அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 15, 2009

நட்சத்திரப் பதிவர் வந்திக்காக - சர்வதேச இந்து இளைஞர் சங்கம் நடத்திய இந்துக்களின் இன்றைய பிரச்சனைகள் கருத்தரங்கு

யாழ்தேவியின் இவ்வார நட்சத்திரப் பதிவர் வந்தியத் தேவனின் வேண்டுகோளை மதித்து நான் பதியவேண்டும் என்று நினைத்திருந்தாலும் அவரது பதிவர் வாரத்தில் இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்.
முதலில் ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டு பின்னர் எனது அனுபவத்தைப் பகிரலாம் என்று யோசித்து எழுதுகிறேன். யாராவது பங்கு கொண்டவர்கள் தமது அனுபவங்களையும் தெரியப் படுத்தினால் உதவியாயிருக்கும்.

வீரகேசரியின் நிருபர் திரு. ஸ்ரீ முருகன் அவர்களும் இக்கருத்தரங்கிற்கு வருகை தந்தார். அவர் 23.10.1990 வீரகேசரியில் இந்துக்களின் தேவைகளை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிப் பேச எவரும் இல்லாத நிலை என்ற தலைப்பிட்டு தொகுப்பாக அரைப் பக்கத்தில் செய்தியைப் பிரசுரித்தார்.

செய்தியை அப்படியே இங்கு குறிப்பிடுகிறேன்.

நோன்பு பெருநாளின்போது பேரீச்சம் பழத்திற்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. உடனே இப்பிரச்சினையை முஸ்லிம் கலாசார அமைச்சர் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்தார். பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்பட்டது. நோன்புப் பெருநாளும் திருப்தியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அண்மையில் நடைபெற்ற நவராத்திரி விழாவுக்கு அவலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. விலையோ நெருப்புவிலை. அந்த விடயத்தைச் சுட்டிக்காட்டி பாராளுமன்றத்தில் பேச எவரும் இருக்கவில்லை. நாம் நாதியற்றப் போனோம். இவ்வாறு அண்மையில் வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச இந்து இளைஞர் அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய குரு பிரவேச அமைப்பாளர் மணி ஸ்ரீநிவாச சர்மாவும் தமிழ் கலாசார மன்ற கு. குருசுவாமி ஆகியோர் ஒரே கருத்தை வெளியிட்டனர்.

சர்வதேச இந்த இளைஞர் அமைப்பு கடந்த 13, 14 ஆம்திகதிகளில் இருநாள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இதனை தெற்காசிய இந்த இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் குமரகுருபரனும் முகுந்தனும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்துக்களின் இன்றைய பிரச்சினைகள் எனும் தலைப்பில் கருத்தரங்கு களை கட்டியது.

கருத்தரங்கில் 40க்கும் மேற்பட்ட இந்த மன்றங்கள் கலந்து கொண்டன.

திருகோணமலை இந்து இளைஞர் பேரவை செயலாளர் செ. சிவபாதசுந்தரம் பேசுகையில் கூறியதாவது:-

தலைநகரில் இந்து அமைப்புகள் மிகமிக மந்தகதியிலேயே செயற்படுகின்றன. திருகோணமலையில் கோயில்கள் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டன. இச்செய்திகள் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

அண்மைக்கால போர் நடவடிக்கையினால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளன. அதில் 85 குழந்தைகளை நாம் பராமரித்து வருகிறோம்.

கந்தளாயில் 25 ஏக்கர் நெல்வயலும் ஒரு பெரிய கட்டடமும் இராம கிருஷ்ண மடத்திற்கு ஒரு செட்டியாரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. அதனை இராமகிருஷ்ண மடம் இதுவரை பொறுப்பேற்கவில்லை. திருகோணமலையில் இந்துக்களின் காணிகளில் குடியேற்றங்கள் நடக்கின்றன. கோணேஸ்வர ஆலயம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கின்றது.

கருத்தரங்கு அமைப்பாளர் முகுந்தன் பேசுகையில் அமைச்சில் 45 இந்து மன்றங்கள் பதியப்பட்டுள்ளன. அவறஇறிற்கு அழைப்பு அனுப்பினோம். பல அழைப்புகள் திரும்பி வந்துவிட்டன. அவ்வாறான சங்கம் ஒன்று இல்லை என எமக்கு அறிவிக்கப்படுகிறது என்றார்.

ஆன்மீகப் பணி அவசியம்

விவேகானந்தா மகா வித்தியாலய அதிபர் மாணிக்கவாசகர் பேசுகையில் இளைஞர்களால் சமய பணியும் செய்ய முடியும். புத்தர், யேசு போன்ற மகான்கள் இளைஞர்களாக இருக்கும்போதே ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டனர்.

நாம் நிறைய பேசுவோம். நடைமுறைப்படுத்துவதில்லை அதனாலாயே மத மாற்றங்கள் நடைபெறுகின்றன என்றார்.

துணிவு வேண்டும்

ஆசிரியர் சந்திரசேகரம் பேசுகையில் துணிவுஇருப்பின் வெற்றி காணலாம். விவேகானந்தரும் துறவிதான். ஆனால் முட்டவந்த மாட்டை கொம்பில் பிடித்து நிறுத்தினார். துணிவிருந்தால் ஆன்மீக வழியில் நிறைய சாதிக்கலாம் என்றார்.

மீதி பின் தொடரும்

1 comment:

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்களை ஒரு தொடர் விளையாட்டில் மாட்டிவிட்டிருக்கிறேன். வாங்க வந்து வலையில் சிக்கிக் கொள்ளுங்க.

பள்ளிப் பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு)

http://yovoice.blogspot.com/2009/09/blog-post_9724.html