Tuesday, June 4, 2013
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 4)
பிரபலதொழிலதிபர் வி.ஆர்.வடிவேற்கரசன் மறைவு
நூல்நிலையம் எரிக்கப்பட்ட பின்னர் நூலகத்தைக் மீளக்கட்டியெழுப்ப உழைத்தவர்கள் பலரில் மிகமுக்கியமான ஒருவர் நூலகம் எரிக்கப்பட்ட அதே தினத்தில் (கடந்த முதலாந்திகதி) மரணமடைந்ததும் ஒரு வரலாறாகப் பதியப்பட வேண்டியுள்ளது. இந்தப் பதிவுக்காக அவருடன் தொடர்புகொள்ள வேண்டும் என எண்ணயிருந்த சமயத்தில் (02.06.2013)ஞாயிற்றுக்கிழமை தினக்குரலைப் பாரத்ததும் அந்த எண்ணத்தில் இடிவிழுந்ததுபோல் அவரது மரணச் செய்தி முற்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சிறுவயதிலிருந்து அவரது குடும்பத்தவர்களுடன் மிக நெருங்கிப்பழகிய அனுபவங்களை சொல்லவும் - எழுதவும் முடியாது. தமிழரசுக்கட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி என இருகட்சியிலும் அவர்தலையை உள்நுழைக்காது தாங்கியவர். தந்தை செல்வா, தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோருடன் மிக அன்னியோன்னியமாகப்பழகியவர்.
மிகமுக்கியமாக எவருக்கும் தெரியாத - அவரோடு பழகிய பலர் வெளிப்படுத்த முன் நான் நூல் நிலையத்துடன் மிக ஈடுபாட்டுடன் இருப்பதால் அந்தச் செய்தியை நான் சொல்வதுதான் சரியென எனக்குத் தோன்றுகிறது. 1.6.1981ல் நூலகம் எரியூட்டப்பட்ட பின்னர் "யாழ்ப்பாண பொதுசன நூலக புனரமைப்புத் திட்டக் கொழும்புக் குழு" ஏற்படுத்தப்பட்ட வேளையில் அதில் தன்னையும் இணைத்து அளப்பரிய பங்காற்றிய பெருமை அமரத்துவமடைந்த திரு. வி.ஆர். வடிவேற்கரசனுக்கு உண்டு. கொழும்பில் நூலக வாரம் நடத்தியதற்கும் மேலாக தமிழ்நாட்டு அரச நர்த்தகியான செல்வி. சுவர்ணமுகி அவர்களின் குழுவினரை இலங்கைக்கு வரவழைத்து தலைநகர் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நடன நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்த பெருமையும் திரு. வடிவேற்கரசனுக்கு உண்டு. 5.7.87ல் வீரகேசரியில் வெளிவந்த செய்தியை அப்படியே தருவது பொருத்தமானதாக இருக்கும்.
யாழ். நூலக கட்டிட நிதிக்கு தமிழக நர்த்தகி சுவர்ணமுகியின் நடன நிகழ்ச்சி - வடிவேற்கரசன் தகவல்
யாழ். பொது நூலகக் கட்டிட நிதிக்கென நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்குகென தமிழகத்தின் ஆஸ்தான நர்த்தகி சுவர்ணமுகி இம்மாதம் 15ஆம் திகதி இலங்கை வர இருப்பதாக பிரபல வர்த்தகரான திரு. வி. ஆர். வடிவேற்கரசன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது இவருடன் சட்டத்தரணி எஸ். ரவீந்திரனும் கலந்துகோண்டார். கொழும்பில் இயங்கிவரும் யாழ். பொது நூலக புனரமைப்புக் குழு சார்பில் இம்மாநாடு நடைபெற்றது. அப்போது திரு. வி.ஆர். வடிவேற்கரசன் மேலும் குறிப்பிட்டதாவது "எமது குழுவில் என்னுடன் கட்டடக்கலைஞர் திரு. வி.எஸ். துரைராஜா, சட்டத்தரணிகள் எஸ். ரவீந்திரன், கந்தசாமி ஆகியோர் இடம்பெறுகின்றனர். அண்மையில் யாழ். பொதுநூலக வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபாவும் சுமார் 30 ஆயிரம் நூல்களும் சேகரிக்கப்பட்டன. யாழ் நூலகத்தைக் கட்டி முடிப்பதற்கு மொத்தம் 15 கோடி ரூபா தேவைப்படுகிறது. இதற்கென ஜனாதிபதி 9இலட்சம் ரூபா நிதியுதவி தந்துள்ளார். ஜனாதிபதி நிதியிலும் பணம் சேர்ந்து வருகிறது. யாழ். மேயர் திரு. இராஜா விஸ்வநாதன் உலகளாவிய ரீதியில் பணமும் நூல்களும் சேகரித்து வருகிறார். இந்த நிதிக்கென எமக்கு இலவசமாக தமது நாட்டிய நிகழ்ச்சிகளை அளிப்பதற்கு தமிழக ஆஸ்தான நர்த்தகி குமாரி சுவர்ணமுகி நடன நிகழ்ச்சிகளை நடத்தித்தர ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை இங்கு தங்குவார். இவருடன் இவரது தங்கையான புதிய வாரப்புகள் ஒரு தலை ராகம் புகழ் உஷாவும் குழுவினரும் வருகிறார்கள். கொழும்பு பண்டாரநாயக மண்டபத்தில் இம்மாதம் 16ஆம் திகதி மாலை ஆறு மணிக்கும், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 19ஆம்திகதி மாலை ஆறுமணிக்கும் இவரது நடன நிகழ்ச்சிகள் இடம்பெறும். கொழும்பு மாநகர சபை இந்நிகழ்ச்சிக்கு களியாட்ட வரிவிலக்கு அளிக்கிறது. இந்த வசூல்தொகை யாழ். நூலக கட்டிட நிதிக்கு கையளிக்கப்படும்.
வீரகேசரி 22.07.1981ல் யாழ் நூலக நிதிக்காக தமிழக ஈஸ்தான நர்த்தகி சுவர்ணமுகியின் நாட்டிய நிகழ்ச்சி நேற்று முன்தினம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதம மந்திரி திரு. ஆர். பிரேமதாஸவுடன் சுவர்ணமுகி அவரது தங்கை உஷாராணி, தாயார், ஏற்பாட்டாளர் திரு வடிவேற்கரசன் ஆகியோர் காணப்படுகின்றனர் என்றும், யாழ் பொது நூலகக் கட்டிட நிதிக்காக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழக ஆஸ்தான நர்த்தகி சுவர்ணமுகியின் நாட்டிய நிகழ்ச்சியின்போது எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் உரையாற்றுவதையும்,அருகில் யாழ் மேயர் இராசா விசுவநாதன் தம்பதிகளையும், குமாரி சுவர்ணமுகிக்கு திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் பரிசில் வழங்குவதையும் படங்களில் காணலாம் என 2 படங்களுடன் செய்திகளைப் பிரசுரித்திருந்தது.நாளயதினம் புதன்கிழமை (05.06.2013) அவரது இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளன.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
திரு. வி. ஆர். வடிவேற்கரசன்,
யாழ் பொது நூலகம்,
வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment