அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, June 3, 2013

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 3)

நூலகத்துக்கான அடிக்கல்

29.03.1954ல் நூலகத்துக்கான அடிக்கல் ஐந்து இடங்களில் பிரபல்யம் பெற்ற ஐவரால் நாட்டப்பட்டது.

“நூல்நிலையச் சங்கத் தலைவர் மாநகரசபை முதல்வர் சாம் சபாபதி அவர்கள், வணக்கத்துக்குரிய தந்தை லோங் அவர்கள், மாட்சிமை தங்கிய பிரித்தானிய தானிகர் சேர் செசில் சையெஸ் அவர்கள், மாட்சிமை தங்கிய அமெரிக்கத் தூதுவர் H E பிலிப் குறோவ் அவர்கள், மாட்சிமை தங்கிய இந்தியத் தூதுவரின் முதற் செயலாளர் ஸ்ரீ சித்தார்த்த சாரி அவர்கள் ஆகிய ஐவரும் அடிக்கற்களை திரைநீக்கம் செய்து வைத்தார்கள்” என்று மூதறிஞர் க.சி. குலரத்தினம் அவர்கள் தனது ஆவண நூலில்87ஆம் பக்கத்தின் இறுதிப்பந்தியில் குறிப்பிடுகின்றார்.

முன்கூட்டியே அதாவது கல் நாட்டப்படவிருக்கும் 29ம் திகதிக்கு நான்கு நாட்களுக்கு முன் 25.3.1954 தினகரன் பத்திரிகை இந்நிகழ்வைப் பின்வருமாறு விபரிக்கிறது.

“…இந்த அத்திவாரக்கல் நாட்டும் வைபவத்திலேயே ஒரு புதுமையான அம்சம் உண்டு. சாதாரணமாக இத்தகைய வைபவங்களில் ஒரு தனிப்பட்ட பிரமுகரால் ஒரு அத்திவாரக்கல் நாட்டப்படும். ஆனால் இந்த வைபவத்தில் ஐந்து பிரமுகர்கள் ஐந்து அத்திவாரக் கற்களை நாட்டுவார்கள்.

மத்திய நூல்நிலையம் யாழ்ப்பாணமெங்குமுள்ள அநேக கிளை நிலையங்களுக்கும் தாய் நூல்நிலையமாகப் பயன்படும். ஆதலால் இத்தகைய ஒரு முக்கிய ஸ்தாபனம் அமைந்திருக்கக்கூடிய கட்டடத்திற்குரிய அத்திவாரக்கற்களை நாட்டும் முக்கியமான வைபவத்தை நடத்த ஐந்து கனவான்களைத் தெரிவு செய்வதில் ஒரு திட்டமான முறை கையாளப்பட்டுண்டு.

யாழ்ப்பாண மக்களின் இப்போதைய அறிவு விருத்திக்கும் பொருளாதார நிலைமைக்கும் கீழ்க்கண்ட அம்சங்களே காரணமாகுமெனக் கூறலாம்.

1. இந்தியாவுடனுள்ள நெருங்கிய கலாச்சாரத் தொடர்புகள்.

2. கடந்த இரு நூற்றாண்டுகளின்போது பிரிட்டிஷாருடன் ஏற்பட்ட தொடர்புகள்.

3. அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் வந்த பணமும் மிஷனரிமார்களும்.

4. யாழ்ப்பாணத்தவர்களின் உரம் வாய்ந்த பகுத்தறிவும் செயற்திறன் பொருந்திய மனப்பான்மையும் பழஞ் சம்பிரதாயங்களை விடாது காக்கும் அடிப்படை இயல்பும்.

ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படும் இந்தப் புதிய நூல்நிலையக் கட்டிடத்துக்குப் பிரிட்டிஷ் ஹைகமிஷனர் சர். செசில் சயர்ஸ், இந்திய ஹைகமிஷனர் திரு.ஸி.ஸி. தேசாய், அமெரிக்க ஸ்தானிகர் திரு. பிலிப் குறோ, வடபகுதியைச் சேர்ந்த பிரபல கல்விமானும் மிஷனரியும் யாழ்ப்பாண மத்திய நூல்நிலையச் சங்கத்தின் உபதலைவருமான அதிவந். பிதா. ரி.எம்.எப். லோங், ஓ.எம்.ஐ. ஆகிய பிரமுகர்கள் நான்கு மூலைக் கற்களை இடும்போது இந்த அம்சங்கள் யாவும் இடம்பெறும். ……இவ்வைபவத்தில் யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியாக யாழ்ப்பாண மேயர் திரு. சாம் ஏ சபாபதி கலந்து கொள்வார்….யாழ்ப்பாண நூல்நிலையச் சங்கத்தின் தலைவராகவுமிருக்கும் திரு. சபாபதி புதிய நூல் நிலையத்தின் வாயிலை அலங்கரிக்கக்கூடிய ஒரு அத்திவாரக் கல்லை நாட்டுவார்.”

இந்நிகழ்வை இவ்வளவு விலாவாரியாகக் குறிப்பிடுவதற்கு 2 முக்கிய காரணங்கள் உண்டு.

1. ஒரு பத்திரிகை எப்படி ஒரு வைபவத்தை முன்கூட்டியே அறிவுசார்ந்த நிலையில் சிந்தித்து விபரிக்கின்றது. அதுவும் ஏரிக்கரை அரசாங்கத்தின் பத்திரிகை.

2. எமது கலாசார, பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்கு நாம் கொடுத்த முக்கியத்துவத்தையும் இங்கு குறிப்பிடுவது இன்றைய நிலைக்குப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி எம்மையும் எமது கலாச்சாரத்தையும் கண்டித்து ஊடகங்களில் இதுவா தமிழர்களின் கலாசாரம் என்று வினவியிருந்தார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியத்தூதுவருக்குப் பதிலாக தூதரக முதற் காரியதரிசி அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பங்கேற்றதுடன் அன்றைய தினம் இந்திய அரசின் நன்கொடையாக ரூபா பத்தாயிரத்தையும் அன்பளிப்புச் செய்தார்.

No comments: