அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, June 6, 2013

மாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்!

கடந்த இரண்டு தினங்கள் வீரசேகரியில் பிரசுரமான கடிதம் திடீரென இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.

09.05.2013

அன்புள்ள தம்பி சேனாதிராஜா,

அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக உமது விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் விட்டமைக்கு ஒரே ஒரு காரணம் உங்கள் கூட்டு இனப்பிரச்சினை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு என் தலையீடு முட்டுக்கட்டையாக அமையக்கூடாது என்பதற்காகவே. அன்றேல் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மறுப்பு கூற முடியும். என்னைப் பொறுத்த வரையில் உங்களது செயற்பாடுகள் எதுவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவையே. எதுவித கருத்தும் வெளியிடாது பொறுத்திருந்தேன். எது எப்படியானாலும் இனி எதையும் பொறுக்க நான் தயாரில்லை. உம்மைப் போன்றவர்களின் செயற்பாட்டால் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கின்றேன். உண்மைகளை மறைக்க முடியாது. அவை வெளிவந்தால் தான் மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படும். ஓர் ஆயுதக்குழு பற்றிய என் கருத்துக்கள், உங்களின் தந்திரத்தால் உங்களுக்கே சாதகமாக அமைந்தது. உங்களுக்கு அதிஸ்டமாகவும் அமைந்தது. விளைவு எம் மக்களுக்கு என் சேவை கிட்டாமல் போனதே.

நீங்கள் என்னைப் பற்றி நன்றி அறிதலுடன் சிந்திக்கத் தவறிய பல விடயங்களில் சிலவற்றையேனும் ஞாபகமூட்ட வேண்டுமென என் உள்ளம் குமுறுகிறது. ஆனால் என் பெருந்தன்மை அதைத் தடுக்கிறது. உங்களுக்கு 06.11.2003 தேதியிட்டு எழுதிய கடிதம் கையிலிருந்தால் ஒரு தடவை அதைப் படியுங்கள். அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் பெரும் அரசியல் தலைவர். இனத்துக்காகத் தன் உயிரைப் பலி கொடுத்தவர். இன்று வரை என்னால் அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை. ஆனால் அவர் அமரத்துவம் அடைந்த ப+த உடலின் சாம்பல் சூடு ஆற முன்பு அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியையும் உமக்கே தர வேண்டுமென நீர் கேட்டது ஞாபகம் இருக்கா? விக்கிரமாதித்தன் கதையில் வரும் சம்பவம் போல் இவ்வளவு தைரியம் உமக்கு எப்படி வந்தது என நாம் ஆச்சரியப்பட்டோம். அக்காலத்தில் நீர் கட்சியின் ஓர் ஊழியனாகவே இருந்தீர்.

தற்போது உம்முடன் செயற்படுபவர்கள் பலருக்கு என்னைப் பற்றித் தெரியாது. தெரிந்திருந்தால், என்னைப் பற்றி விமர்சிக்கும் உமது நண்பர்கள், சின்னச்சின்ன தம்பிமார்களுக்கும் அதற்குரிய தகுதி இல்லை என்பதை உணர்வர். எனது அரசியல் அவர்களது, உமது வயதிலும் பார்க்கக் கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன். பொய், புரட்டு, களவு, சதி, ஏமாற்று, கழுத்தறுப்பு, முதுகில் குத்துவது, இலஞ்சம் ஆகியவற்றுக்கு நான் அப்பாற்பட்டவன். நீதியாகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அரசியலில் தீவிரமாக 53 ஆண்டுகளும், அதற்கப்பால் 7 ஆண்டுகளும் மொத்தமாக 60 ஆண்டு அனுபவம் உள்ளவன் நான். என் சேவை எம் மக்களுக்கு இல்லாமற் செய்த பெருமை உம்முடையதே. பொய் மூட்டைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் மக்கள் மத்தியில் என்னை ஓர் துரோகியாகக் காட்டின. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். அன்று நான் சொன்னவை எவ்வளவு நியாயமாக இருந்தாலும் என்னை திட்டித் தீர்த்தீர்கள். இன்று உங்களுக்குள்ளேயே குளம்புகிறீர்கள். இவற்றை மக்களுக்கு எடுத்து விளம்ப மாட்டீர்களா? அண்மையில் கூட ஒரு பிஞ்சு, உமது வாரிசு, விளாசித் தள்ளுகிறார் என்னைப் பற்றி. கொஞ்சம் அவருக்கு சொல்லக் கூடாதா? உமது முன்னேற்றத்துக்கு நான் என்றும் முட்டுக் கட்டை போட்டவன் அல்ல. உமக்காக எத்தனை விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளேன் என்பதை எனது அரசியல் வாழ்விலிருந்து நீர் பட்டுணர்ந்திருப்பீர்.

தமிழர் ஐக்கிய முன்னணி உருவாகியது, தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தே. இருசாராரும் சமமாக பதவிகளைப் பகிர்ந்து கொண்டோம். நானும் நண்பன் ஆலாலசுந்தரமும் பிரச்சார செயலர்கள். அமிர்தலிங்கம், சிவா ஆகிய இருவரும் செயலாளர்கள். கதிரவேற்பிள்ளை, திருநாவுக்கரசு பின்னர் தருமர் தனாதிகாரிகள் த.வி.கூ உருவாகிய போது நீர் தடுப்புக் காவிலில் இருந்தீர். நீர் தமிழரசு கட்சிக்கு முறை தவறி உயிர் கொடுக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி தான் செயற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் உண்மையை மறைத்து, ஸ்தாபகராலேயே மூடி வைக்கப்பட்ட தமிழரசுக் கட்சியை, அவர் 1977 இல் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், முறையற்ற விதத்தில் புத்துயிர் கொடுத்து மக்களை தப்பான வழியில் கொண்டு சென்றது யார்? 1977 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை 26 ஆண்டுகள், தமிழ் அரசுக் கட்சி இயங்கியதா? எந்த ஆண்டு நடைபெற்ற மகாநாட்டில் நீங்கள் செயலாளராக தெரிவானீர்கள்? முற்று முழுதாக தந்தை செல்வாவை ஏன் அவமதிக்கின்றீர்கள். இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாகக் கூறி மக்களையும் வெளிநாட்டுத் தூதுவர்களையும் ஏமாற்றுகிறீர்கள்.

தந்தை செல்வாவால் 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அவரின் இறுதி மூச்சு இருக்கும் வரை மட்டுமன்றி, தொடர்ந்து இன்று வரை, அதாவது 40 ஆண்டுகளுக்கு மேல் இயங்குவது தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். ஆனால் தமிழரசுக் கட்சியோ, தந்தைசெல்வாவின் மரணத்தின் பின், அதாவது 1977க்கு பின்னர் வெறும் செயலாளர் பதவியை எடுப்பதற்காக, அதற்கு 2004ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 25 ஆண்டுகளில் யார் யார் எவ்வெப்போது எந்தெந்தப் பதவியை வகித்தனர் என்பதைக் கூற முடியுமா?

முழுப் ப+சணிக்காயைச் சோற்றுக்குள்ளே புதைப்பது போல் அண்மையில் பின்வருமாறு கூறியுள்ளீர்கள். “ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நாங்கள் அமைத்திருந்த போது அதில் அங்கம் வகித்த ஓர் கட்சியினால் உயர் நீதிமன்றம் வரை சென்று தேர்தல்களில் சின்னம் கட்சி என்பன முடக்கப்பட்டிருந்தன” என்று. இது உண்மை இல்லையே. செய்யாத ஒரு குற்றத்திற்குப் பொய்யாக என்மீது ஓர் நம்பிக்கை இல்லாத தீர்மானம், புலிகளின் கட்டளைக்கமைய, கொண்டு வந்ததும் நான் கலந்து கொள்ள முடியாத ஓர் இடத்தில், அம்பாறையில் தலைவர் என்ற முறையில் என் அனுமதி பெறாமல், பொதுச்சபை கூட்டம் ஒழுங்கு செய்ததை ஆட்சேபித்து அதன் காரணமாகவே கோட்டுக்கு செல்ல வேண்டிவந்ததென கூற ஏன் பயப்படுகிறீர்கள்?

“இதே நிலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டால்” என்று பயப்படுகிறீர்களாமே இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா? தமிழர் ஐக்கிய முன்னணியோ, தமிழர் விடுதலை கூட்டணியோ உருவாகும் போது அதை உருவாக்கியவர்களில் ஒருவன் நான் அல்லவா நீர் அதில் சம்பந்தப்படவே இல்லையே. கடந்த 10ஆண்டுகளாக உமது விடயத்தில் நான் கடைப்பிடித்த மௌனம் உம்மைப்பெரும் உத்தமராகவும் கொள்கைப் பற்றுள்ளவனாகவும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதுகூட எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை மட்டம் தட்டி உலகுக்குக்காட்டி குறுக்கு வழியில் நீர் உயர முனைவதே எனக்கு வேதனை அழிக்கிறது. உமது திறமையாலும் தியாகத்தாலும் நீர் உயர்வதை நான் மனதார பாராட்டுவேன்.

தனது கடந்த காலத்தையும் ஏறிவந்த படிகளையும் ஒருவன் மறந்து செயற்படுவானேயானால் அவன் மானிடப்பிறவி எடுத்ததில் அர்த்தமில்லை. நான் கடந்தகாலத்தையோ ஏறிவந்த படிகளையோ என்றும் மறப்பதில்லை. மறக்கப்போவதுமில்லை. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு என் வீட்டுக்கு கல் வீசுவது உமக்கே கஷ்டமானதாக முடியும். இப்போது அது தான் நடக்கிறது. எனது கல்லறையில் சாம்ராஜ்யம் அமைக்க முயல்வது நல்லதுக்கல்ல. எனக்கு சமாதிகட்ட நீர் முனைவது எனக்கல்ல. எம் இனத்துக்குத்தான். இது நீர் செய்யும் பெரும் வரலாற்றுத் துரோகமாகும்.

எனது அரசியல் பாரம்பரியம்பற்றி நீர் அறிந்திருக்க நியாயமில்லை. தந்தைசெல்வாவை 1947ஆம் ஆண்டு முதல்முதல் புத்தூர் கிராமசபை மைதானத்தில் கண்டு அவரின் பேச்சைக்கேட்டு மகிழ்ந்தவன் நான். அப்போது நீர் சிறு குழந்தையாக இருந்திருப்பீர். கோப்பாய் தொகுதி வேட்பாளர் திரு.தம்பியப்பா அமரத்துவம் அடைந்த நாளும் அன்று தான். 1949ஆம் ஆண்டு தொட்டு தந்தைசெல்வா என்னாலும், எனது குடும்பத்தவராலும் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவர். மாற்றுக்கட்சியில் நான் செயற்பட்டகாலத்திலும் அவருக்குரிய மதிப்பையும் மரியாதையும் நான் கொடுத்தே வந்துள்ளேன். தந்தை செல்வாவுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தவர்களில் நான் மட்டும் தான் இன்று உயிருடன் இருக்கின்றேன். பாராளுமன்றத்தில் தந்தை. செல்வாக்குப்பின் இருந்த ஆசனத்திலேயே நான் இருந்தேன்.

தினமும் இரவு 8.00 மணிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கும் வேளையில் என்னையும் தன்னுடன் தனது வாகனத்தில் அழைத்துக்கொண்டு தன் வீட்டையும் தாண்டிச்சென்று எனது நண்பன் திரு.தா.திருநாவுக்கரசு அவர்களின் வீட்டில் விட்டுவிட்டே தனது வீட்டுக்கு திரும்புவார். இப்படிப்பல நாட்கள் தொடர்ந்தன. ஒரு சமயம் நான் கிளிநொச்சி கரைச்சி கிராமசபைத் தலைவராக இருந்தவேளை எனது தலைவர் பதவியைப்பறிக்க சிலர் முற்பட்ட போது அதை தடுத்து நிறுத்தியவரும் தந்தை செல்வாவே. மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட பெரியவரின் செயலால் அன்றைய உள்ளுராட்சி அமைச்சராயிருந்த திரு.மு.திருச்செல்வம் அவர்கள் (கலாநிதி நீலனின் தந்தை) ஒரு தடவையேனும் தனது அமைச்சர் பதவிக் காலத்தில் கிளிநொச்சிக்கு வரப்போக இந்த ஒரு சிலர் ஒருபோதும் விடவில்லை. அன்றும் உம்மைப்போன்ற சிலர் தழிழரசுக் கட்சியில் இருந்திருக்கிறார்கள்.

1970ல் சும்மா கை கட்டிக்கொண்டிருந்து கிளிநொச்சித் தொகுதியில் நான் வெற்றி பெறவில்லை. கால்கள் கொப்பளிக்க கால்நடையாக நடந்து சென்று வென்றவன். எனது வெற்றிக்குச் சவாலாக பல தமிழரசுகட்சித் தலைவர்கள் தந்தைசெல்வா. அமிர் போன்றோர் வந்து தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்தார்கள். 700 சதுரமைல் விஸ்தீரணம் கொண்ட கிளிநொச்சித் தொகுதியில் என் கால்கள் படாத வீடு கிடையாது. கிளாலி தொடக்கம் மாங்குளம் ஊடாக துணுக்காய் ஆலங்குளம் வரை ஏறக்குறைய 100 கிலோமீற்றரும், பரந்தன் தொடங்கி முழங்காவில் வரை 50 கிலோமீற்றரும் கால்நடையாக நடந்து சென்றே அத்தொகுதியை வென்றெடுத்தேன். கிளிநொச்சி மக்கள் இன்றும் சான்றுபகர்வார்கள். இலங்கையில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் நான் பட்ட கஸ்டம் அனுபவிக்கவில்லை. அவ்வாறு பெறப்பட்ட பதவி என்பதால் தான் கர்வம் அடையாது அப்பதவியின் பெறுமதியை உணர்ந்து செயற்பட்டேன்.

1972ல் பாராளுமன்றத்தில் ( அரசியல் நிர்ணய சபையில்) புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டவேளை அதைக் கண்டித்து உரையாற்றியது மட்டுமல்ல அதை எதிர்த்து வாக்களித்த ஒரேயொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினன் நான் மட்டுமே. நான் அன்று பிரதிநிதித்துவப்படுத்திய அகில இலங்கைத் தழிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவாகிய ஏனைய இருவரும் அரசுடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்தும். தமிழரசுக்கட்சியினர் அரசியல் நிர்ணயசபையைப் பகிஷ்கரித்ததும் அனைவரும் அறிந்ததே. எனது இச்செயலால் பெரியவர் தந்தைசெல்வா உட்பட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களினதும் அன்றைய எனது கட்சித் தலைவரும், ஸ்தாபகருமாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களினதும் பாராட்டைப் பெற்றவன் நான்.

1972.05.14 தமிழர் கூட்டணியை உருவாக்கினோம். இக்கூட்டணியில் நான் என்னை இணைத்துக்கொண்டவனல்ல. கூட்டணியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். நானும் எனது நண்பன் மு.ஆலாலசுந்தரமும் இணைப்பிரச்சாரச் செயலாளர்களாகத் தெரிவானோம். அந்தவேளை திருவாளர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தார்கள். குடியரசு தினத்திற்கு முதல்நாள் இரவு அல்லது ஓரிரு தினங்களுக்கு முன்னர் சரியாக ஞாபகமில்லை பல இளைஞர்களுடன் எனது மைத்துனர் ஜெயசீலன் உட்பட உம்மையும் கைதுசெய்து தடுப்புக்காவலில் இருந்த உமக்கு வெளியில் நடந்தவைபற்றி அதிகம் தெரிந்திருக்கமுடியாது. தெரிந்திருந்தால் இன்று என்னை முழுமூச்சாக ஆதரித்திருப்பதுடன், அர்த்தமற்ற நியாயமற்ற உண்மைக்குப்புறம்பான குற்றச்சாட்டுகளை நம்மவர் சிலர் வைக்கும் போது அவற்றைக் கண்டித்தும் இருப்பீர். அதற்குப் பதிலாக எனது உயிருக்கு உலை வைக்கும் பெரும் பணியில் அல்லவா நீர் ஈடுபட்டிருந்தீர். நீர் என் சார்பாக பேசவில்லை என நான் கவலைப்படவில்லை. ஆனால் எதுவித பலனையும் எதிர்பாராமல் புண்ணியத்திற்கு உழும் பன்றியை பல்லுக்குப் பதம் பார்ப்பதில் நீர் அல்லவா முன்னின்று செயற்படுகின்றீர்.

உம்மைப்போன்று ஏறக்குறைய 50 இளைஞர்கள் குடியரசு தினத்தை பகிஷ்கரிக்கத் தூண்டியதால் பொலிசாரர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த அதேவேளை சகல தழிழரசுப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், ஏனைய திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோருடன் நானும் இன்னும் பல தொண்டர்களும் இணைந்து பல்வேறு சட்டமறுப்பு நடவடிக்கைகளிலும், பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.

அப்படியான ஒரு சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சித் தொண்டர்களும் நானும், என்னுடன் காலம் சென்ற ஜயம்பிள்ளை திருஞானம், லண்டன் பா.வை.ஜெயபாலன், ஜேர்மனி சுந்தரசாமி கண்ணன், இந்தியா ஞானப்பிரகாசம் ஞானராசா, வன்னேரிக்குளம் துரைராசசிங்கம் ஆகியோரும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு யாழ். கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டோம். மறுநாள் காலை சிறைக்கைதிகளின் உடையில் பலாலி விமானநிலையத்தில் எனக்காக தயாராயிருந்த விசேட விமானத்தில் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். பலாலி விமானநிலையத்தில் கொழும்பு செல்லவிருந்த பயணிகளும், திருச்சிக்கு செல்லவிருந்தவர்களும் மற்றும் அவர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் வந்திருந்த பலரும் பார்த்துக்கொண்டிருக்க நான் விமானத்தில் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வெலிக்கடைச்சிறையில் நான் அடைக்கப்பட்டேன். தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிகளின் வரலாற்றில் சிறைக்கைதி உடையணிந்து மக்கள் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே! என்னுடன் கைதான ஏனைய 6 இளைஞர்களும் இவ்வாறே சிறைக்கைதி உடையணிந்தே சிறை வைக்கப்பட்டிருந்தனர். திட்டமிட்டு என்னை அவமதிக்க அரசு செய்த செயல் இன்றைய இளம் தலைமுறைக்குத் தெரிந்திருக்கும். உமக்கும் இது தெரியாமலிருக்க நியாயமில்லை.

சிறைவாசம் முடிந்து கொழும்பில் விடுதலை செய்யப்பட்ட என்னை மாலை அணிவித்து வரவேற்ற தந்தை செல்வாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்ததை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அதேநேரம் யாழ்.கோட்டையில் விடுதலையாகிய இளைஞர்களை வரவேற்றகச்சென்ற அமிர் தம்பதியினருக்கு என்னநடந்தது என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். திருமதி.அமிர்தலிங்கம் காரினுள் இருக்க சில பொலிசார்கள் காரின் மேலே நின்று தூஷண வார்த்தைகளைப் பேசி பைலா நடனம் ஆடியதும், அமிர்தலிங்கம் அவர்களின் பிடரியில் யாரோ ஒருவன் அடித்ததும் இப்பொழுது நினைக்கும் பொழுதும் எனது கண்கள் பனிக்கின்றன. இது மட்டுமல்ல எத்தனையோ தடவைகள் அவர் அவமரியாதைப்பட்டதும், தாக்குதலுக்குள்ளானதும் உமக்கு தெரியாததல்ல. இன்று நீர் தமிழரசுக்கட்சியை மீளப்புதுப்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை கருவறுப்பதன் மூலம் அவருக்குச் செய்யும் துரோகத்தை எண்ணி நான் வேதனைப்படுகின்றேன். கடந்த 10ஆண்டுகளில் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை ஒரு தடவையேனும் உச்சரித்தீரா. அவர் எப்படி இறந்தார் என்பதையேனும் சொல்லியிருக்கிறீரா? அக்கொலையை கண்டித்திருக்கிறீரா?

அமிர் அவர்களின் வாரிசு போல, எடுத்ததெற்கெல்லாம் தந்தையையும், அமிரையும் சாட்சிக்கு கூப்பிடும் உமக்கு இச் சம்பவம் பற்றிப் படிக்கும் போது உள்மனம் உறுத்தவில்லையா? இந்தத் தியாகச் செம்மலுடன் எனது இறுதியான பயணம் கொழும்பில் இருந்து சென்றதே. அவரை விட்டுப்பிரியும் போது இனி அவரை உயிருடன் சந்திக்கமாட்டேன் என்பதை நான் உணரவில்லை. அவர் கூறிய இறுதி வார்த்தைகள் இன்றும் என் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அன்போடு என்னை அழைத்து “சங்கரி எம்மில் சிலருக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியும். என்ன செய்வது? நாம் அதற்கு முகம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்” என்று கூறிவிட்;டு என்னை அண்ணா மேம்பாலத்திற்கு அண்மையில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதை அன்று நான் உணர்ந்திருந்தால் நிழல்போல அவரைத் தொடர்ந்திருப்பேன் அல்லவா? உம்மைத் தனது நிழல் என்று தானே அவர் எண்ணியிருந்தார். அதற்கமைய நீர் நடந்தீரா? நடக்கின்றீரா?

தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்ட பின் ஒரு சந்தர்ப்பத்தில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் கடும் சுகவீனமுற்றிருந்தபோது பலகாலம் பிரச்சாரத்தில் ஈடுபடாது ஏனைய கட்சிப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே காலத்தில் திரு.தா.சிவசிதம்பரம், அன்றைய வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.எக்ஸ்.எம்.செல்லத்தம்பு அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டு பிரச்சார வேலைகளுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். அந்த நாட்களில் தமிழர் கூட்டணியின் கூட்டமென்றால் நான் மேடையில் அமர்ந்தால் தான் அது கூட்டணிக் கூட்டமாயிருக்கும். அல்லது அக்கூட்டங்கள் தமிழரசுக் கட்சிக் கூட்டமாகவே மக்கள் பார்வைக்குத் தெரியும். காரணம் எத்தனை பேச்சாளர்கள் இருந்தாலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது இருந்தால் தான் கூட்டம் கலகலப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே என்பதை மறந்துவிடவேண்டாம். கூட்டணி என்னால் தான் வளர்ந்தது என்று கூறவரவில்லை. இருகட்சிகளையும் சேர்த்த பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் தம் பங்களிப்பை செய்தனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சட்ட மறுப்பு, பிரசாரக்கூட்டம், கிராம யாத்திரை என்று எந்த நிகழ்விலும் நான் கலந்து கொள்ளாது விடுவதில்லை. நெடுந்தீவு தொடக்கம் பொத்துவில் உகந்தைவரை எனது வாகனத்துடன் சமூகமளிப்பதை பெருமையாக என்னைப் பாராட்டி தன் மனைவிக்கும், கூடியிருக்கும் தொண்டர்களுக்கும் அமிர் அவர்கள் கூறுவது இந்தக்கணத்திலும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

அரசியல் கட்சிக்குள் உட்ப+சல் இல்லாத கட்சி எங்கும் கிடையாது. அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடன் பதவிப்போட்டியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் போட்டியிடமுன்வந்ததும், தந்தை செல்வாவின் தலையீட்டால் அவை தடைப்பட்டதும் அனைவரும் அறிந்தவிடயம். அதேபோல நீர் பதவிக்கு என்னுடன் போட்டியிட்டதில் தவறில்லை. ஆனால் எதற்கும் ஓர் வழிமுறையுண்டு. பதவி கிடைத்தால் கட்சியை அழிக்க உடைக்க முயல்வது நீர் அடிக்கடி பெயர் குறிப்பிட்டுப் பேசும் தவைவர்களுக்குச் செய்யும் படுதுரோகமாக இன்று உமக்குத் தெரியவில்லையா?

நம் கட்சிக்குள் நடந்த சில கசப்பான சம்பவங்களைக் குறிப்பிடுவது அழகல்ல. இருப்பினும் உம்மைப்போன்ற சிலரின் விபரீதப் போக்கால் சிலவிடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். 1977ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டணி அமோக வெற்றியீட்டிய வேளையில், அன்றைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டிய ஒரு சந்தர்ப்பம் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கிடைத்தது. அந்தத்தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடமின்றி, பழைய காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த நாங்கள் நால்வரும், தமிழருசுக்கட்சியைச் சார்ந்த சிலரும் அமரர் அமிர் அவர்களையே விரும்பினோம். ஏனெனில் அவர் செய்த தியாகங்கள், இரவு பகல பாராது குடும்பமாக தன்னை அர்ப்பணித்து மக்களுக்காகச் செயற்பட்டவர் கட்சியிக்காக உழைத்தவர் என்ற காரணத்தால் தான். ஆனால் உம்மைப்போன்ற பாராளுமன்ற உறுப்பினர் சிலர் அன்றும் இருந்திருக்கிறார்கள். சரித்திரம் திரும்புகிறது என்பார்களே! அது இது தானா? திரு.மு.சிவசிதம்பரம் அவர்களை எதிர்க்கட்சித்தலைவராகப் பிரோரிக்க நடந்துகொண்டிருந்த சதியை அறிந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தானே முதலில் எழுந்து அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தவைவராக முன்மொழிந்து அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்டதை நீர் அறிந்திருக்காமல் இருக்கமுடியாது. அமிர் அவர்கள் தனது இறுதி நாட்களில் அடிக்கடி கூறும் ஓர்விடயம் திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் இன்றுகூடச் சான்று பகர்வார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த உறுப்பினர்களின் விசுவாசம்பற்றி.

நீர் சிறையிலிருந்தவேளை அங்கு நடந்த விடயங்கள் குறித்து எந்த மேடையிலும் எடுத்துக்கூற நான் தவறவில்லை. ஆனால் உம்மைப் போல பல இளைஞர்களும் அரச தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டிருக்கிறார்கள். கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். உம்மையும், காசி ஆனந்தத்தையும் வண்ணை ஆனந்தத்தையும் அரசியலில் வளர்த்தெடுத்தது நாங்கள் தான். உமக்குச் செய்யவேண்டியதற்கு அதிகமாகவே எமது கட்சி செய்துள்ளது. எதுவித பலனையும் பெறாத எத்தனையோ இளைஞர்கள் அன்று இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். பல இடங்களில் இளைஞர் பேரவைக் கிளைகளை அமைத்தோம். எனது கிளிநொச்சித் தொகுதியில் மட்டும் 28 கிளைகள் இருந்தன. இளைஞர் பேரவைக் கிளைகளின் ஒன்றியத்தின் தலைவராக நீர் வாக்கொடுப்பு மூலம் என்றும் தெரிவுசெய்யப்படவில்லை. எப்போதும் அமிர்தலிங்கம் அவர்களின் நியமனத்தால்தான் உமக்குத் தலைவர் பதவி கிடைத்தது. அன்றெல்லாம் நீர் தேர்தல் மூலம் பதவிக்கு வரவேண்டும் எதிர்நோக்க வேண்டும் என்று எண்ணவில்லை. இவையெல்லாவற்றையும் மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைத்தெறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளீர். இன்று உமக்கும், கட்சியில் வேறுசிலருக்கும் உள்ள நெருக்குதல் எனக்குத் தெரியாததல்ல. தமிழரசுக் கிளையையோ, கூட்டணிக்கிளையோ இன்று அமைக்கும் பட்சத்தில் யார் யார் அங்கத்தவர்கள் ஆவார்கள், எப்படிப்பட்டவர்கள் முக்கிய பதவியைக் கைப்பற்றுவார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? உமக்கு வேண்டியதெல்லாம் தலைமையில் மாற்றம். அதை முறைப்படி செய்திருக்கலாம். அகில இலங்கைத் காங்கிரஸ் கட்சி பிரிந்து சென்று தனித்து இயங்கலாம் என்றால் தமிழரசுக் கட்சி ஏன் தனித்து இயக்க முடியாது என்ற உமது வாதத்தை சிலர் முன்வைக்கின்றனர் என்பதை அறிந்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. வரலாறு தெரியாதவர்களுக்கு வரலாற்றை எடுத்துக் கூறவேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.

1970ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்களின் பெருந்தலைவர்கள் குறிப்பாக திருவாளர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் ஆகியோர் தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இக்கட்டான கட்டத்தில் புதிய அரசு அரசியல் சாசனம் உருவாக்க அரசியல் நிர்ணயசபையை அமைத்து செயற்பட்ட போது இப்பெரியார்களின் தோல்வி ஈடுசெய்ய முடியாது என உணர்ந்த தந்தை அவர்கள் தமிழ் கட்சிகள் ஒருசில சொற்ப வாக்குவித்தியாசத்தில் ஒருவரையொருவர் வெற்றிபெற்ற நிலையில் இனியும் நாம் பிரிந்து நின்றால் அழிந்துவிடுவோம் எனக்கூறி தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வேண்டினார். அன்றைய அரசின் சவாலுக்கு பெரியவருக்குப் புலப்பட்ட ஒரேவழி ஒற்றுமை தான். தனது அரசியல் பேதங்களை மறந்து வீடுதேடிவந்த தந்தையை ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் வரவேற்று, அவருடைய முயற்சிக்கு முழு ஆதரவு தருவதாகக் கூறி தன் கட்சித் தொண்டர்கள் அத்தனைபேரும் முழு ஒத்துழைப்புத் தருவார்கள் என்றும் உறுதியளித்தார். அன்றுதொட்டு இருகட்சிகளும் இணைந்தே செயற்பட்டன. பிரச்சாரக் கூட்டங்கள், குழுக்கூட்டங்கள் ஆகியவற்றில் காங்கிரஸின் செயலாளர் தா.சங்கரப்பிள்ளை, பிரபல வழக்கறிஞர் எஸ.ஆர். கனகநாயகம், முன்னாள் மேயர்.இராசா.விஸ்வநாதன், தனாதிகாரி தா.திருநாவுக்கரசு போன்றோர் தவறாது கலந்து கொண்டனர். இவையெல்லாம் நீர் தடுப்புக்காவலில் இருந்தகாலத்தில் நடந்தவை. தலைவர் ஜீ.ஜீ மட்டும் பிறிதொருநாளில் சேர்வதாக உறுதியளித்தார். வட்டுக்கோட்டை மாநாட்டில் 1976ல் தழிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கூட்டுத் தலைவர்களாக தந்தைசெல்வா, தலைவர் ஜீ.ஜீ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌ.தொண்டமான் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இறக்கும் வரை, தான் அப்பதவியை துறந்ததாக ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தெரிவிக்கவில்லை. இது கூடவா உமக்கு மறந்து போய்விட்டது. கூட்டுச்சேருவது பற்றி நீர் தெரிவித்த கருத்து உமக்கு வேடிக்கையாக தெரியவில்லையா? ஒரு சமயம் நான் இந்தியா போயிருந்தபொழுது தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களை தனது வழக்கொன்றில் ஆஜராகுமாறு கலைஞர் மு.கருணாநிதி என்னைக் கேட்டுகொண்டபோது, பலர் கேட்டு மறுத்தும் என் வேண்டுகோளை ஏற்று, ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவ்வழக்கில் ஆஜராகி ஒரு சதமேனும் ஊதியமாகப்பெறாது, வழக்கை வென்றும் கொடுத்தார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். வேண்டுமானால் கலைஞரிடமும் அல்லது தமிழ்நாடு சட்டசபை முன்னாள் உறுப்பினர்களிடமும் கேட்டு அறியலாம். வெற்றிகரமாக வழக்கை முடித்துக்கொண்டு சென்னையிலிருந்து மலேசியா சென்று நாடு திரும்பியதும் தீவிரமாக செயற்படுவதாக உறுதியளித்துச் சென்ற தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் ப+தவுடலைத்தான் நானும், அன்னாரின் புதல்வர் குமார்.பொன்னம்பலம் அவர்களும், ஏனைய கட்சிப்பிரமுகர்களான தா.திருநாவுக்கரசு, கு.மோதிலால் நேரு, முன்னாள் பா.உ. சிவாஜிலிங்கம் அவர்களின் மாமனார் போன்றவர்களுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் பொறுப்பேற்றோம். கூட்டணியுடன் இணைந்து தீவிரமாக உழைப்பதாக உறுதியளித்திருந்த ஜீ.ஜீ அவர்கள் என்னை மட்டுமல்ல, தமிழினத்தையே கலங்கவிட்டு விண்ணகம் சென்றார். சென்றவர் தந்தை செல்வாவையும் விரைவாக அழைத்துச் சென்றுவிட்டார். மறைந்த இரு தலைவர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்திலிருந்தே தமது இறுதி யாத்திரையை முடித்துக்கொண்டனர். இவ் இரு தலைவர்களின் இறுதிக்கிரியைகளும் அமரர் அமிர்தலிங்கத்தின் தலைமையிலேயே நடந்தது ஞாபகம் இருக்கா?

அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேரவில்லை என்று கூறுபவர்கள் இன்றும் இருப்பின் அவர்களுக்கு இன்னும் ஓர் சம்பவத்தை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். தலைவர் ஜீ.ஜீயைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் அவர் வேறு எந்த வழக்கறிஞர்களுக்கு கீழேயும் என்றும் தொழில் புரியவில்லை. எந்த வழக்குகளிலும் சரி முதன்மை வழக்கறிஞராகவே தோன்றுவார். அவரது வரலாற்றில் ஒரேயோரு சந்தர்ப்பத்தில் மட்டும்தான் வேறு ஒரு வழக்கறிஞருக்குக் கீழ் ஆஜரானார். அந்தவழக்குத் தான் திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம், வி.தருமலிங்கம் கா.பொ.இரத்தினம், வி.என்.நவரத்தினம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட ட்ரயல் அட் பார் வழக்கு. தந்தை செல்வா அவர்கள் முதன்மை வழக்கறிஞராக கடமையேற்க, ஜீ.ஜீ அவர்கள் இரண்டாவது வழக்கறிஞராக ஆஜரானார். தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட முன்பு 70ஆம் ஆண்டில் தழிழ்க்காங்கிரஸ், தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தையும், 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்ட பின்பு அதே தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் வாக்குகள் விவரத்தையும் குறிப்பிடுகிறேன்.

1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி 18 ஸ்தானங்களைப்பெற்று அமோக வெற்றியீட்டியவேளை 1970 ஆம் ஆண்டு இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குவித்தியாசங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் கூட்டணியில் தழிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் சங்கமமானது உண்மையா? இல்லையா? என்பது புரியும்.

1977ஆம் ஆண்டுத் தேர்தலில் திரு.குமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத் தொகுதியை தனக்குத் தரும்படி அடம்பிடித்தார். வட்டுக் கோட்டைத் தொகுதி அவருக்கு வழங்கப்பட அதை ஏற்கமறுத்து யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 6960 வாக்குகளை மட்டும் பெற்றார். தமிழர் விடுதலைக்கூட்டணியில் களமிறங்கிய திரு.வெ.யோகேஸ்வரன் அவர்கள் பெற்ற வாக்குகள் 16251. தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக 1970ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற திரு. மாட்டின் அவர்கள் பெற்ற வாக்குகள் 8,848 ஏறக்குறைய இருமடங்கு.

அகில இலங்கை தழிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஜீ.ஜீ அவாகள் தன்கட்சியை இயங்க விடாது முடக்கி வைத்திருந்தார். 1972க்குப் பின் அக்கட்சி இயங்கவில்லை. ஆனால் அவர் இறந்த பின் அவரது மகனான திரு.குமார் பொன்னம்பலம் அவர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோற்றதன் பின், தமிழர் மத்தியில் ஏற்பட்ட ஒற்றுமையை எவ்வாறு குழப்பலாம் என அன்றைய பிரதமரான திரு.ஜே.ஆர்.ஜெயவர்த்தனா திட்டமிட்டுக்கொண்டிருந்த வேளை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை மீளப்பதிவு செய்ய அவரின் உதவியை நாடினர். தமிழ்க் காங்கிரஸ் கட்சி மீளப் பதியப்படக் கூடாது என ஆட்சேபித்து எம்மால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தோற்றுப்போன விடயமும் நீர் அறியாததல்ல.

இதேபோன்றதோர் நிலை தமிழரசுக்கட்சிக்கும் வந்துவிடக்கூடாது என்பதை அறிந்திருந்த அமிர்தலிங்கம் அவர்கள் யாராவது கூட்டணிக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்துவிடக்கூடாதென்பதற்காகவே தமிழரசுக் கட்சியைப் பதிவு செய்து வைத்திருந்தாரேயன்றி அதை யாரும் மீள இயக்கவைப்பதற்கல்ல. தந்தை செல்வா தான் உருவாக்கிய தமிழரசுக்கட்சி என்ற வீட்டினைப் ப+ட்டி அதன் திறப்பை திரு.அமிர்தலிங்கம் அவர்களிடம் பத்திரப்படுத்தி வைத்திருக்குமாறு கூறினாரேயன்றி அதை திறக்கும் அதிகாரத்தை யாரும் அபகரிக்க உடந்தையாக இருப்பதற்கல்ல. இக்கட்சியின் செயலாளர் நாயகம் நீர் என வெட்கமின்றிக் கூறுகின்றீர். உம்மை அவ்வாறு தெரிவுசெய்தவர்கள் யார்? என்ன நோக்கத்துடன் தமிழரசு கட்சி பதியப்பட்டிருந்ததோ அதற்கு விரோதமாக செயற்படுவது, அடிக்கடி தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்தவன். அமரரின் காலடியில் அரசியல் கற்றவன் என்று தம்பட்டம் அடிக்கும் நீர், இப்பெரும் தலைவர்களுக்குச் செய்யும் பெருந்துரோகமாகத் தெரியவில்லையா? நீர் செய்த மற்றுமோர் மோசடி பற்றிக் கூற வேண்டும். தந்தை செல்வா அறங்காவல் குழுவை உருவாக்கியது அன்றைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தந்தையின் சகோதரர் திரு.ஏர்ணஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களும் ஆவார். நாம் அறங்காவலராக நியமித்தது தந்தை செல்வாவின் தீவிர ஆதரவாளர்கள் என்ற வகையில் பேராசிரியர் கு.நேசையா, பெரியவரின் ஒருபுத்திரனாகிய திரு.சந்திரகாசன், மாவட்ட சபைத் தலைவர் திரு.சு.நடராசா ஆகியோருடன் தமிழர் வீடுதலைக் கூட்டணியின் தலைவர், செயலாளர் நாயகம், தனதிகாரி ஆகிய திருவாளர்கள் மு.சிவசிதம்பரம், அ.அமிர்தலிங்கம், சி.கதிரவேற்பிள்ளை ஆகிய ஆறுபேரையும் தான் அவ்வுறுதியை எழுதியவர் வழக்கறிஞரும், பிரசித்த நொத்தாரிசுமாகிய திரு.சி.வி.விவேகானந்தன் அவர்கள். காலவோட்டத்தில் அறங்காவலர்களில் பலர் இறந்திருந்தும் இருவர் மட்டும் அன்று எஞ்சியிருந்தனர். அவர்கள் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களும் திரு.சந்திரகாசன் அவர்களுமே. அந்த இருவருக்கும் தெரியாமல், கூறாமல் பாதுகாப்பு நிதியத்தை உருவாக்கியவர்களில் அன்றிருந்த திருவாளர்கள் கா.பொ.இரத்தினம், இரா.சம்பந்தன், பி.சூசைதாசன், ஆகியோருடன் என்னையும் சேர்த்து ஒதுக்கிவிட்டு எவருக்கும் தெரியாமல் கூறாமல் உமது இஷ்டப்படி புதிய அறங்காவலர்சபையை நியமித்து உம்மையும் அதில் இணைத்துக்கொண்டீர். இதுபெரும் அரசியல் அயோக்கியத்தனமல்லவா? அதி.வணக்கத்திற்குரிய பிதாவையும் இப்பட்டியலில் உள்ளடக்கியதால் அவரின் கௌரவத்திற்கும் மதிப்பளித்தே அதுசம்பந்தமான நடவடிக்கை எதுவும் எடுக்காது தவிர்த்தோம். முன்பு வடக்கு கிழக்கு இணைந்த உறுப்பினர்கள் இருந்த அக்குழுவில் கிழக்கு மாகாணத்தில் இருந்து யார் புதிய குழுவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகின்றேன். உமது இவ்வாறான செயல்களால் தந்தை செல்வா அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு மட்டும் உரியவரா? என்ற வினா தோன்றியுள்ளது. இப்படிப்பட்ட செயல்களை நீர் யாரிடம் கற்றுக்கொண்டீர்? அண்மையில் திரு.இரா.சம்பந்தனையும் இணைத்துக்கொண்டதாக அறிகின்றேன்.

அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுமலர் வெளியீட்டுக்கு உமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் 7பேர் அன்று இருந்தும் நானும் தம்பி இரவிராஜ் ஆகிய இருவருமே கலந்து கொண்டோம். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரில் தம்பி சிவாஜிலிங்கம் கலந்து கொண்டார். நீர் அதிமுக்கிய வேலையாக இந்தியா சென்றதாக அறிந்தேன். திரும்பி வந்தபோதும் சரி தமிழரசுக்கட்சியைப் புனரமைப்பது பற்றி அப்போது இங்கு இருந்த திருமதி.மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களிடமாவது ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் தனது கணவரோடு கட்சியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தது மட்டுமல்ல, தந்தை தனது வாரிசு எனப் பிரகடனப் படுத்தியிருந்த ஒரு பெரியவரின் மனைவி என்ற காரணத்தால், நான் அவரை இலண்டனில், சந்தித்தபோது உமது இத்துரோகச் செயலை வன்மையாகக் கண்டித்தார்.

அமிர் அவர்கள் இறந்தபின்பு, நானும் நீரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சூசைதாசன் கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆகியோர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சூட்டுக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்களைப் பார்க்கப்போனோம். அவர் முன்பு நீர் கூறினீர், இனி ஒரு இளைஞன்தான் பாராளுமன்றம் போக வேண்டும் என்று. எங்களுக்குச் சிரிப்புத்தான் வந்தது. இருப்பினும் உமது ஆசையை நிறைவேற்றுவது என நான் தீர்மானித்தேன். அன்று இருந்த இளைஞர் நீர் மட்டும்தானா? அல்லது அமரர் அமிரின் இடத்திற்குத் தேசியப்பட்டியலின் பிரகாரம் தகுதியான வேறு உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லையா? அப்பதவிக்கு எத்தனைபேர் கண்வைத்திருந்தார்கள் என்பது உமக்கும் தெரியாததா? 1983ஆம் ஆண்டுக்குப்பின் கட்சி மாநாடு நடாத்தப்படாத நிலையிலும் அமரர் அமிர்தலிங்கம் அவர்களது இடத்திற்கு ஒருவரை நியமிக்கவென ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள மத்திய குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினால் ஆபத்து என்ற நிலையில் தம்பி சிவபாலன் நேரில் சென்று உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறி உறுப்பினர்களை வரவழைத்ததையும் இக்கடிதத்தில் நினைவுபடுத்தி இவ்வளவு காலமும் மறைத்து வைத்திருந்த சில இரகசியங்களையும் உமது செயலால் அம்பலப்படுத்த வேண்டிருப்பதையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன். நிகழ்ச்சி நிரலில்கூட இவ்விடயம் குறிப்பிடப்படாத நிலையில் புதிய நியமனம் சம்பந்தமாக எதுவித தீர்மானமும் எடுக்கப்படக் கூடாது என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதும் உமக்கு ஞபாகமிருக்கும். இருந்தும் உம்மை நாம் தெரிவுசெய்தோம். உமது பெயரைச் சிபார்சுசெய்தபோது மீளப்பரிசீலிக்க வேண்டும் என ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோது அதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதும் உமக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இந்நிலையில் நியமனத்தைத் தாமதப்படுத்தி இதற்கென இடம்பெறும் கூட்டத்தில் இதனை ஆராய்ந்து முடிவு செய்வதாக அன்றைய சூழலில் அக்கூட்டம் பிற்போடப்பட்டு பின்னர் குறித்தநாளின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் குறிக்கப்பட்டால் மேலும் பல எதிர்ப்புக்கள் வரும் எனக்கருதி நான் எவ்வாறு உம்மைப் பாராளுமன்ற உறுப்பினராக்க அர்ப்பணித்தேன் என்பது பலருக்குத் தெரியாவிட்டாலும் உமக்கு நன்றாக நினைவில் இருக்கும். இதற்கு மேல் இன்னுமொருவிடயத்தைக் கூறினால் சிலவேளைகளில் உமக்கு இன்று அது அவமானமாயிருக்கும். நீர் விரும்பிய பதவி கிடைக்காவிட்டால் உமது உடமைகளையும் எடுத்துக்கொண்டு நீர் கட்சியிலிருந்து வெளியேற ஆயத்தமாயிருந்ததையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். அன்று ஏனையோரைப் போன்று நானும் செயற்பட்டிருந்தால் இன்று உம்மால் எனக்கு இன்றைய நிலமையும் ஏற்பட்டிருக்காது. இதையே வளர்த்த கிடாய் மார்பில் பாய்வது என்று சொல்வதோ என நினைக்கின்றேன். திருமதி.மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களிடம் அமிரின் ப+தவுடல் அக்கினியுடன் சங்கமமாகி அவரது சாம்பல் சூடு தணிவதற்கு முன்னரேயே அமரரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், அவர் வகித்த கட்சி;ச் செயலாளர் நாயகம் பதவியையும் உமக்குத் தரவேண்டி அவரிடமிருந்து சிபாரிசுக்கடிதம் பெற்றதையும் நீர் மறந்திருக்கமாட்டீர். இது விடயமாக நீர் என்னுடன் பேசியதும், நான் உமக்களித்த பதில் ஏதாவது ஒரு பதவியைத்தான் உம்மால் கோரமுடியும் என்பதும் பலருக்குத் தெரியாது. இதை நீர் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்த நானும், இரா.சம்பந்தன், கலாநிதி.நீலன் திருச்செல்வம் ஆகியோரும் 1989 தேர்தலில் போட்டியிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எதுவித எதிர்ப்புமின்றி அமரரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அன்றைய மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் உமக்கு அளித்ததையும், எமது பெருந்தன்மையையும் மறந்துவிடவேண்டாம். பாராளுமன்ற உறுப்பினராக நீரும், செயலாளராக கலாநிதி நீலனும் தெரிவுசெய்த ஒரேயொரு குற்றத்திற்காக திரு.சு.நடேசு அவர்களுக்கும், திரு.செல்வராசா அவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை நீர் மறந்துவிட்டீரா? இவர்களை நீர் அதன்பின் சந்தித்துப்பேசினீரா, இப்படியான பெறுமதி கொண்ட நிகழ்வுகளையெல்லாம் எவ்வாறு இலகுவில் உம்மால் மறக்க முடிகிறது.

எமது கட்சி என்றும் பணவசதி படைத்த கட்சியாக இருக்கவில்லை. வேறுபல கட்சிகளின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் பெறும் வேதனத்திலிருந்து ஒரு பகுதி பணத்தையும் வழங்கப்படும் வாகனத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதியையும், வேறு பல வசதி வாய்ப்புக்களையும் கட்சியின் வளர்ச்சிக்;காக வழங்கப்பட்டு வந்த நிலையில் நாம் உமக்கு வழங்கிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் மூலம் - இரு ஊழியர்களையும், போட்டோகொப்பி இயந்திரம் ஒன்றும், தட்டச்சு இயந்திரம் மற்றும் தொலைபேசி ஆகியவை தவிர வேறு எதனையும் கட்சிக்காக நீர் கொடுக்கவில்லை. ஆனால் பக்ஸ் இயந்திரத்தை 35000.00 ரூபாவுக்கு கட்சிக்கே விற்று அந்தப் பணத்தைப் பெற்றக்கொண்டீர். இப்பதவி மூலம் கிடைக்கும் ஏனையவற்றை அனுபவிக்கும்போது கூட உமது மனச்சாட்சி உறுத்தவில்லை. ஏனைய கட்சிகளின் இவ்வாறான செயற்பாடுகள் ஒழுங்கு முறையாக இருந்தாலும் எமது கட்சியில் மட்டும் இது விதிவிலக்காக இன்றும் இருப்பது துரதிஷ்டமே.

1993ல் விசேட கூட்டத்தினை நடத்தி கூட்டணியின் புதிய தெரிவு இடம்பெற்றதையும் நீர் மறந்திருக்க முடியாது. 1994ல் இடம்பெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக நின்று நீர் தோல்வியுற்ற நிலையில், இரண்டு வாகனங்களில் அம்பாறை ஆதரவாளர்களை ஏற்றி வந்து ஏற்கனவே தேசியப்பட்டியலில் இடம்பெற்றிருந்த கலாநிதி. நீலன் திருச்செல்வத்தின் பெயரை நீக்கி உமது பெயரை இடுமாறு ஆதரவாளர்களைக் கொண்டே வற்புறுத்தியதும், அதற்கு சிவா ஐயா உட்பட அனைவரும் மறுப்புத் தெரிவித்ததும் ஞாபகமிருக்கும் என நினைக்கின்றேன். கஷ்டமான சூழ்நிலையாலும் கட்சி நிதிநிலை இக்கட்டான போதும் சிவா ஐயாவின் சிபார்சின் பேரில் மாதாந்தம் உமது செலவுக்கும், சிராவஸ்தியைவிட்டு வெளியேறிய பின்னர் தங்கியிருந்த அறை வாடகைக்கும் கட்சி நிதியிலிருந்து மீண்டும் பா.உ ஆக நியமிக்கப்படும்வரை பெற்றுக்கொண்டதையும் மறந்திருக்க முடியாது. கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் மரணத்தின் பின்பு அந்த இடத்திற்கு மீண்டும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எனது சிபார்சில் நியமிக்கப்பட்டிருந்தும் நீர் அப்போதுபொதுச் சபையைக் கூட்டும்படியும் மாநாட்டை நடத்தும்படியும் எவரிடமும் கேட்கவில்லை. அன்று எனது சிபார்சினை ஏற்று, என்னுடன் தீர்மானித்தவர்கள் திருவாளர் இரா.சம்பந்தன், ஜோசப் பராராஜசிங்கம், பொ.செல்வராசா, கி.துரைராசசிங்கம். எஸ்.ரி.ஆர் ஆகியோர் மட்டுமே. இந்த விடயத்தில் எனது பெருந்தன்மையை நேரடியாகவே கண்டிருப்பீர். இந்தியாவிலிருந்த தலைவர் சிவாவிடமும் இது பற்றித் தெரிவித்த போது அவர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்.

1983ல் இந்தியாவில் நாம் தங்கியிருந்த காலத்திலும் 2000ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வரை கட்சி மூலமாகப் பெற்ற வருவாய் உமக்கு ஒழுங்காகவே கிடைத்து வந்தது. 1983 - 1989 வரை அமிர் அவர்கள் மரணிக்கும் வரைக்கும் உமக்கு மாதாமாதம் கட்சி வேதனம் தந்தது. கலாநிதி நீலன் அவர்களின் இடத்திற்கு உம்மைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்ததன் பேரில் மூன்று உத்தியோகத்தர்கள், போட்டோக்கொப்பி இயந்திரம் ஒன்றும் வழங்கப்பட்டன. வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டினை விற்ற நிலையில் அதன் மூலம் பெறப்பட்ட பெருந் தொகைபணத்தில் யாரும் பங்கு கேட்டார்களா? அல்லது நீராகவேனும் உணர்ந்து கட்சிக்குச் சிறுதொகையேனும் கொடுக்கத் துணிந்தீரா? அல்லது அப்படி ஓரு எண்ணம் இருப்பதையாவது வெளிப்படுத்தினீரா? இல்லையே! எல்லாவற்றையும் முழுமையாக அமுக்கிக்கொண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி தந்த பதவியினை வியாபாரமாக்கிய ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நீர்தான் என்பதைமறுக்க முடியுமா? வாகனங்களால் மாத்திரம் உமக்கு வந்த வரவு ஏறக்குறைய 50 லட்சம் ரூபா வரும். இதை என்னால் நிரூபிக்க முடியும். இது 2004ம் ஆண்டு வரை அதன் பின்?

இவ்வாறான சூழ்நிலைகளில் உமது இன்றைய போக்கிற்கு காரணம் என்ன? சில சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. 2000ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக உம்மையே நியமிக்கும்படி நீர் நடவடிக்கைக் குழுவிற்கு மனுச் செய்தபோது, அக்குழு அதனை நிராகரித்தது. உமது மன உழைச்சலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்நிலையில் என்னால் அல்லது எனது அனுசரணையுடன் கிடைத்த சகல வாய்ப்பு வசதிகளையும் மறந்த நிலையில் அண்மைக் காலமாக உமது நடவக்கைகளை கண்டும், பார்த்தும், படித்தும் என்னையே நான் கோபித்துக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? இத்தனை துரோகங்களும் 2004 இற்கு முன்பு அதற்குப் பிந்திய துரோகங்கள் ஒன்றா இரண்டா? மீண்டும் நினைவுபடுத்த விரும்புவது யாதெனில், நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேரவில்லை. நானும் ஒன்றுபட்டு உருவாக்கிய கட்சிதான் தமிழர் விடுதலை கூட்டணி. உருவாக்குவதற்கும் சேர்த்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் நான் மட்டுமே கூட்டணியின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவன் என்ற பெருமையைப் பெற்றுக்கொள்ளக் கூடியவன். வயதில், அனுபவத்தில், முதிர்ச்சியில் நான் உம்டைவிட பெரியவன் என்பதை நீர் எப்படியாகிலும் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். இந்நிலையில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக வருவதற்கு முயற்சித்திருக்கக் கூடாது. இது சிறுபிள்ளை ஆசையென எண்ணி விட்டுவிடலாம். ஆனால் அத்தேர்தலில் மூலைமுடுக்கெல்லாம் சென்று பலரிடம் உமக்காக மட்டுமே வாக்களிக்கும்படி கேட்டதாகவும் பழைய இளைஞர் பேரவையினரைச் சந்தித்து உமக்காக வேலை செய்யுமாறு கேட்டதும் எனக்குத் தெரியும். ஆனால் பிரச்சார மேடையில் தம்பி சேனாதிராசா, என நான் விளித்துப் பேசும்போது நீர் உரையாற்ற எழும்பும் சந்தர்ப்பங்களில் என் பெயரை மட்டும் விளித்து உரையாற்றியதை நான் உமது புத்தி அவ்வளவுதான் என பொறுத்துக்கொண்டாலும், பலர் உமது சிறுமைத்தனத்தை என் முன்னாலேயே விமர்சிக்கக் கேட்டு வெட்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

2001ஆண்டு தேர்தலில் நீர் மிகவும் சின்னத்தனமாக நடந்துகொண்டீர். தலைவன் என்ற நிலையில் எனக்கிருக்கும் பொறுப்பு உமக்கு இருக்காதுதான். ஆனால் கூட்டுப்பொறுப்பானவர்கள் என்ற தோரணையில் ஒத்திசைவாக நடந்திருக்க வேண்டும். இன்றைய நிலைமையில் எமக்குச் சாதகமாக வரவேண்டும் என்பதற்காக சில செயற்பாடுகள் தவிர்க்கப்படவேண்டியதும் அவசியமானதாகும். ஒரு காலம் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் இன்று அந்நிலைமையில் இருந்து தம்மை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளனர் என்பது எனது அனுபவம். ஏனெனில் நான் அடிப்படை இடதுசாரிக்கொள்கைப்பற்றுக் கொண்டவன்.

என்னுடன் பழகிய பலருக்கு நன்கு தெரியும். 2000 ஆண்டுத் தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றவரைப் புறந்தள்ளி உமக்குச் சாதகமான வேட்பாளரை உட்புகுத்தியதால் பலரின் மனக்குரோதங்களையும், ஐயப்பாட்டினையும் தோற்றுவித்தீர். இது துரோகமல்லவா? நீரும் எம்முடன் இருந்தாலும் பல நல்லவற்றையும் எண்ணங்களையும் காலத்திற்கேற்ப செயற்படுத்த முடியாதவராகவே காணப்பட்டீர். இதனால் சில முரண்பாடுகள் தோன்றக் காரணமாக இருந்து. சமூக குரோதங்களையும், சமயக் குரோதங்களையும் இத்தனையாயிரம் உயிரிழப்புக்களின் பின்பும் பழைய குருடியின் நிலைக்குப் போவது வெட்கமானதாகத் தெரியவில்லையா?

உமக்கு ஞாபகமிருக்கும் என நினைக்கின்றேன். நீர் ஒரு வேட்பாளரின் பெயரினை சிபார்சு செய்திருந்தீர். 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவரை மன்றாடி நாம் கேட்டோம். எங்கள் பட்டியலில் பெயரிடவா என்று. அன்று திரும்பிக்கூடப் பாராமல் என்னை விட்டால் போதும் என்று ஓடியவர். திருமதி யோகேஸ்வரன் இறந்துகிடக்க கிட்டவும் வராமல் எட்டத்தில் நின்றவர். மற்றவர் 2000ம் ஆண்டு தேர்தலில் கண்ணால்கூடக் காணாதவர். இக்கட்டான கட்டங்களில் கட்சியின் நன்மைக்காக தங்களையே தியாகம் செய்யத் துணிந்த பலரை ஓரங்கட்டி சுயநல அரசியல் நடத்தும் நிலைமைக்கல்லவா உமது செயற்பாடுகள் காரணமாயிருந்தன. தம்பி! பாலை மறந்தாலும் பால் வார்த்த பானையை மறக்கக்கூடாது. 1994, 2000 தேர்தல்களை ஒருகணம் நினைத்துப் பார்த்தால் அன்று எங்களுக்குக் கைகொடுக்க மக்கள், கட்சி அபிமானிகள் சகலரும் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து எமக்கு வாக்களித்தார்கள் என்று. எங்கள் கட்சி தலைநிமிர முடிந்ததே யாரால்? நிச்சயமாக நானோ நீரோ உரிமை கோர முடியாது. எங்களின் துணிவு, அதை மீறிய கட்சித்தொண்டர்களின் துணிவு, மக்களின் பலம், அவர்களின் ஆதரவு ஆகியவையே! இவையே கட்சியை மீண்டும் துளிர்விடச் செய்தது என்பதை தினமும் நான் நன்றியுடன் நினைக்கின்றேன். ஆதலால் தயவு செய்து துளிரைக் கருக்கிவிட வேண்டாம்.

கடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி உறுப்பினர்களும் தெரிவாகி சகலரும் ஒன்றுகூடுதவற்கு முன்பே தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்து யாழ்ப்பாண மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக் கிளை பாராளுமன்றக் குழுத் தலைவராக திரு.இரா.சம்பந்தன் தெரிவானதற்கும், தேசியப் பட்டியல் உறுப்பினராக திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் நியமிக்கப்பட்டமைக்கும் நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியதாக செய்தி வெளியிடப்பட்டதே! இது உண்மையில்லை. பொய் என்பது மட்டுமல்ல பெரும் மோசடியும் கூட. அதேநேரம் இதை நிறைவேற்ற உடந்தையாக இருந்தது மட்டுமல்லாது சில உட்கட்சிப் ப+சல்கள் எழவும் காரணமாக வழிவகுத்த சில சூத்திரதாரிகளே இன்றைய உமது தமிழரசுக் கட்சி அமைப்பாளர்களாக பெயர் குறித்துரைக்கப்பட்டுள்ளனர். இதனை மறுக்க முடியுமா?உமக்கு ஒன்று தெரியவேண்டும்.

பாராளுமன்ற சம்பிரதாயப்படி மிகப் பழைய உறுப்பினர் ஒருவர்தான் பாராளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்படுவார். இச்சம்பிரதாயம் எமது கட்சியில் மீறப்படுவதற்கு தெரிந்தோ தெரியாமலோ நீரும் உடந்தையாக இருந்துள்ளீர். அப்படி அல்ல நீரே காரணமாக இருந்திருக்கிறீர். 1998ல் உமக்கு ஞாபகம் இருக்கும் என எண்ணுகின்றேன். யாழ் மாநகர சபைத் தேர்தல் பற்றிய அறிவித்தல் வெளியான சந்தர்ப்பம் அது. அத் தேர்தலில் எமது கட்சி போட்டியிடுவதே எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு சாதகமானதெனக் கருதி உம்மிடத்தில் கருத்துக்கேட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்த நீர் தேர்தலில் போட்டியிடக் கூடிய சூழல்; இங்கில்லை என்று அறிக்கையும் அனுப்பினீர். ஆனால் போட்டியிடாவிட்டால் யாழ்ப்பாணம் என்றுமே எமக்கு இனி இல்லை என்றாகிவிடும் எனக் கருதிய சிலர் எப்படியும் எங்களைத் தேர்தலில் போட்டியிடுமாறு தூண்டியதோடு பலர் தமது உயிரையும் மதியாது போட்டியிடவும் துணிந்தனர். இந்நிலையில் உம்மைத் தலைமை வேட்பாளராக போட்டியிடச் சம்மதமா எனக் கேட்டபொழுத நீர் மறுத்துவிட்டீர். இத்தருணத்தில் திருமதி.சரோஜினி யோகேஸ்வரன் விருப்பம் தெரிவிக்க அவரை முதன்மை வேட்பாளராக நியமிப்பதற்காக தம்பி சிவபாலன் தம்பதிகளுடன் முகுந்தனையும் திருமதி யோகேஸ்வரனையும் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தோம். அவர்களுக்கு நீர் எதுவிதமான உதவிகளோ, ஒத்தாசையோ வழங்காததுடன் கட்சியின் உறுப்பினர்களைக் கூட அறிமுகம் செய்து வைக்கவில்லை. இதனால் திருமதி யோகேஸ்வரன் அவர்கள் எவ்வாறு மனம்நொந்து கொண்டார் என்பதும், அங்கிருந்த விடுதியை விட்டு வெளியே பயங்கரமான சூழ்நிலையிலும் தனது சொந்த வீட்டிற்குச் செல்வதுதான் சரியானதெனத் தீர்மானித்து உம்முடைய ஒத்துழைப்புக் கிடைக்காததன் காரணமே என்பதை பலரும் ஏற்றுக்கொள்வர்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்களை நீர் பாதுகாப்பீர் என்று நாம் நம்பியிருந்த நிலைமையில் எவருக்கும் சொல்லாது நீர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்திருந்தீர். இது ஒரு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் செய்யும் கட்சி விசுவாசமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? இருந்தாலும் பல இடர்களுக்கு மத்தியில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந் நியமனப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்த போது எமது வேட்பாளர்களின் மனங்களும் நிலைமையும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஒரு தடவை சிந்தித்துப் பார்த்தால் தெரியும். அவமானப்பட்டும் வேதனைப்பட்டும் மீண்டும் கொழும்பு திரும்பிய திருமதி யோகேஸ்வரன், சிவபாலன், முகுந்தன் ஆகியோர் நடந்தவற்றைக் கவலையுடன் தெரிவித்தனர். நிதி நிலைமை கட்சியில் எப்படி என்பது பலருக்குத் தெரியாதிருந்தாலும் உமக்குத் தெரியும். ஆனாலும் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது கட்சிக்கு ஏற்பட்ட அவமானம் எனக் கருதிய நான் இதனை எதிர்த்து கலாநிதி நீலனின் முழு ஒத்துழைப்புடன் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து, வழக்கில் வெற்றியும் பெற்றோம். அதன் பிரகாரம் எமது நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நானும் திருமதி.யோகேஸ்வரன், தம்பிகள் சிவபாலன், இரவிராஜ், அரவிந்தன், முகுந்தன் ஆகியோருடன் யாழ்ப்பாணம் சென்று குமரன் விடுதியில் தங்கியிருந்து தேர்தல் பிரச்சாரத்தை இறுதி 4 அல்து 5 நாட்கள் நடத்தினோம். இச்சந்தர்ப்பத்தில் இந்தியா சென்று நீர் எமது கட்சிக்கு ஆதரவான நிலைமை தேன்றியுள்ளத்தைத் தெரிந்து கொண்டு, நீரும் யாழ்ப்பாணம் வந்து தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவினீர். தேர்தல் முடிவுகள் வெளியாகி எங்களின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பு இத்தேர்தலில் உம்மைப் போட்டியிட வைக்காதது எனது குறையென நீர் குறைபட்டுக்கொண்டதாக செய்திகள் கசிந்தன. நான் உம்மை தலைமை வேட்பாளராக பெயரிடவா என்று கேட்டதும் அதற்கு நீர் மறுத்ததும் மெய். இதனையாவது நீர் ஏற்றுக்கொள்வீர் என நம்புகிறேன்.

இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் பாரம்பரியமும், பலவரலாறுகளைக் கொண்டதும் பல தியாகங்களைச் செய்த தியாகச் செம்மல்களால் கட்டி வளர்த்தெடுத்த எம் கட்சியினை ஆட்டம் காண வைத்தது உமக்கு தர்மமாகப்படுகிறதா? பிரிந்து நின்ற தமிழ்க் கட்சிகள் ஏன் ஒன்றிணைந்தன? ஒன்றிணைந்ததன் வெற்றியும், ஆட்சியாளர்களை திகிலடையச் செய்ததும் வரலாறாக இருந்து இன்று அவைகள் சரித்திரமாகி தீர்வின் வாசலில் நிமிர்ந்து நிற்கும் நிலையில், மீண்டும் பல தமிழ்க் கட்சிகளாக கூறுபோடுவதும், அதற்கான முயற்சியும், முன்னெடுப்பும், முடுக்கிவிடுவதும் மறைந்த தமிழ்த் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நீர் செய்யும் மாபெரும் மன்னிக்க முடியாத குற்றமென்பதும் தெரியவில்லையா? பெரும் துரோகம் இல்லையா?

தம்பி! தலையிடிக்கு தலையணை மாற்றுவது தீர்வல்ல. ஏன் தலையிடி வந்தது என்று கண்டு அதற்குப் பரிகாரம் காண்பதே சிறப்பு. குழம்பாமலும், குழப்பாமலும் நிதானமாக நின்று நேர்மையாக அரசியல் நடத்துவது தான் முறை. அதனை விடுத்து தானும் குழம்பி இருப்பவரையும் குழும்பி அரசியல் லாபம் பெற முற்படுவது அழகல்ல. தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. இதில் இரண்டாவது விடயத்தில் தான் மிகக் கவனமாக காய்நகர்த்துவதாக நீர் எண்ணுகின்றீர். ஆப்பிழுத் குரங்கின் கதை உமக்குத் தெரியாததல்ல. அவ்வாறான ஓரு நிலைமை உமக்கு வந்துவிடுமே என நான் வருந்துகின்றேன். இப்படியான சந்தர்ப்பத்தில் எவருமே துணைக்கு வரார். கண்ணிருந்தும் பாராது, காதிருந்தும் கேளாது, வாயிருந்தும் பேசாது மகாத்மாவின் மந்திகளாகவே நீர் துணைக்குக் கூப்பிடுவோர் இருப்பர். இது உமக்குத் தேவைதானா? தற்காலிகமாக நீர் சில பதவிகளை அனுபவிக்கலாம். நான் தாழ்ந்து போகலாம். ஆனால் என்றோ ஒருநாள் என்னை உலகம் போற்றும். அது உறுதி. ஆனால் அந்த நேரம் நான் இருக்கமாட்டேன்.

முன்பு ஒரு நாள் உதயன் பத்திரிகையில் பேட்டியொன்றில் உயர் பாதுகாப்பு வலயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் கூறப்பட்ட உமது கருத்துக்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனையிறவு மீட்சிப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் மும்மரமாக தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் அதற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பேசியது மட்டுமல்லாமல் ஆனையிறவை மீளவும் ஸ்ரீலங்கா அரசு கைப்பற்றுவது கனவில் கூடப் பலிக்காது எனத் துணிந்து கூறியவன் நான் ஒருவன் மட்டுமே. நீர் உட்பட பலர் அன்று பாராளுமன்றத்திலிருந்த போதும் நான் ஒருவனே பல விடயங்கள் குறித்துப் பேசியிருக்கின்றேன். அப்படியிருக்கும் நிலையில் மீண்டும் ஆனையிறவினை ஸ்ரீலங்கா அரச படைகளிடம் போவதை நான் ஏற்றுக்கொள்வேன் என எண்ணுவது முட்டாள் தனமானதாகும். அந்த முகாம் இருந்த காலத்தில் உம்மைவிட துன்பப்பட்டவனும், பாதிக்கப்பட்டவனும் நான் என்பதும், அன்றைய எனது கிளிநொச்சித் தொகுதி மக்களும் ஏனைய பயணிகளும் என்பதும் உமக்குத் தெரியாமல் போகலாம்.

இது விடயமாக நடந்ததென்ன? இதற்கான காரண கர்த்தா யார், தற்போதுள்ள அரச படைகள் வெளியேறி 1991ஆம் ஆண்டில் எங்கெங்கு நிலைகொண்டிருந்தார்களோ அந்த முகாம்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை திரு.அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் ஜப்பானிய விசேட தூதுவர் கௌரவ யசூசி ஆகாஷி முன்னிலையில் வைத்த வேளையில் திரு.விநாயகமூர்த்தி அவர்களைப் பார்த்து, அப்படியானால் ஆனையிறவைக் கேட்பார்கள் கொடுக்க முடியுமா? என்று கேட்டேன். இது பொல்லுக்கொடுத்து அடிவாங்கும் செயலல்லவா! உங்களின் கருத்துப்படி 1991ஆம் ஆண்டு இருந்த இடங்களுக்குப் படைகள் போகவேண்டும் எனக் கோருவது மீண்டும் அரச படைகளை ஆனையிறவு முகாமிற்குப் போகவைக்கும் முயற்சியாகவல்லவா இருக்கும். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலிகொண்டு பறித்தெடுத்த முகாமை மீளவும் அரச படைகளிடம் தாரை வார்ப்பது சரியானதா? இப்படித்தான் நான் திரு.விநாயகமூர்த்தியிடம் கேட்டிருக்கவேண்டும். ஆனால் அதனை புரிந்துகொண்ட விநாயகமூர்த்தி தனது புத்திசாதுரியமற்ற கோரிக்கையின் தாக்கத்தினை சமாளிப்பதற்காக என்மீது வீணான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார். தற்போது பல தடவை தான் அப்படியாருக்கும் கூறவில்லை என நண்பர் வினாயகமூர்த்தி கூறிவிட்டார். அவரோ அல்லது நீரோ அல்லது இருவரும் சேர்ந்தோ பகிரங்கமாக அறிக்கை விட்டு எனக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை போக்குவீர்களா? இந்தப் பொய்யான கூற்றே என்னை 2004 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்க உதவியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இப்படிப் பல நூறுபக்கங்களில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். எம்மவர் சிலரின் துரோகச் செயலால் மனமுடைந்திருப்பவன் நானே. அமிர் காலமானதன் பின்பு நான் கட்சிக்காற்றியதொண்டு முன்னையதிலும் பார்க்கப் பலமடங்காகும். இதை உணராது செயற்படுவர்களில் நீர் முன்னணியில் நிற்பது வேதனைக்குரியதாகும். அமிர் அவர்களின் இறப்பால் பெரிதும் இலாபம் அடைந்தவர் நீர் மட்டுமே. அவர் பெயரை உச்சரிக்க தயங்குபவரும் நீரே.

நீர் இளைஞனாக இருந்தகாலம் தொட்டே அரசியலில் உம்மை வளர்க்க முயற்சித்திருந்தேனே தவிர, உமக்கு என்றும் கடுகளவேனும் துரோகம் செய்ய நான் நினைத்தவனல்ல. ஆனால் அன்று தொட்டு இன்றுவரை என்னை நீர் விரோதியாகவே கணித்து செயற்படுகின்றீர். எது எப்படியிருப்பினும் தம் உதிரத்தை சிந்தி பல தியாகங்களைச் செய்து உருவாக்கி கட்டிக்காத்து எம்மிடம் கையளிக்கப்பட்ட எமது தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியை காக்க வேண்டிய முக்கிய கடமை எனக்குண்டு. இதே கடமைப்பாடு உமக்கும் உண்டென உணர்ந்து என்னுடன் ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு உமக்கும் உண்டு. எனது இறுதி மூச்சிருக்கும் வரை இப்பொறுப்பை உணர்ந்து செயற்பட்டே வருவேன். எமது கட்சிக்காக எனது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன் என உறுதியளித்து இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன். நீதி நியாயம் உமக்கு விளங்குவதாக தெரியவில்லை. இக்கருத்துக்களை வலியுறுத்தி பல கடிதங்கள் முன்பும் எழுதியுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு சம்பந்தமாக நீர் பேசியும் எழுதியும் வரும் கருத்துக்களுக்கு இதை பதிலாக ஏற்றுக்கொள்ளவும். இன்றேனும் உமது தவறை உணர்ந்து நீர் பயப்படுவதற்கு யாரும் இல்லாத பட்சத்தில், தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்டு இறுதிவரை அவரே தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக்கூட்டணியை காப்பாற்ற முன்வருவீரேயானால், கட்சியின் மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றை தரத்தயாராகவுள்ளேன். இவ்வழைப்பு திரு.இரா.சம்பந்தன் உட்பட கட்சியின் சகல முன்னைய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் சேர்த்து விடப்படும் பணிவான வேண்டுகோளாகும். தந்தை செல்வா நாமம் நீடூழி வாழ்க!

வணக்கம் அன்புடன், என்றும் கட்சிப்பணியிலுள்ள

வீ.ஆனந்தசங்கரி, செயலாளர் நாயகம் தமிழர் விடுதலைக் கூட்டணி

No comments: