அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, April 19, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 14)

இன்றைய இந்தப் பகுதியுடன் நான் சேகரித்து வைத்திருக்கும் ஆவணங்களுடன் எனக்குத் தெரிந்த அத்தனையையும் பதிவிட்டு இக்கட்டுரையைப் பூர்த்தி செய்ய விரும்புகிறேன்! நான் பல தடவைகள் கேட்டதற்கு அமைவாக யாராவது புதிய தகவல்களைத் தந்தால் இதனைத் தொடர முடியும் இல்லாவிட்டால் இவற்றை வைத்துத் தான் என் ஆவணத்தைத் தயாரிகக் வேண்டும்!

பொறுப்பு வாய்ந்த ஒரு சில அரச அதிகாரிகள் (உண்மைகள் மறைக்கப்பட்டது ஒருபுறம் - வரலாற்றை மறந்தவர்கள்) தாம் பதவியிலுள்ளபொழுது நடைபெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் பேசாமல் இருந்துவிட்டு தமது வேலை முடிவடைந்து ஓய்வூதியம் பெற்ற பின்னர் தவறெனச் சுட்டிக் காட்டுவது எந்தவகையில் நியாயம்? அரசியல்வாதிகளுக்கும், அரச ஊழியர்களுக்குமிடையில் நிகழும் ஒரு சாதாரண பிரச்சினை இதுவாக இருக்கிறது - சட்டத்தில் இதற்கான திருத்தம் அவசியம்!

எந்தவிதமான படிப்பறிவுமற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டாலும் பரவாயில்லை - அமைச்சர்களாகி தமது இஷ்டத்திற்கு செயலாளர்களையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் தமக்கு விரும்பியபடி ஏற்பாடு செய்வது ஒருபோதும் நியாயமாகாது!இந்த விடயத்தில் பல சம்பவங்களை என்னால் உதாரணம் காட்டமுடியும்! யாழ்ப்பாண மாநகர சபையில் ஏறக்குறைய ஆணையாளரிடமிருந்த 15 வருட காலப்பகுதியின் பின் 1998இல் பொறுப்பேற்ற முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் அவர்கள் பல பாரிய முரண்பாடுகளுக்கிடையில் சபையை நடத்தியது! இதில் 15 வருட காலம் ஆணையாளர் தமது விருப்பிற்கு செய்பட்டாரோ அல்லது விடுதலைப் புலிகளின் நெருக்குவாரத்தினுள் இருந்தாரோ அதுபற்றி எதுவித தகவலை இன்றுவரை சொல்லவுமில்லை. ஆனால் ஜனநாயக முறைப்படி ஒரு தேர்தல் மூலம் தெரிவாகியவர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் ஏராளமுண்டு. ஏன் இன்றும்கூட முதலமைச்சருக்கும் பிரதம செயலாளர் முரண்பாடாயிருந்தாலும்சரி, வட மாகாண சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்குமிடையிலான முரண்பாடாயிருந்தாலும்சரி தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் பல அரச அதிகாரிகளுக்கு இடையிலும், அரசியல்வாதிகளுக்கிடையிலும் உண்டு!

04.06.1984இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் பிற்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பகுதி திறக்கப்பட்டபொழுது முன்னைநாள் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கேசந்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அமிர்தலிங்கம் அவர்களைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை அன்றைய தினபதிப் பத்திரிகையின் நிருபர் அழகாக செய்தியாகத் தொகுத்து வழங்கியிருந்தார்! நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்களையும் எந்த முறையில் நிகழ்வு நடைபெற்றது என்பதையும் விபரமாக ஒரே செய்தியில் குறிப்பிட்டிருப்பதுதான் அழகும்கூட!

அந்நிகழ்வில் பங்குகொண்டவர்களில் சிலர் தற்போது அந்த வரலாற்று நிகழ்வின் செய்திகளை மறைப்பதும் தவிர்ப்பதும்தான் - எனக்கு, (நான் அவ்விபரங்களை அறிந்திருப்பதால்) வேதனை தருகிறது! நடைபெறாத விடயங்கள் நடந்ததாக நினைவுக்கல் பொருத்தப்பட்ட பொழுது(2010இல்) நான் சுவிற்சர்லாந்திலிருந்து அதைச் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தேன். எல்லோருமே மௌனம் காத்ததுடன் மட்டுமல்ல தற்போது சபையில் உறுப்பினராக இருக்கும் சிலரின் திட்டமிட்ட செயலே இதுவென எனக்குத் தகவல் கிடைத்தது! பத்திரிகையில் அறிக்கைவிட்ட முன்னாள் ஆணையாளர்கூட 2009இன் பின்தான் அமிரதலிங்கம் அவர்களின் கல்லைப்பற்றியே கதைத்திருக்கிறார். அதற்கு முன் புலிகளுக்குப் பயந்து மௌனமாயிருந்தார்! நாங்கள் மாநகர சபையில் 2003இல் திறப்பு விழா செய்ய இருந்தபோது தேடிய அமிரின் நினைவுக் கல் - திறப்புவிழாப் புகைப்படம் எதுவுமே அன்று எம்கைகளுக்கு கிட்டவில்லை!அவரது 26.08.2009ஆந்திகதி வலம்பரி முழுப்பக்கக்கட்டுரையில் அந்தக் கல் பொருத்தப்பட வேண்டுமென பிரசுரமாகியிருக்கிறது. இதற்கு முதல் அந்தப் படம் எந்த வித ஆவணங்களிலும் வெளியாகியிருக்கவில்லை. புதிய திறப்பு விழா நினைவுக் கல் பொருத்தப்பட்டபோது அந்தக் கல்லும் புதிதாகச் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கிறது!
சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படத்தில் முன்னைய நூலகர் சுலோச்சனா ரகுநாதன் கருத்துத் தெரிவிக்கையில் 9.5.1985 ரொக்கட் லோஞ்சருடன் வந்த இளைஞரொருவரால் கோட்டை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்ட பொழுது தான் ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு நூலகத்தினுள் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டுமெனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆணையாளர் இராணுவ கொமாண்டருடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவித்த சமயத்தில் உடனடியாக அனைவரையும் அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி கூறியதைத் தொடர்ந்து நூலகத்தினுள் இருந்த ஏறக்குறைய 80பேர் வரையில் வெளியேறிய பொழுது கிட்டத்தட்ட மாலை 4.30 மணியாக இருக்கும் எனவும் பின்னர் அன்றிரவு சுமார் 9.30 மணியளவில் பாரிய குண்டுச்சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கிறார்.

ஆரம்பத்தில் இன்றே இதனை முடிக்கலாம் எனக் கருதியிருந்தாலும் ஒரு சிலருடைய பதிவிடும் யுக்தியை எண்ணும்போது எமது இந்தத் தமிழினம் எப்போது உருப்படும் என்ற சிந்தனை தோன்றுகிறது! ஆவணப்படுத்தலில் பின்வந்தோர் தமது ஆவணங்களில் எப்படி சில தகவல்களை மறைக்க சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பதை - யாரிடம் சொல்லி முறையிடலாம் என எண்ணத் தோன்றுகிறது! ஒரு தலைப்பட்சமாக எழுதப்படும் ஆவணப்படுத்தல் எங்கே எமது வரலாற்றைக் கொண்டுபோய் முடிக்கப் போகிறதோ தெரியவில்லை என்பதை மட்டும் நான் உறுதியாக கூறியபடி - ஏராளமான குழப்ப மனநிலையால் பின்னர் இன்னொரு தொடருடன் முடிக்கலாம் என இதை இத்தோடு முடிக்கிறேன்!

No comments: