அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, October 6, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 5

மனிதரெல்லாம் ஒரு கடவுள் மக்களென்று
காந்தியைப்போல் மனமார மதிக்க வேண்டும்
புனிதமுள்ள பரம்பொருளின் பெயரைச் சொல்லி
போர்மூட்டும் மதவெறியைப் போக்கவென்றே
அனுதினமும் தவங்கிடந்த காந்தி அண்ணல்
அனுஷ்டித்த சமரசத்தில் ஆர்வம் வேண்டும்
தனதுமதம் தனது இனமென்றே யெண்ணும்
தருக்குகளைக் காந்தியைப்போல் தவிர்க்கவேண்டும்.

சிறுதுளியும் வீண்போகாச் செலவு செய்யும்
காந்தியைப்போற் சிக்கனங்கள் பழக வேண்டும்
பிறரொருவர் பாடுபட்டுத் தான் சுகிக்கும்
பேதைமையைக் காந்தியைப்போல் பிரிக்கவேண்டும்
நெறிதவறி வருகிறது சொர்க்க மேனும்
நீக்கிவிடக் காந்தியைப்போல் நேர்மை வேண்டும்
குறிதவறிப் போகாமல் ஒழுக்கம் காத்து
குணநலத்தில் காந்தியைப்போல் கொள்கை வேண்டும்.

No comments: