அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, June 5, 2013

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 5)


கடந்த ஞாயிறு 2.6.2013 தமிழ்த்தந்தி பத்திரிகையில் 6ஆம் பக்கத்தில் இணைய வாசகன் என்பவரால் எழுதப்பட்ட மீளும் நினைவுகள் - யாழ் நூலக எரிப்பு என்ற கட்டுரையில் தொடக்கத்திலேயே "32 வருடங்களுக்கு முன்னர் இதே ஆனி முதலாம் திகதி காலைப் பொழுது ஒரு பெருங்கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது. அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டிலிருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது" என்று இருக்கிறது. கட்டுரையின் ஆறாவது பந்தியில் 4ஆவது வரியில் "1981 மே 31 நள்ளிரவை எட்டிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண முதல் தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திலும் தீ வைக்கப்பட்டது. .... தீ யாழ்ப்பாண நகரமெங்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்கு மூலையில் முதல் தீ வைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவதும் தீ வைக்கப்ட்டது" என்றும், கட்டுரையின் பன்னிரண்டாவது பந்தியில் " இந்தக் கட்டுரையை எழுதும் இக்கணம் வரைக்கும் நூலகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே இருக்கிறது" என்றும் உள்ளது.

இவை தவறான செய்திகள். கட்டுரையில் வெளியாகிய புகைப்படமும் பொது நூலகத்தினுடையது அல்ல. அது முன்னைய யாழ்ப்பாண மாநகர சபைக் கட்டடத்தின் தோற்றம். இதுவும் தவறானது.

நேற்றைய (4.6.2013) உதயன் பத்திரிகையில் 13ஆம் பக்கத்தில் வெளியான இதுவும் ஒரு சுற்றுலா மையம் என்ற (து. ஜெயராஜா முதுகலை மாணவன் சென்னை பல்கலைக்கழகம்) முழுப்பக்க கட்டுரையில்,

“2007ஆம் ஆண்டு பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் பொது நூலகத்தின் மீள்பிரசவம் நடந்தது” என்றும்,

“அண்மையில் வைக்கப்பட்ட யாழ் பொது நூலகத் திறப்புவிழா தொடர்பான கல்வெட்டில் அரசியல் விளையாடியிருக்கின்றது. இந்த நூலகத்தை இரண்டாம்முறை புனரமைத்து திறப்பு விழா செய்வதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் குறித்த ஆண்டில் ஏற்கனவே திட்டமிட்ட திகதியில் திறக்க முடியாமல் போனமையும், அதன்போது நிகழ்ந்த சம்பவங்களும் யாழ் மக்கள் அறிந்ததே. ஆதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து ஒருமாதம் கழித்தே யாழ் நூலகத் திறப்பு விழா நடந்தேறியது. ஆனால் இப்போது பொறிக்கப்பட்டுள்ள அந்தக் கல்வெட்டில் உண்மையில் நூலகம் திறக்கப்பட்ட திகதி மறைக்கப்பட்டு ஏற்கனவே திட்டமிடப்பட்ட திகதியே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்குப்பின்னால் இருக்கின்ற அரசியலை நினைவுபடுத்திக் கொள்வது இலகுவானதே” என்றும் இருக்கிறது.


எனது இந்த "யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது!" முயற்சிக்கு முதற்காரணம் இந்தக் கல்வெட்டே! "இந்த 32 ஆண்டுகளில் பல தெரியாத சம்பவங்கள் - நடந்த சம்பவங்களில் சில மறைக்கப்பட்டும், நடக்காத நிகழ்வுகள் நடந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாலேயே ஒரு ஆவணமாக இங்கு பதிவிடுகின்றேன்" என்று எனது முதற்பகுதியில் குறிப்பிட்டதை நினைவுபடுத்துவதுடன் தற்போது இந்த விடயத்தில் எனது கவனத்தை செலுத்தினால் முன்னைய நிகழ்வுகளைப் பற்றிய தகவல்கள் பின்னர் தவறவிடப்படலாம் என்பதால் கடந்த காலங்களில் நடந்தவற்றை திகதிவாரியாக ஆவணப்படுத்தலுக்கு உதவியாக பதிவிடுகிறேன். இந்த விடயத்தில் குறித்த கட்டுரையிலும் தவறுகள் இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

No comments: