அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, April 17, 2012

அப்பர் குருபூசைத்தினம் இன்று - சித்திரைச்சதயம்

தனி ஒருவராக நின்று சமண சமய அரசுடன் எதிர்த்த திருநாவுக்கரசு நாயனாரின் சரித்திரத்தை இன்றைய அவரது குருபூசைத் தினத்தில் எமது பிரச்சனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் போல இருநதது.

ஏனெனில் எமது பல பிரச்சனைகள் போல அவரும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டவர். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் எனத் துணிந்து நின்று போராடி இறைவனருளால் வெற்றியும் கண்டவர்.


எங்களுடைய போராட்டம் பற்றி கருத்துத் தெரிவிக்க தற்போது விரும்பாத நிலையில் - தற்போது சில காலமாக நடைபெற்ற - நடைபெறும் சில நிகழ்வுகளை மாத்திரம் குறிப்பிட்டுச் சொல்வது நியாயமாக இருக்கும்.
1. வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கௌதம புத்தபெருமானுடைய சிலைகள் பற்றியது.
2. யுத்தம் நடைபெற்று 3 வருடமாகியும் - இன்றும் முகாம்களில் அல்லது தற்காலிக இடங்களில் மக்கள் அல்லல்படும் அதே சமயத்தில் சில வேண்டத்தகாத நிகழ்வுகள்.
3. யாழ். பொது நூலகத்தில் இயங்கும் கணினிப்பிரிவில் மாற்றம் செய்ய முற்படும் ஆளுனரின் நடவடிக்கை.
4. வேகமாகச் சென்று தம் உயிரை மாய்த்துக் கொள்ளும் இளைஞர்கள்.
5. படித்த இரு ஆங்கில சகோதர ஆசிரியைகளின் தற்கொலை.
6. இரவு நேரங்களில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள்.

Friday, February 24, 2012

மனதை உருக்கிய வலம்புரி பத்திரிகையின் கிளிநொச்சி மகாதேவா ஆஷ்ரமம் பற்றிய கட்டுரை

கடந்த இரு நாட்கள்(22, 23 - 02 -2012 18ம் பக்கங்களில் வெளியான) வலம்புரி பத்திரிகையில் வெளியான இக்கட்டுரைகளை அப்படியே பதிவிடுகிறேன்.







நன்றி - வலம்புரி

Monday, January 2, 2012

வெள்ளிமலை விவேகானந்த ஆச்சிரமத்தில் மகா கும்பாபிஷேகம்








Thursday, August 4, 2011

மறக்க முடியாத நல்லூர்! திருவிழா இன்று ஆரம்பம்!


என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்களுள் நல்லூர்த் திருவிழா ஒரு தனியான இடத்தை வகிக்கும்!
சிறு வயதில் எமது கிராமத்துப் பாடசாலை மூலம் அப்போதைய யாழ்ப்பாணப் பட்டணத்துக்கு சுற்றுலா போனது இன்றும் நல்ல ஞாபகம்!
வரும்வழியில் கல்லுண்டாயிலுள்ள உப்பளத்திற்கும் போய் உப்பு விளைவதையும் கண்டுவந்தோம்!
இது நடந்தது 1973 – 1974 காலப்பகுதிகளில் - இற்றைக்கு சுமார் 37 வருடங்களுக்கு முன்னர்.

நல்லூர்க் கோவிலுக்குப் போகுமுன்பு யாழ்ப்பாணப் பட்டணத்திலுள்ள – பழைய சந்தை – வள்ளுவர் - ஓளவையார் - பாரதியார் சிலைகள் – யாழ்ப்பாணக் கோட்டை – நூல்நிலையம் - இவற்றைப் பார்த்த பின்பு நல்லூருக்கப் போனோம்!
அப்போது கோவில் கேணி – தண்டாயுதபாணி கோவில் தனியாக பிரதான வீதிக்கு அந்தப் பக்கம் இருந்தது! அருகில் நாவலர் சிலை மண்டபம்!
இதற்கு முன்பாக கோவில்! கோவிலுக்கு அருகில் வெளியிலேயே ஒரு கூட்டில் அழகான மயிலும் இருந்து அகவியதை இப்போதும் மறக்க முடியாது!


இதன் பின்னர் 1977ல் தேரின்போது பஜனை பாடியதும் ஞாபகம்!

நல்லை நகர் வீற்றிருக்கும் கந்தா நின் சரணம்!
தொல்லைகளைத் தீர்த்தருள்வாய் கந்தா உன் சரணம்!
இல்லை உனக்கீடு என்றோம் கந்தா உன் சரணம்!
இடகரற்ற குரல் கொடுத்தோம் கந்தா உன்சரணம்!

பார்வதியாள் பெற்றெடுத்த பாலா உன் சரணம்!
பார்த்தருள்வாய் பைந்தமிழைக் காத்தருள்வாய் சரணம்!

இதற்குப் பின் 1984 – 1987 காலப் பகுதிகளில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் அங்கத்தவராயிருந்த சமயம் - யாழ் மாவட்ட இந்து இளைஞர் பேரவை - நல்லை ஆதீனத் தொண்டர் சபை மூலம் நல்லூர் மகோற்சவ காலம் 25 நாட்களும் ஆலயத்தின் சுற்றாடலில் நாம் எம்மாலியன்ற தொண்டையும் பணிகளையும் மேற்கொண்டோம்!

ஒரு தடவை சரியாக எந்த ஆண்டு என்று ஞாபகமில்லை 1985 அல்லது 1986 ஆக இருக்க வேண்டும் தீர்த்த நாளன்று அதிகாலை 4மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து கோவிலுக்கு வந்தால் கோவிலின் பிரதான வாசற்கதவு பூட்டப்பட்டிருந்தது! பக்தர்கள் கோவிலின் வாசற்கதவை முண்டியடித்தபடி இருந்தனர்! உள்ளே பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இயக்க இளைஞர்கள் சிலர் கோவில் கூரையின் மேல் எதையோ தேடுவதுபோல இருந்தது! நாங்கள் ஒரு 5,6 தொண்டர்கள் என்னவென அறிவதற்கு முயற்சி எடுத்தோம். கோவிலினுள் யாரோ குண்டு வைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபட்டது! நானும் ஓரிரு தொண்டர்களும் வாயிற்கதவுக்கு போய் பக்தர்களை அமைதிப்படுத்துவது என முடிவு செய்தோம். மிகவும் சிரமப்பட்டு நெரிசலுக்கு மத்தியில் வாயிற் கதவையடைந்தோம். இரும்புக் கதவை தள்ளியபடி கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது! நாங்கள் அவர்களுக்கும் கதவுக்கும் இடையில் சென்று கூட்டத்தை சற்றுப் பின்னகர்த்தி இருக்கும்படி சொன்னோம்! பக்தர்களில் பலர் எமது கருத்தை ஏற்று அமர்ந்திருந்தனர். ஒரு சில வயதான ஆண்கள் இருத்தி என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள் என்று கோபமாகக் கேட்டனர். நீங்கள் நின்று என்ன சாதிக்கிறீர்கள் என்று நான் பதிலுக்குக் கேட்டேன். முருகன் மீது உண்மையான பக்தி வைத்து விரதமிருந்தால் எப்படியும் தீர்த்தம் நாம் பார்க்கலாம்! என்று சொல்லி அடக்க முடியாத கோபத்தால் எனக்கு அழுகையும் வந்து விட்டது. ஒரு சில வயதானவர்கள் தம்பி இவர்களைத் திருத்த முடியாது நீர் ஏன் இவர்களுடன் சண்டையிடுகிறாய் என எனக்குப் பரிந்து பேசினார்கள்! இப்படி நாமும் அவர்களும் சண்டைபிடித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே கோவிலினுள் ஒன்றும் இல்லை என கோவிற்கதவையும் திறந்து விட்டார்கள்! தீர்த்தம் மிகச் சிறப்பாக நடைபெற்றது!

1987இல் திருவிழா முடிந்த பின்னர் ஒக்டோபரில் 10.10.1987இல் புலிகளுக்கும் - இந்திய இராணுவத்திற்குமிடையில் போர் தொடங்கிய நாள் ஒரு சனிக்கிழமை!
புரட்டாதிச் சனிக் கிழமைகளில் வண்ணை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலில் சனீஸ்வரருக்கு எள்ளெண்ணெய்ச் சட்டி எரிப்பவர்களுக்கு வசதியாக நாம் எரிந்த சட்டிகளை எடுத்து அப்புறப்படுத்தவது எமது பணி! இந்த நேரத்தில்தான் சண்டை தொடங்கியது. மதியம் ஒரு மணியிருக்கும். பலத்த குண்டுச் சத்தங்கள். பக்தர்கள் வருகை குறையவே ஆலயத்தையும் பூட்ட ஆயத்தமாக நாம் எமது வீடுகளுக்குச் சென்றோம். அப்போது நான்
கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டில் தங்கியிருந்தேன்! கோவிலிலிருந்து திரும்பிய பின் சிலமணி நேரம் கழித்து எனது நண்பனொருவன் அவசரமாக வந்து "வாடா! நிறையச் சனம் காயப்பட்டுக் கிடக்காம்! உதவ யாருமில்லையாம்! நாங்கள் போவோம்" என்று சொல்ல நானும் அவனுடைய சைக்கிளில் ஏறிப் போனேன்! ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்பாக நாம் செல்லும்போது பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் விழுந்து ஒரு குண்டு வெடித்தது! ஒரு பெடியன் சைக்கிளுடன் விழுவதைப் பார்த்தோம்! அவனுக்கு உதவ நாம் விரைந்த போது மீண்டும் ஒரு குண்டு அதே இடத்தில்!

மீதி நாளை!

நல்லூர்க் கோவிலில் இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய செய்தியும் அடங்கும்!

Wednesday, August 3, 2011

மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை இன்று திறந்துவைக்கப்பட்டது!

யாழ் மாநகர சபையால் மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை இன்று 03.08.2011 புதன்கிழமை காலை 7.15மணியளவில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது!
மங்கள வாத்திய சகிதம் அழைத்துவரப்பட்ட விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி வைபவத்தை ஆரம்பித்து வைத்தனர்.யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி வரவேற்பு நடனத்தையும் வழங்கினர். உருவச் சிலையைத் திரைநீக்கம் செய்து மலர்மாலை சாற்றிய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பின்னர் சிலையின் கீழிருந்த நினைவுப் பெயர் நடுகல்லையும் திறந்து வைத்தார்.
நிகழ்வுக்குத் தலைமைதாங்கிய மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் உரையைத் தொடர்ந்து உயிரோவியமாக குறுகிய காலத்தில் உருவச்சிலையை மிகவும் அற்புதமாக வடித்த கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டனர். திரு.கலிகைப் பெருமாள் புருசோத்தமன்(ஸ்தபதி), திரு.கே.முரளிதரன்(சிற்பி), திரு.டி.கஜேந்திரன்(சிற்பி), திரு.ஜீ.முத்துக்கிருஸ்ணன்(சிற்பி), திரு.கே.கோபி(சிற்பி), திரு.பாஸ்கரன் ஆச்சாரியார் (ஸ்தபதி), திரு. பா.கஜேந்திரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் நினைவுரையாற்றினார்.

பிரதம விருந்தினர் உரையில் அமைச்சர் - இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நாளாகும். யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை மட்டுமன்றி மந்திரிமனை, நுழைவாயில், ஜமுனாரி தேக்கம் என்பனவும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விரைவில் புனரமைக்கப்படுமெனவும், தலைவர்கள் சமயப் பெரியார்கள் சமூகத்தின் முன்னோடிகள் ஆகியோரின் சிலைகளும் யாழ்.மாநகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நிறுவப்படுமெனவும் மந்திரி மனையில் கலைக்கூடமொன்றை நிறுவி அதனூடாக கலை நுணுக்கங்களை வெளிக்கொணரும் கலைச்சேவை செய்யப்படவுள்ளதுடன் பண்பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் சமயத் தலைவர்களுட்பட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் பல்கலைக்கழகத் துணை வேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம், ஈபிடிபியின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ முருகேசு சந்திரகுமார், கௌரவ. சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), மாநகரசபை ஆணையாளர் திரு.மு.செ.சரவணபவ ஆகியோருட்பட மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், யாழ். செயலக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முக்கிய குறிப்பு -

wait - not finish

Friday, July 29, 2011

இன்று ஜூலை 29 - கலாநிதி நீலன் நினைவு - இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான நாள்!

கடந்த கால ஈழத் தமிழர் வரலாற்றில் இன்றைய நாள் மிக முக்கியமான ஒரு நாளாகும்!

1987 ஜூலை 29இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!

அன்றைய இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி அவர்களும் இலங்கையின் ஜனாதிபதி ஜேஆர்.ஜெயவர்த்தன அவர்களும் ஒப்பந்தத்தில் கைச்சாடும் காட்சி!


ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின் விமான நிலையத்தில் நடைபெற்ற கடற்படை வீரரின் அணிவகுப்பில் தாக்கப்படும் காட்சி!


1999 ஜூலை 29 கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் படுகொலை




1983 இனக்கலவரம் பற்றி புதுடில்லியில் பத்திரிகையாளர் மாநாட்டில் கலாநிதி நீலன் அமரர் அமிர் மற்றும் வி. பஞ்சாட்சரம்.

Tuesday, July 26, 2011

உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - ஒரு அலசல்!

யாழ்ப்பாண மாவட்டம்

வல்வெட்டித்துறை நகர சபை ..... 230
பருத்தித்துறை நகர சபை ..... 270
சாவகச்சேரி நகர சபை ..... 347
காரைநகர் பிரதேச சபை ..... 333
ஊர்காவற்றுறை பிரதேச சபை ..... 340
நெடுந்தீவு பிரதேச சபை ..... 102
வேலணை பிரதேச சபை ..... 714
வலிகாமம் மேற்குப் பிரதேச சபை ..... 2,058
வலிகாமம் வடக்குப் பிரதேச சபை ..... 1,643
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை .....1,771

வலிகாமம் தெற்குப் பிரதேச சபை ..... 1,674
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ..... 2,302

வடமாராட்சி தென்மேற்கு பிரதேச சபை ..... 1,386
பருத்தித்துறை பிரதேச சபை ..... 1,031
சாவகச்சேரி பிரதேச சபை ..... 1,494

நல்லூர் பிரதேச சபை ..... 707

முல்லைத்தீவு மாவட்டம்

துணுக்காய் பிரதேச சபை ..... 335

திருகோணமலை மாவட்டம்

சேருவில பிரதேச சபை ..... 325
கந்தளாய் பிரதேச சபை ..... 1,198
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை ..... 901
குச்சவெளி பிரதேச சபை ..... 543

அம்பாறை மாவட்டம்

காரைதீவு பிரதேச சபை ..... 199
திருக்கோவில் பிரதேச சபை ..... 355

கிளிநொச்சி மாவட்டம்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ..... 339
கரைச்சி பிரதேச சபை ..... 3,190
பூநகரி பிரதேச சபை ..... 799


வடக்கு-கிழக்குக்கு வெளியே குறிப்பாக

கொழும்பு மாவட்டத்தில்

கடுவெல மாநகர சபை - .... 4,264
ஹோமாகம பிரதேச சபை - .... 5,449

கம்பஹா மாவட்டத்தில் அத்தனகலை பிரதேச சபை - .... 3,663

கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பிரதேச சபை - .... 2,158

கேகாலை மாவட்டத்தில் வரகாபொல பிரதேச சபை - .... 2,859

குருணாகல் மாவட்டத்தில்

குளியாபிட்டி பிரதேச சபை - .... 2,195
பொல்கஹாவெல பிரதேச சபை - .... 2,019

புத்தளம் மாவட்டத்தில் வென்னப்புவ பிரதேச சபை - .... 2,305

இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகேபொல பிரதேச சபை - .... 2,198

போன்ற பகுதிகளிலும் அதிகப்படியான(2,000க்கும் மேற்பட்ட) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன!