அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, April 26, 2009

இன்று ஈழத் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் நினைவு தினம்


பல விடயங்கள் இன்றைய நிலயில் எழுதவேண்டும். ஆனால் எழுதினால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கனத்த மனதுடன் இக்குறிப்பையிடுகிறேன்!

இன்றைய தினத்தில் எனது ஒரேயொரு மனிதாபிமான கண்ணீர் வேண்டுகோள்!

19ஆவது நாளாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன் அவர்களது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்!

குறிப்பு
உடன் பதிவு எழுதப்பட வேண்டும் என்ற காரணத்தால் முதலில் இதை எழுத வேண்டியிருந்தது. தொடர்ந்து இப் பதிவில் பல விடயங்கள் சேர்க்கப்படவுள்ளன. எனவே பொறுத்திருங்கள்.

சேர்க்கை - 1.

இன்றைய நினைவு தினத்தில் தந்தை செல்வாவினுடைய பாராளுமன்றக் கடைசிப் பேச்சின் ஒரு பகுதியிலிருந்து தொடங்க விரும்புகிறேன். இது 1976 நவம்பர் 19ல் தமிழர் பிரச்சனை என்ற விடயத்தில் பேசியது. (ஆதாரம் - தந்தை செல்வா – ரி. சபாரத்தினம் என்ற நூலில் இருந்து அத்தியாயம் 13. தந்தையின் இறுதி நிலை பக்கம் 14)
எமது முன்னோர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கெனத் தனியாட்சியை வைத்திருந்தனர். இலங்கையின் வரலாற்றில் எங்களுக்கென ஒரு தனியிடம் இருக்கிறது. எங்கள் இயக்கம் நாட்டைப் பிரிக்கும்படி கோரவில்லை. இழந்த எங்கள் உரிமையான இராச்சியத்தை மீள அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலையாகும். தனித் தமிழ் ஈழத்தை நிறுவும் இலட்சியத்தை நோக்கி எங்கள் இயக்கம் முன்னேறுகிறது.
தனித் தமிழ் ஈழம் நிறுவுவது இலகுவான காரியமல்ல என்பதும் மிகவும் கஷ்டமானது என்பதும் எங்களுக்குத் தெரியும்.ஆனால் நாம் ஒன்றில் சிங்களவரின் அதிகாரத்துக்குள்ளிருந்து விடுபட்டு வெளியேற வேண்டும். அல்லது அழிந்து போக வேண்டும். எனவே நாங்கள் போராடி தனித் தமிழ் ஈழத்தை நிறுவியே தீருவோம். நாங்கள் சமஷ்டிக் கோரிக்கையை கைவிட்டுவிட்டோம். எங்கள் தனிநாட்டுக்கான இயக்கம் அகிம்சை அடிப்படையிலேயே நடைபெறும்.
அவர் டிசம்பர் மாதத்தில் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிக்கும்போது

இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதை அடைவதற்கு முதலில் போராட்டம் நடத்தினேன். பின்பு சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒத்துழைப்பதன்மூலம் சமஷ்டி ஆட்சி முறையை அமைக்கத் திட்டமிட்டோம். சமஷ்டி ஆட்சிக்கான அடிப்படையை அமைப்பதற்காக எவ்வளவு தூரம் இறங்க முடியுமோ அவ்வளவு தூரம் இறங்கினோம். அதைத் தருவதற்குக்கூட சிங்களத் தலைமைப்பீடத்திற்கு அரசியல் விருப்போ துணிவோ இல்லை. இந்த நிலையில் தனித் தமிழ் ஈழத்தைக் கோருவதைத் தவிர எமக்கு வழியெதுவும் இல்லை. தனித் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் மிகவும் நீண்டதாகவும் கஷ்டமானதாகவும் இருக்கும் என்பதை உணருகிறோம். அந்த நீண்ட போராட்டத்தின்போது சிங்களத் தலைவர்கள் சமஷ்டி ஆட்சி அமைப்பை ஏற்படுத்துவது பற்றிய ஓர் இணக்கத்துக்கு எம்மோடுவரின் நாம் அதை ஏற்கத் தயாராக இருப்போம் என்றே நினைக்கின்றேன்.

தமிழ்ச்சமூகம் அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதனால்தான் உணர்ச்சிமிக்க சில இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்கி உள்ளனர். ஆயுதங்கள் அழிவுக் கருவிகள். ஆயுதத்தைத் தூக்கியவருக்கும் அது அழிவைக் கொடுக்கும். அகிம்சை அப்படியானதல்ல. போராடுபவர்களின் தார்மீக உரிமையை வளர்க்கும். போராடுவோரை ஆளவோ, அடக்கவோ முடியாத நிலைமையை ஆளவும் அடக்கவும் முயல்வோருக்கு ஏற்படுத்தும். அகிம்சைப் பாதையில்தான் எம் போராட்டம் அமையும். அதிலிருந்து சற்றும் விலகமாட்டோம்.

No comments: