
அமிர்தலிங்கம் என்ற ஆற்றல் மிக்க தலைவர் தமிழினத்தில் இருந்து அநியாயமாக பறிக்கப்பட்டு இன்று 20 ஆண்டுகள் ஒடிவிட்டன. தமிழினத்தின் நலனுக்காகவும், அரசியல் விடிவிற்காகவும் வாழவிடப்பட்டிருக்க வேண்டிய தலைவர் புலிகள் இயக்கத்தின் அரசியல் தொலைநோக்கற்ற காரணத்தினாலும், தமிழ் அரசியலில் தமது ஏகபோக அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகவும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் உத்தரவில் (13.07.1989) கொல்லப்பட்டார்.
பேச்சுவார்த்தை என்ற நாடகம் ஆடிய புலிகள் கொழும்பு ஹில்ற்ரன் ஹொட்டலில் பிரேமதாசா அரசுடன் அரசியல் உறவில் இருந்து கொண்டு தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் அ.அமிர்தலிங்கத்தையும், வே.யோகேஸ்வரனையும் சுட்டுக்கொன்றனர் என்பதுதான் தமிழீழ போராட்டத்தின் கறைபடிந்த அத்தியாயங்கள் பலவற்றில் ஒன்று. இன்று 20 ஆண்டுகளின் பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவ்வியக்கத்தின் ஒட்டுமொத்தமான தலைமையும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் சரணடைதல் என்ற நாடகத்தில் ஒரேயடியாக சுட்டுக்கொல்லப்பட்டார்கள். புலிகள் இயக்கம் தமிழீழ போராட்டத்தின் முன்னணி சக்திகளாக விளங்கிய மிதவாத, தீவிரவாத தமிழ் தலைவர்களை கொலை செய்து, தமிழினத்தின் ஆற்றல் மிகு தலைமைகளை தமது ஏகபோக அதிகார தன்மையினால் உந்தப்பட்டு அழித்து, தமிழினத்தை பலவினப்படுத்திவிட, அதேபுலிகளை இலங்கை இராணுவம் இன்று அழித்து விட்டுள்ளது. ஓட்டுமொத்தமான தமிழினத்தின் அரசியல் உரிமை போராட்டத்தை பலவீனப்படுத்தி இன்றைய முடிவுக்கு வழிகோலிய பொறுப்பு புலிகளையே சாரும். 1983இல் த.வி.கூ செயலாளர் நாயகமான அமிர்தலிங்கம் அவர்கள் பிரபாகரன்பற்றி குறிப்பிடுகையில் “பிரபாகரன் ஒரு வீரன், நினைத்ததை செய்து முடிப்பார்… ஆனால் அவரில் விசயமில்லை” என்று தன்னிடம் குறிப்பிட்டதாக நண்பர் ஒருவர் கூறியிருந்தார். பிரபாகரனின் திறமைகளை ஏற்றுக்கொண்ட அவர், தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் தனியொருவரில் தங்கி இல்லை என்பதை அன்றே தெரிவித்திருந்தார்.
மக்களை அடிமைகொண்ட ஆயுதம்
இன்று 26 ஆண்டுகளின் பின் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களின் தீர்க்கதரிசனமான அன்றைய கூற்றை இன்றைய நிலமைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் எமது போராட்டம் எத்தனை வருடங்கள் பின்னோக்கி நகர்த்தப்பட்டு விட்டது என்பது புலனாகும். புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் பிறநாட்டு பிரஜாவுரிமையுடன் தமிழீழ கனவில் இன்னும் இருக்க, எம்போன்றவர்கள் 13ம் திருத்தத்திற்கு மேலான அதிகாரப்பரவலாக்கம் என்ற நிலைப்பாட்டில் இருக்க, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களோ எம்மை நிம்மதியாக வாழவிட்டால் அதுவே போதும் என்ற நிலைப்பாட்டில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துவிட்டார்கள். சுருக்கமாக கூறின் இலங்கை அரசு தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை மறுக்க, புலிகளோ தமது மக்களின் நாளாந்த அடிப்படை உரிமைகளையே மறுத்து விட்டிருந்தனர். அன்று பல்கலைக்கழக தரப்படுத்தலுக்கு எதிராக அரசை எதிர்த்து கிளர்ந்து போராட வந்த மக்கள், பின்னர் தமது சொந்த பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல விடும்படியும், அவர்களை புலிகளின் கட்டாய இராணுவ பயிற்சியில் இருந்து காப்பாற்ற முடியாமலும், புலிகளிடம் கைதிகளாகி போகும் மோசமான நிலைக்கே தள்ளப்பட்டார்கள்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய அரசியல் உரிமை போராட்டம் அகிம்சை வழி வந்து, ஆயுதப்போராட்டமாக நியாயத்துடன் நிமிர்ந்தெழுந்தபோது அதை காலத்தின் கட்டாயமாக பெரும்பான்மை தமிழ்பேசும் மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஆயுதப்போராட்டம் ஒன்றையே முதன்மை படுத்திய புலிகள், எமது அரசியல் உரிமை போராட்டத்தில் பங்காளிகளாக இருந்து போராட்டத்தை சரியான வழியில் நெறிப்படுத்தியிருக்க வேண்டிய முன்னோடிகளான தலைவர் அமிர்தலிங்கம் போன்ற ஆற்றலும், தமிழின பற்றும்கொண்ட பலரை ஒழித்துகட்டியதுடன், சிலரை ஒரமும் கட்டினர். அவ்விடத்தை போலிகளைக் கொண்டு நிரப்பியும் விட்டனர்.
ஆற்றல் மிக்க தலைமை
அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களின் அர்ப்பணிப்புள்ள தலைமை மிகவும் தனித்துவமானது. அறிவு, அஞ்சாமை, நேர்த்தியும் அபாரா ஞாபக சக்தியும் கொண்ட ஆழுமையான பேச்சு! எதிர் தரப்பினரையும் உள்வாங்கும் தர்க்கரீதியானவாதம்! அரசியலில் நேர்மை, வசதிக்கும் வாய்ப்புகளுக்கும் பதவிக்கும் வால்பிடிக்காத வைராக்கியம்: ஆயுத தாரிகளையும் நிராயுதபாணியாக எதிர்கொள்ளும் துணிச்சல்! ஓயாத இலட்சிய வேட்க்கை! என்று தலைமைத்துவத்திற்கே உரித்தான தனித்துவம் கொண்ட ஒப்பற்ற தலைவர் அவர்.
இலட்சியவாதிகள் அழிவதில்லை என்று சொல்வார்கள். அதுபோல் அமரர் அமிர்தலிங்கம் அவர்களும் தமிழினத்தின் அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்ற இலட்சியத்திற்காக அயராது உழைத்தவர். தமிழினத்தை ஒற்றுமையாக வழிநடத்த வேண்டும் என்ற துடிப்புடன் தமிழீழம் என்று சொல்லப்பட்ட பிரதேசங்களின் மூலை முடுக்கெல்லாம் தனது கால்களால் அளந்து வடக்கு கிழக்கு மக்களை ஒரு அணியின் கீழ் கொண்டுவந்த கடும்பணியில் வெற்றிகண்டவர். அந்த வெற்றி கட்சியின் வெற்றியாக கருதப்பட்ட போதிலும், தமிழினத்தை இனியொரு தடவை ஒரே அணியில் அவ்வாறு அணிதிரட்ட முடியுமா என்பது இனி சந்தேகமே?
தலைமைக்கு முன் கடமை
தமிழினத்திற்கான பொறுப்புள்ள தலைமையை தன் கடைசி காலங்களிலும் தந்தவர். தனது கட்சியின் சகாக்கள் சிலர் அரசியலைவிட்டு ஒதுங்கி, வெளிநாடுகளில் சென்று குடியேறியிருந்த போதிலும் தான் எடுத்த கடமைகளை அர்ப்பணிப்புடன் தொடர்ந்தவர். தனது இறுதி காலங்களில், குறிப்பாக இந்திய அரசியல் மற்றும் ராஜதந்திரிகள் மத்தியில் கட்சியின் ஏனைய சகாக்களை அழைத்துச்சென்று அவர்களுக்கும் தனது அரசியல் தொடர்புகளை தமிழினத்தின் எதிர்கால தேவைகருதி அறிமுகம் செய்து வைத்தார். தனது அகால மரணத்தையும் வரும் முன்னே ஊகித்துக்கொண்ட அவர், “எமக்கு என்னென்ன முடிவுகள் காத்திருக்கின்;றது என்பது எனக்கு தெரியும்” அதனால் ஏனையவர்களும் தன்னோடுவந்து இந்திய அரசமட்ட தொடர்புகளை வைத்திருங்கள் என்று திரு. ஆனந்தசங்கரியிடமும் கூறியதை அவரே எனக்கு தெரிவித்திருந்தார். இந்தியாவின் நட்பு எமது விடுதலை போருக்கு என்றும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் வலியுறத்தி வந்தவர். தனக்கு பின்னைய காலத்திலும் தமிழ் மக்களின் உரிமைபோராட்டம் தொடரப்பட வேண்டும் என்றும் விரும்பியவர்.
வரலாறு கைது செய்யும்
அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களின் கொலைக்கு உரிமைகோரும் நேர்மை மட்டுமல்ல துணிவும் கூட புலிகளிடம் இருக்கவில்லை. சில காலங்களின் பின்னரே புலிகளின் மாத்தையா மறைமுகமாக உரிமை கோரியிருந்தார். துரோகிகளுக்கு என்ன தண்டனையோ அதுதான் அவருக்கும்…. என்று மறைமுகமாக உரிமை கோரியிருந்த மாத்தையா, தான் வடித்த வார்த்தைகளுக்கு உள்ளேயே அடங்கிப்போய் தன்னை தானே துரோகியாக்கி, மிகவும் மோசமான நிலையில் துரோகி என்று அதே புலிகளினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டர். அமிர் அண்ணன் அவர்களின் கொலைக்கு அன்று எவ்வாறு புலிகள் உரிமைகோரவில்லையோ, அதேபோலவே பிரபாகரனின் கொல்லப்பட்ட உடலையும் புலிகள் உட்பட எவரும் உரிமைகோர முன்வரவில்லை என்பதும் தமிழீழ போராட்டத்தின் துரதிஷ்டமே. புலிகளே ஏக பிரதிநிதிகள் என்று பாராளுமன்ற கதிரைக்கு ஆசைப்பட்ட கூட்டமைப்பினர் (TNA) ஏகபிரதிநிதித்துவ அடிமைவிசுவாசத்திற்கு கூட பிரபாகரனின் உடலை ஒப்படைக்கும்படி கோரவும் இல்லை. இன்னும் சிலர் அரசியல் செயலர் நடேசனின் இறுதிநேர தொலைபேசி அழைப்புக்குகூட எட்டமுடியாத தூரத்தில் நின்றனராம். தமிழீழ போராட்டம் நல்வர்களையும், வல்லவர்களையும் விலக்கி பலரை களையெடுத்துவிட்டு, உண்மையான இலட்சியபற்று அற்றவர்களை வைத்து நிரப்பிக்கொண்டது. அண்ணன் அமிர்தலிங்கத்தின் இடத்தை குதிரை கஜேந்திரன் அலங்கரித்தால் தமிழீழ போராட்டம் முன்னோக்கி நகரவா முடியும்?
சொல்லும் செயலும் ஒன்றான தளபதி
தமிழ் மக்களின் அரசியல் நெருக்கடிகளின் போதும் சரி தனது உயிருக்கு ஆபத்து உண்டென்று தெரிந்த போதிலும் சரி தான் தொடங்கிய அரசியல் கடமைகள், ஈடுபாடுகளின் இருந்து விலகிவிட முடியாது என்பதை உணர்ந்து செயற்பட்டவர். இன் நெருக்கடிகளுக்கிடையில் அரசியலை விட்டு ஒதுங்கி பிறநாடுகளில் வசதியாக வாழக்கூடிய வசதிகள் இருந்தும், அந்த பாதையை நாடுவது அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கும், செயலுக்கும் முரண் என்று கருதி, உயிர் ஆபத்து தன் அரசியல் வாழ்வில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என வாழ்ந்தவர். 1981 மாவட்ட அபிவிருத்தி சபை பிரச்சார கூட்டத்தின் நடுவே துப்பாக்கிகளுடன் புகுந்த இளைஞர்களின் துப்பாக்கி வேட்டுக்களில் மக்களும் மேடையில் நின்றொரும் சிதறியோட, அண்ணன் அமிர் அவர்கள் மேடையை விட்டு அசையாது நின்ற அந்த சம்பவம் இங்கு நினைவு கூருவது பொருத்தமாகும். இதுபற்றி பின்னர் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்ட அவர் “அன்று மேடையைவிட்டு ஒடியிருந்தால் பின் தலைவனாக மக்கள் முன் வந்து நிற்க்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு தனது அரசியல் வாழ்வில் தலைவனாக இருக்க தகுதியுண்டு என்று இறுதிவரை வாழ்ந்தும் காட்டியவர்.
எழுபதுகளின் நடுப்பகுதியில் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதும் ஒர் மறக்க முடியாத உண்மைதான். ஆயினும் தமிழ் உணர்வையும், இனப்பற்றையும், ஒற்றுமையையும் தமிழ்மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு பாசறை அமைத்து செயற்பட்டவர். பின்னைய ஆயுதபோராட்டம் மக்கள் நியாயப்படுத்தலுடன் பரிணாமிப்பதற்கும் காரணமானார். “இலட்சிய வேட்க்கை ஏற்றிவைத்த தலைவா”; என தீவிரவாத தலைவர்களும் ஒப்புக்கொண்ட தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர்!
வென்றது பிரச்சாரம் தோற்றது போராட்டம்
இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றுவிட்டு தமிழீழ தனியரசை நிறுவலாம் என்றோ அன்றி அமிர்தலிங்கம் அவர்களை கொன்றுவிட்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமை போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது, என்பதையோ அர்த்தமுள்ள எந்தவொரு மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். தமிழீழ போராட்டத்திற்கு மேலும் உரம் சேர்க்கக் கூடிய ஆற்றல் மிகு தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை அழித்தவர்கள் தமிழீழ போராட்டத்தின் பலத்தையும், வெற்றிக்கான வழிமுறைகளையும் பலவீனப்படுத்தியவர்களே ஆவர். கடந்த 26 வருடகாலத்தில் தமிழீழ பிரச்சாரம் மட்டுமே வென்றது – தமிழீழ போராட்டம் அல்ல – என்பதை வரலாhறு நிகழ்விலும் காட்டிச்சென்றது. தமிழ்மக்களின் உன்னமானதும், நியாய ப+ர்வமானதுமான அரசியல் உரிமை போராட்டமும், ஆற்றல் மிகு தலைமைகளும் அழிக்கப்பட்டது அரச பலத்தினால் அல்ல. நிலை தெளிவற்ற தமிழ்தேசிய பயங்கரவாதம் தன் இனத்தின் மீது ஏவிய பயங்கரவாதத்தினாலும், அதிகார மோகத்தினாலும்;தான். தமிழ் தேசியத்தின் பலவீனமே எமது தோல்விகளுக்கு காரணம்: எதிரிகளையும், நண்பர்களையும் இனங்காண தெரியவில்லை. எமது இறுதி இலக்கில் இணைந்து செயற்பட முடியாத பலவீனம். அதிகாரம் கிடைக்காத ஆட்சியில் காட்டிய அதிகூடிய அக்கறையும் அங்கு விடுதலை என்ற பெயரில் நடாத்திய அதிகார துஷபிரயோகமுமே எமது போராட்டத்தை பலவீனப்படுத்தி முடக்கிய வரலாற்று தவறுகளாகும்.
No comments:
Post a Comment