அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, March 14, 2010

திருந்த - ஆலோசனைக்காக பழைய ஒரு கடிதம்!

22-06-2007

திரு. வே.பிரபாகரன்
தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள்
கிளிநொச்சி


தீர்வுக்கு ஒரே வழி


அன்புடன் தம்பி!

கடந்த மூன்று நான்கு ஆண்டு காலமாக எனது கடிதங்களுக்கு நீர் பதில் அனுப்பாதமை துரதிஸ்டமே. இக்கடிதத்திற்கும் உமது பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கசப்பானாலும் இக்கடிதத்தை கவனம் செலுத்திப் படிப்பீர் என எதிர்பார்க்கின்றேன். நான் இந்த நாட்டு மக்கள்மீதும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களமீதும் மிக அக்கறை கொண்டுள்ளேன் என்பதை புரிந்து கொள்ளவும். நிலமை கட்டுக்கு மீறி செல்வதால் மேற்கொண்டு தாமதிக்காமல் மிகவும் துன்பப்படும் நாட்டு மக்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவர வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இங்கே குறிப்பிடும் சில விடயங்கள் என்னால் முன்பு எழுதப்பட்ட கடிதங்களில் குறிப்பிடப்படாதவையாகும். இன்றைய பரிதாபமான நிலையில் எமது மக்கள் வாழ்வதற்கு முழுப்பொறுப்பையும் நீரே ஏற்கவேண்டிய காலம் வந்துவிட்டது. உமக்கு விரும்பத்தகாததாயிருந்தாலும் கடந்த காலத்தை மறந்து இலங்கையின் அனைத்து மக்களினதும் சுபிட்சமான வாழ்விற்கு பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஏனையோர் சிலர் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்துவது போல் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் உமது கொடூரமான செயல்கள் காரணமாக தமிழ் மக்களால் அவ்வாறு நீங்கள் கணிக்கப்படவில்லை. உலகிலேயே மிக கொடூரமானவர் என்ற பெயரை நீங்கள் சம்பாதித்துள்ளீர்கள். நாட்டு மக்களுக்கு தினமும் பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதன் மூலம் உங்களுடைய மதிப்பை மிக வேகமாக இழந்துவருகின்றீர்கள் என்பதை அறியமாட்டீர்கள். உங்களுடைய பயங்கர ஆட்சியால் என்னைப்போன்ற ஒரு சிலர் தவிர சகல தமிழர்களின் குரலையும் அமைதிப்படுத்திவிட்டீர்கள். எனது காலத்திலேயே எமது இனப்பிரச்சினைக்கு தீர்வை காண உதவத் தவறுவீர்களேயானால் என்றும் தீர்வை காணமுடியாது. தயவு செய்து பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை ஏற்பீர்களேயானால் அதற்கு பெரும் வரவேற்பு கிடைப்பது மட்டுமல்ல ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் எதிர்பாராதவர்களின் ஆதரவு கூட கிடைக்கும்.

கடந்த காலத்தில் நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்களை உமது ஞாபகத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். உம்மை அவமானப்படுத்தவோ அல்லது சங்கடப்படுத்தவோ அல்ல தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதும் சிலரது கண்களை திறக்க உதவுவதற்கே. பெரும்பகுதியான சிங்கள மக்களின் நிலைப்பாட்டுக்கு இது மாறானதாகும். நியாயமான முறையில் செயற்படும் பெரும்பகுதியான சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் சமமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்.

நாளுக்கு நாள் மக்கள் மாறிக்கொண்டு வருகின்றார்கள் - சிலர் அபூர்வமான சிந்தனைகளையும் - புதிய புதிய கண்டுபிடிப்புக்களையும் வெளியிடுகின்றார்கள். சரித்திரம் திரிக்கப்படுகின்றது. சிலர் தமிழர்கள் போத்துக்கீசரால் யாழ்ப்பாணத்தில் புகையிலை நடுகைக்காக கொண்டுவரப்பட்டதாக கண்டுபிடித்துள்ளார்கள், மேலும் சிலர் இந்நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதெனவும் அவர்களே இந்தநாட்டில் வாழ முடியும் என்றும் கூறுகின்றார்கள். இக்கூற்றுக்கு மிகக் கீழ் இறங்கி ஒரு விவாதத்தை நடத்த நான் விரும்பவில்லை. 600 இலட்சம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தை 20 மைல் நீளம் கொண்ட பாக்குத் தொடுவாயே பிரிக்கின்றது என்பதை ஒருவர் அறிந்திருந்தால் போதும். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் நாட்டுக்கும் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடைப்பட்ட கடலை பலர் நீந்திக் கடந்துள்ளனர். இரவு போசனத்தை முடித்துக்கொண்டு இந்தியா சென்று ஒரு எம்.ஜி.ஆர் படத்தை பார்த்துவிட்டு அதிகாலை நாடு திரும்பிவிடும் சகோதரர்களைப்பற்றி எனது பள்ளித்தோழர்கள் கூறியிருக்கின்றார்கள். மேலும், 5 ஈஸ்வரன் கோயில்கள், தெவிநுவரவில் உள்ள விஸ்ணு தேவாலயம், கதிர்காமத்து முருகன் போன்றவை சரித்திர காலத்திற்கு முந்திய மிகப்பழமை வாய்ந்த கோவில்களாகும். ஒரு இனத்தையோ ஒரு குழுவையோ சேர்ந்தவனைப் போல அல்லாமல் எப்பொழுதும் நான் எமது பிரச்சினைகளை தேசப்பற்று கொண்ட ஒரு இலங்கையனாகவே நோக்குகின்றேன். இதுவே தேசாபிமானமாகும்., அமைதியும் பொறுமையுமே எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மிகவும் தேவைப்படுகின்ற இவ்வேளையில் நியாயமாக செயற்படும் சிங்களவர்களை கூட தூண்டிவிட்டோ அவமானத்தை ஏற்படுத்தியோ பிரச்சினையை மேலும் சிக்கலடையச் செய்ய நான் விரும்பவில்லை.

தனிச்சிங்களச் சட்டத்தை மைல்கல்லாக வைத்துப்பார்ப்பின் எமது இனப்பிரச்சினை 50 வயதை தாண்டிவிட்டது. அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உயர் வகுப்புகள் உள்ள பாடசாலைகள் அத்தனையிலும் சிங்கள பட்டதாரிகள் சிங்களம் போதிப்பதற்காக நியமிக்கப்பட்டமையினால் இத்தகைய ஒரு சட்டத்திற்கு அவசியம் ஏற்படவில்லை. அப்போது ஒன்றில் நீர் பிறந்திருக்கவில்லை அல்லது நீர் பால்குடியாக இருந்திருப்பீர். அக்காலத்தில் சிங்கள தமிழ் முஸ்லிம் மற்றும் சிறு குழுக்கள் சமாதானமாகவும் அமைதியாகவும் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தும் நேசித்தும் வாழ்ந்தனர். தென்னிலங்கையில் உள்ள ஒரு கோவில் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு சிறு சம்பவம் தவிர – அதுகூட பல ஆண்டுகளுக்கு முன்- அமைதியான எமது நாட்டில் வகுப்புக் கலவரம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அந்தச் சம்பவத்தில் யார் யார் சம்பந்தப்பட்டார்கள் என்பதை கூட நான் கூறவிரும்பவில்லை.

சகல இன மக்களும் அமைதியாக வாழ்ந்த நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்ததே தனிச்சிங்களச் சட்டம் தான். அதைக்கூட உரிய நடவடிக்கை எடுக்கும் முயற்சியை சில இனவாதிகள் திட்டமிட்டுக் குழப்பியதாலேயே இந்நிலை ஏற்பட்டது. இல்லையேல் இந்நிலை ஏற்பட்டிருக்காது. அத்தகைய ஒருசிலர் உலகின் எப்பகுதியிலும் இருக்கத்தான் செய்வார்கள். நீர் குழப்பாது இருந்திருப்பின் மிகப்பிரபல்யமான அஹிம்சைவாதி தந்தை செல்வநாயகம் கியு சி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சமாதானமான முறையில் தீர்வு ஒன்றை கண்டிருக்கும். ஆனால், அதுவரை யாழ்ப்பாணச் சரித்திரத்தில் இடம்பெறாத ஒரு தீவிர நடவடிக்கையை நீர் எடுத்தமையாலேயே நிலமை மோசமடைந்தது. யாழ்ப்பாணத்தின் முன்னைநாள் மேயராகவும், எம்பியாகவும் இருந்த திரு. அல்பிரட் துரையப்பாவை சுட்டுக்கொன்று துப்பாக்கி கலாச்சாரத்தை நீர் அறிமுகம் செய்ததாலேயே நிலமை வன்முறைக்கு திரும்பியது. மிகப்பிரபல்யமான தலைவர்களாகிய அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் கியு சி, அமரர் எஸ்.ஜே.வி செலவநாயகம் கியு சி, ஆகியோரின் தலைமையில் இயங்கிய இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் யாழ்ப்பாணத் தொகுதியில் தோற்கடித்தமையே அவர் செய்த குற்றமாகும். அரசியலில் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த அமரர் அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தவேளை நீர் அவரை சுட்டுக்கொன்றீர். அவரை ஏன் கொன்றீர் என்று உமக்கே தெரியுமோ எனக்குத் தெரியாது. ஆனால், விஸ்ணுவை தரிசனம் செய்து கொண்டிருந்தவேளையில் அவரை கொலை செய்ததையும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் சொத்துக்களை பறித்துக்கொண்டு சிறுவர்களின் காதணிகளைக் கூட எடுத்துச் செல்ல விடாது விரட்டியடித்தமையும் தான கடவுள் தண்டனையாக, இத்தனை பெருந்தொகை மக்கள் உயிரிழக்கவும், சொத்துக்களை இழக்கவும் காரணம் என தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்த ஆண் பெண் என்ற பேதமின்றி வயது வித்தியாசமின்றி 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரிழ்ப்பிற்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். போர்முனையில் மட்டுமல்ல கிளைமோர் தாக்குதல், கைக்குண்டு தாக்குதல், நிலக்கண்ணிவெடி மற்றும் புகையிரதம், பேருந்துகளில் இடம்பெற்ற படுகொலைகளுக்கும் நீரே பொறுப்பேற்க வேண்டும். கெபிடிகொலாவவிலும், அறந்தலாவயிலும் செய்யப்பட்ட படுகொலைகள், 700க்கு மேற்பட்ட கடற்படையினரை கொண்டு சென்ற கப்பலை மூழ்கடிக்க முயற்சித்தமை, லீவில் சென்ற கடற்படையினர் 100 க்கு மேற்பட்டோரை தாக்கி கொன்றமை, பள்ளிவாசல் படுகொலைகள் என்பவற்றை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அறந்தலாவையில் உம்மால் படுகொலைசெய்யப்பட்ட 31 பௌத்த குருமார்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இத்தகைய ஏதாவதொரு சம்பவத்தில் ஓர் சிங்களப் பிரஜை என்றாவது ஈடுபட்டதை உங்களால் கூறமுடியுமா? மேலும் இனவாதம் பேசுகின்ற பௌத்த சிங்களவகுப்பு வாதிகள் தன்னும் சில பொறுப்பற்ற முறையில் பேசி வந்தாலும், ஒரு தமிழ் உயிரை பறித்ததை உம்மால் கூற முடியுமா? குமுதினி படகில் ஏற்பட்ட படுகொலை, வேலணை சுருவில் மண்கும்பான் சம்பவங்கள், செம்மணி புதைகுழிகள் இராணுவத்தினரின் செயல் என நான் அறியாதவன் அல்ல. இத்தகைய எக்கொலையிலும் சிங்கள பொதுமக்கள் எவரும் சம்பந்தப்படவில்லை என்பதையே கூறவிரும்புகின்றேன். ஆனால் பொதுமக்களுடைய கொலைகளைப் பொறுத்த வரையில் உங்களுடைய கை இரத்தம் தோய்ந்தது. பல்வேறு தமிழ் குழுக்களைச் சேர்ந்த பலரின் கொலைகளுக்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய கொடூரமான குற்றங்களுக்கு பலியானவர்களின் சாபம் எவரையும் சும்மாவிடாது. ஆகவே தான், நடந்தவற்றை கெட்ட கனவாக மறந்து ஒரு புதிய மனிதனாக மாறுவீரேயானால் சமாதானத்திற்காக ஏங்கும் இலங்கையினரதும், சர்வதேச சமூகத்தினதும் பாராட்டை பெறுவீர்.

உமது கொடூர செயல்களில் ஒன்று இந்திய முன்னாள் பிரதமரை கொலை செய்தமை. அதோடு இந்திய மக்களின் ஆதரவை இழந்தீர்கள். இன்று உம்மை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் வெறும் வேடதாரிகள். உமது அடுத்த சிந்தனையற்ற செயல் உம்மைப்போலும், உமது தொண்டர்கள் போலும் சரியோ பிழையோ ஒரு இலட்சியத்திற்காகப் போராட வந்த பல் வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்களை அழித்தமை, நீர் ஒரு சுயநலக்காரனாகவும் பேராசை பிடித்தவனாகவும் இருந்து இவர்களை வேட்டையாடி, பொதுமக்களிடம் உமக்கு ஆதரவு இருந்திருந்தால், அதையும் இழந்து உம்மையும் அழித்துக்கொண்டீர். உமது அண்மைக்கால நடவடிக்கைகள் நிலமையை மேலும் மோசமடையச் செய்துள்ளன. தயவு செய்து எந்த ஒரு அரசும் விமானத்தாகுதலுக்கு உமக்கு உதவியோ ஆதரவோ தரப்போவதில்லை என்பதை நம்புங்கள். என்னைப்பொறுத்தவரையில் உமது வான் தாக்குதலை ஒரு வான் வேடிக்கையாகவே கருதுகின்றேன். உமக்கு எந்த ஆதரவும் தராத சர்வதேச சமூகத்தின் வெறுப்பை சம்பாதிப்பதோடு உமது கழுத்துக்கு நீரே சுருக்குப் போட்டுக்கொள்கின்றீர்.

இப்பொழுது உமது எல்லா செயற்பாடுகளையும் நிறுத்திவிட்டு கடந்தகாலத்தில் சாதித்தவற்றை திரும்பிப் பார்க்கவும். பல்வேறு வகையில் நீரும் உமது ஆட்களும் உமது மக்களுக்கும் பொதுவாக நாட்டுக்கும் ஏற்படுத்திய அழிவுகளின் பெறுமதியை கணக்கிட்டுப்பாரும். நான் ஒரு சில விடயங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை உமது சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன். நான் கூறும் பின்வரும் விடயங்களும், விமர்சனங்களும் உங்களது கண்களை மட்டுமன்றி -ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ -ஒரு நியாயமான தீர்வை முன்வைக்காமல் இழுத்தடிப்பவர்களுடைய கண்களும் திறக்க வேண்டும் என்பதற்காகவே. சாதாரண பொதுமக்களை பொறுத்தவரை எவ்விலை கொடுத்தேனும் சமாதானத்தை பெறுவதிலேயே அக்கறையாக இருக்கின்றனர். ஆழமாக செல்லாமல் சில விடயங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந் நீண்ட கடிதத்தை எழுதுவதற்கு ஒரு விசேட காரணமும் உண்டு. கால் நூற்றாண்டு காலமாக தமிழ் இஸ்லாமிய மக்களை படுமோசமான முறையிலும் கீழ்த்தரமான முறையிலும் நீங்களும் உங்கள் சகாக்களும் நடத்தியதை அறிந்த சிங்கள மக்கள், தமிழ் மக்கள் நிரந்தரத் தீர்வை எதிர்பார்க்கிறார்களே அன்றி அரைவேக்காட்டு தீர்வு திட்டத்தை ஏற்பார்கள் என எதிர்பார்க்கமாட்டார்கள். ஆகவே, தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஸ்டி ஆட்சி முறையை பெற்றுக்கொடுக்கவே சிங்கள மக்கள் போராடுவார்கள். 50 ஆண்டு காலம் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுகாண முடியவில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

•கல்வி
1970 ஆம் ஆண்டு தரப்படுத்தல் என்ற துயரமான முடிவு எடுக்கப்பட்ட போது நானும் பாராளுமன்றத்தில் இருந்தேன். தரப்படுத்தல் தகுதி பெற்ற பல தமிழ் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளுக்கு இடம் கிடைப்பதற்கு தடையாக இருந்தது. இனரீதியாக விகிதாசாரம் பேணப்படவில்லை என்பதே குற்றச்சாட்டாக இருந்தது. இது ஒரு நியாயமற்ற செயலாக கருதப்பட்டமையினால் மாணவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அதே இன்றைய சகல அனர்த்தங்களுக்கும் காலாக அமைந்தது. இருப்பினும் 77ம் ஆண்டு ஆட்சிபுரிந்த அரசு எல்லோருக்கும் திருப்தி தரக்கூடிய ஒரு திட்டத்தை வகுத்திருந்தது. இது 1970 ஆம் ஆண்டுக்கும் 72ம் ஆண்டுக்கும் இடையில் நடந்த சம்பவம். இன்று என்ன நடக்கின்றது? உமது சகாக்களால் ஒழுங்காக பிள்ளைகள் பாடசாலை செல்ல அனுமதிக்கப்படுகின்றார்களா? கடந்த வருடம் முதல் தவணையின் போது 27 நாட்கள் பிள்ளைகள் பாடசாலை செல்லவில்லை. அவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கும், ஹர்த்தால் நடத்துவதற்கும், அவமதிக்கும் வார்த்தைகளை பிரயோகித்தும், கல்வீசியும் இராணுவத்தை சீண்டுவதற்கும் ஈடுபடுத்தப்பட்டனர். இராணுவத்தினர் அஹிம்சையை கடைப்பிடிக்கும் காந்திய வாதிகள் அல்லர். இது சம்பந்தமாக பல விடயங்கள் கூறலாம் ஆனால், திறமை அடிப்படையில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக குறைந்துவிட்டது என்பதுடன் நிறுத்திக்கொள்கின்றேன். சில மாணவர்கள் தமது படிப்பை முடிப்பதற்கு 10 ஆண்டுகள் செல்கின்றன. அதற்குரிய காரணத்தை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். 35 ஆண்டுகாலப் போராட்டத்தின் பின் கல்வித்துறையில் தமிழர்களின் தற்போதைய நிலைமை என்ன? யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 200 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உங்கள் சிறுவர்படையில் இணைக்கப்படுவதிலிருந்து தப்புவதற்காக பெற்றோரால் கையளிக்கப்பட்டுள்ளார்கள்.

•புத்திஜீவிகள் கல்விமான்கள் அரச அதிபர்கள், பல்வேறு தரப்பட்ட அரச ஊழியர்கள் பொறியியலாளர்கள் மருத்துவ நிபுணர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள்
இனப்பிரச்சினையின் 50 ஆண்டு சரித்திரத்தில் மேற் கூறப்பட்ட தரத்தில் உள்ள ஒருவர் தன்னும் அரச படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்களா? மாறாக அத்தனை கொலைகளும் உங்கள் அங்கத்தவர்களால் செய்யப்பட்டது. ஒரு சிலரை குறிப்பிடவேண்டுமாயின் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் திருமதி ராஜினி திரணகம, சென் ஜோன்ஸ் கல்லூரி; அதிபர் ஆனந்தராஜா, மத்தியகல்லூரி அதிபர் இராஜதுரை, அரசாங்க அதிபர்களான திரு. மக்பூல், திரு பஞ்சலிங்கம், மற்றும் திரு ஞானச்சந்திரன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதை ஏன் அனுமதித்தீர்?

•கட்டிடப்பொருட்கள்: சீமெந்து தொழிற்சாலை
கட்டிடப்பொருட்கள் அத்தனையும் எமது பகுதியிலேயே பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்தது. தேவைக்கு அதிகமாக உள்ள சீமெந்து தென்னிலங்கைக்கும் வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. இத்தொழிற்சாலையை நம்பி பல்லாயிரம் உயிர்கள் வாழ்ந்தன. இத்தொழிற்சாலைக்கு இன்று என்ன நடந்தது? தொழிற்சாலையின் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் ஏழ்மையில் வாடுகின்றார்கள். தென்னிலங்கையில் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் பணிபுரிகின்ற வேளையில் சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி முகாமையாளரான திரு. போகொல்லாகமவை கொன்றதன் மூலம் தொழிற்சாலையை மூடவைத்தீர்கள். 100 ரூபாவிற்கு விற்கப்பட்ட சீமெந்து இன்று 1700 ரூபா.

•புன்னாலைக்கட்டுவன்: அஸ்பெஸ்டஸ் கூரைத்தகட்டுத் தொழிற்சாலை
இத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கூரைத்தகடுகள் உள்ளுர் தேவைக்கு போதுமானது. அத்தொழிற்சாலை இப்போது எங்கே? அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள விலை வித்தியாசம் என்ன? இத்தகைய ஒரு தொழிற்சாலையை உருவாக்க இன்று எவ்வளவு முதல் தேவைப்படும்? இத்தொழிற்சாலையை அழித்து நீர் அடைந்த இலாபம் தான் என்ன?

•மணல்
பல தலைமுறைக்கு போதுமான கட்டிடப் பொருளான மணல் குடத்தனை, அம்பன், மணற்காடு, நாகர் கோவில் போன்ற பகுதிகளில் பெருமளவில் உண்டு. இப்பிரதேசம் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசம. சொந்த தேவைக்காக தன் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி வந்த பல்கலைக்கழக மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உழவு இயந்திரத்துடன் சேர்த்து எரிக்கப்பட்ட சம்பவத்தை தெரியாதது போல் அவரது சக மாணவர்கள் நடிக்கின்றார்கள், ஏனெனில் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் தைரியம் அவர்களுக்கு இல்லை. வடக்கே இயல்புநிலை ஏற்படும் பட்சத்தில் ஒரு வீடு அமைப்பதற்கு தற்போது செலவிடும் தொகையில் 20 வீதம் கூட தேவைப்படாது

•தொழிற் பேட்டை: அச்சுவேலி
அச்சுவேலி தொழிற்பேட்டையில் கட்டிடப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்திசெய்யும் 36 தொழிற்சாலைகள் செயற்பட்டன. அங்கிருந்த கடைச்சல் இயந்திரங்கள், மோட்டர்கள் உட்பட பெறுமதியான அத்தனை பொருட்களையும் அகற்றினீர்கள். இது போன்றதொரு தொழிற்பேட்டையை அமைக்க எவ்வளவு முதல் தேவைப்படும்? இவற்றில் தொழில் செய்தவர்களின் கதி என்ன?

•பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை
ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்;ப்புக் கொடுத்து பல்லாயிரம் பேருக்கு உணவளித்த இத்தொழிற்சாலை இன்று இருந்த இடம்தெரியாமல் போய்விட்டது. ஊழியர்கள் குடியிருந்த 100க்கு மேற்பட்ட வீடுகள் பாழடைந்துவிட்டன. இத்தொழிற்சாலை திரும்ப அமைப்பதற்கு எத்தனை கோடி தேவை? இதனுடைய அழிவை ஏன் நீர் தடுத்து நிறுத்தவில்லை?


•ஒட்டிசுட்டான் ஓட்டு தொழிற்சாலை, புல்மோட்டை கரிமண் தொழிற்சாலை
இத்தொழிற்சாலைகளும் ஊழியர்களும் எங்கே?

•ஆனையிறவு உப்பளம்
நாட்டுக்கே தேவையான உப்பை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிற்கு விஸ்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இவ் உப்பளம் முற்றாக அழிக்கப்பட்டது. ஆனையிறவோடு, நாவற்குளி, கல்லுண்டா ஆகியவற்றில் தொழில் புரிந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து ஓட்டாண்டிகளாக வாழ்கின்றார்கள்.

•உங்களால் சீரழிந்த யாழ்ப்பாண பொருளாதாரம்
யாழப்பாணப் பொருளாதாரம் உங்களாலும் உங்கள் சகாக்களாலும் முற்றாக அழிக்கப்பட்டது. கிளிநொச்சியில் ஏ 9 வீதியில் அமைந்துள்ள எனது வீட்டிலிருந்து அவதானிப்பேன். தினமும் 60 தொடக்கம் 70 லொறிகள் மீன் வகை, காய்கறிகள், திராட்சை, வாழைப்பழம் என்பனவற்றை ஏற்றிக்கொண்டு இரவு வேளையில் கொழும்புக்கு செல்வதையும் அதே எண்ணிக்கையான லொறிகள் யாழ்ப்பாணத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களுடன் திரும்பிவருவதையும் நான் பார்த்திருக்கின்றேன். யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னதாகவே பல ஆண்டு காலமாக ஏ 9 மூடிவைத்து மீனவர்கள் விவசாயிகள் உட்பட சகல உற்பத்தியாளர்களினதும் பொருளாதாரத்தை நாசம் செய்தீர்கள். யாழ்ப்பாண மக்களை பட்டினியை நோக்கி தள்ளினீர்கள். யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின் மீண்டும் தலை தூக்கக் கூடிய நிலை உருவாகிய வேளை உங்களுடைய செயலால் திரும்பவும் மக்கள் அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். உங்களுடைய சட்ட விரோதமான வரியால் உள்ளுர் உற்பத்திச் செலவு இறக்குமதியாகும் பொருட்களின் விலையைவிடவும் அதிகரித்தமையால் அநேக உற்பத்திகள் நின்றுபோயின.

•புகையிரதசேவை
தினம் கொழும்பிலிருந்தும், காங்கேசன்துறையிலிருந்தும் 5 புகையிரதங்கள், அவற்றில் 3 கடுகதி சேவையில ஈடுபடுத்தப்பட்டன. சனிக்கிழமைகளில் மேலதிகமாக குளிரூட்டப்பட்ட புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அத்தனை புகையிரதங்களிலும் பேத் பெட்டிகளும், சிலிப்பரேற் பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. இன்று புகையிரத சேவை முற்றாக நிறுத்தப்பட்டதுடன். 7 – 8 மணி நேரத்தில் செல்லும் பிரயாணத்திற்கு ஒரு முழு நாள் தேவையாகின்றது. உங்களுடைய சகாக்களால் யாழ்ப்பாண புகையிரத பாதையில் 160 கிலோ மீற்றரும் தலைமன்னார் பாதையில் 50 கிலோ மீற்றர் புகையிரத பாதையும் முற்றாக அழிக்கப்பட்டு அதிலிருந்து அகற்றப்பட்ட சிலிப்பர் கட்டைகள், தண்டவாளங்கள், கல் என்பன பங்கர்கள் அமைக்க பாவிக்கப்பட்டன. அதேகதியே தொலைபேசி கம்பங்களுக்கும் ஏற்பட்டன. இந்திய அரசின் உதவியுடன் மீளமைக்கப்பட்ட ரெயில் பாதை மீண்டும் முற்றாக அகற்றப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் செல்லும் கடிதங்கள் இன்று பலநாட்களாக வவுனியாவில் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றை ஏன் உங்களால் நிறுத்த முடியவில்லை.


•இந்திய கப்பல் சேவை நிறுத்தம்
இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தத்திற்கு நீரே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். 300 ரூபாயுடன் சென்னை சென்று வந்த மக்கள் இன்று அப்பிரயாணத்திற்கு 20 ஆயிரம் செலவிடுகின்றார்கள. நன்றி உங்கள் சகாக்களுக்கு


•பலாலி திருச்சி விமான சேவை
தினம் கொழும்பு பலாலி திருச்சி சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தை நிறுத்திய பெருமையும் உங்களுக்கே உரியதாகும். இன்று பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்காது தடுத்த பெருமையும் உமக்கே சேரும்.


•மின்சாரம்
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் உட்பட யாழ்ப்பாணத்தின் 80 வீத கிராமங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டிருந்தது. அதனை நிறுத்தி அத்தனை மின்சாரக் கம்பங்களும் தொலைபேசிக் கம்பங்களும் நீக்கப்பட்டு நொருக்கப்பட்டு பங்கர்கள் அமைத்து மக்களை பல ஆண்டு காலம் இருளில் வாழ வைத்தீர்கள். இதனால் விவசாயிகளையும், தொழிற்சாலைகளையும் வருவாயை இழக்கச் செய்தர்கள. நீங்கள் குடியிருக்கும் பங்கர்களில் ஒருநாளேனும் மின்சாரமின்றி வாழ்ந்திருக்கின்றீர்களா?

நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறுகின்ற மக்களுக்கு நீங்கள் கொடுத்த துன்புறுத்தல் உளவியல் சித்திரவதை, மனச்சங்கடங்கள் என்பவற்றை எந்தளவிற்கு கொடுத்திருக்கிறீர்கள் என்பதை இப்போதாவது உணருகின்றீர்களா?

கால்நூற்றாண்டுக்கு மேல் உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் மக்களுக்கு ஏற்படுத்தினீர்களேயொழிய அவர்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்? அவர்கள் எதிர் நோக்கியதெல்லாம் அவலங்களே!


•கிளிநொச்சி
நான் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையில் கிளிநொச்சித் தொகுதியை ஓர் தனி மாவட்டமாக்கினேன். நான் கிளிநொச்சி மக்களுடன் வாழ்ந்து வளர்ந்தவன். எனது முயற்சியால் அவர்களது கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. எனது விடாமுயற்சியினாலேயே இன்று பல டாக்டர்கள் இயந்திரவியலாளர்கள். பட்டதாரிகள் கிளிநொச்சியி;ல் உருவாக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தனிமாவட்டமாக ஆக்கப்படும் வரை கிளிநொச்சியிலிருந்து ஒருவரேனும் பல்கலைக்கழகம் புகவில்லை. கிளிநொச்சியின் அபிவிருத்திக்கு என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. நான் அவர்களுடைய கிராம சபை தலைவராகவிருந்து, நகரசபை தலைவராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவன். பூனகரி மகாவித்தியாலயத்தில் கல்வி போதித்தவன், அப்பகுதி மக்கள் அனைவரது பெயர்களையும் அறிவேன். கிளிநொச்சியின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் பாடசாலைகளின் இருப்பிடமும் நன்கறிவேன். கிளிநொச்சி மக்களுக்கு நீர் செய்ததென்ன? அவர்களுடைய வாக்குரிமையை பறித்தீர். கிளிநொச்சியை உயிருக்குயிராக நேசித்த அவர்களது பாராளுமன்ற உறுப்பினரையும் ஒரு சமூகத் தொண்டனையும் இழக்கவைத்தீர். கிளிநொச்சி பிரதேசம் முழுவதும் கண்ணிவெடிகளை விதைத்து பலரை உயிரிழக்கவும் அங்கவீனர்களாகவும் ஆக்கினீர்கள். 15 ஆயிரம் அதிகப்படி வாக்குகள் பெற்று ஒரு அமைச்சரை தோற்கடித்த எனக்கு 187 வாக்குகள் பெற்றுத்தந்தீர்.

கிளிநொச்சியில் வாரம் இரு தடவை சந்தை கூடுவது வழக்கம். யாழ்ப்பாண உற்பத்திப்பொருட்கள் அத்தனையும் விற்பனைக்காக கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படும். இலங்கையின் பல பகுதியிலிருந்தும் சிங்கள வியாபாரிகள் தமது உற்பத்திப்பொருட்களை அங்கு கொண்டுவந்து விற்பர். கிளிநொச்சி மக்கள் மிகவும் செழிப்பாக வாழ்ந்தார்கள். இப்பொழுது அங்கு மக்களுக்கு மிஞ்சியுள்ளதெல்லாம் பாழடைந்த கட்டிடங்களும், பிரதேசம் பூராவும் விதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளுமே. அவர்களுக்கு இரும்புத்திரை ஆட்சியை கொடுத்திருக்கின்றீர்கள் அவர்களது ஜனநாயக உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகியன பறிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய மனித உரிமைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அடிமைகள் போல் நடத்தப்படுகின்றார்கள். சிறுகுற்றங்களுக்கு கூட உங்களுடைய தடை முகாங்களிலும், இருட்டறைகளிலும் கொண்டு சென்று சித்திரவதை செய்கின்றீர்கள். அவர்களை சித்திரவதை செய்ய உமக்கோ உமது சகாக்களுக்கோ என்ன உரிமை இருக்கின்றது? உங்களுக்கு அந்த உரிமையை தந்தவர்கள் யார்? உம்மிடமுள்ள ஆயுதபலத்தால் அவர்களை ஆளுகின்றீர்கள். உங்களுடைய சித்திரவதைக்கு ஆளாகி இறந்தவர்கள் பலர். நீங்கள் உங்களுடையபிள்ளைகளை உயர்கல்விகற்க வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு ஏழை மக்களின் பிள்ளைகளை பலாத்காரமாக படையில் இணைத்திருக்கின்றீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இந்த வசதியை செய்து கொடுத்த நாடுகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி உலகம் முழுக்கப் பேசப்படுகின்றது. அத்தகைய குற்றச்சாட்டுக்கள் அரசுக்கெதிராகவோ அல்லது வேறு குழுக்களுக்கு எதிராகவோ இருப்பின் தங்கள் பெயரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. ஆனால், உமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இடம்பெறும் சிறுவர்களை கட்டாயப்படுத்தி படையில் இணைத்தல், ஆள்கடத்தல், கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவை பற்றி கடந்த சில ஆண்டுகளாக நான் முறையிட்டும் சர்வதேச சமூகம் ஏன் பொருட்படுத்தவில்லை என்று நான் அறிய விரும்புகின்றேன்.

உங்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்கின்ற அல்லது சில சலுகைகளை பெற்று வேலை செய்கின்ற உங்கள் முகவர்கள் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் பிர்ச்சாரம் செய்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு தடவை கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்கள் அங்கு எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதை அறிய அவர்கள் ஏன் யோசிக்கவில்லை? தம் பிள்ளைகளை விடுதலைப்புலிகள் சிறுவர் படையில் சேர்ப்பதை வன்மையாக எதிர்த்த பெற்றோர்கள் பலமாகத் தாக்கப்பட்ட கொல்லப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன. பலாத்காரமாக ஆள் சேர்ப்பதை ஆட்சேபித்து சிலர் தற்கொலை கூட செய்துள்ளனர். பகல் நேரத்தில் ஒளித்திருந்து விட்டு இரவு வேளை வீட்டுக்கு வருகின்ற பிள்ளைகளை காத்திருந்து பலாத்காரமாக கொண்டு செல்கின்றனர். சர்வதேச சமூகத்திற்கு உமது கட்டுப்பாட்டு பகுதிக்கு விஜயம் செய்ய அனுமதி இல்லாமையால் உமது நிர்வாகத்தில் திருப்தியடையாத மக்கள் தப்பிச் செல்லக் கூடியதாக ஏன் உங்கள் மீது அழுத்தம் கொண்டுவர முடியாது? சர்வதேச சமூகத்தை தவறான வழிக்கு இட்டுச்செல்லாமல் ஐரோப்பா நோர்டிக் நாடுகள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் செயற்படும் உங்கள் முகவர்களை உங்கள் தலைமையகத்திற்கு திரும்பும்படி அறிவியுங்கள். உமது கட்டுப்பாட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் சுதந்திரமடைய விரும்புகின்றார்கள். அவர்களின் பிள்ளைகள் வெளியுலகத்தை காண ஆசைப்படுகின்றார்கள். அவர்களுடைய பிள்ளைகள் புகையிரதத்தை கண்டதோ, அதில் பிரயாணம் செய்ததோ இல்லை. ஒரு சிங்களவரையோ ஒரு இஸ்லாமியரையோ அவர்கள் பார்த்ததில்லை. அவர்களுக்கு எதுவிதமான பொழுதுபோக்குமில்லை. அவர்களுடைய உரிமைகளை மறுத்து எதற்காக அவர்களை அடிமைகளாகப் பாவிக்கின்றீர்கள். அவர்களுடைய பிரயாணம் திருமணம் கல்வி வாழ்க்கைமுறை போன்ற விடயங்களில் எதற்காகக் கட்டுப்பாடு விதிக்கின்றீர்கள்

நீங்கள் ஒரு கூட்டம் பினாமி பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்றீர்கள் அவர்களின் ஓரே கடமை உங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் உங்களுக்காகப் பேசுவதும் மட்டுமே. இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்ல உலகின் பெரும்பகுதியான நாடுகளில் உள்ள தமிழ் இலத்திரனியல் அச்சு ஊடகங்கள் உங்களையும் உங்களது சகாக்களையும் பெருமைப்படுத்துவதிலேயே ஈடுபட்டுள்ளார்கள். உங்களுக்கு விரோதமாக ஒரு வார்த்தை எழுதவோ பேசவோ துணிவின்றி வாழ்கின்றார்கள். அவர்கள் பெருமளவில் உண்மையை எழுதாது மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களை கீழ்த்தரமாக விமர்சிப்பதிலேயே ஈடுபட்டுள்ளனர். உம்மை கிண்டல் செய்வதோ அம்பலப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. நீர் உமது வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றே கேட்டுக்கொள்கின்றேன். தமிழீழம் கிடைக்காதென்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சர்வதேச சமூகமோ அல்லது இந்தியாவோ அதை என்றும் அனுமதிக்கப்போவதில்லை. அவர்களுடைய ஒத்தாசை இன்றி அது அடையக் கூடியதும் அல்ல. ஆகவே அதை மறந்துவிடுங்கள். தமிழீழம் அடையக் கூடியது என்று மக்களை நம்ப வைக்க உம்மால் முடியாது. உமது முகவர்களாக செயற்படுபவர்களும் உமது கொள்கைகளை பரபபுபவர்களாக செயற்படுகின்றவர்களும் உண்மையானவர்களல்ல. சொந்த நலனுக்காக வியாபாரமாகவே அதைச் செய்கின்றார்கள். தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வசதியை செய்து கொடுத்து தாமும் ஆடம்பரமாக வாழுகின்றார்கள். உங்களை ஆதரிக்கின்ற தமிழ் நாடு அரசியல் வாதிகளும் அவ்வண்ணமே. உம்மை ஆதரிக்கின்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உமது கொள்கையில் நம்பி;க்கை வைத்தல்ல, உமது மூலமாக தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டும் என்ற சுயநல நோக்கில் மட்டுமே. அரச சேவையிலும் தனியார் துறையிலும் சிறுபான்மையினரின் வேலைவாய்ப்புக்கள் மிகவும் குறைந்து வருகின்றன. 50 வருட அகிம்சை போராட்டமும் 25 வருட ஆயுதப்போராட்டமும் எம்மை இருந்த இடத்திற்கே கொண்டுவந்து விட்டுள்ளது. தமிழ் இஸ்லாமிய மக்களின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. போக்குவரத்து வசதியின்மையும், ஏ 9 பாதையில் உம்மால் விதிக்கப்படும் கடும் வரியும் விவசாயத்திற்கும், மீன்பிடிக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. மின்சார விநியோகம் தடைப்பட்டதாலும் தொழிற்சாலைகள் கைத்தொழிற் பேட்டையும் அழக்கப்பட்டமையாலும் கைத்தொழில் முழுவதுமாக அழிக்கப்பட்டு மக்கள் அரசின் உதவியிலேயே வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரச சேவைக்கு சேர்க்கப்படும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இளைப்பாறிய ஊழியர்களுடன் அரச சேவை நடைபெறுகின்றது. இராணுவம், கடற்படை, ஆகாயப்படை மற்றும் பொலிஸ் ஆகிய துறைகளில் தமிழர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை மிரட்டல் மூலம் வெற்றிகரமாக தடுத்து விட்டீர்கள். இந்நிலையில் மக்கள் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?

தமிழீழம் பகல் கனவு என்று தெரிந்தும் ஏன் தொடர்ந்து பலரின் உயிரை பலிகொடுக்கின்றீர்கள், பல விதவைகளையும் அனாதைகளையும் உருவாக்குகின்றீர்கள். சிங்களவர்களோ தமிழர்களோ அல்லது வேறு எந்த இனத்தவர்களோ அவர்களது சொத்துக்களையும் அரச சொத்துக்களையும் அழிக்கின்றீர்கள். நான் கூறியவை எல்லாவற்றையும் கவனத்திலெடுத்து ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறையிலான ஒரு தீர்வை ஏற்கக் கூடிய வகையில் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவியுங்கள். அவ்வாறு செய்வீர்களேயானால் பெருந்தொகையான சிங்கள மக்களும் ஏனையோரும் முழு ஆதரவு வழங்குவர். இந்தியாவும் அதற்கு ஆதரவு கொடுக்கும் வேளையில் சர்வதேச சமூகம் அதற்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். சிங்கள மக்களுடைய சிந்தனையை நான் அறிவேன். அத்தகைய ஒரு தீர்வுக்கு நீங்கள் உடன்படும் பட்சத்தில் இதுவரை சமஸ்டியை எதிர்த்தவர்கள் கூட நிச்சயமாக தமது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்வார்கள்

உமது நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட சொத்தழிவுகளை அமைதியாக தனிமையில் ஓர் இடத்தில் இருந்து கணக்கிட்டுப் பாருங்கள். அத்தகைய அழிவினுடைய பெறுமதி உங்களுக்கு அதிர்ச்சியைக்கொடுக்கும். நாட்டுக்குத் தேவையான உட்கட்டமைப்பு, பெருந்தெருக்கள் மற்றும் வீதிகள் பாடசாலைகள் தொழிற்சாலைகள் இன்னும் பல வசதிகளோடு வேலையற்ற அனைவருக்கும் தொழில் வாய்ப்பு முதலியவற்றுக்கு போதுமானதாயிருக்கும். பல்வேறு நாடுகளினுடைய உதவிகள் வந்து குவியும். புதிதாக அமையும் சொர்க்க பூமியில் நாமெல்லோரும் மனநிறைவேடும் ஒருவரை ஒருவர் மதித்தும் அன்பு செலுத்தியும் வாழ முடியும்.

மேலும் நாட்டு நிர்வாகத்தில் ஒரு கணிசமான பங்களிப்பை நீர் பெறுவதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான முறையில் உமது கனவை நிறைவேற்ற முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக பல்வேறு நாடுகளிலும் சிதறிக்கிடக்கும் எமது உறவினர்கள் தாம் சேர்த்து வைத்திருக்கின்ற சொத்துக்களோடு நாட்டுக்கு திரும்பி நாட்டை கட்டியெழுப்பவும் உதவுவர்.

இந்த கடித்த்தை உமக்கு எழுதுவதன் ஒரு நோக்கம் தமிழ் மக்கள் இதுவரை காலம் அனுபவித்து வந்த கஸ்டங்கள் துயரங்கள் பற்றியும் இழந்த சொத்துக்கள் பற்றியும், சிங்கள மக்களுக்கு தெரியவைத்து அவர்களது கண்களையும் திறக்க வைப்பதற்குமாகும்.



வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

No comments: