அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, March 31, 2010

தந்தை செல்வாவுடன் நாடாளுமன்றிலிருந்த ஆனந்தசங்கரி அவர்களே சரியான தெரிவு!

அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களும் தற்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களும் 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்று ஒரே காலத்தில் நாடாளுமன்றில் இருந்தவர்கள்.

2010தேர்தலில் போட்டியிடும் தமிழர்களில் தந்தை செல்வாவுடன் நாடாளுமன்றில் ஒன்றாயிருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர் ஒருவரே! தமிழரசுக் கட்சியின் இன்னொருவரான பண்டிதர். கா.பொ. இரத்தினம் அவர்கள் இப்போதிருக்கும் மற்றைய உறுப்பினராவார்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவான 3 உறுப்பினர்களில் இருவர் அரசுடன் இணைய தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தோற்ற நிலையில் தமிழ்க் காங்கிரஸின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக - தமிழர் கூட்டணியிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் தொடர்ந்தவரும் இவர் ஒருவரே!

1965இல் கிளிநொச்சி - கரைச்சி கிராம சபையின் தலைவராக இருந்து பின் 1968இல் கிளிநொச்சி நகர சபைத் தலைவராகி - கிளிநொச்சித் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1970இல் இருந்து 1983 வரை தொடர்ந்து இருந்த பெருமைக்குரியவர் - ஆனந்தசங்கரி அவர்கள்.

1989இல் யாழ்ப்பாணத்திலும் 2004இல் வன்னியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர் 2000 2001களில் நடைபெற்ற தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராவார்.

2001 தேர்தலில் புலிகளின் ஆதரவாளர்களால் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டார்.

இவருக்கு 2006இல் ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு கௌரவ விருது வழங்கியமை - இவருடைய துணிச்சலுக்கும் நீதிக்குமான ஒரு சான்றாகும். போரின்போது எவருமே மக்களுக்காக (சிலர் ஏகப்பிரதிநிதிகளுக்காக குரலெழுப்பியது வேறு)குரலெழுப்பாத நிலையில் அரசுடைய முகமூடிகளைக் கிளித்தெறிந்து உண்மை நிலைகளை அறியத் தந்தவர்.

ஆசிரியராக - சட்டத்தரணியாக இருந்த இவர் கிராம சபையிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சியை தனி மாவட்டமாக்கிய பெருமைக்குரியவராவார்!

ஒரு மாவட்டத்தை உருவாக்கியவர் - அந்த மாவட்டத்திற்கே அழிவு என்ற போதும் - தனது மக்கள் கொடுரமான அவலங்களைச் சந்திக்கும்போது - மௌனம் சாதிக்காமல் தன்னாலியன்றதைச் செய்ததை - மறந்துவிடாமல், அவரது அனுபவம் - ஆற்றல் - துணிவு இவற்றை கவனித்து இம்முறை நடைபெற இருக்கும் தேர்தலில் யாழ் மாவட்டத்திலும் வன்னி மற்றும் மட்டக்களப்பு, கொழும்பு மாவட்டங்களிலும் ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரிப்போமாக!

Tuesday, March 30, 2010

தீர்க்கதரிசி தந்தை செல்வாவின் பிறந்தநாள் நாளை!

தமிழ்ச்சமூகம் அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதனால்தான் உணர்ச்சிமிக்க சில இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்கி உள்ளனர்.
ஆயுதங்கள் அழிவுக் கருவிகள்.
ஆயுதத்தைத் தூக்கியவருக்கும் அது அழிவைக் கொடுக்கும்.


அகிம்சை அப்படியானதல்ல. போராடுபவர்களின் தார்மீக உரிமையை வளர்க்கும். போராடுவோரை ஆளவோ, அடக்கவோ முடியாத நிலைமையை ஆளவும் அடக்கவும் முயல்வோருக்கு ஏற்படுத்தும். அகிம்சைப் பாதையில்தான் எம் போராட்டம் அமையும். அதிலிருந்து சற்றும் விலகமாட்டோம்.

இறுதியாக தந்தையவர்கள் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் நிதானமாக சிந்திப்பது அவசியம்.

வாழும் உரிமைக்கான போராட்டத்தில் இன்றைய நிலையில் தந்தையின் நாமத்தைச் சொல்வதற்கோ அல்லது அவரது தமிழரசுக் கட்சியையும் அதன் சின்னத்தையும் உபயோகப் படுத்துவதற்கோ இன்றுள்ள தமிழரசுக் கட்சியினருக்கு ஒரு யோக்கியதையும் இல்லை!

கடந்த 2004 பொதுத் தேர்தலில் தலைவர் ஆனந்தசங்கரியவர்கள் - தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரிந்து சென்றவர்கள் பயன்படுத்த முடியாதென நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த காரணத்தினால் நியாயமற்ற முறையில் ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்த தமிழரசுக் கட்சியை பயன்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளை யோசிக்காமல் மீண்டும் இம்முறை தமக்குள் பிளவுண்டு அநியாயத்திற்கு துணைபோகிறார்கள்.

நாளை நடைபெறவுள்ள அவரது பிறந்த தின நினைவில் இந்தப் பரிதாபத்துக்குரியவர்கள் என்ன நியாயங்களை முன்வைக்கப் போகிறார்களென பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே தமிழ் மக்களைச் சொல்லொணாத துயரத்தில் மாட்டிவிட்டிருக்கும் தமிழரசுக்கட்சியினர் தற்போது ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் விதங்களில் தமது தேர்தல் பேச்சுக்களை வீசிவருகிறார்கள். நேரத்துக்கு ஒரு பேச்சுப் பேசும் பேச்சாளராக தற்போதைய தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன் பேசி வருவதும் யாவரும் அறிந்ததே!

தந்தையின் பெயரை உச்சரிப்பதற்கே தகுதியற்ற இவர்கள் பதவிகளுக்காக தந்தையின் பெயரை சொல்லியே மக்களை ஏமாற்ற முற்படுகிறார்கள்!

Saturday, March 27, 2010

சொல்வேந்தர் சுகிசிவம் கருத்து - உண்மைகளை ஏற்காதோர் பழியுரை!

சன்தொலைக்காட்சியில் - தமிழ் மாலை -இந்த நாள் இனிய நாள் நிகழ்வில் இலங்கைத் தமிழர்படும் இன்னல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களை - தமிழ் மன்னன் எல்லாளனின் பெயர் கொண்ட ஒரு பதிவர் தனது இணையத்தளத்தில் அறிவற்ற தனமாக விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக பி.பி.தேவராஜ் அவர்கள் பணிபுரிந்த காலப்பகுதியிலிருந்து சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களும் வேறும் பலரும் இலங்கைக்கு விஜயம் செய்து தமது அறிவு சார்ந்த ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பி வருவது யாவரும் அறிந்ததே! அவர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்குள்ள உண்மை நிலைகளைக் கண்டறிந்தபின் வெளியிட்ட இத்தகவல்கள் அனைத்தும் உண்மையே!

மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேறவிடாமல்(Pass கொடுக்காமல்) தங்களுடன் வைத்திருந்து - கொன்றொழித்தபிறகு பல ஏகப் பிரதிநிதிகள் தம் உயிரைக் காப்பாற்ற - ஒளித்து - ஓடி இன்று பல நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள நிலையில், வாழும் மக்களுக்காக நியாயமான - நடைமுறைக்கு ஏற்ற கருத்துச் சொன்ன சொல்வேந்தரின் கருத்துக்கு - ஆட்டையும் ஓநாயையும் முன்னிறுத்துவது தங்களின் மிருகத்தனத்தையே (இனம் இனத்தைச் சாரும் என்பதுபோல) ஒப்புவிக்கிறது போலாகிறது.

யாராவது எமக்கு நியாயமான கருத்துக்களைச் சொன்னால் எங்களில் சிலர்(உங்களைப் போன்றோர்) அதை ஏற்க முடியாத நிலையிலல்லவா இருக்கிறோம்.

வெளிநாடுகளில் பல இன,மத,நிற,மொழி வேறுபாடுகொண்ட - மனிதர்களோடு வாழும் நீங்கள் - சராசரி மனிதராக - உண்மைத் தமிழுணர்வுள்ளவராக - வாழ முதலில் முயற்சி செய்யுங்கள்!

Friday, March 26, 2010

அடிவாங்கிச் சாகப்போறாங்கள்! அடிபட்டுச் சாகப்போறாங்கள்! - ஒரு விசர்க்குருவின் சீடனின் வார்த்தைகள்!

ஈழத்துச் சித்தர் பரம்பரையில் யாழ்ப்பாணத்து விசர்ச் செல்லப்பா சுவாமிகளைப் பற்றி பலரும் தெரிந்திருப்பார்கள்! அவரது சீடரான சிவயோகசுவாமிகளின் குருபூசைத் தினம் இன்றாகும் - பங்குனி ஆயிலியம்!


யாழ்ப்பாணத்துக் கடைவீதிகளிலும் - நல்லூர்த்தேரடியிலும் இன்னும் பல வேறு இடங்களிலும் சுற்றித் திரியும் சுவாமிகளுக்கு பல அடியார்கள் பக்தர்களாக இருக்கிறார்கள். அவரை நேரடியாக காணாதபோதிலும்- அவரது சரிதத்தை அறிந்து வைத்திருக்கும் நான் அவரது சீடரான அமெரிக்க சைவசித்தாந்த திருச்சபையின் ஸ்தாபகர் ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் அளவெட்டி ஆச்சிரமத்தில் 1985ஆம் ஆண்டுகளில் பணியாற்றினேன். திருச்சபையின் அமைச்சராக இலங்கையில் பணிபுரிந்த கலாநிதி சோ.சண்முகசுந்தரம் ஐயா யோக சுவாமிகளின் வாழ்வு அனுபவத்தை மிக அருமையாகச் சொல்லக் கேட்பேன்!

ஏறக்குறைய 25 வருடங்கள் மானசீகமாக சுவாமிகளை வழுத்திவருகிறேன்.

நற்சிந்தனையின் எழுக புலருமுன் ஏத்துக பொன்னடி என்ற பாடலில்

தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை ... என்ற இந்த 3 வரிகளை ஏனோ என்மனம் இறுகப்பற்றியது!

இன்றும் உயிருடன் - வாழ்வதற்கும் இதுவே உற்ற துணையென நான் உணர்கிறேன்.

இன்றைய நாட்டு நிலையை கருத்தில்வைத்து சுவாமிகள் சொன்னதாக நான் கேட்ட அடிவாங்கிச் சாகப்போறாங்கள்! அடிபட்டுச் சாகப்போறாங்கள்! எப்பவோ முடிந்த காரியம் -
ஒரு பொல்லாப்புமில்லை - யாமறியோம் - முழுதும் உண்மை.

இந்த வார்த்தைகள் இன்றைய நிலைக்குப் பொருத்தமாகவே அமைகிறது. எமக்குள் அடிபட்டுச் செத்ததையும் - மற்றவர்களிடம் அடிவாங்கியதையும் சொல்லலாம்.

இன்றைய குருபூசை நன்னாளில் - எம்மை நல்வழிகாட்ட - அவரது பாடல்களான நற்சிந்தனையை நாம் படித்து முன்னேறுவோமாக!

http://www.himalayanacademy.com/resources/books/yogaswami/natchintanai/

Saturday, March 20, 2010

ஜனநாயகம் இலங்கையில் எங்காவது இருக்கிறதா?

கடந்த 17ஆந் திகதி புதன்கிழமை வெளியான யாழ்ப்பாணப் பத்திரிகைகளான வலம்புரியிலும் உதயனிலும் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள் கருத்தை மையமாக வைத்து ஜனநாயகம் பற்றிய வாதங்கள் மிக அருமையாக ஆசிரியர் தலையங்கத்தில் தீட்டப்பட்டிருந்தன.

இலங்கையில் ஜனநாயகம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே சுத்தமாக இல்லை என்பதே எனது அடிப்படை வாதம். இந்திய சுதந்திரத்துக்குப் பின் இலங்கைக்கு 1948இல் பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் வழங்கிய பொழுதிலே இந்நாட்டுக்கு என்று ஒரு கொடி ஒழுங்காக வடிவமைக்கப்படவில்லை.அதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு 2 வருடங்களின் பின்பே சிறுபான்மையினத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த ஒட்டுக் கொடியை தேசியக் கொடியாக ஏற்றது அரசு. இதை ஏற்கனவே எனது பதிவில் குறிப்பிட்டிருந்தாலும் இப்போது குறிப்பிட வேண்டிய கட்டாயமிருக்கிறது. அதன்பின் நாடாளுமன்றத்தில் மலையக மக்களின் பிரதிநிதிகளின் பிரவேசத்தைத் தடுப்பதற்காக குடியுரிமை மசோதாவைக் கொண்டுவந்து மலையக மக்களின் வாக்குரிமைகளைப் பறித்தார்கள். இதன்பிறகு சிங்களம் மட்டும் சட்டம். அதன்பின் தரப்படுத்தல் - புதிய அரசியல் சாசனம். பல தமிழ்த் தரப்பின் எதிர்ப்பையும் மீறி இதை நிறைவேற்றிய அரசு இருந்த இடம் தெரியாமல் போனது. பின் வந்த புதிய அரசு பெற்ற அதிகூடிய ஆசனங்களின் ஆணவத்தால் இன்னும் பல திருவிளையாடல்களை மேற்கொண்டது. பாராளுமன்ற ஜனநாயகக் கோட்பாட்டை மீறி தனது ஆட்சியை மீளவும் 6 வருடங்கள் நீடிக்க விரும்பி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது.

இதற்கு முன் 1981இல் மாவட்ட சபைத் தேர்தலில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை முன்வைத்து அரச படையினரின் ஆதரவோடு யாழ்ப்பாண நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.1983இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு களியாட்ட விழாவில் தமிழ் இளைஞர்களுக்கும் படைத்தரப்பினருக்கும் ஏற்பட்ட கைகலப்பு - துப்பாக்கியால் சுடுமளவுக்குச் சென்று நாடே கலவரத்தால் அல்லோலகல்லப்படுமளவுக்கு வித்திட்டது. வெலிக்கடைப் படுகொலைகளும் வல்வெட்டித்துறை குமுதினப் படகுப் படுகொலைகளும் இன்னும் பலவும் நினைவுகொள்ளப்படுவது அவசியம்.

அதன்பிறகு தாக்குதல்கள் கொள்ளைகள் கடத்தல்கள் கொலைகள் என்று தொடர்ந்து பின்னர் அது பெரிய எறிகணை - குண்டுத் தாக்குதல் கப்பல் விமான பீரங்கித் தாக்குதல் என பல அப்பாவிகளின் உயிரைக் கொத்தாகவும் அவர்களது சொத்துக்கள் உடைமைகள் என அனைத்தையும் அழித்து நாடு குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியே இன்று சாம்பல் மேடாகியிருக்கிறது.

சரி இது அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஜனநாயகம்.

இனி எம்மவர் பக்கத்தில் ஜனநாயகத்தைப் பார்க்க வேண்டும்.

1985களில் 4 ஆயுதக் குழுக்கள் ஒன்றான சம்பவம் பலருக்குத் தெரிந்திருந்தாலும் இன்றைய இளம்பராயத்தினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதுபற்றியும் நான் படங்களாக ஒரு பதிவு அண்மையில் இட்டேன். இவர்கள் ஒன்றாகி பின் தமக்குள் முரண்பட்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டதுதான் உண்மை. அல்லது மற்றவர்களை அழிக்க மேற்கொள்ளப்பட்ட சதியோ? என இப்போது ஆராய வேண்டியிருக்கிறது.

சம்பந்தரும் ஜனநாயகமும்

இதன்பின் 2002இல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சேரவேண்டிய ஒரு பாராளுமன்றப் பதவிக்காக விடுதலைப் புலிகளிடம் நியாயம் கேட்டு வெற்றிபெற்ற சம்பந்தன் தனது தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரை தேசியப்பட்டியலில் நியமித்தார். இதுபற்றிய குறிப்புக்கள் அனைத்தும் எனது முன்னைய பதிவில் இருக்கிறது. விரிவாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அதுவரை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யாத சம்பந்தனும் சரி - மறைந்த ஜோசப் பரராஜிங்கமும் சரி தமது கிழக்குப் பிராந்தியத்துக்கு ஒரு நியமன உறுப்பினரைப் பெற்றுக் கொள்வதற்காகவே அமரர் சிவசிதம்பரத்தின் மரணச் சடங்கில் பங்குபற்ற முதலில் கிளிசொச்சிக்கும் பின் யாழ்ப்பாணத்துக்கும் அவரது பூதவுடலுடன் வந்தார்கள். 1998இல் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலுக்கு அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த ஜோசப் பரராஜசிங்கத்தை பிரச்சாரத்துக்கு அழைத்தும் புலிகளுக்கு அமைவாக அவர் பங்குபற்றவில்லை.சில வேளை அவர் வந்து பேசியிருந்தால் 9 பிரதிநிதிகளைப் பெற்றிருந்த நாம் சில அதிக ஆசனங்களை 1998இல் யாழ் மாநகர சபைத் தேர்தலில் பெற்றிருக்க முடியும்.

2000தேர்தலுக்கும் 2001 தேர்தலுக்கும் ஒரு தடவையாவது வந்துபேச அழைத்தும் வராதவர்கள் 2004இல் போட்டிபோட்டு வந்தார்கள்! எதற்காக - ஒன்று பதவிக்காக! மற்றயது புலிகளின் விசுவாசத்திற்காகவே! இப்போது புலிகளுமில்லை!முன்னரைப்போல தமிழ்மக்களின் ஆதரவு இருக்குமா என்ற சந்தேகத்தில் திட்டமிட்டு வன்னிக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் தனது விஜயத்தை ஏற்பாடுசெய்திருக்கிறார். தமக்கு எப்படியாவது பதவி தேவை என்பதற்காக சம்பந்தன் ஆடாத ஆட்டம் போடுகிறார்! அமரர் அமிர்தலிங்கத்தின் மறைவுக்கு யாழ்ப்பாணப் பக்கமே எட்டிப் பார்க்காத சம்பந்தன் (இந்திய அமைதிப்படையின் விமானத்தில் திருமலைக்கு வந்து இறங்கியவர் திரும்ப அதே விமானத்தில் இந்தியா சென்றதுதான் உண்மை யாழ்ப்பாணத்துக்கு வரவேயில்லை) கடந்த 2004 தேர்தலிலும், இம்முறையும் அவரது பிறந்த இடமான பண்ணாகத்துக்கு - வழக்கம்பரைக்குச் சென்று பேசியிருக்கிறார்.

Wednesday, March 17, 2010

மூன்றில் இரண்டு பங்கு பெறுவது இலகுவானதா?

ஒரு காலத்தில் 5 இலிங்கங்கள் உயர்பதவிகளில் இருந்தது ஞாபகமிருக்கிறதோ தெரியவில்லை! சட்ட மா அதிபராக – பொலிஸ் மா அதிபராக தமிழர்கள் இருந்த காலமும் மலையேறிவிட்டது! பொதுவாக இன்றைக்கு சாதாரண பதவிகளில்கூட தமிழர்கள் மிகச் சொற்ப வீதமாகவே இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் கைப்பற்றலுக்கு முன் முத்துக்குமாரிலிருந்து முருகதாசன் வரையில் தம் உயிரைத் தியாகம் செய்தவர்களின் செயலும் வீணானதுதான் மிச்சம். புலம்பெயர் சமூகம் ஆர்ப்பரித்த போராட்டங்களும் எங்கே போனதென்று தெரியாமல் - ஒரு பாரிய இன அழிப்பை, புலிகளை அழிப்பதாகச் சொல்லி - சர்வ சாதாரணமாக செய்துவிட்டு இப்போது 3இல் 2 பங்கு பெரும்பான்மை பெறுவதில் முனைப்புக் காட்டும் அரசுக்கு எதிராக தற்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிபுணர்குழுவை நியமிக்க (அதுவும் முடிவல்ல) ஆலோசிக்கிறது. இதுவரை மௌனம் காத்த சர்வதேச சமூகம் இனி எம்மீது அக்கறை கொள்ளும் என்று நாம் எண்ணுவது பெரும் மடைத்தனம். இருக்கும் எஞ்சிய மக்களையாவது இனிமேல் ஒருவித பாதிப்புக்கும் உள்ளாக்காமல் உருப்படியான செயற்திட்டங்களை தீட்டுவதுதான் இன்றைய அவசியமான தீர்மானமாக இருக்கிறது. இதை தமிழ்க் கட்சிகள் உருப்படியாகச் செய்ய வேண்டும்.

புலம்பெயர் சமூகம் சும்மா கொக்கரிக்காமல் அமைதியாக இருந்தாலே இப்போதைக்கு நல்லது.செய்த ஆர்ப்பாட்டங்கள் போரை நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் எதையும் சாதித்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்கூட எல்லா அழிவையும் கணக்கெடுக்க வந்ததுபோல 23இல் முகாம்களைப் போய் வேடிக்கை பார்த்தார். அவர் அப்படி வந்ததுக்கு வராமல் விட்டிருக்கலாம். மே 23ல் வந்தவர் மார்ச் நிபுணர்குழு அமைக்க ஆலோசிக்கிறார் என்றால் எவ்வளவு காலதாமதம் - அதற்கும் அணிசேரா அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறதாம்.

ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் அமோக ஆதரவுடன் அன்றைய தொகுதித் தேர்தல் முறையில் 168 மொத்தத் தேர்தல் தொகுதிகளில் 140ல் வெற்றிபெற்றது. 18 தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் 8 தொகுதிகளில் சுதந்திரக் கட்சியும் நுவரெலிய மஸ்கெலியா தொகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் அவர்களும் கொழும்பு மத்தியில் சுயேட்சையாகப்(எந்தக் கட்சி எனத் தெரியவில்லை) போட்டியிட்ட எம் ஜாபிர் ஏ. காதர் அவர்களும் வெற்றிபெற்றனர். 1972இல் சுதந்திரக் கட்சி தலைமையிலான கட்சிகளினால் தயாரித்த அரசியல் சாசனத்தை 1977இல் தன்னாதிக்க முறையில் ஜனாதிபதி ஆட்சிக்கு மாற்றி அமைத்து ஏறக்குறைய 17 ஆண்டுகள் சொகுசான ஆட்சியைக் கையாண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1994இன் பின் ஜனாதிபதி ஆசனம் கைக்கெட்டவில்லை. 1994இலிருந்த 2010 வரையில்லாமல் 2016வரை ஜனாதிபதியாயிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தைவிட(17) அதிக காலம்(26) கைப்பற்றிய பெருமை மக்கள் ஆணைபெற்ற தற்போதைய அரசுக்கிருக்கிறது. இந்த சமயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி முறையை ஏற்படுத்தப் போவதாக இப்போது தெரிவித்தாலும் ஆட்சியில் ஏறிய பின் என்ன செய்வார்களோ அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு 3இல் 2 பங்கு முதலில் பெற வேண்டும். கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் பொது சன மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான வித்தியாசம் அதிகமானதாக இல்லை. எனவே தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமூலம் 3இல் 2பங்கு பெறத் தக்கதான சாத்தியமில்லை. இரண்டு அணிகளுக்குள்ளும் கிடைத்த வாக்குகள் இந்தத் தேர்தலில் பிளவுபடப் போகிறது. வடக்கு - கிழக்கிலும் மலையகத்திலும் இது தமிழ் முஸ்லிம் கட்சிகளிடமும் ஏனைய இடங்களில் சில பெரும்பான்மைக் கட்சிகளிடமும் பிரிகின்ற வாக்குகளை கணக்குப் பார்த்தால் அரசு சொல்வதைப் போல 3இல் 2 பங்கு பெறுவது என்பது வெகு சுலபமானதல்ல. அத்துடன் இம்முறை தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல் தனித்துப் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சிங்களவர்களுக்குள்ளும் - ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறித்து பிரச்சனைகள் அதிகரித்திருப்பதும் - அவர்களது கலவரங்களை அடக்க கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்கள், கைதுகள் இடம்பெறுவதை நோக்கும்போது எல்லாமே கேள்விக்குறிதான்.

நிலைமைகள் மேலும் இறுகும் பட்சத்தில் முன்னர் ஏற்பட்டதுபோல சிறுபான்மைக் கட்சிகளின் உதவியை நாட வேண்டிய இக்கட்டான நிலை வரலாம். எல்லாவற்றுக்கும் விடை இன்னும் 3 வாரங்களில் கிடைத்துவிடும்தானே!

யாழ் மாநகர சபை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

கடந்த 22.2.2010இல் சுற்றுலா வரும் பெரும்பான்மையினப் பயணிகளால் யாழ் பொது நூலகத்தின் அமைதி பாதிப்பு – வாசகர்கள் படிப்பதில் சிரமம் - நூலகர் நெஞ்சம் குமுறுகிறார்! என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதினேன்.

1998 முதல் 2003வரை தமிழர் விடுதலைக் கூட்டணி(9) - புளொட்(6) -ஈபிடிபி(6) - ஈபிஆர்எல்எப்(2) ஆகிய நான்கு கட்சிகளும் மாநகரத்தை மிகவும் கெடுபிடிகளுள்ள நிலையில் ஏதோ நிலமைக்குத் தகுந்தபடி பராமரித்து வந்தோம்.

இன்று மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(13), தமிழரசுக் கட்சி(8), சுயேட்சை(1), தமிழர் விடுதலைக் கூட்டணி(1) என இயங்குகிறது.

அன்றைய காலகட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் மீதும், யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தின் அருகிலிருந்த மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல், டீசல் வியாபாரிகளை வேறு இடங்களுக்கு அப்புறப் படுத்தி வீதியை நிர்வகிக்க நாம் போதிய பெரும்பான்மைப் பலமின்றி ஏனைய கட்சிகளின் ஆதரவோடு - பலத்த விமர்சனங்களுடன் செயற்பட்டோம். நாம் அன்று விடுதலைப் புலிகளுடைய பலத்த தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த நிர்வாகத்தை நடத்தி வந்தமை யாவரும் அறிந்ததே. அன்றைய பொழுது மிகவும் அவலநிலையிலிருந்தது. மாநகரத்துக்கு அறவிடும் வரியைக்கூட நாட்டு நிலைகருதி அறவிடுவதிலும் தளர்வுநிலை காட்டப்பட்டது. தமிழ் வியாபாரிகளை நாம் நிர்வாக ஒழுங்குக்காக தனியாக ஒதுக்கி நடவடிக்கை எடுத்தமையை - தற்போதைய நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இன்று முன்னரைப் போல ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லை. யாரும் வரலாம் போகலாம். அழிந்து போயிருக்கும் மாநகர சபையை மீள நிர்மாணிக்க இப்போது ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கொழும்பில் மாநகர சபை வரிகள் அறவிடுவதுபோல - யாழ் மாநகரத்துள் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் - வியாபாரிகளிடம் வரி அறவிடவும், நல்லூர் ஆலய சுற்று வட்டாரத்தை துப்பரவாக வைத்திருக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


யாழ்ப்பாணத்திற்கு(மாநகர சபை எல்லைக்கு) வெளியிலிருந்து ஒருவர் தனது பொருட்களை நடைபாதையில் விற்க ஒரு காலத்தில் பெரிய சட்டம் பேசிய நாம் எதற்காக இன்று தென்னிலங்கையிலிருந்து வருபவருக்கு எதுவும் செய்ய முடியாதுள்ளது. நிர்வாகம் அரசகட்சிப் பெரும்பான்மை என்பதாலா என்ற ஒரு வினா எழுகிறது.


பண்ணையில் மீன்சந்தை - றீகல் தியேட்டருக்குப் போகும் ஒழுங்கையில் நடைபாதை வியாபாரிகளுக்கு கடை அமைத்துக் கொடுத்ததுபோல - திறந்த வெளியரங்குக்கு அருகில் அல்லது பண்ணை தொலைத் தொடர்பு நிலையத்திற்கு முன்பாக இருக்கும் வெளியான பகுதிகளில் அவர்கள் தமது விற்பனையை நடத்த ஏதேனும் ஒழுங்குகளைச் செய்து குறுகிய யாழ்ப்பாண நகர வீதிகளில் இன்னும் மக்கள் அல்லது வாகன நெருக்கத்தை அதிகரிக்காது குறைக்க முறையான ஒரு ஒழுங்கைச் செய்வது அவசியமென அங்கு நடைபெறும் நிகழ்வுகளிலிருந்த அறிந்து கொண்டு இந்தக் கருத்தை முன்வைக்கின்றேன்.

இராணுவக் கெடுபிடிகள் - ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த ஒரு கால கட்டத்தில்தான் வீதிப் போக்குவரத்து பற்றிக் கலந்துரையாட ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் அன்றைய முதல்வர் பொன். சிவபாலன் மற்றும் மாநகர ஊழியர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கொல்லப்பட்டதையும் நினைவுபடுத்தி இன்று இப்படியானதொரு ஏற்பாடு கட்டாய தேவை என்பதையும் உரியவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

எங்கிருந்தாலும் நான் யாழ்ப்பாண நகரின்மீது ஒரு தனியான அக்கறையோடுதான் இருக்கிறேன் என்பதையும் சொல்லி இதை முடிக்கிறேன்.

என்றும் யாழ் நகரின்மீது அக்கறையுள்ள
தங்க. முகுந்தன் (முன்னாள் மாநகர சபை உறுப்பினன் - TULF)