அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, June 5, 2013

ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற கோரவிபத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன்!

சுவிற்சர்லாந்தில் நான் தங்கியிருந்த காலத்தில் அடிக்கடி சூரிச் முருகன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். ஏனெனில் அங்கு சென்று தமிழ்க் கடவுளான செந்தமிழ்க் குமரனை வழிபட நிறையவும் ஆசை! ஆலயத்திலும் எனக்கு எமது ஊரைப் போல மனம்விட்டுப் பாடவும் பேசவும் தாராளமாக சுதந்திரம் தந்திருந்தனர். அப்போது பழகியவர்கள் எல்லோரும் ஒரு குடும்பத்தைப் போல அன்பைப் பரிமாறிக் கொண்டோம். அப்படிப்பட்டவர்களில் ஒரு குடும்பமே - எமது அன்புக்குரிய திரு. ஜவீன் குடும்பம்.

சனிஞாயிறு விடுமுறை தினங்கள் விசேட நாட்களில் அவர்கள் அனைவருமே கோவிலுக்கு ஆஜராவார்கள்!எல்லாருடனும் அன்பாகப் பேசுவார்கள். பழகுவார்கள். ஆலயத் திருவிழா என்றால் கோவில் முன்பாக ஒரு கடையில் நின்று தம்மையே அர்ப்பணித்து ஆலயத்தை முன்னேற்றுவதில் அக்கறை காட்டிய பெருந்தகைகள். அவர்கள் மாத்திரமல்ல. அங்கு தம்மை அர்ப்பணித்தே அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் சேவை செய்தனர். அதனால்த்தான் சுவிஸ் முருகன் என்றால் சூரிச் அட்லிஸ்வில் முருகன்தான் முன் தோன்றுவார்!

ஆவணப்படுத்துவது எனக்கு ஒரு பைத்தியமாக இருப்பதால் சுவிசில் இருக்கும்போது ஒரு புகைப்படக் கருவியை வாங்கி - போகும் வழிகளிலும், வரும்வழிகளிலும் கண்ணில் படும் அபூர்வமான காட்சிகளை பதிவிடுவது வழக்கம். "கண்ணில் தெரியும் காட்சியெல்லாம் கமலக்கண்ணா உன்தோற்றம்"

ஒரு தடவை ஒரு பட்டிமன்ற நடுவராக மேடையேறிய பொழுது கூறியது இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது. நாம் சொர்க்கலோகம் என்பதைப் பற்றி கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால் இது உண்மையான சொர்க்கபுரி! கைலைக் காட்சி போல வெண்பனிமூட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த நாடு இதுவென அன்று விளித்துக் கூறினேன்.

அங்கிருந்த ஜவீன் ஜெயந்தி தம்பதியினரின் பிள்ளைகள் ஜனன், ஜனனி இருவருடனும் நான் கோவிலில் மிக அன்பாகப் பழகினேன். அவர்கள் மட்டுமல்ல கோவிலுக்கு வரும் அத்தனை சிறுவர் சிறுமியருடனும் நன்றாகவே பழகினேன். அவர்களைப் பாடும்படி - பேசும்படி ஊக்கமளிப்பேன்.இப்போது நான் பதிவிடுவதன் காரணம் சுவிற்சர்லாந்தில் எடுத்த புகைப்படங்கள் பலவற்றில் இந்தப் பிள்ளைகளின் படங்கள் அடிக்கடி முன்னே வந்துகொண்டிருப்பதாலேயே!

ஒரு கனவுபோல ஒரு மாதம் அவர்கள் இல்லாததை இந்தப் படங்கள் மறுத்துச் சொல்கிறது!உண்மையாகவே அவர்கள் எம் மனங்களில் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்!!!

No comments: