அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, April 26, 2009

விடுதலைப் போராட்டத்தில் கொச்சைப்படுத்தப்பட்ட உண்ணாவிரதம் - மறந்துவிட்ட பழைய உண்மைகள்
சில உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதற்காகவும் தலைவர்கள் அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் நடவடிக்கைகளை அன்று குறைகூறியதையும், புதிதாக எழுதப்படும் வரலாற்றில் இவை புறக்கணிக்கப்படுவதையும், இன்றைய தலைமுறையினர் அறியவேண்டிய அவசியம் கருதியும் எனது பதிவுகளுக்காகவும் அன்றைய 25.07.1984 ஈழநாடு பத்திரிகைச் செய்தி இணைக்கப்படுகிறது. சரியாக விளங்கிக்கொள்ள தனியாக செய்தியைப் பதிவுசெய்திருக்கிறேன். ஏற்கனவே இச் செய்தியை குறித்து சென்னையில் கலைஞர் கருணாநிதி பேசிய பேச்சு எனது முன்னைய பதிவில் இருப்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமென எண்ணுகிறேன்.

ஈழநாடு 25.07.1984

கூட்டணி உண்ணாவிரதம் இளைஞர்களின் குறுக்கீடுகளினால் இடைநிறுத்தம்!
இளைஞர்களின் கேள்விகளுக்கு சிவா – சம்பந்தன் பதில்

ஜூலைக் கலவரத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கும், வெலிக்கடைச் சிறையில் படுகொலையுண்டவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணி நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலில் நேற்றுக் காலை 7.07 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் இளைஞர்களின் குறுக்கீடுகளினால் பிற்பகல் மூன்று மணியளவில் இடைநிறுத்தப் பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நேற்று நடத்திய உண்ணாவிரதத்தை இடைநடுவில் நிறுத்தச் செய்வதற்கு நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறுவழிகளிலும் முயற்சி எடுத்தனர். கூட்டணி தலைவர்கள் திரு. எம். சிவசிதம்பரம், திரு. அ. அமிர்தலிங்கம், உட்பட சுமார் 8 பேர் கடைசிவரை இருந்த இடத்தைவிட்டு அசையாமல் உண்ணாவிரதத்தை நடத்தினார்கள்.
உண்ணாவிரதம் நடந்துகொண்டிருந்தபோது, காலை 10 மணிமுதல் இளைஞர்கள் கோவில் முன்றலில் நாலாபக்கங்களிலிருந்தும் கூடத் தொடங்கினார்கள். அப்பொழுது ஏதோ நடக்கப்போகிறதென்று எதிர்பார்க்கப்பட்டது.

உண்ணாவிரதிகளின் மத்தியில் இளைஞர்

காலையில் 7.05 மணிக்கு உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 12 பேரில் இரு இளைஞரும் இருந்தனர். பின்னர், வேறு சில இளைஞர்களும் வந்து சேர்ந்து அங்குமிங்குமாக உண்ணாவிரதிகள் மத்தியில் அமர்ந்திருந்தனர்.
காலை 11 மணிக்கு இருஇளைஞர்கள் சோற்றுப் பார்சல்களைக் கொண்டுவந்து உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு கொடுத்த போது அவர்கள், தங்களுக்கு முன்னால் பார்சலை அவிழ்த்து சாப்பிடத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து மற்றும் உண்ணாவிரதம் இருந்த கூட்டணி தலைவர்களையும் சாப்பிடுமாறு வற்புறுத்தியபோதும் அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். பிளாஸ்டிக் கொள்கனில் தண்ணீரும் கொண்டு வந்து இளைஞர்களுக்கு கொடுத்தார்கள்.

இச்சமயம், சுமார் 300க்கு மேற்பட்ட இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்த ஆலய தீர்த்த மண்டபத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டு உண்ணாவிரதத்தை நிறுத்துங்கள். மாதக் கணக்கில் உணவின்றி அலைகிறோம் நாங்கள் என்று சொன்னார்கள்.
காலை 8 மணிக்கு 100 பேராக இருந்த உண்ணாவிரதிகளில் ஒரு பகுதியினர் எழுந்து வேறு மூலையில் அமர்ந்தனர். மற்றும் சிலர் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டனர்.

அசையாமல் இருந்தனர்

திரு. அ. அமிர்தலிங்கம், திரு. எம். சிவசிதம்பரம், சட்டத்தரணி எஸ். பொன்னையா, திரு. எஸ். ஸ்பீரியல், திரு. வி. மாணிக்கவாசகர், திரு. அலோசியஸ், திரு. அப்பையா, திரு. எஸ். நாகராசா, திரு. ராஜா விஸ்வநாதன், திரு. இராமலிங்கம், திரு. கைலாயபிள்ளை உட்பட 18 பேர் மட்டும் அதே இடத்தில் அசையாமல் தொடர்ந்து இருந்தார்கள்.
முன்பக்கத்தால், இளைஞர்கள் கேள்விக்கணைகளை தலைவர்களிடம் கேட்டுகொண்டு முன்னேற திரு. இராமலிங்கம், திரு. அப்பையா திரு. அலோசியஸ் ஆகியோர் எழுந்து நின்று இளைஞர்களை தலைவர்களுக்கு கிட்டச் செல்லவிடாமல் தடுத்துக்கொண்டு கேள்விகளுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் திரு. இராமலிங்கத்தை இளைஞர்கள் முன்னோக்கி இழுத்தபோது அவர் பின்னால் சென்று அமர்ந்துவிட்டார். இளைஞர்கள் உண்ணாவிரதிகள் அணிந்திருந்த கறுப்புப் பட்டிகளைக் கழட்டி எடுத்துக்கொண்டார்கள்.
முன்னாள் வட்டுக்கோட்டை எம்.பி. திரு. நீலன் திருச்செல்வம் நண்பகலுடன் அவ்விடத்தைவிட்டுச் சென்றுவிட்டார். உண்ணாவிரதம் இருந்த வேறு சிலரும் சென்றுவிட்டனர்.
திரு. எம். ஆலாலசுந்தரம், திரு. இரா. சம்பந்தன், பண்டிதர் கா.பொ. இரத்தினம், திரு. வி. தர்மலிங்கம் ஆகியோர் மண்டபத்தில் மற்றொரு மூலையில் சென்று அமர்ந்தனர். இளைஞர்கள் அவர்களையும் சுற்றிவளைத்து இளைஞர்களின் போராட்டத்தை முறியடிக்க உண்ணாவிரதமா? என்று கேட்டார்கள்.

சம்பந்தன் பதிலளித்தார்

இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு திரு. சம்பந்தன் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

பிரிவினைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் எடுக்காததனால்தான் இதுவரை நீதிமன்றம் செல்லவில்லை என்றும் இரவு பகலாக திருமலை மக்களுக்குச் சேவை புரிந்துவருவதாகவும் கூறினார். திரு. எம். ஆலாலசுந்தரம், பண்டிதர் கா.பொ.இரத்தினம் ஆகியோர் மௌனமாக இருந்தார்கள்.
திரு. சிவசிதம்பரம், திரு. அமிர்தலிங்கத்துடன் இருந்த 18பேரையும் நாலாபக்கங்களிலும் இளைஞர்கள் கைகோர்த்து சுற்றிவளைத்துக்கொண்டு கேள்விகள் கேட்டார்கள். நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் நிலத்தில் அமர்ந்து கொண்டனர்.
திருமதி. மகேஸ்வரி தம்பு என்ற பெண், அங்கு வந்து நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இந்தியாவில் இருக்கிறீர்கள் நாங்கள்தான் தினமும் பிள்ளைகளை பலிகொடுக்கிறோம் என்றார்.

திரு. வடிவுநாதன் என்பவர் கடந்த 35 வருடமாக தலைவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் இளைஞர் வழிபடிதான் தமிழ்மக்கள் இன்று செல்ல தயாராகி விட்டார்கள் என்றார்.
மற்றொரு 10 வயது சிறுவன் உண்ணாவிரதத்தை விட்டுவிடுங்கள் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து இளைஞர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.

அரசின் உதவியுடன் ஆமியை முகாமில் இருக்கச் செய்துவிட்டு உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் என்று ஒரு இளைஞர் கூறினார்.

இளைஞர் போராட்டத்தை முறியடிக்க இந்த உண்ணாவிரதமா? என்று மற்றொரு இளைஞர் கேட்டார்.

தண்ணீரைத் தெளித்தனர்

பின்பக்கத்திலிருந்து தண்ணீரை அள்ளித் தெளித்தார்கள். சோற்றுப் பார்சல்கள் மண்டபத்திற்குள் அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தன. மண்டபத்தின் நடுவிலுள்ள நீர்த்தொட்டி படிகட்டிலிருந்து ஒரு இளைஞர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

நண்பகல் வரை ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. உண்ணாவிரதத்தை ஆதரித்தும் ஒரு இளம் பெண்பேசிய போது அதனை எதிர்த்து இளைஞர்கள் பதிலலித்ததை தொடர்ந்து அப்பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். யாழ் முன்னாள் முதல்வர் திரு. ஆர். விஸ்வநாதனை சுற்றி நின்றும் இளைஞர்கள் கேள்விகள் கேட்டார்கள். உண்ணாவிரதம் இருந்த பெண்களில் சிலர் சென்றுவிட்டனர். 7 பேர் மட்டும் மண்டபத்தின் பிற்பகுதியில் அமர்ந்திருந்தனர்.

இளைஞரின் கேள்விகளுக்கு திரு. சிவசிதம்பரம் பதிலளித்துக் கொண்டிருந்தபோது மற்றொரு இளைஞர் களைத்து விட்டீர்கள் என்று கூறி சோடா போத்தலை கொடுத்தார். அவர் பின்னர் திரு. அமிர்தலிங்கத்திடம் சோடா போத்தலை நீட்ட அவரும், ஏற்கவில்லை. பின்னர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்த போதும், அவர்கள் எடுக்கவில்லை.

நண்பகல் வரை உண்ணாவிரதம் நடந்த பகுதியில் ஒரு அமளிதுமளியாக இருந்தது.


உலகுக்குக் காட்டவே உண்ணாவிரதம் - இளைஞர்களுக்கு அமிர் விளக்கம்

ஜனாதிபதி உலகநாடுகளில் மேற்கொண்ட விஜயத்தின்போது, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்த பிரச்சாரங்களை முறியடிக்கவும், தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் செய்துவரும் அனர்த்தங்களை உலகுக்கு எடுத்துக் காட்டவுமே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. அ. அமிர்தலிங்கம் நேற்று இங்கு நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது பேசுகையில் தெரிவித்தார்.

திரு. அமிர்தலிங்கம் பேச எழுந்தபொழுதே இளைஞர்கள் கூட்டமாகச் சுற்றி வளைத்து நின்று கேள்விகள் கேட்டு குறுக்கீடுகள் செய்தனர்.

வீரமாகாளி அம்மன் ஆலய தீர்த்தக்கேணி மண்டபத்தில் தலைவர் திரு. எம். சிவசிதம்பரம் தலைமையில் இவ்வுண்ணாவிரதம் நடைபெற்றது.

பிற்பகல் சுமார் 3 மணியளவில் திருமலை முன்னாள் எம்.பி. திரு. இரா. சம்பந்தன் எழுந்து இளைஞர்களின் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்து 4 மணிக்கு முடிக்கவிருந்த உண்ணாவிரதத்தை மூன்று மணிக்கு முடித்துவைக்கவுள்ளதாகத் தெரிவித்தார். அப்பொழுது இளைஞர்கள் ஆரவாரம் செய்து கோஷம் எழுப்பினர்.

மானத்தை இழந்து நிற்கும் தமிழினத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில்தான் தங்கியுள்ளது என்று திரு. இரா. சம்பந்தன் அங்கு நின்ற இளைஞர்களுக்கு வலியுறுத்திச் சொன்னார்.

அடுத்து திரு. சிவசிதம்பரம் பேசுகையில் எமது இனத்தைக் கூறுபோட்டுப் பலயீனப் படுத்தி அழிக்க அரசு முயல்கிறது. அரசின் இந்தச் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக திரு. அமிர்தலிங்கம் பேசுகையில் ரேப்றெக்கோடருடன் நின்ற இளைஞர் ஒருவர் உண்ணாவிரதம் ஏன் நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமிர் பதிலளித்தார்.

தமிழ் மக்களின் அச்சத்தை ஒழிக்கவும், ஆட்சியாளரின் அக்கிரமத்தை ஒழிக்கவுமே வடக்கு கிழக்கில் அமைதியான அகிம்சைவழிப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம்.
கடந்தவருடம் ஜூலை 24ம் திகதி சேந்தான்குளம் இராணுவ முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சென்ற வழி எல்லாம் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்தார்கள். பலர் உயிரிழந்தனர்.
25ந் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் குட்டிமணி, தஙஇகத்துரை, ஜெகன் உட்பட 52 வீர இளம்புருஷர்கள்
படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஜனாதிபதி உலகமெலாம் விஜயம் செய்து, இலங்கையில் இனப் பிரச்னை இல்லை, பயங்கரவாதிகள்தான் பிரச்னை என்று சொல்லி எங்களையும் இந்தியாவையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பார்க்கிறார்.
உண்ணாவிரதப் போராட்டத்தால் தமிழீழம் கிடைக்குமென்று சொல்லமுடியாது. இளைஞர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தினால்தான் பெற்றுக்கொள்ள முடியும்.

திரு. அமிர்தலிங்கம் தனது பேச்சை முடித்துக் கொண்டதும் வீரமாகாளி அம்மன் ஆலயவாசலுக்கு ஆதரவாளர்களினால் அழைத்துச் செல்லப்பட்டார். இளைஞர்களும் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்பொழுது 3.30 மணியிருக்கும். ஆலயத்தின் மேற்குப்பக்கமாக, அதிர்ச்சிமிக்கப் பேரிடி முழக்கத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. ஆலயத்தில் திரு. அமிர்தலிங்கம் வணங்கிய பின்னர், அவரது ஆதரவாளர்கள் சுற்றிவர நின்றுகொண்டு வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அழைத்துச் சென்றனர்.

இங்கு உண்ணாவிரதமிருந்தவர்களுக்குச் சம்பிரதாய பூர்வமாகக் குளிர்பானம் வழங்கி முடித்து வைக்காதது குறிப்பிடத்தக்கது.

No comments: