எழுத்தச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் அனைவரோடும் சகசமாக கதைக்கும் நிலை மற்றும் அனைத்து சுதந்திரங்களும் உள்ள ஒரு சர்வசாதாரண நிலை எமது இலங்கைத் தமிழ் மக்களுக்கு எமது பகுதியில் ஏற்பட வேண்டும் என்பதில் எனக்கு நீண்ட நாட்களாக ஆசையுண்டு.
ஏனென்றால் வடக்கு கிழக்குப் பகுதியிலும் முழுச் சுதந்திரத்தோடு பேச முடியாது. ஏனையவெளிப் பகுதிகளிலும் சத்தமிட்டு வெளிப்படையாகப் பேசக் கொஞ்சம் பயம்.
காரணம் சிங்களவன் ஏதேனும் செய்துவிடுவானோ என்று.
ஆனால் முஸ்லிம்கள் அப்படியல்ல. எந்த போக்குவரத்துச் சாதனங்களில் பயணித்தாலும் அவர்கள் பேசுவதும் கேட்கும் பத்திரிகைகள் வாசிப்பதும் காணக் கூடியதாக இருக்கும். அவர்கள் பிரச்சனையற்றவர்களாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஏனெனில் நாம் தான் அவர்கள் அனைவரையுமே (முஸ்லீம்கள் மட்டுமல்ல மாற்றுக் கொள்கையுடைய தமிழரும், சிங்களவரும் ) எமது பகுதிகளில் இருக்கக் கூடாது என்று விரட்டியவர்கள் ஆச்சே!
இதில் இன்னுமொரு புதிய கதை சேர்க்க வேண்டும். என்னவென்றால் கருணா விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பின்னர் முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டியடித்ததுபோல யாழ்ப்பாணத்தவர்களையும் மட்டக்களப்பிலிருந்து துரத்தியடித்த பெருமைக்குரிய வராகிறார்.
நாம் இருக்கும் இடத்தில் மற்றவர்கள் வாழக் கூடாது. ஆனால் நாம் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். அத்துடன் அங்கும் நாம் ஆதிக்கம் செய்ய வேண்டும். அதுதானே இலங்கைத் தமிழனின் (குறிப்பு யாழ்ப்பாணத் தமிழன்)சுயநலம். நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இந்தப் பதிவு இடலாமா வேண்டாமா என்று யோசித்து பல நாட்கள் போய் விட்டன. அண்மையில் தான் கட்டாயம் எழுதவேண்டும் என்ற உந்துதல் வந்தது. அதற்குக் காரணமும் ஒரு சில வலைப் பதிவர்கள்தான்.
இப்படி எழுதுவதையிட்டு யாரும் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்! நினைக்க முடியாது! நினைத்தாலும் தப்பில்லை!ஏனென்றால் நான் யாரையும் விமர்சிக்கவில்லை. உண்மையை அறிய வேண்டித்தான் இதைப் பதிவில் இடுகிறேன். இன்று இடுகையிலிடும் 3 கட்டுரைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பாகவே இருக்கும்!
1. தந்தை செல்வா நினைவு
2. இன்றைய உலகப் போராட்டத்தைப் பற்றியது.
3. உண்ணா நோன்புக்கு அன்று இருந்த மரியாதை
இவற்றைப் பார்த்து கோபமடைந்தாலும் சரி ஒத்தக்கொண்டாலும் சரி ஆதங்கப்பட்டாலும் சரி இது உண்மைச் சம்பவங்கள்.
இன்றைய தலைப்புக்கு நான் வித்தியாசமாக பெயர் கொடுத்த காரணம் சாதாரண அப்பாவிப் பொதுமக்களை எலிகளாக வைத்துக்கொண்டால், அந்த அப்பாவிப் பொதுமக்களை வதைக்கின்ற மற்ற எல்லாருமே பூனைக்குச் சமம். இதில் யார் யாரையெல்லாம் அடக்க முடியுமோ அடக்குங்கள்.
இதில் சிங்கள இனவெறி அரசோடு இன்று விடுதலைப் புலிகளிலிருந்த பிரிந்து சென்ற கருணா அவர்கள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்குச் செய்யும் பரோபகாரத்துக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தற்போது கிடைத்த தகவல்களின்படி விரைவில் பொறுப்பான ஒரு பதவி அவருக்கு கொடுக்கப்பட்டு உலக அரங்கில் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என்ற மாயையை ஏற்படுத்த சதி நடைபெறுவதாக அறிய முடிகிறது. (அதாவது சிலவேளைகளில் பிரதமராகலாம்)
இது வதந்தி! உண்மையோ பொய்யோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது தான் 48 மணிநேரத்தில் நடக்க இருக்கும் நல்ல விடயமோ? அப்பா! தில்லைப் பரமசிவா?
நாணயத்தில் இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல எமது நாட்டில் நிலவும் பிரச்சனையிலும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஏன் வாழ்வியலிலும் இரு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். இருக்கும்.
விடுதலைப் புலிகள் அடைந்த வெற்றியில் சந்தோசமடைந்த நாம் இப்போது அடையும் தோல்வியில் இருப்புக் கொள்ள முடியாது இருக்கிறது. எந்தெந்த தவறுகளை எல்லாம் நாம் சுட்டிக்காட்டாமல் தட்டிக் கழித்தோமோ, இன்று அதே தவறுகள் நடைபெறும் போது எம்மால் பேச முடியவில்லை. இங்கு எம்மால் எனப்படுவது மனச்சாட்சியுள்ளவர்களால்! பலருக்கு மனச் சாட்சி என்பதே இல்லை என்பது மறுபுறம்.
எனக்கு தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் ஏன் பிசுபிசுத்தப் போகின்றது என்பதையிட்டு ஒரு ஆராய்ச்சி செய்தேன்!
நாங்கள் எங்களுடைய போராட்ட அரசியல் வரலாற்றைத் தெரிந்திருக்காவிடினும் உலக அரங்கில் சகல நாடுகளும் ஈழத் தமிழர் பிரச்சனையை அக்கு வேறு ஆணிவேறாக அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!
விக்கிபேடியாவில் (Wikipediya) இதற்கு ஆவணப்படுத்தப்பட்ட பல விடயங்கள் இருக்கின்றன.அதாவது இலங்கையில் நடைபெற்ற அத்தனை மனிதப் படுகொலைகளையும் அங்கு துல்லியமாக பதிவிட்டிருக்கிறார்கள்.
இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் போன்றவை. விரிவாகப் பார்வையிட http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_Sri_Lankan_military
http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE
உண்ணாவிரதப் போராட்டங்கள், பாராளுமன்றப்பதவிகள், பேச்சுவார்த்தைகள் சாத்தியப்படாது - ஆயுதப் போராட்டம் தான் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு என்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் திரும்பவும் சுத்திச் சுத்திச் சுப்பற்ற கொல்லையில் என்பதுபோல மீண்டும் பேச்சுவார்த்தை, பாராளுமன்றப் பதவிகள், உண்ணாவிரதங்களில் வந்துதான் நிற்கிறது. இதைச் சொன்னால் நாம் குற்றவாளிகளாவோம். ஆனால் இன்று வரை கண்ட பலன் என்ன?
நீதிகோருபவன் தான் நீதி வழங்கக் கூடியவனாக இருக்க வேண்டும். ஆனால் வடக்கில் இருந்த முஸ்லீம்களுக்கு நடந்தது என்ன? நியாயமாக இன்றுவரை எவராவது சிந்தித்ததுண்டா? அம்மக்கள் இன்றும் புத்தளத்தில் முகாம்களில்! இந்தப் பழி ஒன்றே எமக்குப் போதுமே! 500 ரூபாவுடன் 24 மணி நேரத்தில் வெளியேற்றிய எம்மால் இன்றுவரை என்ன செய்ய முடிந்தது! 2002ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட வேளையில் அந்த முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது அவர்கள் வீடுகளில் குடியேறியிருந்த யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்களா? அப்போது அரசியல் அமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அம்மக்களுக்கு ஏதாவது மாற்று ஒழுங்கைச் செய்தார்களா? இல்லையே! வந்தவர்கள் வந்த வாகனங்களிலிலும், விடுதிகளிலும் அல்லவா நின்றார்கள். பாராளுமன்றத்தில் ஏற்பட்ட ஒரு வெற்றிடத்திற்கு இப்போது ஒரு முஸ்லீம் உறுப்பினரை நியமித்ததன் மூலம் செய்த பாவம் தீர்ந்துவிட்டதா?
என்ன நியாயம் இருக்கிறது கொல்லப்பட்ட தலைவர்களுடைய கட்சிகளில் இருப்பவர்களை இப்போது ஏற்றுக் கொண்டமை? அதாவது TELO, EPRLF, TULF போன்ற அமைப்புக்களை இப்போது அரவணைத்ததுபோல ஏற்கனவே அவர்களோடு சேர்ந்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம் அல்லவா? சிறீசபாரத்தினத்தை சுட்டுக் கொல்லும்போது அப்போது EPRLF TELO அமைப்பினரால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட அப்பாவி இளைஞர்களை சுட்டுக்கொல்லாமல் நீங்களே உங்கள் அமைப்பில் இணைத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா?
செஞ்சோலைப் படுகொலைபற்றிய ஒரு பதிவும் இந்த விக்கிப்பேடியாவில் இருக்கிறது. அதைப் பார்வையிட (http://en.wikipedia.org/wiki/Chencholai_bombing - இதில் வலுக்கட்டாயமாகப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது External links - Sri Lanka Defence video - Bombing Video )
ஒரு போராட்டம் வெற்றிபெற உணர்வுபூர்வமான பங்களிப்புத்தான் அவசியம்! ஆனால் அடாத்தாக விருப்பமின்றி வலுக்கட்டாயமாக பிள்ளைகளைப் பிடித்து கட்டாயப் பயிற்சி கொடுத்து எப்படி ஒரு ஒரு உணர்வு பூர்வமான போராட்டத்தை முன் எடுத்துச் செல்வது?
ஆன்மீகத் தலைவர் குருஜி ரவிஷங்கர் சொல்லியதுபோல எல்லா வசதிகளையும் படைத்த வன்னிமக்கள் இன்று சிங்கள இராணுவத்திடம் தண்ணீரும் சாப்பாடும் கேட்டுக் கையேந்தும் நிலை. அதைப் பார்த்து எமக்கு ஏற்பட்ட வலி எளிதில் எவரும் புரிந்து கொள்ள முடியாது!
இன்று இந்தளவு மக்களையும் மிகக் கேவலமாக அரச படையினர் நடத்துவதற்கும் ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது. தமது கட்டாய இராணுவத் தற்பாதுகாப்புப் பயிற்சிகளை ஏற்படுத்திய ஒரு காரணமே இவர்களை ஏனைய பகுதிகளுக்குள் செல்லவிடாது அரசு அடிமைபோல நடத்தவதற்குக் காரணமாகும்.
அனைத்துக்கும் விடுதலைப் புலிகளே பொறுப்பை ஏற்க வேண்டும். காரணம் தமது பகுதியில் இத்தனை மக்கள் இருக்கிறார்கள். ஒரு போரைத் தொடங்கும் போது அதனால் ஏற்படும் முன் விளைவுகளை யோசிக்காது இன்று பலவிதமான பழிகளுக்கும் பொறுப்பாக இருப்பவர்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆயுதப் போர் வேறு - அரசியல்ஆட்சி வேறு:
ஆயுதத்தை நம்பியபடி அரசுப் பணி புரிய முடியாது!
அதற்குரிய தகைமையை நாம் இழந்திருக்கிறோம் என்பதே உண்மை!
ஏனென்றால் நாட்டின் எல்லை வரையறை செய்யாமல் சும்மா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் நாம் சிறுபிள்ளைத்தனமாக அடையாள அட்டை வழங்கல் - நீதிமன்றங்கள் - வங்கிகளை ஆரம்பித்து இன்று இடம் தெரியாமல் இருப்புக்கு பகிரங்கமாகமாகவே போராடுகிறோம்.
இதில் எந்தளவுக்கு நாம் விடை தேட முடியுமோ?
ஆண்டவனே எம் மக்களைக் காப்பாற்றும் என்று தந்தை செல்வா வேண்டியது போலவே நாமும் வேண்டுவோம்.
Sunday, April 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment