்பையில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு வந்து பின்னர் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்தது. அவரது பூதவுடலைக் கொண்டு வர முடிந்தமைக்காக காரணம் அவருக்கு அருகில் அந்த நேரத்தில் எமது குழுவினர் இருந்தமையால்தான். இல்லாவிட்டால் அவரது உடலை அருகே பள்ளத்தில் தள்ளி விட்டிருப்பார்கள். இது ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் “எம்மவர்களில் பலர் மாலை அணிந்திருக்கும் போது சில விடயங்களைத் தவிர்ப்பதும் அவை தீட்டு ‘குற்றம்’ எனக் கருதுவதும் மனிதாபிமான அடிப்படையில் தவறாகும்” என்பது எனது கருத்து. இறைவன் கருணை வடிவானவன். சபரிமலை யாத்திரையின் போது ஏழை, பண்காரன், பெரியவன் சிறியவன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற எண்ணம் எல்லாம் மறையப் பெற்று நாம் அனைவரும் ஒரு குலம் என்ற ஒற்றுமை வலுப்பெறுகின்றது. மக்கள் அனைவரும் ஒரு குலம். இறைவன் அனைவருக்கும் பொதுவானவனே. அவனது சந்நிதியில் அனைவரும் சமமே. அதுவே உண்மையான ஜீவாத்மா, பரமாத்மா சங்கமம். அதுவே தத்வமஸி எனும் மகா வாக்கியத்தின் பொருளுமாகும்!


ரிஷி அவர்களின் கட்டுரையின் ஆரம்பத்திலேயே “பக்தர்களில் 52 பேர் தத்தமது வீடுகளுக்கு உயிருடன் திரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். வருடாவருடம் சபரிமலையில் பலர் மாரடைப்பினாலும் நெரிசலில் சிக்குண்டும் சரணமடைந்திருப்பினும் இம்முறை குறிப்பிட்ட அனர்த்தத்தால் பலர் சரணமடைந்துள்ளனர். இதற்கான காரணத்தை நாம் விரிவாக ஆராய வேண்டும்.

பிரார்த்தனை என்பது வீண்போவதில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு எமது பிரார்த்தனைகள் பக்தி ப+ர்வமாக அமைகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு பலன்களையும் நாம் எதிர்பார்க்க முடியும். உதாரணமாக எனது அனுபவத்தில் நான் கண்ட அனுபவங்களையும் பெற்ற பேறுகளையும் கண்டிப்பாக சொல்லியே தீர வேண்டும்.

முதலில் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டுமாயின் இலங்கை பக்தர்களுக்குக் கடவுச்சீட:டும், இந்தியா செல்வதற்கான அனுமதியும் “விசா”வும், குறிப்பிட்ட தினத்தில் யாத்திரை மேற்கொள்ள விமானப் பயணச் சீட்டும் அவசியம். இம்மூன்றையும் சரிவரப் பெற்றபின்னர் தான் இந்தியா சென்று எமது யாத்திரையைத் தொடர முடியும். கார்த்திகை முதலாம் நாள் மாலையணிந்த சபரிமலை யாத்திரையைத் தொடங்குவதே பண்டைய நெறிமுறை. அதற்கேற்ற வகையிலேயே ஸ்ரீஐயப்ப சன்னிதானமும் கார்த்திகை முதலாம் நாளில் இருந்து மண்டலப் பூர்த்தி வரை “41 நாட்கள்” ஆலயம் திறந்திருக்கும். அதன் பின் மகரஜோதி தரிசனத்திற்காக ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 20 நாட்களுக்கு 20ஆம் திகதிவரை திறந்திருக்கும்.

எனக்குக் கரிமலை இறக்கத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை நான் முக்கியமாக குறிப்பிட்டே ஆக வேண்டும். ஐயனின் திருவருளுக்கும் எனது பற்றற்ற வாழ்க்கைக்கும் இது உதாரணமாகும். ஸ்ரீபம்பா விக்னேஸ்வரா சத்தியாலாயா குழுவினரால் நடாத்தப்படுகின்ற அன்னதானத்தில் நானும் பங்குகொண்டு அடியார்களுக்கு உணவு பரிமாறுவதில் உதவ சீக்கிரமாக நடந்து சென்று உதவ வேண்டும் என்ற ஆதங்கப்பட்டு முன்பு இரு தடவைகள் பங்கேற்றது போலு இம்முறையும் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் எருமேலியில் இருந்து பம்பைக்குச் செல்ல முடிவு செய்து இன்னோர் பழமலை சுவாமியுடன் யாத்திரையைத் தொடர்ந்தேன். முதல் தடவை நாம் எருமேலியில் இருந்து ஆரம்பித்து அழுதையிலும் கரியிலம்pதோட்டிலும் தங்கியே பம்பையை அடைந்தோம். இரண்டாவது முறை அழுதையில் தங்கி கரியிலந்தோட்டில் தங்காது பெரியாணை வட்டத்தில் மழையில் நனைந்து பம்பையை அடைந்து அன்றிரவு முழுவதும் நல்ல காய்ச்சலினால் அவதிப்பட்டு அடுத்தநாள் ஊசி மருந்து எடுத்ததன் மூலம் சுகமாகி முதன் முதல் அன்னதானத்தில் பங்கு கொண்டு பணிசெய்தேன். கடந்த தடவை எவ்வித தடங்கலுமின்றி அழுதையில் தங்கி கரிவலந்தோட்டில் சக்தி ப+சைக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்துதவி செய்தபின் பம்பையை அடைந்து அன்னதானத்தில் பங்கு கொண்டேன். இம்முறை அழுதையிலும் தங்காது புறப்பட்டு முக்குளித் தாவளத்தில் அம்மன் கோவிலில் வைத்து என்னுடன் கூடவே வந்த பழமலை சுவாமியைவிட்டுப் பிரிந்து அவரைத் தேடிக் காணாமல் எனது யாத்திரையைத் தொடரவும் மழை ஆரம்பிக்கவும் ஒரு தாவளத்தில் தங்கினேன். மழையையும் பொருட்படுத்தாமல் பலர் தமது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். நானும் தொடர ஆயத்தமான வேளையில் இரண்டு ஐயப்ப சேவா தொண்டர்கள் பெரிய தடியொன்றில் வேட்டியை மடித்துக் கட்டி “ஏணை போல” ஒருவரைத் தூக்கிச் செல்ல ஒரு வயதுபோன அம்மா சுவாமி தொடர்ந்து கண்ணீர் வடித்துச் செல்வதைக் கண்டு அங்கேயே தங்கிச் செல்ல முடிவு செய்தேன். பதினைந்து ரூபா தங்குவதற்கு வாடகை கொடுத்து விரிப்பு எடுத்தேன். அதிகாலை நான்கு மணிகெல்லாம் சரியாக யாத்திரையைத் தொடர்ந்து கரிவலந்தோடு தாண்டி கரிமலை ஏற்றமும் ஏறி பின் இறக்கத்தை அடைந்தேன். மழை பெய்திருந்த காரணத்தாலும் அந்த இறக்கம் மிகவும் ஆபத்தானதாக இருந்தமையாலும் மிகவும் அவதானத்துடன் மிக மெதுவாக இறங்கிச் சென்ற வேளையில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாகி ஒவ்வொருவராக இறங்க கவனமாக நடந்து கொண்டிருந்த வேளையில் என்பின்னால் சரக் சரக் என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதும் பின்பு கவனமாக இறங்குவதிலும் அவதானமாயிருந்தேன். பலர் இடிபட்டுக் கொண்டிருந்தார்கள். எனது சோல்னாப் பையை சரிசெய்து கொண்டு இறக்கத்தில் இறங்கி “இந்த வேளையில் நாம் எமது இரு கைகளாலும் இருமுடி சரிந்து விழாவண்ணம் பிடித்துக் கொண்டு கண்களைப் பாதையில் நிலைப்படுத்தி சரணம் விழித்துக் கொண்டு சமனிலையைப் பேணிபடி நடந்து செல்வோம். பெரியாணை வட்டம் தாண்டியப pன் சிறியாணை வட்டத்தில் வத்தகைப் பழத்தின் நீர் குடிப்பதற்காக இருமுடியை இறக்கி வைக்க எனது சோல்நாப் பையைக் கழற்றிய போது தாவளத்தில் இருந்த ஒரு மணிகண்ட சுவாமி எனது சோல்னாப் பையை யாரோ வெட்டியிருக்கிறார்கள் என்று கூறவும் அப்போதுதான் என்னிடம் குருசுவாமி தந்த ரூபா 10,000 இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அவசரம் அவசரமாக இருமுடியை இறக்கி வைத்துவிட்டு சோல்னாப்பையைப் பார்த்தபோது பம்பா கணபதிக்கு அடிக்க வேண்டிய தேங்காயும் கற்ப+ரமும் முன்பாகத் தெரிந்தது. கைப்பையின் உள்ளே பத்திரமாக நூறு ரூபாத் தாள்கள் கட்டாக குருசுவாமி தந்த பணம் அப்படியே இருந்தது. பின்னர் அந்த சுவாமியின் கூற்றுப்படி தலையிலேயே வேட்டி ஒன்றினுள் சோல்னாப் பையை வைத்து அதன்மீது இருமுடியை வைத்து பம்பை நதிக்கரையை அடைந்த போது ஒருநாளும் இல்லாதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. கன்னிமூலகணபதிக்கு முன்பாக இருந்த படிக்கட்டினால் மாத்திரமே பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அதிலும் சந்தேகத்திற்கு இடமான பக்தர்களின் சோல்னாப் பைகள் சோதனையிடப்பட்டன. விமான நிலையத்தில் இருப்பது போல பம்பா கணபதி ஆலய சுற்றுவட்டத்தில் சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதனூடாகவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது நடந்தது 13.01.1999 புதன்கிழமை. ஒருசில முக்கிய பிரமுகர்களுக்காக (“V.I.P”) வருகின்ற அத்தனை அடியார்களையும் சோதனையிடுவது ஒரு முறையான செயல் அல்ல. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்கள் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்திப் பார்க்கும்போது அனர்த்தத்துக்கு போதுமான காரணங்கள் பல கிடைக்கும்.

எமது யாத்திரைக் குழு மகர சங்கிராந்தி தினத்தன்று பம்பையில் தங்கி - ஜோதி பார்த்த மறுதினம் அன்னதானம் - பம்பா சக்தி மற்றும் பம்பா விளக்கு நிறைவு செய்து அடுத்த நாள் அதிகாலையிலேயே சுவாமி தரிசனத்திற்காக சபரிமலை சென்று நெய்யபிஷேகம் செய்வித்து அதன்பின் அலங்கார ரூபத்திலிருக்கும் ஐயனைத் தரிசித்து இரவு பம்பைக்கு வந்து புறப்படுவது வழக்கம்.


ஜோதி பார்த்தவுடனேயே பலர் மலைக்குச் செல்வதற்கும், பலர் வீடு திரும்புவதற்கும் ஆயத்தமாகி நெருக்கியடித்துக் கொள்ளுவது வழமை. மழைபெய்திருந்த காரணத்தாலும், தற்காலிகமாக வெட்டிச் சமப்படுத்திய மணற்திட்டிகள் கூட்டத்தின் பாரத்தால் சரிந்து கீழே இருந்தவர்கள் மீது விழுந்தமையாலேயே மூச்சுத் திணறி இப்பரிதாபகரமான நிகழ்வு நிகழ்ந்தது. மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என்ற செய்தியுடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பினும் இன்றுவரை சரியான காரணத்தை எவரும் அறிவிக்க வில்லை. இந்தச் சம்பவத்திற்கும் இங்கு நம்நாட்டில் உள்ள இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும் முடிச்சுப் போடுவதுதான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆலயம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகப் பூசைகள் இன்றிப் பூட்டப்பட்டு இருக்கின்றது. இங்கு நடைபெறும் மார்கழிமாத இராமர் பஜனைப் பிரச்சினையால் இந்த ஆலயம் இந்நிலைக்க ஆளாகியது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் தான் நான் சபரிமலைக்குக் கொண்டுபோகும் தேங்காயை பூசையில் வைத்து எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த வருடத்திற்கு முன்னரே 1997 இல் சபரிமலை யாத்திரையை நிறைவு செய்து கொண்டு திரும்பிய பின் இந்த ஆலயத்தில் வைத்தே எனது பிரசாதத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஓடோடிச் சென்ற போது ஆலயம் பூட்டப்பட்டு இருந்தது. அதன்பின் கடந்த வருடமும் நான் உள்ளுராட்சித் தேர்தல் முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்தபின் சென்றேன். அப்போதும் ஆலயம் பூட்டப்பட்டிருந்தது. கடந்த 16.04.1998 அன்று இவ்வலயத்தில் தீவிபத்து ஒன்று நடந்ததைச் சுட்டிக்காட்டி செயலாளருக்கு அவ்வாலயத்தின் அறங்காவலர் “தலைவர்” எழுதிய பிரதி இந்தத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தும் இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுத்தாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட ஆலயத்தின் அனுசரணையோடு நடைபெறும் அறநெறிப் பாடசாலையின் போசகராக நான் முன்னர் இருந்தேன். 23.10.1994 இல் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்டத்தில் இந்து சமயப் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த 7 அறநெறிப் பாடசாலைகள் பங்குபற்றாமல் பகிஸ்கரித்த காரணத்தால் அப்போட்டிகள் விசாரணையின் பின்னர் 5.03.1993 இல் மீண்டும் நடாத்தப்பட்டது. அதற்கான பரிசில்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை. இந்த வரைவிலக்கணத்தில் ஒழுங்காக இங்குள்ள கடமைகளைச் செய்ய முடியாத திணைக்களம் எவ்வாறு சபரிமலை யாத்திரையில் சம்பந்தப்பட்டு தீர்வுகாணப் போகின்றது. எனது மனக் கவலை யாதெனில் கடந்த 3 வருடங்களாக இந்த ஆலயத்தின் சுற்றுவீதியில் உள்ள மரங்களில் இருந்து பெற்ற தேங்காய்களையே ஒவ்வொரு தடவையும் நான் யாத்திரையின் போது நெய் நிரப்பி இருமுடியில் சுமந்து செல்வேன். இம்முறை மாலையிட்ட பின் இந்த ஆலயத்தை வந்து திறந்து பார்க்கவுமில்லை. இங்கு தேங்காய் பூசையில் வைக்கவுமில்லை. இந்தக் குறையும் இப்படிப்பட்ட அனர்த்தத்திற்குக் காரணம் ஆகுமா என்ற வினா என் மனதில் எழுகின்றது. கந்த 14.09.1992 சிவராத்திரி தினத்தன்று குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்ற என்னை ஒரு ஆசிரியர் (எனது நெருங்கிய நண்பரும் கூட) சபரிமலை குறித்தும் இவ்வாலயம் குறித்தும் என்னைக் கேட்ட சில கேள்விகள் குற்றம் சுமத்துவது போல உள்ளுர என்னை உறுத்துகின்றது. குறிப்பிட்ட இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாகப் பல தடவைகள் நவராத்திரி விழாவைச் சிறப்பாக நடாத்தி வந்தோம். கடந்த வருடம் நவராத்திரி நடக்கவுமில்லை. என்னை அழைக்கவுமில்லை. நானும் போகவுமில்லை. இங்குள்ள மக்கள் செய்கின்ற குறைகளால் அங்கு அனர்த்தம் ஏற்பட்டிருக்குமா என்றும் ஒரு வினா எழும்புகின்றது. காரணம் இங்கு மலையகத்தில் வாழுபவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது.

குறிப்பிட்ட கட்டுரையில் பிஸ்னஸ் ஆகக் கருதுவோர் என்ற ஒரு சொல் இருக்கின்றது. உண்மைதான். சில பக்தர்கள் விமான நிலையத்தில் தீர்வையற்ற வியாபார நிலையங்களில் மதுபானப் போத்தல்களை எடுத்துச் செல்வதும் இங்கிருந்து போவோர் பலர் தமது பயணப் பொதிகளில் கராம்பு, ஏலம் போன்றவற்றை எடுத்துச் செல்வதும் சர்வசாதாரணமே. ஆனால் எமது யாத்திரைக் குழுவில் இப்படியான தேவையற்ற செயல்களை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால் பல குழுவினர் சுங்கப்பகுதியில் இதனால் பலமணிநேரம் தாமதப்படுவதை என் கண்களால் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன்.

Friday, November 22, 2013

யாழ்ப்பாணத்தில் சபரிமலை ஐயப்ப விரதமும் நாம் படும்பாடும்!


சபரிமலை செல்வதற்கு யாழ்ப்பாணத்திலும் பல யாத்திரைக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது மிகவும் பெருமளவில் ஐயப்பயாத்திரீகர்கள் மாலையணிந்து விரதமனுட்டித்தாலும் சரியான முறையில் ஐயப்ப விரதத்தை அறிந்து வைத்திருக்கிறார்களா? என்ற வினா எம்மிடத்தில் எழுகிறது! இது குறித்து என்னால் இன்று எழுதப்பட்ட ஒரு வேண்டுகோளை இங்கு பதிவிட விரும்புகின்றேன்!


அனைத்து சபரிமலை குருஸ்வாமிகளுக்கும் ஒரு பணிவான விண்ணப்பம்!

திருவருளும் குருவருளும் முன்னிற்க!

சபரி மலைக்கு முதன் முறையாகச் செல்லும் கன்னி ஸ்வாமிகளை சில பழ மலை ஸ்வாமிகளும் சில குருஸ்வாமிகளும் சபரிமலை நடைமுறைகளுக்கு ஒவ்வாத தேவையற்ற விடயங்களைச் சொல்லி அவர்களை சபரிமலை விரதத்தின் உண்மைகளை அறிய விடாது தமது கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருக்க விரும்புவது போலத் தெரிகிறது. முதலில் சபரிமலை செல்பவர்கள் அங்குள்ள நடைமுறைகள் - விரதத்தின் நோக்கம் - ஐயப்பனுடைய வரலாறுகளை முழுவதுமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு சில யாழ்ப்பாணத்து குருஸ்வாமிகள் அந்தணர்களாக இருப்பதால் அவர்கள் தமக்குரிய வேத - ஆகம வழிபாட்டை இதனுள்ளும் புகுத்துவதற்கு எத்தனிக்கிறார்கள். சாதாரணமாக அனைவராலும் மேற்கொள்ளப்படும் இவ்விரதத்திலும் தாம் நினைத்தபடி பூசைமுறைகளை ஏற்படுத்தி அதையே தொடர்ந்து பின்பற்றிவருவதும் எம்மைப் போன்ற சில மாலை போட்ட ஸ்வாமிகளின் மனதை வருத்தமுறச் செய்கின்றன. எந்தவித மந்திரமோ, கிரியைகளோ இந்த வழிபாட்டில் சொல்லப்படவில்லை. ஐயப்பன் படத்தை வைத்து அவரவர் வசதிக்கேற்றபடி வணங்கக்கூடிய மிக எளிமையான விரதத்தை பகட்டுக்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு சில குருஸ்வாமிகள் செய்வது அந்த பகவானாலேயே ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு மாபெரும் குற்றமும் தவறுமாகும். மாலை போட்ட ஸ்வாமி தன் வசதிக்கேற்றபடி வீட்டில் ஒரு பூசை செய்ய முயன்றாலும், சில அந்தணப் பெருமக்கள் தாம் கொண்டுசெல்லும் ஐயப்பனின் ஐம்பொன்னாலான உருவச் சிலைக்கு அபிஷேக ஆராதனைகளை தாம் செய்வதற்காக அந்த வீட்டை உபயோகிப்பதும் நல்லதல்ல. குறிப்பிட்ட வீட்டில் நடக்கும் பூசையை குருஸ்வாமி முன்னின்று வழிநடத்த - அந்த வீட்டுக்குரிய ஸ்வாமிகளும் மற்ற குடும்ப அங்கத்தவர்களும் அவரவர் திருக்கரங்களால் செய்ய வேண்டும். இதுதான் அந்த மாலைபோட்ட ஸ்வாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அந்த வீட்டிற்கும் நன்மை பயக்கும், 18 படிகள் வைத்து பூஜை செய்ய வேண்டிய ஐயனின் வழிபாட்டில் அதைத் தவிர்த்து ஐயனை கோபத்திற்குரிய கடவுளாக சித்தரிப்பதும் கண்டிக்கப்படத் தக்கது. குறிப்பிட்ட வீட்டில் ஐயப்பனுடைய பூஜைக்குச் செல்வோர் தவறாது அந்த வீட்டில் வழங்கப்படும் அன்னதானத்தையோ - பிரசாதங்களையோ ஏற்றுக் கொண்டு அங்கேயே உட்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பூசை முடிந்தவுடனே தன் வீட்டிலுள்ள ஐயப்பனுக்கு படைத்த பின்பே சாப்பிடுவேன் எனக்கூறி வந்த இல்லத்தில் உணவருந்தாமல் செல்வது மாபெரும் குற்றமாகும். இதைவிட அவர்கள் அந்தப் பூஜையில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது புண்ணியமாகும். மாலை அணிந்தால் அனைவரும் சமம் என்ற தத்துவமஸி என்கின்ற பேருண்மையைப் புரியாமல் அந்தணர்கள் சிலர் அந்தணரல்லாதோருக்கு பாத நமஸ்காரம் பண்ணாமல் விடுவதும், தனியாகப் போயிருந்து உணவு உட்கொள்வதும் முறையாகாது. இவர்கள் ஐயப்பனின் வழிபாட்டை கேவலப்படுத்தாமல் மாலை அணிவதைத் தவிர்ப்பது சிறப்பாகும். ஐயப்பனின் வழிபாட்டில் அன்னதானம் மிகச் சிறப்புடையது! அன்னதானப் பிரபுவான அவரின் முன்பாக அன்னம் உண்பதைத் தவிர்த்து வீடுகளுக்குச் சென்று உணவருந்த பார்ச்ல் கட்டிக் கொடுப்பதும் ஏற்புடையதல்ல.
ஆலயத்தினுள் இடம்போதாவிடில் ஆலய வளாகத்தில் தனியான ஒரு மண்டபம் அமைத்து ஆலயச் சூழலிலேயே அன்னம் பரிமாற ஆவன செய்யப்பட வேண்டும். மேலும் ஐயப்பனுக்கு படிப்பூசை, ஸ்லோகம் எல்லாம் கூறிவிட்டு பூசை நிறைவில் கறுப்பண்ணஸ்வாமிக்கு பூசை வைப்பதும், வீட்டிற்கு கழிப்பு எனப்படும் பூசணிக்காய் வெட்டி சில சடங்குகளை நடத்துவதும் ஐயப்பனைக் கேலி செய்வதாக அமையும்! ஐயப்பனின் படிப்பூசையை செய்வதற்கு முன் காவலுக்கு உதவும் கறுப்பண்ணஸ்வாமிக்கு பூசையை நடத்தலாம். அதில் தவறில்லை! ஆனால் ஐயப்பனுக்குப் பூசையை நிகழ்த்திவிட்டு பின்னர் சாந்தி செய்வது – ஐயப்பனின் அருள் நிறைந்த வீட்டை குற்றம் சுமத்துவது போலாகும்! நித்திய பிரமச்சாரியான ஐயப்பனின் திருஉருவத்திற்கு அருகில் மஞ்சமாதாவை வைப்பதும், சரிசமமாக ஐயப்பனுடன் வீதியுலா செய்வதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்! மஞ்சமாதா எனக் கூறி சர்வவல்லமை பொருந்திய அம்பிகையின் திருவுருவை வைத்து வழிபடுவதும் மிகவும் தவறாகும். சம்பந்தப்பட்டவர்கள் இதில் அதிக கவனம் எடுத்து ஐயப்பனின் வழிபாட்டை அமைதியாக ஆன்மீக வளர்ச்சிக்கு மாத்திரம் கைக்கொள்ளுமாறும், தேவையற்ற சம்பிரதாயங்களை சடங்குகளாக்கி கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாம் எனவும் சபரிமலை ஸ்ரீ தர்மஸாஸ்தாவின் பெயரால் அவனது அடியவனாக தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்.

Sunday, August 11, 2013

நல்லை நகர்க் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்!

நல்லை நகரில் வீற்றிருக்கும் அலங்காரக் கந்தனுக்கு நாளை 12.08.2013 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இன்று காலை கொடிச்சீலை ஆலயத்திற்கு இரதத்தில் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழா நடைபெற இருக்கிறது. வழமைபோல இன்றே நாமெல்லோரும் நல்லூர் முருகப்பெருமானுடைய திருவிழாவுக்கு ஆயத்தமாகிவிட்டோம்! இனி என்ன 25 நாட்களும் சகலதையும் மறந்து தமிழ்த் தெய்வமான ஆறுமுகப் பெருமானை பல்வேறு அழகான தோற்றங்களில் காண ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்! நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி என்பது யோகர் சுவாமிகள் வாக்கு!